Advertisement

அழைப்புமணி ஒலிக்க, அம்புஜம் சென்று கதவை திறப்பாரா இல்லை தான் போக வேண்டுமா என்பது போல் சுஜா இரண்டு நொடிகள் காத்திருந்தவள், அம்புஜம் அடுப்பறையை விட்டு நகருவதாய் இல்லை என்று தெரிந்ததும் அவளே போய் கதவை திறக்க, ஒரு பெரிய அட்டைப்பெட்டியுடன் நின்றிருந்தவன் கதவு திறக்கப்படவும் அனுமதியின்றி உள்ளே நுழைந்து பெட்டியை நடு ஹாலில் வைத்தான்.
“ஹலோ என்ன உங்க விருப்பத்திற்கு அனுமதி இல்லாம உள்ளே வரீங்க? இந்த அட்டைபெட்டியில் என்ன இருக்கு? எங்க வீட்டில் ஏன் கொண்டுவந்து வைக்குறீங்க? நாங்க எங்கேயும் எதுவும் ஆர்டர் பண்ணல.” என்று சுஜா குரலை உயர்த்த, அவளின் அரவம் கேட்டு வெளியே வந்தார் அம்புஜம். மீராவும் சுஜாவின் இந்த திடீர் சத்தத்தில் தன் அறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
“வரதன் ஐயா இதை கொடுத்துட்டு உங்களிடம் ஒரு விஷயம் சொல்லிட்டு வரச்சொன்னாரு.” என்றவன் அவர்களை பேசவிடாது, “அம்மாவை இந்த பழம் எல்லாம் சாப்பிட்டு தெம்பா இருக்கச் சொன்னாரு. நேற்று மாதிரி இன்னொரு முறை மயங்கி விழுகுற அளவுக்கு நீங்க விட்டா அவர் வீட்டுக்கு அம்மாவை கூட்டிட்டு போயிடுவாராம். அதோட போலீஸ் சகவாசம் எல்லாம் வச்சிக்க கூடாதுன்னு சொல்லச் சொன்னாரு.” என்றவன் தனக்கு தரப்பட்ட உத்தரவுபடி செய்தியை கடத்திவிட்டு அங்கிருந்து மின்னலென வெளியேறினான்.
பெண்கள் மூவரும் செவியில் விழுந்த செய்தியில் ஆடிப்போய் இருந்தனர். மீராவிற்கு விரக்தியில் தான் செய்த தவறின் வீரியம் புரிந்தது. இப்போது அதை நினைத்துப் பார்த்தால் எப்படி இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னோம் என்ற சந்தேகமே எஞ்சி நின்றது. ஆனாலும் மறுநொடியே கழிவிரக்கம் அவளை சூழ்ந்துகொள்ள, தனக்கு அமைந்த வாழ்க்கை இவ்வளவு தான். தனக்கெல்லாம் அழகிய காதல் வாழ்க்கை அமையாது அதை என்றும் நினைத்துக்கூட பார்க்கக் கூடாது. தம்மால் அனைவருக்கும் வருத்தம் தான். நேற்று குழந்தை கூட தன் முகத்தை கண்டு அஞ்சி அழுததே, அது தான் நிதர்சனம். இந்த ஜென்மத்தில் நமக்கு வாய்த்தது இந்த நரக வாழ்க்கை தான் என்று தன்னைத் தானே சமாதனம் செய்துகொள்ள மரத்துப்போனது மனது.
மரத்துப்போன மனதிற்கு எங்கிருந்து ஆசையும், கனவும் அது உடையும் போது ஏற்படும் வலியும் வேதனையும் புரியும்? உள்ளத்தோடு உடலும் மரத்துப்போக, ஒடுங்க இடம் தேடி கால்கள் தன்னால் அறைக்குள் நுழைந்துகொள்ள, கரங்கள் அறையை தாழிட்டது.
“என்ன சுஜா இது? எனக்கு பயமா இருக்கு.” என்று அம்புஜமே பயந்து மென்குரலில் கூற, சுஜாவை கேட்கவும் வேண்டுமா?
போலீஸ் சவகாசம் வேண்டாம் என்று அவன் சொல்லிவிட்டு போனது சுஜாவின் நெஞ்சத்தில் ராகவின் நிலை குறித்த பீதியை கிளப்பியது. அவன் தானே கார்த்திக்கை பார்க்கவென தன் அலுவலகத்திற்கு கூட விடுப்பு எடுத்துவிட்டு கமிஷனர் அலுவலகம் சென்றிருக்கிறான். அவன் சென்றிருப்பது அதற்குள் இவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால் தங்களை யாரோ கண்காணிக்கிறார்கள் என்றல்லவா பொருள். அதே பீதியுடன் நெஞ்சம் தடதடக்க, வேகமாய் ஓடிச் சென்று தன் அலைபேசியில் இருந்து ராகவை தொடர்புகொள்ள அவன் மூன்றாவது அழைப்பில் தான் எடுத்தான்.
“ஏங்க எத்தனை முறை கூப்பிடுறது? போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா?” என்று சத்தம் போட்டுவிட்டு தான் வேறு பேசவே துவங்கினாள், “எங்க இருக்கீங்க? உங்களுக்கு ஒன்னும் இல்லையே? நீங்க உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க.”
“நான் சொல்லிட்டு தானே வந்தேன். தெரியாத மாதிரி கேக்குற. நான் முக்கியமான வேலையில் இருக்கேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் பேசலாம்.” என்றுவிட்டு அவள் பதிலுக்குக் கூட காத்திராது போனை வைத்துவிட்டான் ராகவ்.
துண்டிக்கப்பட்ட அழைப்பை கண்டு கடுப்புற்றாலும் அவன் நலமாக இருக்கிறான் என்ற உண்மையே அவளை நிம்மதியாக்கியது.
“சுஜா என்ன ஆச்சு? ஏன் இப்படி ஓடிவந்த? எதுவும் பிரச்சனையா? உங்க மாமவும் வீட்டில் இல்லை ராகவும் இல்லை. என்ன செய்யறது இப்போ? எனக்கு ஒன்னுமே புரியல. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ… என் பொண்ணுக்கு நிம்மதியே கிடையாதா? இப்படிப்பட்ட வாழ்க்கையை தான் அவள் தலையில் எழுதி இருக்கேன்னா எதுக்கு அவளை இந்த பூமியில் உதிக்க வைச்ச? இப்போ அவளும் வருந்தி நாங்களும் வேதனைப்பட்டு ஏன் இந்த கஷ்டம் எல்லாம்?” என்று அவர்பாட்டிற்கு புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
அவரின் புலம்பல் மசக்கையில் ஏற்கனவே சோர்ந்திருந்த சுஜாவை இன்னும் வாட்ட, ஏற்கனவே சற்று முன் நடந்த களீபரத்தில் தோய்ந்திருந்தவள் இப்போது அழுத்தம் அதிகமாகி நிலைதடுமாறினாள்.
“அச்சோ… உனக்கு என்ன பண்ணுது சுஜா?” என்று அவள் விழும்முன் சுதாரித்து பதறிப்போய் சுஜாவை பிடித்தார் அம்புஜம்.
“அம்மு இங்க வாடி… சுஜா மயங்குறா தண்ணி எடுத்துட்டு வா.” என்று மகளுக்கு குரல் கொடுத்துவிட்டு சுஜாவை கைத்தாங்களாய் கட்டிலில் படுக்க வைத்தார்.
மகள் தண்ணீரோடு வருவாள் என்று காத்திருந்தவர் சுஜாவின் நெற்றியில் கலைந்திருந்த முடிகளை ஒதுக்கி, தன் முந்தியால் அவள் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு, மின்விசிறியை ஓடவிட்டுவிட்டு மகள் வருகிறாளா என்று பார்க்க அவள் அறைக்கதவு கூட திறக்கப்படவில்லை. மகளின் மேல் கடுகடங்கா கோபம் வந்தது. விரைவாய் தானே அடுப்பறை சென்று தண்ணீர் எடுத்து வந்தவர் அவளுக்கு மயக்கம் தெளிவிக்க, சுயநினைவுக்கு வந்தவள் எதுவும் பேசவில்லை.
“நீ ரெஸ்ட் எடு சுஜா. நான் எல்லா வேலையையும் பார்த்துக்குறேன். டீ போட்டு வந்து எழுப்புறேன்.” என்றுவிட்டு அறையை சாத்திவிட்டு நேரே மீரா அறையின் கதவைத் தான் தட்டினார்.
“ஏய் மீரா கதவைத் திற. கதவை சாத்திகிட்டு அப்படி என்ன பண்ற இந்த ஆறு மாசமா? ஒழுங்கா கதவை திறடி.” என்று சத்தம் போட, விடாது தொடரும் சத்தத்தில் மீரா ஒருவழியாய் கதவை திறந்தாள்.
“எதுக்கு இப்போ கதவை தட்டி தட்டி உடைச்சிட்டு இருக்க?” என்று மகள் சிடுசிடுக்க, அன்னையும் பதிலுக்கு சீறினார்.
“என்ன நினைச்சிட்டு இருக்க மீரா? அண்ணி மயங்கிட்டா தண்ணி எடுத்துட்டு வான்னு கத்துறேன். நீ பாட்டுக்கு உன் ரூமில் அடஞ்சி கிடக்க?”
“அண்ணிக்கு என்ன ஆச்சு? இப்போ நல்லா இருக்காங்களா?” என்று பரபரப்புடன் கேட்டவள் சுஜா அறை புறம் நடையை செலுத்த,
“அங்க இப்போ போனா காலை உடைச்சிடுவேன் மீரா. நாங்க எல்லோரும் உன்னை சுத்தி உசுரோட தான இருக்கோம். அதெல்லாம் புரியுதா இல்லையா உனக்கு? அப்படி என்ன நடந்துடுச்சுன்னு இப்போ நீ அந்த ரூமில் அடஞ்சு கிடக்குற? நாங்க செத்தால் கூட கண்டுக்காம உன்னோட வட்டத்துக்கு உள்ளேயே தான் இருப்பியா?” என்று தன் குமுறலை கொட்ட மீராவின் உணர்வு சட்டென விசும்பலாய் மாறியது.
“அம்மா ஏன் இப்படி பேசுற?” தேம்பலுடன் வந்தது அவளின் கேள்வி.
“வேற எப்படி பேசுறது? நீ செய்றது எல்லாம் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கு. நீயும் சந்தோஷமா இல்லை நாங்களும் நீ எந்த நேரம் என்ன செய்துப்பியோன்னு பயத்தில் தினம் தினம் செத்து புழச்சிட்டு இருக்கோம்.” என்று பதில் ஆதங்கமாய் வந்தது அம்புஜத்திடமிருந்து. 
“அதுதான் நீங்க ஏற்பாடு பண்ண திருமணத்திற்கு சம்மதம் சொல்லிட்டேனே. இனி நீங்க நிம்மதியா இருக்கலாம்.” என்று கசப்பாய் மொழிந்துவிட்டு மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்ட மகளைக் கண்டவர் இடிந்து அமர்ந்துவிட்டார்.
***
“என்ன பாஸ் வீட்டிலிருந்து பாஸ் லேடியா?” ராகவ் அலைபேசியில் பேசிவிட்டு வைத்தவுடன் கிண்டலாய் விக்ரம் கேட்க, ஆமோதிப்பாய் புன்சிரிப்புடன் தலையசைத்தான் ராகவ்.
“இப்போ அந்த தகவல் எல்லாம் உனக்கு எதுக்கு?” என்று கார்த்திக் தான் விக்ரமை முறைத்தான்.
“நமக்கு தான் இப்படி அக்கறையா விசாரிக்குற அளவுக்கு எந்த பொண்ணும் மடியில. சரி இருக்குறவர்களை பார்த்து மனசை தேத்திக்கலாம்னு கேட்டேன்.” என்று விக்ரம் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான். 
“இவ்வளவு பீல் பண்றீங்களே ஏன் நீங்க கல்யாணம் செய்துக்க கூடாது?” காவல் அதிகாரிகள் என்று மரியாதையாய் ராகவ் ஒதுங்கி இருக்க, தெரிந்தவர் என்று கார்த்திக் விக்ரமிடம் அறிமுகப்படுத்தியபோது சொல்லவும் இறுக்கம் மறைந்து இலகுத்தன்மை வந்துவிட்டது. அந்த இலகுத்தன்மை கொடுத்த தைரியம் அவனை சகஜமாய் பேசத் தூண்டியது. 
“நான் என்ன வேண்டாம்னா சொல்றேன்? யாரும் பொண்ணு தரமாட்டேங்குறாங்களே,” என்று அசட்டையாய் சொல்ல ஜீப்பில் இருந்த அனைவரின் இதழும் புன்னகையில் விரிந்தது.
“உங்களுக்கு என்ன குறை சார்? நல்ல வேலையில் இருக்கீங்க. நிலையான வாழ்க்கை இருக்கு.” என்று ராகவும் தோதாய் விக்ரமிடம் பேச்சு கொடுத்தான்.
“அட ஏன் பாஸ் நீங்க வேற… இந்த தொழில் மட்டும் தான் நிலையானது ஆனால் வாழ்க்கை நிலையானது இல்லை பாஸ். மக்கள் பண்டிகை கொண்டாடும் போது நாங்க டியூட்டிக்கு போகணும். குடும்பத்துல நடக்கும் பாதி விழாவுக்கு நினைச்ச நேரத்திற்கு போக முடியாது. அதனாலேயே போலீசுக்கு பொண்ணு தர நிறைய பேர் யோசிக்கிறாங்க.” என்று பெருமூச்சு விட,
“டேய் ஓவரா சீன் போடாத.” என்று கார்த்திக் அவன் கையை விளையாட்டாய் தட்டினான்.
“டேய் என் வேதனையை சொல்லிட்டு இருக்கேண்டா…”
“போதும் போதும் உன் சொந்தபுராணத்தை நிறுத்து, கிளீனிக் வந்தாச்சு.” என்ற கார்த்திக் ஜீப் நின்றதும் கீழே இறங்க, மூவரும் உள்ளே நுழைந்து தங்கள் வருகையை தெரிவித்து காத்திருந்தனர்.
“ராகவ் நீங்க கொஞ்சம் இங்கேயே வெய்ட் பண்ணுங்க? எங்களோட அலுவல் வேலையை முதல்ல பேசி முடிச்சதும் மீரா பற்றி பொறுமையா பேசுவோம்.” அவனின் துறை வேலை சம்மந்தமாக பேசும் போது மூன்றாவதாக ராகவ் இருக்க வேண்டாம் என்று எண்ணத்தில் தணிவாய் வேண்டினான் கார்த்திக்.
“கண்டிப்பா. நீங்க பேசிட்டு வாங்க, நான் காத்திருக்கேன்.” என்றவுடன் கார்த்திக் விக்ரமுடன் மருத்துவர் அறை நோக்கி சென்றான்.
“என்னவோ நடக்குது எனக்குத் தெரியாம…” என்று விக்ரம் கார்த்திக்கின் காதில் விஷமமாய் கிசுகிசுக்க,
“என்னடா உளறிட்டு இருக்க?”
“நான் சரியாத் தான் பேசுறேன். அது என்ன ராகவ் தங்கைக்கு மட்டும் சிறப்பு உபசாரம் நடக்குது? இவ்வளவு தூரம் மெனக்கெடுற?” என்றதும் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று மறுத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான் கார்த்திக்.
“வெல்கம் எங் மேன்.” என்ற உற்சாகக் குரலில் அந்த மருத்துவர் வரவேற்க,
“ப்ளெஷர் மேம். உங்களோட ஆதரவு நம்ம ஊர் பெண்களுக்கு தேவைப்படுது. எங்க துறை ஏற்பாடு செய்யும் விழிப்புணர்வு கூட்டங்களில் நீங்க வந்து பேசினா நல்லா இருக்கும். உங்களோட வார்த்தைகள் பலருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். நீங்க முடியாதுன்னு சொல்லக்கூடாது.” என்று சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்தை கேட்டுவிட்டான்.
“என்னோட ஆதரவு உங்களுக்கு கண்டிப்பா உண்டு. ஆனால் எதை பற்றிய விழிப்புணர்வுனு நீங்க சொல்லவே இல்லையே. ஏன்னா இன்றைக்கு பெண்களுக்கு எல்லா இடங்களில் விதவிதமான பிரச்சனை இருக்கு. ஆபீஸ் மட்டுமில்லை வீட்டிலுமே நிறைய கொடுமைகள் நடக்குது. நிறைய பெண்களுக்கு எதெல்லாம் துன்புறுத்தல் என்றே தெரியல. சோ எந்த ஏஜ் க்ரூப், எந்த மாதிரி விழுப்புணர்வு செய்யணும்னு சொன்னால் அதற்கு ஏற்றார் போல என்னை தயார் செய்துப்பேன்.” என்று நிமிர்வாய் பதில் கூறினார் டாக்டர் ஷோபா.

Advertisement