Advertisement

“பொய். எல்லாம் பொய். இன்னைக்கு நான் எந்த மறுப்பும் சொல்லக்கூடாதுன்னு இப்படி சொல்ற. எங்க உன் மனசை தொட்டு சொல்லு, நான் அழகா? நான் அழகா? இப்படி ஒருத்தியை நீ உன் பையனுக்கு பார்த்து கட்டிவைப்பீயா?” என்று மீரா சட்டென்று பிறந்த ஆவேசத்தில் எகிற, அம்புஜம் தன் முந்தியால் வாயை மூடி வெடித்து கிளம்பும் கேவலை முழுங்கினார். மகளின் கேள்வியும் அதில் பொதிந்திருந்த நிதர்சனமும் பெற்றவள் நெஞ்சை வால் கொண்டு அறுத்தது. 
“எங்களுக்கு நீ அழகி தான் அம்மு.”

“அம்மு பிளீஸ்… நீயும் வருத்திக்கிட்டு எங்களையும் இப்படி வார்த்தைகளால் வாட்டாத.” அம்புஜமும் சுஜாவும் அவள் வார்த்தைகளை முறியடிக்க முயன்று தோற்க இருவர் கண்களிலும் நீர் கோர்த்துக்கொண்டது. எதற்கும் அசையாமல் சிலையென இறுகிப் போய் நின்றாள் மீரா.

“இன்னும் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க மூணு பேரும்? இங்கே மாப்பிள்ளை வீட்டில் வந்துட்டாங்க, வாசல்ல வந்து வரவேற்க வேணாமா?” என்று ஒரு ஆண் குரல் வெளிப்பட சுஜாவும், அம்புஜமும் கண்களை துடைத்துக்கொண்டனர்.

“பூ பிரிட்ஜ்ஜில் இருக்கு, அவள் தலையை ஒதுக்கிவிட்டு பூ வைச்சுவிடு சுஜா.” என்று சுஜாவிடம் முணுகிவிட்டு வெளியே வரவேற்க சென்றார் அம்புஜம்.

“பூ ஒன்னு தான் இப்போ குறைச்சல். நீங்க பூ வச்சிக்கோங்க அண்ணி.” என்று மீரா கடுகாய் வெடித்து வெறுமை கோர்த்து துள்ள, திடுமென வெளியில் காரசாரமான பேசும் அரவம் விழுந்தது. திடுக்கிட்டு இருவரும் வெளியே ஹாலுக்கு செல்ல, ருத்திர மூர்த்தியாய் தாண்டவமாடிக் கொண்டிருந்தார் ரகுநாதன்.

“நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்? நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? மனசாட்சி உறுத்தலையா உங்களுக்கு? எம் பொண்ணுக்கு…” என்று மீராவின் தந்தை ரகுநாதன் தன் எதிர் இருப்பவரை பார்த்து கர்ஜிக்க, அவர் தன் பங்கிற்கு பதிலளித்து விவாதத்தை சூடுபடுத்தினார்.

“சார், உங்க பொண்ணை திருமணம் செய்துக்க இவர் மட்டும் தான் ஒத்துக்கிட்டார். அதனால தான் அழைச்சிட்டு வந்தேன். ஏதோ உலக அழகியை பெற்றது போல் இப்படிக் குதிக்கிறீங்க. நீங்களே சொல்லுங்க நீங்க கேக்குற மாதிரி உங்க பொண்ணு வயசுக்கு தோதா உங்கள் மகள் வயதை ஒற்ற எவனாவது ஒத்துப்பானா இல்லை அவங்க குடும்பமும்தான் ஓகே சொல்லுவாங்களா? இது தான் சார் நிதர்சனம். அதை புரிஞ்சிக்காம தாம்தூம்னு குதிக்கிறீங்க?”

“அதற்காக என் வயதுள்ள ஒருவரை அழைச்சிட்டு வருவீங்களா?” என்று இடைத்தரகரிடம் கத்தியவர் அவர் அழைத்து வந்த வயோதிகனிடமும், “உங்களுக்குமா அறிவில்லை? என் பெண்ணின் தகப்பன் வயதில் இருக்கிறீர்கள்… உங்களுக்கு என் மகளை மணமுடித்து தரவேண்டுமா?” என்று எகிற,

“ஹலோ மிஸ்டர்… என்ன வார்த்தையெல்லாம் தடிக்குது? நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உங்களை இல்லாமல் செய்து விடுவேன். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கப் பழகிக்கொள்ளுங்கள்.” என்று அந்த பெரியவனும் பதில் பேச, ரகுநாதனிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

“நீங்கள் யாரா வேணும்னாலும் இருந்துட்டு போங்க… எனக்கு அது முக்கியம் இல்லை, இப்போ இங்கிருந்து கிளம்புங்க. எங்களுக்கு இதுல துளியும் சம்மதமில்லை. யோவ் தரகரே இனி வரன் அதுஇதுன்னு எதையாவது இழுத்துட்டு வந்த நடக்குறதே அவ்வளவுதான்…” என்று ரகுநாதன் இருவரையும் விரட்ட, 

“அப்பா… எனக்கு இதில் சம்மதம்.” என்ற மீராவின் திடீர் குறுக்கீட்டில் மிதமான நெஞ்சுவலியே வந்துவிட்டது அங்கிருந்தவர்களுக்கு.
“உங்க பொண்ணு புத்திசாலி.” மஞ்சள் கரை படிந்த பற்களுடன் அனர்த்தமாய் அந்த ஆள் சிரிக்க,
“சார் பெரிய இடம். சார் யார் தெரியும்ல… வரதன். இந்த KS இண்டஸ்டிரிஸ் இருக்கே அதுவே இவருடையது தான்.” காசு அதிகம் கிட்டும் என்ற பேராசையில் அந்த கிழட்டின் புகழை தரகர் இடைபுகுந்து பாட…
“உங்களுக்குள் கலந்து பேசி விரைவிலேயே நல்ல முடிவை சொல்லுங்க.” என்று தன் நம்பர் இருக்கும் கார்டை ரகுநாதன் கையில் திணித்துவிட்டு கிளம்பினான் அந்த வரதன். வெளியேறும் முன்பு மீராவை மேலிருந்து கீழ் அளக்கத் தவறவில்லை அந்தக் குரூர கண்கள்.
குடும்பத்தினர் உள்ளம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருக்க, வரதன் சென்ற தடத்தை உணர்ச்சிக் குவியலுக்கு மத்தியில் வெறித்து நோக்க, மீராவோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் உள்ளே சென்றுவிட்டாள். ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த ரணம் உப்பிட்டதாய் கபகபவென கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.
***
“எக்ஸலெண்ட் ஒர்க் கார்த்திக்…”

“இது என் ஒருவனால் மட்டும் முடிவிற்கு வரவில்லை, டீம்ஒர்க் சார்.” என்று கார்த்திக் பளிச்சென்று புன்னகைத்தான்.

“இது உன்னுடைய முதல் கேஸ் அண்ட் இது உன்னுடைய முதல் வெற்றி. வாழ்த்துக்கள் கார்த்திக். பட் நாங்கள் உன்னிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.” என்று அவன் உயர் அதிகாரி புகழ்ந்ததுடன் அவனின் வளர்ச்சியை தூண்டும் விதமாய் கூற, காக்கி சட்டையில் மூன்று நட்சத்திரங்களை தாங்கி கம்பீரமாய் நின்ற கார்த்திக் மெலிதாய் தலையசைத்தான்.

“கண்டிப்பாக சார். விரும்பியே இந்தத் துறைக்கு வந்திருக்கேன். இதில் முதல் அடி எடுத்து வைத்து வெற்றியும் கண்டுட்டேன். இனி இது இப்படியே தொடர்ந்து நம் துறைக்கும், என் தந்தைக்கும் பெருமை சேர்த்து மக்களுக்கு துணையா இருக்கிறது மட்டுமே என் குறிக்கோள்.” என்று மிடுக்காக பரையாற்றினான் கார்த்திக்.
“ஆல் தி பெஸ்ட் கார்த்திக்…” என்று அவர் முடிக்கும் முன் அவரை குறுக்கிட்டு,
“கார்த்திக் சுப்பிரமணியம்.” நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் தன் முழு பெயரை மிடுக்காய் திருத்தினான் அந்த காக்கிச்சட்டைக் காரன்.
அவனின் நிமிர்வை கண்டு முறுவலுடன் நோக்கிய அவனின் உயரதிகாரிக்கு அவனை எண்ணி பெருமையே… செல்வாக்கு மிகுந்த வீட்டின் வாரிசு என்பதையும் தாண்டி கால் மேல் கால் போட்டு ஏ.சியில் அமர்ந்து பல பேருக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருப்பவன், அதனை விடுத்து மாதச் சம்பளத்திற்கு இந்த வாட்டியெடுக்கும் வெயிலில் காய்ந்து அலைந்து திரிந்து அடுத்தவர் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தை தேர்ந்தெடுத்தது மட்டுமில்லாமல் அவனின் செல்வாக்கை எங்குமே பயன்படுத்தியதில்லை. அதுவே உயரதிகாரிகளிடம் அவனுக்கு நன்மதிப்பை பெற்றுக் கொடுத்திருந்தது.
“ஓகே… உங்களோட அடுத்த பொறுப்பு என்னன்னு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.”
“லெட்டர் பார்த்தேன் சார். பெண்கள் வன்கொடுமை, மிரட்டல், கிண்டல் கேலின்னு ஏகப்பட்ட வழக்குகள் தீர்க்கப்படாம நிலுவையில் இருக்கு. அதை முடிக்க தேவையான விவரங்களை திரட்ட டீம் வேலை செய்துட்டு இருக்காங்க சார். முழு பிளான் ரெடி பண்ணிட்டு ஒரு ப்ரசன்டேஷன் மாதிரி மீட்டிங்கில் திட்டத்தை விளக்கி ப்ரெஸ் மீட்டும் வச்சிடலாம் சார்.” என்று விரைப்பாய் பதில் வந்தது கார்த்திக்கிடம் இருந்து…
“குட்… இந்த ஆர்வத்தை தான் நான் எதிர்பார்க்கிறேன். சென்னை சரகத்தை பொறுத்தவரை இனி பெண்கள் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட அனைத்தும் உங்களுடையது. என்னனென்ன செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்யுங்கள்.” என்ற கட்டளையை ஏற்றுக்கொண்டு உயரதிகாரிக்கு சல்யூட் அடித்து அதே நிமிர்வுடன் தன் அலுவலகம் வந்து சேர்ந்தான் அந்த அசிஸ்டென்ட் கமிஷனர்… அங்கு அவன் குழு சந்திப்பிற்கு தயாராய் இருக்க காலவிரயம் செய்யாது இவன் சென்றதும் ஆலோசனைக் கூட்டத்தை துவங்கினான்.
“இப்போது நமக்கிருக்கும் தலையாயப் பிரச்சனையே பெண்கள் பாதுகாப்பு தான். வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களுமே அச்சுறுத்தலில் தான் இருக்காங்க. கொலை, கொள்ளை, கடத்தல் வழக்கு என்றால் குறிப்பிட்ட கும்பல் தான் இதை செய்திருக்க வாய்ப்பிருக்குனு நம்மகிட்ட லிஸ்ட் இருக்கும் இல்லையென்றால் யார் செய்திருப்பாங்கன்னு துப்பு துலக்க நிறைய வழிகள் இருக்கும். 
ஆனால் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் முக்கால்வாசி அவர்களை சுற்றி உள்ளவர்களால் தான் நடக்கிறது. இதில் யாருக்கு எந்த நேரம் எந்த கயவனால் ஆபத்து வரும் என்று நம்மால் ஒவ்வொரு குழந்தைகள் பின்னோ அல்லது பெண்கள் பின்னா அலைந்து பாதுகாப்பு கொடுக்க முடியாது. அதேபோல அந்த கயவர்களை முன்கூட்டியே இனம்கண்டு களையெடுப்பதும் சுலபமா இருக்காது. இந்த மாதிரியான இக்கட்டில் நாம் கொஞ்சம் மெனெக்கெட்டு கட்டுப்பாடுகளை விதித்து சந்தேகப்படும்படியாக சுற்றும் ஆட்களை உடனே உள்ளே தள்ளி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால் அந்த மூடர்களுக்கும் பயம் வரும். தப்பு செய்தால் கடும்தண்டனை உண்டு என்பதை நம்பும் விதமாக இருக்க வேண்டும் நம் செயல்கள்.” தான் ஏற்றுவந்த புதிய பொறுப்பை அச்சுபிசகாது நடைமுறைப்படுத்த மேலோட்டமாய் அவன் துவங்கி வைக்க அவன் குழுவினர் தத்தம் கருத்துக்களையும் முன்வைத்தனர்.
“புரியுது சார்… புதிதாக உருவாக்கப்பட்ட காவலன் செயலியைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னுமே வரவில்லை சார். பரபரப்பாக சில நாட்கள் பேசுனாங்க, நிறைய பேர் பதிவிறக்கம் செஞ்சாங்க. ஆனா அதன் பிறகு பெரிதாய் மாற்றம் ஒன்றுமில்லை. எமெர்ஜென்சி நம்பரும் பலருக்கு தெரிவதில்லை. அதற்கான முயற்சிகளும் எடுக்கணும். 
சிறு வயது முதலே கட்டாயமாக பள்ளியில் அனைத்து குழந்தைகளுக்கும் தற்காப்பு சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யணும். அதேசமயம் கல்லூரியில் படிப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களும் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான பயிற்சிகள் வழங்கணும். அதற்காக ஒரு தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கூட கையெழுத்தாகி இருக்கு சார். அதோட என்ன நடந்தாலும் அதை வெளியே சொல்லும் தைரியத்தை கொடுக்கணும். நிறைய பெண்கள் சமூகம் தங்களை எங்கே தவறாக சித்தரித்துவிடுமோ என்ற அச்சத்தில் வாய் திறப்பதில்லை.” அவன் குழுவில் இருந்த ஒருவன் கூற அதை ஆமோதிக்கும் விதமாய் தொடர்ந்தான் கார்த்திக்.
“இப்போ சொன்னீங்களே அது நூற்றுக்கு நூறு உண்மை. முக்கால்வாசி கேஸ்களில் தவறு செய்து பிடிபடும் கயவர்களின் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்களின் முகத்தை மறைத்து அழைத்துச் செல்லும் நிலை தான் இங்கிருக்கு. ஆனால் பாதிக்கப்பட்டவர் புகைப்படத்தோடு அவரின் ஆதி முதல் அந்தம் வரை பிரேக்கிங் நியூஸில் நாம் தகவல் திரட்டும் முன்னரே வந்துவிடுகிறது. அதை கண்டு பெண்களும் அவர்களின் குடும்பமும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்ல பயப்படுவது இயற்கை தான். 
தில்லியில் நிர்பயா வழக்கை எப்படி கையாண்டார்களோ அதேபோல பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் தகவல்களும் கசியாத வண்ணம் நாம் தான் பாதுகாப்பை பலப்படுத்தணும். அதன் மூலம் பெண்களுக்கு மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும் கூட நம்மை நெருங்க தயங்கமாட்டார்கள். அந்த தைரியத்தை நாம் தான் கொடுக்கணும். அதுக்கு முன்னாடி நம்ம துறையில் இருக்கிற தேவையில்லாத ஆணியை கண்டுபுடச்சு அவங்க லிஸ்ட்டை பத்திரப்படுத்தி வச்சிக்கணும். அப்போதான் முக்கியமான ஆபிரேஷன் நடக்கும்போது நம்ம வேலைக்குள்ள அவங்க குறுக்க வரமுடியாதபடி அவங்களுக்கு டுயூட்டி மாத்தி விட்டு தள்ளி நிறுத்தமுடியும்.” என்று அழுத்தம் திருத்தமாய் பேசினான் கார்த்திக்.
“பண்ணிடலாம் சார்… அதோட எப்படி 100, 101, 108 போன்ற நம்பர்களை நினைவு வைத்திருக்கிறார்களோ அதே போன்று பெண்களுக்கான பிரத்யேக அவசர எண் 1090-ஐ அனைவரின் மனதில் பதியுமாறு செய்யணும் சார்.” என்றான் ஒருவன்.
“சிம் கார்டுகளில் அவசர எண்களை எப்படி முன்னரே பதிய வைத்திருக்கிறார்களோ அதே போல் இந்த 1090/1091 எண்ணையும் அதில் சேர்க்க ஏற்பாடு செய்யணும்.” என்றான் மற்றொருவன். 
“ஆல் இந்தியா எமெர்ஜென்சி நம்பர் 112 பற்றிய விழிப்புணர்வும் அவ்வளவாக மக்களிடம் சென்று சேரல… மத்த எண்களை மறந்தால் கூட இந்த ஒரு நம்பரை நியாபகம் வச்சிக்கிட்டா போதும் தீயணைப்பு, ஆம்புலன்ஸ், பாதுகாப்புன்னு எல்லாத்துக்குமே இந்த ஒரு நம்பரே போதும்…” என்ற குரலும் இடையில் ஒலித்தது.
தாந்தான் இங்கு உயரதிகாரி, தான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற கர்வமும், ஆணவமும் இன்றி குழுவில் இருக்கும் அனைவரின் கருத்தையும் உள்வாங்கியவன் அந்த மீட்டிங்கை முடிக்கும் விதமாய், “இது எல்லாமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். தீர்வு இல்லை. இதை எவ்வளவு துரிதமாக செயல்படுத்துகிறோமோ அதே வேகத்தில் இவ்வளவு நாள் போக்குக்காட்டிய கயவர்களையும் தக்க ஆதாரத்தோடு பிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்கணும்.”
“நாம் சிரத்தை எடுத்து பிடிப்பது இருக்கட்டும் சார். பிடிச்ச பிறகு செல்வாக்கை பயன்படுத்தி நமக்கு போக்குக்காட்டி தப்பிப்பவர்களை என்ன செய்றது?”
எழுந்து வெளியேற தயாராய் இருந்தவன் இப்படி ஒரு கேள்வி வரவும் ஆர்ப்பாட்டமின்றி வெகு இயல்பாய், “துப்பாக்கி எல்லாம் யூஸ் பண்ணாம இருந்தா துரு புடிச்சிடும் பாஸ்… சும்மா அப்பப்போ சுட்டு பார்ப்போம் ஒர்க் ஆகுதான்னு…” என்று சொல்லி அசட்டையாய் சிரித்தவன் தன் முன் இருந்த காகிதங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு ஆரவாரமோ அதிரடியோ அலட்டலோயின்றி அவ்வறை விட்டு வெளியேறினான். 

Advertisement