Advertisement

விக்கிறதுக்கு இவ என்ன பொருளா? இவளும் உங்களை பெத்து வளர்த்த உங்கம்மா மாதிரி, உங்க கூட வாழ்ந்த என் அம்மா மாதிரி ஒரு பொண்ணு தானே. அது ஏன் உங்களுக்கு புரியல? ஒருவேலை நான் பையனா பிறந்ததாலதான் இவ்வளவு ஆணவம் பிடிச்சு ஆடுறீங்களா? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படியெல்லாம் செய்வீங்களா…” உணர்ச்சி வேகத்தில் கார்த்திக் மனதை அழுத்திக் கொண்டிருந்தவற்றை கொட்ட, ஏளனமாக குறுகிட்டாள் மீரா.
“ஏன் செய்ய மாட்டாரு… அவருக்கு பையன் இருக்கிறதால ஆம்பளை பசங்களை விட்டாரா என்ன? சாக்கடை என்னைக்குமே மணக்காது.” 
என்ன முயன்றும் சுப்பிரமணியத்தை சாக்கடை என்று அவள் சொன்ன அந்த வார்த்தை தந்த வலியை கடக்க முடியாது அதில் இருக்கும் உண்மையை புறக்கணிக்கவும் முடியாது அப்படியே அதை ஒதுக்கிய கார்த்திக், முகத்தை அழுந்த துடைத்து, “போதும் இதோட எல்லாம் முடிஞ்சிடுச்சி… என்னை பெத்தவரு செத்துட்டாருங்குற மனநிலைக்கு நான் வந்துட்டேன். நீங்க இனி என்ன நொண்டி சாக்கு சொன்னாலும் அது நீங்க செஞ்ச பாவத்துக்கு ஈடாகாது. ஏதோ மீரா என்கிட்ட சேர்ந்துட்டா, அதனால தப்பிச்சா… இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணி இருக்கீங்களா தெரியல… இதோட எல்லாத்தையும் நிறுத்திட்டு நீங்களே சரண்டர் ஆகிடுங்க… பாவத்துக்கான தண்டனையை நீங்க அனுபவிச்சே ஆகணும். இல்லை சரண்டர் ஆக மாட்டேன்னு முரடு பிடிச்சீங்கன்னா நானே உங்க மேல புகார் கொடுப்பேன், இப்போ நீங்க பேசுனது எல்லாமே என் போனில் ரெக்கார்ட் ஆகியிருக்கு. இந்த ஆதாரத்தோடு இன்னும் சிலதை திரட்டி உங்களை மொத்தமா உள்ள தள்ளுறதை நானே முன்ன நின்னு செய்வேன்.” என்று கார்த்திக் எச்சரிக்கை விடுக்க, விதிர்விதிர்த்து போயிருந்த சுப்பிரமணியம் அவன் அருகே வந்து அவன் மறுக்க மறுக்க அவன் கையை இறுக பற்றிக்கொண்டார்.
“நீயே இப்படி பேசுறீயே… எல்லாமே உனக்காகத்தான்டா செஞ்சேன். என்னை மாதிரி சோறு தண்ணி படிப்புன்னு எதுவுமே இல்லாம வாழ்க்கையில் முன்னேற வழி தெரியாம நீ தத்தளிச்சு கஷ்டப்படக்கூடாதுன்னு தான் செஞ்சேன். உனக்கு எல்லா சௌகரியமும் கிடைக்கனும், நீ ராஜாவாட்டம் வளரணும்னு தான் இதெல்லாமே… நீ ஆசைப்பட்ட எதையாவது நான் வேண்டாம்னு சொல்லி இருக்கேனா? நீ போலீஸ் ஆக விருப்பப்படுறேன்னு தெரிஞ்சும் கூட உன் விருப்பத்துக்கு குறுக்க வராம நான் சும்மாதானே இருந்தேன். இப்போவும் ஒன்னும் குறைஞ்சி போயிடலை நீ என்கிட்ட வரேன்னு சொல்லு நான் எல்லாத்தையும் விட்டுறேன். இல்லைனா நீ எங்கே இருக்கீயோ அங்கேயே நானும் வந்துறேன்…” என்று கெஞ்சியவரை உதறியவன்,
“நல்லா நடிக்குறீங்க… எல்லாத்தையும் விட்டுட்டு வர மாதிரியான காரியமா செஞ்சிட்டு இருக்கீங்க நீங்க? அப்படி எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வர்றவரா இருந்திருந்தா நீங்க அந்த விடுதியில் கூத்தடிச்சிட்டு இருந்திருக்க மாட்டீங்க… அதுவும் நான் அந்த ஊரில்தான் வேலை செய்யுறேன்னு தெரிஞ்சும்கூட அங்கிருந்த விடுதிக்கு வந்து ரம்மு பொண்ணுன்னு கும்மாளம் அடிச்சீங்க. நல்லவன் செய்யுற காரியமா அதெல்லாம்? வயசுக்கு ஏத்த மாதிரியா நடந்துக்குறீங்க? இதோ இப்போ மீரா உங்களை சாக்கடைன்னு உங்களை சொன்னா… அவள் சொன்னதுல எந்த தப்பும் இல்லை, ஆனா அதை கேட்குற எனக்கு எப்படி இருக்கும்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? நீங்க செய்யுற ஒவ்வொரு செயலுக்கான பிரதிபலன் உங்களை மட்டுமில்லை உங்களை சார்ந்த என்னையும் சேரும்… 
நெஞ்சை நிமிர்த்தி இவருதான்டா என் அப்பான்னு மார்தட்டி சொல்ல ஆசைப்பட்ட என்னை தலை நிமிர முடியாதபடி செஞ்சிட்டீங்க. பெரும்பாலும் பணத்தில் புரண்டு வளர்ந்த பசங்கதான் தறிகெட்டு திரிவாங்க, இங்கதான் எல்லாம் தலைகீழ நடக்குது. நல்லவேலை அம்மா தெரிஞ்சோ தெரியாமலோ உங்களை அண்ட விடாம என்னை வளர்த்துட்டாங்க. இல்லைனா உங்களை பார்த்து வளர்ந்து நான் என்னென்ன அக்கிரமம் எல்லாம் செஞ்சிருப்பேனோ!” என்று அவரை குறுக்கிட விடாமல் பேசி முடித்தவன் அவரின் முகம் பார்க்கக்கூட வெட்கி வேறொங்கோ பார்வை பதித்தான்.
“அது… அது தெரியாம நடந்தது கார்த்தி… நீ வீட்டை விட்டு போன பிறகு எனக்கு மனசே சரியில்லை. நான் போன் போட்டாகூட நீ எடுக்கல. நீ இல்லாம இந்த வீட்டுக்கு வர கூட எனக்கு பிடிக்கல. எல்லாமே சேர்ந்து என்னை அழுத்துச்சு. எங்கேயாவது ஓய்வா இருக்குற மாதிரி இடத்துக்கு வண்டியை விடுன்னு டிரைவர்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் கண்ணசந்துட்டேன். அவன் அந்த ரெசார்ட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான்…”
“நல்லா சுத்துறீங்க ரீலை… நீங்க அங்க அடிக்கடி போற ஆள்தானே? அதுவும் ரெகுலர் கஸ்டமர்? இதை கேக்கவே காதுக்கு குளிர்ச்சியா இருந்துச்சி…” என்று வெறுப்பை உமிழ்ந்தவன் மீராவின் கையை அழுந்த தன்னுள் பற்றிக்கொண்டு,
“நல்லா கேட்டுக்கோங்க. உங்களுக்கு இன்னைக்கு ராத்திரி வரைதான் டைம். அதுக்குள்ள தானா சரண்டர் ஆகுறீங்க இல்லைனா நான் வேற மாதிரி நடவடிக்கை எடுப்பேன். இன்னையோட உங்க மேல பையித்தமா பாசம் வச்சிருந்த உங்க மகன் செத்துட்டான்னு நினைச்சிக்கோங்க. அவன் என்னைக்குமே திரும்ப வரமாட்டான். அவனுக்கு செய்யுற கடைசி காரியமா நினைச்சு போலீசில் சரணடஞ்சிருங்க… எனக்கு இனி உறவுன்னு இருந்தா அது மீரா மட்டும்தான்…” என்றுவிட்டு அவரை ஏறெடுத்தும் பார்க்காமல் மீராவை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.
“தம்பி… கார்த்திக் தம்பி…” என்று கத்திக்கொண்டே வாயில் வரை ஓடிவந்த முத்தம்மா, மீரா நிற்கவும் அவள் கையில் கார்த்திக் அம்மாவின் புகைப்படத்தை கொடுத்தார்.
“அம்மாவை இங்கேயே விட்டுட்டு போறீங்களே… அம்மாவுக்கு எல்லாமே தெரியும் தம்பி. அவங்களுக்கு போறதுக்கு வேற போக்கிடமும் இல்லை. உங்களை தனியாளா நின்னு வளர்க்கிற தைரியமும் இல்லை. வேற வழி இல்லாம எதையும் கண்டும் காணாம ஐயாவை தட்டிக் கேட்கவும் முடியாம மடிஞ்சிட்டாங்க. இந்த வீட்டு காசில் சொகுசா வளர்ந்துட்டோமேன்னு நீங்க என்னைக்குமே கவலைப்படாதீங்க… இதெல்லாம் உங்க கையை மீறி நடந்தது. ஆனா தன்னால முடியாததை நீங்க செய்யணும்னு உங்களை பார்த்து பார்த்து வளர்த்த உங்கம்மாவுக்கு நீங்க நியாயம் செய்யணும் தம்பி. செய்வீங்கன்னு எனக்கு தெரியும், ஆனா இதெல்லாம் சொல்ல வேண்டியது என் கடமை. இதை ஏன் இவ்வளவு நாள் சொல்லலைன்னு நீங்க என் மேல கோபப்படலாம்… ஆனா அம்மாவே இதை உங்ககிட்ட ஏதோ ஒரு காரணத்துக்காக சொல்லாம மறைச்சி வச்ச பிறகு நான் எப்படி சொல்ல முடியும்? எங்கிருந்தாலும் நல்லா இருங்க. அம்மாவோட ஆன்மா எப்போதும் உங்களையே சுத்தி வந்து உங்களுக்கு வழி காட்டும்…” என்று வாழ்த்த கணத்த மனதோடு அங்கிருந்து வெளியேறினர் இருவரும்.
இறுக்கத்துடன் தன்னருக்கில் கண்மூடி அமர்ந்திருக்கும் கார்த்திக்கை பார்த்த மீரா, கார்த்திக் அன்னையின் புகைப்படத்தை ஒருக்கரத்தால் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கார் சீட்டில் பதிந்திருந்த அவன் கரத்தை அழுந்த பற்றினாள் தன் மறுகரம் கொண்டு. 
அவளின் தொடுதலில் உணர்வு பெற்றவனாக கண்களில் வலியுடன் மனைவியை ஏறிட்ட கார்த்திக், “எப்படி அம்மா அவரோட இருந்தாங்களோ? துரோகம் செய்யுறாருன்னு தெரிஞ்சே ஏன் அவர்கூட இருந்தாங்க? என்கிட்ட முன்னவே சொல்லி இருக்கலாம். அவரை எதிர்த்து நின்னுருக்கலாம். எனக்கு சொல்லிக்கொடுத்ததை அவங்க பாலோ செஞ்சிருக்கலாம்.” என்று வருந்த, 
“அவங்களுக்கு என்ன கஷ்டமோ? வெளில வரமுடியாத சூழலில் இருந்திருப்பாங்க. இப்போ இருக்கிற மாதிரி ஒரு உறவிலிருந்து வெளியே வந்து அதை எதிர்க்கிற சுதந்திரமும் தைரியமும் அப்போ கிடையாது. கல் ஆனாலும் கணவன்னு சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவங்க அவங்க ஜெனரேஷன். முடிஞ்சதை நாம மாத்த முடியாது. 
ஆனா ஒன்னை கவனிச்சீங்களா உங்கப்பா உங்கம்மா பத்தி வாயை திறக்கவே இல்லை… அவர் உங்களை பத்தி மட்டுமே பேசுனாரு. மேபீ உங்கம்மாவுக்கு விஷயம் தெரியுங்குறது அவருக்கும் தெரிஞ்சிருக்கும். ரெண்டு பேருமே உங்களுக்காக பட்டும்படாம இருந்திருப்பாங்க. எனக்கொரு சந்தேகம், உங்க சொந்தக்காரங்க யாரும் இல்லையா? யாரும் உங்கப்பாவை கேள்வி கேட்க மாட்டாங்களா இதெல்லாம் தெரிஞ்சா?” என்று யோசனையாய் கேட்டாள் மீரா.
“ம்ச்… இல்லை. அம்மா என் தாத்தா பாட்டிக்கு ஒரே பொண்ணு. அவங்க நான் பிறக்குறதுக்கு முன்னாடியே இறந்துட்டாங்களாம். அப்பாவும் ஏதோ அவங்க அத்தையோட வளர்ப்பில் வளர்ந்தவருன்னு அம்மா ஒருமுறை சொல்லி இருக்காங்க. எங்களோட பூர்வீகம் கொங்கு பக்கமாம், அவ்வளவுதான் எனக்கு தெரியும். நாங்களும் எங்கேயும் போனதில்லை. எங்களை பார்க்கவும் யாரும் வந்தது இல்லை.” 
“சரி விடுங்க… போனது போகட்டும். இனி என்ன செய்ய முடியும்னு பார்ப்போம்…”
“கண்டிப்பா… எனக்கு தெரிஞ்சே அம்மாவுக்கும் உனக்கும் அவரு அநியாயம் பண்ணி இருக்காரு. அதுக்கான தண்டணையை அவர் அனுபவிக்கணும்…”
“அப்போவே கேட்கணும்னு நினைச்சேன்… அதென்ன என் கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னு அவர்கிட்ட கேள்வியா கேட்டுட்டு நீங்க அவரை பதில் சொல்லவே விடல?”
“என்னத்தை சொல்லிடுவாரு… அவர் சொன்னாலும் அது அவர் செஞ்ச பாவத்தை நியாயப்படுத்துற மாதிரிதான் சொல்லுவாரு. அவர் சொல்றதால எதுவும் மாறப் போறதில்லை. தப்புக்கு கூட நியாயமான காரணம் ஏதாவது இருக்க வாய்ப்பிருக்கு. அவர் செஞ்சது பாவம். மன்னிப்பே இல்லாத பாவம். பாவத்துக்கு காரணம் கிடையாது கண்ணம்மா…” என்று அவன் வேதனையுடன் முடிக்க, அவனை நெருங்கி அமர்ந்து அவன் தோள் சாய்ந்தாள் அவன் கண்ணம்மா.
“இதுவே வேற யாராவது இருந்தா இந்நேரம் நான் ஆத்திரத்தில் அவரை சுட்டு கொன்னிருப்பேன்… அந்தாள் மேல வச்ச பாசம் கொஞ்சம் நஞ்சம் மீதி ஒட்டிட்டு இருக்கு, அவர் சட்டை காலரை கூட புடிச்சு என்னால கேள்வி கேட்க முடியலை… ச்சை…” என்று விரல்களை மடக்கி காற்றில் குத்து விட்டவன், இறுகி அமர்ந்திருந்தான்.
“அப்போ பாண்டியனை சுட வேண்டியது தானே? அவனை ஏன் விட்டு வச்சிருக்கீங்க?” என்று அவள் கேள்வியாய் நிமிர்ந்து பார்க்க,
“அடுத்து அவன்தான்… என் கையில சிக்கட்டும் அவன்… அப்புறம் இருக்கு. இப்போ உள்ள பாதுகாப்பா கலி திண்ணுட்டு இருக்கான்.” என்று முஷ்டி இருக்கினான் கார்த்திக்.
முறுக்கேறிய அவன் புஷ்டியில் பட்டும் படாமல் இதழை ஒற்றி எடுத்தவள், “சட்டம் தண்டனை கொடுக்கட்டும். நீங்க எதுவும் செய்ய வேண்டாம்.”
“ம்ச்… அவனை அப்படியே விடமுடியாது.”
“யார் விடச்சொன்னா? நமக்கு கொடைச்சல் கொடுத்த வரதனுக்கு முடிவு நெருங்கப் போகுது. அடுத்து இந்த பாண்டியன் தான்… சட்டத்தில் இருந்து தப்பிச்சா அவனுக்கான தண்டனையை நான் கொடுப்பேன்… நான்தான் கொடுப்பேன்… உயிரோட இருந்தும் நடைபிணமா அவன் சுத்தனும்…” என்று சூளுரைத்தவள் கரம் தானே மேல் எழும்பி அவள் இடக்கன்னத்தில் பதிந்தது.

Advertisement