Advertisement

அத்தியாயம் 09

விடுமுறை நாளில், வயலில் வேலை செய்யும் தந்தைக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு துப்பட்டாவைக் கைகளில் சுற்றியவாறு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள் கயல்.

வாழைத் தோப்பிலிருந்து வெளியே வந்து சாலையிலிருந்த புல்லட்டின் அருகே செல்ல, கயல் வருவதைக் கவனித்தான் அன்பு. சட்டெனத் தோப்புக்குள் சென்று மறைந்து நின்று கொண்டான்.

அவள் அருகே வரவே, சட்டென அவள் கை பிடித்து இழுத்துத் தோப்புக்குள் சிறிது தூரம் இழுத்துச் சென்றான். இதை எதையும் எதிர்பாராதா கயல், முதலில் அவள் கையை விடுவிக்க முயன்று, முடியாமல் போகவே பயத்தில் கத்த தொடங்கினாள்.

அவள் சத்தமிடவே, பட்டென அவளைக் கீழே தள்ளியவன் அவள் துப்பாட்டவை இழுத்தான். அவன் செயலில் மொத்தமாக அதிர்ந்தவள் உடல் நடுங்க, முகம் வியர்க்க, பயத்தில் பின்னோக்கி நகர்ந்தாள், அவன் நெருங்குவது பிடிக்காமல்.

இதயத்தின் படபடப்பு அதிகரிக்க, விழிகளை இறுக மூடிக்கொண்டாள். தன் கன்னத்தில் அவன் கன்னம் உரச, முதல் முதலாக ஒரு ஆண்வாசம் தன்னைத் தாக்க, ரசிக்கவில்லை பயம் தான் கொண்டாள்.

முகம் சுருக்கி, உடலைக் குறுக்கிக் கொண்டு நடுங்கும் குரலில், “தள்ளி போங்க, இல்லைன்னா கத்தி எல்லாரையும் கூப்புடுவேன்” என்றாள். அவளின் இருகைகளையும் முறுக்கிப் பின்புறம் துப்பாட்டாவால் கட்டினான்.

அதன் பின்னே அவளிடமிருந்து விலகி வாழை மரத்தில் சாய்ந்தவாறு அவள் எதிரே அமர்ந்தான்.  

“எல்லாரையும் கூப்பிடேன். உன்னையும் என்னையும் ஒன்னா பார்த்தா என்ன நினைப்பாங்க? என்ன என்னவோ நினைப்பாங்க. கடைசியில உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. உனக்கு ஓ.கே.ன்னா கத்திக்கிக்கோ. எப்படி வசதி ?” என்றவாறு புருவம் உயர்த்திக் கேட்டான்.

அவன் உணர்ந்தவரைக் கயலை இன்னும் அதே சிறு பெண் என்றே எண்ணினான். ஆனால் அவள் பதினைந்து வயதுப் பருவ பெண். அந்த பருவ வயதிற்கான பாதுகாப்பு உணர்வு உள்ளுக்குள் எழுந்தது. யாரேனும் இப்போது பார்த்தால் அவன் கூறியது போல் தான் நடக்கும் என்றெண்ணியவள், அமைதியாக வாய் மூடிக்கொண்டு முகத்தை திருப்பினாள்.  

அன்பு அப்போது கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தவன், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான்.

அவள் அருகே கிடந்த தூக்குவாளியை எடுத்து திறந்தவன் வாசம் இழுத்துக் கொண்டு, “அடடா.. நாட்டுக் கோழிக் குழம்பா? நல்லா இருக்கே, இதுக்காகவே மாமனைக் கட்டிக்கோ செல்லம். தினமும் உன் கையாள சாப்பிடணும்” என்றவன் எலும்புத் துண்டை கடிக்கத் தொடங்கினான்.

அவன் செயல் அனைத்தும் கடுப்பை தர, கோபத்தைக் காட்டும் நேரம் இதுவல்லவே என எண்ணியவள் மென் குரலில், “நான் போகணும். என் கை கட்டை அவுத்து விடுங்க. ப்ளீஸ்” என்றாள்.

கொஞ்சம் தான் இருக்கு, சாப்பிட்டுகிறேன். சரிடி, என்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லு.. போதும் அவுத்து விடுறேன்” சிரிப்புடனே கூறினான்.

அவளும் சரியெனத் தலையை ஆட்டி வைக்க, உண்டு முடித்து வாய்க்கால் நீரில் கைகழுவி பின் அவள் கை கட்டை அவிழ்த்து விட்டான். அவன் கையிலிருந்த துப்பட்டாவைப் பிடிங்கியவள்,  துக்குவாளியையும் எடுத்துக் கொண்டு ஓடினாள்.

அடியே செல்லம்மா, மாமா படிப்பை முடிச்சிட்டு வர வரைக்கும் வெய்ட் பண்ணுடி” என்று அவன் புன்னகையுடன் கூறினான்.

‘மாமனாம் மாமன்? இவனை நான் என்னைக்காவது மாமான்னு சொல்லிருக்கேனா? இவனை இவனே மாமானு சொல்லுகிறான், லூசுப் பையன் என்று எண்ணியவள், அவன் புறம் திரும்பி, “எனக்கு ஜெயச்சந்திரன் மாமா மட்டும் தான் மாமா, வேற யாரும் எனக்கு மாமா இல்ல” தொலைவிலிருந்தே அவனுக்குக் கேட்கும் படி கத்தி உரைத்தவள் ஓடி விட்டாள்.

அதுவரை இலகுவாகச் சிரித்துக் கொண்டிருந்தவன், கல்லென இறுகினான். ‘நீ எனக்கும் மாமா மகள் தான். சந்திரனுக்கு மட்டுமில்லை, எனக்கும் உரிமை இருக்கு. இல்லை.. எனக்கு மட்டும் தான் உன் மேல உரிமை இருக்கு’ என உள்ளுக்குள் உறுதி கொண்டான். சந்திரனுடனான போட்டியல்ல, கயல் மேல் கொண்ட காதல் தான் காரணம்.

‘நாட்டுக்கோழி குழம்புன்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்குமே..’ என்று பழைய நினைவுகளுடன் சமையலை முடித்தவள், வயலில் வேலையாக இருக்கும் அன்னைக்கும் தந்தைக்கும் உணவு எடுத்துக் கொண்டு கிளம்பினாள். 

களத்தில் மிளகாய் வற்றலை வேலையாட்கள் காய வைத்துக் கொண்டிருக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி.  

“அடியே.. இந்த மாரி பயல எங்கே ஆளையே காணும்?” என்க, ” எதுக்கும்மா என்ன வேலம்மா செய்யணும்?” என்றார் வேலையாள்.

அன்புக்குச் சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன், கொடுத்து விடணும் அதான் பார்க்குறேன், மாரி பயல காணும்”

நான் வேணா போய் கொடுத்துட்டு வரட்டுமாம்மா?”

அடியே, உன்ன வத்தலைக் கை பார்க்கத்தானே சொன்னேன், அந்த வேலையைப் பாரு. மில்லு வழியா யாராவது போன அவங்ககிட்ட கொடுத்து விடுறேன்

அதே நேரம் கயல் அந்த வழியாகச் செல்வதைப் பார்த்தவர், “இந்தா புள்ள, இங்க வா” என்று கத்தி அழைத்தார்.

அவர் அழைப்பில் திருப்பியவள், நல்ல மரத்து நிழல்ல உக்காந்துகிட்டு என்னையவே அதிகாரமா கூப்பிடுதே இந்த ஆச்சி, எதுக்கா இருக்கும்? ஒருவேளை அவருக்கு பொண்ணு பார்த்துருக்குமோ? கோவில்ல பூ எடுக்க மாட்டேன்னு சொன்னதால இப்போ சொல்லிக் காட்ட போகுதோ?ஏதேதோ எண்ணியவாறு அவர் அருகே சென்றாள்.

எங்கடி போறே?” கையில் இருந்த தூக்குவாளியைப் பார்த்த பின்பும் கேட்க, “எங்க வயலுக்குத்தான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு எடுத்துட்டு போறேன்என்றாள்.

சரி. இந்தா, மில்லுல என் பேரன் இருக்கான், அவனுக்கு இந்த சாப்பாட்டை கொடுத்துட்டுப் போ” என்று பித்தளை தூக்குவாளி ஒன்றை அவரும் தந்தார்.

ஏன், உங்க பேரன் வீட்டுக்கு வந்து சாப்பிட மாட்டாரா? கொண்டு போய்க் கொடுத்தாத்தான் சாப்புடுவாராக்கும்என்று கேட்டாலும் தூக்குவாளியை வாங்கிக் கொண்டாள்.

எங்க, அவனாவது வீட்டுக்கு வர்றதாவது? பொண்டாட்டினு ஒருத்தி இருந்தா வருவானோ என்னவோ!” என வருத்தமுடன் கூறினார்.

ஏன் பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய தானே?” என்றவள், எதிர்பார்ப்போடு அவர் பதிலை எதிர்பார்த்தாள்.

கல்யாணப் பேச்சை எடுத்தாலே கோபப்படுறான். பொண்ணு பார்க்கட்டுமான்னு கேட்டதுக்குத்தான் வீட்டுக்கே வர மாட்டிக்கான். எனக்கு அப்புறம் அவனுக்கு யாரு இருக்கா? என் வம்சம் இப்படியே போயிருமோன்னு தான் கவலையா இருக்கு. அதான் கோயில் கோயிலா போய் வேண்டிக்கிட்டு இருக்கேன்டி” என்று தன் கவலைகளைக் கூற, தனக்கு வேண்டிய பதில் கிடைத்த சந்தோஷத்தில் உற்சாகமுடன் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

ரைஸ் மில்லுக்குச் சென்றவள், சரவணனிடம் அன்புவிற்கு ஆச்சி சாப்பாடு கொடுத்து அனுப்பியதாகக் கூறி, தான் சமைத்த உணவை வேண்டுமென்றே மாற்றிக் கொடுத்தாள். அதையும் அவன் சாப்பிடுவதை மறைந்து நின்று பார்த்த பின்பு தான் கிளம்பினாள்.

கண்மாய் மீன் ஏலத்திற்கு ஊர் பெரிய தலைகள் அனைவரும் வந்து அமர்ந்திருக்க, சந்திரனும் செல்வாவும் அப்போது தான் வந்து அமர்ந்தனர்.  

நேரமாகியதால் ஏலம் ஆரம்பிக்க, இருவரும் அன்புவைத்தான் எதிர்பார்த்தனர். ஆனால் அன்பு அங்கு இல்லை.  

பெரிதாகப் போட்டி இல்லை எனினும் இராஜமாணிக்கத்தின் மைத்துனர் போட்டியாக நின்றார்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் போக, இனி அதில் லாபமில்லை என்று அவரும் விலக, சந்திரன் தான் எடுத்தான்.

சந்திரனும் செல்வாவும் வீடு திரும்ப, “என்ன செல்வா, அவன் வருவான், இந்தத் தடவை அவனைத் தோக்கடிக்கணும்னு நினைச்சேன். ச்சே, வராம போட்டானே..” என்க, “விடு சந்திரா, உன்கிட்ட தோத்துத்தான் ஊர விட்டுப் போவான்னு நினைச்சேன் ஆனா போட்டிக்குப் பயந்தே ஊரை விட்டு ஓடிட்டான். அவன் தைரியமெல்லாம் அம்புட்டுத்தான்டா. யாருக்கிட்டே, நம்மகிட்ட போட்டி போட அவனால முடியுமா?” எனப் பெருமையாகக் கூறினான்.

என்னனு தெரியலை செல்வா, ஊருக்குள்ள அவன் வந்து இம்புட்டு நாளாச்சி, அதுவும் எதிர்வீட்டுல தான் இருக்கான். ஆனால் இன்னும் என் கண்ணுல படலையே செல்வா?” என்றவாறு இருவரும் வீட்டிற்குள் வந்தனர்.

யாரு, எதிர்வீட்டுக்காரானா? அவன் நைட் மட்டும் தான்டா வீட்டுக்கு வருவான். அதுவும் வாரக் கடைசியில அவன் தோப்பு வீட்டுல தான் கிடக்கான். ஊருக்குள்ள கூட வர மாட்டிக்கான், ஆளே ரொம்ப மாறிட்டான். அது இருக்கட்டும், ஏலத்துக்குப் போனீங்களே என்னாச்சு?”என்றார் சங்கரலிங்கம்.

தாத்தா, இன்னும் மூனு மாசத்துக்குக் கம்மாய் நமக்குத் தான் சொந்தம் எவனும் கால் வைக்க முடியாது” என்க, “யாரு! என் பேரானாச்சே வா ராசா, சாப்பாடு எடுத்து வைக்குறேன். செல்வா நீயும் வாப்பா” என இருவரையும் அழைத்துச் சென்றார் ருக்மணி.

அந்த வார இறுதியில் ஜெயந்தி கல்யாணத்திற்குப் பட்டு, மற்றும் அனைவருக்கும் உடை எடுக்கவென அனைவரும் டவுனுக்குச் சென்றிருந்தனர். ஜெயந்தி, பூங்கோதையும், கயலையும் தன்னோடு டவுனுக்கு அழைத்துச் சென்றாள்.

அவர்கள் செல்வதற்கு முன்பே வந்திருந்தனர் ஜெயந்தியின் மாமியார் மற்றும் மாமனார். அவர்களுடன் சில உறவினர்களும் வந்திருக்க, மாப்பிள்ளை வரவில்லை.

பெரிய கூட்டத்துடன் கடைக்குள் சென்றவர்கள், ஆண்கள் ஒரு தளம் செல்ல, பெண்கள் பட்டுப் புடவை எடுக்கச் சென்றனர். அதிலும் கல்யாணப் பட்டுத் தேர்வு செய்வதற்கே நண்பகலாகியது.

அதன் பின் மற்றவர்களுக்கு உடை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

அந்த அரக்குப் பட்டு கல்யாணத்துக்கு, நீலக் கலர் முதல் நாள் நிச்சியத்துக்கு. உங்களுக்குப் பிடிச்சிருக்கு தானே? நான் சென்ட் பண்ண ஃபோட்டோஸ்ல எது நல்லா இருக்கு? எனக்கு எந்த புடவை நல்லா இருக்கும்?” எனத் தன்னவனோடு சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தாள் ஜெயந்தி.

ஜெயந்தி என்ற குரல் கேட்டுத் திரும்ப, அன்புவை பார்த்தவள் காலை கட் பண்ணிவிட்டு, “அன்பு அண்ணா நீங்க எங்க இங்க?” என்றாள்.

ஒரு வேலையா வந்தேன், அது சரி நீ என்ன இங்க? ஓ..! கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுக்க வந்தீங்களா?” என்றவாறு தொலைவிலிருந்த கூட்டத்தை பார்த்துக் கேட்டான்.

ஆமா அண்ணா, கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு, அதான். அண்ணா, என் கல்யாணத்துக்கு வந்துரு. எப்படியும் எங்க வீட்டுல இருந்து உன்ன யாரும் அழைக்க மாட்டாங்க. நீ எதுவும் நினைச்சிக்காம எனக்காக வா. நான் அவர் கிட்ட சொல்லிருக்கேன் அவங்க வீட்டுல இருந்து வந்து பத்திரிக்கை வச்சி அழைப்பாங்க” என்றவள் லேசாகக் கண்கலங்க,

அடடா.. இப்பவே மாமியார் வீட்டுல உன் ராஜ்ஜியம் தான் போல? மச்சானைத் தலையாட்டிப் பொம்மையாவே மாத்திட்டியா? எங்க அவரு கூப்பிட்டு வா பார்ப்போம்” என்றான் கிண்டலாக.

அதில் லேசாக வெட்கமுடன் சிரித்தவள், இவர் தான் என்று ஃபோட்டோ காட்டி “அவர் வரலையே, ஏதோ வேல இருக்காம்” என்றாள்.

வசந்தா, கயலை நிற்க வைத்து அவள் மேல் ஒவ்வொரு புடவையாகப் போட்டுப் பார்த்துத் தேர்வு செய்து கொண்டிருந்தார் ஆசையுடன்.  

மறுபுறம் பூங்கோதையும் ருக்மணியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அன்பு மேல் தளத்திலிருந்து கீழே இருக்கும் போதே கயலைக் கவனித்தான். அதன் பின்னே ஜெயந்தி அருகில் வந்து அவளிடம் பேசினான். என்னதான் ஜெயந்தியுடன் பேசினாலும் அவன் கண்கள் கயல் மேல் தான் இருந்தது.

அவள் புடவை தேர்வு செய்யும் வரை ஜெயந்தியுடன் கதை பேசியவன், அதன் பின்னே விடை பெற்றுக் கிளம்பினான்.

திரும்பியவன், அந்தத் தளத்திலிருந்து படிகளில் இறங்க, எதிரே வந்தனர் சந்திரனும் செல்வாவும்.

அன்புவின் மேல் நிலைபெற்று கனலை வீசியது சந்திரனின் பார்வை. அன்பு ஒவ்வொரு படியாக இறங்க, அவன் பார்வை சந்திரனை விட்டு இறங்கவில்லை.

இருவரும் ஒருவரைக் கடந்து செல்லும் நொடிகளில் அவர்கள் இருவரின் பார்வையும் மோதிக் கொள்ள, அதில் போட்டியும் குடும்பப் பகையும் கலந்தே இருந்தது. 

Advertisement