Advertisement

டேக் கேர்.என்று கார்த்திக்கின் வாய்மொழி ராகவிடம் உரையாட, விழி மீராவின் மீது இருந்தது. அவள் நிமிர்வாளா என்று பார்க்க மீரா அசைவதாய் இல்லை.
அதிருப்தி பெருமூச்சுடன் ராகவிடம் தலையாட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான் கார்த்திக்.
அந்த அறையை விட்டு வெளியேறியதும் அவன் அலைபேசி ரீங்காரமிட, எடுத்துப்பார்த்தால் அவன் தந்தை தான் அழைத்திருந்தார்.
சொல்லுங்க அப்பா…
எங்க இருக்க கார்த்தி? நான் பீச்சுக்கு வந்துட்டேன்.என்றார் மறுமுனையில் இருந்து.
இதோ நான் வந்துட்டே இருக்கேன். கொஞ்சம் காத்திருங்க.என்றவன் பேசிக்கொண்டே மருத்துவமனை வாயிலுக்கு வந்திருந்தான். அங்கு வந்தவுடன் தான் திரும்ப செல்ல வாகனம் எதுவும் இல்லை என்பது விளங்கியது. நெற்றியை தேய்த்துக்கொண்டு ஓலாவில் கார் புக் செய்துவிட்டு நிற்க, அவன் பின்னால் ஹார்ன் சவுண்ட் கேட்டது.
என்னவோ உன் அப்பன் வீட்டு சொத்து மாதிரி எதுக்கு இப்படி வழியை அடச்சிக்கிட்டு நட்டநடுப்புற நிக்கிற? நகர்ந்து நில்லு. பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க ஆனால் இப்படி பொறுப்பில்லாம…என்று பைக்கில் இருந்த ஒருவன் சிடுசிடுக்க, அவனின் மொழியில் கடுப்பாகிப் போனான் கார்த்திக்.
என்ன ரொம்ப துள்ளுற? ஒழுங்கா பேசி பழகு இல்லைனா யாரிடமாவது நல்லா வசமா வாங்கிடுவ.என்று மிரட்டலாய் கார்த்திக் இரண்டடி முன்வைத்து கைஓங்கி மொழிய, அவனின் தோரணையில் சட்டென பம்மி அங்கிருந்து நகர்ந்த அந்த வாலிபன் சற்று தூரம் சென்று ஓரமாய் வண்டியை நிறுத்தி யாருக்கோ தகவல் தெரிவித்தான். இங்கு கார்த்திக்கும் கார் வந்ததும் கிளம்பியிருந்தான்.
என்னடா அம்மு இப்படி பண்ற? நான் தான் இருக்கேன்ல அவரிடம் ஒரு தேங்க்ஸ் சொல்லியிருக்கலாம் இல்லைனா முகம் திருப்பாமலாவது இருந்திருக்கலாம்.என்று வாஞ்சையாய் தங்கையின் கேசத்தை ராகவ் வருட, அவளுடலில் நடுக்கம் ஓடுவதை அவனால் உணரமுடிந்தது. கூடவே சூடான உவப்பு நீரும் அவன் சட்டையை தாண்டி அவன் நெஞ்சை சுட்டது.
எனக்கு… பயமா இருக்கு.என்று ஒரு கேவலுடன் தேம்பினாள் சிறுபிள்ளை போல்…
தங்கையின் பேச்சில் ராகவிற்கு நெஞ்சு வேகமாய் துடித்து ஏறி இறங்க அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன பயம்?” என்று மென்மையாய் அவளை பேசத்தூண்டும் விதமாய் கேட்க,
அவனை… அவனை மாதிரியே திரும்பவும் யாராவது ஏதாவது பண்ணிட்டா? என்னால… இனி ஒருமுறை அந்த வலியை தாங்க முடியாது.என்று தொண்டைக்குழி ஏறி இறங்க மட்டுப்பட்டிருந்த தேம்பலுடன் தன் மனதை திறந்தாள் மீரா.
எல்லோரும் அவனை மாதிரியே இருக்க மாட்டாங்கடா.வேறென்ன சொல்லிவிட முடியும் அந்த தமையனால்.
ஆனா அவன் இருந்தானே…
அவன் இருக்கான் தான்… உள்ளே கம்பி எண்ணிக்கிட்டு.என்றான் கண்களில் குரோதம் மின்ன,
ஆனா யாரை பார்த்தாலும் எனக்கு அவனை மாதிரியே தெரியுதே…என்று பயத்தில் வெளிறி சொன்ன தங்கையின் கலக்கம் அந்த தமையனின் தொண்டையை அடைத்து பயஉருண்டையை உருட்டியது. 
அவன்கிட்ட நான் பேசுனது கூட இல்லை… ஆனா அவன்… ஏன் அப்படி செஞ்சான்? நான் எதுவுமே பண்ணலையே? என் படிப்பு என் வாழ்க்கைன்னு யாரையும் தொந்தரவு செய்யாம தானே இருந்தேன். திடீர்ன்னு எங்கிருந்து வந்தான் அவன்? இப்போ… யாரை பார்த்தாலும் அவனை மாதிரி செஞ்சிடுவங்களோனு பயமா இருக்கு ராகவ்.என்று தன் நடுங்கும் அதரங்களுடன் அவள் ஐயத்தை பகிர்ந்துகொள்ள தைரியம் சொல்ல வார்த்தைகள் தேடி ஓய்ந்தான் அந்த தமயன். 
அவனுக்குமே எந்த பொத்தில் எந்த பாம்பு ஒளிந்து கொண்டிருகிறது என்ற பீதி இருக்கவே செய்கிறது. எங்கிருந்தோ வந்தவன் அச்சத்தை புகுத்தி, தன்னம்பிக்கையை பிடுங்கி நிம்மதியற்ற வாழ்க்கையை பரிசாக அளித்து சென்றுவிட்டான். அதில் அல்லோலப்பட்டு மீண்டுவர தத்தளித்துக் கொண்டிருக்கும் போது என்னவென்று அவளை தேற்றிட முடியும். 
இந்த உலகம் இப்படித்தான் என்று சொல்ல முடியுமா? இல்லை இதெல்லாம் நந்தவனத்தில் இருக்கும் சிறு முட்கள் அதை கடந்து செல்லத்தான் வேண்டும் என்றுதான் சொல்லிட முடியுமா? இல்லை இனி இப்படி ஒரு விபரீதம் எதுவும் நடக்காது என்ற உத்தரவாதம் தான் தரமுடியுமா? எதுவும் முடியாத பட்சத்தில் இந்த நிலையை கடந்துதானே ஆகவேண்டும்.
அவர் போலீஸ் அம்மு. அவர் ஒன்னும் செய்யமாட்டார்.என்று ராகவ் சமாதானம் சொல்ல, தலையை நிமிர்த்தி அவனை பார்த்த மீரா,
அவனை மாதிரி செய்ய மாட்டாங்கதான்… ஆனால் தங்கள் கேள்விகளால் அந்த அமிலத்தை விட கொடுமையா தாக்குவாங்க.என்று நிதர்சனம் உரைக்க இருவரின் முகமும் கசங்கியது. எவனோ ஒருவன் அவள் மேல் அமிலம் வீசியதற்கு கேட்ககூடாத, தேவையில்லாத கேள்விகளை விசாரணை எனும் பெயரில் கேட்டு வெந்திருந்த அவள் மனதில் உப்பிட்டு சென்றிருந்தனர் சில காவல் அதிகாரிகள். அதெல்லாம் தாண்டி வந்தவள் இன்னும்கூட முழுதாய் தேறிவிடவில்லை.
இவரை பார்த்தா அப்படி தெரியலடா. அவரே முன்வந்து உதவி செஞ்சாரு.என்று தமையன் கார்த்திக்காக வாதாட,
விரக்தியாய் இதழை வளைத்த மீரா, “யாரையும் ஒரே பார்வையில் நம்பிடக்கூடாதுன்னு இன்னுமா நீ பாடம் கற்றுக்கலை?”
அதையே நானும் சொல்லாம். என்ன யோசனையில காலையில் அந்த கிழடனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவன்கிட்டேயே சொல்லுவ? உன்னை இழுத்து நாலு அறை விடலாம்னு தான் தோணுச்சு எனக்கு.என்று சினம் எறியவனாய் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவளை முறைத்தான் ராகவ்.
வேற என்ன செய்யட்டும் நான்? நீங்க தினம் எதையாவது செஞ்சி என்னை தொல்லை செஞ்சிட்டே இருக்கீங்க.
உன் நல்லதுக்காக, உன்னை எப்போதும் போல நடமாட வைக்க நாங்க எடுக்கிற முயற்சியெல்லாம் உனக்கு தொல்லையா தெரியுதா?” என்று அவன் சத்தம் போடவும் வாயை மூடிக் கொண்டாள் பெண். அப்போது இருந்த அழுத்தம் அவளை அப்படி பேச வைத்தது இப்போது வேறு மாதிரி தோன்றுகிறதே அப்பேதைக்கு.
சரி வீட்டுக்கு போய் எல்லாம் பேசிக்கலாம். நான் போய் டாக்டரை பார்த்துட்டு வந்துறேன்.என்று ராகவ் நகர,
அவன் கையை மீண்டும் பற்றிக்கொண்டவள், வதனம் வெளிற, “என்னை தனியா விட்டுட்டு போகாத.
பக்கத்தில் தான் இருக்கு டாக்டர் கேபின். நீ கண்மூடி படுத்துக்கோ. நான் இதோ வந்துறேன்.என்று ராகவ் தைரியமூட்டியும் மருண்டு விழிக்கும் தங்கையை தனியே விட்டுசெல்ல மனம் வரவில்லை.
நான் நர்சை உனக்கு துணையா அனுப்பி வைக்கிறேன்.என்றவன் அங்கு நிற்காமல் வெளியேறினான். மீரா நெஞ்சம் படபடக்க தன் முகத்தை துணி கொண்டு மறைத்து சாய்வாய் கட்டிலில் படுத்து கண்மூடிக் கொண்டாள். சொன்னபடியே நர்சை அவள் துணைக்கு அனுப்பி வைத்தவன், டாக்டரை பார்க்க அவர் அவனை வறுத்தெடுத்துவிட்டார்.
என்னதான் சார் பண்ணுவீங்க வீட்டுல? இந்த மாதிரி நேரத்தில் தான் அவங்களுக்கு தைரியம் சொல்லி உளஆலோசனை கொடுக்கணும். ஆனால் நீங்க கண்டுக்காம இருக்கீங்க? சாப்பாடாவது போடுறீங்களா இல்லை வெளியாட்கள் மாதிரி அவங்களை நீங்களே ஒதுக்குறீங்களா? ஸ்டாமினாவே இல்லை அவங்களுக்கு. போதாத குறைக்கு மனசுல தனக்கு நடந்ததை நினைச்சு அதைவிட்டு வெளிய வரமுடியாம மருகிட்டு இருக்காங்க. அதுவே அவங்களை உருக்குது. ஒழுங்கா அவங்களை சமநிலைக்கு கொண்டுவர முயற்சி எடுங்க. கவுன்சிலிங் போங்க. வெறும் மருந்துகள் மூலமா மட்டும் ஒருத்தரை குணப்படுத்த முடியாது. இந்த நேரத்தில் நீங்க தான் முழுதா அவங்களை கவனிச்சு வெளியே கொண்டுவரணும்.என்றவர் சத்து மாத்திரை மருந்துகளை எழுதிக் கொடுக்க அதை கையோடு வாங்கிக் கொண்டு மீராவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் அம்புஜமும், சுஜாவும் அவளை சூழ்ந்து கொண்டனர்.
என்னடா ஆச்சு? இப்போ எப்படி இருக்கு? ராகவ் டாக்டர் என்ன சொன்னாங்க?” என்ற அம்புஜம் அவளை இழுத்து சென்று சோபாவில் அமரவைத்தார்.
முதல்ல அவளுக்கு சாப்பாடு போடுங்கமா… சுஜா நீயும் அவளோடவே சாப்பிடு.என்ற ராகவ் மருந்துகளை அதன் இடத்தில் வைக்க,
எனக்கு வேண்டாம்.என்று மீரா அவசரமாய் மறுக்க, அவளை முறைத்தான் ராகவ்.
இனி உன் வாயிலிருந்து வேண்டாம், முடியாது என்ற வார்த்தையெல்லாம் வரவே கூடாது.என்று தங்கையை மிரட்டியவன், “இவளுக்கு ஸ்டாமினாவே இல்லையாம். இனி ஒழுங்கா நேரத்திற்கு சோறு போட்டு பார்த்துக்க சொன்னாங்க.என்றான் அன்னையிடம்.
நானும் சாப்பிடு சாப்பிடுன்னு சொன்னா கேட்கிறதே இல்லைடா.என்று அன்னை பதிலுக்கு புலம்ப, ரகுநாதன் மகளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
காலையில் சாப்பிட்ட பிறகும் மதியம் சாப்பிட்ட பிறகும் ஜூஸ். அப்புறம் மாலை கஞ்சினு ரெண்டு பேருக்கும் குடுத்துடுங்கமா. நான் நாளைக்கே பழம் வாங்கி போட்டுறேன். குடிக்க மாட்டேனு யார் சொன்னாலும் அமுக்கிபிடிச்சு வாயில ஊத்திவிட்டுடுங்க.என்று ராகவ் தங்கைக்கும் மனைவிக்கும் ஒருசேர கறாராய் கட்டளையிட,
நாங்க என்ன சின்ன பசங்களா எங்களை பிடிச்சி வச்சு வாயில ஊட்டிவிட?” என்று சுஜா கணவனை நன்றாக முறைத்தாள்.
அவனோ தோள்களை குலுக்கிக்கொண்டு, “நீங்க ரெண்டு பேரும் அடம் பண்ணா வேற என்ன செய்றது நாங்க?”
அம்மா இன்னைக்கு ஒன்னும் வேண்டாம். டாக்டர் ஊசி போட்டதே பசி எடுக்கல.என்று மீரா முரடு பிடித்தாள் மீண்டும் முதலில் இருந்து.
சொல்றதை கேட்கணும் மீரா. வா நான் ஊட்டிவிடுறேன் உனக்கு.என்று அம்புஜம் அவளை இழுக்காத குறையாய் அழைத்துச் சென்றுவிட,
ராகவ், “அப்பா நீங்களும் போங்க. இன்னைக்கு நடந்தது அவளை ரொம்ப பாதிச்சிருக்கு. நாம் தான் அவளுக்கு ஆறுதல் சொல்லி தேற்றி இதிலிருந்து வெளியே கொண்டுவரணும். நீங்க கொஞ்சம் போய் அவள் சாப்பிட அடம்பிடித்தால் அவளை சமாதானம் பண்ணி சாப்பிட வைங்க. டாக்டர் இன்னைக்கு என்னை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டாங்க.
அம்மு வாழ்க்கையை நினைச்சாலே பயமா இருக்கு ராகவா.
பார்த்துக்கலாம் அப்பா. நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க.என்று வாய்மொழியாய் வந்தாலும் அவன் உள்ளத்திலும் தங்கையை பற்றிய ஐயம் எழுந்தது. ரகுநாதனோ மகனின் வார்த்தைகளில் சற்று தெம்பு பெற்று மகளை தேடிச் சென்றார்.
ராகவ் கண்களை இறுகமூடித் திறந்து மனதை ஆசுவாசம் செய்துகொண்டு தன் அறைக்குச் செல்ல சுஜாவும் அவனைத் தொடர்ந்தாள்.
மேல்சட்டையை கழட்டிவிட்டு மின்விசிறியை ஓடவிட்டவன் மனைவி புறம் திரும்பாமலேயே, “நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்யுற சுஜா?” என்று கடிந்து கொள்ள,
நான் உங்கக்கூட சாப்பிட்டுக்குறேன்.என்று தன்மையாய் பதில் கூறியவள் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள். 
நீயும் சொல்பேச்சை கேட்காத.என்று ராகவ் சலித்துக்கொண்டே அவள் அருகில் அமர்ந்தான். 
அவளும் தலையை அவன் தோளில் சாய்த்துக்கொண்டு, “உங்க மனசு சஞ்சலமா இருக்கும் போது நான் மட்டும் எப்படி நிம்மதியா சாப்பிடுறது?” 
அப்படி பார்த்தா நீ என்னைக்குமே நிம்மதியா சாப்பிட முடியாது.
ப்ச்… முதலில் இப்படி எதிர்மறையா பேசுறதை முதலில் நிறுத்துங்க. அப்போ தான் இதெல்லாம் மாறும்.
நான் நேர்மறையாய் சிந்தித்தால் இதெல்லாம் மாறிடுமா என்ன? சும்மா என்னை சமாதானம் செய்ய இப்படி எல்லாம் சொல்லாத.என்றான் விட்டேற்றியாய்.
நீங்க நேர்மறையா சிந்திச்சா இப்போ இருக்கிற சூழல் முன்ன மாதிரி மாறப் போறதில்லைதான். ஆனால் நீங்க இந்த பிரச்சனைகளை பார்க்கும் கண்ணோட்டம் மாறும். அப்புறம் உங்களுக்கே இதெல்லாம் பெரிய விஷயமா தெரியாது. இதை தாண்டி வந்துடலாம்னு நம்பிக்கை வரும்.
என் தங்கச்சி இப்படி இருக்குறது பெரிய விஷயமாய் எப்படி தெரியாம போகும். நீ என்ன பேசுற?” என்று சற்று குரல் உயர்த்த, 
பெரிய விஷயம் தான். யார் இப்போ இல்லைனு சொன்னா? அதற்காக அதையே நினைச்சிட்டு இருந்தால் போன வாழ்க்கை திரும்ப வந்துடுமா? நாம தான் நமக்கான பாதையை உருவாக்கிக்கணும். இங்க பிரச்சனை மீராவுக்கு. அவளுக்கு உறுதுணையா இருந்து அவள் சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவனுமே தவிர அவளோட பாதையை நாமே தேர்ந்தெடுத்து அதில் அவள் பயணித்து தான் ஆகனும்னு கட்டாயம் செய்ய கூடாது.என்று குறிப்பு வைத்து பேச, ராகவிற்கு அவள் எதை சொல்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது.
ஏய் நான் சொல்லிட்டேன்டி அப்பாகிட்ட இப்போதைக்கு அவளுக்கு கல்யாணம் வேண்டாம்னு அவங்க கேட்க மாட்டேங்குறாங்க.
கேட்கலைனா அப்படியே விட்டுருவீங்களா? நீங்க முன்னாடியே ஸ்ட்ராங்கா அவங்க முடிவுக்கு எதிர்ப்பு சொல்லி இருந்தீங்கனா இது இவ்ளோ தூரம் வந்திருக்காது. அவளே மனஅழுத்தத்தில் இருக்கும்போது இப்படி அவளுக்கு பிடிக்காததை செய்ய சொன்னா என்ன செய்வா அவள்? இப்படி தான் ஏடாகுடமாக முடிவு எடுப்பாள். அவள் சொன்ன சம்மதத்தை வச்சு அந்த ஆளு என்ன செய்ய காத்திருக்கிறான்னு தெரியல.என்று பேச்சினூடே காலை நடந்த சம்பவத்தை கோடிட்டு பேசினாள்.

Advertisement