Advertisement

அத்தியாயம் 08

ஜெயந்தியுடன் பேச வேண்டும், விளையாட வேண்டும் என்று ஆசை கொண்ட அன்பு, மாலை அவள் வகுப்பு முடிந்து வெளியே வரும் போதே எதிர் சென்று நின்றான்.  

“ஜெயந்தி..” என அழைத்தவாறு அவள் முன்பு ஒரு சாக்லெட்டை நீட்ட, நிமிர்ந்து அவன் புன்னகை முகம் பார்த்தாள்.

அவள் தயக்கம் அறிந்தவன், “நானும் உனக்கு அண்ணன் தான், எங்க அம்மா அப்படி தான் சொன்னாங்க” என்றான்.  

காலையில் அழைத்து வந்தபோதே செல்வா முதல் தனது அனைத்துத் தோழர்களையும் அவளுக்கு அண்ணன் என்று அறிமுகப்படுத்தி இருந்தான் சந்திரன்.

ஆகவே அண்ணன் என்ற வார்த்தைக்காகவே சாக்லெட்டை வாங்கிக் கொண்டு அவள் சிரிக்க, அருகே இருந்த கயல், “ஏய் ஜெயந்தி யார் என்ன கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு சந்திரன் மாமா சொன்னாங்களே, மறந்துட்டையா?” என்றவாறு அவள் கைகளிலிருந்து பிடுங்கி எறிய முயன்றாள்.

அவள் செயல் அறிந்தவன், கயலின் கையைத் தட்டிவிட்டு, ரெட்டை ஜடை அணிந்திருந்தவளின் ஒருபுறம் முடியைப் பிடித்து இழுத்தான். லேசான வலிக்கே ஓவென அழுதவள், “சந்திரன் மாமா கிட்ட சொல்லுறேன் பாரு…” என்று கண்ணைக் கசக்கியவாறு ஓடினாள்.

காலையில் அழைத்து வரும் போதே யாரேனும் அடித்தால் தன்னிடம் கூறுமாறு சந்திரன் அறிவுரை கூறியுள்ளான்.  

கயல், சந்திரனிடம் சென்று கூறினாள். கயலின் கண்ணீர்.. மேலும் தன் தங்கையை உரிமை கொண்டாடும் அன்புவின் செயல் அனைத்தும் அவனுக்குள் கோபத்தைக் கொடுத்தது.

அன்புவின் முன் சென்று நின்றவன், “கயலை எதுக்குடா அடிச்சே? என் பாப்பாவுக்கு நீ எதுக்குடா சாக்லேட் கொடுத்த?” கேட்டவாறு அவன் சட்டையைப் பிடித்துச் சண்டையிடத் தொடங்கினான். அவர்களுடன் செல்வாவும் சேர்த்து கொள்ள, மூன்று சிறுவர்களும் பள்ளி வளாகத்திற்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.

ஆசிரியர் அவர்களை விலக்கித் தலைமை ஆசிரியரிடம் கூட்டிச் செல்ல, அவர் எச்சரித்து அதன் பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கசங்கிய சட்டை சிறிது காயத்துடன் வந்த சந்திரனைப் பார்த்த ருக்மணி பதறி விசாரிக்க, சந்திரனும் கயலும் அனைத்தையும் கூறினர்.

சந்திரனின் மேல் மிகுந்த பாசம் கொண்டவர், அவன் அடிபட்டு வரவே, அதில் கோபம் கொண்ட ருக்மணி, ஜெயந்தியை அழைத்துக் கண்டித்தார். 

ஏற்கனவே கயலின் கண்ணீர், சந்திரனின் காயம் கண்டு, தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமோ என்ற பயத்தில் இருந்த சிறுமி, ருக்மணியும் கண்டிக்கவே, மொத்தமாகப் பயந்து அழுது விட்டாள்.

விஜயராகவனும் வசந்தாவும் உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தனர். இரவில் ஜெயச்சந்திரன் காயத்திற்கு மருந்திட்டு அவனுக்கு உணவூட்டி உறங்க வைத்தார் ருக்மணி.

மறுநாள் வசந்தா வந்து, ஜெயந்தியைப் பார்க்க அதீத காச்சலில் தன்னிலை மறந்து, “அன்பு.. அண்ணா.. அன்பு.. அண்ணா..” என்று பிதற்றிக் கொண்டிருந்தாள். அவள் மனத்திற்குள் அன்புவும் அவள் அண்ணனும் கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிடும் காட்சியே பதிந்திருந்தது.

பின் மருத்துவமனை அழைத்துச் சென்று, இரண்டு நாள் சிகிச்சைக்குப் பின் நலமடைந்து வீடு வந்தாள்.

மகளின் நிலை கண்டு மனம் நைந்த விஜயராகவன், அன்னை, தந்தை, சந்திரன், கயல் என அனைவரையும் அழைத்து, ஜெயந்தி அவள் விருப்பம்போல் அன்புவிடம் பேசிக்கொள்லாம் என்றும், யாரும் அவளைக் கேள்வி கேட்கவோ, தடுக்கவோ, தண்டிக்கவோ கூடாது எனக் கட்டளையிட்டார்.

அதன் பின் பள்ளியிலும் வெளியிலும் அன்புவும் ஜெயந்தியும் பேசிக் கொள்ள யாரும் எதுவும் சொல்லுவதில்லை. தன் தவறு செய்தால் தண்டிக்கும் சந்திரனை விட, எப்போதும் தனக்கு சாக்லேட் கொடுத்து தன்னோடு விளையாடும் அன்புவை அவளுக்கு அப்போது பிடித்திருந்தது.

நடை பயின்றதிலிருந்தே அவர்களோடு வளர்ந்த கயலின் மனத்திற்குள், அன்பு எதிர்வீட்டுப் பையன், சந்திரனின் வீட்டிற்குள் பேசிக் கொள்ளும் விதத்திலிருந்தும், சந்திரனின் வெறுப்பிலிருந்தும் அவன் தங்கள் குடும்பத்திற்கு ஆகாதவன் என்றும் எண்ணியிருந்தாள். அதாவது சந்திரனின் குடும்பமும் தங்கள் குடும்பமும் ஒன்று என்ற எண்ணம்.

இதில் அன்பு – கயலின் முதல் சந்திப்பு, அவனைக் கண்டாலே முகம் திருப்பிக் கொள்ளும் நிலையிலிருந்தாள்.

அவள் முகத் திருப்பல் அன்புவிற்குள் உற்சாகத்தைக் கொடுக்க வேண்டுமென்றே அவளுடன் வம்பிழுத்து வாதாடினான். சில சமயங்களில் அவளை அடித்தும் விடுவான். அவன் மனதில் கயல் தனக்கு மாமன் மகள் என்றே பதிந்திருந்தது.

ஜெயந்திக்குப் பஞ்சுமிட்டாய்,  ஆரஞ்சு மிட்டாய்,  லாலிபப், ஜவ்வுமிட்டாய், தேன் மிட்டாய், கடலைமிட்டாய், எள்ளு மிட்டாய், குச்சி ஐஸ், என அனைத்தையும் வாங்கி தருவான். அப்போதெல்லாம் அருகில் இருக்கும் கயலுக்கும் அவன் தர, முதலில் வேண்டாம் என தலையாட்டுபவள், பின் அவன் கைகளிலிருந்து வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிடுவாள்.

தன்னைத் தாண்டிச் சென்ற சிறுவர்கள், ஆளுக்கு ஒவ்வொன்றாக கைகளில் பிடித்துச் சுவைத்தவாறு சென்றனர்.

அதைப் பார்த்ததுமே அவளுக்குள் நினைவில் படிந்தவரை இனிமையான நினைவுகள் வந்து சென்றது. 

‘அவனுக்குள்ளும் இந்த நினைவுகள் இருக்குமா? இல்லை மறந்திருப்பானா? என்னையே மறந்திருப்பானோ? இல்லை, என்னைப் பார்க்க நேரும் போதே கவனமாக என் பார்வையைத் தவிர்க்கிறான் எனில், அவன் என்னை மறக்கவில்லை’ அந்த நினைவே தித்தித்தது.

அவன் அறையைக் கடந்து செல்லும் போதே அவன் இருக்கிறானா என ஒரு பார்வை வீசிச் செல்ல, அவன் தன் இருக்கையில் அமர்ந்து ஒரு ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்.

பள்ளி வளாகத்திற்கு வெளியே வந்து எதிரே இருந்த சிறு கடையில் மிட்டாய் வாங்கியவள், ஒரு சிறுவனை அழைத்து அவனிடம் அன்பிற்குக் கொடுத்து அனுப்பினாள்.

முதலில் அவன் அறைக்குச் செல்ல பயந்த சிறுவன், அவனுக்கும் ஒரு மிட்டாய் வாங்கித் தர, பின் சென்றான்.

தயங்கித் தயங்கி அந்த சிறுவன் வாசலிலே நின்றான். தன் வேலைகளை முடித்தவன் இரு கைகளையும் கோத்து முதுகுப்புறம் வளைத்துச் சோம்பல் முறித்தவாறு நிமிர்ந்தான்.  

சிறுவனைப் பார்த்தவன் உள்ளே அழைக்க, உள்ளே வந்தவன் அவன் முன்பு கையிலிருந்த மிட்டாயை நீட்டினான்.

புன்னகையுடன் அதை வாங்கியவன், அவன் தலை தடவி, “உனக்குப் பிறந்த நாளா கண்ணா?” எனக் கேட்டான்.

மறுப்பாகத் தலையசைத்தவன், “கயல் மிஸ் குடுக்கச் சொன்னாங்க..” என்றவன் ஓடிவிட்டான்.

அவனுக்குள் சிறு வயது நினைவுகள் வர, கோபமுடன் பற்களைக் கடித்தவன், வாசல் வரை வெளியே வந்து இருபுறமும் கயலைத் தேட, அவள் இல்லை. மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தவன் மிட்டாயை டேபுளில் வைத்து விட்டு மென்னகையுடன் அதையே பார்த்தான்.

அனைத்தும் அவனுக்குப் பின்புற ஜன்னல் வழியா எட்டி பார்த்துக் கொண்டிருந்த கயலுக்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. அவன் தூக்கி எறிந்து விடுவான் என்று எண்ண, அவன் சிரிப்பில் மன நிறைவுடன் சென்றாள்.

அதன்பின் கிளம்பியவன், கோழிப் பண்ணை, தென்னந் தோப்பு, ரைஸ் மில்லுக்குச் சென்று விட்டு மீண்டும் மாலை பள்ளிக்கு வந்தான்.  

முன்பு மாலை ஒருமுறை மட்டுமே வருபவன், கயல் வேலைக்கு வந்த பின் காலை, மாலை இருவேளையும் வந்து சென்றான்.

அவனோடு பேசுவதற்கான வாய்ப்பை எதிர்பார்க்க, அதுவும் அமைந்தது. மறுநாள் காலை அவன் பள்ளி வளாகத்திற்குள் ரௌண்ட்ஸ் செல்ல, கயல் அவள் வகுப்பறை வாசலில் ஒரு சிறுவனை நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிட்டுந்தாள்.

அன்புவின் வருகையைக் கவனித்தவள், “ஏன்டா என்னையே வெய்ட் பண்ண வைக்குறையா? சீக்கிரம் வரணும்னு தெரியாதா?” தங்களை நெருங்கி வரும் அன்புவின் மேல் பார்வையைப் பதித்தவாறு சத்தமாகக் கேட்டாள்.

சாரி மிஸ் இன்னைக்கு லேட்டாச்சு…” என்று சிறுவன் அவளைப் பயப்பார்வை பார்க்க, “நேத்தும் நீ லேட்டாத்தானே வந்த? உனக்காக நான் வெய்ட் பண்ணனுமா? “என்க, அப்போதுதான் அன்பு அவர்களைத் தாண்டிச் சென்றான்.

அவன் அமைதியுடன் செல்லவே கோபமுற்ற கயல், சிறுவனை அடிக்க கையோங்கினாள். பயந்த சிறுவன் அடிக்கும் முன்பே, “ஐய்யோ மிஸ் வேண்டாம், வேண்டாம் மிஸ்..” என்று கத்தினான்.

சிறுவனின் குரலில் திரும்பிய அன்பு, கயலின் செயலை பார்த்து ஒரே எட்டில் அவர்கள் அருகே வந்து தடுக்கும் விதமாக அவள் கைகளை இறுகப் பிடித்தான்.  

“அவனை கிளாஸ் உள்ளே அலோ பண்ணுங்க” என்றான் சிறுவனின் முகம் பார்த்து.

அவன் பேசியதற்கு மகிழவா அல்ல வார்த்தைகளில் புதிதாக மரியாதை கலந்ததற்கு வருந்தவா என்று தெரியாது அவன் முகத்தையே பார்த்தாள்.

அதை உணர்ந்தவன், சிறுவனை வகுப்பறைக்குள் அனுப்பி விட்டு, கோபமுடன் முகத்தைத் திருப்பினான்.

கை எலும்புகள் உடையும் அளவிற்கு அவன் பிடி இறுகி இருக்க, அதில் அவன் கோபம் உணர்ந்தவள், “மாமா…” என்றாள் உடைந்த குரலில்.  

அதில் தன்னிலை பெற்றவன், பட்டென அவள் கையை உதறி விலகி நடந்தான்.

மாமா, உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருப்பேன் எவ்வளோ நாள் ஆனாலும்…” அவள் குரல் பின்புறம் மெல்லிதாய் கேட்க, அவனுக்குள் மேலும் எரிந்தது.  

‘உன்னை யாருடி காத்துக்கிட்டு இருக்கச் சொன்னா? அதான் உனக்குன்னே அந்த சந்திரன் இருக்கானே, நீயும் அவன் வீட்டைத் தானே சுத்தி சுத்தி வர்றே? அப்பறம் என்னடி?’ எண்ணியவன் நடையில் வேகம் கூடியது.

இவ்வளோ பிடிவாதமா? ஆனால் இந்த பிடிவாதத்தை உடைக்காம விட மாட்டேன். சாயங்காலம் பார்த்துக்கிறேன் என்றெண்ணியவள் வகுப்பறைக்குள் சென்றாள். அவன் விலகிச் சென்றதில் அவனை நெருங்கும் வேகம் கயலுக்குள் அதிகரித்தது.

மாலை அனைவரும் சென்றிருக்க, சிறிது வேலை இருக்க அதையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தாள் கயல். எப்போதும் பள்ளிக்குச் சைக்கிளில் வருபவள் தன் சைக்கிள் அருகே செல்ல, அங்கு அன்புவின் புல்லட் மட்டும் நின்று கொண்டிருந்தது.

சட்டென்று ஒரு யோசனை தோன்ற, சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்பதை உணர்ந்தவள், தன் சைக்கிள் சக்கரத்திலிருந்து காற்றை வெளியேற்றினாள். அன்புவின் அலுவலக அறையைப் பார்த்தவாறு சைக்கிளில் ஏறி அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் வந்தவன், அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தும், கண்டுகொள்ளாது தன் வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். அவன் செல்லவே ஓடி வந்து அவனுக்குக் குறுக்கே நிற்க, அவன் கோபத்தைப் பைக்கில் காட்டினான்.

பைக்கின் உறும்பலைக் கண்டு கொள்ளாது பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு, ” மாமா, சைக்கிள் பஞ்சர். எல்லாரும் போயிட்டாங்க. தனியா போகப் பயமா இருக்கு. நானும் உங்க கூட வரட்டுமா?” என்றவளின் குரலில் கொஞ்சலுடன் கலந்த பிடிவாதம் இருந்தது.

‘இந்த ஊருக்குள்ள உனக்குத் தனியா போகப் பயமாக்கும்..யார்கிட்ட கத விடுற? எண்ணியவன் பைக்கை வளைத்துக் கொண்டு அவளைத் தாண்டிச் சென்றான்.

மாமா, நம்பி வந்த பொண்ண இப்படி விட்டுட்டு போறீங்களே..” அவள் கத்தியது கேட்டாலும் அவன் நிற்கவில்லை.

‘ச்சே! இவர நம்பி இருந்தா சைக்கிளும் போச்சு. இதைத் தள்ளிட்டு வேற போணுமா? நினைத்தவள் சைக்கிளை அங்கே லாக் செய்து சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

அதே நேரம் சந்திரன் அவள் அருகே வர, “என்ன கயலு, ஏன் தனியா நடந்து போற? எத்தன தடவ சொல்லுறது தனியா போகாதேன்னு, முதல்ல ஏறு” கேள்வி கேட்டவனுக்கு அவள் பதில் தேவையானதாக இல்லை.

சந்திரனின் பைக்கில் ஏறியவள், முகம் வாட, அமைதியுடன் வந்தாள். இதை எதையும் கவனிக்காத சந்திரன் தனக்கு முன்பே தொலைவில் செல்வது அன்பு என்பதை உணர்ந்து வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

சாலையில் சொல்லும் போது அவனுக்கு முன்னே தான் செல்ல வேண்டுமென்ற எண்ணம். சில நிமிடங்களே அவனைக் கடந்து செல்ல, பின்புறம் இருந்த கயல் அன்புவை திரும்பிப் பார்த்தாள். அவன் கோபம் மின்னியது.

அன்புவின் உள் மனது, அவள் வருகிறேன் என்று சொல்லும் போது அழைத்து வந்திருக்கலாமே இப்போது கோபம் கொண்டு என்ன பயனென்று அவனைச் சாடியது.

சற்று சோர்வுடன் அமைதியாகச் செல்ல, எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அன்புவின் அருகே வர, அதிலிருந்து இராஜமாணிக்கம் இறங்கினர்.

அவனும் பைக்கை நிறுத்தி, “என்ன அங்கிள் என்னாச்சு?” என்றான்.

நானே உன்ன பார்க்க வரணும்னு நினைச்சேன். நல்லவேளையா வழியிலே உன்ன பார்த்துட்டேன்” என்றவர் அவன் அருகே வந்து நின்றார்.

நாளைக்கு நம்ம ஊரு கம்மா மீனு ஏலம்பா, நீயும் வந்துரு. பொதுவா எப்படினாலும் வருஷா வருஷம் உன் அப்பாதான் எடுப்பார்”

தெரியும் அங்கிள், உடனே என்கிட்ட போன் பண்ணி சொல்லுவாரு. ஆமா அங்கிள் யாரெல்லாம் வருவாங்க? அப்புறம் இதுல பெருசா ஒன்னும் லாபம் இருக்காதே?”

ஏலத்துல எடுத்து, ஆள்விட்டு மீன் பிடிச்சா சுத்தி இருக்குற ஊர்க்கார எல்லாம் போட்டி போட்டுக்கிட்டு வந்து வாங்கிட்டு போவானுக, நம்ம ஊரு கம்மாமீனு அம்புட்டு ருசிப்பா. கடைசி நாள் மீனுல வேலைக்காரங்க எல்லாருக்கும் விருந்து போடுவான் சுப்பிரமணி. 

என் மச்சினன் கிட்ட சொல்லிருக்கேன், விஜயராகவன் கிட்ட சொல்லிருக்கேன், உன் கிட்டையும் சொல்லியாச்சு. நாளைக்குக் காலையில பதினோரு மணிக்கு நம்ம கம்மாக்கரையில இருக்குற ஆலமரத்தடியில தான் ஏலம் நடக்கும். நீயும் நேரத்துக்கு வந்துருப்பா”

தன் கடமையென அனைத்தையும் சொல்லிய ஊர் நிர்வாகியை, தலையசைத்து அனுப்பியவன், தன் வீட்டிற்கு வந்தான்.

Advertisement