Advertisement

*4*
“வேலைபளு அதிகமா இருக்கும் போது வந்து தொந்தரவு செய்துட்டனா சார்?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான் ராகவ். 
அவனை இன்முகத்தோடு வரவேற்ற கார்த்திக் கையில் இருந்த கோப்புகளை ஒதுங்க வைத்துவிட்டு, இருக்கையை சுட்டிக்காட்டி, “முதல்ல உட்காருங்க. எங்க துறையில் எப்போ எந்த வேலை வரும்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் பிரச்னைகள் வந்த வண்ணம் தான் இருக்கும். சோ நீங்க ஒர்ரி பண்ணாதீங்க.” என்றவன் அங்கிருந்த மின்னழைப்பை அடிக்க உதவியாளன் உள்ளே நுழைந்தான்.
“ரெண்டு ஜூஸ் கொண்டு வாங்க.”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார்.” ராகவ் சங்கடத்தில் மறுத்தான். விடிந்தவுடன் அவனின் முதல் அழைப்பு கார்த்திக்கிற்கு தான். அவனிடம் பேச நேரம் வாங்கிவிட்டு தான் மற்ற வேலைகளையே கவனித்தான்.
“இங்க வந்துட்டு அப்படியே போறதா. அதெல்லாம் முடியாது. நீ ஜூஸ் கொண்டு வா ரவி.” என்று உதவியாளனை அனுப்பிட, வேலை நிமித்தமான அழைப்பொன்றும் கார்த்திக்கின் அலுவலக தொலைபேசிக்கு வந்து ராகவை காக்க வைத்தது. 
அவன் பேசி முடிக்கும் வரை ஒருவித தவிப்புடனே அமர்ந்திருந்தான் ராகவ். காவல் நிலையம் வருவதெல்லாம் மீராவின் வழக்கு தொடர்பாக இந்த ஆறு மாதங்களில் பழகியிருப்பினும் இந்த சந்திப்பு சற்று பதற்றத்தையே கொடுத்தது. வந்திருக்கும் நோக்கம் நிறைவேறுமா என்பது போல் ராகவ் அமர்ந்திருக்க, பழச்சாறும் வந்தபின் தான் ராகவ் புறம் கவனம் செலுத்தினான் கார்த்திக்.
“உங்க தங்கை இப்போ எப்படி இருக்காங்க?”
“அப்படியே தான் சார் இருக்கா. நேத்து அவளைப் பார்த்து குழந்தை அஞ்சி அழுததை அவளால ஏத்துக்க முடியல. அந்த ஸ்ட்ரெஸ்ல தான் உங்ககிட்டேயும் அவள் நேத்து பேசல. ரூமிலேயே அடைஞ்சி கிடக்குறா.” தங்கையின் புறக்கணிப்பை சமாளிக்கும் விதமாய் ராகவ் பேச்சினை முடிக்க, அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாத கார்த்திக்,
“புரியுது. இவ்வளவு நாள் அழுத்திட்டு இருந்தது ஒரே நாளில் குறைய வாய்ப்பில்லை. அதுக்காக நீங்க முயற்சியை விட்டுறாதீங்க.” என்று ஆறுதல் வார்த்தை பேசியவன் தனக்கு வேண்டிய தகவல்களை திரட்டும் விதமாய் அடுத்தடுத்த கேள்விகளை ஏவத் தயாரானான். 
“உங்க தங்கை வழக்கு விஷயமாக எனக்கு சில தகவல்கள் வேணும்.” என்று பீடிகை போட, உயரதிகாரியாய் இருப்பவனிடம் முடியாதென்றா சொல்லிட முடியும் ராகவால்?
“கண்டிப்பா சொல்றேன் சார்.” என்று சம்மதமாய் தலையசைத்தான்.
“குட். எந்த சரக காவல்நிலையத்தில் வழக்கு போயிட்டிருக்கு? முதல் நிலை அறிக்கை (FIR) நம்பர் என்ன? அது பதிவு செய்த நாள், சம்பவம் நடந்த தேதியும் வேணும். யார் விசாரணை செஞ்சாங்க? விசாரணை நடந்த விதத்தில் உங்களுக்கு சந்தேகம் எதுவும் இருக்கா?” என்று கேள்விகளை தொடுத்தவன் பதிலுக்கு ராகவை பார்த்தான்.
“கேஸ் நம்பர் சரியா நினைவு இல்லை சார்.” என்ற ராகவ் தொடர்ந்து எங்கு வழக்கு நடைபெறுகிறது என்ற தகவலையும் தெரிவித்து, “அன்னைக்கு ஈவ்னிங்கே போலீஸ் ஹாஸ்பிடல் வந்து விசாரிச்சு வழக்கு பதிவு செஞ்சிட்டாங்க சார். விசாரணை கொஞ்சம் கடுமையா தான் இருந்தது. திருவான்மியூர் பிராஞ்சிலிருந்து ஒருத்தர் வந்து விசாரிச்சார். அவர் கேள்விகள் எல்லாமே தப்பெல்லாம் மீரா மேல் இருக்குற மாதிரியே இருந்தது. மீராவை கார்னர் செய்யனும்னே கேள்வி கேட்டது மாதிரி இருந்துச்சு. அவரை பத்தி மேலதிகாரியிடம் புகார் கொடுத்தோம். அப்புறம் அவர் தொல்லை இல்லை.” என்க, கார்த்திக் அந்த அதிகாரியின் பெயரை கேட்டு யோசனையுடன் குறித்துகொண்டான்.
“ஓ… சம்மந்தபட்ட குற்றவாளியை முன்னாடியே உங்களுக்கோ இல்லை உங்க தங்கைக்கோ தெரியுமா? குற்றவாளி தரப்பில் இருந்து உங்க குடும்பத்துக்கு நெருக்கடியோ அழுத்தமோ தரப்பட்டதா? ட்ரீட்மென்டுக்கு சந்தேகப்படும்படியா யாரேனும் தானா முன்வந்து இதுவரை நிதி கொடுத்திருக்காங்களா? இல்லை சந்தேகப்படும்படியா ஏதாவது?” என்று கார்த்திக்கின் கேள்விகள் நீண்டன.
“அவனை எங்களுக்குத் தெரியாது சார். ஆனா மீராகிட்ட ஒருநாள் பேச வந்ததாகவும் மீரா அவனை கண்டுக்கலைன்னும் அவன் சொன்னான். அழகு இருக்கிற திமிரில தானே கண்டுக்காம மினுக்கிக்கிட்டு போனா அந்த அழகே இல்லாம இருந்தா கொட்டம் அடங்கிடும்னும் அமிலம் வீசுனேன்னு நேராவே சொன்னான் சார். ஆனால் மீராகிட்ட கேட்டா அவனை பார்த்த மாதிரி நியாபகம் இல்லைன்னு சொன்னா. மற்றபடி முதல் ஒருவாரம் நிறைய பேர் வந்து பார்த்தாங்க. சிலர் உதவி செஞ்சாங்க. அதில் சந்தேகிக்கிற மாதிரி எதுவும் நடக்கல சார்.”
ராகவ் சொன்ன பதிலை அசைபோட்டவனுக்கு மறைமுக காரணம் இந்த வழக்கில் எதுவும் இல்லை என்றே தோன்றியது. இது உணர்ச்சி வேகத்தில் நடந்துவிட்ட தவறா இல்லை வேண்டுமென்றே பலநாள் திட்டமிட்டு செய்த செயலோ என்பதை தெரிந்துகொள்ளவே இவ்வளவும் கேட்டான். அதோடு குற்றவாளிக்கு அதிகார பின்புலமோ பணபலமோ இருந்து தண்டனையில் இருந்து தப்பிக்க விலைபோகும் காவலர்களை கைக்குள் போட்டுக்கொண்டு ஆதாரங்களை அழிக்கவோ, உண்மையை மறைக்கவோ முயற்சித்துக் கொண்டிருந்தால் அதற்கு முட்டுக்கட்டை போட்டு குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை சட்ட வழியாகவோ இல்லை சுயமாகவோ கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒரு காரணம். அதனால் தான் மீராவின் வழக்கு பற்றி அவன் துறையிலேயே விசாரிக்க சொல்லியிருக்கவில்லை. நேரே ராகவையே அழைக்கச் சொல்லி தன் அலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வந்திருந்தான்.
நியாயப்படி பார்த்தால் இந்த வழக்கில் இவன் இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் ஏனோ தன்னை மருண்டு விழித்த பெண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்ற, ஒரு சிறிய விசாரனையே நடத்திவிட்டான்.
ராகவ் தனக்குள் எதையோ சிந்தனையில் மூழ்கி அமைதியாக இருக்கும் கார்த்திக்கை தயக்கத்துடன் பார்க்க, தன்னை சுதாரித்துக் கொண்டவன் தன் சுழல் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, “இதெல்லாம் எதுக்கு நான் கேட்குறேன்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். லெட் மீ கிளியர் இட். பெண்களுக்கான பிரச்சனைகளை களைந்து அவங்களுக்கு ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக் கொடுக்கும் பணியை தான் இப்போ நான் கையில் எடுத்திருக்கேன். அதில் ஒருபகுதியா ஏற்கனவே பாதித்த பெண்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய நீதி கிடைச்சிருக்கான்னு பார்த்து கவனிப்பதும் என் கடமைதான். சோ லெட் மீ ஹாண்டில் திஸ். உங்கள் தங்கை சம்மந்தமாக எந்த உதவி என்றாலும் தயங்காம என்கிட்ட கேளுங்க. எந்த நேரமா இருந்தாலும் நீங்க என்னை காண்டாக்ட் பண்ணலாம்.”
கார்த்திக்கின் நேர்மையான பேச்சில் அவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது ராகவிற்கு. இவன் மூலமாக தன் தங்கைக்கு நிச்சயமாக ஏதோ ஒரு நன்மை கிட்டப்போகிறது என்று அவன் உள்மனது அடித்துக்கூறி, அந்த நம்பிக்கையே இப்போது புதிதாக முளைத்திருக்கும் பிரச்சனையை அவனிடம் பகிர்ந்துக்கொள்ள தூண்டியது.
“ஆனால் இப்போ புதிதாக ஒரு பிரச்சனை வந்திருக்கு சார்.” என்று ராகவ் இழுக்க,
“என்னனு பயப்படாம சொல்லுங்க. விஷயம் என்னைவிட்டு வெளில எங்கேயும் போகாது.” என்று கார்த்திக் உறுதி கொடுக்க, ராகவ் தொடர்ந்தான்.
“மீராவிற்கு திருமணம் செய்யலாம்னு திருமண தரகரிடம் வரன் பார்க்க சொல்லியிருந்தோம். அங்கே தான் இந்த புது பிரச்சனை முளைச்சிருக்கு. வரதன்னு ஒருத்தர் வீட்டுக்கு வந்து மீராவை கல்யாணம் செய்து கொடுக்கணும்னு மிரட்டாத குறையாய் சொல்லிட்டு போயிருக்காரு.”
“என்ன மிரட்டல்லா? இது சரியில்லையே…” என்று கார்த்திக் இடைப்புக,
“அதுமட்டுமில்ல அவரோட வயசும் சரியா இல்லை. கண்டிப்பா ஐம்பது வயதுக்கு மேல இருக்கும். ஆளே வில்லங்கமா தெரியுறார்.”
ராகவின் பதிலில் அதிர்ந்த கார்த்திக் அதிர்ச்சியிலும், கோபத்திலும் விரல்களை மடக்கி, “வாட் ரப்பிஷ்.” என்று பல்லை கடித்தான்.
“இப்படிப்பட்ட ஆளையெல்லாம் நீங்க எப்படி வீட்டுக்குள்ள விட்டீங்க? மிரட்டுற அளவுக்கு போறார்னா கண்டிப்பா அது நல்லதுக்கு இல்லை. ஏதோ காரணம் இருக்கு.?” முன்பை விட இப்போது இன்னும் தீவிரமானான் கார்த்திக்.
“எங்களுக்கே இது அதிர்ச்சி தான் சார். அந்த நேரம் எதுவும் செய்ய முடியல. இந்த மீரா வேற வாய் வச்சிட்டு சும்மா இல்லாம இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டா. அந்த ஆள் இப்போ அதையே பிடிச்சுக்கிட்டார்.” என்ற ராகவின் கூற்றில் இன்னும் கடுப்பாகிப் போனான் கார்த்திக்.
மீராவின் முடிவில் சினம் துளிர்த்தவனாய், “ஏன் இந்த விஷயத்தை உங்க தங்கை சிக்கலாக்குறாங்க? இருக்குற பிரச்சனை உங்களுக்கு போதாதுன்னு இன்னும் இழுத்து விட்டுக்குறாங்க. முதலில் ஒழுங்கா உடம்பையும் மனசையும் தேற்ற சொல்லுங்க.” என்க, ராகவ் சங்கடமாய் இருக்கையில் நெளிந்தான்.
அந்த நேரம் கார்த்திக் அறைக்கதவு தட்டப்பட கார்த்திக்கின் பார்வை கதவின் புறம் சென்றது.
“சார் டாக்டர் ஷோபாவோட உங்களுக்கு இன்னும் அரைமணி நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் இருக்கு இன்னைக்கு.” என்று உள்ளே நுழைந்த உதவியாளர் அவனுடைய அட்டவணையை நினைவுபடுத்த, தன் மணிக்கட்டை பார்த்தவன் நேரமாவதை உணர்ந்து நெற்றியை தேய்த்துக் கொண்டான். அவனுக்கு மீராவை பற்றியும், பிரச்சனை செய்யும் அந்த புதிய வயதானவன் பற்றியும் பேச இன்னும் சில கேள்விகள் இருந்தது. இப்போதைக்கு அது முடியாது என்பது புரிந்த கொண்டவன், தன் தொப்பியை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயுத்தமானான்.
“சரி ஜீப் தயார் செய்ய சொல்லுங்க. அப்படியே விக்ரமையும் டு டூ லிஸ்ட் எடுத்துட்டு ஜீப்ல காத்திருக்க சொல்லுங்க. நான் ஐந்து நிமிடத்தில் வரேன்.” என்கவும் உதவியாளர் அந்த செய்தியை உரியவரிடம் கடத்த வெளியேறினார்.
“சரி சார். நான் கிளம்புறேன். இன்னொரு நாள் மீட் செய்யலாம்.” என்று ராகவ் சூழ்நிலை உணர்ந்து எழுந்துகொள்ள, கார்த்திக்கும் முதலில் தலையாட்டி ஏற்றுக்கொண்டு எழ, ராகவ் நகரவும் ஒரு யோசனை கிட்டியது.
துரிதமாய், “ராகவ்,” என்று வெளியே சென்றவனை கூப்பிட்டுக் கொண்டே இவனும் வெளியே வந்தான்.
ராகவ் என்னவென்பது போல நின்று இவனைப் பார்க்க,
“நான் உளவியல் ஆலோசகரை தான் சந்திக்கப் போறேன். உங்களுக்கு நேரம் இருந்தால் என்னோடு வாங்களேன். மீரா பத்தி அவங்ககிட்ட பேசலாம்.”
சார் என்ற விளிப்பு ராகவ் ஆகியிருந்தது. ராகவின் தங்கை மீரா ஆகிப்போனால் அவன் பேச்சில். ராகவ் போலவே கார்த்திக்கிற்கும் ராகவுடன் ஒரு நெருக்கம் வந்திருந்தது.
“இல்லை நீங்க ஏதோ வேலையா போறீங்க. இதில் நானும் என் பிரச்சனையும் எதற்கு?” என்று ராகவ் தயங்க,
பர்சனலை வேலையுடன் இணைக்க மாட்டேன் என்று நேற்று சொன்ன கார்த்திக்கோ இன்று சுயவிருப்பில் ராகவை உடன் அழைத்துச் செல்வதில் உறுதியாய் இருந்தான்.
“இப்போ தானே சொன்னேன் இதுவும் என் வேலையோட ஒரு அங்கம் தான். வாங்க. ஜீப்பிலேயே போயிட்டு வந்துறலாம்.” என்று அழைத்துச் சென்றான்.
என்னுடைய வேலை என்று சொல்லிவிட்டான் தான் ஆனால் அவனுடைய எல்லா வேலைகளிலும் சம்மந்தப்பட்டவரை தன்னுடன் அழைத்துச் சென்றதில்லை.
மீரா விஷயம் மட்டும் விதிவிலக்காகிவிட, அதுவே அவர்கள் விதியை நிர்ணயிக்கும் விதையாகியது.
***

Advertisement