Advertisement

“அர்ச்.. அர்ச்சனா என்ன பண்றான்னு தெரியுமா? என்… என்கூட ப்ராஜெக்ட் பண்ணாலே அவ…” 
இதுக்குத்தான் இவ்வளவு பதட்டமா என்பது போல நிதானமாய் பார்த்த நீலிமா, “அவளுக்கு மும்பைல ஏதோவொரு டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை கிடைச்சு ஆள் எஸ்கேப். அங்கேயே செட்டில் ஆகிட்டான்னு நினைக்குறேன், உனக்குத்தான் தெரியுமே நம்ம பீல்டில் வெளிப்படையா எதையும் ஷேர் பண்ண முடியாதுன்னு, சோ அவ காண்டாக்ட் கட் ஆகிடுச்சுன்னு நம்ம க்ரூப்புக்கு பொதுவா இருக்குறவ சொன்னா.”
நீலிமாவின் பதிலில் வெளிப்படையாக நிம்மதி பெருமூச்சிவிட்டு ஆசுவாசமாய் அமர்ந்தவளை விந்தையாய் பார்த்த நீலிமா, “ஏதாவது பிரச்சனையா மீரா? என்று கேட்க, அவளிடம் மறுப்பாய் தலையசைத்தவள்,
“உனக்கு நிறைய வேலை இருக்கும் நீ கிளம்பு நீலிமா. அண்ணா வந்துடுவாங்க, நான் இருந்துக்குறேன்.” என்றவளை நம்பாமல் பார்த்த நீலிமா தயங்கி அங்கேயே நிற்க,
“என்ன?” என்று நிமிர்ந்து பார்த்தாள் மீரா.
“இல்லை… கொஞ்ச நேரம் முன்னாடி தனியா இருக்க யோசிச்ச இப்போ…? உன்னை எப்படி தனியா விட்டுட்டு கிளம்ப?” என்று நீலிமா இழுக்க கண்களை இறுக மூடித்திறந்த மீரா,
“கொஞ்சம் நேரம் முன்னாடி நான் ஸ்ட்ராங்கா இருக்கனும்னுங்கிற மாதிரி பேசிட்டு இப்போ என்னை தனியா விட்டுட்டு போக இவ்வளவு யோசிக்குற? நான் எல்லாரையும் சார்ந்து இருக்கணும்னு தான் ஆசைப்படுறீயா?” என்று தீர்க்கமாய் பார்த்து கேட்க, நீலிமா என்ன சொல்வது என்று தெரியாமல் அவளிடம் தலையசைத்துவிட்டு,
“என் நம்பர் தரேன் மறக்காம போன் பண்ணு, நான் போன் போட்டா எடுப்பீயோ என்னவோ…” என்று சொல்லி தன் எண்ணை அவளிடம் கொடுத்துவிட்டு ராகவை தேடிச் சென்றாள். அவளை நம்பித்தானே மீராவை விட்டுச் சென்றிருந்தான் அவன் என்ற நினைப்பில் மீராவிடம் திடுமென ஏற்பட்ட மாற்றத்தை அவனிடம் சுட்டிகாட்டி அவள் தனித்திருக்கிறாள் என்பதையும் சொல்லிவிட வேண்டும் என்று கல்லூரி முதல்வர் அறை தேடிச் சென்றாள். 
அதற்குள் மனதில் சிலவற்றை கணித்த மீரா அதிகம் யோசிக்கவெல்லாம் இல்லை உடனே கார்த்திக்கு அழைத்தாள். அவனோ பல அழைப்புகளுக்கு பிறகு அவளின் பொறுமையை சோதித்த பின்னே தான் எடுத்தான். அழைப்பை ஏற்ற நொடி அவனது மூச்சுக் காற்று கூட அவள் செவியை தீண்டியிருக்காது பொரிய ஆரம்பித்துவிட்டாள் இவள்.
“ஏன் போன் எடுக்க இவ்வளவு நேரம்? நான் கூப்பிட்டா உடனே எடுக்கணும்னு தெரியாதா? நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேச கூப்பிட்டிருகேன் நீங்க எனக்கென்னனு போன் எடுக்காம இருக்கீங்க? நான் காட்டு கத்து கத்திட்டு இருக்கேன் இப்போவும் நீங்க ஒரு ஹலோ கூட சொல்லல…”
மீரா பொரிந்துவிட்டு கோவத்தில் மூச்சு வாங்க, செருமலுடன் உள்ளே சென்ற குரலில், “என்கூட இங்க வந்துறீயா? எனக்குன்னு நீ இருப்ப தானே?” என்று கெஞ்சலாய் ஒலித்தது அவனது அடிபட்ட குரல்.
“என்ன?” என்றுதான் புருவம் சுருக்கினாள் மீரா.
அவளது கேள்விக்கு கார்த்திக்கின் அமைதியே பதிலாய் இருந்தது. எண்ணங்களில் ஒருவரை கடவுளென உயர்ந்த இடத்தில் வைத்து துதித்து, அவருக்கு பெருமை தேடித்தர வேண்டுமென்று உழைத்து, பேர் சொல்லும் பிள்ளையாய் இருக்க வேண்டும் என்று என்னென்னவோ எண்ணியிருந்தவன் எண்ணங்களை எல்லாம் சுக்குநூறாய் உடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கியவரை பற்றி எண்ண எண்ண எனக்கென உண்மையான உறவு இனி யார் இருக்கிறார்கள்? முதுகில் குத்தினாலும் பரவாயில்லை மலையளவு நம்பிக்கை கொடுத்துவிட்டு பின் உள்ளத்தை குத்தி குதறி ரணமாக்காமல் தன் நம்பிக்கையை தன் பாசத்தை போலியின்றி திருப்பித் தர எவரேனும் இவ்வுலகில் உண்டா என்ன? உறவுகளற்ற தனிமரத்தை விட அனைத்தும் இருந்தும் இல்லாமல் போகும் வலியை குறைக்க இவ்வாழ்நாளில் எந்த மருந்தாலும் முடியுமா? 
துரோகம். மன்னிப்பு என்ற வார்த்தை துரோகத்தின் அருகில் கூட செல்ல முடியாது. அப்படியிருக்கையில் பாவத்தை எங்கு சென்று வைக்க? இரத்தத்தில் கலந்திருக்கும் பாவத்தை, பாவத்தில் சேர்த்த பணத்தில் உண்டு உறங்கி வளர்ந்த உடம்பைத்தான் என்ன செய்திட முடியும்! தனக்கும் தன் அன்னைக்கும் துரோகம் செய்து இத்தனை வருட வாழ்க்கையே போலியாக்கிய அயோக்கியனுக்கு மகனாய் பிறந்த பாவத்தை எங்கு சென்று தீர்க்க! அவர் கட்டி காத்து சேகரித்து வைத்திருக்கும் பாவ மூட்டையை எங்கனம் சென்று இறக்கி வைக்க? என்பது போன்ற சிந்தனைகள் இரவிலிருந்து துரத்திக் கொண்டிருக்க, அதற்கான பதிலோ அதிலிருந்து விடுபட உதவுபவரோ இல்லாமல் அறையில் அடைந்து கிடந்தவனை உயிர்பெற செய்யும் விதமாய் உயிர்த்து அலறியது அலைபேசி. அலைபேசியிலோ உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிய மீராவின் உரிமையான கோபம் அவளை பற்றுகோளாய் பற்றிக்கொள்ள துடித்து அவளிடம் மன்றாடியது. அவனின் அலைப்புறுதலும் தவிப்பும் தெரியாத மீரா அவனின் பேச்சில் புரியாமல்தான் நின்றாள்.
“ஹலோ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பேசுங்க? நான் காலேஜ் வந்திருக்கேன், எக்ஸாம்ஸ் பத்தி விசாரிக்க…” என்று இவள் தகவல் சொல்ல, அவன் செருமும் அரவத்தை தொடர்ந்து,
“நல்லா படி கண்ணம்மா… படிப்பு மட்டும்தான் ஏமாத்தாம கடைசி வரை உன்கூடவே நிலையா நிக்கும். மத்தது எல்லாமே வேஸ்ட்.” என்று பிடிப்பில்லாமல் அவன் பேசவும்தான் மீராவுக்கு அவனிடம் தென்படும் மாற்றம் புலப்பட்டது. எப்போதும் திடமாய் நம்பிக்கையாய் பேசுபனிடம் இப்போது மருந்துக்கும் திண்மை இல்லை.
“ஏன்… என்னாச்சு? ஏன் ஒருமாதிரி பேசறீங்க?” என்ற அவளது கேள்விக்கும் செருமிவிட்டு, “ம்கூம்… ஒன்னுமில்லை. காலேஜ்ல இருகேன்னுதானே சொன்ன. லைப்ரரி போய் தேவையான நோட்ஸ் எடுத்துக்கோ… நான் அப்புறம் பேசுறேன்.” என்று அழைப்பை துண்டிக்கப் போனவனை அவசரமாய் தடுத்தாள் அவள்.
“வேலை இல்லைனா கிளம்பி இங்க வாங்க.” என்று தணிவாகவே வேண்ட, அதற்காகவே காத்திருந்தவன் போல,
“உடனே கிளம்பி வரேன்.” என்று சொல்லிட, அவன் குரலில் தெரிந்த தவிப்பில் அவசரத்தில் புருவம் சுருக்கினாள் மனைவி. 
‘நான் கொடுக்க வேண்டிய ரியாக்ஷன் எல்லாம் இவரு எதுக்கு கொடுத்திட்டு இருக்காரு.’ என்று மனதில் நினைத்தபடி அவனை வரச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
‘நான் தான் விஷயம் கண்டுபிடிச்ச அதிர்ச்சியில இருக்கேன். இவருக்கு என்னவாம் இப்போ? என்னை தேத்துறதை விட்டுட்டு அவரை நான்தான் தேத்தணும் போல… அப்படி என்ன நடந்திருக்கும்?’ என்று அவளது கவனம் முழுதும் இப்போது கார்த்திக்கின் மீதுதான்.
“அப்படி என்ன தீவிரமான யோசனையில் இருக்க? நீ தனியா இருக்கேன்னு தெரிஞ்சு நான் பயந்துட்டே அவசரமா வந்தேன்…” என்ற ராகவின் குரலில் கூட தெளியாதவள் அவனை கேள்வியாய் நோக்க,
“பிரன்சிபல்கிட்ட பேசிட்டேன். நீயும் ஒருமுறை அவங்களை வந்து பார்த்து பேசிட்டா நாம எக்ஸாமுக்கு அப்ளை பண்ணிட்டு கிளம்பலாம்.” என்று அவன் சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் முதல்வர் அறை நோக்கி செல்பவளை வியப்பாய் பார்த்தான் தமையன்.
எப்படியும் ஏதாவது முரடு பிடிப்பாள் எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டே வந்தவனுக்கு அவளின் இயல்பான நடவடிக்கைகள் வியப்பையே கொடுக்க மகிழ்ச்சியுடன் தங்கையை தொடர்ந்தான் அந்த தமையன்.
கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் அறிவுரை வழங்கிவிட்டு பின்னரே அலுவலக அறைக்கு அனுப்ப, அப்பாடா என்று விரைவாய் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு ராகவுடன் காரில் ஏறியபின் அவள் கவனம் முழுதும் அலைபேசியிலேயே நிலைத்தது.
கார்த்திக் கிளம்பிவிட்டானா எங்கிருக்கிறான் என்று குறுஞ்செய்தி மூலம் அவனுக்கு கேள்விகளை அனுப்பிக்கொண்டே இருந்தவள் அவனது பதிலுக்காய் காத்திருந்து காத்திருந்து கடுப்பாகிக் கொண்டிருந்தாள்.
அவளது உணர்வுகள் தவிப்பில் துவங்கி எரிச்சலை நோக்கி பயணிப்பது போலவே காரும் அவர்கள் வீட்டை நோக்கி பயணப்பட, ராகவின் பார்வை நொடிக்கொருமுறை தங்கையை தொட்டு மீண்டது. யாராவது அறிவுரை என்னும் பெயரில் அவளது ரணத்தை கீறிவிட்டால் கூட்டிற்குள் ஒளிந்துகொண்டு மறுகுபவள் இன்றோ கல்லூரி முதல்வர் திரும்பத் திரும்பத் அவளுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து வருந்தி வருத்தம் தெரிவித்து அந்த விஷயத்தையே கிளற, மீராவிடம் எப்போதும் தென்படும் அதற்கான எதிர்வினையே இல்லை. அவர் பேச பேச மண்டையை ஆட்டினாலே ஒழிய அவரது வார்த்தைகள் எல்லாம் புத்தியில் ஏறவே இல்லை. அவளின் கவனம் முழுதும் திசை திரும்பி புதிதாய் தான் கண்டுபிடித்திருக்கும் விஷயத்திலும் கார்த்திக்கிடம் தென்பட்ட மாற்றத்தில் மட்டுமே மாறி மாறி உழன்றது.
அந்த தாக்கத்திலிருந்து வெளிவர முடியாதவளாய் வீடு வந்தும் யாரையும் கவனிக்காமல் தன் அறைக்குச் சென்றவள் தன்னுடைய ஹார்ட் டிஸ்க்கையும் ப்ராஜெக்ட் சம்மந்தமான கோப்புகளையும் தேடினாள். ஆனால் அது சிக்குவேனா என்று எங்கோ மறைந்து போக்கு காட்டியது.
“ம்மா என்னோட ஹார்ட் டிஸ்க்கும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தீசிசோட சில பைல்ஸ் வச்சிருந்தேன். அதெல்லாம் எங்க? என் ஷெல்பில் தானே எல்லாம் இருந்துச்சு? எங்க போச்சு?” என்று அறையிலிருந்தே குரல் கொடுத்தாள் மீரா.
“என்னடா உன் தங்கச்சிக்கு திடீர்னு படிப்புல இவ்வளவு ஆர்வம் பொங்குது. இவளை இந்த முறை நம்பலாமா இல்லை இந்த மாற்றமும் கொஞ்ச நேரம்தானா? அங்க பெரிய ரகளையே கூட்டியிருப்பான்னு நினைச்சு அவளை எப்படி சமாளிக்கன்னு யோசிச்சிட்டு காத்திருந்தேன்.” என்று மகளுக்கு பதில் கூறாது மகனின் காதில் முணுமுணுத்தார் அம்புஜம்.
“என்னனு தெரியலமா… நானும் இவள் பயந்து மனசு கஷ்டப்படுவான்னு நினைச்சேன். ஆனா அவ கவனம் முழுக்க வேறெதிலோ இருக்கு. போனை பார்த்துக்கிட்டே தான் வீட்டுக்கு வந்தா…” என்று ராகவும் அன்னைக்கு தகவல் சொல்ல, மீரா அதற்குள் மூன்று முறை அழைத்திருக்க சுஜா துணைக்குச் சென்றாள்.
“என்ன மீரா திடீர்னு ப்ராஜெக்ட் பேப்பர் எல்லாம் தேடிட்டு இருக்க? காலேஜ்ல என்ன சொன்னாங்க? எக்ஸாம் எழுதுறதில் எந்த பிரச்சனையும் இல்லையே?”
தலையை ஷெல்ப்பில் விட்டு தேடியவள் தலையை நிமிர்த்தாமலே, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை அண்ணி. எனக்கு முக்கியமான சில டீடைல்ஸ் இப்போவே வேணும். இங்கதான் இருந்துச்சு… நீங்க எங்கேயாவது எடுத்து வச்சிருக்கீங்களா?” என்று மீரா அவசரமாய் கேட்க, புருவம் உயர்த்திய சுஜா,
“நாங்க யாரும் எடுக்கலையே மீரா. சொல்லப்போனா ஆறு மாசமா நம்ம வீட்டுல எந்த பொருளையும் ஒழுச்சு தூக்கி போடலையே. நல்லா தேடிப்பாரு. வச்ச இடத்தில்தான் இருக்கும்.” என்ற சுஜாவும் அவளோடு சேர்ந்து தேட, அவள் கையில் அகப்பட்டது என்னவோ மீராவின் டைரிதான். எதார்த்தமாய் அவள் அதை பிரிக்க பாய்ந்து வந்து அதை பிடுங்கினாள் மீரா.
“இது… இதுல இல்லை… நீங்க போங்க நானே தேடிக்கிறேன்.” என்று திணறலுடன் சொன்ன மீராவை சந்தேகமாய் பார்த்த சுஜா, “என்ன மறைக்கிற மீரா?”
“புதுசா ஒன்னுமில்லை அண்ணி. நீங்க எதுவும் போட்டு குழப்பிக்காம உங்க அண்ணனை கவனிக்குற வேளையில் இறங்குங்க…” சுஜாவை சமாளிக்கவென பேச்சை திசை திருப்பினாலும் கார்த்திக்கை பற்றி பேசும் போது மனம் சற்று இலகியது போலவே இருந்தது அவளுக்கு.
“என் அண்ணனா?” இதுவரை இதுபோல கார்த்திக்கை பற்றி இயல்பாய் பேசிடாததால் சுஜாவுக்கு சட்டென அவள் யாரை சொல்கிறாள் என்று புரியவில்லை.
“பாசமலரை அதுக்குள்ள மறந்தாச்சா… அவர் வரட்டும் நான் சொல்றேன் புதுசா உறவாகியிருக்கிற உங்க அன்புத் தங்கச்சி உங்களை மறந்துட்டாங்கன்னு…” என்று மீரா கேலியாய் இதழை வளைக்க, கண்ணில் நீர் சூழவா என்று நின்றது சுஜாவுக்கு. 
“நீ எப்போதும் இப்படியே இரு மீரா… குறும்பா சிரிச்சிகிட்டே கிண்டல் பண்ணிக்கிட்டு பார்க்கவே அழகா இருக்க…” என்று சுஜா உணர்ந்து பேச, மீராவின் பார்வை தாழ்ந்தது.
“என்ன உடனே அமைதியாகிட்ட? உனக்கு கார்த்திக் அண்ணனை பிடிச்சிருக்குதானே?” என்று கேள்வி எழுப்பிய சுஜா, மீராவின் கரங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

Advertisement