Advertisement

விழியை மேலுயர்த்தி பின் தாழ்த்திய மீரா ஆசுவாசமாய் பெருமூச்சிழுத்து, “இப்படி கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியலை அண்ணி.”
“எனக்கும் உன்கிட்ட வேற எப்படி கேக்குறதுன்னு தெரியலை மீரா.” 
வரதனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி திருமணம் செய்து கொண்டிருப்பவள் மனதில் கார்த்திக் என்ற தனிமனிதன் மேல் விருப்பு உடனே வரவில்லையென்றாலும் வெறுப்பு இல்லாமல் இருக்கிறதா என்று போட்டுவாங்கவே சுஜா கேள்வி எழுப்பினாள். மீராவிடம் சரியான பதில் இல்லையென்றாலும் அவளிடம் நேராய் இக்கேள்வியை கேட்க தயங்கிக்கொண்டே அமர்ந்திருந்தாள் சுஜா. இருவருமே அடுத்து என்ன பேசுவது எப்படி பேச்சை துவங்குவது என்று தேங்கி அமைதியை கடைபிடிக்க, மீராவின் அலைபேசி குறுஞ்செய்தி வந்திருப்பதை தெரிவித்தது. சுஜாவிடமிருந்து கையை உருவிக்கொண்டு அலைபேசியை எடுத்துப் பார்க்க கார்த்திக்தான் கிளம்பிவிட்டதாக அவளது முந்திய செய்திக்கு பதில் அனுப்பி இருந்தான். 
“கிளம்பிட்டாங்களாம், நீங்க அவங்களுக்கும் சேர்த்து மதிய லஞ்ச் செஞ்சுடுங்க…” என்றாள் மீரா இயல்பாய்.
“நீ செய் உன் அவங்களுக்கு. நான் இன்னைக்கு ரெஸ்ட்… வாந்தி எடுத்தே டயர்ட் ஆகிட்டேன்.” என்று சுஜா வேண்டுமென்றே கொட்டாவி விட, அதை கண்டுகொண்ட மீராவோ முறைப்புடன்,
“இவ்வளவு நேரம் இல்லாத சோர்வு இப்போ மட்டும் உங்களுக்கு வந்துடுச்சாக்கும்… எல்லோருக்கும்  சமைக்கும் போது ஒருபிடி அரிசி சேர்த்து போடுங்க அண்ணி…”
“அடடா இந்த மாதிரி நேரத்தில் அசதி வாந்தி எல்லாம் முன்னாடியே சொல்லிட்டு வராது… கொஞ்ச நேரம் முன்ன நல்லாயிருந்தேன் இப்போ டயர்ட்டா இருக்கு, இதெல்லாம் உனக்குன்னு வரும்போது புரியும். நான் போய் கொஞ்சம் கண்ணசந்துட்டு வரேன்…” என்ற சுஜா மீராவுக்கு பேச வாய்ப்பளிக்காது எழுந்து சென்றுவிட்டாள்.
அவள் சென்றதை கூட கவனியாமல் இருந்த மீராவின் எண்ணங்கள் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது சுஜா தெரிந்தே விட்டுச்சென்ற மிச்சங்கள். விதியை எண்ணி நொந்து தனக்குள்ளே மறுகிக் கிடந்தவளை குழந்தை குடும்பம் என்று புதிய கோணத்தில் சுஜாவின் வார்த்தைகள் இழுத்துச் செல்ல, அவள் உள்ளத்தை கேள்விகளால் நிறைத்தது கார்த்திக்கும்… கார்த்திக்குடனான இல்லற வாழ்வு மட்டுமே…
இல்லறம் நல்லறமாக அவள் அகத்தினுள் அவன் புக வேண்டும். அவனதுள் இவள் புக வேண்டும். இரண்டுமே எவர் வற்புறுத்தலும் இன்றி நிகழ வேணுமெனில் புரிதல் ஒன்று அங்கு புலர வேண்டுமே. அதற்கு அவள் மனம் ஒப்புமா என்ற சந்தேகம் தான் அவளுக்கு மெலிதாய் எட்டிப் பார்த்ததே ஒழிய எங்கும் அவன் பற்றிய ஐயங்கள் இல்லை, அவனகம் பற்றிய கவலையும் இல்லை. அவன்தான் ‘என்கூட இங்க வந்துறீயா? எனக்குன்னு நீ இருப்ப தானே?’ என்ற ஒரே வரிக் கேள்வியில் அனைத்தையும் புகுத்திவிட்டானே. இதற்கு மேலும் அவனகத்தில் அவளுக்காய் ஒதுக்கி வைத்திருக்கும் இடம் பற்றி தெளிவு வேண்டுமா என்ன! 
வாழ்க்கையின் பற்றுகோளாய் எண்ணி தன்னையும் ஒருவன் விரும்புகிறான். தன் அகம் நாடுகிறான். தன்னை தன் புறத்தோற்றத்தை கவனியாது மனதால் தன்னை தேடுகிறான் என்ற நிதர்சனம் புரிந்த நொடி அவள் கால்கள் என்னவோ தானாய் சமையலறையில் சென்றுதான் நின்றது.
“என்ன அம்மு ஏதாவது வேணுமா?” என்று அம்புஜம் கேட்டதற்கு,
“எனக்கு இப்போ உன் கிட்சன் வேணும். நீ போய் வேற வேலை இருந்தா பாரு…” என்று வெங்காயம் தக்காளி எடுத்துக்கொண்டே பதில் கூறிய மகளை விழிவிரித்து பார்த்து நின்றார் அம்புஜம்.
“என்ன பண்ண போற?” உதறளுடனே கேட்டார் அத்தாய்.
“ப்ச்… மதிய சாப்பாடுதான் செய்யப் போறேன். சும்மா இங்க நின்னு என்னை பார்த்துக்கிட்டே இருக்காத, எனக்கு ஒரு மாதிரி இருக்கு.” என்ற மகளை இன்னும் விழி அகற்றாமல் பார்த்து வைத்தார் அம்புஜம். கூடவே அவர் மகனும் சேர்ந்து கொண்டான்.
“ம்ச்… சொன்னா புரியாதா… சும்மா என்னையே பார்த்துட்டு நிக்காதீங்க. வெஜிடபில் பிரியாணிதான் செய்யப் போறேன்… நம்பி சாப்பிடலாம்.” என்றாள் மீராவே அவர்களின் பார்வையில் சங்கடம் கொண்டு… 
மற்ற இருவரும் அமைதியாகவே அவள் செயலை கவனித்துக் கொண்டிருக்க, தன் வேலையில் குறியாய் இருந்தவள், “அண்ணி பிரியாணி சாப்பிடலாமா? மத்ததை விட பிரியாணி ஈஸியா செஞ்சிடுவேன். சாம்பார் எல்லாம் வைக்க ரொம்ப நேரம் எடுக்கும்.” என்று கேள்வியாய் ஏறிட்ட மகளை கண்களுக்குள் நிரப்பிக்கொண்ட அம்புஜம், 
“ஒருநாள் தானே சாப்பிடலாம். அவளுக்கு சேரலைன்னா அப்பாக்கு காலையில் ஆபிசுக்கு கட்டிக்கொடுத்த எலுமிச்சை சாதம் இருக்கு. அதை சாப்டுப்பா…” 
“சொல்லியாச்சுல்ல நகருங்க இங்கிருந்து… நான் சமைக்கணும்.” என்று மகள் மறுக்க மறுக்க அம்புஜம் காய்கறிகள் நறுக்கிக்கொடுத்து சிறு சிறு உதவிகள் செய்து சமையல் முடிந்தவுடன் தான் நகர்ந்தார்.
வியர்த்து வழிந்த நீரை துவாலை கொண்டு துடைத்தவள் தன் உடையை குனிந்து பார்த்து முகத்தை சுழித்தாள். 
“நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வரேன். எப்படியும் அவர் வர இன்னும் ரெண்டுமணி நேரமாவது ஆகும், நான் அவர் வந்ததும் அவர்கூட சாப்பிடுக்குறேன். நீங்க எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டிற்கு அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
விரித்த விழி இன்னும் தன் இயல்பு நிலைக்கு வரவில்லை அம்புஜத்திற்கு. என்னடா நடக்குது இங்க என்ற தோரணையில் நின்றவர் மகனிடம் அதே பாவனையில், “யார் வர்றான்னு வரவேற்க இவ்வளவு ஆர்வமா இருக்கா? சமையல் எல்லாம் செய்யுறாடா…”
அவரின் பாவனையில் மெலிதாய் சிரித்த மகன் கண்களில் குறும்பு மின்ன, “உங்க மாப்பிள்ளை வராராம்… சுஜாகிட்ட சமைக்க சொல்லியிருக்கா அவள் முடியாதுன்னு சொல்லவும் இந்த வீட்டு மேடமே அவங்க வீட்டுக்காரருக்கு சமைக்க வந்துட்டாங்க. அவர் வர்றாருன்னு சொல்லத்தான் வந்தேன் அப்புறம் அம்மு சமைக்கிறதை பார்த்து அப்படியே நின்னுட்டேன்.”
“இப்போதானே ஊருக்கு போனாரு. அதுக்குள்ள வராரு… இவளும் ரெண்டு நாளா ஒரு மார்க்கமா தானே இருந்தா… இப்ப என்னடா திடீர்னு சுறுசுறுப்பா இருக்கா…”
“ம்மா… அவளை பார்த்தாலே தெரியலையா அவர் எப்போ வருவாருன்னு ஆவலா காத்திட்டு இருக்கா… யார் கண்டா அவர் திரும்ப ஊருக்கு போகும்போது இவளும் கூடவே போய்டுவாளோ என்னவோ… எதிர்பாராத மாற்றம் வந்தாலும் எல்லாமே நல்லதா தானே இருக்கு… நீங்க ஈஸியா விடுங்க. எனக்கு லஞ்ச் எடுத்து வைங்க. நான் சாப்பிட்டுட்டு கிளம்புறேன்.” என்று ராகவ் உண்டுவிட்டு அலுவலகம் சென்றுவிட, மீரா சொன்னது போல நேரம் கடந்து மதியம் இரண்டு மணிக்கு மேல்தான் வீடுவந்தான் கார்த்திக்.
கதவை திறந்துவிட்ட மாமியாருக்கு பெயருக்கு இதழை வளைத்து சிரித்த முகமாய் காட்டிக்கொண்டவன் ஒருவார்த்தை கூட பேசாது மீரா அறை வாயிலைக் கண்டு தயங்கி நிற்க,
“அவ ரூம்ல உங்களுக்காகத்தான் சாப்பிடாம கூட காத்திட்டு இருக்கா…” என்று அம்புஜமே அவன் முகத்தில் எதுவோ சரியில்லை என்று கண்டுகொண்டு மீரா பற்றிய தகவல் சொல்ல, லேசாய் தலையசைத்தவன் தன் தயக்கத்தை உடைத்து அவளறைக் கதவை தட்டினான்.
தட்டிய உடனேயே கதவு திறக்கப்பட, மீரா உணரும் முன்னமே அவள் தோள் சாய்ந்து அவளிடம் சரணடைந்திருந்தான் கார்த்திக்.
பேச்சுக்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட கார்த்திக்கின் எதிர்பாரா அணைப்பில் திகைத்த மீரா தன்னை சுதாரித்துக் கொண்டு அணைப்பில் இருந்து வெளிவந்து கதை அடைக்க, தலை குனிந்தபடி நின்றிருந்தவன் பொத்தென அப்படியே கீழே அமர்ந்துவிட்டான்.
கசங்கிய முகத்தில் இரண்டு நாள் மழியக்கப்படாத குறுந்தாடியுடன் காணவே சகிக்காத தோற்றத்தில் துவண்டிருந்தவனை நெருங்கிய மீரா அவனெதிரே முழங்காலிட்டு அமர்ந்து தன் நடுங்கும் கரங்களை அவன் கரத்தின் மீது வைக்க, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவன் அக்கரத்திலேயே தன் முகம் பதித்தான்.
“என்… என்னாச்சு ஏன் இப்படி இருக்கீங்க?”
அவள் கேட்க வேண்டும் என்று காத்திருந்தவன் போல திக்கியவன் கண்களில் ஊறிய கண்ணீரை மறைக்காது, “என்… என்னால முடியல… என்னோட வாழ்க்கை முழுசும் பொய். நானும் அம்மாவும் ஏமாந்துட்டோம்… நான்… நான் தோத்துப்போய்ட்டேன். மகனாவும் தோத்துட்டேன், போலீஸாவும் தோத்துட்டேன். நான் யாருக்கும் நியாயம் செய்யல… என் கண்ணு முன்னாடியே அவரை அப்படி பார்த்தேன் ஆனா மகனாவும் எதுவும் செய்ய முடியல, போலீஸாவும் எதுவும் செய்ய முடியல. அவர் முன்னாடி தோத்துட்டேன்… அவரோட பண பலம் முன்னாடி தோத்துட்டேன். அவரோட பாசம் முன்னாடி தோத்துட்டேன். அவரை எதிர்க்க முடியாம கோழை மாதிரி ஓடி வந்துட்டேன்…” என்று தன்பாட்டிற்கு புலம்புவனைக் காண நெஞ்சடைத்தது அவளுக்கு. 
அவளது உளைச்சல்கள் எல்லாம் எங்கோ பின்சென்றுவிட தன் முன் உடைந்து போயிருப்பவன் மட்டுமே பிரதானமாய் தெரிய, தேற்றுபவர் யாரும் இல்லை என்ற தோரணையில் இடைவிடாது புலம்புவனை தேற்ற வார்த்தைகள் தேடித் தவித்தாள் மனைவி. வார்த்தைகள் அகப்படாமல் போக அப்படியே சம்மணமிட்டு அமர்ந்தவள் அவன் தலையை நிமிர்த்தி அவன் விழிகளில் பெருகி வழிந்த நீரை துடைத்துவிட்டாள்.
“எதிர்த்து போராட தூண்டும் தன்னம்பிக்கையான வார்த்தைகள் எல்லாம் எனக்கு மட்டும்தானா உங்களுக்கு சொல்லிக்க மாட்டீங்களா?” என்று இயல்பு போல் மீரா கேட்க, தடதடத்து துடிக்கும் இதயத்திற்கு போட்டியாய் அவன் அதரங்கள் நடுங்கி, விழிகள் அச்சத்துடன் அவளை நோக்கி,
“எனக்காகன்னு என்கூடவே இருந்து எனக்கு நீ சொல்ல மாட்டீயா?” என்று கேட்டிட, மீராவின் இமைகள் படபடத்து கலங்கிவிடவா என்று அவளது கண்களில் இருந்த நீரை ஒரேகோடாய் கீழிறக்கி பார்வையை தெளிவாக்கியது. தெளிவானது பார்வை மட்டுமல்ல மனமும் என்று அவளது செயல் நிரூபித்துவிட ஆறுதலாய் அவள் நெஞ்சத்தில் சாய்க்கப்பட்டிருந்தவன் கண்களை இறுக மூடி, அவளின் அணைப்பை முழுமையாக்கி ஏற்றுக்கொண்டான்.

Advertisement