Advertisement

*3*
 
அம்மு..
பதட்டத்துடன் மூச்சிரைக்க ஓடிவந்து நின்ற ராகவ் கார்த்திக் பிடியில் இருந்த மீராவை தன் மேல் சாய்த்துக் கொண்டு அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப, அவளோ சுயநினைவில் இருப்பதைவிட மயக்கத்தில் இருப்பதே மேல் என்று நினைத்தால்போலும் இமைகளை பிரிக்க மறுத்தாள்.
தன் படபடப்பில் கார்த்திக்கை துளியும் கண்டுகொள்ளாமல் அம்மு அம்முவென்று மீராவின் கன்னங்களை மீண்டும் மீண்டும் ராகவ் தட்ட, கார்த்திக் சுதாரித்துக்கொண்டு விரைவாய் அருகில் இருந்தவர்களிடம் தண்ணீர் வாங்கி வந்து அவள் முகத்தில் விசிறி அடித்தான். அவள் அசைவேனா என்று இருக்க, மீண்டும் தண்ணீரை விசிறி அடித்து அவள் கன்னத்தை தட்டினான்.
ராகவும் இணைந்து அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்று, “அம்மு இங்க பாருடா… ஒன்னுமில்லை. அண்ணன் இங்க தான் இருக்கேன். கண்ணை திற.என்று படப்படப்பில் கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான்.
பதட்டப்படாமல் இருங்க.என்று ராகவிற்கு சமாதானம் சொன்னவன் மீராவின் வாயில் தண்ணீரை சாய்க்க, நீர் உள்ளே போகாமல் தாடையில் வழிந்தது. 
அடுத்து யோசிக்கும் முன் ராகவ் முந்திக்கொண்டு, “நான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்.என்று மீராவை ராகவ் கைகளில் ஏந்திக்கொண்டு மணலில் திணறலுடன் வேகநடையிட்டு முன்னேற, கார்த்திக் அவர்களை அப்படியே விட மனமில்லாமல் அவனை தொடர்ந்தான். 
பார்க்கிங் இடம் வந்தவுடன், “கார் கீ குடுங்க. எங்க நிறுத்தி இருக்கீங்க?” என்று கார்த்திக் வேண்ட,
ராகவ் பதட்டம் குறையாமல், “ரெட் கலர் மாருதி ஷிப்ட்.என்றவன் நேரே தன் கார் இருக்கும் இடத்திற்கு சென்றுதான் தன் நடையை நிறுத்தினான். மீராவை மெல்ல கீழே இறக்கி தன் மேல் சாய்த்துக்கொண்டு கால்சட்டையில் இருந்த கார் சாவியை எடுக்க அதை வேகமாய் பற்றிக்கொண்ட கார்த்திக், “நீங்க பின்னாடி உட்காருங்க. நான் ட்ரைவ் பண்றேன்.என்றவன் பின்கதவை திறந்து மீராவை அமர்த்த உதவி செய்தவன் மின்னல் வேகத்தில் காரை இயக்கினான். 
ராகவ் அவள் தலையை தன் மடியில் தாங்கிக்கொள்ள, முழுமதியாய் பளிச்சென்று தென்பட்ட அவளது வதனத்தை வேதனையுடன் வருடினான். அவள் மட்டும் விழித்திருந்தால் இந்த முகத்தை காட்டவே சங்கடப்பட்டு புழுங்கி அறைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பாள். அப்படி அமிழ்ந்து கிடப்பவளை என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவதில்லை அவர்களுக்கு. 
அடைகாக்கும் கோழியாய் இந்த ஆறு மாதங்களும் தங்கள் கூட்டிற்குள் வைத்து அடைகாத்ததாலோ என்னவோ கூட்டை விட்டு வெளியேவந்ததும் அவளால் சமாளிக்க முடியவில்லை. அதற்கான தைரியம் அவளுக்கும் இல்லை அவள் குடும்பத்திற்கும் இல்லை. அவளுடைய எதிர்காலம் குறித்த பயம் பெற்றோரை ஆட்டிப்படைக்க, அவள் எதிர்கொள்ளப் போகும் சவாலான வாழ்க்கையை எண்ணி அச்சம் அவள் தமயனுக்கு வந்திருந்தது சற்று முன்னர் நடந்தேறிய நிகழ்வில்.
அடுத்த சில நொடிகளிலேயே அவர்கள் மருத்துவமனை வாயிலை அடைந்தார்கள் என்று சொன்னால் உண்மைக்கு புறம்பாகிவிடுமே. மாலை நேர சென்னை ட்ராபிக்கில் சிக்கி சின்னாபின்னாமாகி ஒரு வழியாக அவளை அவசர பிரிவில் சேர்த்தனர்.
குறுக்கும் நெடுக்கும் பதட்டத்துடன் நடந்துகொண்டிருந்த ராகவை பார்த்த கார்த்திக் அவனை நெருங்கி, “ஒன்னும் ஆகாது. ரிலாக்ஸ்.என்கவும் தான் அவனின் இருப்பை உணர்ந்த ராகவ் நன்றியுடன், “தேங்க் யூ சோ மச் சார். இருந்த பதட்டத்தில் உங்களை சரியா கவனிக்கலை. நீங்களே ரிலாக்ஸ் பண்ண பீச்சுக்கு வந்திருப்பீங்க, உங்களை தேவையில்லாமல் தொந்தரவு செஞ்சிட்டோம்.என்று மன்னிப்பு வேண்ட, அதை மென்னகையுடன் ஏற்றுக்கொண்ட கார்த்திக் தன் நினைவுகளை தட்டி எழுப்பி சிந்தனை முடிச்சிட, “நீங்க? உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே?”
அவளை மருத்துவமனையில் அனுமதித்த பின் தான் கார்த்திக்கின் பார்வை ராகவ் மேல் யோசனையுடன் விழுந்தது. அவனை முன்னர்  எங்கோ பார்த்த நினைவு எழ, அவனை எங்கு எப்படி பார்த்தோம் என்று அவனால் நினைவு படுத்தமுடியவில்லை.
ராகவ், எம்.எஸ். எக்ஸ்போர்ட்டில், சீனியர் மேனேஜர்.என்று தன் கையை நீட்டினான் ராகவ்.
சட்டென்று தெளிவு பெற்றவனாய், தன் கரத்தை நீட்டி கைக்குலுக்கிய கார்த்திக்கும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, “மைசெல்ப் கார்த்திக், ஏ.சி.பி. நான் உங்கள் ஆஃபீஸ்க்கு ஒரு முறை கேஸ் விஷயமா வந்திருக்கேன்.அதுவரை நன்றியுடன் மட்டுமே பார்த்திருந்த ராகவ் கார்த்திக் காவல் அதிகாரி என்று தெரிந்ததும் அந்த பதவிக்கே உரித்தான மரியாதை அவன் கண்களில் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது.
கார்த்திக் தொடர்ந்து தயக்கமாய், “உங்க தங்கைக்கு?” என்று இழுக்க, 
அமலவீச்சி.
பல வன்முறைகளை தினம் தினம் கேள்விப்பட்டு கையாளுபவனுக்கே ராகவ் விரக்தியுடன் கூறிய பதில் அடிமனதை தாக்கி எதையோ அசைத்துப் பார்த்தது.
ராகவ் வாய்வழியே பதில் கூறியிருப்பினும் அவன் நினைவலைகள் அவனை பின்னோக்கி இழுத்துச் சென்றன.
திருமணமான புதிதிலே எதிர்பார்க்காத பதிவு உயர்வு வந்திருக்க குதூகளிப்புடன் முதல் வேலையாய் கார்தான் வாங்கினான் குடும்பத்துடன் வெளியே செல்ல ஏதுவாய் இருக்குமென. குடும்பத்துடன் சென்று பார்த்து புக் செய்துவிட்டு வந்த பத்து தினங்களுக்கு பிறகுதான் காரை ஷோரூமில் இருந்து எடுக்க முடிந்தது. அதை எடுத்த கையோடு பூஜை போட்டுவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு தங்கையை கூட்டிவர அவள் படிக்கும் கல்லூரிக்கே எடுத்துச் சென்றான் ராகவ். அவளுக்கு தகவல் சொல்லியபின் அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்து கல்லூரி வாயிலில் நிற்க, அகம் நிறைய பூரிப்புடன் அதை புறத்திலும் வெளிப்படுத்தியபடியே துள்ளிகுதித்து அவனை நோக்கி வந்தாள் அவள்.
தங்கையை வாஞ்சையோடு நோக்கியவன் அவள் அருகே செல்ல இரண்டடி தான் வைத்தான், கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கிருந்து யார் என்ன செய்தார்கள் என்று யாரும் கவனிக்கவில்லை, எதுவும் விளங்கவுமில்லை. ஆனால் மீரா மட்டும் ஓரிடத்தில் முகத்தை மூடிக்கொண்டு அலறி சுருண்டு விழுந்தாள். அவள் கதறல் அங்கிருந்தவர்களின் மனிதத்தை தூண்டுவதாக இருந்தாலும், எல்லோரும் பயத்தில் அலறி தங்களை காத்துக்கொள்ளவென அவளை கண்டுகொள்ளாமல் நாலாபுறமும் தெறித்து ஓடினர். ராகவ் மட்டுமே அவளை நோக்கி ஓட அவன் தங்கையாயிற்றே அவள். மீராவுக்கு பதில் வேறு யாரும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படி ஓடி இருப்பானா என்று அவனுக்கே வெளிச்சம்.
அம்மு…என்று பதறி அவளை தூக்கி மடியில் சுமந்து மார்பில் தாங்க, அவளுக்கோ தன் முகம் மட்டும் தணலில் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு உணர்வு. கடைநரம்பு வரை சென்று உயிரில் ஊடுருவி அதை தன் உடலிலிருந்து பிடுங்குவது போன்ற ஒரு வலி.
துரிதமாக செயல்பட்டு, அவளை மருத்துவமனையில் சேர்த்தாலும் அந்த இடைப்பட்ட சில நொடிகளிலேயே அமிலம் அவள் முகத்தின் ஒரு பாதியை தன் தீராப் பசியில் அரித்து தின்றிருந்தது.
வலியின் வீரியம் அவள் சக்தியை விட மிதமிஞ்சி இருந்ததால் அவள் எப்போதோ தன் சுயநினைவை இழந்திருந்தாள்.
மகிழ்ச்சிகரமாய் முடிய வேண்டிய நாள் துக்கத்திற்கு பிடித்த நாளாய் முடிவுற்றுவிட, அன்று துலைந்த அவனது அன்புத்தங்கை, அவன் பெற்றோரின் செல்லப் பெண், அவன் மனைவியின் தோழி இன்று வரை கிடைக்கவில்லை அவர்களுக்கு.
எல்லோரையும் காக்கவைத்து வெகுநேரம் கழித்து கண் விழித்த மீராவோ முதலில் உணர்ந்தது தன் முகத்தை கிப்ட் ரேப்பர் கொண்டு யாரோ மூடிவிட்டிருந்தது போன்ற உணர்வுதான். துவக்கத்தில் வலியின் வீரியத்தால் பேசவே சிரமமாக இருக்க, பேச்சையே நிறுத்திக் கொண்டாள். உயிரை பிழியும் வலியும் எரிச்சலும் அவளுடன் ஒட்டிப்பிறந்தது போல் அனுநேரமும் அவளுடன் இருக்க யாரும் சொல்லாமலேயே தனக்கு நடந்த கொடுமையின் வீரியம் புரிந்தது. 
மருத்துவ கண்காணிப்பில் அதிக நேரம் உறக்கத்திலேயே கழிய சிகிச்சையும் தொடர, நாட்கள் பல கடந்து முகத்தில் போட்டிருந்த  கட்டை பிரிக்க வேண்டிய தினம் வந்தது. அவள் முகம் முன்பு போல் இருக்காது என்பது அவள் உடனிருந்தவர்களுக்கு தெரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவர்களால்.
பட்டு போன்று மென்மையாய் வழவழவென இருந்த அவளது குண்டு கன்னங்கள் அமிலத்தின் உபயத்தால் கசங்கிய பழைய துணியாய் மாறி அதன் பொலிவை அதன் தன்மையை இழந்திருந்தது. 
அமிலம் தான் வழிந்தோடிய தடம் எங்கும் தன் வீச்சை காரத்தை வீசி அவள் சருமத்தை வாரி சுருட்டியிருந்தது. அமிலத்தின் காரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தோலும் சதையும் பொசுங்கி தன் இயல்பை இழந்து கருமை பூசியிருந்தது. ஒரே ஆறுதலாய் அவள் கண்களுக்கும், பார்வைக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அவள் நேரமா இல்லை அவள் நின்ற கோலமோ கோணமோ ஏதோவொன்று அமிலத்திலிருந்து அவள் கண்களை காப்பாற்றியிருந்தது. மற்றபடி அந்த அமிலத்தின் நெடி அவள் சருமத்தில் மட்டுமல்ல அவள் உள்ளத்திலும் அவள் குடும்பத்தினர் உள்ளத்திலும் அனலாய் வீசி அனைத்தையும் பொசுக்கி வாரி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது. 
மருத்துவரின் அறிவுரை பேரில் வெகுநாட்கள் அவள் பிம்பத்தை காண அவள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவள் பிம்பத்தை கண்ணாடியில் கண்ட நொடி கசங்கியிருந்த தோல் போலானது அவள் மனமும். பெண்களுக்கே உரித்தான அழகின் மீதான நாட்டம் இயல்பாகவே அவளிடமும் இருந்தமையால் அவளின் வதங்கிய புறத்தோற்றம் அவளின் அகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுயஇரக்கம், பச்சாதாபம் என்று மாறி மாறி அவளை சுழன்று அடித்தது. மணலாய் இருந்த மனம் பாறையாகியது. அவள் நிலை புரிந்து குடும்பத்தினர் சமாளித்து அவளை தேற்றினாலும், யாரேனும் அவளை சங்கடப் பார்வையோடோ அல்லது அருவருப்போடு பார்த்தால் ஓட்டுக்குள் சுருங்கும் நத்தையாகி விடுவாள். இன்றும் அதுவே… 
பீதியால் வருகிற பேனிக் அட்டாக் தான் அந்த பொண்ணுக்கு. ஏதோ ஒன்னு அவங்க மனசை அழுத்தமா பாதிச்சிருக்கு. தீவிர மனஉளைச்சலில் இருக்காங்க.என்ற டாக்டர் அவள் நிலையை கார்த்திக்கிடம் கூற, அவனுக்கு சற்று தூரத்தில் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவென நகர்ந்திருந்த ராகவ், டாக்டரின் வருகையை அறிந்து வேகமாக அவர்களை நெருங்கி, “டாக்டர் அவளுக்கு பேனிக் அட்டாக்கா?” என்று வினவினான் சரியாய் கணித்து.
ராகவ் கேள்வியில் அவளின் இந்த மயக்கம் புதிதல்ல என்று கார்த்திக்கிற்கு புரிந்தது.
அப்சர்வேஷனில் வச்சிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் டிஸ்சார்ஜ் செஞ்சு அழைச்சிட்டு போகலாம். அவங்களுக்கு மனநல ஆலோசனை தேவை. டிஸ்சார்ஜ் ஆகும் முன் என்னை வந்து பார்த்துட்டு போங்க.என்று கூறிவிட்டு அவர் நகர்ந்திட கார்த்திக் அடுத்த கேள்வியை தொடுத்தான்.
இதுக்கு முன்னாடி நீங்க அவங்களுக்கு மனநல ஆலோசனை கொடுக்கலையா? டாக்டர்ஸ் சொல்லி இருப்பாங்களே…
ஹாஸ்பிடலில் மூன்று மாதம் சிகிச்சை நடந்துச்சு. வெளிக்காயம் ஆறியபின் ஒரு வாரம் கவுன்சலிங் கொடுத்தாங்க, அப்போ எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவங்க சொல்றதை எல்லாம் சில நேரம் அமைதியா கேட்டுப்பா பலநேரம் அதை காதில் கூட வாங்க மாட்டா. ஆனால் சொல்லப்போனால் அதன் பின் தான் அவள் ஆங்காரமாவும், அதற்கு நேர்மாறா அமைதியா சில முறையும் நடந்துக்க ஆரம்பிச்சா. சரி கொஞ்ச நாள் பொறுத்து அடுத்த கட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு போகலாம்னு இருந்தோம். வார்ன் பண்ணாங்க கவுன்சிலிங் கண்டிப்பா வரணும்னு. ஆனால் இவள் செய்த பிடிவாதத்தால் லாஸ்ட் மாதம் அழைச்சிட்டு போக முடியலை. அப்புறம் இன்னைக்கு தான் வெளியிலே வந்தா. இன்றும் இப்படி…என அவன் பதில் கூறும் போதே அவன் அலைபேசி ரீங்காரமிட, 
அப்பா தான்… ஒன் செகண்ட் சார், வந்துடுறேன்.என்று கூறிவிட்டு ராகவ் சற்று தள்ளி நின்று அலைபேசியில் தகவல் தெரிவிக்க, கார்த்திக் கால்கள் தானாக அவனை மீரா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றது.
கதவை திறந்து உள்ளே பூனை நடையிட்டு நெருங்கியவன் அவள் படுத்திருக்கும் கட்டில் அருகே சென்று நின்றான். விழிகள் இன்னதென பிரிதரியா உணர்வைத் தாங்கி அவளை ஆராய்ந்தது.
மெல்லிய கொடி போலான உடல்வாகு, தங்கநிறத் தேகம், சாந்தமான முகம் அதில் திருஷ்டி போல் இடப்பக்க முகத்தில் கண்ணுக்கு கீழே கருமையும் இல்லாது அவளது நிறமான தங்கநிறமும் இல்லாது இரண்டுக்கும் இடைபட்ட நிறத்தில் தோள்கள் சுருக்கு முடிச்சிட்டு இழுத்து ஒட்டியது போல் இருந்தது. பார்த்தாலே தெரிந்தது கன்னத்தை மறுஆக்கம் செய்திருக்கிறார்கள் என்று. அதற்கு கீழே போர்வையால் மூடியிருந்தது.
எந்த மிருகத்திற்கு இப்படி ஒரு வெறி? பூ போன்றவளை இப்படி முடக்கி விட்டானே என்று கண்ணுக்கு தெரியா அந்த குற்றவாளியை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என்று ஆத்திரம் எழுந்தது அவனுக்கு. கை முஷ்டிகளை இறுக்கியவனை இதற்கு மேல் சிந்திக்க விடாமல் முனகி தான் சுயநினைவிற்கு வருவதை தெரிவுபடுத்தினாள் பெண்.
ஆவலுடன் அவளை நெருங்கியவன் சட்டென்று ஓரடி பின்னே நகர்ந்தான் அவள் விழித்தால் என்ன பேசுவது என்று தெரியாமல். ஏற்கனவே மனஉளைச்சலில் இருப்பவள் யாரென்று அறியாத தன்னை எப்படி எதிர்கொள்வாள் என்ற அச்சம் வேறு வந்திருந்தது அவனிடத்தில். நின்ற இடத்திலிருந்தே திரும்பி ராகவ் வருகிறானா என்று பார்க்க, அவன் வருவது போன்று தெரியவில்லை என்கவும் தயக்கத்துடன் அவளை காண, மெல்ல இமைகளை பிரித்து தெளிவற்ற பார்வையில் விழுந்த அவனை மருண்டு நோக்கினாள் பெண்.
பயப்படாதீங்க… நீங்க பாதுகாப்பா ஹெல்தியா ஹாஸ்பிடலில் தான் இருக்கீங்க. உங்க அண்ணன் வெளில தான் இருக்காங்க, உங்க அப்பாகிட்ட பேசிட்டு இருக்காங்க, வந்துருவாங்க.என்று அவளின் பதட்டத்தை தணிக்கும் விதமாய் கார்த்திக் சொல்ல, அவள் பார்வை அவனையும் தாண்டி பின்னால் சென்றது, அண்ணன் இருக்கிறானா என்ற அச்சத்துடனும், ஆவலுடன்… 
அட… இந்த பொண்ணு என்ன நம்ம சொல்றதை நம்பாம எட்டி எட்டி பாக்குது.என்று மனதில் நினைத்தவன் அமைதியாகிவிட, ஒருவழியாய் பீதியடைந்த பெற்றோரை சமாளித்துவிட்டு வந்து சேர்ந்தான் ராகவ்.
அவனைக் கண்டதும் மீராவின் மருண்ட விழிகள் ஆசுவாசம் அடைந்தன. இரு ஆடவரும் அதனை கவனித்திருக்க, தயக்கத்துடன் கார்த்திக்கை பார்த்து சிரித்தான் ராகவ்.
அம்மு இவர் தான் நீ மயங்கியதும் இங்க அழைச்சிட்டு வர உதவி செஞ்சாரு.என்று ராகவ் அறிமுகப்படுத்த, எவ்வித உணர்வும் காட்டாமல் பார்வையை ராகவிடம் மட்டுமே நிலைக்கவிட்டு அவன் புறம் கை நீட்டினாள் மீரா.
என்னடா?” என்றபடியே ஆதரவாய் அவள் கையை ராகவ் பிடித்துக்கொள்ள, தன்னை நோக்கி அவனை இழுத்தவள் அவனை பற்றிக்கொண்டு எழுந்தமர்ந்து அவன் தோளில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அவன் கரத்தை இறுக பற்றிக்கொண்டாள். 
அம்மு, என்னடா?” என்று அவள் தோள் பற்றி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன், மீராவின் தவிப்பில் சங்கடமாய் கார்த்திக்கை ஏறிட, அவனோ புரிதலுடன்,
ரொம்ப பயப்படுறாங்க. அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.என்றவன் எப்போதும் தன்னுடனே வைத்திருக்கும் தன்னுடைய விசிட்டிங் அட்டையை ராகவிடம் நீட்டி, “நேரம் கிடைக்கும் போது என் எண்ணிற்கு கூப்பிடுங்க. பேசலாம்.என்க, ராகவும் போலீஸ் துணை இப்போது தங்கள் குடும்பத்திற்கு தேவையான ஒன்று என்பதை புரிந்து கொண்டு கார்த்திக்கின் அழைப்பை இன்முகமாய் ஏற்றுக் கொண்டான். 

Advertisement