Advertisement

அத்தியாயம் 10:

அபியின் வார்த்தைகளைக் கேட்ட ரிஷிக்கு மனதிற்குள் ஏனோ உற்சாகமாய் இருந்தது.அதுவரை இருந்த களைப்பு நீங்கி….வந்த தூக்கம் எங்கோ பறந்து சென்றிருந்தது.தனது செல்போனை எடுக்க சென்றது எவ்வளவு நல்லது என்று எண்ணியவனுக்குஇதழோரத்தில் விரிந்த சிரிப்பு மட்டும் மாறவேயில்லை.

அன்றைய நாள்…. பத்திரிக்கையில் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகியிருக்க…..ரிஷிக்கு தன் தந்தையை எண்ணி மனதில் வியப்பு கூடிக் கொண்டே போனது.பிரச்சனைகளை எளிதில் அவர் கையாண்ட விதம் அவனைத் திகைக்க வைத்தது.

ஆனால் அபியின் நிலைதான் அங்கு சொல்லும்படியாக இல்லை.இந்த புகைப்படங்களை தன் வீட்டில் பார்த்திருந்தால்…? என்ற கேள்வி அவள் மனதை குடைந்து கொண்டிருந்தது.

இரவில் தான் கண்ட கனவின் செய்தியும் இதையே அவளுக்கு சொல்லஅடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இத்தனை நேரம் இருந்த இருந்த கொஞ்ச நிம்மதியும் அவளை விட்டு சென்றிருந்தது.

அவளின் பாட்டியை நினைத்த மாத்திரத்தில் அவளுக்கு பயம் ஊற்றெடுக்க….நினைவுகள் தந்தியடிக்கத் தொடங்கியது.

நினைவலையில்……

அன்றைக்கு எப்பொழுதும் போல்  கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் அபிராமி.கிளம்பும் போதே அவளுக்கு ரிஷி வர்மாவின் நினைப்பு.ஏனோ அவன் ஒரு வாரமாக அந்த கேஸ் விஷயமாக அவர்களின் கல்லூரிக்கு செல்லவில்லை.

அவனிடம் பேசாவிட்டாலும்அவ்வப்பொழுது அவனைப் பார்த்து கண்களில் நிரப்பிக் கொள்வாள்.ஆனால் இந்த ஒரு வாரமாக அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

ஏய் அபி..! என்னடி நின்னுகிட்டே கனவு கண்டுகிட்டு இருக்க…? என்று சரண்யா எரிந்து விழவும்தன்னிலை மீண்டாள்.

என்னக்கா…? என்றாள்.

என்ன….என்னக்கா….வழியை மறித்து நின்னுகிட்டு பேச்சைப் பாருவிலகுடி.. என்று கடுப்பாக கூறவும்

ஹோசாரிக்கா..! என்றபடி விலகினாள்.

டக்கென்று வெளியே சென்ற சரண்யா….ஒரு நிமிடம் அவளை திரும்பிப் பார்த்தாள்.

வெள்ளை நிற டாப்பும்….கத்தரி ஊதா வண்ணத்தில் பேண்ட்டும்,ஷாலும் அணிந்திருக்க….கழுத்தில் ஒரு மெல்லிய செயின்காதில் எப்பொழுதும் அணிந்திருக்கும் சின்ன தொங்கட்டான்…..படிய வாரிய கூந்தல் இடைக்கு கீழே தவழ்ந்து கொண்டிருக்கதுப்பட்டாவை நேர்த்தியாய் இருபுறமும் பின் செய்திருந்தாள்.

மொத்தத்தில் ஒப்பனையில்லாமல் அவள் முகம் பளிங்காய் ஜொலிக்க…. அவ்வளவு விலை போட்டு வாங்கிய புது சுடிதாரில் தன் அழகு மட்டுப் பட்டுத் தெரிவதாகவே உணர்ந்தாள் சரண்யா.

இந்த சுடிதார் உனக்கு யாரு எடுத்துக் கொடுத்தா…? என்றாள் சரண்யா.

பாட்டி தான் எடுத்துக் கொடுத்தாங்கக்கா….! என்றாள் வெள்ளந்தியாய்.

பாட்டி….பாட்டி…. என்று உரக்கக் கத்தினாள் சரண்யா.

என்னம்மாஎதுக்கு இப்ப இந்த கத்து கத்துறபொம்பளைப் பிள்ளைக்கு இவ்வளவு சத்தம் கூடாது என்று அதட்டல் போட்டவராய் வந்தார் அமிர்தவள்ளி.

இவளுக்கு இந்த டிரஸ் எப்ப எடுத்துக் குடுத்திங்க….? என்றாள்.

ஏன்…? நேத்து நானும் தாத்தாவும் கடைவீதிக்கு போயிருந்தப்ப எடுத்துட்டு வந்தோம்….இன்னைக்கு அபிக்கு பிறந்த நாள் தெரியுமா தெரியாதா..? என்றார் வள்ளி.

அதெல்லாம் எனக்குத் தெரியாது….எனக்கு அவ போட்ருக்க டிரஸ் தான் வேணும்…! என்று பிடிவாதமாய் நின்றாள் சரண்யா.

வள்ளிக்கே ஒரு நிமிடம் எரிச்சல் வந்தது.என்னதான் அபியை விட அவருக்கு சரண்யா செல்லம் என்றாலும்….இன்று அவள் பிறந்த நாளின் போதுஏதோ மனம் கேட்கவில்லை.

முடியாது சரண்யா…! என்ன நினைச்சுட்டு இருக்க..வர வர உன் பிடிவாதம் அதிகமாயிட்டே போகுது….! அவ பிறந்த நாள் அன்னைக்கும் அவகூட வம்பு இழுக்கலைன்னா உனக்குத் தூக்கம் வராதாநீதானே மூத்தவகொஞ்சம் பொறுப்பு வேண்டாம்..? என்று கடிந்து கொள்ள….

போதும் பாட்டிவர வர அவதான் உங்களுக்கு ஒசத்தியா போயிட்டாநான் எப்படிப் போனா உங்களுக்கென்ன…? என்று கண்ணீரை விட்டாள்.

அப்படியில்லை கண்ணு

அப்படித்தான்..

அக்கா….உனக்கு வேண்டும் என்றால் இந்த டிரசை நீ போட்டுக்கோ….! என்றாள் அபி இறங்கி வந்தவளாய்.

ம்ம்ம்..தேங்க்ஸ் அபிநீ வேணுமின்னாதிருவிழாக்கு எடுத்த பாவாடை தாவணி இருக்குநான் அதை உடுத்தவேயில்லை.புதுசுதான்அதைப் போட்டுக்கோ…! என்று பெருந்தன்மையாய் எடுத்து வந்து கொடுத்தாள்.

மனதிற்குள் லேசாய் வலித்தாலும் அபி வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. பிரச்சனை முடிந்தது என்று அமிர்தவள்ளி சென்று விடசில நிமிடங்களில்அபி அணிந்திருந்த சுடிதார் சரண்யாவை அலங்கரித்தது.

சரண்யாவை விட அபி கொஞ்சம் ஒல்லியாக இருப்பாள்.இருந்தாலும் அர்ஜெஸ் செய்து போட்டுக் கொண்டாள்.

இது தான் சரண்யா.அவளுக்கு பிடிப்பது அவளுக்கு கிடைக்க வேண்டும்.அதிலும் அபியின் பெரும்பான்மையான விருப்பங்கள் அவளுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டன.

அமிர்தவள்ளி இதை கண்டும் காணாமல் இருக்ககோவிந்தனுக்கு தான் இதில் வருத்தம்.இந்த பெண்ணுக்கு எந்த வித ஆசாபாசங்களும் கிடையாதா..? என்று அவ்வப்போது தனக்குள்ளே பேசிக் கொள்வார்.

ஆனால் தனது பேத்திக்கும் ஒரு ஆசைஒரு காதல்ஒரு விருப்பம் இருக்கிறது என்று அந்த முதியவருக்கு தெரியவில்லை.காதல் வந்தால் கள்ளத்தனமும் வந்து குடியேறிவிடும் என்பதற்கிணங்கஅவள் யாரிடமும் தன் மனதை வெளிப்படுத்தவில்லை.

சரண்யா குடுத்த பாவாடை தாவணியை அணிந்தவள்….அதற்கு ஏற்ற அணிகலன்களையும் அணிந்து வெளியே வர….அவளைப் பார்த்த அமிர்தவள்ளிக்கே மூச்சையடைத்து.

நவீன ரக அந்த பாவாடை தாவணியில் தேவதையாய் ஜொலித்தாள் அபி. நல்லவேளையாக சரண்யா கிளம்பியிருந்தாள். இருந்திருந்தால் அபியை ஒரு பாடு படுத்தியிருப்பாள்.

அபியின் இந்த அழகு தான் அவளின் பாட்டிக்கு பயத்தைக் கொடுத்திருந்தது. சரண்யா அவள் தந்தையைக் கொண்டு பிறந்திருக்க.. அபியோ..தன் தாயை உரித்து வைத்த மாதிரி பிறந்திருந்தாள்.

நானும் கிளம்புறேன் பாட்டி என்றபடி அவள் வெளியேற..

ஒரு நிமிஷம் அபி…..காலேஜ்க்கு போனமாபடிச்சோமான்னு வந்துகிட்டே இருக்கணும்வேற எதிலாவது கவனம் போனதுநான் மனுசியா இருக்க மாட்டேன்சொல்லிப் புட்டேன்..! என்ற ஒரு எச்சரிக்கை மணியை அடித்து அனுப்பினார் வள்ளி.

அபிக்கு லேசாக கண்கள் கலங்க ஆரம்பித்து.சற்று முன் சரண்யாவும் தான் சென்றாள்ஆனால் அவளுக்கு வழங்காத அறிவுரை தனக்கு மட்டும் ஏன்…? என்ற கேள்வி மனதில் தோன்றினாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடந்தாள்.

அபி என்றார் கோவிந்தன்.

தாத்தா…!

இன்னைக்கு பிறந்த நாள்இந்த தாத்தாகிட்ட சொல்லாமக் கூட போறியே கண்ணு என்றார்.

சாரி தாத்தா..ஏதோ ஒரு நியாபகத்துலஎன்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..! என்று காலில் விழுந்தார்.

தீர்க்காயுசா இரும்மா…!

காலேஜ்க்கு டைம் ஆச்சு தாத்தாநான் கிளம்புறேன்…! என்றபடி அவள் நகர….

சரிம்மா….பத்திரமா போயிட்டு வா..! என்றார்.

கல்லூரி பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்க….டவுன் பஸ்லேயே சென்று விடுவாள்.

ஏனோ அவளுக்கு அந்த பயணம் ரொம்ப பிடிக்கும்.பதினைந்து நிமிடத்தில் கல்லூரி வந்து விடும்.ஆனால் அந்த நிமிடங்கள் மட்டுமே அவளுக்கு பொன்னான நிமிடங்கள்.

லட்சுமியும் அவளுடன் இணைந்து கொள்ள….

சீக்கிரம் வாடிபஸ் போயிடும்…! என்றபடி அவளையும் இழுத்துக் கொண்டு நடந்தாள்.

ஹேய் அபி…! சூப்பரா இருக்கடிபிறந்த நாள் வாழ்த்துக்கள் அபி என்றாள் லட்சுமி.

தேங்க்ஸ்டி

உனக்கு விஷயம் தெரியுமாடி….என்ற பீடிகையுடன் ஆரம்பித்தாள் லட்சுமி.

என்ன விஷயம்டி

நம்ம கிளாஸ் சங்கர் ஆசீட் ஊத்துனான்ல…..அந்த பொண்ணு இறந்து போயிட்டாலாம்டி என்றாள்.

என்ன….???? என்று அதிர்ந்தாள் அபி.

ஆமா அபி….நீ நியூஸ் பார்க்கலையா…? என்று லட்சுமி கேட்கஇல்லை என்பதைப் போல் அவள் தலை ஆடியது.

அந்த பெண்ணை நினைத்தவளின் மனதில் கணம் கூடிப் போனது.

ரிஷி சார் பேட்டி கூட குடுத்திருந்தார் என்று லட்சுமி வழக்கம் போல சொல்ல….

ச்சுநான் பார்க்கலைடி…. என்றவளின் மனம்பேட்டி குடுத்தாரா…. பார்க்காம போயிட்டோமே என்று அந்த பெண்ணை விடுத்து அவனை யோசிக்க ஆரம்பித்தாள்.

ஆமாடிஎன்னமா பேசுனாருசான்சே இல்லைடி….இன்னும் ஒரு வாரத்துல சங்கர் எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிப்பேன்னு சொல்லியிருக்கார் என்றாள் லட்சுமி.

இந்த சங்கர் எங்கடி இருப்பான்…? என்று அபி கேட்க…..

அடியேய்உனக்கு என்னடி ஆச்சுஅவன் எங்க இருப்பான்னு எனக்கு என்ன தெரியும்..? என்று பேசிக் கொண்டே பேருந்தில் ஏற….

முன் சீட்டில் அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் மூச்சையடைத்து அவளுக்கு.வெள்ளை நிற காட்டன் பேண்ட்டும்….மெரூன் கலர் சட்டையும் அணிந்து கண்களில் கூலிங் கிளாசுடன் காணப்பட்டான் ரிஷி.

அனைத்து சீட்டிலும் ஆட்கள் அமர்ந்திருக்கஇவன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தான்.

இரண்டு பெண்கள் மட்டும் நிற்பதைப் பார்த்தவன்உட்காருங்க என்றபடி எழுந்து படியில் சென்று  நின்று கொண்டான்.

அபியாமியோ அவன் சுட்டிய இடத்தில் அமர்ந்தவள்அவன் மீதிருந்த பார்வையை விலக்கவேயில்லை.

ரிஷி அவளுக்கு முதுகுப் புறம் காட்டி நின்றிருக்க….அவளுடைய பார்வை மட்டும் அவனைத் துளைத்துக் கொண்டிருந்தது.

சட்டென்று திரும்பினான் ரிஷி.உடனே அபியோ புத்தகத்தைப் பார்ப்பதைப் போல் குனிந்து கொண்டாள்.

டேய் ரிஷி….அக்யூஸ்ட் கூட இருந்து இருந்து….எப்ப பார்த்தாலும் யாரோ பார்க்குற மாதிரியே இருக்குடா என்று தன் தலையில் தட்டியவன்தன் தலை முடியை கோதியபடி படியில் நின்றிருந்தான்.

படியில் இருந்ததால் காற்று வேகமாக வீசஅவனின் தலை முடி அடங்குவேனா என்று அலை பாய்ந்து கொண்டிருந்தது.

இவ்வளவு நெருக்கத்தில் அவனைக் காண்போம் என்று அபி கனவு கூட கண்டிருக்கவில்லை.எனினும் அந்த நிமிடங்களை பொக்கிஷமாய் மனதிற்குள் சேர்த்தாள்.

அபி….. என்று பல்லைக் கடித்தாள் லட்சுமி.

என்னடி

எதுக்குடி இப்ப வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு வரயாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க…! என்று லட்சுமி கடிந்து கொண்டாள்.

சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டாள் அபி.தங்கள் கல்லூரியின் பேருந்து நிறுத்தம் வரரிஷி படியில் இருந்து விலகி வழி விட்டான்.

அட என்னம்மாமெதுவா இறங்கிக்கிட்டு….தள்ளுங்கம்மாஎன்று ஒரு குண்டு பெண் அவர்களை தள்ளி இறங்க முயற்சிக்கபாந்தமாய் ரிஷியின் மீது மோதினாள் அபி.

ஏம்மா இறங்குறதே நாலு பேருஏம்மா இடிசுகிட்டு இறங்குரிங்க..! என்று கண்டக்டர் சத்தம் போட..

சாரி சாரி என்று அபி முனுமுனுக்கதீவிர யோசனையில் இருந்த ரிஷி இதை எல்லாம் கண்டு கொண்டானில்லை.

பேருந்து அந்த நிறுத்தத்தைத் தாண்டி செல்ல….ரிஷி இறங்காமல் ஏறிக்கொண்டான்.

தன்னுடன் சேர்த்து  ஒரு பெண்ணின் மனதையும் எடுத்து செல்வதை அறியாமல்.

ஆனால் அபியோஅவன் மீது மோதியதில் ஏற்பட்ட திடீர் ஸ்பரிசத்தினால் மெய் மறந்து நின்றிருந்தாள்.

அந்த பிறந்த நாள் அவளுக்கு மறக்க முடியாத ஒரு நாளாக மாறியிருந்தது.

அவளும் லட்சுமியும் கல்லூரிக்குள் நடந்து கொண்டிருக்க….“நில்லு அபி…!என்றபடி வந்தான் சங்கரின் நண்பன் ஜான்.

என்ன ஜான்…? என்றாள் புரியாமல்.

அந்த போலீஸ்க்காரன் உங்ககிட்ட என்ன கேட்டான்…? என்றான் மொட்டையாக.

எந்த போலீஸ்காரன்….? என்றாள் லட்சுமி.

அதான் இப்ப பஸ்ல இருந்து இறங்கிட்டு மறுபடியும் ஏறிப் போனானே அவன்தான்…! என்றான்.

மரியாதையாப் பேசு ஜான்..! என்றாள் அபி கோபமாய்.

ஹோசாரை சொன்ன உடனே உனக்கு கோபம் வருதா…? சரி விடு என்ன கேட்டான் உங்ககிட்ட…? என்றான் விடாமல்.

இங்க பாரு ஜான்அவர் எங்ககிட்ட எதுவும் கேட்கலைசொல்லப் போனா அவருக்கு எங்களைத் தெரியவே தெரியாது.அவர் யதார்த்தமா பஸ்ல வந்திருக்கலாம்..அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்…. என்று பட்டாசாய் பொரிந்த லட்சுமி

வா அபிபோகலாம் என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகன்றாள்.

எதுக்குடி இவன் இப்படி பேசுறான்..? என்று அபி வினவ

ம்ம்ம்திருடனுக்கு தான் யாரைப் பார்த்தாலும் திருடன் மாதிரியே தோணுமாம்…! அதான் என்றாள் லட்சுமி நீட்டி முழக்கி..

ஒருவேளை சங்கர் எங்க இருக்கான்னு இவனுக்கு தெரிஞ்சிருக்குமோ…? என்றாள் சந்தேகமாய்.

அதைப் பத்தி நமக்கென வந்தது.இதுல தலையைக் குடுத்தா…. கிரைண்டர்ல தானா போய் தலையைக் குடுப்பதற்கு சமம்..பேசாம வாயை மூடிகிட்டு வாடி…!

சரி..சரிகோபப்படாத என்றபடி அவளுடன் இணைந்து நடந்தாள் அபி.

ஆனால் ஜானின் சந்தேகப் பார்வை மட்டும் இவர்களைத் தொடர்ந்தது.

அந்த பெண் இறந்ததால் உறவினர்கள் கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய வர….அந்த கல்லூரியே கலவரமாய் மாறியது.

அவர்கள் அனைவருக்கும் திடீர் விடுமுறை அறிவிக்க….போன வேகத்திலேயே அனவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

என்ன அபி அதுக்குள்ளே வந்துட்ட…? என்றார் கோவிந்தன்.

அபி நடந்ததை சொல்ல….ம்ம்ம்ம்….இந்த காலத்து புள்ளைகளுக்கு எல்லாமே அவசரம்..எல்லாமே பிடிவாதம்….அதுவே கடைசியில் இப்படி தப்பான பாதைக்கு  கூட்டிட்டு போய் விட்டுடுது என்றார் கோவிந்தன்.

ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கமால் தன் அறைக்குள் சென்று முடங்கினாள் அபி.

தென்னைமரக் காற்று சில்லென்று அவள் அறைக்குள் பரவ….காலையில் கண்ட ரிஷியின் முகம் அவள் மனக் கண்ணில் வந்து சென்றது.

அவன் மீது மோதியதில் ஏற்பட்ட குறுகுறுப்பு அடங்க மறுத்தது.முதன் முதலில் ஏற்பட்ட காதல்….முதன் முதல் ஏற்பட்ட அன்பு….அவளின் வயது அவளைக் காதல் பாதைக்கு இட்டு செல்ல…..

அபிராமி என்ற பாட்டியின் குரலில் ரிஷியின் நினைவில் இருந்து மீண்டாள்.

பாட்டி என்றாள்.

நாளைக்கு உங்க அக்காவைப் பெண் பார்க்க வராங்கவீடெல்லாம் கொஞ்சம் ஒதுங்க வைக்கணும்…..வேலைக்காரங்க பார்த்துப்பாங்க….ஊட மாட ஒத்தாசையா இருஎன்றார்.

ஹய்யா…! அக்காவுக்கு கல்யாணமா…? என்றாள் சந்தோஷமாய்.

அவளின் கபடமில்லா சந்தோஷத்தில் வள்ளியே ஒரு நிமிடம் நெகிழ்ந்து தான் போனார்.

பொண்ணு தான் பார்க்க வராங்க..! கல்யாணம் எல்லாம் அவங்க சொல்றதை வைத்து தான் இருக்குபோபோய் நான் சொன்னதை செய்..! என்று விரட்ட….சந்தோஷமாய் துள்ளிக் கொண்டு ஓடினாள் அபிராமி.

என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும்….பேத்திகளை அவர் சொகுசாய் இருக்க விட மாட்டார்.வீட்டு வேலைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்திருந்தார்.

அதில் அபிராமிஎளிதில் கற்றுக் கொள்ளசரண்யா சுணக்கம் காட்டுவாள்.

ஏன் பாட்டி..! அதான் வேலைக்காரங்க இருக்காங்களே..! அப்பறம் ஏன் நாம செய்யணும்…? என்பாள்.

வேலைக்காரவங்க இருந்தா நாம ஏதும் செய்யக்கூடாதுன்னு இருக்கா….! நாளைக்கு கட்டிட்டு போற இடத்துல..இது தான் நீங்க பெண்ணை வளர்த்த லட்சணமா..? என்று யாராவது கேட்கவா…?ஆயிரம் பேர் இருந்தாலும் புருஷனுக்கு பொண்டாட்டி தான் சமைக்கணும்நம்ம வேலையை நாம தான் பார்க்கணும் என்று அதட்டலாய் சொல்லுவார்.

பழமையும்,நாகரிகமும் கலந்தே வளர்க்கப்பட்டனர் இருவரும்.அதில் அபிராமி சகலகலா வள்ளியாக இருந்தாள்.அதை நினைத்து அமிர்தவள்ளிக்கு பெருமையாய் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்.

தனக்கு வரும் ஆபத்தை உணராத அபி….சந்தோஷமாய் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரிஷியின் நினைவுகளுடன்.

கண்கள் திறக்கும் எந்தன் மனமே…!

எங்கு நீ தூங்கிக் கிடந்தாய்…!

காதல் துளிர்க்கும்….இந்த நொடியே…!

எங்கு நீ உறைந்திருந்தாய்..!

இதயம் தன போக்கிலே..அவன் பின்னே போக….!

உடலோ..ஓர் கூடென என் முன்னே வாழ…!

 

Advertisement