Advertisement

மீராவோ அந்த வரதனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதை பற்றி சரமாரி கேள்வியெழுப்பி வசவுகளை வீசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க ராகவ் கேட்ட கேள்வியில் சற்று நிதானித்து எந்தவித உணர்ச்சியும் காட்டாது சிலையென நிற்க, ராகவ் அவள் எதிரே வந்து அவள் முகத்தில் ஏதும் உணர்ச்சி தென்படுகிறதா என்று ஆராய்ந்தான்.
“வீட்டை விட்டு வெளியே போய் வெளியுலகோடு பழகணுங்கிற எண்ணமாவது இருக்கா?” என்ற அவனின் அடுத்தக் கேள்விக்கும் அமைதியே பதிலாய் கிடைத்தது. கூடவே, நின்றால் தானே கேள்விகள் பாயும் என்று நினைத்த மீரா தன் அறைக்கு செல்ல எத்தணிக்க, அதை சரியே கணித்த தமையன்,
“மீரா… உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.” என்று குரலை உயர்த்தினான்.
ஆனால் அவனின் சத்தமான அதட்டல் குரல் கூட அவளை ஒன்றும் செய்யவில்லை. பல்லை கடித்து தன் கோபத்தை அடக்கியவன் பார்வையில் மீண்டுமே தன் தங்கையின் உணர்ச்சியற்ற முகமே விழ கட்டுக்கடங்கா ஆத்திரம் வந்தது. தன் தங்கையின் இந்த நிலைக்கு காரணமானவனை தன் கரம் கொண்டே அடித்து கொல்ல வேண்டும் என்ற வெறி மேலோங்கியது. ஆனால் அதை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய் அமர்ந்துகொண்டால் குடும்பத்தை யார் பார்ப்பது என்ற வேதனையும் எழாமல் இல்லை. அவனின் சினத்தை கண்டுகொண்ட சுஜா அவன் தோளை பற்றி அழுத்தவும் சற்று அமைதியாகியவன்,
“இன்னைக்கு வெளில போறோம். கிளம்பிடு மீரா.”
“நான் எங்கேயும் வரலை. நீங்க போயிட்டு வாங்க.” என்று அந்த மதியவேளையில் காலை நிகழ்வுக்குப் பிறகு முதல்முறையாக வாய்திறந்தாள் மீரா.
“நான் உன்கிட்ட வரீயான்னு அபிப்பிராயம் கேட்கலை. நீ வரணும்னு தகவல் சொல்றேன்.” என்று அழுத்தமாய் உரைத்த ராகவ், மீரா வாய் திறந்து ஏதோ சொல்ல முற்படுவதை பார்த்து அடுத்து என்ன கேள்வி வரும் என்று தோராயமாய் கணித்து, “நீ எங்களுடன் வர சம்மதிக்கும் வரை நாங்க யாரும் சாப்பிடப் போறதில்லை, இதை நினைவில் வச்சிக்கோ” என திட்டவட்டமாக கூற மீரா அசராது,
“என் முடிவை மாற்ற இப்படியெல்லாம் போலியாய் மிரட்டல் வைக்கத் தேவையில்லை.” என்று பதிலுக்கு சீறினாள்.
“போலியா மிரட்டி காரியம் சாதிக்க நீ ஒன்னும் வேற்று ஆள் இல்லை மீரா. மெய்யாகவே உனக்காக எதுவும் செய்ய முடியும் எங்களால, சாப்பிடாம இருக்க முடியாதா என்ன?… நீயே டைனிங் டேபிளை பார்த்ததானே? இன்று சமைக்கக் கூட இல்லை. சாப்பிட்டால் தான் அப்பா பி.பி மாத்திரை போடமுடியும், அம்மா சுகர் டேப்லெட் போட முடியும் அண்ட் சுஜாவும், நீயும் பசி தாங்கமாட்டீங்க. நீயே யோசிச்சு நல்ல முடிவெடு.” என்று கூறிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
இளையவர்கள் தங்களுக்குள் முட்டிமோதி ஏதோ ஒரு முடிவிற்கு வரட்டும் என்று பெற்றோரும் அமைதியாய் இவர்களின் வாக்குவாதத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சுஜா நாத்தனாரை கெஞ்சும் பார்வை பார்க்க, எச்சிலை விழுங்கியவள், “நீங்கள் போங்க. நான் வரலை. நீங்க சொன்னா ராகவ் கேட்பான். ப்ளீஸ் அண்ணி…” என்று பதிலுக்கு மீராவும் கெஞ்சும் வார்த்தைகளை வீசினாள்.
அதை மெல்லிய தலையசைப்போடு மறுத்த சுஜா, “நீ வந்து தான் ஆகணும் மீரா. இதில் நான் உன் அண்ணன் பக்கம் தான். எப்போது நீ வெளியில் வர சம்மதிக்கிறாயோ அப்போ தான் இந்த வீட்டில் அனைவரது மனமும், வயிறும் நிறையும்.” என்று கை விரித்துவிட,
குடும்பத்தினர் மீது தான் வைத்திருக்கும் அன்பை அவளின் அங்கத்தினரே பகடையாய் வைத்து மிரட்டல் விடுக்கவும் மனம் சோர்ந்து தொண்டையை அடைக்க இதழ்களும் தன் பங்கிற்கு துடித்து, இயலாமையில் விழிகளிலும் நீர்த்துளி எட்டிப்பார்க்க, அவளுடைய பிடிவாதமும், வீம்பும் கண்ணீரை உள் இழுக்கச் செய்தது. புறங்கை கொண்டு கலங்கியிருந்த கண்களை துடைத்தவள் வதனத்தில் கடினத்தை கூட்டி,
“நான் வரமாட்டேன்.” என்று எங்கோ பார்த்தபடி மீரா பிடிவாதம் செய்ய,
“வீம்பு பிடிக்காத மீரா. அத்தையை பாரு சாப்பிடாம அரை மயக்கத்தில் இருக்காங்க, மாமாவுக்கு பிபி எகிரி இருக்கும். இன்னும் அவங்களை கஷ்டப்படுத்த போறீயா?” என்று அவளிடம் முதல் முறையாக தன் குரலை உயர்த்தினாள் சுஜா.
“உங்களுக்கு உங்க கஷ்டம் இஷ்டம் மட்டும் தான் முக்கியம். என் கஷ்டத்தை ஏன் யாரும் புரிஞ்சிக்காம என்னை கட்டாயப்படுத்துகிறீங்க? அம்மா அப்பா பாசத்தையும் அவங்களோட சுகவீனத்தையும் காரணம் காட்டி என்னை பலவீனப்படுத்த முயற்சிக்காதீங்க… நான் எப்படி வெளியில்? என்னாலெல்லாம் வர முடியாது.” எனும் போதே அவளுடைய பலகீனம் வெளிப்பட்டு அவள் குரல் பிசிறடித்து உடைந்தது.
“நாங்க இருக்கோம் மீரா. ட்ரஸ்ட் அஸ்… ப்ளீஸ்.. இந்த ஒரு முறை அத்தைக்காக மாமாவுக்காக உன் அண்ணனுக்காக…” என்று சுஜா மட்டுமே கெஞ்சிக் கொண்டிருக்க, மீராவிற்கு அவளைப் பார்க்கவும் பாவமாய் தான் இருந்தது. 
திருமணமாகி சுஜா இந்த வீட்டிற்கு வந்த வெகு சில நாட்களிலே வீட்டிற்குள் முடங்கிவிட்டாள் மீரா. அதிலிருந்து மீராவிற்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்வதும் உள்ளத்தால் நலிந்திருந்த குடும்பத்தை தாங்கி நிறுத்தவும்தான் சுஜாவுக்கு நேரம் சரியாக இருந்தது. இதில் எங்கு புதுமணத் தம்பதிக்கு உரித்தான சிறு சிறு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துகொள்வது. அவளுக்காகவாவது இந்த ஒருமுறை இவர்களின் மிரட்டலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று முடிவெடுத்து,
“எங்கே?” என்று விட்டேற்றியாய் கேட்டாள் மீரா.
தங்கை இறங்கிவந்து ஒத்துழைப்பதை கண்டு மகிழ்ச்சியுற்ற தமையன் மென்னகையுடன் நிமிர்ந்து, “பீச்…” என்றான் ராகவ்.
கோவிலுக்கு முதலில் அழைத்துச் செல்லவேண்டும் பிறகு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் என்ற நினைப்பு அம்புஜத்திற்கு இருந்தாலும் வாய் திறக்கவில்லை. இன்று தான் இறங்கி வந்திருக்கிறாள் இப்போது போய் தான் இடத்தை மாற்றச் சொல்லி அவள் இதுதான் சாக்கென்று மலையேறிவிட்டால் என்ன செய்வது என்று மெளனியாகிவிட்டார்.
முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் மீராவின் ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருக்க ராகவ் சொன்ன இடத்தை கேட்டதும், சட்டென ஒரு காரணத்தை பிடித்துக்கொண்டாள் மீரா, “இந்த நேரத்தில யாராவது பீச் போவார்களா?”
“சாப்பாடெல்லாம் முடித்துவிட்டு இப்போது கிளம்ப ஆரம்பித்தால் வெயில் தாழ்ந்து அங்கு செல்ல சரியாய் இருக்கும். போ… போய் கிளம்பு மீரா.” என்று தங்கையை அர்த்தமாய் பார்த்தவன், தன் தாயிடம் திரும்பி, 
“ம்மா அதற்குள் சீக்கிரமா என்ன சமைக்க முடியுமோ அதை செஞ்சிடுங்க. டிபன் என்றாலும் பரவாயில்லை இப்போ ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்.” என்க மீராவிற்கு தான் குழப்பமாகிவிட்டது, ஏன் ஹோட்டல் சாப்பாடு வேண்டாமென்று சுட்டிக்காட்டி சொல்கிறானென்று. ஆனாலும் அதை ஒரு பொருட்டாய் மதித்து அதிகமெல்லாம் யோசிக்கவில்லை அவள். முடிந்தமட்டில் இத்தனை நாட்கள் அனைத்திலிருந்தும் ஒதுங்கி இருந்தவள் இன்று வெளியே செல்லவேண்டும் என்றதும் கலக்கத்துடன் தன் அறைக்குச் சென்றாள்.
அறைக்குள் நுழைந்தவுடன் தன் அலமாரியை முழுதாய் திறந்து மேல் ஷெல்ப்பை பார்க்க பளிச்சென்று வானவிலாய் கண்ணில் வந்து விழுந்தன அவளின் உடைகள். அதில் இருந்த வண்ணங்களை கண்களில் நிரப்பிக் கொண்டவள், அந்த உடைகளின் மீது லேசாக தன் விரல்களை படரவிட, அவள் நினைவுகள் அவளை பின்னோக்கி இழுத்துச் செல்ல தயாராய் நிற்கும் நேரம் பின்னிருந்து அவள் தோளை அணைத்தார் போல் வந்து நின்றார் அம்புஜம்.
“அம்மு நீ முன்னே ட்ரெஸ் பண்ணுவது மாதிரி பண்ணுடா… சாதாரண ப்லைன் குர்தி, ஜீன்ஸ் போட்டாலும் நேர்த்தியா கலர்ஸ் செலக்ட் பண்ணி நீ போடுகிற அழகே தனி. என் பழைய அம்முவ நான் பார்க்கணும்.” என்று நெகிழ்வாய் கூறிய அத்தாயின் விழிகளில் முன்னர் இருந்த மீராவின் உருவம் கற்பனையில் மின்ன ஒருவித ஆர்வம் அவரை சூழ்ந்து கொண்டது. மீராவோ தன் விரல்களை மடக்கி முறுக்கி தன் உணர்ச்சிகளை அடக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவர் கூற்றை ஆமோதித்தபடி சுஜா உள்ளே வந்தாள், “ஆமா மீரா, அத்தை சைஸ்க்கு நீ இப்போ போட்டிருக்கிற புல் ஸ்லீவ்ட் ஹை காலர் சல்வாரில் நீ பூசணிக்காய் போல புஸ்ஸுன்னு தெரியுற. இந்த பெரிய துணியெல்லாம் முதலில் தூரப் போடணும்.”
“அடிப்பாவி சந்தடி சாக்கில் என்னை பூசணிக்காய்னு என் முன்னாடியே சொல்ற?” என்று இடைபுகுந்து சலித்தார் அம்புஜம்.
பேச்சு வாக்கில் விட்ட வார்த்தைகளை எண்ணி நாக்கு கடித்த சுஜா, அசட்டுச் சிரிப்பை உதிர்த்து, “உங்களை போய் அப்படி சொல்வேனா அத்தை. எங்கே நீங்களே சொல்லுங்க… நம்ம மீரா எவ்வளவு ஒல்லியா இருக்கா. அவள் இது மாதிரி பெரிய அளவு உள்ள உடைகள் போட்டால் நல்லாவா இருக்கு?” என்று நயமாய் பேசி ஒப்புசெய்து அதில் வெற்றியும் கண்டாள்.
“ஆமா சுஜா நீ சொல்றதும் சரிதான். அம்மு என்ன எங்களை முறைச்சு பார்த்துட்டு நிற்கிற? கிளம்புற வழியை பாரு.” என்று தாய் கூற,
“அம்மா முதல்ல எல்லோரும் சாப்பிடுங்க.” என்று மீரா அதட்டவும் அவளின் பரிவில் அம்புஜம் கண்களில் சட்டென தேங்கிய ஆனந்த நீரை துடைத்துகொண்டு அவள் கன்னம் எந்தினார். மறுநொடியே அவர் கையை பலமாக மீரா தட்டிவிட அதை சற்றும் எதிர்பாராதவர் அதிர்வில் நிலைதடுமாறி திகைத்து நின்றார்.
“மீரா, என்ன இது? அத்தை கையை இப்படி தான் கண்முன் தெரியாமல் தட்டிவிடுவாயா? அத்தை கீழே விழுந்திருந்தா?” மீராவின் செயலில் அதிர்ந்திருந்த சுஜா தன்னை சுதாரித்துக்கொண்டு அதட்ட, மாமியாரோ இவளை அடக்கினார்.
“சுஜா சும்மா இரு. என்னை தானே தள்ளிவிட்டா… விடு. என் பொண்ணு தானே. அவளுக்கு அவள் வலி. நீ போய் சமையலுக்கு ஏற்பாடு செய். நானும், அம்முவும் இதோ வந்துவிடுகிறோம்.” என்க, என்றுமே மகள் எப்போதுமே மருமகளுக்கு ஒருபடி மேலே தான். அதற்கு அம்புஜமும் விதிவிலக்கல்ல…
முகச்சுருக்கத்துடன் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் தனிமை கொடுத்து சுஜா அங்கிருந்து நகர்ந்துவிட, மீராவோ முகத்தை வேறு பக்கம் திருப்பி, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு இதழ் கடித்து தன் ஆத்திரம், அழுகை, தவிப்பு, பயம் என்று அத்தனையும் ஒரு சேர அடக்க முயன்று உணர்வுக் குவியலுக்கு எதிராய் போராட முடியாமல் தோற்றுக் கொண்டிருந்தாள்.
அவளின் பரிதவிப்பை முழுதாக உணர்ந்த அம்புஜம் அவளை தன் புறம் திருப்பி, “அம்மு.”
“நான் எங்கேயும் வரலை.”
“அம்மு என்னடா இது?”
“நான் வரமாட்டேன்… வரமாட்டேன்…” என்று சிறுபிள்ளை போல், நாசி புடைக்க, அருவியாய் இருக்கும் விழிநீரை வீம்பாய் இழுத்துப் பிடித்து நின்றவளை பார்க்க அம்புஜதிற்கு அவள் சிறுவயதில் ராகவுடன் சண்டையிட்டு மாட்டிய பின்போ தவறே செய்யவில்லை என்று வீம்பு பிடித்து நிற்கும் தோற்றத்தையே நினைவூட்டியது. அதையே சொல்லவும் செய்தார்.
“சின்ன பிள்ளையா இருக்கும்போதும் இப்படித்தான் செய்ய. இப்போவும் அப்படியே செய்யுற.”
“சின்ன பிள்ளையாவே இருந்திருக்கலாம். இது மாதிரி வேதனைகயை அனுபவிக்காம அதை பற்றிய புரிதலும் இல்லாம நிம்மதியா இருந்திருப்பேன்.” என்க ஒரு சொட்டு கண்ணீர் அவளையும் மீறி கன்னத்தில் வழிந்தது.
“காலவோட்டத்தில் எல்லோருமே வளர்ந்து அனைத்தையும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அனைத்தையும் சந்தித்து தான் ஆகணும் மீரா. இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படியே இருக்கப் போற? வெளியில் சென்று மக்களை பார்த்தால் மனம் மாறும், எண்ணவோட்டங்கள் சிதறி உன்னை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும். உனக்கும் புத்துணர்ச்சியா இருக்கும்.” என்று தெம்பூட்டும் விதமாய் பேச,
“மக்களை பார்த்தால் என் மனம் மாறுமா? ஜோக் ஆஃப் தி இயர்.” என்று விரக்தி நகை உதிர்த்தாள் மீரா.
மீராவின் கழிவிரக்கம் அத்தாயின் நெஞ்சை பிழிய, “அம்மு.” என்று கேவல் வெளிப்பட,
அவரின் கேவல் மீராவின் கழிவிரகத்தை பெருக்க உக்கிரமானவள், “அவங்களோட பார்வையே என்னை உயிரோடு எரிப்பதற்கு சமம். இப்போ சொல்லு நான் வரணுமா?” என ஆவேசமாய் கத்தினாள்.

Advertisement