Advertisement

*2*
“எப்போதும் செய்ற மாதிரி தான். இந்த விஷயம் தம்பிக்கு தெரியாமல் பார்த்துக்கணும். யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடக்கூடாது. அதோட இ.சி.ஆரில் இருக்கும் நம் பங்களாக்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் ஒரு பங்களாவை சுத்தம் செய்யச்சொல். கொஞ்ச நாள் என்னோட கட்டுப்பாட்டில் அந்த பங்காளவில் இருக்கட்டும் பிறகு அவளை எங்கு அனுப்பனுமோ அங்கு அனுப்பி கைமாற்றி விடுவோம். அதேபோல் அந்த மொத்த குடும்பத்தையும் ஏதாவதொரு காரணம் கண்டுபிடித்து வேறு ஊருக்கு மாற்ற ஏற்பாடு பண்ணு. எக்காரணம் கொண்டும் அவங்க தம்பி கண்ணில் பட்டுடக்கூடாது. ஏன் அவங்க இருக்கிறதே தம்பிக்கு தெரியக்கூடாது. இதில் எதுவும் தவறு நடந்தா என்ன நடக்கும்னு உனக்கு நான் சொல்லனுமா என்ன? உன் மொத்த குடும்பத்தையும் ஒழிச்சு கட்டிவிடுவேன்.” என்று ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்த ஐம்பத்தைந்து வயது வரதன் தன்னுடைய இருண்ட பக்கத்தை முழுதாய் அறிந்து வைத்திருக்கும் தன்னுடைய தனிப்பட்ட மேலாளரிடம் கட்டளை பிறப்பித்தார்.
“ஓகே சார். நீங்கள் சொன்னபடியே எல்லாத்தையும் செஞ்சிடுறேன். ஆனா சார்…” என்று அந்த மேலாளர் இழுக்கவும் வரதனின் பார்வை கூர்மையாகியது. அதில் லேசாய் கலக்கம் கொண்ட மேலாளர் எச்சில் கூட்டி விழுங்கி, “நீங்கள் ஏன்… அது வந்து அந்த பெண் சிறிய பெண்ணாக தெரியுது. நம்ம தம்பி வயதை விட சிறிய வயசு தான் அந்த பெண்ணிற்கும்…” மனதில் எங்கோ ஈரம் சுரந்ததோ என்னவோ அந்த மேலாளருக்கு தன் முதலாளி செய்யப்போகும் செயலின் வீரியம் உணர்ந்து பேச, அனல் பார்வை வீசினார் வரதன்.
“அவள் செஞ்ச காரியத்தால தங்க முட்டையிடும் தொழில் நம் கையை விட்டு போயிடுச்சு. எத்தனை லட்சம் கோடி இழப்புன்னு உனக்கு தெரியாதா என்ன? ஏற்கனவே எவனோ நம்மை முந்திகிட்டு அவளுக்கு நல்ல தண்டனை கொடுத்துட்டான். நம் தொழிலை முடக்கியவளை நாமும் நம் பங்குக்கு ஏதாவது செய்யணும்ல? ஏற்கனவே வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கா இனி ஏன்தான் உயிரோட இருக்கோம்னு நினைக்கணும். அவள் செய்த தவறுக்கு அவள் குடும்பமும் சேர்ந்து அனுபவிக்கட்டும்.
இதுவே உன்னுடைய கடைசி கேள்வியா இருக்கட்டும். என் கட்டளையை நிறைவேற்றத் தான் உன்னை வேலைக்கு வச்சிருக்கேன், என்னை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு இல்லை” என்று கடுகடுக்க அவரின் மேலாளர் ஆமோதிப்பாய் லேசாக தலையாட்டினான். 
இதற்குமேல் அவன் என்ன செய்யமுடியும். வேறு யாரின் கீழ் வேலை செய்தாலும் இவர் கொடுக்கும் ஊதியத்திற்கு ஈடாகுமா? நடுத்தர குடும்பத்தில் பிறந்து வரதன் கம்பெனியில் சாதாரண இடைமட்ட வேலையில் சேர்ந்தவன் இன்று அவருக்கு எல்லாமுமாய் இருக்கிறான். அனைத்து வசதியையும் அனுபவிக்கவும் செய்கிறான். அப்படியிருக்கையில் மனவுறுத்தலாவது வருத்தமாவது என்று அவன் அதன் பின் எதுவும் பேசிடவில்லை. தனக்கு ஏவப்பட்ட கட்டளையை நிறைவேற்றும் வேலையில் இறங்கிவிட்டான்.
*****
குண்டூசி விழுந்தால் எழும் அரவம் கூட அச்சப்படுத்தும் வகையில் வீடே மயான அமைதியில் நிரம்பியிருக்க ரகுநாதன் ஒரு புறம் தன் முகத்தை கைகளில் புதைத்து அமர்ந்திருந்தார். அம்புஜமோ தன் சேலை நுனியால் அடங்காமல் வழிந்தோடும் நீரை துடைத்தபடி கடவுளே கதி என்று பூஜை அறையில் கைகூப்பி தன் துயரை முறையிட்டு நல்ல பதில் கிடைக்குமா என்று ஏக்க பார்வையை கடவுள் மீதும் மீரா அறை மீதும் மாறிமாறி பதித்து சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்க, சுஜா அவர் அருகில் அமர்ந்து மீரா அறையை நோட்டமிடுவதை தவிர வேறு எதுவும் இல்லை என்றபடி ஓய்ந்திருந்தாள்.
“இதுக்குத் தான் ஆரம்பத்திலேயே அவளுக்கு இப்போ திருமணம் செய்யவேண்டாம், கண்டவர்கள் பேச்சையெல்லாம் கேட்க வேண்டிவரும். அவள் மனம் நோகுமுன்னு அவ்வளவு எடுத்துச் சொன்னேன். யாரும் அப்போ கேட்கலை. இப்போ தலையில் கைவச்சு உட்கார்ந்து என்ன பிரயோஜனம்?” என்று அந்த மயான அமைதியை தன் கோபக்கனலால் களைத்தான் ராகவ், மீராவின் உடன்பிறந்தவன்.
“நாங்க ஏதோ அவள் எதிர்காலத்தை வேணும்னே வீணாக்கியது போல பேசுற. அவள் நல்லாயிருக்கனும் அந்த ரூமே கதின்னு இல்லாம முன்ன மாதிரி மாறனும்னு தானே எல்லாமே பார்த்து பார்த்து செய்றோம். அதுவும் சொந்தத்தில் வரன் பார்க்கச் சொன்னால் தேவையில்லாத பேச்சு வரும்னுதான் இது மாதிரி தரகர் கிட்டே போனேன். அந்த தரகரும் நல்லமாதிரின்னு கேள்விப்பட்டு தான் அவனை நம்புனேன். ஆனா அவன் இப்படி காலம்போன காலத்தில் இருக்கும் கேடுகெட்ட ஒருவனை கூச்சனாச்சாம் இல்லாமல் அழைச்சிட்டு வருவான்னு எனக்கெப்படி தெரியும்?” என்று ரகுநாதன் ஒருபுறம் தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தினார்.
“வீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொல்றதுக்கு முன்னாடியே ஒழுங்கா விசாரிச்சிருக்கணும். அப்போ விட்டுட்டீங்க. போனது போகட்டும் இதை இத்தோடு நிறுத்துங்க. அவள் விருப்பப்படுற வரை இப்படியே நம்மகூடவே இருக்கட்டும். அது கடைசி வரைன்னாலும் பரவாயில்லை.” என்று சொன்னவன் கணநாழிகை இடைவெளி விட்டு,
“அவர் கொடுத்த விசிட்டிங் கார்ட் எங்கே? அப்போ இருந்த அதிர்ச்சியில் அந்த ஆளை சும்மா விட்டுட்டேன். இப்போ அந்த ஆள் நம்பரை கொடுங்க நானே அந்த ஆளை வெளுத்து வாங்கிடுறேன். என்ன திமிர் இருக்கணும் அந்தாளுக்கு? நம்ம வீட்டுக்கே வந்து நம் பொண்ணை கேட்டு மிரட்டிட்டு போயிருக்கான்.” என்று பல்லை கடித்த ராகவ் ரகுநாதன் சட்டை பையில் இருந்த விசிட்டிங் அட்டையை தானே எடுத்து அதில் இருந்த நம்பரை தன் அலைபேசியில் அழுத்த, 
“நீங்க இந்த மாதிரி எதுவும் செய்யக்கூடாது.” என்று பாய்ந்து வந்து ராகவ் கையில் இருந்த போனை பிடுங்கினாள் சுஜா. அதுவரை சற்று மட்டுப்பட்டிருந்த ஆத்திரம் தோய்ந்த வார்த்தைகள் மீண்டும் பொங்கி எழுந்தது.
“என்ன பேசுற நீ? அந்த கிழவனுக்கு சப்போர்ட் செஞ்சிட்டு இருக்க? அறிவிருக்கா?”
“நான் யாருக்கும் ஆதரவா பேசல. நம்ம மீராவை நினைச்சுப் பாருங்க. அந்த ஆள் சொன்னதை கேட்டீங்க தானே? அவர் பெரிய இடமா தெரியுது நீங்கள் எதுவும் ஏடாகுடமா பேசி அவர் ஏதாவது செஞ்சுட்டா? நம்ம குடும்பத்துக்கே ஆபத்தை ஏற்படுத்திட்டா என்ன செய்றது? ஏற்கனவே மீரா வெளியில் போறதில்லை. அவளை நாம் கூட்டிலிருந்து வெளிக்கொணர வேண்டுமே தவிர மீண்டும் கூட்டில் தள்ளிடக்கூடாது. இப்போவே பாருங்க அப்போ உள்ளே போனவதான் இன்னும் வெளியில் வரலை.” என்று உயர்ந்த குரலில் துவங்கி சோர்வான குரலில் சுஜா பேசிட அந்த வீடு மீண்டும் நிசப்தமானது.
தன் தலைமுடியை அழுந்தக் கோதிய ராகவ் நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான். அந்த ஆளின் பணபலத்தை கண்டு அஞ்சி ஒடுங்குவதா என்று தன்மானம் முரண்டினாலும் தான் தட்டிக்கேட்கிறேன் என்று இறங்கி அதனால் மீராவிற்கு எதுவும் ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று அடங்கினான். 
சாமானியன் பணபலம் படைத்தவரை எதிர்க்கும் அளவிற்கு நீதி நிலைநாட்டப் படவில்லையே இவ்வுலகில். பணம் என்ற ஒற்றை பலம் இருந்தாலே போதும் அவருக்கு ஒரு நியாயம், சாமானியருக்கு ஒரு நியாயம் என்ற நடைமுறை தான் எல்லா இடத்திலும் கடைபிடிக்கப்படுகையில் அவனும்தான் என்ன செய்வான்…
“இப்போ என்ன செய்றது? அவளை எப்படி தேற்றுவது? ஒன்னுமே புரியலை…” என்று ரகுநாதன் வாய்க்குள் முணுமுணுக்க, நீண்ட மூச்சை இழுத்து வெளியேற்றிய சுஜா சோர்வாய்,
“இப்போதைக்கு அவளை கொஞ்ச நேரம் தனிமையில் விட்டுடுவோம். விரக்தியின் உச்சத்தில் தான் மீரா இப்போ அந்த திருமணத்துக்கு சம்மதம் சொல்லி இருப்பா. அவள் போக்கில் போய்தான் அவளை நாம் மாற்ற முயற்சி பண்ணனும்.”
அதுவரை அமைதியாய் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அம்புஜம் நம்பிக்கை இழந்தவராய், “எனக்கு அந்த நம்பிக்கையே விட்டுப்போச்சு. அவள் வேதனையின் சின்னம் கண்ணாடியில் என்றைக்குமே பிரதிபலிச்சிட்டு இருக்கும். அது எப்போதும் பழசை மறக்கவிடாது. என் மகள் கடைசி வரை இப்படியே தான் வாழ பழகிக்கணுமோ?” என்று ஆதங்கத்தோடு விம்ம,
“அத்தை நம்பிக்கையை தளரவிடாதீங்க. நம்ம மீரா முன்பு போல மீண்டு வருவா.” என்று சுஜா பேச்சுக்காய் அந்த நேரம் மாமியாரை தேற்றினாலும் அவள் மனதிலும் அம்புஜம் உதிர்த்த சில உண்மைகள் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
“இப்படி அழுது புலம்பி பேசுறதால ஒன்னும் நடக்கப்போறதில்லைன்னு எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சு. நான் இன்னைக்கு அவளை வெளியில் கூட்டிட்டு போகப்போறேன். என்ன நடந்தாலும் சரி இன்னைக்கு அவள் வெளியுலகை பார்த்துதான் ஆகணும். அதுக்கு பிறகாவது ஏதாவது மாற்றம் வருதான்னு பார்ப்போம்.” என்று தீர்மானமாய் மொழிந்து எழுந்தான் ராகவ்.
மகனின் தீர்க்கத்தை உணர்ந்த அம்புஜம் நினைவுகளூடே, “அவள் இதற்கு ஒத்துக்குவாளா? முழுசா ஆறு மாசம் ஆகப்போகுது அவள் வீட்டை விட்டு வெளியே சென்று… என் மீரா அவளோட சுயத்தை இழந்து ஆறு மாசம் ஓடிடுச்சு.”
“இனி அவள் விருப்பத்திற்கு விடக்கூடாதும்மா. என்ன ஆனாலும் சரி, இன்னைக்கு நான் அவளை வெளியில் அழைத்துச்சிட்டு போற யோசனையில் இருக்கேன். வெளியில போய் நாலு பேரை பார்த்தாலாவது அவள் மனதில் இருக்கும் வெறுமை மறைந்து புது நம்பிக்கையும் உத்வேகமும் பிறக்குதான்னு பார்ப்போம். அவள் சரியாகிட்டா அவளே அவளுக்கான சரியான பாதையை தேர்ந்தெடுப்பாள் இல்லைன்னா தேர்ந்தெடுக்க வைக்கணும்.” என்று சூழுரைக்காத குறையாய் சபதம் பூண்டான் ராகவ்.
தன் மகனின் வார்த்தைகளில் நம்பிக்கை பிறக்க ரகுநாதன் ஆர்வமுடன், “எப்படி? அவள் வரமாட்டாளே?” என வருந்த,
தன் விழிகளை நிமிர்த்தியவன் தன்னை நம்பிக்கையுடன் நோக்கும் மூன்று ஜோடி கண்களை நேரெதிரே சந்தித்து, “அவள் என்ன செய்வாளோ அதே தான்.” என்றான் இலகுவாய்.
மூவரும் நெற்றி சுருங்க எதை சொல்கிறான் இவன் என்ற தீவிர யோசனையில் இறங்க, சுவரில் மாட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரம் மதியம் மணி மூன்றை தொடவும் மீராவின் அறைக்கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
முகம் பொழிவிழந்து கண்கள் உயிரை துச்சமாய் காட்ட, உடுத்தியிருந்த அரக்குநிற சேலை மாற்றப்பட்டு காலர் வைத்த சல்வார் ஒன்றை அணிந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள் மீரா. மேசை காலியாக இருப்பதை பார்த்து புருவம் சுருக்கினாலும் எதுவும் கேட்காமல் ஜக்கில் இருந்த தண்ணீரை மடமடவென தொண்டைக்குள் இறக்கிவிட்டு மீண்டும் அறைக்குள் புகும்நேரம் ராகவ் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.
“இன்னும் எவ்வளவு நாள் நாங்க உயிரோட இருக்கோமா இல்லையான்னு கூட கவனிக்காமல் இருக்கப்போற மீரா?” என்றான் அவள் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதை பற்றி எந்த கேள்வியும் எழுப்பாமல். அவனுக்கு மட்டுமல்ல அங்குள்ள அனைவருக்குமே தெரிந்திருந்தது அவளின் பலகீனமும், தொலைந்த தன்னம்பிக்கையும் அவளை நேர்வழியில் சிந்திக்க விடாமல் தடுத்து மனஉளைச்சலுக்கு வழிவிட்டு அவளை ஆட்டுவிக்கிறது என்று…

Advertisement