Advertisement

*15*
குடி மூழ்கிப் போனது போன்று கன்னத்தில் கைவைத்து பாவமாய் அமர்ந்திருப்பவனை கடைக்கண் பார்வையால் நோட்டமிட்டபடி இதழுக்குள் விரியும் புன்னகையை முழுங்கிவிட்டு ஊறுகாய் மற்றும் பொடி வகைகள் என வரிசையாய் சில டப்பாக்களை பையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் மீரா.
“நாளைக்கு காலையில கிரேவி மாதிரி திக்கா வத்தகுழம்பு வச்சித்தரேன்னு அத்தை சொன்னாங்க. மறக்காம அதையும் பையில் வச்சிடு… ரெண்டு நாளைக்கு வச்சு சாப்பிடலாம். கெட்டுப் போகாது.” என்றபடியே இட்லி பொடியும் எண்ணையும் எடுத்து வந்து கொடுத்தாள் சுஜா.
“நல்லெண்ணை வேண்டாம் அண்ணி. டிராவல்ல கொட்டிடும். அவங்களை அவங்க வாங்கிக்க சொல்றேன்…” என்று மீரா எண்ணெய் பாட்டிலை சுஜாவிடம் கொடுக்க, சுஜாவின் பார்வை நமட்டுச் சிரிப்புடன் கார்த்திக்கிடம் இருந்தது.
“என்ன டைட்டானிக் கவுந்ததுக்கு இப்போ உட்கார்ந்து பீல் பண்றீங்களோ?” என்று கேலியாய் அவள் கேட்க, உதட்டை சுழித்த கார்த்திக்,
“நீங்க செய்யுறதை பார்த்தாதான் எனக்கு பீதியா இருக்கு… அதான் எல்லாம் செட்டில் ஆகிடுச்சே இந்த வீட்டு மகாராணிய என்கூட அனுப்பி வைப்பீங்கன்னு பார்த்தா என்னை மட்டும் தனியா பேக் பண்ணிட்டு இருக்கீங்க.” 
“இந்த வீட்டு மகாராணி உங்கக்கூட வந்துட்டா இங்க இருக்குற அரசர் சிங்கிதான் அடிக்கணும்… உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தா உங்க வீட்டு மகாராணியை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க பார்ப்போம்…”
“நல்லா கேட்டுக்கோ மீரா… உன் அண்ணி நீ இந்த வீட்டு ராணி இல்லைனு சொல்லாம சொல்றாங்க.” வேண்டுமென்றே உசுப்பி விட்டான் கார்த்திக்.
“உங்களுக்கு இதெல்லாம் செட் ஆகலை… சும்மா இருங்க.” என்று அவனை அதட்டியவள் சுஜாவுடன் வெளியேற எத்தனித்தவள் வாயிலை தாண்டும் முன் அவனை திரும்பிப் பார்த்து,
“இப்படியே சமஞ்ச பொண்ணு மாதிரி ரூமுக்குள்ளேயே இருக்க போறீங்களா? வெளிய வாங்க… ராகவ் அப்போவே உங்ககிட்ட பேசனும்னு சொல்லிட்டு இருந்தான். அப்பாவும் வேலை முடிஞ்சி வந்துட்டாங்க. வெளில உட்கார்ந்து பேசிட்டு இருங்க.”
‘அதை ஆறு மாசம் அடைஞ்சி கிடந்த நீ சொல்ற…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அவளை முந்திக்கொண்டு வெளியே சென்று அமர்ந்தான். அப்போதும் தயக்கம் தகரவில்லை. 
“நாளைக்கே கிளம்பணுமோ? எல்லாம் ஜோரா தயாராகிட்டு இருக்கு.” என்று மெல்ல ராகவ் பேச்சை துவங்க, கார்த்திக் தயக்கத்துடன் சிரித்தான்.
“ஆமா… மூணு வேலையும் ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு உங்க தங்கச்சி ஸ்ட்ரிக்ட் ஆடர்.”
கார்த்திக்கின் மெல்லிய வெட்கம் கலந்த பதிலை ரசித்தவாறே ராகவ் பேச்சை வளர்த்தான், “அங்க வீடெல்லாம் எப்படி? அவங்க கொடுத்திருக்க க்வார்டஸ் போதுமா இல்லை புது வீடு பார்க்கணுமா? நான் வேணும்னா அங்க விசாரிக்க சொல்லவா?”
“வீடு போதுமான்னு மீரா வந்து பார்த்துதான் சொல்லணும்… இப்போ இருக்கிற வீடு பிடிக்கலைன்னா அங்கேயே வேற பார்த்துக்கலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை…”
“எப்போ கிளம்புறதா ஐடியா? ஏதாவது யோசிச்சு வச்சிருக்கீங்களா?”
“அதை நாமதான் சொல்லணும் ராகவா… நல்ல நாள் பார்த்து குடி வச்சிட்டு வருவோம். இவங்க விஷயத்துல எதுவுமே நல்ல நாள் நேரம் பார்த்து நடக்கல… இனி தொடங்குறது நல்ல தொடக்கமா இருக்கட்டும்.” என்று அப்போதுதான் அங்கு அமர வந்த ரகுநாதன் சொல்ல, மரியாதையாய் எழுந்து அவர் அமர சேரை இழுத்து போட்டுவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான் கார்த்திக்.
“வரதன் என்ன சொல்றாரு? அவர் அமைதியா இருக்கிறது தலைக்கு மேல கத்தி தொங்கிட்டு இருக்குற மாதிரியே இருக்கு.” என்று மருமகனைப் பார்த்து அவர் வினவ, தாழ்வாய் உணர்ந்து பின் மீண்ட கார்த்திக்,
“பிரச்சனை எதுவும் வராது மாமா… நீங்க அவரை நினைச்சு கவலைப்படாதீங்க. இனி அவர் உங்க குடும்பத்துக்குள்ள வரமாட்டாரு. இன்னைக்கே சரண்டர் ஆகிடுவாருன்னு நினைக்குறேன். மதியம் அங்க போய் அவரை பார்த்துட்டு வந்தோம்.” என்று தன்பங்கிற்கு அங்கு சென்று வந்ததையும் சேர்த்துச் சொன்னான்.
“நீங்க அங்க போயிருக்கீங்கன்னு தெரிஞ்சதும் பதறிடுச்சு. சேதாரம் இல்லாம நீங்க திரும்பி வந்துட்டீங்கன்னு சுஜா போன் போடவும்தான் மனசு கொஞ்சம் அமைதியாச்சி.” என்று மாமனார் சொல்லவும், தன் தந்தை எந்தளவுக்கு அச்சத்தை இவர்கள் மனதில் விதைத்திருக்கிறார் என்று எண்ணி வேதனைப்பட மட்டுமே முடிந்தது கார்த்திக்கால்.
“போனது போகட்டும்… இனி நடக்குறதை பார்ப்போம். உங்க பக்கம் நெருங்கிய சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா? புதுவீட்டில் நீங்க ரெண்டு பேரும் குடி போகும் போது உங்க கல்யாணம் பத்தி எங்க பக்கம் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் சொல்லி சின்ன விருந்து மாதிரி வச்சிடலாம்னு நினைக்குறேன். அம்முவோட தாய்மாமா அத்தைக்கு கூட உங்க கல்யாணம் பத்தி சொல்லல… அவங்களை மட்டுமாவது கூப்பிடனும் மத்தவங்களுக்கு சுஜா வளைகாப்பு அப்போ சொல்லிக்கலாம். அதான் உங்க நெருங்கிய சொந்தம் இருந்தா சொல்லுங்க மாப்பிள்ளை அவங்களையும் முறையா கூப்டுடுவோம்.” என்று ரகுநாதன் வேண்ட,
‘வீடு வசதியெல்லாம் எப்படின்னு மச்சினர் இதுக்குத்தான் கேட்டிருப்பாரு போல…’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட கார்த்திக், “எனக்கு தெரிஞ்சு எங்க பக்கம் சொந்தம்னு யாரும் இல்லைங்க மாமா… நீங்க உங்களுக்கு வேண்டியவங்களை கூப்பிடுங்க… நாம வேணுமா சின்ன பார்ட்டி ஹால்ல பார்ட்டி வச்சிடலாம்.”
“அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை… அம்மு இதையே எப்படி எடுத்துக்கப் போறான்னு தெரியல… ரெண்டு நாளா நல்லா தெளிவா பேசுறா. அந்த தைரியத்தில் தான் இது மாதிரி சின்னதா விருந்து ஏற்பாடு பண்ணலாம்னு யோசனை. அவகிட்ட இனிதான் இதைப்பத்தி பேசணும்.” என்று ரகுநாதன் மறுக்க கார்த்திக் உடனே மீராவை அழைத்தான்.
“இப்போவே கேட்டுருங்க மாமா… நாம ஒன்னு நினைச்சு எல்லாம் ஏற்பாடு பண்ணி கடைசியில மீராவுக்கு அதில் விருப்பம் இல்லைனா வருத்தமாகிடும்…” என்று கார்த்திக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனின் அழைப்புக்கு வந்து நின்றாள் மீரா.
“என்ன?” என்ற அவளது கேள்விக்கு ரகுநாதன் தன் திட்டத்தை விளக்க, முகத்தை சுருக்கிய மீரா, 
“நான் இப்போதைக்கு அவரோட போகல… நீங்க இதெல்லாம் ஏற்பாடு பண்ணாதீங்க.” என்றுவிட கார்த்திக்கின் முகம் சுருங்கிவிட்டது.
“ஏன் இப்போ வேணாம்? நாங்க இன்னைக்கே உன்னை அங்க போகச் சொல்லல… அடுத்த வாரத்தில் ஒரு நல்ல நாள் பார்த்துதான் எல்லாம் செய்யணும்.” என்று கண்டிப்புடன் உட்புகுந்தான் ராகவ்.
“நான் வேண்டாம்னு சொன்னா வேண்டாம்தான் ராகவ்.” லேசாய் கூட்டுக்குள் இருந்த மீரா எட்டிப் பார்க்க, அனைவருமே கப்சிப். மீண்டும் மலையேறிவிட்டால் இருப்பதும் கெட்டுவிடுமே என்ற பீதி அனைவர் மனதிலும் ஒன்றும் போல எழுந்து அமிழ்ந்தது. 
“சரி சரி எல்லாம் போய் தூங்குங்க… காலையில மாப்பிள்ளை நேரமே ஊருக்கு கிளம்பனும்…” என்று அம்புஜம் கணவருக்கும் மகனுக்கும் கண்காட்ட, புரிந்துகொண்டவர்கள் எழுந்துகொள்ள கார்த்திக்கும் விடைபெற்று அறைக்குச் சென்று மீராவுக்காய் காத்திருந்தான். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவன் அலைபேசிக்கு முக்கிய அழைப்பு ஒன்று வர அதை பேசி முடித்துவிட்டு யோசனையில் இருந்தவன் முகம் உணர்வுகளின்றி வெளிறி இருந்தது.
“என்ன முகமே சரியில்லை? மறுபடி வேதாளம் முருங்கைமரம் ஏறிட்டா?” அவன் கேட்க நினைத்த கேள்வியை அவன் மனையாள் கேட்கவும் புருவம் உயர்த்தியவன் அவளுக்கு பதில் எதுவும் கூறாது மெத்தையில் ஏறி படுத்துவிட்டான்.
கதவை தாழிட்டு வந்த மீராவோ அவனை முறைத்தபடி மறுபுறம் ஏறி அவனருகில் அமர்ந்தாள்.
“போன வாரம் இங்க வந்தப்போ ஏ.சி.பி சார் எங்க தூங்குனீங்கன்னு நியாபகம் இருக்கா? இன்னைக்கு ஜங்குன்னு கட்டில்ல ஏறி படுத்துகிட்டீங்க…” என்று அவன் கையை சுரண்ட,
விருட்டென கையை உயர்த்தியவன் அவளை தன்னருகில் இழுத்துப்போட்டு பின்னிருந்து அவளை அணைத்தப்படி தாடையை அவள் கழுத்தில் பதித்தான்.
“அது போன வாரம் கண்ணம்மா இது இந்த வாரம்… அதுவும் அனுமர் தன் நெஞ்சை கிழிச்சு ராமன் சீதையை காண்பிச்ச மாதிரி ஒருத்தி அவ மனசை என்கிட்ட காண்பிச்சா… அதோட எபெக்ட்தான் எல்லாம்…” என்று அவள் செவியில் கிசுகிசுத்து இதழை மென்மையாய் அவள் மேனியில் உரச, அவன் கையை அழுந்த பிடித்தவள்,
“பேச்சை மாத்தாதீங்க… நான் வந்ததை கூட கவனிக்காம அப்படி என்ன யோசிச்சிட்டு இருந்தீங்க?” என்று பேச்சிலும் அழுத்தம் கொடுக்க, கண்களை இறுக மூடித் திறந்தவன்,
“அவரு போலீசில் சரண்டர் ஆகிட்டாராம்… போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தகவல் வந்துச்சு…” என்று அவன் நிறுத்த,
“முழுசா சொல்லுங்க…” என்று அவனை உசுப்பினாள்.

Advertisement