Advertisement

அவளின் உயர்ந்த குரலுக்கு போட்டியாய், “ஆமாம் வந்து தான் ஆகணும்.” என்று ஒலித்த கணீர் குரல் ராகவின் வருகையை தெரியப்படுத்தியது.
“டோன்ட் ட்ரை டூ பிளேக்மைல் மீ.” என்று முன்னெச்சரிக்கையாக மீண்டும் வீம்புப்பிடித்து வாதாடினாள் மீரா.
“ஐ கேன்.” என்றான் அவனும் திட்டவட்டமாய்.
“என்னதான் வேணும் உங்களுக்கு? என்னை ஏன் என் விருப்பப்படி இருக்கவிட மாட்டேங்குறீங்க?” என்று அவனுக்கு நிகராய் மீராவும் வரிந்து கட்டி நின்றாள்.
“இவ்வளவு நாளும் உன் விருப்பம் போலத் தானே இருந்த? இப்போ நாங்க சொல்ற படி கேள் இல்லைன்னா உன்னை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எனக்குத் தெரியும்.”
அவன் வார்த்தைகளில் பொதிந்திருந்த மிரட்டல் அவளுக்கு தெளிவாக விளங்கியது. பின்னே, நம்மை போட்டுவாங்கி பற்பல உண்மைகளை தெரிந்து வைத்துக்கொண்டு, அதையே பிணையாக பயன்படுத்துவதில் நம் உடன்பிறந்தவர்களுக்கு நிகர் அவர்கள் தானே.
“நான் வரணும் அவ்வளவுதானே. நான் வர்றேன்.” என்று எரிச்சலுடன் சம்மதித்தாள் அவன் தங்கை. என்னவோ அன்று காலை நடந்த சம்பவம் மனதை சலனப்படுத்தியிருக்க, வீட்டினர் அனைவரும் ஒன்றாய் அவளுக்கு எதிராய் நிற்கவும் சம்மதித்தாள் இல்லையென்றால் ம்கூம் அவளை அசைத்திருக்கவே முடியாது.
ராகவ் மகிழ்ச்சியில் சீட்டியடிக்க மீரா எரிச்சலின் உச்சத்தில் ஒரு தலையணை எடுத்து அவனை நோக்கி வீசினாள்.
“ஏய்…” என்று எகிறியவன் தன் முகத்திற்கு நேரே மோதிய தலையணையை பிடித்து அவள் மீது எறிந்தான்.
உதட்டை சுழித்தவள் தன் மீது விழுந்ததை எடுத்து மீண்டும் அவன் மீது வீச, அவன் பதிலுக்கு வீச அம்புஜமோ சட்டென மாறிய இந்த சுமூகச் சூழலில் பஞ்சு பறந்து அந்த அறையை தூசியாக்கியதற்கு முதல் முறையாக கோபப்படாமல் ஆனந்தத்தின் எல்லைக்கு சென்று பரவசமானார்.
*****
எங்கு திரும்பினும் கண்ணாடி இழையோடிய அக்கட்டடத்தின் மேல் தளத்தில் நடுநாயகமாய் அனைத்து வசதிகளையும் தாங்கியபடி இழைக்கப்பட்டிருந்த சேர்மேன் அறையில் சுப்பிரமணியம் தன் அன்றாட பணிகளை ஒருவித கடுப்புடன் மேற்கொண்டிருக்க, அவரின் அலைபேசி ரீங்காரமிட்டு அவரின் கவனத்தை ஈர்த்தது.
அப்போதுதான் வேறொரு வேலை நிமித்தமாய் சென்று திரும்பியிருந்தவர் அதில் திருப்திகரமான முடிவு கிடைக்காத கடுப்பில் இருக்க அதே கடுப்புடன்தான் அலைபேசியை எடுத்தார். ஆனால் அதில் தெரிந்த பெயரை பார்த்தவுடன் அவரின் எரிச்சல் பார்வை உற்சாகமாக மாறியது. பச்சை ஐகானை மேலிழுத்துவிட்டு ஸ்வைப் செய்தவர் அதே உற்சாகத்துடன் காதில் வைத்தார்.
“அப்பா, எங்க இருக்கீங்க?” என்ற துள்ளல் குரல் மறுமுனையிலிருந்து வரவேற்க,
“ஆபீசில்தான் இருக்கேன் கார்த்தி. என்ன குரல் துள்ளலா இருக்கு… என்ன விஷயம்பா?” மகனின் குரலை வைத்து கணித்தவர் ஆர்வமாய் வேண்ட, மகனின் இதழ் அகல விரிந்தது.
“ஆமாம்பா ஒரு குட் நியூஸ். முதல் கேஸை சக்ஸசா முடிச்சிட்டேன். நாம இதையாவது கொண்டாடியே ஆகணும். வேலை அதுஇதுன்னு சொல்லாம எனக்காக இன்னைக்கு நேரம் ஒதுக்குறீங்க. நாம எங்காவது வெளியில் போகணும்.” என்று மகன் கட்டளை போட, அதை சந்தோஷமாய் ஏற்றவர்,
“கண்டிப்பா கார்த்தி. உனக்கு தான் என் முழு நேரமும், எங்க போகலாம்னு சொல்லு. நான் நேரத்துக்கு வந்துடுறேன்.” என்று உற்சாகம் ததும்ப பதிலளித்தார்.
“பீச் போகலாம்பா. நாம ரெண்டு பேரும் வெளியில ஒண்ணா போய் ரொம்ப நாளாகிடுச்சு. இன்னைக்கு ஈவ்னிங் ஒரு ஆறு மணிக்கு மேல பீச்சுக்கு வந்துடுங்க. நான் நேரே அங்கே வந்துறேன். இப்போ கொஞ்சம் வேலையிருக்கு. பை அப்பா. ஈவ்னிங் பார்க்கலாம்.” என்று அவன் இணைப்பை துண்டித்துவிட சுப்பிரமணியம் மாலை தனக்கிருக்கும் அலுவல் வேலையை ஒத்திவைக்கும்படி தன் மேனேஜரிடம் உத்தரவிட்டு தன் மீதி வேலையை தொடர்ந்தார்.
“டேய் மச்சி உன் பைக்கில் என்னை பீச்சில் ட்ராப் பண்ணுடா.” என்று மாலை வேலை முடித்து  காக்கிசட்டையில் இருந்து விடுபட்டு அலுவலகத்திலேயே சாதாரண உடைக்கு மாறிய கார்த்திக் தன் அலுவலகத்தில் இருந்து வெளிவந்து அங்கு வண்டியில் அமர்ந்திருந்த நண்பனின் முதுகில் தட்டினான்.
“ஏன்? ஏ.சி.பி க்கு இல்லாத வண்டியா? இல்லை உங்க வீட்டில் தான் காருக்கு பஞ்சமா ? என்னை ட்ராப் செய்யச் சொல்கிறாய்?” என்று முரண்டினான் விக்ரம்.
“டேய் நாம எல்லாம் அப்படியா பழகி இருக்கிறோம்? உனக்கே தெரியும் என் சொந்த வேலைகளுக்கு அலுவலக ஜீப்பை யூஸ் செய்ய மாட்டேன்னு. வீட்டிலேந்து என் ஒருத்தனுக்காக கார் எடுத்துட்டு வரச் சொல்றதுக்கு பதிலா நீ அந்த வழியாதானே டியூட்டிக்கு போற, அப்படியே ட்ராப் பண்ணுடா விக்ரம்.” என்று உரிமையாய் மொழிந்தான் கார்த்திக்.
“பண்றேன்… பண்றேன்… ஆமாம் எதுக்கு பீச்? யாரையாவது கரெக்ட் பண்ண போறீயா?” என்று அவன் கேட்டு வைக்க கார்த்திக்கின் முகம் அதிருப்தியில் சுருங்கியது.
“அடச்சை அசிங்கமாக பேசாதடா… அப்பாவை பார்க்கத்தான் போறேன். சும்மா வெளிய அப்படியே ரெண்டு பேரும் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு…” என்ற கார்த்திக்கை முறைத்தான் விக்ரம்.
“கரெக்ட் பண்றதெல்லாம் அசிங்கம்னா எல்லோரும் முரட்டு சிங்கிளா தான் சுத்தணும்… நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட… சரி அதென்ன பீச்? வீட்டில கேட்க ஆளில்லை. நீங்க ரெண்டு பேர் மட்டும் தான். அப்படியே பீர், விஸ்கின்னு கொண்டாட்டமா இருக்கிறதை விட்டுட்டு பீச்சாம் பீச்.. உங்களுக்கு வாழத் தெரியலடா…” என்று பதிலுக்கு நொடித்தான் விக்ரம்.
“ம்ச்… ஏன்டா நீ வேற புரியாம… இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்… அதை அம்மாவுக்கு பிடிச்ச இடத்தில் கொஞ்சம் நேரம் செலவழிச்சா இன்னும் திருப்தியா இருக்கும். அம்மா கூடவே இருக்கிற மாதிரியும் இருக்கும்.” என்ற கார்த்திக் தன் அன்னை நினைவுகளில் மூழ்க விக்ரம் அமைதியாகிவிட்டான். அவனுக்குத் தெரியாததா என்ன கார்த்திக் அம்மா பிள்ளையென்று.
“சரி வாடா டிராப் பண்ணிடுறேன்…” என்று தன் பைக்கை உரும விட்டான் விக்ரம்.
___
“மீரா… போகலாமா?”
என்று மாறி மாறி வீட்டில் உள்ள அனைவரும் கேட்டாயிற்று. ஆனால் சாப்பிட்டு அறைக்கு சென்ற மீராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தாழிட்ட கதவும் திறக்கப்படவில்லை.
“அம்மு வாம்மா… அப்பா கிளம்பிட்டேன் பாரு…” என்று ரகுநாதனும் கூப்பிட்டுப் பார்க்க அவர்களை இன்னும் அரைமணி நேரம் கெஞ்சவிட்ட பிறகு தான் அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள் மீரா.
அவளின் தோற்றத்தை கண்ட குடும்பத்தினர் திருப்தியாய் நிம்மதி மூச்சு விட்டனர். வேலைப்பாடுகளற்ற நீல நிற பருத்தி குர்தாவுடன், பழுப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தவள் தன் முகத்தை ஒரு ஸ்டோல் கொண்டு புர்கா போல் கண் மட்டும் தெரியும்படி மூடி இருந்தாள். அதை அகற்ற வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினாலும், ஒரே நாளில் அனைத்தையும் மாற்ற முடியாது என்று விட்டுவிட்டனர்.
ராகவ் சுதாரித்து கிளம்பலாம் என்று கண்ணசைக்க, வீட்டை பூட்டிவிட்டு அவர்கள் புதிதாய் ஆறு மாதம் முன் வாங்கிய காரில் ஏறினர். மீரா மட்டும் ஏறாமல் பின்னேயே தேங்கி நின்று சில நொடிகள் இமைக்காமல் அந்த காரையே பார்த்தாள். எல்லாம் ஆரம்பித்தது அந்த கார் வாங்கிய நாளில் அல்லவா? தன் அண்ணன் புது கார் எடுத்திருக்கிறேன், உனக்காக காலேஜ் வாசலில் நிற்கிறேன் என்று போனில் கூறிய மறுநிமிடம் துள்ளிகுதித்து அதை பார்க்க ஆவலுடன் ஓடி வந்தாள். ஆனால்…
“அம்மு ஏறுடா…” என்ற தன் அன்னையின் குரலில் நினைவை மீட்டுக்கொண்டவள் தயக்கத்துடன் நிற்க, ராகவ் அவள் தோள் சுற்றி கரம் போட்டு காரின் அருகே அழைத்து வந்தான். அனைவரும் தன்னையே நோக்குவது போன்றதொரு பிரம்மை விழிகளை ஒரு நிலையில் நில்லாது அனைத்து திசைகளிலும் சுழல வைத்தது. அவளின் கலக்கத்தை கவனித்த சுஜா அவளை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டாள். வெகு குறைந்த அளவு டெசிபலில் ஏசியும் மூச்சுகாற்றையும் தவிர்த்து அமைதியே சூழ்ந்துகொள்ள அதற்கு மாறாக அனைவரின் மனமும் அமைதியிழந்து உணர்வுகள் மட்டுமே அந்தக் காரை ஆக்கிரமித்திருந்தது.
“வீ ஆர் ஹியர்.” என்று ராகவ் அறிவிக்கவும்தான் அனைவரும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு இறங்கினர் மீராவைத் தவிர.
அவள் சங்கடத்தில் நெளிந்து, உள்ளேயே அமர்ந்து கொண்டு நான் இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்க ராகவ் மற்றவர்களை போகச் சொன்னான்.
“மீரா இறங்கு…”
அவள் மறுப்பாய் தலையசைக்க, இப்படி கெஞ்சிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவன், அவள் கரம் பற்றி வேகமாக வெளியில் இழுத்தான். 
கடல்காற்று மேனியைத் தீண்ட, வெளிவெளிச்சம் கண்களை கூச, அச்சத்தில் சிலிர்த்து தன் முகத்தை அவன் தோளில் கிடத்தி தன்னை மறைத்துக் கொண்டாள் மீரா.
“வேண்டாம் ராகவ்… ப்ளீஸ்… வீட்டுக்கு போகலாம்.” என்று நடுக்கத்துடன் அவள் அதரங்கள் முணுமுணுக்க, தன் முகத்தை முடிந்த அளவு அவனுள் மறைத்தாள்.
“இவ்வளவு தூரம் வந்துட்டு இப்போ என்ன? வா, நாங்க எல்லாம் இருக்கோம் தானே அம்மு.” என்று வாஞ்சையாய் தன் தங்கை பின்னந்தலையை வருடினான் ராகவ்.
கடல் காற்று அவளை மேலும் சிலிர்க்க வைத்து, வெளியில் இருக்கிறோம் என்ற நிதர்சனத்தை உணர்த்த அவள் விழிகளில் நீர் திரண்டு தன்னம்பிக்கை இழந்த பேதையாய் கெஞ்சினாள் பெண்ணவள், “ராகவ் ப்ளீஸ்…”
“நான் ஒன்னு சொல்லவா? இளஞ்சிவப்பில் பஞ்சு போன்ற பிஞ்சு கரங்கள், குட்டிக் கால்களுடன் தன் அழகால் நம்மை மயக்க ஒரு குட்டி இளவரசனோ இளவரசியோ என் அம்முவை அத்தைன்னு அழைக்க வரப்போகுது. நாளைக்கே அந்த குட்டி என் அத்தை தான் பிசிகலி எமோஷனலி ஸ்ட்ராங் என்று சொல்லவேண்டாமா?” என்று அவன் மெல்லிய குரலில் சொல்ல, பட்டென்று ஆவலுடன் தன் முகத்தை நிமிர்த்தி அவனை ஆராய்ந்த மீரா,
“உண்மையாவா? என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலை?” என்று கோபிக்க வேறு செய்தாள்.
“நீ எங்க எங்களை பேச விட்டிருக்க?” என்றபடி அவளை நேரே நிறுத்தி, அவள் மென்கரத்தை தனக்குள் பிடித்துக்கொண்டு பரந்து விரிந்து ஆர்பரித்துக் கொண்டிருக்கும் சமுத்திரம் நோக்கி மணல் பரப்பில் இழுத்துச் சென்றான்.
தன்னை சுதாரித்து தமையன் இழுக்கும் இழுப்புக்கு ஈடு கொடுத்து நடந்தவள் காலில் தீடிரென யாரோ வந்து மோத, ராகவ் கையை விடுத்து குனிந்து பார்த்தாள் மீரா. அங்கு ஓடி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை ஒன்று மணலில் கால் இடரி அவள் மேல் மோதியிருந்தது.
அந்த குழந்தையின் குண்டு கன்னங்களில் தன்னை தொலைத்தவள், தன்னிலை மறந்து அந்த குழந்தையை தூக்க அந்த குழந்தை அவள் ஸ்டோலை வாகாய் பிடித்து முன்னேற, அவள் முகத்தில் சுற்றியிருந்த அந்த மறைப்பு முழுதும் வெளிவந்து அவள் முகம் சில்லென்ற காற்றில் வெளிப்பட்டது. அதை அவள் உணரவும் அந்த குழந்தை அவள் முகத்தை கண்டு என்ன நினைத்ததோ வீள் என்று அழுகவும் சரியாக இருந்தது.
அந்த குழந்தையின் பெற்றோரும் பின்னரே ஓடிவந்து அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு அவளை ஏறிட்டுப் பார்க்க யோசனையுடன் சிறு சுணக்கம் வந்திருந்தது அவர்கள் வதனத்தில். அந்த சுணக்கத்தில் தெரிந்த அதிருப்தியில் அவளுள் அடக்கிவைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும் கட்டுடைபட்டு அவள் நெஞ்சை அழுத்த, குழந்தையும் வேறு அழத் துவங்கிவிட, அங்கே சுற்றி இருந்த சிலரது பார்வையும், குழந்தையின் அழுகையால் இவர்கள் பக்கம் திரும்ப மீரா அரண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ள தன் உடைந்த மனதை காப்பாற்றிக் கொள்ளவென அங்கிருந்து ஓட்டமெடுத்தாள்.
“அம்மு…” என்று ராகவ் கத்திக்கொண்டு அவள் பின்னே ஓடினாலும், உணர்ச்சிகளின் உந்துதலில் வெறியில் ஓடும் அவளின் அசுர வேகத்திற்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை.
அனைவரது பார்வையும் அவள் கண் முன்னே நிழலாய் ஓட, அதில் தெரிந்த பரிதாபமும், அருவருப்பும், அதிருப்தியும் மனதில் பாரத்தை  ஏற்றிக்கொண்டே போனது. அப்பாரம் விழிகளில் அருவியாய் நீரை உற்பத்தி செய்ய சட்டென பெருகிய நீரால் கலங்கலாய் தெரிந்த பார்வை கணநேரத்தில் முழுதாய் மறைந்தது.
பார்வை தப்பியதன் பலனாய் பின்னங்கால் இடறி முன்னே தள்ளப்பட்டு அகன்று விரிந்திருந்த தடுப்பில் சென்று மோதி நின்றாள் மீரா. அது தடுப்பாய் அவளுக்கு தெரிந்தாலும், அவள் உண்மையில் மோதியது கடலை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த கார்த்திக்கின் மீது. மோதிய வேகத்திலும் உணர்ச்சிகளின் உச்சத்தில் இருந்தமையாலும் கண்கள் சொருகி தன்னிலை இழந்து தடுமாற அவளை தாங்கிப் பிடித்தான் கார்த்திக். 
அவன் கண்களும் மறைப்பு முற்றிலும் விலகி தெளிவாய் தெரிந்த அவள் முகத்தை கண்டு அதிர்ச்சியை தத்தெடுக்க, வாழ்க்கையின் கடினம் தெரியாமல் வளர்ந்தவளின் வாழ்க்கையே கடினமாகிப்போனதன் விளைவு அதனை எதிர்கொள்ள திறனற்றவளாய் மயங்கி சரிந்திருந்தாள் அவனது கரங்களிலேயே… 

Advertisement