Advertisement

*1*
அழலில் அமிழ்ந்தெழுந்த சொற்கள்
அமிலத்தில் உழலும் உலகம்
எதிரிகளான நண்பர்கள்
கானல் நீரான காதல்
அந்நியர்களான பெற்றோர்
இதில் தொலைந்தேன் நான்
மீளமுடியாமல்.

-மீரா.

“மீரா… மீரா…”

தன் பெயர் ஏவப்படும் அரவம் செவியில் விழுந்து கருத்தில் பதிய எழுதுவதை அக்கணமே நிறுத்தியவள், தன் நாட்குறிப்பை மூடி அதை தன்னெதிரே இருந்த மேசை இழுவையில் வைக்காமல் சிந்தை தப்பி ஏதோவொரு நினைவில் தன் அலமாரியை திறந்து தன் உடைகளுக்கு இடையே அதை மறைத்து வைத்தாள் மீரா… மீரா ரகுநாதன்.

நாட்குறிப்பை பத்திரப்படுத்தியதும் அறைக்கதவை தாழிட்டோமா என்றெழுந்த ஐயத்திற்கு விடையாய் கதவை திறந்துகொண்டு, “மீரா, நீ இன்னும் தயாராகலையா? நேரமாகிட்டு இருக்கே.” என்ற கேள்வியோடு உள்நுழைந்த தன் அண்ணியின் குரலில் சடுதியில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டவள் ஒரு வெற்றுப்பார்வையை உரித்தாக்கி விழியில் எவ்வித ஆர்வமோ தவிப்போயின்றி, 
“எதற்கு தயாராகனும்?” என்ற தன் வினாவிற்கு வாய்வழி மொழி கொடுத்ததில் கூட எள்ளளவும் அவள் வயதிற்கேற்ற துள்ளலலோ இளமையோ இடம்பெறவில்லை. மாறாக வாழ்க்கையில் பிடிப்பில்லா தோற்றமே மேலோங்கி உணர்ச்சிகள் எங்கோ சென்று பதுங்கியிருந்தது.
“மீரா, உனக்கே எல்லாம் தெரியும்.”, மீராவின் வெற்றுப்பார்வையில் அவள் அண்ணியின் குரல் உள்சென்று மெல்லமாய் தயக்கத்துடன் ஒலித்தது.
‘இது என் கேள்விக்கான பதில் இல்லையே!’ என்பது போன்று அண்ணியை ஏறெடுத்து ஒரு பார்வை பார்த்த மீராவோ மெளனமாய் மெத்தையில் சென்று அமர்ந்து கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு இறுகிய வதனத்துடன் தன்னெதிரே பளீரென்று தெரிந்த வெண்மைச் சுவரை வழக்கம் போல வெறிக்க ஆரம்பித்தாள். அந்த சுவராவது வெண்மையாய் இருக்கிறதே! என்று அவளுள் ஒரு சாத்தான் உரைக்க, அவள் இதழ்கள் விரக்தியில் விரிந்தன. 
வெண்மை மட்டுமல்ல கருமையும் செம்மையும் நீலமும் பச்சையும் சாம்பலும் கூட அதுஅது அதன் அதன் இடத்தில் அழகுதான் முழுமையானதுதான் என்று அவளிடம் யார் சென்று உரைக்க? உரைத்தாலும் கேட்டுவிடுவாளா இல்லை அதை உள்வாங்கும் நிலையிலாவது அவள் இருக்கிறாளா? காலம் செய்த கோலமோ விதி செய்த சதியோ என்று அலட்டலாய் நினைத்து கடக்க முடியாத வண்ணம் இறந்தகாலத்திலேயே பின்தங்கி இருக்க அவளை முன்னிழுக்க தங்களின் பலம் கொண்டு முயற்சிக்கும் அவள் குடும்பத்தினருக்கு கிடைத்துக் கொண்டிருப்பது என்னவோ நிர்மூலம்தான். ஆனாலும் தங்களின் முயற்சியை கைவிடாது இன்று புதிதாய் ஒன்றை இழுத்து வந்திருக்க வருங்காலத்தில் அது இழுக்கப்போகும் ஏழரையை அந்நேரம் அறிந்திருக்கவில்லை எவருமே… 
அவள் அண்ணி அங்கிருந்து நகராது மீராவிடம் இருந்து எதிர்வினை ஏதாவது வருமா என்பது போல் அவளின் வெறுமையை பார்த்து நிற்க, அதை உணர்ந்தே இருந்த மீரா,

“என்னை இங்கிருந்து விரட்டுறது தான் உங்க எல்லாரோட ஆசைன்னா நான் தயாராகுறேன், வேற வழி என்ன இருக்கு எனக்கு…” என்று மொழியில் வெறுமையை கூட்டி, மீண்டும் ஒரு கானல் புன்னகை வீசிவிட்டு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த பட்டுப்புடவையை எடுத்துத் தயாராக கிளம்பினாள்.

உணர்ச்சிகள் துடைத்தெடுக்கப்பட்டிருந்த அவளின் வதனத்தை காண சகிக்காத அவள் அண்ணி சுஜா அவள் முழங்கையை பிடித்து தடுத்து நிறுத்தி, பரிவான பார்வையொன்றை ஆறுதலாய் வீசினாள்.
“மீரா, எனக்குப் புரியுது. இதில் எனக்கும் உன் அண்ணனுக்கும் மருந்துக்கும் உடன்பாடில்லை. ஆனால் அத்தையும், மாமாவும் இதைத் தான் விரும்புறாங்க. அவங்களும் என்ன செய்வாங்க? உனக்குன்னு ஒரு குடும்பத்தை… ஒரு நிறைவான வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்து அவங்களோட நீ மகிழ்ச்சியா வாழ்றதை பார்க்கணும்னு ஆசை இருக்கும்தானே? இந்த ஏற்பாடு எல்லாமே உன் மேல இருக்கிற அக்கறையும் அன்பினாலும் தான்… புரியுது தானே உனக்கு?” சுஜா சமரச வார்த்தைகள் வீசி அவள் உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் வெறுமையை விரக்தியை விரட்ட முயல,

“எத்தனை குழந்தைங்க?” என்று வலிக்க வலிக்க வந்து விழுந்தது மீராவின் எதிர்வினை.

“என்ன?” என்று நெற்றி சுருங்க அவள் கேள்வி புரியாது விழித்தாள் சுஜா.

“எப்படியும் இருபதுகளில் இருக்கும் ஆண்கள் என்னை கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. நல்ல நிலையில் இருக்கும் எந்தக் குடும்பமும் என்னை மருமகளாக ஏத்துக்க மாட்டாங்க. என் கணிப்பு சரியென்றால் நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை நடுத்தர வயதில் விவாகரத்து ஆனவராகத் தான் இருக்க முடியும். நடுத்தர வயதென்றால் குழந்தை இருக்கவும் வாய்ப்பிருக்கு. ஆனால் குழந்தைகள் எப்படி என்னை ஏற்றுக்கொள்வார்கள்?” என்று நெற்றி சுருக்கி தன் ஆழ்ந்த சிந்தனைகளை தட்டினாள் மீரா.

“உன்னை நீயே வருத்திக்காத மீரா. எல்லாம் நல்லபடியாக நடக்கும்…” என்று சற்று இடைவெளி விட்டவள் பின் தயங்கி, “அத்தை பேசுனதை கேட்டேன், அவருக்கு ஒரு மகன் இருக்கிறதா பேசிட்டு இருந்தாங்க. நேரில் பார்த்து விசாரிச்ச பிறகு வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரலாம்னு உங்கண்ணன் கூட சொன்னாங்க. ஆனா மாப்பிள்ளை வீட்டுல அவசரப்படுத்துறாங்க. போட்டோ கேட்டதுக்கு கூட ஏதோ பழைய போட்டோவை அனுப்பி வச்சிருக்காங்க… க்ளியராவே இல்லை, திரும்ப வேற நல்ல போட்டோ அனுப்பசொல்லி கேட்டதுக்கு அந்த தரகர்…” நடந்தவற்றை கடகடவென மனப்பாடம் செய்தது போல ஒப்பித்துக் கொண்டிருந்த சுஜா சட்டென சுதாரித்து பேச்சை நிறுத்தவும்,

காந்தப் புன்னகை வீசிவேண்டிய மீராவோ அமிலப் புன்னகை வீசி, “உங்க பொண்ணு இருக்குற லட்சணத்துக்கு நீங்க கண்டிஷன் போடுற நிலையில் இல்லை. பாவப்பட்டு எவன் ஓகே சொல்றானோ அவனுக்கு பொண்ணை கட்டிக் கொடுத்துங்கன்னு சொல்லி இருப்பான். எனக்குத் தெரியும்.” என்று மட்டும் விளித்து சுஜாவை வெளியில் செல்லச்சொல்லி சைகை காட்டினாள்.

“மீரா…”

“ப்ளீஸ் அண்ணி… ஐ நீட் டூ கெட் ரெடி.” அழுத்தமாய் கட்டளையை தாங்கி வந்தது மீராவின் மொழி.

அவள் முகத்தில் என்ன கண்டாலோ சுஜா கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டு வெளியேறினாள். அவளுக்குத் தெரியும், மீராவின் அழுத்தப் பார்வையும் அதனுடன் சேர்ந்து வந்த ஆங்கில மொழியும் அதற்கு மேல் என்னிடம் எதுவும் பேசாதே என்ற அர்த்தத்தையே வெளிப்படுத்துமென. மீறி பேசினால் வாய் வார்த்தைகள் விரிந்து ஒரு வாரத்திற்கு அனைவர் நிம்மதியும் கெட்டுவிடுமென்று.

சமையல் அறையில் பாத்திரங்கள் உருள, ஐம்பது வயதை சுலபமாய் கடந்தவரோ கடந்த சில நாட்களிலேயே வயது அதிகரித்து மூப்பு ஏறிவிட்ட தோரணையில் அவசர அவசரமாக இனிப்பு வகைகளை வருபவர்களுக்கு கொடுக்க தயார் செய்துகொண்டிருந்தார் அம்புஜம். சுஜா சிறிது நேரம் அமைதியாய் தள்ளி நின்று அவர் பரபரப்பை பார்த்தவள் பின் உள்ளே நுழைந்து மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“அத்தை மீரா நம்மோடவே இருந்துடட்டுமே. கடைசிவரை நாமே பார்த்துக்கலாம். இல்லைனா இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டுமே, இப்போவே இது தேவையா? அவளுக்கு அப்படி என்ன வயசாகிடுச்சு… இருபத்தி ரெண்டு தானே ஆகுது…” நாத்தனாரின் அகம் படித்து அவளை மேலும் வாட்ட உள்ளமின்றி மீரா சார்பாய் சுஜா பேச,

“அவளை கரைசேர்க்க வேண்டியது எங்க கடமை சுஜா. அதிலிருந்து விடுபட எங்களுக்கு விருப்பமில்லை. ஏதோ எங்களால நடமாட தெம்பிருக்கும் போதே அவளுக்கு ஒரு குடும்பம் அமைச்சு கொடுத்திடனும். இன்னைக்கு வேணும்னா மீராவை கடைசி வரை பார்த்துக்கலாம்னு நீ இப்படி சொல்லலாம். ஆனா நாளைக்கே உன் குடும்பம் பெரிசாகும் போது, என் மகள் உங்களுக்கு இடைஞ்சலா தான் தெரிவாள். என் பொண்ணு யாருக்கும் பாரமா இருக்கக்கூடாது. எங்களுக்கு பிறகு அவளுக்கே அவளுக்குன்னு ஒரு துணை வேண்டும். குடும்பம் வேணும். அந்த துணை அவளது பலகீனங்களை விரட்டி பலம் படைத்தவளாக மாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்றவர் குரல் பாதி உள்ளே செல்ல தன் முகத்தை சுஜாவிற்கு காட்டாமல் காபி கலந்துகொண்டே பதிலளித்தார் மீராவின் அன்னை.

மாமியாரின் பேச்சை மறுத்து பேச மனம் விழைந்தாலும், உலக நடப்பில் பின்னாளில் யார் எப்படி இருப்பார்கள் என்று கணிக்க இயலாதே! அம்புஜம் கூறுவதும் நடக்க வாய்ப்பிருக்கே… 
நிலையற்ற வாழ்க்கையில் எண்ணங்கள் எதுவும் நிலையாய் நிற்குமா என்ன? அனுபவமும் பக்குவமும் மேம்பட மேம்பட இப்போது சரி என்று தோன்றுவது பின்னர் தவறென்று தோன்ற வாய்ப்பிருப்பது போன்றே இன்று தவறு என்று நினைப்பது நாளை சரியென்று கூடபடலாம். அனைத்துமே காலம் கற்பிக்கும் பாடம், சூழ்நிலைகள் தீர்மானிக்கும் முடிவு. 
இளமை மறைந்து முதுமை நோக்கி பயணிக்கும் போது ஏற்படும் மாற்றங்களில் பொதுவாய் தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு ஆதரவு, ஒரு துணை இருந்தால் நலமே என்ற மனநிலைக்கு தள்ளப்படும் சூழலே அதிகம் இருக்க, நாளையை கணித்து அதற்கு உத்திரவாதம் கொடுக்க முடியாதே என்ற எண்ணம் மெல்ல எட்டிப்பார்த்தது சுஜாவிடம். அவளின் எண்ணவோட்டங்களை கலைக்கும் விதமாய் அடுப்பை அணைத்த அம்புஜம் கைகளை துடைத்துவிட்டு,

“அவள் தயாராகிட்டாளா?” என்ற கேள்வியோடு மீரா அறைக்கு நடையை செலுத்த,

“ம்… இந்நேரம் தயாராகி இருப்பாள்.” என்ற சுஜாவும் அவரை பின்தொடர்ந்தாள். 

அங்கு சுஜா சொன்னது போலவே புடவையை உடலுக்கு சுற்றி தயாராய் நின்றாள் மீரா. மேனிக்கு எடுப்பாய் ஒரு அரக்குப் புடவையில் ஒல்லியான தேகத்தில் வளைய வேண்டிய இடத்தில் வளைந்து கொடி போன்று அழகாய் நின்றிருந்த மகளின் முகம் வழித்து திருஷ்டி கழித்த அம்புஜம்,

“அம்மு… அழகா இருக்க.” என்று சொன்னதுதான் தாமதம் மீராவின் இதழ்கள் அசட்டையாய் சிரித்து அலட்சியமாய் இதழ் பிரிந்து எள்ளியது.

“காலையிலேயே நக்கலா? இந்த புடவை அழகுன்னு வேணும்னா சொல்லு. எனக்கும் அழகுக்கும் ஏழாம் பொருத்தம்.” பாறையாய் இறுகிய திடத்தில் மென்மையாய் எதிர்பார்க்க முடியுமா என்ன?

“ஏன்டி இப்படி சொல்ற? எங்களுக்கு நீ அழகி தான்.” என்று அவள் மனதை தேற்றும் விதமாக அம்புஜம் கூற,

Advertisement