Advertisement

“சரி நானே முதல்ல சொல்றேன்… இப்போ நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… இது உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்… பட், இது என்னோடவே மடிஞ்சி போற விஷயமா இருக்கக்கூடாது. எனக்கு நியாயம் கிடைக்குதோ இல்லையோ நான் சொல்லப்போற விஷயத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறவங்க தப்பிக்க கூடாது. நான் என்னோட அனுமானத்தை சொல்றேன், நீங்க இதுல இன்னும் ஆழமா இறங்கி குற்றவாளியை கண்டு பிடிக்கணும். இதை எனக்காக நீங்க செய்யணும்.” 
“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு? என்னனு சொல்லு…” 
“பொதுவா மத்த டிப்பார்ட்மெண்ட் மாதிரி ப்ராஜெக்ட், இன்டெர்ஷிப் எல்லாம் எங்களுக்கு ஈஸியா இருக்காது கொஞ்சம் க்ரிட்டிக்கலா தான் இருக்கும். அதுவும் நம்ம ஊரில் இதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே கம்மி. பெரிய ஏஜென்சி, கவர்ன்மெண்ட் ஏஜென்சில எல்லாம் இன்டெர்ன்ஷிப் வாங்குறது ரொம்ப கஷ்டம், அப்படியே வாங்கினாலும் நேரடியா ஒரு க்ரைம் ஸ்பாட்ல போய் அங்கிருக்கிற ஸ்டேடிஸ்டிக்ஸ் எடுக்க சொல்ல மாட்டாங்க. எனக்கு ஒரு ஸ்டார்ட் அப் ஏஜென்சியில் இருந்து இன்டெர்ன்ஷிப் ஆஃபர் கிடைச்சுச்சு. டீம் ஹெட்டுக்கு கீழ என்னோட சேர்த்து இன்னும் மூணு பேர் ஒர்க் பண்ணோம். அங்க என்னோட வேலை ரிப்போர்ட் சம்மரி ரெடி பண்றது மட்டும்தான். ரொம்ப மொக்கையா தெரியும், படிக்குற படிப்புக்கு சம்மந்தமே இல்லாம உப்பு சப்பில்லாத பிரென்ட்(front) டெஸ்க் வொர்க் மாதிரி எனக்கு தெரிஞ்சுது. பீல்ட் வொர்க் கேட்டா அதெல்லாம் ஜூனியர்ஸுக்கு கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா நான் விடல, ஆர்வக்கோளாரில் அந்த ஏஜென்சிக்கு வந்த எல்லா க்ளெயண்ட் டீடைல்ஸையும் நோட் பண்ண ஆரம்பிச்சேன். அப்போதான் இந்த பீடோபைல்(phedopile) அப்படீங்குற வார்த்தை என் கண்ணில் பட்டுச்சு. அந்த வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க போய் அதுவே என்னோட ப்ராஜெக்ட்டா ஆகிடுச்சு.
குழந்தைகளை மருத்துவமனையில் இருந்தோ பேரெண்ட்ஸ் கிட்ட பணம் கொடுத்து வாங்குற மாதிரி கடத்திட்டு வந்து ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பாரிக்கணும்னு டார்கெட் பிக்ஸ்(fix) பண்ணி அவங்களை பிச்சையெடுக்க வைக்கிறது நீங்க அதிகம் கேள்விப்பட்டிருப்பீங்க. அப்படி டார்கெட்டை முடிக்காதவங்களுக்கு சூடு வைக்கிறது, அவங்களுக்கு போதை பொருள் கொடுத்து அவங்களை நிதானமிழக்க வச்சி மயக்கமாக்கி பிச்சையெடுக்க வைக்கிறது, இதுக்கும் ஒத்துவராத மசியாத குழந்தைங்க நாக்குல மிளகு இல்லைனா மிளகாய் பொடியை தடவிவிட்டுடுவாங்க, அளவுக்கு மீறின அந்த காரத்தால குழந்தைக்களால சரியா பேச முடியாது, நாக்கு குளரும். பேச முடியாத குழந்தைன்னு நினைச்சு நாம பணம் போட்டுட்டு போயிடுவோம். ஆனா நிஜம் வேற, நல்லா ஆரோக்கியமா இருக்குற குழந்தைகளை பணத்தாசை பிடிச்ச சில மிருகங்கள் தங்களோட சுயலாபத்துக்காக சிதைக்கிறாங்க. 
பிச்சையெடுகிறது போக மீதி பிள்ளைகளில் ஒரு பகுதியினரை வீட்டு வேலை செய்ய வெளி மாநிலத்துக்கோ இல்லை வெளிநாட்டுக்கோ அனுப்பிடுவாங்க. இன்னொரு பகுதியில் இருக்கும் பெண் குழந்தைங்கன்னா கேட்கவே வேண்டாம், குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் அந்த பெண் பிள்ளையை வித்துடுவாங்க. அப்போ ஆம்பளை பசங்கன்னா பிச்சை எடுக்குறதோட போச்சான்னா அதுவும் இல்லை. இந்தியா, இலங்கை, மாலத்தீவு கடல்பகுதிகளில் வெளிநாட்டுக்காரங்க தங்களோட பாலியல் இச்சையை தீர்த்துக்குறத்துக்காகவே நம்மூர் சிறுவர்களை கடலோரம் தயாரா வச்சிருக்காங்க. 
இதுமாதிரி சின்ன சின்ன சிறார்கள் மீது பாலியல் உணர்வு ஏற்பட்டு உணர்ச்சி வேகத்தில் தூண்டப்பட்டு சிறுவர் சிறுமிகளை வன்கொடுமை செய்றவங்க தான் இந்த பீடோபைல்… இந்த பீடோபைல் ஒரு மனவியாதி. இந்த வியாதி யாருக்கு இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது. இந்த மாதிரி ஆளுங்க சந்தர்ப்பம் பார்த்துட்டே இருப்பாங்க, எப்போ குழந்தைங்க தனியா மாட்டுறங்களோ அப்போ தங்களோட முழுவக்கிரத்தை காட்டுவாங்க. இதுவும் செக்ஸ் டூரிசம்னு திரை மறைவில் மிகப்பெரிய வியாபாரம் நடந்துட்டு இருக்கு. இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே?” என்று அவள் கேள்வியாய் நிறுத்த, ஆமாம் என்று தலையசைத்தவன் மேலே சொல்லு என்று சைகை செய்தான். 
“இதை பத்தி தெரிஞ்சிகிட்டதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. குழந்தைங்களை கூட விட்டுவைக்காத இந்த ஆளுங்க தோலை உரிக்கணும்னு வெறி வந்துச்சு. என்ன செய்யுறதுன்னு முதல்ல தலையும் புரியல வாலும் புரியல. ஏஜென்சியில் என் ஹெட் கிட்ட இதைப்பத்தி பேசுனேன், அவங்களோ இதெல்லாம் அரசுக்கு தெரியாம நடக்காது, நம்மகிட்ட ஒரு க்லைன்ட் இதைப்பத்தி ரிப்போர்ட் கேட்டாங்க அதை கொடுக்கிறது மட்டும்தான் நம்ம வேலை. அதை மீறி நம்மால ஒன்னும் செய்ய முடியாது, இதை ஆராய்ச்சி பண்ணாதேன்னு சொன்னாங்க. ஆனா மனசு கேட்கலை… இந்த வியாபாரத்தை முழுசா நிறுத்த முடியலைனாலும் அட்லீஸ்ட் குழந்தை கடத்தலுக்கு ஒரு சின்ன முட்டுக்கட்டையாவது போடணும்னு நினைச்சேன். அதுக்கு நான் நிறைய எல்லாம் கஷ்டப்படல, ஏஜென்சில ஏற்கனவே டீடெயில்ஸ், சஸ்பெக்ட்ஸ் லிஸ்ட் எடுத்து வச்சிருந்தாங்க. ரெண்டே நாள் மட்டும் சந்தேக லிஸ்டில் இருக்குற சிலரை நான் பாலோ பண்ணேன். அப்போ சரியா ஒரு அம்பது குழந்தைகளை அவங்க கஸ்டடியில் வச்சிருந்தாங்க… அதனால எனக்கு ஆதாரம் திரட்டவும் வசதியா இருந்துச்சு. நிறைய ஆதாரம் கிடைச்சுது, எல்லாத்தையும் ஆடியோ, வீடியோவா ரெக்கார்ட் பண்ணி அதை அப்படியே கஸ்டம்ஸ்ல ஒப்படிச்சிட்டேன். இது எப்படி எனக்கு கிடைச்சிதுன்னு அவங்க கேட்டப்போ என் ப்ராஜெக்ட்காக தகவல் திரட்டும் போது இது சிக்குச்சுன்னு சொல்லி சமாளிச்சேன், இல்லைனா இன்டெர்ஷிப் போன ஏஜென்சி கான்பிடென்ஷியல் டீட்டைல்ஸ் திருடிட்டேன்னு என் மேலேயே கேஸ் கொடுத்திருப்பாங்க… அப்புறம்தான் சொன்ன பொய்யை ஏன் உண்மையாக்க கூடாதுனு தோணுச்சு, ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணியிருந்த ப்ராஜெக்டை நிறுத்திட்டு இந்த கடத்தலோட ரிப்போர்ட் சம்மரியை ப்ராஜெக்ட்டா சப்மிட் பண்ணோம். இந்த டாபிக் அழுத்தமானதா இருந்ததால என்னோட ப்ராஜெக்ட் கெய்டு கூட எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க… பட் நவ் ஷீ ஈஸ் நோ மோர்…” என்று இதழை வளைத்தவள் நெற்றியை நீவிவிட்டு,
“அது நடந்த கொஞ்ச நாட்களிலே எனக்கு இப்படி ஆகி நான் அந்த விஷயத்தை மறந்தே போயிட்டேன். இப்போ எனக்கு என்ன சந்தேகம்னா இந்த கடத்தல் விஷயத்தில் வரதனா உங்க அப்பா சம்மந்தப்பட்டிருப்பாருன்னு தோணுது. நான் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி இருந்தாலும் அந்த கடத்தல் கும்பலுக்கு தலைவன் யாருன்னு கண்டுபிடிக்க முடியல… 
ஆனா ஒரு விஷயத்தை நல்லா கவனிச்சு பாருங்களேன்… ஏன் அந்த வரதன் குறிப்பா என்னை குறி வச்சி என்னை டார்கெட் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு வலிய எங்க வீட்டுக்கு வரணும்? அதுவும் நான் மனதளவில் ஒடுங்கி போயிருக்கேன்னு தெரிஞ்சிகிட்டே ஏன் வரணும்? எல்லாத்தையும் யோசிச்சா என்னை பழிவாங்க அவர் இதெல்லாம் செஞ்சிருக்கலாம்னு தோணுது. பழிவாங்குற அளவுக்கு நான் செஞ்ச ஒரே காரியம் இந்த கடத்தல் விஷயத்தை காட்டி கொடுத்ததுதான். ஆனாலும் அப்படி என்ன செய்ய என்னை கல்யாணம் செஞ்சுக்குறேன்னு வந்தாருன்னு எனக்கு புரியல? நான் அழகா கூட இல்லை என்னை விலைபேசி விக்க…” என்று விரக்தியாய் முடித்தவளின் வாயிலே பட்டென்று ஒரு அடி போட்டான் அவன்.
“இப்படி எல்லாம் பேசுனா இழுத்து வச்சி அறைஞ்சிடுவேன் மீரா… என்ன வார்த்தை சொல்ற நீ?”
“நான் சொன்னத்துக்கே உங்களுக்கு கோவம் வருதுன்னா அப்போ உங்களை பெத்த அந்த அயோக்கியன் என்னென்ன எல்லாம் யோசிச்சாரோ… என்ன காரணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க இருந்தாரோ…” என்று அவள் விடேற்றியாய் சொல்ல, 
தசைகளை கிழித்துக்கொண்டு ஈட்டியை உள்ளிறக்கி குருதி புடைசூழ இதயத்தை திருகியது போன்ற மரண வேதனை அவனுக்கு. தொண்டைக்குழியில் உருண்டை ஒன்று உருண்டு வந்து அடைத்து உணர்ச்சிகளை தன்வசப்படுத்தியிருக்க, மீரா இறுதியாய் கூறிய வார்த்தைகளின் திசையறிந்து அதன் பின்னிருக்கும் அர்த்தம் உணர்ந்து அவனது கடைநரம்பு கூட கூசி துடித்தது. விழிகள் செந்தனல் பூசிக்கொண்டு மனைவியை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் செய்தது குற்றவுணர்ச்சி. மனைவியை வேறொருவன் தவறான பார்வையொன்று பார்த்தாலே வெறிகொண்டு அவன் விழியை நோண்ட எழும் ரெளத்திரத்தை தனக்கு உயிர் கொடுத்தவன் மேல் காட்ட முடியவில்லையே என்ற எண்ணம் அவனை வாட்ட, குனிந்த தலை நிமிராமல்,
“எனக்கு கூசுது மீரா… எனக்கு ஏன் இப்படி ஒருத்தர் அப்பாவா இருக்கணும்? என்னால அவரை சகிச்சிக்க முடியல… சட்டையை புடிச்சு கேள்வி கேட்கணும்னு அவ்வளவு ஆத்திரம் இருக்கு, ஆனா அவர் முன்னாடி போய் நிக்கவே உடம்பெல்லாம் கூசுது. அவரோட ரத்தம் என் உடம்புல ஓடுதுன்னு நினைச்சாலே மொத்த ரத்தத்தையும் சதையை கிழிச்சு வெளியேத்திடலாம்னு தோணுது. நான் என்ன செய்யணும்னு தெரியல… அவர் பணபலத்துக்கு முன்னாடி என்னோட பதவி எல்லாம் தூசுக்கு கூட கிடையாது.”
“இதேதான் காலையிலும் சொன்னீங்க… உங்கள வேலை செய்ய விடாம முடக்குறாரா?”
“அவர புடுச்சி ஜெயில்ல போட முயற்சி பண்ணா அவரோ சுப்பிரமணியனா அவரோட லெட்டர் பேடில் இருந்து வரதன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு…” என்று சொன்னவனை விசித்திரமாய் பார்த்தாள் அவள். 
வரதனும் சுப்பிரமணியனும் ஒரே ஆளாய் இருக்க, அவரே எதற்கு அவரது போலி பிம்பத்தின் மேல் புகார் கொடுக்க வேண்டும்? வரதன் என்ற ஒருவன் இல்லாத போது இப்படி புகார் கொடுக்க முடியுமா என்ன? என்ன பித்தலாட்டம் இது என்று குழம்பி அமர்ந்திருந்தாள் மீரா.
 

Advertisement