Advertisement

அத்தியாயம் 05 

ஆதிநாராயணனும் (அன்புவின் தாத்தா), சங்கரலிங்கமும் (சந்திரனின் தாத்தா) உடன் பிறப்புகள். சிறுவயதில் இருவரும் அண்ணன் தம்பியெனப் பாசமுடன் வளர்ந்தனர். இருவருக்கும் இரு வயது மட்டுமே வித்தியாசம்.  

ஆதிநாராயணனுக்கும் சிவகாமிக்கும் முதலில் திருமணமாக, மறு வருடம் சங்கரலிங்கத்திற்கும் ருக்மணிக்கும் திருமணமானது. முதலில் சில வருடங்களுக்கு சிவகாமி, ருக்மணி உறவு நல்ல முறையில் இருக்க, அதன் பின் லேசாகப் புகைய ஆரம்பித்து.

மாமியார் இல்லாமல் இருக்க, முதல் மருமகள் என அனைத்திலும் மரியாதையுடன் சிவகாமி முன்னிலைப் படுத்தப்பட்டார். அது ருக்மணிக்குப் பிடிக்காமல் இருக்க, சிவகாமியின் மேல் வெறுப்பாய் வளர்ந்தது.

அதன்பின் இருவருக்குமிடையில் அடுப்பறையில் சின்னச் சின்ன விவாதங்கள் வரத் தொடங்கியது. இருவரும் அந்தச் சின்ன பிரச்சனையையும் பெரிதாக்கி, அவரவர் கணவரிடம் குற்றப் பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினர். அதன் பின் இருவருக்கும் அனைத்து விஷயத்திலும் உரிமைப் போராட்டம் நடைபெற்றது. 

ஆண்கள் இருவரும் நல்ல கணவனாக மனைவிக்குத் துணை நிற்க, அண்ணன் தம்பிக்கான பாசம் முறிந்து, அவர்களுக்குள்ளும் போட்டியும் உரிமைப் போராட்டமும் நடைபெறத் தொடங்கியது.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் தந்தை வீடு, சொத்து, நிலம், நகை, பணம், பரம்பரை பொருள்கள் என அனைத்தையும் இருவருக்கும் சமமாகப் பிரித்துத் தனித்தனிக் குடும்பமாக அமர்த்தினர்.

பெரியவர் இருந்தவரை ஊர்த் தலைவராக அவர் இருந்தார். அதன்பின் இவர்கள் இரண்டு குடும்பத்தைத் தவிர ஊர் பொதுவில் யாராவது இருக்க, தேர்தல் முறையிலே தேர்ந்தெடுத்தனர். 

ஆதிநாராயணனுக்குப் பதவி கிடைக்காதது, மேலும் தம்பியின் மீது கோபத்தை ஏற்படுத்தியது. சங்கரலிங்கத்திற்குத் தனக்குக் கிடைக்கவில்லை எனினும் அண்ணனுக்கும் கிடைக்கவில்லையே என்றொரு நிம்மதி. அதுமட்டுமின்றி பரம்பரை வீடு அண்ணனுக்குத் தரப்பட்டதிலும் அவர் மேல் கோபமிருந்தது. அது இருவருக்குள்ளுமான பகை உணர்வை அதிகப்படுத்தியது. அதன் பின் ஊர் விஷயங்களில் தலையிடாது இருவரும் நேரடியாக அனைத்திலும் போட்டியிடத் தொடங்கினர்.

அவர்கள் பிரிந்து செல்லும் போது சிவசுப்பிரமணியனுக்கு ஆறு வயதும், விஜயராகவனுக்கு ஐந்து வயது எனச் சிறுவர்களாக இருந்தனர்.

ஓரே வீட்டில் இருக்கும் போதும் சிவகாமியும் ருக்மணியும் குழந்தைகளை அதிகமாக ஒட்ட விடவில்லை. வளர்ந்த பின்னும் அவர்கள் ஒட்ட இயலாது விலகியே இருந்தனர்.  

தந்தையே போலவே வளர்ந்த பிள்ளைகளுக்குள்ளும் போட்டியும் பகையும் வளர்ந்திருந்தது.

முதலில் சிவசுப்பிரமணியனுக்கும் மனோரஞ்சிதத்திற்கும் (அன்புவின் அன்னை) திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒருவருடமாகியும் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை.

மறுவருடம் விஜயராகவன் அதே ஊரிலிருந்த வசந்தாவை விரும்ப, பெரியோரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடந்தது. சில மாதங்களில் வசந்தா கர்ப்பமடைந்து விட, ருக்மணியும் சங்கரலிங்கமும் கொண்டாடினர்.

எதிர் வீட்டில் திருமணமாகி ஒரு வருடமாகியும் மனோரஞ்சிதம் குழந்தை இல்லாமல் இருக்க சிவகாமியிடம் அவ்வப்போது ஜாடையில் தன் மருமகளைப் பெருமை கூறுவது போல் அவர்களைக் குறை கூறினார்.

வசந்தாவிற்கு நான்காம் மாதம் இருக்கும் போதே மனோரஞ்சிதம் கர்ப்பமாக, சில மாதங்களில் அடுத்தடுத்து இருவரும் ஆண் குழந்தை பெற்றனர். வசந்தா – விஜயராகவனின் குழந்தைக்கு ஜெயச்சந்தரனின் எனப் பெயர் சூட்ட, மனோரஞ்சிதம் – சிவசுப்பிரமணியனின் குழந்தைக்கு அன்புச்செழியன் எனப் பெயர் சூட்டினர். 

குழந்தைகளைச் செழிப்புடன் பகட்டாய் வளர்ப்பதிலும் இரு பாட்டிகளும் போட்டி போட்டுக் கொண்டனர்.

அவர்கள் இருவருமே அவர்கள் தந்தை போன்றே இருக்க, அவர்களுக்கும் பகை உணர்வு கனன்று கொண்டே இருந்தது. பின் நான்கு வருடம் கழித்து வசந்தா, ஜெயந்தியைப் பெற்றெடுத்தார்.

கயலுக்கு அன்று விடியல் எப்போதும் போல் அவனைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலே விடிந்தது. அவன் ஊருக்கு வந்து பதினைந்து நாட்களுக்கும் மேலாகியும் இன்னும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பவனை எப்படி பார்க்க?  

முன்பு அவனைப் பற்றி, அவன் நலம் பற்றி அறிய அந்தத் தெருவிற்குள் சுற்றி வருவாள். இப்போது அவனை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் எனப் பத்து நாட்களாய் பல முறை அந்தத் தெருவைச் சுற்றி வந்து விட்டாள். 

ஒரு நாளில் நான்கு முறையேனும் ஜெயந்தி வீட்டுக்கும் சென்று வந்து விட்டாள். அவன் ஊரில் இருக்கிறான் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கயலும் முயற்சியை விடுவதாய் இல்லை.  

காலையிலே தயிர் நிறைந்த தூக்குவாளியை எடுத்துக் கொண்டு ஜெயந்தி வீட்டுக்குச் செல்வதாகத் தந்தையிடம் கூறிச் சென்றாள்.

அன்புவின் வீட்டில் அவர்கள் கணக்குப் பிள்ளை சுந்தரமூர்த்தி, அவன் வரச் சொன்னதால் வந்து காத்துக் கொண்டிருந்தார். அவரிடம் காஃபி கொடுத்து விட்டு சிவகாமியும் தொழில் பற்றி விசாரித்துக் கொண்டிருக்க, படிகளில் அன்பு இறங்கி வரும் சந்தம் கேட்டு இருவரும் திரும்பி, நிமிர்ந்து பார்க்க.. திகைத்து நின்றனர்.

சீராய் வாரிய தலை, அளவான அடர் மீசையை லேசாக ஓரம் முறுக்கிவிட்டு, கண்களில் புது ஒளி மின்ன, வெள்ளை வேஷ்டி சட்டையில் இறங்கி வந்தவன், ஆச்சியின் முன்பு கம்பீரமாக நின்றான்.

சிவகாமியின் கண்கள், அன்புவின் பின்புறம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்தது. அதில் லேசான மீசை அதன் கீழே தாடையில் மட்டும் குறுந்தாடி, கலரின்ங் செய்த சிகை அழகிய கூர்விழிகளை மறைக்கும் கருப்புக் கண்ணாடியில் இருந்ததும் அன்புதான். இப்போது தான் எதிரே முழுதாய் மாறி நிற்பதும் அன்புதான். 

அவன் தோற்றம் கண்டு பூரித்தவர், அவன் அருகே வந்து அவன் தலை தடவி நெற்றியில் முத்தமிட்டு, “உன்ன இப்படி பார்க்கணும்னுதான் என் மகன் ஆசைப் பட்டான். நீ இப்போ மாறி வந்து நிக்குறதைப் பார்க்கத்தான் அவன் இல்ல..” என்றவர் லேசாகக் கண் கலங்க,” ஆச்சி, இப்போ எதுக்கு அழறீங்க? அப்பா ஆசை, அவர் சொன்ன எல்லாத்தையும் நான் செய்யணும்னு நினைச்சேன். நீங்க இப்படி அழுதா நான் திரும்ப ஊருக்குப் போயிருவேன். எப்படி வசதி?” எனச் சிரித்துக் கொண்டே மிரட்டினான்.

அதில் லேசாகச் சிரித்தவர், கண்ணைத் துடைத்துக் கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு பூஜையறை சென்றார். கடவுளை வணங்கியவன் நெற்றியில் சிறிது விபூதி பூசிக் கொண்டு வெளியே வந்தான். சுந்தரமூர்த்தியையும் அழைத்து அமர்த்தியவன், தானும் அமர்ந்து உணவுண்ணத் தொடங்கினான். 

இருவரும் உண்டு முடித்த பின் கிளம்பினர். வெளியே வந்தவன், வாசலில் நின்ற கார் வேண்டாமெனத் தாண்டிச் சென்று, உள்ளே இருந்த அவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் கல்லூரி படிக்கும் போது சந்திரனுக்கு அவன் தந்தை வாங்கியதால் அன்புக்கும் அவன் தந்தை ஆசையுடன் வாங்கியது.

தந்தைக்கு விபத்து நடந்தபோது வண்டியோட்டிய டிரைவர் சரவணன், பலத்த காயங்களுடன் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருந்தார்.

அவரைச் சென்று பார்த்தவன், நலம் விசாரித்து விட்டுச் சிறிது தொகையும் குடும்பத்தினருக்குக் கொடுத்து விட்டுத் திரும்பினான்.

முதலில் ரைஸ் மில்லுக்குச் சென்றவன், அக்கவுண்ட்ஸ் சரி பார்த்து, தொழிலாளர்களுக்குச் சம்பளம் ஒதுக்கினான். மில் முழுவதும் சுற்றிப் பார்த்து, மாலை அனுப்ப வேண்டிய லோடைக் கண்காணித்து மீண்டும் தன் அறைக்கு வந்தான்.

செங்கல் சூளைக்குச் சென்றவன் நிர்வாகியிடம் பேசி, பின் மணல் சப்ளையரிடம் பேசி மணலுக்கு ஆர்டர் கொடுத்தான். கஸ்டமரிடம் பேசியவன், இரு நாள்களுக்குள் லோடு அனுப்புவதாகக் கூறினான். அக்கவுண்ட்ஸ் பைலை வாங்கிக் கொண்டு விரைவில் வேலையை முடிக்குமாறு கட்டளையிட்டுச் சென்றான்.

அதிலே மதிய வேளையைத் தாண்டிவிட, தென்னந்தோப்புக்குச் சென்றான். ஏற்கனவே ஆச்சி மதிய சாப்பாடு கொடுத்து விட்டிருக்க, அப்போது தான் பசி என்ற உணர்வை உணர்ந்தவன் அமைதியாக அமர்ந்து உண்டான்.  

தேங்காய் பறிக்கப்பட்டிருக்க, குவியல் குவியலாக இருந்த தேங்காய்கள் தரம் பிரிக்கப்பட்டு உரித்துக் கொண்டிருந்தனர். அதை மேற்பார்வை செய்தவன், வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு அன்றைய கூலியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

பள்ளி சென்றவன், தலைமை ஆசிரியரைச் சந்தித்துப் பேசிவிட்டு பின் வயலுக்குச் சென்றான். அறுவடை எல்லாம் ஏற்கனவே முடிந்து முதல் முறை உழுது, அடிஉரமிட்டிருந்தனர். இப்போது மறுமுறை உழுது கொண்டிருந்தனர்.  

அடுத்த நடவுக்கான ஏற்பாடுகள், சுத்தம் செய்யும் பணி நடைபெற, அதையும் பார்த்துவிட்டுத் தோப்பு வீடு நோக்கிச் சென்றான். மாலை வெயில் சற்று உஷ்ணக் காற்றாய் வீசிக் கொண்டிருந்து.

அவனது சிறு வயதில் வார இறுதி நாள்கள் அன்னை தந்தையோடு அங்குதான் இன்பமாய் கழியும். அன்னையின் ஆசைக்காகத் தந்தை கட்டிய காதல் நினைவகம் தான்.  நினைக்கும் போதே அவன் இதழில் மெல்லிய புன்னகை மின்னி மறைந்தது.

முன்புறம் பல வகையான பூச்செடிகளும், பூங்கொடிகளும் நடப்பட்டு இதுவரையிலும் நன்முறையில் தந்தையால் கவனிக்கப்பட்டு வந்தது.  

பசுமைக்கு நடுவில் அனைத்து வசதிகளும் நிறைந்த சிறு வீடு. வீட்டைச் சுற்றி உயரமான இரும்பாலான முள் வேலி இடப்பட்டிருந்து.

வீட்டின் பின்னே பத்து ஏக்கர் பரப்பிற்கும் மேல் வளமான மரங்கள் நிறைந்த மாந்தோப்பு. உயரம் குறைவான மரங்கள் நன்கு கிளை பரப்பி நெருங்கி அமைந்திருக்க, பகலிலும் சூரிய ஒளி புகவியலாத இருள் காடு.

வீட்டின் முன்புறம் அன்னைக்கும் தந்தைக்கும் நினைவிடம் இருக்க, இருவருக்குமாகச் சேர்த்து நினைவு மண்டபம் கட்டுவதற்கான கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்து.

மாலை வேலை முடிந்து அனைவரும் சென்றிருக்க, உள்ளே வந்தவன், அன்னையின் நினைவிடம் சென்று தரையில் அமர்ந்து மேடையின் மேல் தலை சாய்த்தான்.

அன்னை மடியில் தலை சாய்ந்த சுகத்தில் விழி மூடிக் கொண்டான்.

காலையிலிருந்து தன்னிடம் நலம் விசாரித்த வேலையாள்கள், ஊரார் என அனைவரிடமும் மனம் ஒட்டா, இதழ் ஒட்டிய போலி புன்னகை. பிரிய மறுத்த இதழ் தசைகளை, பிரித்தளித்த புன்னகை. நான் இன்னும் முழுமையாக வளரா பிள்ளை, பெரிய மனித அடையாளம் தனக்கு இட்டுக்கு கொண்ட வேஷம். தன் மேல் உள்ள பொறுப்புகள் அழுத்துவது போன்ற உணர்வு. 

எதிலும் ஈடுபட இயலாது வெறுமையில் தவிக்கும் மனதை ஒருமுகப்படுத்த இயலாத தவிப்பு. தன் முகத்துக்குப் பொருத்தமற்ற இறுகிய இரும்பு முகமூடியை அணிந்து கொண்டதை போன்ற பிரமை.  

அங்கிருந்த போதும் இதே தவிப்பு தான். ஆனால் யாருக்கும் பொய்யாகச் சிரிக்க வேண்டிய கட்டாயமில்லை. முதல் நாள் நடிப்பே கடினமெனத் தோன்ற, மூடிய விழியிலிருந்து துளி நீர் இமை தாண்டிச் சொட்டியது.

ஒருபுறம் கன்னம் சூடான சிமெண்ட் மேடையில் பதிந்திருக்க, மறுபுறக்  கன்னத்தில் சூடான வெயில் என முகம் முழுவதும் உஷ்ணம் அது வரை பரவியிருக்க, இப்போது ஒரு நிழல் அவன் மேல் விழுந்தது. ஆனால் அவன் உணரவில்லை.

மாமா…” என்றொரு மென் குரல் அழைக்க, முதலில் அவன் உணரவில்லை. மறுமுறை அழைப்பில் உணர்ந்தவன் எழுந்து நின்றான்.

அவன் கேட்க விரும்பிய வார்த்தை, கேட்க விரும்பாக் குரல் அவனை இறுகச் செய்தது. அவனுக்குப் பக்கவாட்டில் தொலைவில் ஒரு பெண் நிற்பது தெரிய, லேசாக விழி திரும்பிப் பார்த்தால் அவளைப் பார்க்கலாம். உஷ்ணத்தாலோ கோபத்தாலோ அவன் முகம் சிவக்க, வீடு நோக்கிச் சென்றான்.

கயலின் விழிகள் கலங்கியது. தொலைவில் அவனைப் பார்த்ததுமே அவன்தான் என உணர்ந்தவளுக்கு, அவன் சுடும் வெயிலில் அமர்ந்திருந்த தோற்றம் நெஞ்சைப் பிசைந்தது.

அவனை அள்ளித் தன் நெஞ்சுக்குள் அடைந்துக் கொள்ளும் வேகம், தன் அணைப்பு ஒன்றே அவனைப் பாதுகாக்கும், தன் அன்பு ஒன்றே அவனை நிம்மதியடையச் செய்யும் என உள் மனம் உந்த, “மாமா…” என அழைத்தாள்.

அவன் தன்னைப் பார்க்கவேயில்லை தன்னைத் தவிர்த்துச் செல்கிறான் என்ற உண்மை உணரவே சில நொடிகள் அவளுக்குத் தேவையாய் இருக்க, அவன் சென்றும் அவள் அப்படியே அங்கே நின்றாள்.

கயலு.. கயலு.. “என அழுத்தமும் அதிகாரமும் நிறைந்த கோபக் குரல் அவளைக் கலைக்க, பதறினாள்.

Advertisement