Advertisement

*13*
“என்ன சொன்னாங்க? வீட்டுல இருக்காரா இல்லையா?” 
அலைபேசியில் பேசி முடித்துவிட்டு யோசனையுடன் புருவம் சுருக்கி நிற்பவனை நெருங்கியவள் அவன் தோள் தட்டி கேள்வி எழுப்ப, 
“வெளியூர் போயிருக்காராம்… வர ஒருவாரம் ஆகுமாம்…” என்றான் நெற்றி சுருக்கி. இரவு வெகுநேரம் பேசிவிட்டு தாமதமாய் தூங்கியதன் விளைவாய் காலையும் தாமதமாய் எழுந்து குளித்து காலை உணவை மட்டுமே முடித்திருந்தனர். முடித்த கையோடு அறைக்குள் அடைந்துகொள்ள, பேச்சுக்கள் முழுதும் தங்கள் வாழ்க்கையை ஆட்டிப்படைத்தவர் பற்றியதே… 
“ஓ… நல்லா பிளான் பண்ணி எஸ்கேப் ஆகியிருக்காரு. அவரை நாம மாட்ட வைக்க முடியாது, ரொம்பத் தெளிவா முதலில் இருந்தே பிளான் பண்ணி எல்லாமே செஞ்சிட்டு இருக்காரு. அதனால அவருக்கு எதிரான ஆதாரம் அவர் வாயிலேந்தே வந்தால் தான் உண்டு. ஆபீஸ்ல ஏதாவது டீடைல்ஸ் எடுக்க முடியுமா? அவரோட க்ளோஸ் சர்க்கில் பிரெண்ட்ஸ் இல்லை அவரோட எதிரியை உங்களுக்குத் தெரியுமா?”
“நான் ஆரம்பத்திலிருந்தே ஆபீஸ் பக்கம் போனதே இல்லைடா. அடிக்கடி அவர் என்னை ஆபிஸ் வா… வந்து எல்லாம் தெரிஞ்சிக்கோன்னு கூப்பிடுவாறு, ஏனோ அம்மா என்னை அவர்கூட வெளில விட்டதே இல்லை. படிக்கணும், க்ளாஸ் இருக்கு, அப்பா பிசி டிஸ்டர்ப் பண்ணக்கூடாது இப்படித்தான் ரெண்டு பேர்கிட்டேயும் மாத்தி மாத்தி சொல்லுவாங்க. ஒரு கட்டத்துக்கு அப்புறம் அதுவே எனக்கு பழகிடுச்சி. வேலைக்கு போக ஆரம்பிச்ச அப்புறம் அப்பாவை பார்க்க ரெண்டு மூணு தரம் போயிருக்கேன் மத்தபடி அங்க வேலை செய்யுறவங்க யாரையும் எனக்குத் தெரியாது.” என்று அவன் கூறவும் அதிர்ச்சியாய் அவனை ஏறிட்டவள்,
“அப்போ உங்க அம்மாவுக்கு வரதனா அவர் பண்ற தில்லுமுல்லு எல்லாம் தெரிஞ்சிருக்குமோ? அதுதான் உங்களை உங்க அப்பாகிட்ட நெருங்க விடாம அவரோட வாடையே இல்லாம வளர்த்திருப்பாங்களோ? நீங்க எப்படி போலீஸ் ஆனீங்க? உங்களை பெத்த அந்த உத்தமரு எப்படி உங்களை போலீஸ் ஆக விட்டாரு?” என்று அவள் கேட்க, அதுவரை இந்த கோணத்தில் யோசித்திராதவன் தன் நினைவடுக்குகளை தட்டி எழுப்பி அனைத்தையும் ஒப்புமைபடுத்திப் பார்த்தான். 
தன் தாய்க்கு விஷயம் தெரிந்திருக்குமோ அதனால்தான் முடிந்தளவு தன்னை அந்த மனிதரிடமிருந்து விலக்கியே வளர்த்தாரோ?ஆனால் விலக்க விலக்க இவன்தான் அவரின் பாசத்திற்கு ஏக்கமாகி பின் அடிமையாகிவிட்டானோ! என்று யோசனைகள் புதிதாய் முளைக்க, இன்னொன்றும் அதற்கு நேர்மாறாய் தோன்றியது. சுப்பிரமணியன் எந்த ஒரு தருணத்திலும் வரதன் என்ற முகத்தை அவனிடம் காட்டியதில்லை மாறாக அவனின் ஆசைக்கு பெரிதாய் எதிர்ப்பு கூட கூறியதில்லை, காவல் அதிகாரி வேலைக்கு தேர்வெழுதிய சமயத்தில் கூட தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தாரே ஒழிய என்றும் அவரின் எண்ணத்தை அவனிடம் திணிக்கவில்லையே… எந்த முகம் அவரது உண்மையான முகம்? தன் மேல் காட்டும் பாசம் உண்மையா பொய்யா? உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரது அன்பிற்கு முன் தான் பலகீனமாகிவிடுவோமோ என்ற ஐயமும் எழாமல் இல்லை.
அவன் யோசிக்கட்டும் என்று அமைதியாய் அவன் முகம் பார்த்து அமர்ந்திருந்தவள் அருகில் இருந்த மேசையில் கிடந்த அவனது வேலேட்டை எடுத்துப் பார்த்தாள். உள்ளே மூன்று ஐநூறு ரூபாய் தாள்களோடு சில நூறு ரூபாய்களும் கிரெடிட் கார்டும் இருந்தது. அதை அதிருப்தியுடன் எடுத்தவள், அவன் கண் முன்னே நீட்டி,
“இதை டெபிட் கார்டா மாத்துங்க… உங்க சம்பளம் போக மீதியிருக்கும் பாவக்காசில் ஒத்த ரூபா கூட நமக்கு வேண்டாம்…”
“அதை அவர் வங்கி கணக்குக்கே மாத்திடுறேன்…” என்றான் யோசனையை விடுத்து.
“அதெல்லாம் வேண்டாம்… எதாவது ஆசிரமத்துக்கு டொனேட் பண்ணிடுங்க. அவர்கிட்ட போனா அந்த காசு அநியாயம் செய்யத்தான் உபயோகப்படும்… ஊரை வித்து புடுங்கின காசுதானே அது திரும்ப மக்களுக்கே போகட்டும்…”
“அப்போ நானு? ரத்தமும் சதையுமா அவர் செஞ்ச பாவத்தின் பலனில் வளர்ந்த என்ன என்னை செய்யலாம்?” என்று வலியுடன் அவளை நிமிர்ந்து பார்க்க, அவன் எதை நினைத்து மருகி இருக்கிறான் என்று புரிந்தது.
விரல் உயர்த்தி அவன் கண்ணீர் துடைத்து கன்னம் ஏந்தியவள், “நீங்க ஏன் அப்படி நினைக்குறீங்க? உங்க உடம்புல ஓடுறது உங்க அம்மாவோட ரத்தம். உங்களை பத்து மாசம் சுமந்து பாலூட்டி வளர்த்தது உங்க அம்மா. உங்களுக்கு உயிர் கொடுத்து கண்ணுக்கு கண்ணா பார்த்து பார்த்து வளர்த்து இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் நல்ல எண்ணங்களோட என் முன்னாடி நீங்க உட்கார்ந்து இருக்குறதுக்கு காரணம் உங்க அம்மா. அப்படிப்பட்ட அவங்களை விட்டுட்டு வக்கிரம் பிடிச்ச அந்த ஆள் நீங்க பிறக்க ஒரு காரணமா இருந்தாருங்கிற ஒரே விஷயத்துக்காக உங்க அம்மா வளர்ப்பை வீணாக்குவீங்களா? என்னோட அனுமானம் சரின்னா உங்க அம்மா வரதன் மாதிரி அயோக்கியர்களை தட்டிக் கேட்கணும் தான் உங்களுக்குள்ள நல்ல சிந்தனைகளை விதச்சி இருக்காங்க. வரதன் பத்தி அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்…”
“அப்படியா சொல்ற…” தவிப்பாய் உடைந்து வந்தது அவன் குரல்.
“அப்படியும் இருக்கலாம்னு சொல்றேன்.”  என்று திருத்தினாள் அவள்.
“எனக்கு தெரியலடா கண்ணம்மா… அம்மா என்கிட்ட தப்பை தட்டிக் கேட்கணும், அநியாயத்தை கண்டு பொங்கி எழனும்னு எல்லாம் சொன்னதே இல்லை…” 
விடையில்லா கேள்விகள் அவனுள் சூறாவளியாய் சுழன்றடிக்க, அந்த கேள்விகளுக்கு விடையறிந்த அவன் அன்னையோ அவன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் போதே கண்மூடியிருந்தார். இப்போதோ அவரது மருமகளாய் மீரா அக்கேள்விகளுக்கு பதிலை யூகித்து அவனை தெளிவாக்க முயன்றாள்.
“ரெளத்திரம் பழக சொல்லிக் கொடுக்கிறது ஒருவகையான வளர்ப்புன்னா, அந்த ரெளத்திரம் சுயமாவே நமக்குள்ள எழற அளவுக்கு நற்சிந்தனைகளை விதைக்கிறது ஒருவிதம். அதைத்தான் உங்கம்மா செஞ்சிருக்காங்க. நீங்க சுயமா இருக்கணும்னு அவங்க விரும்பியிருக்காங்க… 
ஆனா நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? விவரம் தெரியாம வைக்ககூடாத இடத்தில பாசம் வச்சு அது திருப்பித்தந்த துரோகத்தை கடந்து வரமுடியாம, நியாயத்தை தட்டிக் கேட்க முடியாம இப்படி என்கிட்ட அழுது புலம்பிட்டு இருக்கீங்க.” ஆறுதலாய் துவங்கியவள் அவனை குற்றம்சாட்டும் விதமாய் முடிக்க, அவன் அகத்தில் மண்டிக்கிடந்த தடைகள் அனைத்தும் இருந்த தடம் தெரியாமல் அழிந்தது.
“நீ… உன்கிட்ட பேசாம இருந்திருந்தா உனக்கும் அம்மாக்கும் நான் நியாயம் செய்யாமலே விட்டிருப்பேன்… கண்ணாபின்னான்னு யோசிச்சு தேவையான விஷயத்தில் கவனம் செலுத்தாம இருந்திருப்பேன். அப்புறம் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிருக்கும். நான் பார்த்துக்குறேன்டா அவரை… வெளில வரமுடியாதபடி அவரை லாக் பண்ணனும்…” என்றவன் அவரை முடக்க எவ்வழியில் செல்லலாம் என்ற யோசனைக்குள் மூழ்கும் முன்னரே அழுத்தமாய் இடைபுகுந்தாள் மீரா. 
“அதை நீங்க பார்த்துக்கோங்க..  அதுக்கு முன்னாடி நான் அவரை பார்க்கணும்.” 
“அவர்தான் இப்போ ஊரில் இல்லையே?”
“அவர் அடிச்சிபிடுச்சி இங்க வர வைக்க எனக்குத் தெரியும்…” என்று மர்மப் புன்னகை வீசியவள் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க, அது முற்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.
“லஞ்ச் ரெடியானதும் சாப்டுட்டு நீங்க உங்க அம்மாவோட வாழ்ந்த வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போங்க… அப்புறம் பாருங்க அந்த உத்தமரு அடிச்சு பிடிச்சு எங்கிருந்தாலும் ஓடி வருவாரு…” என்று விஷமமாய் சொல்ல, கார்த்திக்கு அவள் சொல்ல வருவது புரிந்தாலும் அவள் இவ்வளவு ஆர்வமாய் வரதனைக் காண ஏன் துடிக்கிறாள் என்று மட்டும் புரியவில்லை. காரணம் கேட்டாலும் அவள் சொல்லவில்லை. சொல்ல விருப்பப்படவும் இல்லை.
மீராவுக்கோ வரதன் நட்சத்திர விடுதி எனும் பெயரில் அடிக்கும் கூத்தையும், கலாச்சார சீர்கேட்டையும் கார்த்திக் மூலம் கேள்விப்பட்ட பின் இனி பொறுத்திருந்து பலனில்லை… ஏதாவது செய்ய வேண்டும். அவரால் பாதிக்கபட்டிருக்கும் அவளுக்கும் அவளவனுக்கும் மனவுளைச்சலில் இருந்து விடுதலை வேண்டும் என்ற எண்ணம் எழ, அவர் வாயை பிடுங்கவென நேரில் சந்திக்க திட்டம் தீட்டி சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறாள். அவரோ போக்கு காட்டிக் கொண்டிருக்க, அவளின் புத்தி சமயோசிதமாய் யோசித்து அவரை இன்றே பார்த்துவிட வேண்டும் என்று உந்தியது.
“நீ ரெடியா இரு… நான் போய் விக்ரமை பார்த்து ஆபீஸ்லேந்து தகவல் ஏதாவது திரட்ட முடியுதான்னு விசாரிக்க சொல்றேன்… அப்படியே பேங்க் போக வேண்டிய வேலை இருக்கு, எல்லாத்தையும் முடிச்சிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட எத்தனிக்க, அவன் கரம் பற்றி தடுத்தவள் அவனை தோளோடு அணைத்து,
“எனக்கு நீங்க சொன்னதை தான் திரும்பச் சொல்றேன்… நீங்க தப்புப் பண்ணாதப்போ நிமிர்ந்து நில்லுங்க… வரதனோட பாவத்தை நீங்க சுமந்துகிட்டு கூனி குறுகி உங்களை நீங்களே தொலைச்சிடாதீங்க. விசாரிக்க போற இடத்தில் இன்னும் பயங்கரமான தகவலே கிடைச்சாலும் நீங்க உங்க மனதிடத்தை விட்டுறக்கூடாது. எனக்கு சமமா நீங்க நிமிர்ந்து நிக்கனும்னுதான் நான் ஆசைப்படுறேன்… தேவையில்லாதது ஏதாவது மனசை போட்டு படுத்துச்சுன்னா கண்ணை மூடி நல்லா மூச்சிழுத்து மூச்சை வெளியிடும் போது அதையும் சேர்த்து வெளிய விட்டுருங்க… இன்ஹேல் பிரெஷ்நெஸ் எக்ஸ்ஹேல் வேஸ்ட்ஸ்…” என்று அவன் சொன்னதையே அவனுக்கு அவள் திருப்பிச் சொல்ல, துவண்டிருந்த அவன் மனம் இதமாகி அணைப்பு இறுக்கமாகியது.
அடுத்தவர்களுக்கு இக்கட்டுகள் நேரும் போது சரளமாக வரும் ஆறுதல் வார்த்தைகளும் தெம்பேற்றும் வித்தையும் தனக்கென்று இன்னல் வரும்போது எங்கோ சென்று மறைந்து கொள்து கார்த்திக் விஷயத்திலும் நிகழ, அவனது வார்த்தைகளே அவளின் வாய்மொழியாய் வந்ததும் மனம் யானை பலம் அடைந்தது போன்றோரு திருப்தி ஏற்பட்டு புதுநம்பிக்கை துளிர்த்தது.
“அம்மாவுக்கு அப்புறம் உன்கூட ரொம்ப நெருக்கமா உணருறேன்… ஐ நீட் (need) யூ…” உணர்ச்சிப் பெருக்கில் மனம் அவள் அருகாமையைத் தேட, வார்த்தைகள் தானாகவே வந்தது. என்ன அவன் ஒரு பொருளில் சொன்னதை இவள் வேறொன்றாய் புரிந்துகொண்டு இணக்கத்தை இறுக்க, இடைவெளி குறைந்து இருஇதழ்களும் இணைந்து இசைத்தது.
காற்று இருவருக்குள்ளும் இடைப்புக போராடி தோற்க, நுரையீரல் அக்காற்றுக்கு கெஞ்ச, விடுபட மனமேயின்றி இதழ்களை விலக்கினர் இருவரும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி மீரா அவன் தோளில் சாய்ந்து இளைப்பாற,
“இதுக்கூட நல்லாத்தான் இருக்கு…” என்று அமைதியைக் கலைத்தான் அவன்.
அவன் சொன்னது புரியாது என்ன என்பது போல் இவள் தலையை உயர்த்தி விழிக்க, மர்மப் புன்னகை சிந்தியவன்,
“காலம் முழுக்க நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உன்னோட துணை எனக்கு வேணும்னு சொன்னேன்… ஐ நீட் யூ அட் மை எவ்ரி ஸ்டெப்… எவ்ரி ப்ரீத்…” 
“அப்போ இது வேணாம் உங்களுக்கு!?…” என்று அணைப்பை விலக்கி, சீண்டும் விதமாய் இருவர் இதழ்களையும் சுட்டிக்காட்ட, அவளை இழுத்து அணைத்தவன் அவள் இடக்கழுத்தில் முகம் புதைத்து பின் முத்தம் பதித்து, “இப்படி சீண்டாத கண்ணம்மா… நேத்தியே வீட்டுல எப்படியோ சாமாளிச்சோம்… இன்னைக்குமா! இப்போ நான் வெளிய வேற போகணும்…” என்று மையலும் தவிப்பும் கலந்த கலக்கத்துடன் விலகியவன் மீண்டுமொரு துரித ஈரமுத்தமொன்றை அவள் கன்னத்திலும் கழுத்திலும் பதித்துவிட்டு அவசரமாய் வெளியேறினான்.
அவன் செல்லும் திசையையே சிரிப்புடன் பார்த்து நின்றவள் அவன் கொடுத்துச் சென்ற ஈரத்தை கன்னத்தில் உணர்ந்தபடி கண்ணாடி முன் சென்று பார்த்தாள். முகம் அவனது நெருக்கத்தில் நெகிழ்ந்து பூரித்து விரிந்திருக்க, இடப்பக்க சுருக்கமெல்லாம் அவனது கவனிப்பில் மென்மையாகி மெதுமெதுப்பாய் இருந்தது. அந்த மெதுமெதுப்பை தொட்டு தொட்டுப் பார்த்தவள் கவனத்தில் அவன் கொடுக்கும் முத்தம் அனைத்தும் அவள் இடப்பக்க தேகத்தில் மட்டுமே அதிகமிருக்கிறது என்று பதிந்தது. அவன் எதற்காக அப்படி செய்கிறான் என்றும் புரிய, முகம் சுருங்கி பின் இயல்பாகியது. அதே இயல்புடன் அன்னையைத் தேடிச் சென்றாள்.
“ம்மா சீக்கிரம் லஞ்ச் ஏற்பாடு பண்ணு, அவர் வந்ததும் நாங்க வெளில கிளம்புறோம்…” என்ற கூப்பாடோடு வந்து நின்ற மகளை குழப்பமாய் பார்த்தவர்,
“நீயும் கிளம்புறீயா?” என்று நம்பிக்கையின்றி கேட்க, அவரை முறைத்த மகளோ,
“அதைத்தானே சொன்னேன், திரும்பக் கேட்குற?”
வெளியில் செல்கிறோம் என்று தகவல் சொன்ன மகளிடம் எங்கே செல்கிறீர்கள் என்று எப்படி கேட்பதென்று தயங்கி நின்றுவிட்டார் அம்புஜம். ஆனால் சுஜாவுக்கு கேட்க நிறைய இருந்தது.
“அதைவிடு மீரா… நேத்து அண்ணன் முகமெல்லாம் வாடிப்போய் எப்படியோ வந்தாருன்னு அத்தை சொன்னாங்க… உங்கண்ணன் இன்னைக்கு பேசலாம்னு வெயிட் பண்ணி பார்த்துட்டு கிளம்பிட்டாரு… ஏதாவது பிரச்சனையா? இப்போகூட அண்ணன் ஏதோ யோசனையில் வெளிய கிளம்பி போன மாதிரி இருந்துச்சு.”
“இல்லைன்னு சொல்ல மாட்டேன்… பட் இப்போ அவரே அதை சமாளிச்சிடுவாறு…”
“அந்த வரதனால பிரச்சனையா அம்மு? மாப்பிள்ளை உன்னை ஏதாவது சொல்லிட்டாரா?” என்று தவிப்பாய் கேட்டார் அம்புஜம்.
“நீ இவ்வளவு பதட்டப்படாத… அவரால்தான் பிரச்சனை. ஆனா அவரால உங்க மாப்பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் வராது. உங்க மாப்பிள்ளை எனக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துப்பாரு…” என்று நீட்டி முழக்கி மீரா பதில் கூற, வீட்டுப் பெண்மணிகளுக்கு தவிப்பு கூடித்தான் போனது.
“என்னனு புதிர் போட்டு பேசாத மீரா… சஸ்பென்ஸ் தாங்கல எங்களுக்கு…” என்று சுஜா அவசரப்படுத்த, வரதன் நட்சத்திர விடுதி நடத்துவதையும் அவர் மேலேயே அவர் புகார் கொடுத்திருப்பதையும் மீரா சொல்ல இன்னுமே குழம்பிப் போயினர் இருவரும்.

Advertisement