Advertisement

“இல்லை… நான் தைரியமானவ இல்லை… எனக்குத் தெரியும்… எனக்கு… என்னால இது முடியாது. இது சரியா வராது…” என்று இருவரையும் சுட்டிக்காட்டியவள் கேவலுடன் முகத்தை மூடிக்கொண்டு விம்ம, காரத்திக் எப்போதோ அவளை தன்னுடன் அணைத்திருந்தான்.
“எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருக்கு… நீ என்னை எவ்வளவு அழகா புரிஞ்சிக்கிற… எல்லாமே சரியா வரும்…” என்று அவன் சமாதானம் சொல்வதை ஏற்காமல் அவனை தன்னிடமிருந்து தள்ளுவதிலேயே குறியாய் இருந்தாள்.
திமிறிக்கொண்டு அவன் தோளை  சரமாரியாய் அடித்து அவனை தன்னிடமிருந்து பிரிக்க முயலும் அவளது இருகரத்தையும் தன் ஒருகையில் கெட்டியாக பிடித்தவன், மறுகரம் கொண்டு அவள் தாடையை அழுந்தப் பற்றி,
“கண்ணம்மா லுக் அட் மீ… காம் டவுன். எல்லாமே சரியா வரும், தேவையில்லாம யோசிக்காத… கண்ணை மூடு…” என்று அவனும் தன்பங்கிற்கு கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“நான் சொல்றது புரியலையா உங்களுக்கு. திஸ் ஈஸ் நாட் டன். பழிவாங்க கல்யாணம் பண்ணேன், அதோட முடிஞ்சுது எல்லாமே… இது நடக்காது… இது முடியாது… சரியா வராது…. ஐ காண்ட்…” என்று அவன் பிடியில் திமிறி தலையை இடவலமாய் அசைத்து ஆவேசமாய் மறுத்தாள்.
அழகாய் பின்னியிருந்த கேசத்தில் சிலது இவள் சிலுப்பியதில் வெளிவந்து அவள் முகத்தில் இடையூறு செய்ய, விழிகள் செம்மையாகி நாசி புடைத்து இதழோடு சேர்ந்து துடித்தது. உடலும் குலுங்கி நேர்த்தியாய் தயாராகி இருந்ததற்கு மாறாக அலங்கோலமாக மாற்றியிருந்தது.
“ஷ்ஷ்!!! நான் சொல்றேன்ல அழுகுறதை நிப்பாட்டு. நீ அழுகுறதை நிப்பாட்டு கண்ணம்மா… நான் வேண்ணா கிளம்பிடுறேன்… நீ… நீ ரெஸ்ட் எடு…” என்று சொன்னதும் அவனை ஆவேசமாய் தள்ளிவிட்டவள்,
“யெஸ்… கிளம்புங்க! கிளம்புங்க இங்கிருந்து… இனி இங்க யாரையும் தேடிட்டு வரக்கூடாது… இதோட எல்லாம் முடிஞ்சுது. எல்லாமே முடிஞ்சுது. நான் உங்களுக்கு யாரும் இல்லை. நீங்களும் எனக்கு யாரும் இல்லை… இதோட முடிஞ்சுது.” என்று கத்தியவள் மெத்தையிலிருந்து இறங்கி ஆங்காரமாய் அவனைத் தள்ள, தடுமாறியவன் ஒன்றிரண்டு அடிகள் பின்னே நகர்ந்து பின் தன்னை சுதாரித்து திடமாய் நின்றான். 
“போங்கன்னு சொல்றேன்ல போங்க… என் முன்னாடி நிக்காதீங்க. எனக்கு யாரும் வேண்டாம். எனக்கு யாரும் தேவையில்லை. என்னை பார்த்து யாரும் பரிதாபப்பட வேண்டாம்.” என்று வீம்பாய் கத்தியவள் அவனை பின்னே தள்ள முயன்று தோற்க, அவளது ஆவேசம் அடிகளாய் உருமாறி அவனை பதம்பார்த்தது.
காரணம் என்னவெனக் கூட தெரியாமல் தன் மேல் சுள்ளென்று விழும் அடிகளை துளியும் முகம் சுழிக்காது திடமாய் நின்று ஏற்றுக்கொண்டவனை அடித்து அடித்து களைத்தவள் கைகள் வலிக்கவும்தான் ஓய்ந்தாள். 
தோல்வியை ஒப்புக்கொண்டு அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என் பேச்சை கேட்க மாட்டீங்கல்ல… அப்போ நான் போறேன்… நான் போறேன்… யாருமே என்னை கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு போறேன். அப்போ எப்படி என்னை கண்டுப்பிடிப்பீங்க நீங்க…” என்று முகத்தை புறங்கை கொண்டு அழுந்தத் துடைத்தவள் அவனைத் தாண்டி அறை வாயிலுக்குச் செல்ல முற்பட அவள் இடையில் கைகொடுத்து அலேக்காக பிடித்து நிறுத்தியவன், அப்படியே அவளை தள்ளிச் சென்று சுற்றில் சாய்த்து நிறுத்தி அவள் நகரமுடியா வண்ணம் இருகரத்தையும் அரணாய் சுவற்றில் வைத்து அவளை அணைகட்டினான்.
தன் இருபக்கமும் உயர்ந்து தடுப்பாய் நிற்கும் அவனது கரத்தை அழுந்தப் பிடித்த மீரா அந்த அரணை உடைக்க முற்பட, மூச்சுக்காற்று அவள் கன்னத்தை தீண்டும் அளவுக்கு அவளை நெருக்கியவன் அவள் இடக்கன்னத்தோடு தன் கன்னம் வைத்து இழைக்க அவளது திமிறல் திணறி நின்றது. அதிர்வில் உடல் விறைக்க அதை உயிர்ப்பிக்கும் வண்ணமாய் அவனது மூச்சுக்காற்று நொடிக்கு நொடி அவளைத் தீண்டிச் சென்றது.
ஒரு நொடி… ஒரே நொடி அதை உணர்ந்து, ரசித்து, சிலாகித்து மயங்கி நின்றவள் மறுநொடியே கேவலுடன் கீழே சரிந்தாள்.
“ஏய்… மீராரா!!!” பதறிய கார்த்திக்கும் அவளோடு சேர்ந்து சரிந்து அவளெதிரில் அமர்ந்தான்.
“என்னடா ஏன் இப்படி வருத்திக்கிற? என்னனு சொல்லேன்… நீ இப்படி இருக்கிறதை பார்க்க முடியலைடா… என்னன்னு சொல்லு கண்ணம்மா… நான் இருக்கேன்டா உனக்கு… என்ன பிரச்சனைனாலும் நாம சேர்ந்தே சமாளிக்கலாம். பட் ப்ளீஸ் இப்படி உன்னை நீயே வருத்திக்காத… உனக்கு ஏதாவது பிடிக்கலையா சொல்லு அதை தூக்கி போட்டுவோம். வேற எங்கேயாவது போகனுமா அங்கேயே போகலாம்… என்னனு சொல்லு…” என்று இறைஞ்சியவனுக்கு மெய்யாகவே அவள் ஏன் இப்படி திடுமென நடந்துகொள்கிறாள் என்று புரியவும் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று கணிக்கவும் முடியவில்லை. குழப்பமும் ஆற்றாமையும் அவனைப்போட்டு படுத்த அவள் முன் இறைஞ்சத்தான் முடிந்தது.
அவளோ, “இது வேண்டாம்…” என்ற பாட்டைதான் திரும்பப் படித்தாள்.
“மீரா என்னன்னு சொல்லப்போறீயா இல்லையா? என்ன நினைச்சிட்டு இருக்க நீ? ஒருத்தன் எவ்வளவு கெஞ்சுறேன் கொஞ்சமாச்சும் மதிச்சு என் பேச்சை கேக்குறீயா? என்னதான்டி பிரச்சனை… அது சொல்லித்தான் தொலையேன்…” என்று அவன் பொறுமையிழந்து கத்திவிட, அவனது கத்தலுக்கு சற்றும் குறையாத அழுத்தக் குரலுடன் ஆவேசமாய் தன் சேலையை விலக்கி இயலாமையில் இரவிக்கையை கிழித்தெரிந்தவள் அமிலத்தின் வடுவை தாங்கி தன் இயல்பை இழந்து கறுத்து சிறுத்திருந்த தன் இடப்பக்க மார்பை காட்டி,
“இதை பாரு… நல்லா பாரு… இதை நான் எப்படி சொல்லுவேன்… எப்படி சொல்லுவேன்… என்னால இதை ஏத்துக்க முடியாது… உன்னாலையும் ஏத்துக்க முடியாது. எனக்கு பிறக்கிற குழந்தைக்கு கூட என்னால பசியாத்த முடியாது. இதை பார்க்க பார்க்க என்னால… எனக்கு தோணுது ஒரு முழுமையான மனைவியாவோ அம்மாவாவோ இருக்க முடியாது. எனக்கு குழந்தை பிறந்தா அந்த குழந்தை கூட என்னை… பார்த்து… என் முகத்தை பார்த்து பயந்துடும். அப்படி நடந்தா அதை என்… என்னால தாங்க முடியாது. நான் எதுக்கும் லாயக்கு இல்லை. நான்… அவ்வளவுதான்… இதுதான் என் வாழ்க்கை. அதுக்குள்ள யாரும் வரமுடியாது. யாரும் வர வேண்டாம். என்னை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்…” என்று கத்திக்கொண்டே சென்றவளை இழுத்து அணைத்திருந்தான் கண்ணீரோடு… 
என்ன பேச? என்ன ஆறுதல் சொல்ல? இவன் ஏதேதோ நினைத்திருக்க அவள் இப்படி ஒன்றை சொல்லுவாள். இப்படி வருங்காலத்தில் உதிக்கப்போகும் குழந்தை வரை யோசிப்பாள் என்று கற்பனையில் கூட எண்ணியதில்லை. அப்படியிருக்க என்ன ஆறுதல் சொல்லி தேற்றிட முடியும் அவனால்? அவனே அவளின் ஆறுதலைத் தேடி அடைக்கலமாய் வந்திருக்க, தன் மார்பில் சாய்ந்து கதறுபவளை சமாளிக்கும் அளவுக்கு அவனுக்கு திறனில்லை என்றே தோன்ற, அவனின் அணைப்பு இறுக்கமாகியது.
“எனக்கு பயமா இருக்கு. எல்லோருக்கும் என்னோட முகம் மட்டும் தான் தெரியுது ஆனா… ஆனா எனக்கு… எனக்கு இதெல்லாம் யோசிச்சு யோசிச்சு பயமா இருக்கு. நான் எதுக்குமே உபயோகமில்லை. எல்லோருக்கும் பாரமா இருக்கேன். உங்களையும் தேவையில்லாம இழுத்துவிட்டுட்டேன்… நீ… நீங்க ரொம்ப நல்லவரு… உங்களுக்கு ஏத்த மாதிரி வேற யாரையாவது…”
“கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி பெத்துக்கணுமா?” என்று அவளை குறுக்கிட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்ணீருடன், “உங்களுக்கும் நான் வேண்டாம்தானே?” என்று தவிப்பாய் கேட்க, அவனோ,
“நான் சொல்லல… நீதான் சொல்ற… வேற எவளையாவது கட்டிக்கோன்னு நீதான் சொல்ற.” என்றான் குற்றம்சாட்டும் விதமாய்.
“நான் சொன்னா கட்டிப்பீங்களா?” என்று ஆற்றாமையில் கேட்பவளை இன்னுமே தன்னுள் புதைத்துக் கொண்டவன், “ஆமா நீ சொன்னாலும் சொல்லலைனாலும் நான் இப்படித்தான் கட்டிப்பேன்…” என்று அவளை தன் மடியில் தூக்கி அமர வைத்துக்கொண்டவன் அவளுடன் ஒன்றி அவள் கழுத்தில் முகம் புதைக்க, ஒருமூச்சு அழுது தீர்த்தாள் மீரா…
கழிவிரக்கத்தில் துவங்கிய அவள் அழுகை தவிப்பாய் மாறி பின் காதலாய் தேங்கி அவனையும் அதனுள் இழுத்துக்கொண்டு இன்ப அவதியில் சென்று முடிய, சிணுங்களுடன் அவன் மார்பில் கண்ணயர்ந்து படித்திருந்தவளை புரட்டிப் போட்டு அவள் இடக்கன்னத்தில் உலா சென்றான் கார்த்திக். விரல் முதலில் முந்திக்கொண்டு ஊர்வலம் சென்று திரும்பியிருக்க, அதனைத் தொடர்ந்து அவனது இதழ்களும் விரல் பாதையமைத்த வழி அவள் உச்சி முதல் பாதம் வரை பவனி வந்து அவள் மார்பிலே தஞ்சம் புகுந்தது.
“இனி ஒருமுறை என் புள்ள பசியாற்றப் போற அமுதசுரபியை அழகில்லை லாயக்குகில்லை ஒன்னுதுக்கும் உதவாதுன்னு சொன்னா கன்னத்துலேயே நாலு போடுவேன் பார்த்துக்கோ…” 
“நீங்க ஏற்கனவே நிறைய போட்டுட்டீங்க ஏ.சி.பி சார்… ஒழுங்கு மரியாதையா அடுத்த முறை என் பக்கத்துல வரும்போது ஷேவ் பண்ணிட்டு வரணும் சொல்லிட்டேன்… உங்க தாடி சொரசொரன்னு குத்துது… என் உடம்புல நிறைய லைன் போட்டிருக்கு…” என்று குற்றம் படித்தவள் அவன் முகத்தை பற்றி தன் முகத்திற்கு நேரே இழுத்து அவன் இதழ்களை கவ்வி கடித்துவைக்க, துள்ளி விலகியவன் போர்வையினுள் கைவிட்டு அவள் வெற்றிடையை கிள்ள இப்போது துள்ளுவது இவள்முறை.
“ஷ்… கை நிறைய வேலை பார்த்துடுச்சு… இப்போ சமத்தா அதை என் மேல போட்டுட்டு தூங்குங்க. எனக்கு தூக்கம் வருது, நீங்களும் ரெண்டு நாளா தூங்குன மாதிரியே தெரியலை…என்கூட தூங்குங்க.” என்று கட்டளையிட்டவள்,  சொன்னது போலவே அவனது கரத்தை தன் இடை சுற்றி போட்டுக்கொண்டு அவன் மூச்சுக்காற்றை செவியினில் வாங்கி, அதன் சூட்டை தன் தோளில் உணர்ந்தபடியே அவன் அணைப்பில் உறங்கிப் போனாள். 
தனக்கு முதுகு காட்டி தன்னை ஒட்டியே படுத்திருக்கும் மனைவியை ரசித்தவன் தனக்கு வெகு அருகில் தெரிந்த அவள் கன்னத்திலும் செவியிலும் இதழ் ஒற்றி எடுத்து பின் அதை அவள் தோள்பட்டையில் பதித்தபடி அவனும் உறங்கிப்போனான்.
இத்தனை நாள் பட்ட துக்கங்களை மறந்து இரு இதயங்களும் தேகங்களும் சங்கமமாகி உறங்க, மறுநாள் இத்தனை நிம்மதியான உறக்கம் கிட்டுமா என்ற கவலை எதுவுமின்றி அக்கணம் தங்களுக்கே தங்களுக்கான பொழுதாய் மாற்றிக்கொண்டனர். 

Advertisement