Advertisement

“என்னடி அம்மு இது? அந்தாளு என்ன லூசா? அவர் மேல எப்படி அவரே புகார் கொடுக்க முடியும்?”
“அதுதானே… அவருக்கு என்ன இந்த அந்நியன் அம்பி மாதிரி மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்சார்டரா?” என்று சுஜாவும் புருவம் சுருக்க,
“அவர லூசுன்னு சொல்ற நம்மளத் தான் லூசாக்க இப்படி பண்ணியிருக்காரு… பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு. அப்படி மாட்டும்போது கூட தான் மாட்டிடக் கூடாதுங்குற எண்ணத்துல புத்திசாலித்தனமா செஞ்சிருக்காரு…
என்ன புரியலையா… அவரு நமக்கு ஒரு விசிடிங் கார்ட் கொடுத்தாரே, அதுல வரதங்குற பேருக்கு கீழ ஒரு கம்பெனி பேர் இருந்துச்சே கே.எஸ்னு, அது ஊருக்கே தொழிலதிபர் சுப்பிரமணியனா தெரியுற அந்த நல்லவர் வேஷத்தில் லீகலா பதிவு செஞ்சு பிஸ்னஸ் செய்யுற பெரிய கம்பெனி.  இப்போ வரதன் அப்பிடிங்கிற ஆளு அவர் கம்பெனி பெயரை யூஸ் பண்ணி சட்டத்துக்கு புறம்பான வேலையில் ஈடுபடுறதாகவும் அந்த வரதன் செய்யுற காரியத்தால தன்னோட பெயருக்கும் தன்னுடைய கம்பெனிக்கும் களங்கம் எற்படுறதாகவும் புகார் கொடுத்திருக்காரு. அதோட வரதனை கண்டுபிடுச்சி தக்க நடவடிக்கை எடுக்கணும்னு கேட்டிருக்கார். சோ, இப்போ அவர் புகார்படி பார்த்தால் வரதன் அப்டீங்குற ஆளு இன்னொருத்தர். வரதன் சுதந்திரமா வெளில சுத்திட்டு இருக்காரு. அவரை போலீஸ் புடிச்சு உள்ள போட்டு சுப்பிரமணியத்துக்கு நியாயம் வாங்கிக் கொடுக்கணும்.
இப்போ நாமளே வரதன் மேல புகார் கொடுத்தாலும் அதுல யாருமே சிக்கமாட்டாங்க… அப்படியும் சிக்குற நிலைமை வந்தா காசு கொடுத்து வேற ஆள் செட் பண்ணி அவனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு இவரு தப்பிச்சிடுவாறு. இவர் செஞ்ச எல்லா தில்லுமுல்லும் வரதன் செஞ்சதா காட்டத் தான் இவ்வளவும்…” என்று அவள் சொல்லிமுடிக்க மலைப்பாய் இருந்தது அப்பெண்களுக்கு.
“விடுதி எல்லாம் நடத்துறாருன்னு சொல்ற, அப்போ அன்னைக்கு அந்த விடுதியில் பொண்ணுங்களோட கூத்தடிச்சது அவர்தான்னு கேமராவில் பதிவாகியிருக்குமே…” என்று கேள்வி எழுப்பியது சுஜாவே.
“பதிவாகி இருக்கும்தான்… ஆனா ஹோட்டல் அவர் பேரில் இல்லையாம். யாரோ பினாமி பேருல இருக்காம். அவர் பிஸ்னெஸ் சம்மந்தமா அந்த ஹோட்டலுக்கு வந்ததாகவும், அவருக்கும் அங்க நடக்குற எந்த நிகழ்வுக்கும் சம்மந்தமில்லைன்னு சொல்லி இருக்காரு. அதோட, பணமும் விளையாட சுப்பிரமணியன் அந்த பப்புல பச்ச தண்ணி குடிக்க வந்தாருன்னு சொல்லி கேஸிலிருந்து வெளிய வந்துட்டாரு. இந்த வாரத்துக்குள்ள அந்த ரிசார்ட்டில் பார்ட்டி கூட நடக்கல, அன்னைக்கு அந்த ரிசார்ட்டே க்ளோஸ் ஆகி இருந்துச்சுன்னு போலீசை விட்டே சொல்ல வச்சிடுவாங்க.” என்று ஆதங்கமாய் முடிக்க,
“இந்த நட்சத்திர விடுதி மேட்டர் ஓகே… ஆனா வரதனை நாம பார்த்திருக்கோமோ. நமக்கு அவரைத் தெரியுமே, நாம கேஸ் போட்டு சாட்சி சொல்லலாம் தானே?”
“சொல்லலாமே… ஆனா நாம சொல்றதால மட்டும் அவர்தான் வரதன்னு நிரூபிக்க முடியாது…” என்று மீரா மறுக்க, சுஜா விடுவதாய் இல்லை.
“அவர் நம்ம வீட்டுக்கு ரெண்டு தடவை வந்திருக்காரு, அதை நம்ம தெருவுல இருக்கிறவங்க கூட பார்த்திருப்பாங்களே… அவங்களும் சாட்சி சொன்னா அவர்தான் வரதன்னு நிரூபிச்சிடலாமே…”
“ஹாஹா… அண்ணி!!! என் பையனுக்கு இந்த வீட்டு பொண்ணு மீராவை பிடிச்சிருந்தது. அதான் கல்யாணம் பேச வந்தேன்னு ஈஸியா சொல்லி தப்பிச்சிடுவாரு… அவரை கூட்டிட்டு வந்த அந்த தரகர் வாயை அடைக்குறது எல்லாம் வரதனுக்கு கைவந்த கலை… வீ ஹேவ் நோ சாய்ஸ்… அவரே அவர் வாயால எல்லாத்தையும் ஒத்துக்கணும். ஏன்னா அவர் பையனான கார்த்திக்கே சுப்பிரமணியனும் வரதனும் ஒண்ணுன்னு சொன்னாகூட ஈஸியா கேஸை உடச்சிடுவாரு. ஹீ ஈஸ் பார்ன் கிரிமினல்… அவர் இவ்வளவு கிரிமினல் புத்தியோட இருப்பாருன்னு கார்த்திக் நேத்து இந்த கேஸ் பத்தி சொன்ன பிறகுதான் எனக்கே புரிஞ்சுது…”
“இவ்வளவு கீழ்த்தரமான ஆளு வரதங்குற பெயரை நிறைய பேர்கிட்ட யூஸ் பண்ணி இருப்பாருதானே… அவங்களை கண்டுபிடிச்சு சாட்சியா கூட்டிட்டு வந்தா கேஸ் நிக்கும்ல?” என்று இம்முறை அம்புஜம் கேட்க, தீர்க்கமாய் பார்த்த மீரா,
“அவர் பையன் கார்த்திக் என் கழுத்துல தாலி கட்டியிருக்கிற ஒரே காரணத்தால தான் நம்ம குடும்பம் இன்னைக்கு வரை உயிரோட இருக்கு. இவ்வளவு நாள் நம்மள விட்டு வச்சிருக்காரு… அவரோட வீக்னெஸ் கார்த்திக்தான்… அதை லேசா தொட்டா போதும் மனுஷன் தானா வலையில் சிக்கிடுவாரு…” என்று வில்லங்கமாய் சொன்னவள், வீட்டில் உள்ளவர்களின் அறிவுரையை காதில் வாங்கிக்கொண்டு கார்த்திக்கை அழைத்துக்கொண்டு அன்று மதியமே கார்த்திக் இத்தனை நாள் வளர்ந்து வாழ்ந்த பங்களாவிற்குச் சென்றாள்.
பாவத்தில் சேர்த்து செல்வத்தில் கொழுத்து செழிப்பாய் வீற்றிருக்கும் பங்களாவை ஏறெடுத்துப் பார்த்தவள் அன்னநடையிட்டு தயக்கத்துடன் வெளி கேட்டிலிருந்து வீட்டு வாயிலுக்கு நடக்க, கார்த்திக் அவளுக்கு சற்றும் சலைக்காது அடி மேல் அடி வைத்து இத்தனை வருடம் வாழ்ந்த நினைவுகளை அசைப்போட்டபடி முன்னேறினான்.
“தம்பி வாங்க வாங்க… இங்க வராமலே இருந்துடுவீங்களோன்னு நினைச்சேன். இப்போவாவது வந்தீங்களே… இது உங்க வீடு தம்பி, நீங்களும் பாப்பாவும் சந்தோஷமா குடும்பம் நடத்துறதை அம்மாதான் பார்க்க முடியாம போயிட்டாங்க, ஆனா அவங்க ஆன்மா இங்கதான் உங்களுக்காக இருக்கும்… நீ வந்து விளக்கேத்தனும்னு தான் இந்த வீடு காத்திட்டு இருக்குமா… வலது கால் எடுத்து வச்சி உள்ள வா, இருங்க அதுக்கு முன்ன ஆரத்தி எடுத்துடுறேன்…” இத்தனை வருடத்தில் முத்தம்மாவின் குரல் இன்றுதான் அவ்வீட்டில் அதிகம் ஒளித்திருக்கும். எப்பொழுதும் நிதானமாய் குடும்பத்திற்குள் மூக்கை நுழைத்திடாதவர் இன்று ஆர்வத்தில் அதிகம் பேசியிருந்தார்.
“இங்க உரிமையோட வரலை முத்தம்மா… அவரை பார்க்கத் தான் வந்திருக்கோம், பார்த்துட்டு கிளம்பிடுவோம். நீங்க இதெல்லாம் செய்யாதீங்க…” என்று கார்த்திக் மறுக்க, அவன் மனையாளோ,
“இல்லை… நீங்க ஆரத்தி எடுத்துட்டு வாங்க. நாங்க இங்கேயே நிக்குறோம்…” என்று அனுமதி கொடுத்துவிட, அவசரமாய் ஆரத்தி கரைக்க உள்ளே சென்றார் முத்தம்மா…
“என்னடா பண்ற நீ? அவரோட காசுல சேர்ந்த எதுவுமே வேண்டாம்னு தானே சொன்ன… இப்போ ஏன் இதெல்லாம் செய்யணும்னு சொல்ற?” முத்தம்மா நகர்ந்ததும் கார்த்திக் மீராவின் காதில் கிசுகிசுத்தான். தோட்டத்தில் வேலை செய்பவர்கள், வாயில் காவலாளி என அங்கு வேலை செய்பவர்களின் பார்வை முழுதும் இவர்களை சுற்றி இருக்க, மெல்லவே பேசினான் கார்த்திக்.
“நான் ஆரத்தி மேளதாளத்தோட இங்க வாழ வரலை… இப்போ முத்தம்மா சொன்னாங்கல்ல உங்க அம்மாவோட ஆன்மா உங்களுக்காக இங்கேயே இருக்கும்னு, அவங்களை கூட்டிட்டு போகலாம்னு தான் எல்லாத்துக்கும் சம்மதிச்சேன். என்னதான் வரதன் பாவக்காசில் இந்த வீட்டை கட்டியிருந்தாலும் உங்கம்மா நிச்சயமா இந்த வீட்டை கோவில் மாதிரி பூஜை புனஸ்காரத்தோடு பராமரிச்சிட்டு இருந்திருப்பாங்கன்னு தோணுது. அவங்களுக்காக இதை செய்யலாம் தப்பில்லை…” என்ற மீராவை காதலோடு நோக்கியவன் கண்களில் காதலுக்கு போட்டியாய் பெருமிதமும் இருந்தது.
அதற்குள் ஆரத்தி தட்டோடு வந்த முத்தம்மா அவர்களை கிழக்கு நோக்கி நிற்கச் சொல்லிவிட்டு ஆலம் சுத்தாமல் தயக்கமாய் மீராவைப் பார்க்க, ஒரிரு நொடி தவித்த மீரா பின் மெல்ல தன் முகத்தை மூடியிருந்த புடவை முந்தியை விலக்கிவிட்டாள். அதை கண்டும் காணாதது போல் முத்தம்மா ஆலம் சுற்றி முடிக்க, கார்த்திக் கரத்தை இறுக பற்றிக்கொண்டு அவ்வீட்டினுள் வலது கால் முன்னெடுத்து வைத்து நுழைந்தாள் மீரா.
உள்ளே நுழைந்ததும் அவ்வீட்டின் செல்வக்கொழிப்பை சற்றும் சட்டை செய்யாது, “இங்க பூஜையறை எங்க இருக்கு?” என்று கேட்டிட, கார்த்திக் அவளை அழைத்துச் சென்று பூஜையறையைக் காட்டினான்.
அவ்வறையை மட்டும் முழுதும் நோட்டமிட்டவள் கார்த்திக் அம்மாவின் புகைப்படம் அருகே சென்று ஓரிரு நொடி அதை உன்னிப்பாய் பார்த்தாள். அவரை அப்படியே உரித்து வைத்தார் போல் ஆண்மகனாய் வளர்ந்து நிற்கும் கார்த்திக்கை கைநீட்டி அருகே அழைத்து,
“இவங்க ஆசீர்வாதம் உங்களுக்கு வேண்டாமா? தள்ளியே நிக்குறீங்க…” என்றுவிட்டு விளக்கேற்றியவள் கண்மூடி வேண்டுதல் வைத்துவிட்டு கார்த்திக்கோடு நமஸ்கரித்து எழுந்தாள்.
“காபி போடவா இல்லை ஜூஸ் போடவா? மதியம் சாபிட்டீங்களா?” என்று முத்தம்மா மீரா செய்தவற்றை பார்வையாளராய் மாறி கவனித்துவிட்டு அவர்கள் பூஜையறை விட்டு வெளியே வந்ததும் கேள்வி எழுப்ப,
“எனக்கு இங்க மாட்டியிருக்கிற அத்தை போட்டோ மட்டும் போதும். அவங்க இருக்க வேண்டிய இடம் இதில்லை… சின்ன வீடா இருந்தாலும் அவங்க பையன் நேர்மையா படிச்சு உழைச்சி யாருக்கும் கெடுதல் செய்யாம தன்னோட சொந்த காலில் இப்போ காவல் குடியிருப்புல இருக்காரு… அவங்க இடம் அதுதான்.” என்று தீர்க்கமாய் சொல்ல, முத்தம்மா சொல்வதற்கு எதுவுமில்லை என்று அமைதியாய் தலையசைத்தார். 
“இன்னைக்கு நீ சிக்ஸரா அடிச்சிட்டு இருக்க கண்ணம்மா… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… உன்னை நான் நல்லபடியா பார்த்துக்கணும்னு நினைச்சேன் ஆனா உண்மையை சொல்லணும்னா நீதான் இப்போ என்னை பார்த்துக்கிற…” என்று அவன் நெகிழ்ந்து சொல்ல, விரக்தியாய் சிரித்தவள்,
“வாழ்க்கையோட கசப்பை இப்போதான் நீங்க அனுபவிக்குறீங்க… நான் உங்களைவிட அதில் சீனியர், சோ அதுக்கேத்த மனதிடம் வந்திருக்கு. ம்ச்!என்ன நடுவில் கொஞ்சம் ட்ராக் மாறிட்டேன்…” என்று பதில் கூறிக்கொண்டே அந்த வீட்டினை அளந்தாள்.
“நீ ஸ்ட்ராங் கண்ணம்மா… நான் உனக்கு ஒரு புஷ் (push) கொடுத்தேன் நீ பழையபடி ஆகிட்ட. சரி அதைவிடு, மேலதான் என் ரூம் இருக்கு… வா உனக்கு காட்டுறேன்…” என்று கைபிடித்து அவளை அழைத்துச் சென்றவன் அவளுக்கு தன் அறையை முதலில் சுற்றிக்காட்டிவிட்டு பின் வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்தான்.
“உங்களுக்கு முக்கியமா தேவைப்படுற பொருள் ஏதாவது இருந்தா எடுத்துட்டு வாங்க, நான் அப்படியே சும்மா சுத்தி பாக்குறேன். உங்க சர்டிபிகேட் எல்லாம் மறக்காம எடுத்துக்கோங்க…” என்று அவனுக்கு நினைவுப்படுத்த,
“ஒரு அஞ்சு நிமிஷம் இரு, நானும் வந்துறேன். நீ தனியா சுத்திப் பார்க்க வேண்டாம்…” என்று கார்த்திக் மறுத்தான்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… இந்த வீட்டில உங்களுக்கு இதுதான் கடைசி நாள்… அதனால் எதுஎது தேவையோ அது எல்லாத்தையும் எடுத்துக்கோங்க, அத்தை கூட எடுத்த போட்டோஸ் இருந்தாலும் மிஸ் பண்ணாம எடுத்துக்கோங்க…” என்று ஏதேதோ சொல்லி அவனை அறைக்குள் அனுப்பிவிட்டு இவள் அவ்வீட்டை சல்லடை செய்து அவள் வீட்டில் தொலைந்து போனதாய் நினைத்த தன் ஹார்ட் டிஸ்க் மற்றும் ப்ராஜெக்ட் தீசிசை சுப்பிரமணியன் அறையிலிருந்து கண்டெடுத்தாள். 
‘இதெப்படி இங்கே?’ என்று கேள்வி எழுந்த நொடி அனைத்தும் புரிந்துவிட சீ என்றானது அவளுக்கு. ஒரு முடிவுடன் அதை கையோடு எடுத்துக்கொண்டு கீழிறங்கியவள் கார்த்திக்கிடம் செய்தியை சொல்லாது அவனை மறைவாய் வேறொரு அறையில் இருக்கச் சொல்லிவிட்டு கால் மேல் கால் போட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள்.
இனி எதுவும் என்னை பாதிக்காது என்ற தோரணையில் திண்ணமாய் அமர்ந்திருந்தவளை ஆவேசத்துடன் உள்ளே நுழைந்து நெருங்கினார் சுப்பிரமணியம்.
“வாங்க வாங்க… மிஸ்டர். வரதன் இல்லையே சுப்பிரமணியமா… ஆமா நீங்க யாரு?” என்று தெனாவட்டாய் கேள்வி எழுப்பியவள் அமர்ந்த இடத்திலிருந்து அசையாது காலை மட்டும் ஆட்ட, வெறியேறிய சுப்பிரமணியம் வரதனாய் தன் அழுக்கை கையிலெடுத்தார்.
“நீ யாரு என் வீட்டு நடுஹால்ல வந்து உட்கார்ந்து கேள்வி கேட்க?” 
“அதுக்குள்ள மறந்து போச்சா… இதோ என் கழுத்துல இன்னும் மஞ்சளோட ஈரம் கூட காயாம இருக்கு பாருங்க… அதை கட்டுனது யாருன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்குறேன்.” என்று எள்ளலாய் பேசியவள் கைகளை கட்டிக்கொண்டு அவரை புழுவைப் பார்ப்பது போல் முகம் சுழுத்துப் பார்க்க, ஆத்திரம் தலைக்கேறிய வரதனோ அவளை நெருங்கி,
“என் பையன் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டு எவ்வளவு திமிர் இருந்தா இங்கேயே வந்திருப்ப… நீ இருக்குற லட்சணத்துக்கு ராஜாவாட்டம் வளர்ந்திருக்கிற என் பையன் கேக்குதா உனக்கு…” என்று பல்லை கடித்தவர் அவள் கழுத்தை நெரிப்பது போல் கையை கொண்டுபோக, அசராது எழுந்து நின்றவள்,
“கழுத்தை நெருச்சு கொல்லப் போறீங்களா… ரொம்ப சந்தோசம், ஆனா உங்களுக்கு ஒரு சந்தோசமான விஷயம் சொல்லவா… ஊப்ஸ், அதுதூ… உங்களை கொல்லாம கொள்ளும்…” என்று நக்கல் தெரித்தது மீராவிடம்.
“ஏய்…” என்ற வரதனின் கத்தலை பொருட்படுத்தாது முன்னேறியவள்,
“பார்க்கவே சகிக்காத, நாலனாக்கு தேராத அருவருப்பான முகம்னு சொன்னீங்களே மிஸ்டர் வரதன்… அதே முகத்தை… இப்போ கழுத்தை நெரிக்க வரீங்களே… அதே கழுத்தை உங்க அருமை மகன் அதான் ராஜாவாட்டம் வளர்ந்த மகன் ஆசையா, எப்படி ஆசையா… நல்லா நோட் பண்ணிகோங்க வரதன்…” அவள் பேச பேச நரம்புகள் புடைத்து கண்கள் சிவந்து ஆத்திரம் தலைக்கேறி நிற்பவரைக் கண்டவள் திருப்தியுடன், “ஆசையோடு பார்த்தாருனு சொல்ல வந்தேன்…” என்று இழுக்க, அவ்வளவுதான் அங்கிருந்த கண்ணாடி மேசை சுக்கு நூறாய் உடைந்து அவரது குருதி கண்ணாடியின் சிதறிய துண்டுகளில் தன் செம்மையை பரவவிட்டிருந்தது.

Advertisement