Advertisement

“எதுக்கு சரண்டர் ஆகுறீங்கன்னு கேட்டதுக்கு அவர் எதுவுமே சொல்லாம அப்டியே அங்க அமைதியா உட்கார்ந்து இருந்தாராம். கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்துட்டாராம்… ஹாஸ்ப்பிடலில் சேர்த்திருக்காங்கன்னு போன் வந்துச்சு… பிபீ, சுகர் டேப்லெட் எல்லாம் தேவைக்கதிகமா சாப்பிட்டுட்டு தான் போலீஸ்கிட்ட போயிருக்காரு. க்ரிட்டிகலா இருக்காராம்… ஏற்கனவே… லிவர்ல பிரச்சனை இருக்கு… பொழைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தானாம்…” என்கவும் சட்டென திரும்பி அவன் முகம் பார்த்தாள் மீரா.
என்னதான் வரதனை அவன் எதிர்த்து கேள்வி எழுப்பி உறவே வேண்டாம் என்று வெட்டிவிட்டு வந்தாலும் தந்தை என்ற பாசம் அவன் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை என்று அவளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அதனால் தற்கொலைக்கு முயன்று அவர் உயிருக்கு போராடுகிறார் என்ற செய்தி தெரிந்ததும் வருந்துகிறானோ என்று பார்க்க, அவள் பார்வையை உணர்ந்தவன்,
“கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டமாதான் இருந்துச்சி… பழைய நியாபகத்தில் பதறவும் செஞ்சேன்… ஆனா அதுக்கெல்லாம் அவர் வொர்த் இல்லை கண்ணம்மா…” என்று கண்களை இறுக மூடிக்கொண்டான்.
“உங்க விஷயத்தில் மட்டும்தான் அவர் வொர்த்தான ஆளு. உங்களுக்கு மட்டும்தான் அவர் நல்லவராவும் இருந்திருக்காரு…” என்றாள் அவள். என்ன என்று கண்ணைத் திறந்து கேள்வியாய் அவன் பார்க்க,
“இல்லைனா அவர் சரண்டர் ஆகியிருப்பாருன்னு நினைக்குறீங்களா? எல்லாத்தையும் தடயம் இல்லாம பண்ணிட்டு இப்போ தானே வலிய போலீசில் சரண்டராகி இருக்காருன்னா அது நீங்க சொன்ன வார்த்தைக்காக மட்டும்தான்…” என்று அழுத்திச் சொன்னவள், “இந்த காரணத்துக்கான எல்லாம் அவர் செஞ்சதை மன்னிக்க முடியாது. தண்டனை அனுபவிக்கட்டும்.” என்று இதையும் சேர்த்துச் சொன்னாள்.
“சரி அதை விடு… இப்போ நீ சொல்லு… நீ ஏன் என்கூட திருவண்ணாமலைக்கு வரமாட்டேங்குற?” என்று ஆதங்கமாகவே கேட்டான் கார்த்திக்.
அவளது விழிகள் தன்னால் கீழிறங்க அவள் தாடையை பிடித்து நிமிர்த்தியவன், “நம்ம டீல் என்னனு மறந்து போச்சா… நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன். இப்போ நீ சொல்லணும்…”
“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…” என்று பரிதாபமாய் விழித்தாள் அவள்.
மருண்டு உருளும் அவள் கருவண்டுகளை கவனித்தவாறே அவ்விழிகளில் அவன் தம் இதழ்களை அழுந்தப் பதிக்க, அதை தன்னுள் கிரகித்துக்கொண்டு அவனை ஒண்டினாள் மீரா. அவளின் நெருக்கத்தில் அவனும் தடம்புரண்டு அவளையும் புரட்டி பூவின் மென்மையென அவளைக் கையாள, ஒருகட்டத்திற்கு மேல் அவனின் கண்ணம்மா பிதற்றலில் பக்கென சிரித்து அவனை விலக்கினாள் அவள்.
“ஏய்!” முழுதாய் முடியாமல் மிச்சம் இருந்த எச்சத்தின் உணர்ச்சிகளிலே உழன்றவன் தன்னிலை வர சில நொடிகள் தேவைப்பட்டது.
“நீங்க இருக்குற வேகத்துக்கு இந்த கண்ணம்மா விழிக்கிறாளோ இல்லையோ குட்டி கண்ணம்மா சீக்கிரம் வந்துருவா. கொஞ்சம் அடங்குங்க…” என்று சிரித்து மழுப்பியவள் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துவிட, அவளின் வெற்று முதுகை வெறித்தவனுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. நன்றாய் சென்று கொண்டிருந்ததில் இப்போது என்ன ஆகிற்று? என்று விழித்தபடி இருந்தான்.
நொடிகள் சில நிமிடங்களாய் நீண்டுவிட, அவள் வாய் திறப்பது போல் தெரியவில்லை என்றதும் அவனே அவளை நெருங்கி அவள் தோள் பற்றி திருப்ப, மெளனமாய் கண்ணீர் சிந்தி கலங்கிச் சிவந்த அவளது விழிகள்தான் கண்ணில் பட்டது.
“என்னடா? பிடிக்கலையா… முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே… நானே உன்னை போர்ஸ் பண்ணிட்டேனா… ச்சை… சாரிடா கண்ணம்மா…” என்று பதற்றத்துடன் இவனது புலம்பல் தான் அதிகமாய் ஒலித்தது.
“நான் அதிகமா புடவை கட்ட மாட்டேன். ஆனா நேத்திக்கு நீங்க மனசொடஞ்சி என்னைத் தேடி ஊரிலிருந்து வந்தப்போவும் சரி இன்னைக்கும் சரி நான் ஏன் புடவை கட்டுனேன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று சம்மந்தமில்லாமல் அவள் கேள்வி எழுப்ப அவனது புலம்பல் மட்டுப்பட்டு குழப்பம் கூடிக்கொண்டது.
“போன வாரம் முத்தம்மாவை பார்க்க கோவிலுக்கு போகலாம்னு நீங்க என்னை கூட்டிட்டு போனப்போதான் நான் நம்ம கல்யாணத்துக்கு பிறகு முதல் தடவை புடவை கட்டுனேன். அன்னைக்குத்தான் நீங்களும் என்னை ஜெயிலுக்கு கூட்டிட்டு போய் அந்த பாண்டியனை பார்க்க வச்சி என்னை பெட்டரா பீல் பண்ண வச்சீங்க. அப்போலேந்தே உங்க நெருக்கமும் உரிமையும் எனக்கு ரொம்ப பிடிச்சுது. அந்த நாள் எனக்கு ஸ்பெஷலா இருந்துச்சு, நமக்குள்ள ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துச்சு. அந்த நினைப்பில்தான் நேத்துக்கு நீங்க போனில் சோர்வா பேசிட்டு ஊருக்கு வரேன்னு சொல்லவும் உங்களுக்காக சமச்சிட்டு புடவை கட்டுனேன். 
புடவை கட்டுனா நமக்குள்ள எல்லாம் சரியாகும்னு ஒரு சென்டிமென்ட்னு வச்சிக்கோங்களேன்… அது ஒர்க்அவுட்டும் ஆச்சு. என்னையும் அறியாம உங்களுக்கு சமாதானம் சொல்லும்போது என் மனசை அழுத்திட்டு இருந்ததை உங்ககிட்ட சொன்னேன். நமக்குள்ள ஒளிவு மறைவு எதுவுமே இல்லாத அளவுக்கு நாம இன்னும் நெருங்கினோம். நிறைவா வாழ்க்கையோட இன்னொரு அத்தியாயத்தை துவங்குனோம். இந்த அத்தியாயம் நிறைவாவே துவங்குனாலும் இது காலம் முழுக்க நிறைவாய் இருக்குமான்னு எனக்கு பயமா இருக்கு…
நீங்க டிரெஸ் எதுவும் எடுத்துட்டு வராம இங்க வந்து நேத்தி நீங்க முழிச்சப்போ உங்களை அப்போவே கூட்டிட்டு போய் நானே பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி டிரெஸ் எடுத்து கொடுக்கணும்னு எனக்கு ஆசையா இருந்துச்சு. ஆனா… 
எனக்கு அந்த தைரியம் இன்னும் வரல… உங்களோட கைகோர்த்து உங்க தோள் சாஞ்சி கடைகடையா ஏறி இறங்கணும்னு விருப்பம் இருந்தாலும் என்னோட உருவம், என்னோட பிழையான முகம் என்னை தடுக்குது. என்னால அதை ஜீரணிக்க முடியல. அதை விட்டு நான் முழுசா வெளில வந்துட்டேன்னு சொல்ல முடியல… நான் முன்ன போக நினைச்சாலும் அது என்னை பின்னாடி இழுக்குது. 
இதோ இப்போ கூட நீங்க பக்கத்துல இருக்குறது எனக்கு பிடிச்சிருந்தாலும் திடீர்னு ஏதோ சலிப்பு. இது வேண்டாம்னு தோணுது. ஆனா ஏன்னு காரணம் தெரியல. நான் இன்னும் ஸ்டேபில் ஆகல. நான் இன்னும் மாறனும். நிமிஷத்துக்கு நிமிஷம் உணர்வுகள் மாறுர இந்த மீராவை எனக்கு பிடிக்கலை. வெளில கால் எடுத்து வச்சாலே என்னை யார் யார் எப்படி பார்க்குறாங்கன்னு நான் ரொம்ப கான்ஷியஸ் ஆகிடுறேன். அது மாறனும். 
என்னை நானே ஏத்துக்கணும். என்னை நானே விரும்பனும். மத்தவங்க பார்வை என்னை எதுவும் செய்யாதுன்னு நான் நம்பனும். என்னோட மனசு திடமாகனும். இதெல்லாம் நடக்காம என்னால உங்கக்கூட அங்க வரமுடியாது. வந்தாலும் நான் நானா இருக்க மாட்டேன். நீங்க வேலைக்கு போன பிறகு எதையாவது யோசிச்சு நான் குழம்பறது மட்டுமில்லாம உங்களையும் சேர்த்து படுத்தி வைப்பேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் இங்க ஏற்கனவே பார்த்த ஷோபா மேம்கிட்ட கவுன்சிலிங் போறேன். மேல என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன். என்னை நானே மாத்திக்கிற வரை நான் இங்கேயே இருக்கேன். முன்ன மாதிரி ரூமுக்குள்ளேயே இருக்காம அம்மாவுக்கும் அண்ணிக்கும் ஹெல்ப் பண்றேன். அண்ணி பாவம் ஆறு மாசமா எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சாங்க. இப்போவும் செய்றாங்க. இனி அவங்க உடம்பை அவங்க கவனிக்கணும். அவங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்துட்டு அவங்களை பார்த்துக்குறேன்.
நீங்களும் உங்களை நல்லா கவனிச்சிகனும். வாராவாரம் என்னை பார்க்க வந்துடனும். தினம் எனக்கு போன் பண்ணிடனும், அத்தை போட்டோவுக்கு பூ வச்சிடனும். நேரத்துக்கு சாப்பிடணும். எதுவா இருந்தாலும் என்கிட்ட நீங்க சொல்லிடனும். நானும் சொல்லுவேன்…” என்று நீளமாய் பேசி ஆவலுடன் அவன் முகம் பார்க்க, முழுதாய் தெளிவடையா நிலையிலும் தெளிவாய் பேசும் அவளை வாரி அணைத்து முத்தம் வைக்கத் தோன்றிய உணர்வை கட்டுப்படுத்தி நிறைவான புன்னகை ஒன்றை உதிர்த்தான் கார்த்திக்.
இதுவரை தன் முடிவில் உடும்புப் பிடியாய் இருந்தவள் இன்று தளர்ந்து, தான் மாற வேண்டும் என்ற எண்ணம் அவளுள் தோன்றியதே பெரிய மாற்றம் தான். 
தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவள் இன்று விழிக்க தயாராய் இருக்கிறேன் என்று அறைகூவல் விடுத்ததே புதிய திருப்பமாய் தோன்றிட, தன் கண்ணம்மாவின் வேண்டலை மறுபரிசீலனையின்றி ஏற்றவன் அவள் விழித்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் நிம்மதியுடன் கண்ணயர்ந்தான் அவளையும் வாரி தன்னுடன் சுருட்டிக்கொண்டு… விழித்தெழ வேண்டுமென்ற விவேகத்துடன் அவளும் பாந்தமாய் அவனை அண்டிக்கொள்ள, இவர்கள் இருவரும் இணைய காரணமாய் இருந்தவரோ தன் இறுதி மூச்சை இழுத்து வெளியிட்டிருந்தார் மருத்துவமனையில்.

Advertisement