Advertisement

“அந்த ஆள் லேசுப்பட்டவன் மாதிரி தெரியல. இதை இப்படியே விடமாட்டானு நினைக்கிறன். ஏதாவது செய்யணும். இந்த விஷயத்துக்காகவே நான் கார்த்திக் சாரை போய் பார்க்கலாம்னு இருக்கேன். அவரும் நல்லமனிதரா தெரியுறார். இந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சிகனும். நாளைக்கே நான் அவரை போய் பார்க்குறேன். இந்த மாதிரி நேரத்தில் நமக்கும் பெரிய பதவியில் இருக்குறவங்க ஆதரவு வேணும்.” என்று ராகவ் நம்பிக்கையாய் கூற,
“கார்த்திக்கா? யார் அது?”
“பீச்சுல அம்மு அவர் மேலதான் மோதி மயங்கி விழுந்தா. ஹாஸ்பிடல் வரை வந்து உதவிட்டு போனாரு. அசிஸ்டென்ட் கமிஷ்னராம்.”
“நல்லவரா இருந்தா சரிதான். நீங்க நாளைக்கே அவரிடம் போய் பேசுங்க. ஆனா உடனே எல்லாத்தையும் ஒப்பிச்சுடாதீங்க. கொஞ்சம் பேச்சு கொடுத்து ஆள் எப்படின்னு பார்த்துட்டு அப்புறம் இதை பற்றி பேசுங்க. நமக்கு மீராவோட ப்ரைவசி முக்கியம். எல்லோரிடமும் அவள் வாழ்க்கையில் நடந்ததை சொல்லனும்னு அவசியம் இல்லை. ஏன்னா நாளையே அதை காரணியா வச்சு யார் வேணும்னாலும் ஏதாவது செய்யலாம். நம்ம இனி எப்போதுமே சுதாரிப்பா இருக்கனும்.” என்றவள் பேச்சை சட்டென்று நிறுத்தி தயக்கத்துடன் அவன் முகம் பார்க்க, அவள் தோல் சுற்றி கைபோட்டவன், “இவ்ளோ நேரம் பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு இப்போ என்ன என் முகத்தை பார்த்துட்டு அமைதியா இருக்க?”
“மீராகிட்ட நமக்கு பாப்பா வரபோறதை சொல்லிடலாம். அவகிட்ட சொல்லாதது எனக்கு வருத்தமா இருக்கு.” என்றாள் முகம் சிறுக்க.
“வேணும்ணே நாம சொல்லாம ஒன்னும் இருக்கலையே… சூழ்நிலை அப்படி. அதை நினைச்சு வருத்திக்காத… அதோட நான் இன்னைக்கு ஈவ்னிங் அவகிட்ட சொல்லிட்டேன்.”
“சொல்லிட்டீங்களா? நாம முன்னாடியே அவகிட்ட சொல்லலைன்னு வருத்தப்பட்டாளா?”
“புதுவரவில் அவளுக்கு ஹாப்பிதான். ரொம்ப சந்தோஷப்பட்டா.” என்றான் இன்முகமாய். அவனின் முறுவல் அவளையும் தொற்றிக்கொள்ள களிப்புடன் அவன் மார்பில் சாய்ந்தாள் சுஜா.
***
அந்த பெரிய சுற்றுச்சுவரின் உள்ளே பசுமையை தாண்டி வீற்றிருந்த பங்களா பல நிற அலங்கார விளக்குகளால் ஒளிர, ஆங்காங்கே இருளில் பூச்சுகள் ஓசை எழுப்ப அமைதியாய் நுழைந்தது அந்த விலையுயர்ந்த கார். அதிலிருந்து இறங்கிய கார்த்திக், “இன்னைக்கு இங்கேயே சாப்பிட்டுருங்கண்ணா. அப்பா வேலை முடிஞ்சதும் உங்களுக்கு போன் பண்ணுவாங்க. அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து விட்டுட்டு நீங்க உங்க வீட்டுக்கு போங்க.” என்று ஓட்டுனரிடம் கூறிவிட்டு தன் வீட்டினுள் நுழைந்தான்.
காலணிகளை வெளியேவே விட அதற்கான ரேக் இருந்தாலும் கேட்பாரற்று அது ஒருமூலையில் இருக்க, கார்த்திக் தன்னுடைய காக்கி ஷூவுடனேயே உள்ளே நுழைந்தான். அதை கண்ட முத்தம்மாவிற்கு சுணக்கம் ஏற்பட்டாலும், ஒன்றும் சொல்லாமல் கார்த்திக்கை ஏறிட்டு,
“என்ன தம்பி நீங்க மட்டும் வரீங்க? ஐயா வரலையா?”
“அப்பாக்கு ஏதோ வேலை இருக்காம். அவங்க வெளியில சாப்பிட்டுப்பாங்க. நீங்க எனக்கு எடுத்து வைங்க. நான் வந்துறேன்.” என்றவன் இரண்டு இரண்டு படிகளாய் தாவி மாடியில் இருக்கும் தன் அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே வந்தான்.
முத்தம்மா உணவை பரிமாற தட்டில் என்ன இருக்கிறது என்று கூட கவனியாமல் ஏதோ சிந்தையில் உழன்று பெயருக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“என்ன தம்பி கையும் வாயும் இங்க இருக்கு மனசு எங்கேயோ இருக்கிற மாதிரி இருக்கே? எதுவா இருந்தாலும் சாப்பிட்டுட்டு யோசிங்க தம்பி. இப்படி சாப்பிட்டா உடம்புல ஒட்டாது.” என்று அக்கறையுடன் சொன்ன முத்தம்மாவை முறுவலுடன் ஏறிட்டவன், 
“நீங்க சாப்டீங்களா?”
“நீங்க சாப்பிடாமா நான் எப்படி தம்பி?”
“எங்களுக்காக காத்திருக்காம முன்னாடியே சாப்பிட்டு மாத்திரை போடுங்கன்னு நானும் பலமுறை உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க கேட்காம தினமும் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கிறீங்க.” என்று அவனும் உரிமையுடன் சாடினான்.
“எசமான் சாப்பிட்ட பிறகு இருக்குற மிச்ச மீதி தான் இந்த கூலிக்கு தம்பி. நீங்க காட்டுற இந்த அக்கறையே எனக்கு போதும். இதுக்கு மேல இங்க நான் உரிமை எடுத்துகிட்டா நாளைக்கு அதுவே பிரச்சனை ஆகிடும். யார் யார் எங்க இருக்கணுமோ அங்க இருக்கிறது தான் நல்லது தம்பி. ஒரு நேரம் போல இன்னொரு நாழி இருக்காது. அதனால் என்னை வற்புறுத்தாதீங்க.” என்றுவிட்ட முத்தம்மாவை கட்டாயபடுத்தி சங்கடப்படுத்த மனமின்றி தன் உணவை முடித்துக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தான்.
சிந்தனை ரேகைகள் நெற்றியை ஆக்கிரமித்திருக்க, மனதில் பல கணக்குகள். எல்லாம் அவன் வேலையைப் பற்றிய எண்ணங்களே.
“நானும் அப்போதிலிருந்து பார்க்கிறேன், ஏதோ யோசனையிலேயே இருக்கீங்க எதுவும் பிரச்சனையா தம்பி?” பாத்திரங்களை ஒதுங்க வைத்துவிட்டு அவன் அருகில் தரையில் அமர்ந்துகொண்டு முத்தம்மா அவன் சிந்தனையை கலைத்தார்.
சுருங்கி இருந்த கண்களை விரித்தவன், “எப்படி முத்தம்மா நீங்க மட்டும் நான் என்ன மூடில் இருக்கேனு சரியா சொல்றீங்க?”
“அதெப்படி எனக்கு தெரியாமல் போகும்… உங்களை குழந்தையா இருக்கும் போதிலிருந்தே பார்த்து கவனிச்சிட்டு தானே இருக்கேன். சரி அதை விடுங்க தம்பி, எதை மனசில் போட்டு உழட்டிட்டு இருக்கீங்க? பகிர்ந்துக்கிற விஷயமா இருந்தால் சொல்லுங்க உங்க குழப்பமும் கொஞ்சம் குறையும்.”
“இன்னைக்கு ஒரு பெண்ணை பார்த்தேன்.” என்று அவன் சொன்னது தான் தாமதம் முத்தம்மா அவன் திருமணம் வரை யோசித்துவிட்டார்.
“பார்த்ததும் பிடிச்சிடுச்சா? நான் ஐயாகிட்ட சொல்லி சீக்கிரமே கல்யாண வேலையெல்லாம் ஆரம்பிக்க சொல்லவா?” என்று அவர் வேகமாக எழ கார்த்திக் வேகமாக அவர் கையை பிடித்து நிறுத்தினான்.
“உங்க லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு முத்தம்மா. தினம் ஆயிரம் பேரை பார்க்கிறேன் அதில் எப்படியும் முப்பத்தி மூன்று சதவிகதம் பெண்கள் இருப்பாங்க. அவங்க எல்லோரையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லுவீங்க போலிருக்கு?”
“ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல் தம்பி? நீங்க ‘ம்’னு சொல்லுங்க ஐயா பொண்ணுங்களை வரிசையில் கொண்டுவந்து நிறுத்துவாங்க.” என்று கர்வமாய் மொழிந்தார் முத்தம்மா.
கார்த்திக் கரத்தை மேலே கூப்பி, “வேற வினையே வேண்டாம். அதுக்குள்ள எதுக்கு எனக்கு கல்யாணம் பேசுறீங்க? இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும்.”
“அடடா உலகம் புரியாம இருக்கீங்களே. கொஞ்ச நாள் போகட்டும் கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுதான் இந்த 90’ஸ் கிட்ஸ் புள்ளைங்கலாம் பொண்ணு கிடைக்காம மீம்ஸ் போட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க. நீங்க என்னன்னா இன்னும் வருஷம் போகட்டும்னு சொல்றீங்க.” என்று சலித்துக்கொண்டார் அந்த மூதாட்டி.
“என்னது 90’ஸ் கிட்ஸ் மீம்ஸா? இதெல்லாம் எங்க பாக்குறீங்க நீங்க?”
“அதுதான் நியூஸ் சானலில் மாலை செய்திகளில் பத்து நிமிடம் போட்டுக் காண்பிக்குறாங்களே? அதெல்லாம் விடுங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. ஐயாகிட்ட பொண்ணு பார்க்க சொல்லவா? முப்பது நெருங்குது லேட்டானா பொண்ணு கிடைக்காது.” என்று கேட்டார் ஆர்வமாய். அவன் அன்னை இருந்திருந்தால் இதெல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது அவருக்கு. ஆனால் அவன் தந்தைக்கோ மகனுக்கு திருமண வயது எட்டிவிட்டது என்பதுகூட தெரியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கிறார் இன்னமும்.
“நீங்க அப்பாகிட்ட சொல்லி எதையும் இழுத்து விட்டுறாதீங்க. நான் எதார்த்தமா ஒரு பெண்ணை பார்த்தேன்னு தான் சொன்னேன், நீங்க என் கல்யாணம் வரைக்கும் போயிட்டீங்க.”
“சரி சரி நான் எதுவும் சொல்லல… உங்க விருப்பம் தான் முக்கியம்.” என்று அவர் அந்த விஷயத்தை விடவும் தான் கார்த்திக் தன் மனதில் இருப்பதை பகிர்ந்தான்.
“இன்னைக்கு பீச்சில் ஒரு பொண்ணு என் மேல வந்து மோதி மயங்கி விழுந்தா முத்தம்மா. நானும் அவளை தாங்கிபிடிச்சி நிறுத்தி அவள் முகத்தை பார்த்தேன், ரொம்ப வருத்தமாகிடுச்சு. அந்த பொண்ணு மேல எவனோ அமிலத்தை வீசியிருக்கான். எவ்வளவு வன்மம், வக்கிரம் இருந்தா சகமனுஷினு பார்க்காம இப்படி செஞ்சிருப்பான். அவ்வளவு ஆத்திரம் வந்துச்சு எனக்கு. மனசு பாரமாகிடுச்சு.”
“இந்த மாதிரி வக்கிரம் பிடித்தவர்கள் வாழவே தகுதியற்றவர்கள். என்ன காரணத்தால் இப்படி செஞ்சானாம்?” என்று எதிர்கேள்வி எழுப்பினார் முத்தம்மா ஆத்திரம் பொங்க.
“அந்த பெண்ணை ஹாஸ்பிடலில் சேர்த்துட்டு கொஞ்சம் நேரம் இருந்துட்டு வந்தேன். அவள் அண்ணன்னும் பதட்டமா இருந்தாங்க அதனால் கேட்க முடியல.” என்று நிறுத்தியவன் முகம் சட்டென்று சினத்தை பூசிக்கொண்டது.
“வேற பெரிய காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒருதலை காமத்திற்கு ஒருதலை காதல்னு பேர் வச்சிருப்பான். அவனையெல்லாம் அணுஅணுவா சித்திரவதை செய்து கொல்லனும். பதிலுக்கு அவன் மேல அமிலம் வீசி அந்த வலியை உணர்த்தனும்.” என்று கைமுஷ்டிகள் இறுகி பல்லை கடிக்க, முத்தம்மா அவனருகில் வந்து அவன் கையை மெல்ல நீவிவிட்டார்.
“கோபப்பட்டு ஒன்னும் ஆகப்போறது இல்லை தம்பி. சட்டப்படி என்ன செய்யணுமோ அதை செய்யுங்க. அதோட இனி எந்தவொரு பெண்ணும் இந்த கொடுமையை அனுபவிக்க கூடாது.”
“அதற்கு தான் என் நம்பரை கொடுத்துட்டு வந்திருக்கேன். என்னனு விசாரிச்சு எந்த ஸ்டேஷனில் இந்த கேஸ் நடக்குதோ அதை க்ளோசா வாட்ச் செய்யணும்.” என்றவன் ஓரிரு நிமிடம் அமைதி காத்துவிட்டு, “ஏன் சிலருக்கு புத்தி இப்படி போகுதுன்னு தெரியல முத்தம்மா. ஆணுக்கு எப்படி தங்களின் விருப்பை ஏற்கவோ விருப்பம் இல்லாதவற்றை மறுக்கவோ உரிமை இருக்கோ அதே போலத்தான் பெண்ணுக்கும் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மறுக்க உரிமை இருக்குனு இந்த முட்டாள்களுக்கு புரிவது இல்லை. இது ஒரு மனவியாதினு தான் தோணுது எனக்கு. தான் சொல்கிறபடி தான் நடக்கணும். தான் மட்டுமே ஆளனும் என்கிற வக்கிரபுத்தி இப்போ பலரிடம் பரவலா இருக்கு. இதையெல்லாம் மாத்தணும். பெண்களும் நம்முடன் வாழ பிறப்பெடுத்திருக்கும் சகமனிதர்னு புரிஞ்சிக்கணும். பழைய காலத்தில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து எழுதப்பட்ட காவியங்கள் சொல்லுது பெண்களை நம் முன்னோர்கள் எப்படி மதித்தார்கள்னு. எல்லா ஆறுகளுக்கும் பெண்பால் பெயர் தான் வச்சாங்க ஆனால் இன்னைக்கு… என்ன சொல்றது எல்லாமே கரப்ட் ஆகிடுச்சு.”
“உங்களால் முடிந்த அளவு இதில் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க தம்பி.”
“கண்டிப்பா. அந்த பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா. அடுத்த முறை பார்க்கும் போது கொஞ்சம் தைரியம் சொல்லனும்.” என்று இயல்புக்கு திரும்பி சொன்னான்.
“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. தைரியம் சொல்றேன்னு உங்க பரிதாபத்தை அந்த பொண்ணுகிட்ட காட்டீறாதீங்க. ஏன்னா நீங்கள் பரிதாபப்படுவது சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிஞ்சா அதுவே அவங்க தன்னம்பிக்கையை அழிக்கும். நீங்க அனுதாபம் காட்ட காட்ட நம்மால் முடியும் என்ற நம்பிக்கை உடைந்து நம்மால எதுவும் செய்ய முடியாதுன்னு தங்களைத் தானே நம்ப வச்சிப்பாங்க. அப்படி நம்பிட்டாங்கனா காலத்துக்கும் வாழ்க்கையில் நிமிரவோ முன்னேறவோ நினைக்காமல் மற்றவர்களின் உதவியை நாட ஆரம்பிச்சிடுவாங்க. அது ஒருவருடைய வாழ்க்கையையே அழிப்பதற்கு சமம். பெரிதாக சம்பாரித்து பெரிய கார் வாங்கி பங்களா கட்டுறது முக்கியம் இல்லை, கால் வயிறு நிறைஞ்சாலும் என்னால தில்லா எதையும் சமாளித்து வாழ முடியும்னு உழைக்குறான் பாரு அவன் தான் உண்மையான வெற்றியாளன். உன்னால முடியும் என்கிற நம்பிக்கையை தான் நீங்க கொடுக்கணுமே ஒழிய பெயருக்கு நாலு ஆறுதல் வார்த்தை பேசுறது அர்த்தமற்றது. இது மத்த விஷயம் மாதிரி விளையாட்டான விஷயமில்லை, ஒரு பெண்ணோட உணர்வுகள் அடங்கி இருக்கு தம்பி. யார் மனதும் நோகாமா நடந்துக்கோங்க.” என்ற அவரின் அனுபவம் அவனுக்கு பாடமாய் கற்பிக்கப்பட, நல்மாணவனாய் கேட்டுகொண்டான் கார்த்திக்.
“நான் பார்த்துக்குறேன் முத்தம்மா.” என்றான் ஆத்மார்த்தமாய். அன்னையின் இழப்புக்கு பிறகு நெருக்கமாகிவிட்ட முத்தமாவின் வார்த்தைகள் அவனுள் நல்ல சிந்தனைகளை விதைத்திருந்தது.
“அந்த பொண்ணு பெயர் என்ன தம்பி?”
அவரின் கேள்வியில் தான் அவளின் பெயரை கேட்டுகொள்ளவிலை என்பது உரைத்தது, “அதை கேட்க மறந்துட்டேன். ஆனால் அவன் அண்ணன் அவளை அம்முன்னு கூப்பிட்டாங்க.” என்று அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.
“என்னவோ போங்க… ரொம்ப நாளுக்கு பிறகு இன்னைக்கு மனசுவிட்டு பேசியிருக்கோம். எல்லாம் அந்த பொண்ணால… நல்லபடியா ஒரு வாழ்க்கையை அந்த பொண்ணுக்கு அமைச்சு கொடுத்துடு ஈசா… இனியாவது நிம்மதியான வாழ்க்கை அந்த பொண்ணுக்கு கிடைக்கட்டும்.” என்று மனதார வேண்டுதல் வைத்தவர் மெல்ல எழுந்து அங்கிருந்து நகர்ந்துவிட கார்த்திக் யோசனையுடன் தன் அறைக்கு சென்று தன் கணினியை உயிர்ப்பித்தான். ராகவ் சொன்ன தகவல்களை வைத்து அந்த பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கி, சற்று நேரத்தில் கண்டுபிடித்தும் விட்டான் ஒரு மின்னிதழில்.
“மீரா…” என்று அவன் அதரங்கள் அவள் பெயரை உச்சரிக்க மனதில் ஏனோ ஒரு இலகுத்தன்மை வந்து ஒட்டிக்கொண்டது.

Advertisement