Advertisement

“குறிப்பிட்டு இல்லாம பொதுவா எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை அந்தந்த வயதினருக்கு ஏற்றார் போல கொடுக்கணும் மேம். அது அவங்களோட பாதுகாப்பு சம்மந்தமாக இருந்தால் இன்னும் சிறப்பு. இக்கட்டு வரும் நேரத்தில் சமுதாயத்திற்கு பயந்து ஒடுங்கி தன் மேல் நடக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்ளாமல் அதை எப்படி சாமர்த்தியமாய் முறியடித்து நிமிர்ந்து வரவேண்டும், யாருக்கெல்லாம் தகவல் கொடுக்கணும், எப்படி சமூக வலைதளங்களில் விழிப்பாய் இருக்கணும்னு நீங்க புரிய வைத்தால் எல்லோருக்கும் ரொம்ப உதவியா இருக்கும்.” என்று கார்த்திக் வேண்ட, அடுத்த பத்து நிமிடங்கள் இதை எப்படி செயல்படுத்த வேண்டும், அதற்கு தேவையான பயிற்சிகள் என்ன என்பதை அட்டவணையாய் தயாரித்தனர் மூவரும்.
“தட்ஸ் பைன் மேன். எப்போ கூட்டம் ஏற்பாடு செய்றீங்களோ அதற்கு ஒருவாரம் முன்னரே எனக்கு தகவல் சொல்லிட்டா என்னுடைய நேரத்தை அதற்கு தகுந்தாற்போல மேனேஜ் செய்துப்பேன். எனிதிங் மோர்?” என்று அந்த சந்திப்பை முடித்துக்கொள்ளும் விதமாய் கேட்க கார்த்திக் விக்ரமை அர்த்தத்துடன் பார்த்தான்.
நண்பனின் எண்ணம் புரிந்தவனாய் ஷோபாவிடம் விடைபெற்றவன் வெளியே வந்து ராகவை உள்ளே அனுப்பிவிட்டு அவன் ராகவ் இடத்தில் அமர்ந்துகொண்டான்.
“நான் இப்போ சொன்னேனே அவங்களோட அண்ணன் தான் இவர், ராகவ்.” என்று கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த ராகவை அறிமுகப்படுத்தினான் கார்த்திக். முறுவல் உதிர்த்துவிட்டு நாற்காலியை கைகாட்டி அவனை அமரச் சொன்ன ஷோபா, அவனிடம் பார்வையை செலுத்தி,
“வெல் யூ ஆர் டூயிங் அ குட் ஜாப் ராகவ். வெளியிலிருந்து பார்க்கும் போது பாதிக்கப்பட்ட பெண்ணோட உணர்வுகள் தான் பெரிதாக பேசப்பட்டு அவங்களுக்கு தான் ஆலோசனைகள் கொடுப்பது வழக்கம். ஆனால் அந்த பெண்ணின் குடும்பமும் அவளுக்கு இணையான மனஉளைச்சலில் தான் இருப்பாங்க. அவ்வளவு எளிதில் தங்களோட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை அவங்களால மறக்கமுடியாது. உறவுக்காரங்கலேந்து அக்கம்பக்கம்னு கேக்குற எல்லோருக்கும் பதில் சொல்லி பொண்ணு மனசு நோக்கக்கூடாதுன்னு பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சுன்னு அவங்களுக்குள்ள அழுத்தம் ஏறிகிட்டே போகும். அதையெல்லாம் வெளிப்படையா காட்ட மாட்டாங்க. ஆனாலும் அவங்க தான் குடும்பத்துக்கு முழுபலமா இருப்பாங்க. இப்போ நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கீங்க.” என்றார்  அவனின் பதட்டம் நிறைந்த உடல்மொழியைக் கவனித்து.
உணர்ச்சி மிகுதியில் ராகவ் அமைதி காத்து அமர்ந்திருக்க, அந்த மருத்துவரே தொடர்ந்தார், “உங்க தங்கையை பற்றி இப்போ கார்த்திக் சொன்னாரு. அவங்களோட வாழ்க்கையை நினைச்சு நீங்க அச்சப்படுவது நியாயமான உணர்வு தான். அவங்களை எப்படியாவது சரி செய்து நல்ல வாழ்க்கை அமைச்சுக்கொடுக்க ஆர்வப்படுறீங்க. அதுக்கு அவங்க ஒத்துழைப்பு கொடுக்கல, அது தான் இப்போ பிரச்சனை.
வெல், அது அவங்களுக்கு நிகழ்ந்த கொடுமையின் எதிர்வினை. நீங்க எந்த விதத்திலும் அவங்களை குறை சொல்ல முடியாது. அவங்க வழியிலே சென்று தான் நீங்க அவங்களை சரி செய்யணும். பல மாசம் கழிச்சு நேத்து தான் வெளியில் அழைச்சிட்டு போனீங்கன்னு கேள்விப்பட்டேன். பட் இட்ஸ் அ ராங் மூவ். அவங்க மனதளவில் வெளியுலகை சந்திக்க தயாரா இல்லாதப்போ நீங்க வலுக்கட்டாயமாக வெளியே அழைச்சிட்டு போயிருக்கீங்க. உங்கள் எண்ணம் சரி தான் பட் அதை செயல்படுத்திய விதம் தவறு. இங்க ஒரு சிட்டிங் கூட்டிட்டு வாங்க. அவங்ககிட்ட பேசினால் தான் என்னால் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியும். அதுவரை அவங்களுக்கு பிடிச்ச விஷயத்தை செய்ய வையுங்க. அவங்க மனசை திசை திருப்புங்க. அவங்க மனசில் தனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு நினைக்க நேரமே நீங்க கொடுக்கக்கூடாது.”
“ஆனால் அவளுக்கு பிடித்த விஷயம் கூட செய்ய மறுக்கிறாள்.” என்று ராகவ் இடைபுகுந்து குறைப்பட்டான்.
“செய்ய வைப்பதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கு. நீங்க இங்க கூட்டிட்டு வாங்க, பார்க்கலாம்.” என்று இன்முகமாய் முடித்துக்கொள்ள, பார்வையாளனாய் இருந்த கார்த்திக், “நானே ஒருநாள் கூட்டிட்டு வரேன் மேம்.” என்றவன் இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துவிட்டு ராகவுடன் வெளியேறினான்.
“இவங்க சுலபமா அவளுக்கு பிடிச்ச விஷயத்தை செய்ய வைக்க சொல்லிட்டாங்க. ஆனா அவளை செய்ய வைக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடும் எங்களுக்கு.” என்று வருந்தி ராகவ் கார்த்திக்கிடம் புலம்ப,
“அவ்வளவு பிடிவாதம் செய்றாங்களா? என்ன படிச்சிருக்காங்க?” என்றான் அவளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலில்.
“முதுகலை க்ரிமினாலஜி, ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணிட்டா ஆனால் இறுதித்தேர்வு எழுதல.”
“ஓ… சவாலான படிப்பு தான், பரவலாக பெண்கள் இதுமாதிரி படிப்பை தேர்ந்தெடுக்க மாட்டாங்க. சோ ஷீ மஸ்ட் பீ ஸ்ட்ராங் ப்ரம் தி ஸ்டார்ட். இந்த மனஉளைச்சல் தற்காலிகம் தான். தைரியம் நிறைந்த பெண்களால் அதிக நாள் தனக்குள் புழுங்கி, மறுகி ஓட்டுக்குள் அடைந்திருக்க முடியாது. சீக்கிரமே சரியாகிடுவாங்க. என்னால முடிந்த அளவு நானும் உதவுறேன்.”
“நீங்க இதுவரைக்கும் செய்ததே பெரிய உதவி தான். தேங்க்ஸ்.” என்று ராகவ் உளமார கூற, சன்னச் சிரிப்புடன் அதனை ஏற்றுக்கொண்டான் கார்த்திக். 
அவர்கள் சந்திப்பு முடிந்ததும் ராகவ் வீட்டிற்கு வந்துவிட, அவனை முதலில் எதிர்கொண்ட அம்புஜம் அன்று காலை நடந்த அனைத்தையும் சொல்லிவிட, திடுக்கிட்டான் ராகவ். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இவ்வளவு சீக்கிரம் வரதனிடமிருந்து எந்தவொரு செயலையும் எதிர்பார்த்திருக்கவில்லை அவன். அதோடு தன்னை கண்காணிக்கவும், தங்கள் வீட்டை கண்காணிக்கவும் ஆட்கள் ஏற்பாடு செய்திருக்கிறான் என்ற விவரம் அவனை பீதியாக்கியது. 
தான் நினைத்ததை விட விஷயம் வீரியமாக இருக்குமோ என்ற அச்சம் பிடித்துக்கொள்ள, கார்த்திக்கின் பேச்சினாலும், டாக்டரின் வார்த்தைகளாலும் விருட்சமாய் எழுந்திருந்த தைரியம் இருந்த தடம் தெரியாமல் அழிந்துவிட்டிருந்தது. கூடவே சுஜாவின் நிலையும் தெரிவிக்கப்பட, மனதால் சோர்ந்து போனான் ராகவ்.
“நான் பார்த்துக்குறேன் அம்மா. நீங்க இதையே நினைச்சு உடம்புக்கு எதுவும் இழுத்து விட்டுறாதீங்க.” என்று அவரை சமாளித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.
உறங்காமல் வெறுமென கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த சுஜா அறையின் வாயிலில் அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க ராகவ் கதவை தாழிட்டுக் கொண்டிருந்தான்.
வேகமாய் எழுந்தவள் அவனை நெருங்கி அவன் உடலில் எங்கும் காயம் இருக்கிறதா என்று ஆராய்ந்தவண்ணம், “வந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்னும் இல்லையே?”
பதட்டத்துடன் தன் மேல் படரும் அவள் கரங்களை பிடித்து நிறுத்தியவன், “எனக்கு ஒன்னும் இல்லை சுஜா. நான் நல்லா இருக்கேன். உனக்கு என்ன ஆச்சு?”
“லேசான மயக்கம் தான் வேற எதுவும் இல்லை.” என்று சமாளிக்க, அவள் கைபிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அமர்ந்தவன் அவள் கரத்தை ஆதரவாய் பற்றிக்கொண்டு,
“எதை மனசுல போட்டு குழப்பிட்டு இருக்க?” என்று கேட்க, முகம் சுருங்கியவளாய், “ஒன்றும் இல்லையே.” என்றாள்.
“என்னை கெஞ்ச வைக்காத சுஜா. ஏற்கனவே சோர்வா இருக்கு.” என்று கணவன் கூறயதும் அவனை மேலும் கெஞ்ச வைக்காமல்,
“எனக்கு பயமா இருக்கு.” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
நேற்று தங்கை சொன்ன அதே வரியை இன்று மனைவி சொல்லவும் மனம் வெம்பிப்போனது அவனுக்கு.
“என்ன பயம்?” என்று கேட்டவன் மனைவி கொடுத்த பதிலில் திகைத்துப்போனான்.
“நாளைக்கு நமக்கு பொண்ணு பிறந்து அவளுக்கும் மீரா மாதிரி எதுவும் நடந்துடுமோன்னு எனக்கு பயமா இருக்கு. நமக்கு பொண்ணு வேண்டாங்க.” என்று ஏதோ பிரம்மையில் பேசுபவள் போல் முகம் வெளிறி வார்த்தைகளை உதிர்க்க, அவள் கரம் அவள் அடிவயிற்றை யாரிடமிருந்தோ காப்பது போல் அழுந்த பிடித்திருந்தது.
“ஏய் என்னடி பேசுற?” காத்து தான் வந்தது அவன் வாயிலிருந்து.
“ஆமா நமக்கு பொண்ணு வேண்டாம். ஆசை ஆசையா குழந்தை வரவை ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து, எதிர்பார்த்து, காத்திருந்து பெற்ற பெண்ணை, பாசத்தை கொட்டி பாதுகாப்பா வளர்ப்பதே சவாலா இருக்கும் போது, நாளைக்கு அவள் வளர்ந்து வெளியே நடமாடும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வா சாவா என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருப்பதற்கு பதில் நமக்கு பொண்ணே வேண்டாங்க. அவள் வளர்ந்து செய்யாத தப்பிற்கு எதற்கு தண்டனை அனுபவிக்கணும்? என்னால மீரா இப்படி இருக்கிறதையே தாங்கிக்க முடியல, என் பொண்ணுக்கும் நாளைக்கு இதே மாதிரி எதுவும் நடந்துட்டா என்னால உயிரோடவே இருக்க முடியாது.” என்று கதறி அவன் மேல் சாய்ந்து அழ, ராகவின் தொண்டையை ஏதோ வந்து அடைத்தது. 
விழிகளில் அடைப்பு உடைபட்டு நீர் விழுந்துவிடவா என்றும் பயமுறுத்தியது. இவள் அளவுக்கு அவன் யோசித்தது இல்லை என்றாலும் இப்போது அவள் சொன்ன பிறகு நெஞ்சம் பதறித் துடித்தது. தங்கையை காணும் ஒவ்வொரு முறையும் கீறப்படும் ரணம் இப்போது முழுதாய் கீறப்பட்டு உப்பிட்டது போன்று வெந்து வலித்தது. கூடப்பிறந்த தங்கைக்கு இப்படி ஆனதே மனதை வெகுவாய் பாதித்திருக்க, இன்னும் இந்த மண்ணில் கால் பதிக்காத, பாலினம் தெரியாத அவனின் உதிரம் துயரப்பட்டால் அவனால் தாங்க முடியுமா? தங்கையை விட மகள் என்பவள் உசத்தி தானே… என்று அவனின் மனமும் மனைவியின் நினைப்பிற்கு ஏற்ப பயணிக்க, வார்த்தைகள் எழவில்லை நாவில். 
ஒருமூச்சு அழுது தீர்த்ததும் சுஜா விசும்பத் துவங்க, ராகவும் சற்று தெளிந்து, “இப்படி அழுகாதடி உடம்புக்கு எதுவும் ஆகிடப்போகுது.” என்று சமாதானத்தில் இறங்கினான். வேறு என்னதான் செய்திட முடியும் இப்படியொரு அசாதாரண சூழலில்?
“எனக்கு கஷ்டமா இருங்குங்க. நம்ம குழந்தையை பாதுகாப்பா நம்மால வளர்க்க முடியுமா?” என்று தேம்பலுடன் அவன் முகம் பார்த்து அவன் சட்டையை கொத்தாக பற்றிக்கொண்டாள் சுஜா.
“வளர்க்கலாம்டி. பயப்படாத. மீராவுக்கு நடந்ததால எல்லோருக்கும் அப்படியே நடக்கும்னு இல்லை. இங்கு இன்னமும் எத்தனையோ கோடி நல்லவர்கள் இருக்காங்க. அதில் கால்வாசி கூட தேறாத மனிதமிருகங்களுக்கு பயந்து நம்ம குழந்தையை வளர்க்கனுமா? பெண்ணா பிறந்தால் வீரதீரமா வளர்க்கணும், பையன் பிறந்தால் பெண்களை எப்படி மதித்து வாழணும்னு சொல்லிக் கொடுப்போம். நம்ம பசங்களை நாலு பேருக்கு நல்லது செய்யும் நல்ல உள்ளங்களா வளர்க்கணுமே தவிர யாருக்கும் பயந்து துவண்டுபோற மனிதர்களா வளர்க்கக் கூடாது.” என்ற தைரியம் நிறைந்த ராகவின் வார்த்தைகள் அவளை ஆசுவாசப்படுத்தின. கூடவே அவனின் அழுத்தமான கரங்கள் மென்மையை தத்தெடுத்து அவர்களின் உயிர் வளரும் இடத்தில் வருட, சுஜாவும் குனிந்து அவனின் கரத்தின் மேல் தன்னுடையதை வைத்து அழுத்தி,
“அதுதானே… அந்த கயவர்களுக்கு பயந்து நான் ஏன் பெண் குழந்தை பெத்துக்காம இருக்கனும்? எனக்கு பொண்ணு தான் வேணும். என் பொண்ணு நாளைக்கு பெரிய ஆளா வளர்ந்து அவள் அத்தைக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கவிடாம பார்த்துக்கணும்.” என்று சுஜா முழுதாய் மாற்றிப் பேச, அவளின் இந்த உணர்ச்சிகள் பேறுகாலத்தில் ஏற்படும் அலைப்புறுதலா என்ற சந்தேகம் ராகவிற்கு எழும்பினாலும், சுஜா போல் எல்லோரும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணி அஞ்சி, பெண் குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்து பெண் சமுதாயத்தையே அழித்துவிடும் உக்திகளை கையில் எடுத்தால் மீண்டும் கள்ளிப்பால் முறை நாகரீகம் பூசிக்கொண்டு வேறொரு உருவில் வருவது நிச்சயம் என்ற நிதர்சனம் பகீரென்றது.
எத்தனையோ முயற்சிகள் எடுத்து போராட்டங்களையும் எதிர்கொண்டு வென்று அடுப்பறை விட்டு வெளியே வந்திருக்கும் பெண்களை இந்த வக்கிர சமுதாயம் மீண்டும் அவளை அடுப்பறைக்குள் தள்ள முயற்சிக்கிறது. காலச் சக்கரம் உண்மையெனில் அதிகரித்துக் கொண்டிருக்கும் வக்கிர ஆண்களின் ஆதிக்கம் மூக்குடைபட்டு வீழ அச்சாரம் இடவேண்டுமே இந்த யுகம்!

Advertisement