Advertisement

அத்தியாயம் 42

இராஜமணிக்கம் ஜாமினில் வெளியில் இருந்தார். வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஸ்வேதாவும் விடாது வழக்கை நடத்திக்கொண்டு இருந்தாள். 

அன்புவின் மேல் நடந்த கொலை முயற்சியை விட்டுவிடும் படி அன்பு கூறியதாலும், அன்பு புகார் கொடுக்காததாலும் ஸ்வேதா அதை விட்டு விட்டாள். இராஜமணிக்கமும் அவராகக் கூறி மாட்டுக்கொள்ள விரும்பவில்லை. அதில் செல்வான தன் மருமகன் மாட்டி விடக்கூடாது என்றெண்ணினார். 

ஆனால் மணல் கொள்ளைக்கான வழக்கு நடந்து கொண்டிருந்தது. அடுத்து தேர்தல் வரவிருக்கும் நேரம் என்பதால் கட்சியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த அரசியல்வாதிகளும் அவருக்கு உதவ முன் வரவில்லை. 

ஊர் நிர்வாகி பதவியும் இழந்து,கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அந்தஸ்து கூட தற்போது இல்லாது இருந்தார். 

அதை விட ஊருக்குள் ஒருவரும் அவரை மதிப்பார்கள் இல்லை. முன்பெல்லாம் மரியாதையாகப் பார்த்தவர்கள் இப்போது அலட்சியமாகவோ அல்லது பரிதாபமாகப் பார்த்து விலகினர். சிலரோ அவர் முதுகுக்குப் பின் பலித்தனர்.

அவை எல்லாவற்றையும் விட அவருக்குப் பெரிய வலியைத் தந்தது அன்பு மகளின் உதாசீனம் தான். நாளொன்றிற்கு ஒருமுறை ஏனும் பூங்கோதையின் வீட்டுப்பக்கம் சென்று வருவார். அவளோ முகம் கொடுத்துப் பேசவில்லை எனினும் முகம் திருப்பிக்கொண்டு சென்றுவிடுவாள்.

சில நேரங்களில் வீட்டின் வாசலில் கூட நின்றதுண்டு இருப்பினும் பூங்கோதையின் பிடிவாதம் குறையவேயில்லை. சில சமயங்களில் அவர் மேல் பரிதாபம் கொண்டு செல்வாவின் அன்னை லட்சுமியும் கூடச் சொல்லிப் பார்த்தார் ஆனால் அவள் பிடிவாதம் என்னவோ துளியும் குறையவில்லை.

அதுவும் செல்வா ஏதாவது இராஜமணிக்கத்திற்கு பரிவாகப் பேச வந்தால் பூங்கோதையிடம் இருந்து வரும் எதிர்வினைகளில் மறுவார்த்தை பேசவியலாது நிற்பான்.

முதல் நாள் இரவு அவளை நெருங்குகையில், வேறொருவனுக்கு என்னை விட்டுக்கொடுக்க நினைத்தவன் தானடா நீ என அவள் அதிரடி சரவெடியாய் வெளுத்து வாங்க, அன்று அவளிடம் சரணடைந்தவன் அதன் பின் அவள் பேச்சை மீறி நடந்ததில்லை. 

கயல் தங்கள் அறையில் ஜன்னலோரம் நின்றவாறு கையில் சிறு போட்டோ ஆல்பத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்த அன்பு அவளை பின்னிருந்து அணைத்தான். அவளை விலக விடாது தன் கைகளை இறுக்கிக் கோர்த்து அணைத்திருந்தவன் அவளிடையை அழுத்தவில்லை. 

அவன் பிள்ளைகளின் வளர்ச்சியை அவனுக்கு உணர்த்துவது போல் அவன் ஒரு கை அணைப்பிற்குள் அடங்குவதில்லை அவளிடை! 

அவள் தோளில் முகம் ஊன்றி, கன்னம் உரசியவாறு அவள் கையிலிருந்த ஆல்பத்தை எட்டிப் பார்த்தவன், “இன்னும் எத்தன தடவத் தான் இந்த ஆல்பத்தை பார்த்துகிட்டு இருப்ப?” என்றான். 

நல்லா இருக்குல்ல மாமா?” என்க, அவள் கன்னத்தில் இதழ் உரச, “ம்ம், அவ கேமராவும், கையுமாய் சுத்துனதுல நமக்கு கிடைச்ச கிப்ட்” என்றான்.

அதில் இருப்பது அனைத்தும் இவர்கள் இருவரின் புகைப்படம் தான். அன்று பள்ளியில் கட்டிடத் திறப்பு விழாவின் போதும், சில பொழுதுகளில் அவர்கள் அறியாது அவர்கள் காதலைப் பதிவு செய்திருந்தாள் ஸ்வேதா. அவள் பரிசளித்து விட்டுச் சென்றது தான் இந்த ஆல்பம்.

சரி டைம்மாச்சு, சாப்பிடவா” என்றழைக்க, “வேண்டாம் மாமா எனக்குப் பசியில்ல என்னவோ மாதிரி இருக்கு” என அவள் பேசி முடிக்கும் வரை கூட, பொறுமை இல்லாது கைகளில் தூக்கி இருந்தான் கயலை.

ஐயோ இறங்கி விடுங்க இல்ல ஆச்சிய கூப்பிடுவேன்” என்க, அவன் முறைப்பு அதிகமாகியது. “சரி நான் சாப்பிட வரேன்” என்றதும் அவள் முன் நெற்றியில் முட்டி மூக்கோடு மூக்குரசியவன் இறக்கிவிட்டு அழைத்துச் சென்றான். 

அவனுக்கு உடை எடுத்து வைப்பது, தலை துவட்டுவது, உணவு எடுத்து வைப்பது என அனைத்தையும் முன்பு கயல் தான் செய்தாள். ஆனால் அவள் கருவுற்ற நாளிலிருந்து சிறு வேலையும் அவளைச் செய்யவிட்டதில்லை. அதைவிட அவளுக்கே அவன் சேவகம் செய்தான்.

காலை உணவைப் பிடிவாதமுடன் உன்ன வைப்பவன், அவனே சென்று பள்ளியிலும் விட்டுவிட்டு தன் வேலைகளைப் பார்க்கச் செல்வான். மதியம் இருவருக்கும் உணவைப் பள்ளிக்கே சிவகாமி அனுப்பி வைத்துவிடுவார். ஐந்தாம் மாதத்திற்குப் பின் கயலைப் பள்ளிக்கும் அனுப்பாது அவனே அந்த வேலைகளையும் பார்த்துக் கொண்டான். 

இரவு உணவை அவன் கையாலே ஊட்டினால் தான் உண்டு இல்லையெனில் அவனுக்கு உணவே இறங்காது. அவன் சாப்பாட்டில் கை வைக்கும் நேரம் கூட மாமா என்றழைத்தாள் எழுந்து ஓடி வருவான்.

அதிலும் ஐந்தாம் மாதம் ஸ்கேனிங்ன் போது இரட்டை குழந்தைகள் என மருத்துவர் சொல்லிவிட அதன் பின் அன்புவின் கவனிப்புகள் அதிகமாகியது.

கயலும் விட்டாலில்லை, வாந்தியும் மயக்கமும் சற்று அதிகமாகவே இருக்க, அனைத்திற்கும் அன்புவை அழைத்தாள். உணவின் ருசியே தெரியவில்லை என உணவை மறுப்பவளை உணவருந்த வைப்பது அன்புவிற்கும், சிவகாமிக்கும் பெரும் சிரமம் தான். கற்பகம் கயலுக்குப் பிடித்த பதார்த்தங்களை செய்து பிடிவாதமுடன் ஊட்டிவிடுவார். 

சில சமயங்களில் நடு இரவில் எழுந்து மாங்காய் வேண்டும் என்பாள், அவன் எடுத்து வரச் சென்றால் நம் தோப்பில் உள்ள மாங்காய் தான் வேண்டும் என்பாள், அவன் பாடினால் தான் தூங்குவேன் என்பாள்.

ஐந்தாம் மாதத்திலே உடல் எடை அதிகரித்து இருக்க, நடப்பதற்கே சற்று சிரமுடன் மூச்சு வாங்கும் அதிலும் இரவு உணவு நிலாச்சோறு தான் உண்பேன் மொட்டை மாடிக்குச் செல்ல வேண்டும் என்பாள்.

அவளுக்குச் சிரமம் வேண்டாமென கைகளில் தூக்கினாள் ஆச்சியிடம் கூறிவிடுவேன் என மிரட்டுவாள். ஆரம்ப நாட்களில் ஒரு முறை கயலை தூக்குவதைப் பார்த்துவிட்டு சிவகாமி, “இனிமே சும்மா சும்மா அவள தூக்கிட்டு இருக்காதா, நீ கொஞ்சம் தள்ளியே இரு அவளே நடக்கட்டும்” என அதட்டி இருந்தார்.

சிவகாமி சமைத்து தருபவைகளை ருசியில்லை என அவள் மறுக்க, கயல் கேட்பதை ஆரோக்கியமில்லை என அவர் மறுப்பார். இருவருக்கும் இடையில் அன்பு தான் மாட்டிக் கொண்டு விழிப்பான்.

சில சமயங்களில் நெய் முறுக்கும், நெல்லிக்காய் ஊறுகாயும் வேண்டும் என்பாள், வாங்கி வருகிறேன் என அவன் சென்றால் வசந்தா அத்தை, ருக்மணி பாட்டி கைகளால் செய்தது தான் வேண்டும் என்பாள். 

சில சமயங்களில் கால்கள் வீங்கி வலிக்க, வலிக்கிறது என அவள் சொல்லும் முன்னே அவள் கால்களை தேய்துவிடுவான். கயல் மறுத்தாலும் கேட்க மாட்டான். “தலை முதல் பாதம் வரை நீ எனக்கு உரிமையானவள் என் சொந்தம், கட்டிப்பிடிக்க உரிமையிருக்குன்னா கால் பிடிக்கவும் உரிமையிருக்கும்” என்பான். 

தன் தந்தை அன்னையைச் சிறிதும் மதியாது நடத்தும் விதத்திற்கும், அன்பு தன்னை நடத்தும் விதத்திற்கும் வித்தியாசம் கண்டு வியந்தாள்.

ஆறடியும் சுருக்கி, இரடியாக்கி காலடியில் அமர்ந்து கால் பிடித்து விடுபவனைப் பார்க்கையில் கயலுக்கு அவன் மேல் கொண்ட காதல் மேலும் மேலும் பொங்கும். வாய் வார்த்தையாய் கூறியதை வாக்காக்கி கண்ணுக்குள் வைத்துக் கவனித்தான்.

அவ்வப்போது உள்ளங்கையை அவள் வயிற்றில் வைத்துப் பார்க்க, மென்னலுத்தமுடன் பதிந்து மீளும் அசைவுகள் விரும்பி வந்து அவனைத் தொட்டுச் செல்வது போலிருக்கும். அந்த ஸ்பரிசத்தை உணரும் போதெல்லாம் அவன் உடலெல்லாம் மென் பரவசத்தில் சிலிர்க்கும். 

இந்த இன்பத்தைப் பெறுவதற்கு தான் இத்தனை வலிகளைத் தாண்டியும் வந்தேனோ என்றெண்ணினான்.

விஜயராகவன் சில தொழில்களை செல்வாவிடம் தர, அதை எல்லாம் மறுத்தவன் அவர் உதவியோடு பண்ணை தொழில்களைத் தொடங்கி இருந்தான், ஆகையால் எப்போதேனும் வரம் ஒருமுறை தான் சந்திரன் வீட்டுப் பக்கமே வருவான். அவன் தொழிலையும் காதல் மனைவியையும் கவனிப்பதிலே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. 

சந்திரனுக்குத் திருமணம் நின்றதில் வருத்தமில்லை எனினும் ஒருவித தனிமை உணர்வு நெஞ்சை அழுத்தியது. அதிலும் செல்வா உடன் இல்லாது மேலும் தனிமையை உணர்ந்தான். 

ஏனோ மனம் முழுவதும் ஸ்வேதாவின் நினைவுகள் நிறைந்து அவனை இம்சித்தது. விழி மூடினால் விழிநீர் நிறைந்த ஸ்வேதாவின் விழிகள் வந்து என்னை ஏமாற்றிவிட்டாயே என ஏக்கமுடன் கேட்க, தூக்கம் என்பதையே தொலைத்தான்.

ருக்மணி மீண்டும் பெண் பார்க்கத் தொடக்கி இருந்தார் ஆனால் தந்தையான விஜயராகவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. பூங்கோதையை மறுத்ததில் அவருக்கு இன்னும் சந்திரனின் மேல் வருத்தமிருக்க, சந்திரனிடம் பேசுவதில்லை.

சற்று நெருங்கிக் கவனித்தால் தான் அவர் விலகல் தெரியும், மற்ற படி யாருக்கும் தெரியாதது போலே நடந்து கொண்டனர். தந்தையின் விலகல் சந்திரனுக்கு இருக்கும் வலியை மேலும் கூட்டியது. 

சில மாதங்களுக்கு பிறகே இருவருக்கும் இடையில் இருக்கும் விரிசலை உணர்ந்த செல்வா, அவனே சென்று அனைத்து உண்மைகளையும் விஜயரகனிடம் கூறினான்.

ஜெயசந்திரன் தன் மகன் தான், தன்னிடமிருக்கும் நற்பண்புகள் அவனிடமும் இருக்கிறது, தன்னை விட மேலானவன் என்பதை அவனின் அமைதியான செயல்கள் நிறுபவித்து இருக்க, மனம் நெகிழ்ந்தார். பெருமை போங்க அவனைத் தழுவிக் கொண்டார். 

தற்போது அன்னையோடு சேர்ந்து அவரும் பெண் தேட ஆரம்பித்திருந்தார். வீட்டில் வரிசையாகக் காட்டும் அனைத்து புகைப்படங்களும் பார்க்காமலே வேண்டாமென்று மறுத்தான்.

கயலோடும் பூங்கோதையோடும் திருமணம் ஏற்பாடாகையில், எந்த பெண்ணையாவது மணப்பது தானே அது இவளாக இருந்தால் என்ன? எவளாக இருந்தால் என்ன? என்ற எண்ணத்திலிருந்தவன் இப்போது ஸ்வேதா தான் வேண்டும் என்ற உறுதியில் இருந்தான். 

சில சமயங்களில் இரவில், உடைந்த இருவரின் இதயத்தைப் போன்று உடைந்திருந்த இரு அலைபேசியையும் அருகே வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பான். வீட்டிற்கு வருவதையே அதிகம் தவிர்த்தான்.

தோப்பு வீட்டிலும், தென்னக் குடிலிலும், ரைஸ் மில்லிலும் என ஸ்வேதாவின் நினைவுகள் நிறைந்த இடத்தை தேடிச் சென்று படுத்துக் கொள்வான். அவள் இருக்கும் வரை அருமை உணராதவன் இன்று தனிமையை உணர்ந்து அவள் அருகாமை வேண்டினான். 

உண்ணும் உணவு கூட தொண்டையை விட்டு இறங்க மறுத்தது, அவளோடு சண்டையிட்ட பொழுதுகள் இன்று இனிய நினைவுகளாக மாறி இருக்க நினைத்து நினைத்துப் பார்த்துக் கொண்டான்.

நெஞ்சை அழுத்தும் நினைவுகளால் மூச்சு விடக் கூட சிரமாக உணர்ந்தான். காலங்கள் நகராதது போன்று தோன்றியது, புவின் சூழல் வேகம் தான் குறைந்ததோ? என்றெண்ணுவான். வீசும் குளிர் காற்று கூட அனல் கதிர் வீச்சாய் சுடுவது போன்று எண்ணுவான். 

நிலவைப் பார்க்கையில் கூட இந்த நிலவு என்று முழு நிலவாகக் காட்சியளிக்கும் எனக் காரணமின்றி ஏங்குவான். இயற்கை கூட அழகிழந்து வித்தியாசப்பட்டது அவன் பார்வையில்.

பார்ப்பவர்கள் வித்தியாசம் உணரும் படி அவன் இரும்பு தேகம் கூட இழைத்திருந்தது. ஸ்வேதா ஸ்வேதா என ஓயாது அவள் பெயர் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஸ்வேதா என்ற சொல் தான் அவனை இயக்கிக் கொண்டிருந்தது.

ஏழுவருடமாக இதே வலியை ஏந்தி நின்ற, அன்புவிற்கு வாழ்நாள் முழுவதும் இந்த வலியைக் கொடுக்க முயன்ற பாவத்திற்குத் தான் இன்று நானும் இந்த வலியை உணர்கிறேனோ என்றெண்ணினான்.

குளித்து உடை மாற்றி வந்திருந்த அன்பு தலை வாரியவாறு கண்ணாடியின் வழியாகக் கட்டிலில் அமர்ந்திருந்த கயலைப் பார்த்தான்.

சற்றே குறும்புடன், “செல்லம்மா, உன் சந்திரமாமா என்னவோ மாதிரி இருக்காரே?” என்றான். முன்பெல்லாம் சந்திரனைப் பற்றி பேசும் போதே கோபம் கொள்பவன் இப்போது அவனாகவே வம்பு பேசினான். 

அவன் குறும்பு புரியாமல், “என்னவோ மாதிரினா என்ன மாதிரி மாமா?” என்றாள்.

ம்ம், பைத்தியம் மாதிரி!” என்று அவன் முடிப்பதற்குள் தலையணையைத் தூக்கி எறிந்தாள் கயல். அவன் மேல் பட்டு கீழே விழுந்த தலையணையை எடுத்துக் கொண்டு அவளருகே சென்று அமர்ந்தான்.

கயல் முறைக்க சிரித்தவாறு அவளை அணைத்தவன், “இல்ல செல்லம்மா அவன் கொஞ்சம் சரியில்ல, என்னவோ பசலை நோய்ல விழுந்த சங்கத்தலைவி மாதிரி ரொம்ப மெலிஞ்சிட்டான்டி” என்றான்.

அவன் கன்னத்தில் கிள்ளியவள்,”ஏன் நீங்க மட்டும் பெங்களூர்ல இருந்தப்போ எப்படி இருந்தீங்களாம்?” என்க,”நான் என் பொண்டாட்டியை பிரிச்சி இருந்த கவலைல இருந்தேன் இவனுக்கு இப்போ என்னவாம்?” என்றான்.

அவன் கேள்விக்குப் பதிலில்லை தான் ஆனால் பதில் அறிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணினாள்.

Advertisement