Advertisement

*5*
என்ன அதிசயம் இன்னைக்கு சூரியன் உதிச்ச பிறகும் வீட்டில இருக்கீங்க?” என்று கேலி பேசியபடி மாடியிலிருந்து அலுவலகத்திற்கு தயாராகி இறங்கி வந்தான் கார்த்திக்.
அமர்ந்த இடத்திலிருந்தே நிமிர்ந்து அவனின் வருகையை பார்த்தவர் வாஞ்சையாய், “உன்னை பார்க்கலாம்னு காத்திருந்தா பேசுறதை பாரு படவா…என்று அருகில் வந்த மகனின் தோளை தட்டினார் சுப்பிரமணியம்.
இப்போவாவது என் நியாபகம் வந்துச்சே உங்களுக்கு.என்று சலித்துக் கொண்டவன் உணவு மேசையில் அவர் அருகில் வந்தமர்ந்தான்.
அவனின் ஏக்கத்தை உணர்ந்தவர், “எப்போ உன்னை மறந்தேன் புதுசா நியாபகம் வர்றதுக்கு? ரெண்டு நாள் முன்னாடிதானே பீச்ல பார்த்தோம்.
ம்ச்… போங்க… ஒரு மாசம் கழிச்சு அன்னைக்குத்தான் நேரில பார்த்தோம் அதுவும் அரை மணிநேரம் தான் கூட இருந்தீங்க. அப்புறம் வேலைன்னு ஓடிட்டீங்க.என்று குறைபடித்தான் மகன்.
நான் என்ன வேணும்னேவா உன்னை கூட பார்க்காம ஓடிட்டு இருக்கேன்… படிச்சு முடிச்சு கம்பெனி நிர்வாகத்தை பார்த்துப்பேன்னு பார்த்தால் சொல்ல சொல்ல கேட்காமல் இந்த போலீஸ் வேலையில் சேர்ந்து நீயும் கஷ்டபடுற எனக்கும் உன்னை நினைச்சு கவலையா இருக்கு.என்று தந்தையும் தன் ஆதங்கத்தை முன்வைத்தார்.
அப்பா, எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு, அதோட அம்மாவும் நான் இந்த வேலையில் இருக்கணும்னுதான் ஆசைப்பட்டாங்க. என்னை விடுங்க, நீங்க ஏன் இன்னமும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்குறீங்க? வயசு ஏறுது வீட்டில் அதிக நேரம் ஓய்வு எடுக்காமல் இப்படி ஓடிட்டு இருக்கீங்க. நைட்டெல்லாம் வீட்டுக்கு வரீங்களான்னு கூட எனக்குத் தெரியல, நான் போன் போட்டாலும் ஏதாவது காரணம் சொல்லி என் வாயை அடச்சிடுறீங்க.என்று தந்தையின் வயதை எண்ணி வருத்தத்துடனே உண்ண ஆரம்பித்தான்.
என்னால வீட்டில சும்மா உட்கார முடியாது கார்த்தி. அதோட யாருக்காக உழைக்குறேன்… நமக்காகவும், உன்னோட எதிர்காலத்திற்காகவும் தான். நீ உன் ஆசை தீர இந்த வேலையை கொஞ்ச நாள் பார்த்துட்டு அப்புறம் விருப்ப ஓய்வு வாங்கிட்டு கம்பெனிக்கு வந்துரு அப்புறம் நான் ரெஸ்ட் எடுக்குறேன்.
என்னவோ போங்க… இப்போதைக்கு விருப்ப ஓய்வு வாங்குற எண்ணமெல்லாம் எனக்கு இல்லைப்பா. நமக்கு வசதியில என்ன குறைஞ்சிடுச்சு இப்போ… எல்லாமே நிறையவே இருக்கு, சோ நீங்க என்னை நம்பிக்கிட்டு இல்லாம நம்பிக்கையான ஆளுகிட்ட கம்பெனி பொறுப்பை ஒப்படச்சிட்டு வேலையை குறைச்சிக்கோங்க. இப்போ கொஞ்ச வருஷமாவே நீங்க என்கூட நேரம் செலவிடுறதே இல்லை. நான் ஒருபக்கம் நீங்க ஒருபக்கம்னு வேலை பின்னாடி ஓடிட்டு இருக்கோம்.
என்ன செய்றது கார்த்தி. காலம் ஒரேபோல இருக்குறது இல்லை. முன்னாடி உன் அம்மா இருப்பா என்னோட பிரிவு தெரியாம அவள் உன்னை வளர்த்துட்டா. இப்போ அது முடியல அதுதான் உனக்கு நான் வேலை பின்னாடி ஓடுற மாதிரி தெரியுது.என்று மகனுக்கு சமாதானம் சொல்ல, கார்த்திக் அதிருப்தியுடன்,
என்னவோ சொல்றீங்க நானும் கேட்டுக்குறேன்…என்றவன் சாப்பாட்டில் கவனம் செலுத்த, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அருகில் இருந்து அவரே அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார்.
நீங்க சாப்பிடுங்க அப்பா.
நீ சாப்பிடு கார்த்தி. நான் உன்கூட நேரம் செலவிடனும் தானே ஆசைப்படுவ, இப்போ அதை தான் செஞ்சிட்டு இருக்கேன். நீ சாப்பிடு.என்றவரிடம் ஏனோ அன்று அக்கறை நிறையவே தெரிந்தது.
நீங்க நேரத்திற்கு மாத்திரை எடுத்துக்கிறீங்களானு கூட தெரியல.என்று மீண்டும் கார்த்திக் குறைப்பட்டுக் கொண்டான். குடும்பத்தில் இருப்பது இரண்டே பேர் தான். இரண்டு பேரும் வெவ்வேறு திசையில், நேரத்தில் பயணிக்க, ஒன்றாக செலவிடும் நேரத்தை அதிகமாகவே எதிர்நோக்க ஆரம்பித்திருந்தான். ஆனால் அவருக்கு தான் அது புரியவில்லை என்பதைவிட வேலையில் இருந்து விடுபட்டு வரமுடியவில்லை அவரால்.
நீ தான் நேரத்திற்கு மெசேஜ் அனுப்பி நியாபகப்படுத்துறியே. இன்னும் கொஞ்ச நாள் உழைச்சிட்டு உனக்கொரு குடும்பத்தை அமைச்சு கொடுத்துட்டு அப்புறம் அக்கடான்னு உன் பிள்ளைகளோடு நேரத்தை செலவழிக்கனும். 
அப்போ இப்போதைக்கு வேலையை குறைச்சிக்க போறதில்லை.என்று கார்த்திக் போலியாய் முறைத்து வைக்க, தந்தையின் விரல்கள் விளையாட்டாய் மகனின் கேசத்தை கோதி கலைத்தது.
ஷ்… தலையை கலைக்காதீங்கப்பா…
இந்த போலீஸ் கட்டிங் இல்லாம எப்போ தான் உன்னை பார்க்கப் போறேனோ தெரியல…என்ற தகப்பனின் பெருமூச்சில் மகன் பார்க்கும் உத்தியோகத்தில் அவருக்கு பிடித்தமில்லை என்று தெளிவாய் தெரிந்தது. அதை எப்போதும் போல ஒதுக்கிய மகன்,
என் தட்டுல சட்னி காலியாகி அஞ்சு செகன்ட் ஆச்சு இன்னும் என்னை கண்டுக்கல நீங்க…என்று பேச்சை திசை திருப்ப, அதை உணர்ந்தே இருந்த சுப்பிரமணியம் மகனின் தட்டில் சிறிது சட்னி இட்டு, “முத்து தம்பிக்கு ஆம்லேட் எடுத்துட்டு வா…என்று உள்நோக்கி குரல் கொடுக்க, அதுக்காகவே தயாராய் இருந்த முத்தம்மா விரைவாய் ஆம்லேட் எடுத்து வந்து சுப்பிரமணியத்திடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். 
மகனுக்கு பிடிக்காத பேச்சை நிறுத்திவிட்டு அவன் வயிற்றை நிரப்பும் வேலையில் சுப்பிரமணியம் இறங்கிவிட, அவரையே யோசனையுடன் பார்த்து நின்றார் முத்தம்மா.
***
வாங்க சார்.வாயில் வரை வந்து இன்முகமாய் வரவேற்ற ராகவை பார்த்து முறுவளித்தவன், தன் பைக்கிலிருந்து இறங்கி அதன் டேங்கில் வைத்திருந்த கோப்புகளை கையோடு எடுத்துக்கொண்டான்.
உங்களுக்கு வேலை இருக்கும் போது நான் போன் செய்து இங்கே வரேன்னு சொல்லி தொந்தரவு செய்துட்டேனா?” நேற்று ராகவ் கேட்ட கேள்வியை இன்று கார்த்திக் கேட்டான்.
அப்படினு இல்லை. நீங்க வந்ததும் அலுவலகம் போகலாம்னு காத்திட்டு இருந்தேன். ரெண்டு நாளா லீவ் போட்டுட்டேன் சோ இன்னைக்கு கண்டிப்பா போகணும்.என்று மறைக்காமல் தன் நிலையை தெரிவித்தான் ராகவ்.
நான் சில கேஸ் பைல் எடுத்துட்டு வந்திருக்கேன். அதில் உங்க தங்கையோட உதவி வேணும். அதுதான் நானே நேராக வீட்டிற்கு வந்துட்டேன்.என்று கார்த்திக் தான் வந்த நோக்கத்தை சொல்ல,
மீராவிடம் உதவியா? அவளுக்கு என்ன தெரியும் இதில்? இன்னும் படிப்பு கூட முழுதாய் முடிக்கவில்லையே அவள் என்று சந்தேகம் தான் தோன்றியது ராகவிற்கு.
அது கார்த்திக்கிற்கு புரிந்ததோ என்னவோ அதை தெளிவுப்படுத்தினான், “இது பழைய கேஸ் பைல்ஸ். இதிலிருக்கும் தகவல்களை திரட்டி ஒழுங்குபடுத்தி இது எல்லாத்திலேயும் இருக்கும் ஒற்றுமையையும் சந்தேகங்களையும் கண்டுபிடித்து ரிப்போர்ட் ரெடி பண்ணி தரணும். இது ஒரு ரெபரன்ஸ் பர்பஸுக்கு தான், இதனால் பிரச்சனை எதுவும் வராது. இது என்னோட வேலை தான் பட் வெளியில் கொடுத்து தான் ரிப்போர்ட் வாங்குவேன் ஆனால் இந்த நேரத்தில் உங்க தங்கையோட நேரத்தை இது திசை திருப்பும்னு தோணுச்சு. இதில் உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்க கசக்கவா செய்யும் ராகவிற்கு?
இதில் எனக்கு சந்தோசம் தான். நீங்க எங்களுக்காக இவ்வளவு மெனக்கெடும் போது கசக்கவா செய்யும்? மீரா கண்டிப்பா இதை செய்து தருவா. ஐயோ உள்ள வாங்க முதலில், வெளியிலே நின்னு பேசிட்டு இருக்கீங்க.என்று உள்ளே அழைத்துச் செல்ல, பழக்கத்தில் ஷூவுடன் உள்ளே நுழையப் போனவன், தனக்கெதிரே நின்று தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் மீராவை கண்டு நடையை நிறுத்தினான்.
நேற்று அவனிடம் வீசிய மருண்டப் பார்வை இன்று இல்லை. மாறாக அனல் வீசியது. நேற்று தலை சுற்றி முகத்தை மூடியிருந்த துணி இன்று இல்லை. சாதாரண உயர் கழுத்துடைய பருத்தி சல்வாரில் முடியை தூக்கி கொண்டையிட்டு ஒப்பனை எதுவுமின்றி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். பின்னே இவன் வருகிறேன் என்று எப்போது ராகவிற்கு தகவல் சொன்னானோ அப்போதிலிருந்து பேசி கரைத்து அவளை வெளியே கூட்டி வந்து நிறுத்தியிருக்கின்றனர். அந்த கடுப்பு அவளின் பயத்தை பின்தள்ளியிருந்தது.
என்ன சார் அங்கேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க.என்று அம்புஜம் முன்வந்து அவனின் பார்வையை கலைக்க, அவரின் பின்னரே ரகுநாதனும் வந்துவிட்டார்.
தனக்கு கிடைக்கும் மரியாதையில் நெளிந்தவன் உள்ளே நுழைய முற்பட, மீராவின் பார்வை அவனை பொசுக்கி தடை போட்டது.
என்ன இந்த பொண்ணு பார்வையாலேயே என்னை எரிச்சிடும் போலிருக்கே… நேத்து பார்த்த பார்வை என்ன இன்னைக்கு பார்க்கும் பார்வை என்ன… ஆளை பார்வையாலேயே கொன்னுடுவா. இப்போ எதுக்கா இருக்கும் இந்த முறைப்பு?’ என்று அவன் மனம் அவரசரமாக நினைக்க, அவள் பார்வை செல்லும் திசையை தொடர்ந்து அவளின் கோபப் பார்வைக்கான அர்த்தம் உணர்ந்தான். இயற்கையாகவே அவள் உடல்மொழியில் வெளிப்படும் ஆளுமையைக் கண்டு மெச்சிக்கொண்டவன், தன் காக்கி ஷூவை வெளியே கழட்டி விட்டுவிட்டு சாக்ஸ் உடன் உள்ளே நுழைந்தான்.
ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவுடன் சுஜா சூடாய் காபி எடுத்து வந்து கொடுக்க ராகவ் அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தினான். கார்த்திக்கை பற்றியும் அவனின் கண்ணியமான பேச்சுக்கள் பற்றியும் ராகவ் அவளிடமும் சொல்லியிருக்க, சுஜாவின் பார்வை அவனை எடைபோட்டது. பின்னிருபதுகளில் முறுக்கேறி இருந்தவன், அலுவல் உடையின்றி சாதாரண உடையிலேயே வந்திருக்க, முகத்தில் மென்மையும் கடுமையும் ஒருசேர சமவிகிதத்தில் கலந்திருந்தது. பார்த்தவுடன் உதவி என்று நம்பி அவனிடம் செல்லலாம் எனுமளவுக்கு அவனது முகவாகு இருக்க, காவலருக்கே உரித்தான கூர்மையான பார்வையும் அவனை கவனிக்கும் பொழுதே தெரிந்தது.
உங்க அலுவலுக்கு நேரம் ஆகிடுச்சுன்னா நீங்க கிளம்புங்க ராகவ். நான் இதை கொடுத்துட்டு கிளம்பிடுறேன்.என்று கார்த்திக் கூற, ராகவ் சுஜாவையும் தந்தையையும் பார்த்து அர்த்தமாய் தலையசைத்து விடைபெற்றான்.
நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி தம்பி. போலீஸ் கேஸ் என்று அலைந்து நொந்துட்டோம். ஆனால் யாரும் இதுமாதிரி இவ்வளவு மெனக்கெட்டு தைரியம் சொல்லல.ராகவ் நேற்று நடந்தவற்றை அப்படியே வீட்டில் சொல்லியிருக்க, ரகுநாதனிற்குமே கார்த்திக் மீது நல்ல அபிப்ராயம் வந்திருந்தது.
மாற்றி மாற்றி எல்லோரும் நன்றி சொல்லி என்னை சங்கடப்படுத்தாதீங்க சார். எனக்கு ஒரு வேலை ஆகணும் அதை முடிச்சிட்டு போகலாம்னு தான் வந்தேன்.என்று கார்த்திக் சங்கடமாய் பேச, அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கக் கூடாதோ என்று கூட தோன்றியது அவர்களின் உபசரிப்பில்.
சந்தோசம் தம்பி. என்ன வேலையா வந்திருக்கீங்க?”
சில கேஸ் விஷயமா ரிப்போர்ட் தயார் செய்யணும். உங்க பொண்ணும் அது சம்மந்தமா படிச்சிருக்குறதா ராகவ் சொன்னாரு. அதுதான் வெளியில் கொடுப்பதற்கு பதில் இவங்களிடமே கொடுக்கலாம்னு வந்தேன். ராகவிடமும் இதை பெற்றி பேசுனேன், அவரும் மீரா இதை செய்து கொடுப்பாங்கனு சொன்னாரு.என்று ரகுநாதனிடம் விளக்கிவிட்டு மீராவை பார்க்க,
என்னால செய்து கொடுக்க முடியாது.என்று அழுத்தமாய் மறுத்தாள் மீரா.
ஏதோ உதவின்னு தானே கேக்குறாரு. செஞ்சு கொடுடி. சும்மா தானே இருக்க.கார்த்திக் எதுவும் கூறும் முன்பு அம்புஜம் முந்திக்கொள்ள, அனலென தகிக்கும் பார்வையை அன்னைக்கு பரிசளித்தவள், “நான் சும்மா இருக்கேன் இல்லை என்னவோ பண்றேன். அது எதுக்கு உனக்கு? என்னால இதை செஞ்சு கொடுக்க முடியாது.என்றாள் வீம்பாய்.
அவளின் பிடிவாதத்தை உணர்ந்த கார்த்திக், தணிந்த குரலில், “நீங்க ப்ரீயா தானே இருக்கீங்க. இதை முயற்சி செய்யலாமே. உங்களுக்கும் புது அனுபவமா இருக்கும். வேலைக்கு போகும் போது உபயோகமா இருக்கும்.
நான் வேலைக்கு எல்லாம் போக மாட்டேன். அப்புறம் எதுக்கு நான் இதை தெரிஞ்சிக்கணும். நீங்க கிளம்புங்க முதல்ல…என்று இந்தமுறை எடுத்தெறிந்து பேச, ரகுநாதன் கண்டிக்கும் விதமாய்,
மீரா வீட்டுக்கு வந்து உதவின்னு கேட்கிறவங்ககிட்ட இப்படித் தான் பேசுவார்களா?”
இதை உதவியா கூட செய்ய வேண்டாம். வெளியில் இந்த வேலையை கொடுத்தால் எவ்வளவு ஊதியம் கொடுப்போமோ அதை உங்களுக்கு கொடுத்துறேன்.என்று கார்த்திக் மீண்டும் தணிவாய் பேச, மிஞ்சினாள் பெண்.
ஹலோ… என்ன ரொம்ப ஓவரா பண்றீங்க? நான் இந்த வேலையை செய்வேன் இல்லை செய்யாம இருப்பேன், அது என் விருப்பம். இதை செய்யணும்னு கட்டாயப்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. சோ கிளம்புங்க.என்று வெளியே கைகாட்டினாள் மீரா.
இத்தனை மாதங்களில் அழுவதையும் விரக்திப் பேச்சையும் தவிர்த்து அதிர்ந்து கூடப் பேசாதவள் இன்று கார்த்திக்கிற்கு தன் வீட்டில் உயரும் செல்வாக்கையும் அந்த செல்வாக்கை பயன்படுத்தி அவன் அவள் மேல் வேலைகளை திணிக்க முற்படுவதும் எரிச்சலை உண்டு செய்தது. ரயில் தண்டவாளம் போல முடிவின்றி சலசலப்பின்றி நேரே சென்று கொண்டிருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் திடீரென ஒரு நிலையத்தில் ஏறி அவளையும் சேர்த்து அழைத்துக்கொண்டு இறங்க வேண்டிய இடத்தை வலுகட்டாயமாக காட்ட அவன் முற்படுவது போலத் தோன்றியது அவளுக்கு.
மீரா அமைதியா இரு.என்று சுஜா அவள் பங்குக்கு மீராவை அடக்க, வெடித்துச் சிதறினாள் பெண்.
நான் ஏன் அமைதியா இருக்கணும்? ஏன் இருக்கணும்னு சொல்லுங்க? எதுக்கு இந்த வேலை செய்யணும்? இதை கத்துகிட்டு நான் என்ன செய்யப்போறேன்? வெளில போய் நாலு கம்பெனி ஏறி இறங்கி வேலை தேடப் போறேனா? இல்லை போனால் தான் வேலை கொடுக்கப் போறாங்களா? என் முகத்தை பார்த்ததுமே முகத்தை சுழிச்சிக்கிட்டு போயிடுவாங்க. இது எதுவுமே இல்லாமல் என்னத்துக்கு நான் இதை செய்யணும்? இவர் யாரு? இவர் எதற்கு என்னோட விஷயங்களில் தலையிடனும்? ஐயோ பாவம்னு என் மேல பரிதாபப்பட்டு இதெல்லாம் தூக்கிட்டு வந்திருக்கிறாரா? அப்படி ஒன்னும் முன்பின் தெரியாத இவரு என் மேல பரிதாபப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனக்காக யாரும் யோசிக்கவும் வேண்டாம். என் வாழ்க்கை இது தான். இது தான்.என்று தன்னுடைய இடப்பக்க முகத்தை காட்டியவள், 
நீங்க எது செய்தாலும் இது மறையாது. மறைக்கவும் முடியாது. அதனால் போக சொல்லுங்க இவரை… போகச் சொல்லுங்க.என்று உயர்குரலில் கத்த, அவளது உணர்ச்சிகளும் உச்சத்தில் இருந்தது. நெஞ்சுக்கூடு ஏறி இறங்கி அவளின் சீரற்ற மூச்சுகளை காட்டிக்கொடுக்க, விழிகள் உணர்ச்சிகளின் வேகத்திற்கு ஏற்ப அலைப்புற, கார்த்திக் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். மீராவை இடையிலேயே கண்டிக்க முயன்ற பெற்றோரையும் அமைதி காக்க சொல்லியிருக்க அவர்களும் கையாலாகத் தனத்துடன் அவளின் தடுமாற்றத்தை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பேசி முடிச்சாச்சா?” என்று அமைதியாய் அவள் எதிரே சென்று நின்று கேட்டான் கார்த்திக்.
தன்னுடைய கத்தலுக்கு எவ்வித எதிர்வினையும் புரியாமல் எதுவும் நடவாதது போல் தன்னெதிரே நிற்பவனை ஆயாசமாய் பார்த்தவள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயன்று தோல்வியுற, விறைப்பாய் நின்ற தோள்கள் தளர்ந்து, உடலும் மனமும் ஒருசேர துவண்டு, கண்கள் சொருகி, கால்கள் நலிந்து விழப்போனவளின் முழங்கை பிடித்து நிறுத்தினான் கார்த்திக். ரகுநாதனும் ஓடிவந்து அவளை மறுபக்கம் தாங்கிப் பிடித்தார். சுஜா வேகமாய் சீனியை தண்ணீரில் கரைத்து ஒரு தம்ளரிலும், இன்னொரு தம்ளரில் குளிர்ந்த நீரையும் எடுத்துக்கொண்டு வந்தாள். சோபாவில் கிடத்தி ரகுநாதன் மகளை தாங்கிக்கொள்ள கார்த்திக் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடிக்க, இமைகள் பிரிவதுமாய் சேர்வதுமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தது அவள் நினைவு.
அத்தை இந்த சீனி தண்ணியை அவளுக்கு கொடுங்க.என்று சுஜா நீட்ட, நடுங்கிய கரங்களுடன் அம்புஜம் மகள் வாயில் சீனி தண்ணீரை சாய்க்க, கால் தம்ளர் தண்ணீர் உள்ளே சென்றதும் தெளிவாக விழித்தவள் கண்களை தேய்த்துக் கொண்டு மெல்ல எழுந்தமர்ந்து முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டாள்.

Advertisement