Advertisement

*10*
வெளியுலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வழக்கம் போல அந்த ஞாயிறு மீராவுக்கு கழிந்துவிட, கார்த்திக்கிடமிருந்து எந்த அழைப்பும் குறுஞ்செய்தியும் இல்லை. ஞாயிறு முழுதும் யோசனையில் கழித்தவள் திங்களன்று பொழுது புலர்ந்த பின்னே முழிப்பு தட்ட, வேகமாக எழுந்து நேரம் பார்த்த கையோடு குளியறை புகுந்து தயாராகி பரபரப்பாய் வெளியே வந்தாள்.
“நானே உன்னை எழுப்பனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். நீயே வந்துட்ட… சீக்கிரம் சாப்பிட்டுட்டு தேவையானது எல்லாம் எடுத்துக்கோ. காலேஜ் போய் என்னனு பார்த்துட்டு வந்துடுவோம்.” என்றான் ராகவ் உணவு மேசையிலிருந்து.
வியப்பாய் ஒரு பார்வை பார்த்தவள், “உனக்கு எப்படி தெரியும் நான் இன்னைக்கு அங்கே போறேன்னு?”
“கார்த்திக் ஊருக்கு கிளம்பின அன்னைக்கு நைட்டே உன்னை கூட்டிட்டு போகச்சொல்லி மெசேஜ் பண்ணிட்டாரு.” என்றவன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு எழ, யோசனையுடன் உண்ண அமர்ந்தாள் அவள். 
‘நேற்றுக்கு முந்திய நாள் ராகவை கூப்பிடக்கூடாது என்று என்னிடம் மல்லுக்கு நின்றுவிட்டு இந்த பக்கம் அவனே சிபாரிசு செய்திருக்கிறான்.’ என்று நினைத்துக்கொண்டவள் வேகமாக கிளம்பி கல்லூரி சென்றாள்.
அங்கு செல்லும் வரை அவளுக்கு தன்னை குறித்த நினைப்பெல்லாம் இல்லை. தான் என்ன செய்கிறோம்? என்ன உணர்கிறோம்? எங்கு செல்கிறது வாழ்க்கை? கார்த்திக்குடனான தனக்கிருக்கும் உறவு உருவம் பெறுகிறதோ? பழிவாங்கவென திருமணம் செய்துவிட்டு இப்போதென்ன மனம் இந்த வாழ்க்கைக்கு பழகிக்கொண்டுவிட்டதே என்ற சிந்தனை தான். ஏற்கனவே உளைச்சலில் இருக்க இதுதான் வேண்டும் என்று உறுதியாய் முடிவெடுக்க முடியாமல் மனம் தடுமாறியது. அந்த தடுமாற்றம் சஞ்சலத்தை கொடுக்க உள்ளம் மெல்ல சோர்ந்தது. எதுவாகினும் அவளே முட்டிமோதி வெளிவரட்டும், முடிந்த அளவு எல்லாம் செய்தாயிற்று என்று ராகவ் அவளின் மெளனத்தை அமைதியாய் ஏற்றுக்கொண்டு காரை செலுத்தினான். ஆனால் அவளின் அமைதி எல்லாம் கார் கல்லூரி வளாகத்தை நெருங்கும் வரைதான். கார் கல்லூரிக்குள் நுழையவுமே பரபரப்பு தொற்றிகொண்டது மீராவை.
முகத்தை வேகமாக தன் துப்பட்டா கொண்டு மூடிக்கொண்டவள் முகமூடி கொள்ளைக்காரி போலத்தான் காரிலிருந்தே இறங்கினாள். இறங்கியதும் ராகவ்வை வால்பிடித்துக் கொண்டு அவனை ஒட்டியே நடக்க, கல்லூரி துவங்கிய நேரமாதலால் மாணவர்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. எதிரில் யாரும் தெரிந்தவர்கள் வருகிறார்களா? தன்னை இந்த கோலத்தில் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அவர்களும் மற்றவர்கள் போலவே பரிதாபப் பார்வை வீசுவார்களா இல்லை தன் அழகை வைத்து தன்னை ஒதுக்குவார்களா என்று ஏதேதோ சிந்தித்து வந்தவளை பரிச்சயமில்லாத குரல் தடுத்தது.
“ஹேய்… மீரா? எப்படிடி இருக்க? அப்படியே மாயமாகிட்ட. உன் நம்பரை தேடிப்பிடிச்சு போன் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது.” 
யாரது என்பது போல நிமிர்ந்து பார்க்க அவளுடன் படித்த தோழி ஒருத்தி அவளை ஆவலோடு பார்த்து நின்றிருந்தாள். அவளது ஆவல் மீராவையுமே தொற்றிக்கொண்டது. அந்த பெண் அவளுடன் ஒன்றாய் படித்தவளாகினும் அவளிடம் பெரிதாய் பேசியதில்லை மீரா. அந்த பெண் தனி குழு இவள் தனி குழு. இரண்டு குழுவுமே முட்டிக்கொண்டு தான் இருப்பர். அப்படிப்பட்டவள் இன்று வந்து பேசவும் உற்சாகமாய் உணர்ந்தாள் மீரா. சொந்த தோழிகளே தொடர்பை மெல்ல நிறுத்தியிருக்க இந்த பெண் வந்து பேசுகிறாளே என்ற பூரிப்பு மனதை நிறைத்தது.
“நீ நீலிமா தானே?” 
“என் பேர் கூட தெரியுது உனக்கு. எப்படி இருக்க? இது அண்ணனா?” என்று இயல்பாய் பேச தன்னுடைய தோழிகள் ஏன் இதுபோன்றில்லை என்ற விரக்தி எட்டிப்பார்த்து அடங்கியது மீராவுக்கு. 
ராகவ் இவர்களுக்கு இடையில் வராது நீலிமாவை பார்த்து லேசாய் தலையசைத்துவிட்டு, “நீங்க பேசிட்டு இருங்க. நான் பிரின்சிபலை பார்த்துட்டு வரேன்.” என்று பொதுவாய் சொல்லிவிட்டு நகரப் பார்க்க, அவன் கையை கெட்டியாக பிடித்துகொண்டாள் மீரா.
“உன் பிரெண்டோட பேசிட்டு இரு அம்மு.” என்று அழுத்தமாய் மொழிந்தவன் அவள் கையை விடுவித்து அதில் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு அர்த்தமாய் பார்வையை செலுத்திவிட்டுச் செல்ல தவிப்புடன் நின்றாள் மீரா.
“என்னாச்சு? அங்க பென்ச்சில் உட்கார்ந்து பேசலாம் வரியா?” என்று நீலிமா அவளை தயக்கமாய் பார்த்து கேட்க மீராவுக்கு அதை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இவளை விட்டால் தனியாக அல்லவா நிற்க வேண்டும்.
அமைதியாய் அவளைத் தொடர்ந்தவள் ஒருவித சங்கடத்துடன் பதட்டத்திற்கு இடமளித்து விழிகளை அங்குமிங்கும் உருட்டினாள்.
ஐந்து நிமிடம் பொறுத்துப் பார்த்த நீலிமா மீராவிடம் எந்த பிரதிபலனும் இல்லை என்பதைக் கண்டு எழுந்து சென்றுவிடுவோமா என்று யோசிக்கும் நேரம் மீராவின் தயக்கம் அவளை கட்டிப்போட்டது.
“நாம அவ்வளவாக பேசியதில்லை தானே?” என்று நீலிமா இயல்பாய் பேச்சை துவங்க முயல, மீரா தயங்கித் தயங்கி, “ஒரே க்ளாசா இருந்தாலும் நீங்க ஒரு க்ரூப் நான் வேற. நம்ம ரெண்டு க்ரூப்பும் அவ்வளவா பேசிக்கிட்டதே இல்லையே.”
“நான் இங்கேயே எம்.ஃபில் சேர்ந்திருக்கேன். நீயும் அதுக்குத் தான் வந்தியா? லைப் எப்படி போயிட்டு இருக்கு?”
“இல்லை… நான் இன்னும் எக்ஸாம்ஸ் எழுதல. அதுதான் கம்மிங் செம்ல எழுதலாமான்னு விசாரிக்க வந்தேன்.” என்று மீரா தயக்கத்தை விட்டு வெளிவர முயன்று பேச, நீலிமாவும் தனக்கிருந்த சந்தேகத்தை கேட்டாள்.
“நீ ஏன் இப்படி முகத்தை மூடியிருக்க?” 
மீராவின் முகம் சுருங்கி, கண்களில் பிரித்துணர முடியாத வலி வந்துபோக, அவள் விழிகளில் தெரிந்த மாறுதலில் சுதாரித்த நீலிமா தெளிவாய், “இந்த பூமி நாம எல்லோருக்கும் பொதுவானது தானே… யாருக்கும் பயந்து நீ உன்னோட உரிமையை விட்டுக் கொடுக்கணும்னு இல்லை.” என்க, என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பார்த்தாள் மீரா.
“இங்கே பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அது எந்த நிறத்தில் இருந்தாலும் உருவத்தில் இருந்தாலும் நிறை குறை என்று எப்படி இருந்தாலும் வாழ முழு உரிமை இருக்கு. மனிதன் என்று இல்லை மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, பூச்சு, நுண்ணுயிரி என்று எல்லாத்துக்கும் வாழத் தேவையான அளவுக்கு முழு சுதந்திரம் இருக்கு. அவ்வளவு ஏன் மன்னிக்க முடியாத தவறு செய்தவர்கள் கூட நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடமாடும் உலகமிது. அப்படியிருக்கும் போது அங்குமிங்குமாய் சிதறி கிடக்கும் சில அற்ப மனிதர்களின் வார்த்தை தாக்குதலுக்கு பயந்து நீ ஏன் ஒளிஞ்சு, மறைஞ்சி, மறைச்சிகிட்டு வாழனும்? அநியாயம் இந்த உலகிலே உன் ஒருத்திக்கு மட்டும் நடக்கல… விதவிதமான முறையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதர்மங்கள் நடத்துட்டு தான் இருக்கு. அதில் சிறு துளி தான் நீ.”
“சோ? எனக்கு நடந்தது எல்லாம் பெரிய விஷயமே இல்லைனு தூக்கிபோட்டுட்டு போயிட்டே இருக்கணும் அப்படித்தானே? நீங்க எல்லோருமே வெளில இருந்து என்னோட நிலைமையை பார்க்குறீங்க ஆனால் நான் அதிலேயே வாழறேன். அதோட பின்விளைவுகளை அவமானங்களை சுமக்குறேன். வலி அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். இட்ஸ் ஈசி டூ ஜட்ஜ் எனிவொன் வித் அவுட்டர் ப்ரெஸ்பக்டிவ். பட் யூ நெவர் நோ வாட் மஸ்ட் பீ கோயிங் வித் தட் டோர்மெண்ட்டட் சோல்.” என்று மீரா காட்டமாய் எதிர்க்க, தன் பேச்சிலிருந்து பின்வாங்கவில்லை நீலிமா.
“லுக் இதுதான் இப்போ பிரச்சனை. நான் உன்னோட வலியை கொச்சைப்படுத்தல… வலியை பெரிதுபடுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உன்னோட ஆற்றலை வீணாக்கிக்காதேனு தான் சொல்றேன். இப்போ நீ இப்படி இருக்கிறதால பாதிப்பு யாருக்குன்னு நினைக்கிற? உனக்கும் உன்னை சார்ந்தவர்களுக்கும் தான்… இன்னும் கொஞ்ச வருடம் கழித்து உன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா நீ மட்டுமே ஒரே இடத்தில் நின்னுட்டு இருப்ப… மத்தவங்க எல்லாரும் உன்னை கீழ தள்ளிட்டு முன்னேறி இருப்பாங்க. இப்போ உனக்கு துணையா இருக்கிறவங்க கூட அவங்கவங்க வாழ்க்கையில் எங்கேயோ போயிருப்பாங்க… உனக்கு தெரியாதது இல்லைதான் பட் ஜஸ்ட் சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். சாய்ஸ் அண்ட் லைப் இஸ் யுவர்ஸ்…” என்று நீலிமா அமைதியாகிவிட, மீராவும் நீலிமா கூறியதை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். 
இதுவரை எவர் சொல்லி கேட்கும் நிலையில் இல்லாமல் இருந்தவள்தான், ஆனால் இயற்கை அதனின் எழிலை வீசி அவள் மனதை குளுமையாக்கி இருக்க, மனம் அலைபாயாமல் நீலிமாவின் வார்த்தைகளை உருபோட்டது. 
வார்த்தைகளுக்கு இருக்கும் வீரியம் அளவிட முடியாத ஆழங்களை கடந்து புதைந்து கொள்ளும். அந்த ஆழம் சில நேரம் தேவைப்படுவதாக இருக்கும், சில நேரம் ஆழமே ஐமிச்சமாகிவிடும். இவளுக்கோ இரண்டும்கெட்டானாய் நீலிமாவின் வார்த்தைகள் ஒரு மூலையில் சேகரமாகிக் கொண்டது. அந்த நேரத்திற்கு அதை பயன்படுத்திக்கொள்ளவும் இல்லை. அதற்காக அதை முற்றிலும் ஒதுக்கித்தள்ளவும் இல்லை.
சொற்கள் விடைபெற்று மெளனம் சூழ்ந்துகொள்ள இருவருமே பேச முற்படவில்லை. ஏற்கனவே அதிகம் பேசிவிட்டோமோ என்ற எண்ணத்தில் நீலிமா வாயை மூடிக்கொள்ள, மீராவுக்கோ என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தாள். பதினைந்து நிமிடங்கள் நிசப்தமாகவவே கடக்க, அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை இருவருக்குமே… ராகவ் எப்போதுடா வருவான் என்று இருவருமே கல்லூரி அலுவலகம் இருக்குமிடம் நோக்கி விழிகளை செலுத்த,
“அண்ணன் போய் ரொம்ப நேரம் ஆச்சு. நாம என்னனு போய் பார்ப்போமா? என்று நீலிமா எழுந்துகொள்ள மீராவும் சட்டென எழுந்தாள்.
“அதுக்குமுன்ன ரத்னா மேமை பார்த்துட்டு வந்துருவோம் என்கூட வரீயா? ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணப்போ பார்த்தது அப்புறம் இப்போதான் வரேன். இவ்வளவு தூரம் வந்துட்டு அவங்களை பார்க்காம போனா நல்லாயிருக்காது.” என்று மீரா தயக்கத்துடனே அழைப்பை முன்வைக்க, அதிருப்தியுடன் நீலிமா கூறிய பதிலில் மீராவின் மூலை ஒருநொடி வேலைநிறுத்தம் செய்து திரும்பியது.
“நீ காலேஜ் வர்றதை நிறுத்தின வீக்கே அவங்க பெரிய ஆக்சிடெண்ட்டில் சிக்கி ஹாசப்பிடலைஸ் ஆகிட்டாங்க. ரொம்ப நாள் கோமாவில் இருந்தாங்கன்னு கேள்விப்பட்டேன் அப்புறம் அப்படியே கோமாவிலேயே அவங்க உயிர் பிரிஞ்சிடுச்சுன்னு தகவல் வந்துச்சு.”
செவியை தீண்டிய அசுப செய்தியில் மீரா அப்படியே பொத்தென்று அமர்ந்துவிட இதயம் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் செல்வது போல தடக்தடக்கென அடித்தது. மனதில் ஏதோவொரு நெருடல். கண்ணுக்கு புலப்படாத எதுவோ ஒன்று மறைந்திருப்பது போன்றதொரு சஞ்சலம் ஆழ்மனதில் எழ, அது என்னவென அக்கணம் அவளால் உடனே பிரித்தறிய முடியவில்லை.
“என்னாச்சு மீரா?” சட்டென மீராவிடம் தென்பட்ட மாற்றத்தில் நீலிமா கேள்வியாய் நோக்க, முகத்தில் இருந்த பதட்டம் குறையாது நடுங்கும் இதயத்துடன்,

Advertisement