Advertisement

*12*
“ராகவா இது எல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். இப்போ நீ போய் கதவை தட்டுறீயா இல்லை நானே போவா?” பார்வை மூடியிருக்கும் மீரா அறையின் புறம் பதிந்திருக்க, முகத்தில் அப்பட்டமான அதிருப்தி வெளிப்பட்டது.
“அப்பா… இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்போமே… தூங்குறாங்களோ என்னவோ!.” என்று ராகவ் சங்கடமாய் நெளிந்தான். அவனும் வந்ததிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான், ஆனால் பெற்றோரே சமாதானம் அடைவது போல் இல்லை.
“எவ்வளவு நேரம் தூங்குவாங்க? மணி இப்போ ராத்திரி பத்தாகப்போகுது. மதியம் மூணு மணி போல சாத்தின கதவு இன்னும் திறக்கலைன்னா எப்படி… போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறாங்க… மாப்பிள்ளை தம்பி முகமும் சரியில்லைன்னு அம்மா சொன்னா… அம்முவும் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டா. ரெண்டும் சேர்ந்து ஏதாவது விபரீதம் செஞ்சிட போதுங்க, நீ எழுப்புடா…” என்று ரகுநாதன் தன் குரலை உயர்த்த, ராகவ் மனைவி புறம் வேகமாய் பார்வையை செலுத்தினான். 
அவன் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவளாய் தானே முன்சென்று மீரா அறைக்கதவைத் தட்ட, உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. திரும்பி தன் அங்கத்தினரைக் காண, அவர்களின் தவிப்பு கூடிப்போவதை உணர்ந்து மீராவின் பெயர் ஏவி கதவை வேகமாக தட்டினாள்.
இம்முறை அவள் சத்தத்திற்கு அறையினுள் இருந்தவர்கள் சற்று செவி சாய்த்து உறக்கத்தில் அசைந்தனர்.
“மீரா என்ன பண்ற? கதவைத் திற…” என்று விடாமல் சுஜா தட்டிக்கொண்டே இருக்க, மீரா அடித்துப்பிடித்து எழுந்தாள்.
அடித்துப்போட்டது போல உறங்கி விழித்ததன் பலன் ஒன்றிரண்டு நொடி எதுவுமே விளங்கவில்லை அவளுக்கு. அனைத்தும் நினைவு வந்த நொடியோ முகம் செவ்வானத்தின் நிறத்தை பூசிக்கொண்டு இதழ் மயக்கத்தில் வளைந்து விளையாடியது. விழிகள் கண்ணாம்பூச்சி ஆட்டமாய் அவளை நெருங்கி ஆழ்ந்துறங்கும் கார்த்திக்கின் மீது படும்படாமல் தொட்டு தொட்டு மீண்டது. விரல்கள் உயர்ந்து அவன் கேசத்தில் பதியப்போக, சுஜாவின் குரல் அவளை மீட்டது.
“வரேன் அண்ணி…” என்று குரல் கொடுத்தவள் வேகமாய் எழ, அவன் கரங்கள் அதனை தடுக்க, இவள் அதை விலக்க அவனும் விழித்துவிட்டான்.
“ஏன் எழுந்துட்ட? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமே…” என்றவன் கண்களை மூடிக்கொள்ள, அவனை உலுக்கி எழுப்பினாள் மீரா.
“அண்ணி கூப்பிடுறாங்க… எழுந்திருங்க. மணி வேற என்னாச்சுன்னு தெரியலையே…” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் உணர்ச்சி வேகத்தில் கிழித்தெறிந்த தன் உடையைக் கண்டு கூச்சத்துடன் மீண்டும் போர்வைக்குள் புகுந்து கொண்டாள். ஆனால் அவளின் செயலைக் கண்டு பதறியது என்னவோ கார்த்திக்தான். மறுபடி கூட்டிற்குள் சென்றுவிட்டாளோ என்ற பயத்தில் போர்வைக்குள் இவனும் புகுந்து அவள் கன்னம் பற்றினான்.
“ஏய் இன்னும் என்ன கண்ணம்மா? திரும்ப கன்னாபின்னான்னு யோசிக்காத…” என்ற அவனது கேள்வி செவியை தீண்டும் முன்னே கண்களை இறுக மூடி தலையணையில் முகம் புதைக்க, இருப்பு கொள்ளவில்லை கார்த்திக்கு.
“ஏய் என்னனு சொல்லு… எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம்…” என்று அவன் தவிக்க, 
“எல்லாத்தையும் உங்ககிட்ட விளக்கி சொல்லிட்டு இருக்க முடியாது. அலமாரியிலிருந்து என்னோட டிரெஸ் ஏதாவது சீக்கிரம் எடுத்து கொடுங்க. அண்ணி வேற தேட ஆரம்பிச்சுட்டாங்க. சீக்கிரம் எழுந்திருங்க…” என்ற அவளது உந்துதலுக்கு கூட மசியாது அவளையே கூர்மையாய் பார்க்க, தலையிலடித்துக் கொண்டவள் திரும்பி அவன் முகம் பார்த்து,
“நல்லா பார்த்துக்கோங்க…. நான் நல்லாத்தான் இருக்கேன். இப்போ திருப்தியா… எனக்கு ட்ரெஸ் எடுத்து கொடுத்துட்டு போய் கதவைத் திறங்க.” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ள, மார்பில் பதிந்த அவள் கரத்தில் துரித முத்தம் பதித்துவிட்டு தன்னையும் சரி செய்துகொண்டு கதவைத் திறந்தான்.
“ரொம்ப டயர்டா அண்ணா… இவ்வளவு நேரம் தூக்கமா?” என்று தவிப்பாய் கேட்ட சுஜாவைக் கண்ட பின்தான் அவன் கண்கள் கடிகாரத்தை தேடியது. அந்த வீட்டில் அது எங்கிருக்கிறது என்று தெரியாததால் பொதுவாய் பேசி வைத்தான்.
“அலைச்சல் அதிகம்மா அதான் கொஞ்சம் கண்ணசந்துட்டேன். அவளும் தூங்கிட்டா…” 
“ஓ… சாப்பாடு எடுத்து வைக்குறேன். ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க.” என்று சொல்லிவிட்டு சுஜா நகர இவனும் அறையினுள் வந்து மீராவிடம் தகவல் சொல்ல, அவளோ அவனை முறைத்தபடி நின்றாள்.
“இப்போ என்ன?” என்று அவன் முழிக்க, மொழியின்றி அவள் விழிகள் சென்ற திசையை தொடர, அங்கு கட்டுலுக்கு கீழ் அவனது ஷூ அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்தது. 
அசட்டையாய் சிரித்தவன், “அது… அவசரத்துல ஷூவை வெளில விடணும்னு நியாபகம் வரல…”
“இல்லைனா மட்டும் ஷூவை வெளில விடணும்னு தெரியுமா என்ன… நீங்க நிறைய மாறனும் ஏ.சி.பி சார்… எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. என் வீட்டுல வாசலுக்கு வெளியிலேயே ஷூவை கழட்டிடனும். ஆடம்பரத்துக்கு இல்லாம தேவையான பொருள் மட்டும்தான் வீட்டுல இருக்கனும். வாரத்துல ஒருநாள் கண்டிப்பா பேமிலி டைம் வேணும். மத்தபடி உங்க வேலை நேரத்தில நான் தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சோ நான் போன் பண்ணா உடனே எடுக்கணும். வீட்டை விட்டு வெளியூர் போற சூழ்நிலை வந்தா என்கிட்ட சொல்லிட்டுத்தான் போகணும், நீங்களா உங்க இஷ்டத்துக்கு கிளம்பி போறது வர்றது எல்லாம் வச்சிக்ககூடாது. நேரத்துக்கு சாப்பிடனும்…” என்று அவள் அடுக்கிக்கொண்டே போக, அவளது நிபந்தனைகள் அனைத்தும் அவனுடன் வாழ அவள் தயாராகிவிட்டாள் என்றே சொல்லியது. புரிந்த நொடி புன்னகைத்தவன்,
“இவ்வளவுதானா இன்னும் இருக்கா?”
“இப்போதைக்கு இவ்வளவுதான்… மீதி நியாபகம் வர வர சொல்றேன்…” என்று இவள் அலட்ட, அவளை நெருங்கியவன் அவளைச் சுற்றி வளைத்து அருகில் இழுத்து,
“எவ்வளவு சில்லியான விஷயமா இருந்தாலும் அது உன்னை பாதிக்கிற மாதிரி தோணுனா என்கிட்ட உடனே ஷேர் பண்ணிடனும். மனசுக்குள்ளேயே போட்டு மருகிட்டு இருக்கக்கூடாது. இந்த துண்டு துப்பட்டா எல்லாம் போட்டு முகத்தை மூடி மறைக்கிற வேலையை கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கணும். ஒழுங்கா படிச்சு எக்ஸாம்ஸ் க்ளியர் பண்ணனும். நேரத்துக்கு சாப்பிடனும். அடம் பண்ணாம டாக்டர்கிட்ட போய் கன்சல் பண்ணிட்டு வரணும். என்கூட தயங்காம வெளிய வரணும்…” என்று இவனும் தன் பங்கிற்கு அடுக்கினான். 
“ஹலோ என்ன கண்டிஷன் எல்லாம் பலமா இருக்கு? இதெல்லாம் நான் கேட்கணுமா? கேட்கலைன்னா என்ன செய்வீங்க?” என்று அவள் புருவம் உயர்த்த, உயர்ந்திருந்த அவள் புருவத்தை நீவிவிட்டவன், “நீ என்ன செய்றீயோ அதுதான் உனக்கு திருப்பி கிடைக்கும்.”
“என்ன?”
“நான் சொல்றதை நீ கேட்கலைன்னா நானும் உன் பேச்சை கேட்க மாட்டேன். சிம்பிள்…” 
“ஓ… என் பேச்சை கேட்காம கூட இருப்பீங்களா… அவ்வளவு தைரியம் இருக்கா?” என்று முறைத்தவள் அவன் இருகன்னத்தையும் இழுத்துக் கிள்ள,
“பேச்சை கேளுங்க கேட்காம போங்க… ஆனா வந்து சாப்டுட்டு போனீங்கன்னா நாங்க நிம்மதியா தூங்கப் போவோம். மணி பத்தாகுது நீங்க மதியத்திலேந்து கும்பகர்ணனுக்கு டஃப் கொடுத்து தூங்கிட்டு இப்போ சாவுகாசமா பேசிட்டு இருக்கீங்க… கொஞ்சம் எங்களுக்கும் கருணை காட்டுங்க…” என்ற சுஜாவின் குரலில் துள்ளி விலகியவர்கள் வாயிலில் நிற்கும் மொத்த குடும்பத்தையும் கண்டு சங்கடத்துடன் விழிக்க, சுஜா கேலியாய் சிரித்தாள்.
“ச்சு… இப்போ எதுக்கு எல்லாம் என் ரூம் முன்னாடி கூட்டம் போட்டு நிக்குறீங்க… எல்லாம் போய் தூங்குங்க, எங்களுக்கு போட்டு சாப்பிடுக்க தெரியும்.” என்று கழுத்தை வெட்டிய மீரா உள்ளத்துள் மண்டிக்கிடக்கும் வெட்கத்தை மறைத்து கார்த்திக்கை அங்கிருந்து உண்ண அழைத்துக் சென்றாள். கார்த்திக் சங்கடமான முறுவல் ஒன்றை அவ்வீட்டு ஆண்கள் புறம் வீச,
“காலையில பேசலாம்… சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க.” என்று ராகவும் அவன் சங்கடம் உணர்ந்து நகர, மனைவியை வால் பிடித்துக்கொண்டு சென்றான் கார்த்திக்.
“பாருங்க… சொன்னேன்ல எதுவும் பிரச்சனை இருக்காதுன்னு. அவங்க நல்லாத்தான் இருக்காங்க, சொல்லப்போனா முன்னாடிய விட இப்போ இன்னும் இணக்கமா இருக்காங்க. தேவையில்லாம பயந்து குழப்பிக்காதீங்க.” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு ராகவ் தன்னறைக்குச் செல்ல சுஜாவும் அவனைத் தொடர்ந்தாள்.
புதிதாய் தென்பட்ட பொலிவில் விண்மீன் போல் மின்னும் மகளை கண்களில் நிரப்பிக்கொண்டே கூடத்தில் பாய் விரித்து படுத்த ரகுநாதனுக்கு அப்போதுதான் இதயம் சீராய் துடிக்கத் துவங்கியது. மகனும் மருமகளும் கார்த்திக் சார்பாய் நம்பிக்கை வார்த்தைகள் பேசியிருந்தாலும் ஒருவாரமாய்  அவருக்கு சரியான உறக்கமில்லை. தந்தை தடம்புரண்டு தவறாய் இருக்க மகன் மட்டும் எப்படி உத்தமனாய் இருப்பான் என்ற அவநம்பிக்கை ஒரு ஓரத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. அதன் பொருட்டு தெரிந்தவர் யார் மூலமாவது கார்த்திக்கை பற்றி விசாரிக்க முடியுமா என்று மேலோட்டமாய் உடன் பணிபுரிபவர்களிடத்தில் சொல்லி வைத்திருந்தார். இப்போது அதற்கு அவசியமே இல்லை என்பது போல் மகளின் தெளிவான வதனமும் அவள் மீது படியும் கார்த்திக்கின் பரிவான பார்வையும் பரிமாறிக் கொண்டிருக்கும் அம்புஜத்தின் மீது அவ்வப்போது மரியாதையோடு அவன் விழிகள் பதிந்து மீள்வதும் என கார்த்திக்கின் மீதான அவரது பார்வையும் சற்று மாறியது. மகள் இனி மீண்டுவிடுவாள் என்ற நம்பிக்கையும் எட்டிப் பார்த்தது. 
“ம்மா… நீ போய் தூங்கு… நான் எல்லாத்தையும் எடுத்து வச்சிடுறேன். நீங்களும் ரூமுக்கு போங்க, நான் இதெல்லாம் ஒதுங்க வச்சிட்டு வந்துறேன்.” உண்டு முடித்ததும் மீரா கணவனுக்கும் அன்னைக்கும் கட்டளைகளிட, அதை மறுக்க முற்பட்ட அம்புஜத்தை,
“அவளே செய்யட்டும், நீங்க தூங்குங்க. லேட் ஆகிடுச்சு.” என்று கார்த்திக் அழுத்தமாய் பார்த்து சொல்ல, குழப்பத்துடன் புருவம் சுருக்கி நின்றார் அவர்.
“இயல்பான வாழ்க்கை வாழ முயற்சி பண்றா, அதை நாம தடுக்க வேண்டாமே…” மீரா நகர்ந்ததும் மெல்லிய குரலில் அவசரமாய் அம்புஜத்திடம் அவன் காரணம் சொல்ல, குழப்பம் நீங்கி தெளிவான மனதுடன், “ரொம்ப சந்தோஷம்… அவளே செய்யட்டும்… இன்னைக்கு மதியம் கூட உங்களுக்காக அவளே சமைச்சா…” என்று பூரிப்பை வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அவரும்.
கார்த்திக் அங்கேயே ஓரமாய் நின்று அவள் கவனத்துடன் அனைத்தையும் எடுத்து வைப்பதை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். எவ்வித அலைப்புறுதலும் இன்றி செய்யும் செயலில் மட்டுமே கவனம் பதித்து, அனைத்தையும் விரைவாய் செய்பவளைக் காண, தன்னுடைய துக்கத்தை அவளிடம் பகிர்ந்து அவளின் இயல்பை கெடுக்க வேண்டாம் என்றே தோன்றியது. ஆனால் அது சாத்தியமில்லை என்று அவள் பகிர்ந்து கொண்ட செய்திக்கு பின்தான் தெரிந்தது.
“சொல்லுங்க…” என்று தன் முன் கைகட்டி அமர்ந்திருப்பவள் தீர்க்கமாய் பார்த்து கேட்க, சற்றும் சலைக்காது பார்வையை எதிர்கொண்டவன்,
“நீதான் சொல்லணும்… என்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு காலையில் சொன்ன?”
“நான் சொல்றது இருக்கட்டும். உங்களுக்கு என்ன ஆச்சு? திடீர்னு ஏன் இவ்வளவு சோர்வு தவிப்பு எல்லாம்? நீங்க இப்படி உடைஞ்சி போவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.” குரலில் வேதனையின் சாயல் வெளிப்பட, அவன் கரத்தை பிடித்துக்கொண்டாள் அவனுக்கு ஆறுதல் சொல்பவள் போல…
இணைந்திருந்த அவர்கள் கரத்தை பார்த்தவன் பார்வையை அதிலேயே பதித்து, “அது… அது அந்த நேரம் அழுத்தத்தை என்னால தாங்க முடியல. நான் இப்போ சரியாகிட்டேன். நீ சொல்லுடா… இன்னும் என்னலாம் மனசுல போட்டு குழப்பிக்கிட்டு இருக்க? எல்லாத்தையும் இப்போவே வெளிய கொட்டிட்டு நாளையிலிருந்து புதுசா ஒரு வாழ்க்கையை தெளிவா துவங்கணும். நீ சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.” என்று அவளை ஊக்குவிக்க, அவனை தவிப்பாய் பார்த்தவள்,

Advertisement