Advertisement

அத்தியாயம் 07

எப்போதும் போல் தன் வேலைகளை முடித்தவள், குளித்து ஒரு இளம் பச்சை வண்ணச் சுடிதாரை அணிந்தாள். நீளமான முடியைப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தைச் சூடி, கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து விட்டு, ஒருபுறம் மல்லிகைச் சரத்தை முன்புறத் தோளில் சரிய விட்டுக் கொண்டு கிளம்பினாள்.

அவன் வெளியே கிளம்பி விடுவானோ என்ற எண்ணத்தில் அன்னையையும் அவசரமாக அழைத்துக் கொண்டு அன்புவின் வீட்டிற்குச் சென்றாள்.

ஊருக்கு மத்தியில் சந்திரன் வீட்டுக்கு எதிர்ப்புறம் பழைமையும் பொலிவும் நிறைந்த பெரிய வீடு. எட்டு வயதுச் சிறுமியாக இருக்கும் போது ஜெயந்தியுடன் வீட்டிற்கு வெளியே மரத்தில் ஊஞ்சலாடும் போது தவறி விழுந்து விட, கால் முட்டியில் சிராய்த்துச் சிறிது இரத்தம் கசிந்தது. ஆனால் அதற்கே வலி தாங்காமல் கதறி அழுது விட்டாள் கயல்.

அதே நேரம் அந்த வழியாக வந்த மனோரஞ்சிதம் அதைக் கண்டு பதறி, கயலைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றார். காயத்திற்குக் கட்டிட்டி, அவளை மடியில் அமர்த்தி, அழுகை குறையும் வரை கொஞ்சி ஆறுதல் கூறினார்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்த அன்புவிற்கு அவள் அழுவது பிடிக்கவில்லை.

அவளைச் சிரிக்க வைத்துப் பார்க்க நினைத்தவன், தன் விளையாட்டுப் பொம்மைகளை அவளிடம் தர, அழுகை குறைந்து சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். அன்றொரு முறைதான் அவன் வீட்டிற்குள் சென்றதாக ஞாபகம்.

அன்னையுடன் அவன் வீட்டிற்குக் கிளம்பினாள். இரும்புக் கதவு தாண்டி உள்ளே செல்ல, வாசலில் அவன் புல்லட் நிறுத்தி இருப்பதைப் பார்த்தவளுக்கு, அவன் வீட்டில் இருக்கிறான் என்பதில் உற்சாகம்.

நிலை வாசலுக்கு மேலே லட்சுமி சிலை இருக்க, அதை நிமிர்ந்து பார்த்தவள், வலது காலை வைத்துப் படி தாண்டி உள்ளே நுழைந்தாள்.

நேர் எதிராகப் பின் வாசலில் வேலையாளுடன் பேசிக் கொண்டிருந்த சிவகாமி, இருவரையும் பார்த்ததும் நடுக் கூடத்திற்கு வந்து வரவேற்பாக அழைத்தார்.

சிவகாமியும் கற்பகமும் நலம் விசாரிப்புடன் பேசிக் கொண்டிருக்க, கயலின் கண்கள் கலைநயம் மிகுந்த அந்த வீட்டை ரசித்தது.

ஆயிரம் ஜன்னல்களும், முப்பது அறைகளுக்கும் அதிகமான அறைகளும் இரண்டு தளங்களும் கொண்ட பெரிய வீடு. பார்த்தவரை முகப்பு வளைவுகளிலே அழகிய வேலைப்பாடுகளோடு இருக்க, உள்ளே நுழைந்ததும் இருபுறமும் நீண்ட பட்டாலை. அதில் ஒருபுறம் பெரிய மர ஊஞ்சல் இருந்தது. 

இருபுறமும் வரிசையாக மூடிய அறைகள் இருக்க, அதன் கதவுகளில் கண்ணாடி பதிக்கப்பட்டு பளபளப்புடன் இருந்தது. கதவுகளுக்கு அருகே இருபுறமும் இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்ட பெரிய, பெரிய ஜன்னல்கள் இருந்தது. ஜன்னலுக்கு மேலே வெளிச்சம் அறையினுள் நுழையவென பச்சை, சிவப்பு வண்ணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தது. அவைகள் வெப்பத்தைத் தடுத்து வெளிச்சத்தை மட்டும் அறைக்குள் அனுப்பும்.

நேராகப் பின்புறம் பார்க்க.. கிணற்றடி தெரிந்தது, அதற்கு முன் கூடம். இடதுபுறம் சமையலறையாக இருக்கக் கூடும். மேலே நிமிர்ந்து விதானத்தைப் பார்க்க, நுண் வேலைப்பாடுகள் நிறைந்து தங்க முலாம் பூசப்பட்டு இருக்க, அது கீழே கருப்பு வெள்ளை மார்பிள் தரையில் பொன்னிறமாக எதிரொலித்தது. அனைத்தும் சுத்தமுடன் இருந்தது.

நடுக்கூடத்தின் இருபுறமும் பெரிய பெரிய தேக்கு மரத்தூண்கள் வரிசையாக இருக்க, அவைகள் எத்தனை எனக் கயலின் கண்கள் கணக்கிட்டுக் கொண்டிருந்தது.

சிவகாமி வரும் போதே அன்புவும் கிளம்பி அறையிலிருந்து வெளியே வந்தான். கீழே பேச்சுக் குரல் கேட்கவே மேலிருந்தே எட்டிப் பார்த்தான். கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு அவன் கண்கள் இன்றுதான் கயலைப் பார்த்தது.

அவன் உதடுகள் அவனறியாது, ‘செல்லம்மா..’ என மெலிதாய் முணுமுணுத்தது. நினைவுகளுக்குள் பதிந்திருந்த கயலின் உருவத்திற்கும் இப்போது தெரியும் கயலின் உருவத்திற்குமான வித்தியாசத்தை அறியத் தூண்டியது மனது.

நீண்ட பின்னலை முன்புறம் போட்டுக்கொண்டு அதன் நுனி முடியைப் பிரித்துக் கைகளால் அளைந்து கொண்டிருந்தாள். பெரிய கருவிழியை அங்கும் இங்கும் சுழற்றி வேடிக்கை பார்க்கும் அழகில் அவன் மனம் மயங்கியது.  

பிறை நெற்றியில் சிறு பொட்டும் துளி குங்குமமும் மின்னியது. சிவந்த இதழ்களும், சதைப்பற்று கொண்ட கொழுகொழு கன்னங்களும் அதன் சுவையறியும் ஆவலை அவனுள் எழுப்பியது.

கழுத்தில் மெல்லிய நீளச் செயின் அவள் சுடிதாருக்குள் மறைய, அவன் பார்வை அங்கு நிலைத்தது ஒரு நொடிதான். மறு நொடி, உரிமையோடு தழுவிய பார்வை உஷ்ணமாய் மாறி அவள் பிம்பத்தையே எரித்தது.

அவள் மேல் கோபம் கொள்ளும் தன்னையே வெறுத்தவன், ஆழ மூச்செடுத்து தன்னைச் சீர்படுத்திக் கொண்டு வேகமாகக் கீழிறங்கினான்.

அவர்கள் முன்பு வந்து நின்றவன், நேராகக் கற்பகத்தைப் பார்த்து வணங்கி, “வாங்க அத்தை…” என்க, தலையசைத்தவர், “நல்ல இருக்கீங்களா தம்பி?” என்றார்.

நன்றாக உள்ளதாக வாய்விட்டுச் சொல்லத் தயங்கித் தவிர்த்தவன், “என்ன விஷயம் அத்தை, இவ்வளோ தூரம்? எதுவும் முக்கியமான…?” கேட்டவன் மனதிற்குள், ‘முக்கியமான உதவி எனில் சந்திரனிடம் செல்லாமல் இங்கு வந்தது ஏன்? என்ற கேள்வி எழும்பி நின்றது.

தன் அருகே இருந்த மகளை ஒரு பார்வை பார்த்தவர், “கயலு டீச்சருக்குப் படிச்சி முடிச்சிட்டா. அதான் நம்ம ஸ்கூல்ல அவளுக்கு…” எனும் போது, “அவ்வளோ தானே அத்தை, நான் ஹெட் மாஸ்டர்கிட்டே சொல்லிடுறேன் எல்லா சர்டிபிகேட்டையும் எடுத்துட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு போகச் சொல்லுங்க அத்தை” என்றவன், ஆச்சியின் புறம் திரும்பிப் பார்த்தான்.

கயலும் அப்போது தான் அவனை அருகே பார்த்தாள். கடைசியாகப் பார்க்கும் போது குறும்புப் பார்வையும் அரும்பு மீசையுமாக இருந்தவன், இன்று முழுமையாக வளர்ந்த கம்பீர ஆண்மகனாக முறுக்கு மீசையோடு நிற்கவே, தன்னவன் என்ற உரிமையில் தன்னை மறந்து ரசித்தாள். அருகே இருக்கும் அன்னையையோ எதிரே இருக்கும் ஆச்சியையோ கண்டுகொள்ளவில்லை.

கற்பகத்திடம் தலையசைத்து விடை பெற்றவன் விலகிச் செல்ல, கயல் புறம் ஒரு முறை கூடப் பார்க்கவில்லை. அவன் தவிர்த்ததை உணர்ந்தவளுக்குச் சிறிது வலித்தது.

கயல் மகிழ்ச்சியுடன் பள்ளி செல்லத் துவங்கினாள், அவளைவிட அவள் டியூஷன் சிறுவர்களுக்குத்தான் அதிக மகிழ்ச்சி. “கயலக்கா.. கயலக்கா..” என அவளோடு சுற்றி வந்தனர்.  

“ஏய் அக்கா இல்ல, டீச்சர்னு சொல்லுங்கடா” என்க, யாரும் கேட்பதாய் இல்லை.

மனைவி, மகளின் விருப்பம் என வேல்முருகன் தடை சொல்லாமல் இருந்தார்.

அன்று தமக்கு வேண்டாதவர்கள் இடத்தில் தம்மவள் நிற்கின்றாளே என்று கோபம் கொண்ட சந்திரனுக்கு அன்பு – கயல் மேல், அவர்களின் உறவின் மேல் வேறுவிதமான எண்ணமில்லை. மேலும் அவள் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும் என்று பெண் முன்னேற்றச் சிந்தனை கொண்ட சந்திரன், ஒன்றும் தடை கூறவில்லை.

காலையில் வகுப்பில் அவள் பாடம் எடுத்துக் கொண்டிருக்க, அவ்வழியாகச் சென்ற அன்புவிற்கு அவள் குரலே அவனைத் திருப்பி பார்க்கச் சொல்லியது. அந்த வகுப்பறையைக் கடந்து சொல்லும் போதே ஜன்னல் வழியாகப் பார்த்தவாறு சென்றான்.

அவனுள் அவளை இதே பள்ளியில் முதல் முதலாகப் பார்த்த ஞாபகம். அன்புவின் குழந்தைப் பருவம் முழுவதும் அன்னையின் கைகளுக்குள் வளர்ந்த ஞாபகம் மட்டுமே நிறைந்திருக்கும். நீண்ட காத்திருப்பிற்குப் பின், பெற்ற ஒற்றை மகனைக் கவனிப்பதே தன் கடமை என்றிருந்தார் மனோரஞ்சிதம்.

எத்தனை வேலையாட்கள் இருப்பினும் அன்புவைக் குளிப்பாட்டி, உடைமாற்றி, உணவூட்டி, ஸ்கூலுக்கு அழைத்து சென்று, அழைத்து வந்து, அவனோடு விளையாடி, அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, உணவூட்டி, உறங்க வைப்பது.. என அவரின் மொத்த நாளும் அவனுக்கானதாக இருக்கும்.

அன்பு கோடை விடுமுறைக்குப் பின் ஐந்தாம் வகுப்பு முதல் நாள் பள்ளி சென்றான். எப்போதும் அன்னையின் கை பிடித்துக் கதை பேசியவாறே வீட்டிலிருந்து பள்ளி வரை நடந்து செல்வான். சந்திரனும் அதே வகுப்பில் அவனோடு படிக்க, அப்போதும் அவர்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர்.

அன்னையோடு பேசியவாறு பள்ளி வாசல் வரை வர, எதிரே சந்திரனும் அவனோடு இரு சிறுமிகளும் வந்தனர்.  

அன்னையின் கையை இழுத்து, “அம்மா அங்க பாருங்க, அவனோட புதுசா இரண்டு பாப்பா வாராங்களே யாரும்மா அது? அவன் மட்டும் ரெண்டு பாப்பா வச்சிருக்கான்..” என்றான் சிறுவர்களுக்கான சிறு பொறாமையுடன். 

அவனைச் சரியாக உணர்ந்தவர், “அங்க பாரு கண்ணா, அந்த ரோஸ் கவுன் போட்டு இருக்கிற பாப்பா ஜெயந்தி. சந்திரனோடு தங்கச்சி அப்போ உனக்கும் தங்கச்சி..” என்றார். இருவீட்டுச் சிறுவர்களுக்குள் வளரும் பகைமையை விரும்பாததால்.

‘சரி’ எனத் தலையாட்டியவன் அன்னையின் முகத்தையே பார்க்க, “அந்த ஊதா கலர் கவுன் போட்டுருக்குறது கயல்விழி, சந்திரனோட மாமா பொண்ணு” அதுவரை மட்டுமே அவர் சொல்ல, அவன் மனது, சந்திரனோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி, சந்திரனோட மாமா பொண்ணு எனக்கும் மாமா பொண்ணு..’ என உரிமையோடு கூறியது.

முதல் முதலாக அன்றுதான் கயலைப் பார்த்தான். பார்த்தும் அவனுக்குள் பதிந்து கொண்டாள் அழகு தேவதையாக. அவள் குழந்தை முகமும், பெரிய விழிகளும், குண்டுக் கன்னங்களும் அன்றே அவனை ஈர்த்தது. அவளைத் தழுவிய பார்வையிலே மாமன் மகள் என்ற உரிமையைக் கலந்தான்.

தன் அறையில் அமர்ந்து விழி மூடி அவளை ரசித்தான். முதல் முறை சேலையில் இன்று தான் பார்த்திருக்கிறான்.  

‘இவ்வளோ பெரிய பொண்ணா? வளர்ந்துட்டாளோ? சேலையில கொஞ்சம் ஹைட்டா தெரிகிறாளே? அழகா இருக்கா. தனக்கு உரிமையற்ற இந்த அழகு..’ நினைவே கனமாக இருக்க, நாற்காலியிலிருந்து எழுந்து ஜன்னலோரம் நின்றான்.

அவமானப்பட்டு, அடிபட்ட மனத்தாலும் அவளை ரசிக்கும் கண்களைத் தடுக்க முடியவில்லையே என்ற இயலாமையில் தவித்தான். அவள் தொலைவில் இருக்கும் போதே தன் தடுமாறுவதைப் போன்ற உணர்வு.

மாலை கட்டிட வேலையாட்களுடன் திரும்பி நின்று பேசிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்தவாறே கடந்து சென்றாள் கயல்.

அதன் பின்னும் வந்த நாட்களிலும் அவள் வகுப்பில் பாடமெடுக்கும்போது அவளறியாது, தடுக்க இயலாத தன் விழிகளால் பார்த்துச் செல்வான். அவளும் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு மாறும் போதும், வேலையாட்களுடன் பேசும் போதும், அறையில் அமர்ந்திருக்கும் போதும் அவனைப் பார்த்துச் செல்வாள்.

ஆனால் இதுவரை இருவரும் ஒருவார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. இன்னும் அவன் கோபம் குறைவில்லை. பேச வைப்பதற்கான முயற்சியும் நான் தான் செய்யவேண்டும் என்றெண்ணினாள்.

மாலை சில பொருள்கள் வாங்கவென டவுன் வரை கிளம்பினான் அன்பு. பேருந்து நிலையத்தில் வேல்முருகன் நிற்கவே, அவர் அருகே சென்றவன், “என்ன மாமா நல்லாயிருக்கீங்களா?” என்று நலம் விசரித்தவன், பைக்கிலிருந்து இறங்கி நின்றான்.

நல்லாயிருக்கேன் தம்பி, நீங்க எப்படிருக்கீங்க? சிவகாமியம்மா நல்ல இருக்காங்களா?” என்க, சந்திரனை மாப்பிள்ளை என்று அழைப்பதைப் போல் தன்னை அழைக்கவில்லை என்று என்றும் போல் இன்றும் எண்ணினான்.

என்ன மாமா எதுவும் வேலையிருக்கா? இங்கன நிக்குறீங்களே?” என்க, “ஆமா தம்பி, டவுன் வரைக்கும் போகணும். வாழைக்கு உரமும், பூச்சிக்கொல்லி மருந்தும் வாங்கப் போறேன்” என்றார்.

அவ்வளோ தானே மாமா, நான் வாங்கிட்டு வரேன். நீங்க வீட்டுக்குப் போங்க மாமா” என்றான்.  

“உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்…” என மறுப்பாய் பதில் கூற, பஸ் டிக்கெட் இருக்குற ரேட்டுக்கு எதுக்கு மாமா, அப்புறம் இப்போ போனா இருட்டுன பிறகு தான் வீட்டுக்கு வர முடியும். நான் வாங்கிட்டு வரேன் மாமா..” என்று அனுப்பி வைத்தவன், அதன் பின்னே கிளம்பினான்.

அவன் வெளியே சென்றதால் அன்று முழுவதும் அன்புவைப் பார்க்காமல் இருக்கவே, மாலை கையில் ஒரு பாத்திரத்தோடு ஜெயந்தி வீட்டுப் பக்கம் வந்தவள், வாசலில் நின்று கொண்டு எதிர் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சந்திரன் பின்புறம் அமர்ந்திருக்க, பைக் ஓட்டி வந்த செல்வா, “சந்திரா, உன் பங்காளி இன்னும் ஊருக்குள்ள தான்டா இருக்கான். அது மட்டுமில்ல, இப்போ எல்லாத்தையும் அவன் தான் நிர்வாகம் பண்ணுறான்டா..” என்றான்.

இருக்கட்டும் செல்வா, என்னைக்காவது ஒரு நாள் இந்த ஊரவிட்டு அவமானப்பட்டுப் போகத்தான் போறான்டா, பார்த்துக்கலாம்!” அவன் தோளில் தட்டியவாறு கூறினான்.

சந்திரா, வர்ற புதன் கிழமை நம்ம கம்மா மீனு ஏலம் விடப்போறாங்கடா..” என்க, “இந்தத் தடவை எப்படியும் நாம எடுக்கணும் செல்வா. முதல் தடவ என்கிட்ட மோதப் போறான். தோத்து தலகுனிஞ்சி நிக்கணும்டா அவன்” வீட்டின் அருகே வந்திருக்க, திரும்பி அன்புவின் வீட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்புறம் திரும்ப, கயலும் அன்புவின் வீட்டைப் பார்த்தவாறு வாசலில் நின்றாள்.

அதைக் கவனித்த சந்திரன், “கயலு..” என்று கத்தி அழுத்தமுடன் அழைக்க, பதட்டத்துடன் அவனைப் பார்த்தவள் விழித்தவாறு நின்றாள்.

இங்க நின்னுகிட்டு அங்க என்ன பார்வை? முதல்ல வீட்டுக்குள்ள போ”

அது.. அந்த மரம்”

உள்ள போன்னு சொன்னேன்” இரும்புக் கதவைப் பட்டென்று திறந்தான்.

அவனைத் தாண்டி உள்ளே சென்றவள், “ஜெயந்தி.. அத்தை..” என இருவரையும் அழைத்தாள்.

ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, “என்னடி இரண்டு மூணு நாளா இந்த பக்கம் வரவேயில்லை” என்க, நான் என்ன சும்மா வீட்டுல உக்காந்து டி.வியா பார்த்துக்கிட்டு இருக்கேன்? நான் தான் வேலைக்குப் போயிருவேன்ல.. “என முகத்தைச் சிலுப்பியவாறு கூறினாள்.

அதற்குள் வசந்தாவும், ஜெயந்தியும் வந்து விட, அவர் கையில் பாத்திரத்தைக் கொடுத்தவள், ஜெயந்தியோடு பேசத் தொடங்கினாள்.

நானே உன்ன வரச்சொல்லி அனுப்பணும்னு நினைச்சேன் கயலு, நீயே வந்துட்ட, நல்லது”

எதுக்கு, என்ன விஷயம்?”

கல்யாணம் நல்லபடியா முடியணும்னு எட்டு நாளைக்கு விளக்கு போடணும்னு என் மாமியார் சொன்னாங்க, அதான் கோவிலுக்குக் கூட வாடி”

சாயங்காலம் டியூஷன் இருக்குடி, நீ பூவ கூட்டிட்டுப் போ”

சரிம்மா, வெள்ளிக்கிழமை கல்யாணப் புடவை எடுக்கப் போறோம் அதுக்காவது வருவியா?”

சரி.. சரி.. வரேன்டி கோபப்படாத”

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தவள் அன்புவின் வீட்டையும் ஒருமுறை பார்த்தவாறு சென்றாள்.

Advertisement