Advertisement

அத்தியாயம் 40

ரேஷன் கொள்ளையில் சந்திரனின் பெயர் லோக்கல் மீடியாக்களில் வெளிப்பட்டதில் உறவுகளின் முன்பு பெரிதும் அவமானமாக இருந்தது.

ரைஸ்மில்லில் சந்திரனின் புலம்பலும் வேதனையும் பார்த்த செல்வாவிற்கு அன்புவின் மேல் கோபம் வந்தது. அதிலும் அன்பு கயலை விரும்புவதாகவும், தன் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பான் என்றும் சந்திரன் பெரிதும் பயந்தான்.

சந்திரனுக்குக் கயலை திருமணம் செய்தாக வேண்டும் என்று எண்ணிய செல்வாவிற்கு வேறு வழி தெரியவில்லை. அன்புவை கொல்வதற்கு உதவுவது என்றெண்ணிக் கொண்டான். அவன் கண்முன் தெரிந்தது எல்லாம் சந்திரன் மட்டுமே, அவனுக்காக மட்டுமே அந்த முடிவை எடுத்தான். அவன் காதலோ பூங்கோதையோ கூட அவன் நினைவில்லை. 

அவன் எதிர்பார்த்தது போல் அன்பு தோப்பு வீட்டில் தனியா இருக்கும் செய்தி கிடைக்க, அவன் மாந்தோப்பிற்குள் அருவாளை ஒளித்து வைத்தான். பின் இராஜமணிகத்தின் ஆட்களுக்குத் தகவல் கூறினான் ஆனால் அதை கயல் கேட்டுக் கொண்டிருப்பதை அவன் கவனிக்கவில்லை. 

தகவல் சொல்லியதிலிருந்தே செல்வாவின் மனம் பதைப்பதைப்போடு தான் இருந்தது. தான் செய்தது தவறு என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

அவன் உறுத்தல் விலக அன்பு உயிரோடு வந்து பஞ்சாயத்தில் நின்றான். அது மட்டுமின்றி கயலும், அன்புவும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்று சொல்லிவிட, சந்திரனின் திருமணம் நின்ற கவலையில் கயலை தவறாகப் பேச முயற்சித்து அன்புவிடம் அறைவாங்கிக் கொண்டான். 

சந்திரன் திருமணம் நின்றதில் கவலையோடு தென்பட்டான். ஜெயந்தி திருமணம் முடித்து சென்று விட, அன்பும் கயலும் இனிய வாழ்வு வாழ்ந்தனர். இராஜமணிக்கத்திற்கு தன் மகள் பூங்கோதை மணக்கோலத்தில் பார்க்கும் ஆசை மேலும் எழுந்தது.

அதற்காக வாக்களித்தது போல் செல்வாவிற்கு மகளை மணமுடிக்கவும் மனமில்லை. சந்திரனின் திருமணம் நின்றது ஒருவகையில் அவருக்கு சாதகமாக அமைத்தது. சந்திரனை தன் மருமகனாக்கிக் கொள்ளும் யோசனை வந்தது.

விஜயராகவனின் இரக்கக் குணம் நன்கறிந்தவர் ஆகையால் விஜயராகவனிடம் சென்று தன் மகள் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டேன் என்கிறாள் என்றும் உள்ளூரிலே மாப்பிள்ளை வேண்டும் என்கிறாள் என்றும் வேதனையோடு கூறிக் கொண்டிருந்தார். 

பூங்கோதைக்கு சந்திரனை மணமுடிக்கக் கேட்க வேண்டுமென்று அவர் எண்ணி வர, எதிர்பாராத விதமாக ருக்மணியே பூங்கோதையைக் கேட்டார்.

வீட்டில் நாளை பூங்கோதையை பெண் பார்க்க வருவதாகக் கூறினார். தங்கள் காதலுக்குத் தந்தை சம்மதம் வழங்கிவிட்டார் நாளை செல்வா தான் தன்னை பெண் பார்க்க வருவதாக எண்ணி சந்தோஷத்திலிருந்தாள் பூங்கோதை.

ஆசை ஆசையாய் அலங்கரித்துக் கொண்டு வர, ஹாலில் சந்திரனனும் அவன் மொத்த குடும்பமும் அமர்ந்திருப்பதைப் பார்த்த பூங்கோதை அதிர்ந்தாள். இதயத்தின் துடிப்பே நின்றது போன்றிருந்தது, தன்னவன் இருக்க வேண்டிய இடத்தில் வேறொருவனை வைத்துப் பார்க்க மனம் அருவருத்தது. 

மனம் முழுவதும் ஒரு வித வலி நொடியில் பரவ, வேதனையோடு தலை குனிந்து கொண்டாள். அதன் பின் தலை நிமிர்ந்தும் பார்க்காது உள்ளே சென்று விட்டாள். தந்தை ஏமாற்றியதாக எண்ணினாள். 

அன்று மாலை செல்வாவை தனியாக அழைத்திருந்தார் இராஜமணிக்கம். அன்று காலையில் பெண் பார்க்கச் செல்வதாகச் சொல்லிய சந்திரன் பூங்கோதையை தான் பார்க்கச் செல்வதைச் சொல்லத் தவறி இருந்தான். ஆகையால் அன்றைய அவன் வேலையும் சேர்த்து முடித்துக் கொண்டு செல்வா இராஜமணிக்கத்தை பார்க்க சென்றான். அதுவரையும் அவர்களுக்கு நிச்சியமானதை அவன் அறியவில்லை. 

செல்வாவிடம் சந்திரனின் வீட்டிலிருந்து அவர்களாகத் தான் பெண் கேட்டு வந்தார்கள் எனவும் தங்களால் தவிர்க்க இயலவில்லை என்றும் கூறினார்.  

உன் நட்பு உண்மையெனில் உன் நண்பனுக்காக நீ பூங்கோதையை விட்டுக்கொடுத்து விடு. என் மகளை உன்னை விடச் சந்திரன் நன்றாகப் பார்த்துக் கொள்ளவான்,மீ ண்டும் சந்திரனின் திருமணம் நிற்க நேர்ந்தால் அவன் நிலைமை? நீயே யோசித்துக் கொள்” என்றார். 

செல்வாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூர் முனை கத்திக் கொண்டு இதயத்தின் இருபுறமும் கீறுவது போன்றிருந்தது. வாழ்வளித்த நட்பா? உயிர் மூச்சான காதலா? எதை காக்க எதை விடுவது? 

இருபத்தி ஐந்து வருடத்திற்கும் மேலான நட்பு, சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தைக் கொடுத்தவன், இன்று அன்னையும் அவனும் உண்ணும் உணவு கூட சந்திரனின் வழி வந்தது தான்.

சந்தரனின் வீட்டிலும் அனைவரும் தன்னை அவர்கள் வீட்டுப் பிள்ளை போல் நடந்துகின்றனர். இது கொண்ட நட்பின் நன்றியைக் காட்டும் நேரமிது என்றெண்ணினான். அதுவும் நிச்சியமே முடித்த விட்ட பின் தான் என்ன செய்வது. சந்திரனின் திருமணத்தை மீண்டும் நிற்க விடக்கூடாது என்ற முடிவிலிருந்தான்.

ஆனால் பூங்கோதை அவள் இருக்கும் உயரத்தில் இருந்து தன்னையும் மதித்து தன்னை விரும்பினாளே! எந்த வித எதிர்பார்ப்புமின்றி தன்னிடம் நேசம் காட்டினாளே! ஐந்து வருடம் உயிருக்குள் உயிராய் வளர்ந்த நேசம். அவளோடு இன்பமாய் இருந்த பொழுதுகள் எத்தனை எத்தனை! 

கர்ணன் கூட உடன்பிறப்பா? உயிர் நட்பா? என்ற நிலையில் தான் நின்றான். ஆனால் செல்வா காதலா? நட்பா? என்ற நிலையில் நின்றான்.

இரண்டுமே அவனுக்கு உயிரை விடப் பெரிது தான். ஆனால் அதில் ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னால்?அவன் மனமென்னும் துலாபாரத்தில் ஆயிரம் காதலை ஒருபுறம் அடுக்கினாலும் மறுபுறம் சந்திரன் மேல் கொண்ட ஒற்றை நட்பு தான் என்றென்றும் உயர்ந்து நிற்கும்!

அதன் பின் பூங்கோதையை பார்ப்பது பேசுவதை முற்றிலும் தவிர்த்தான். அவளோ காரணம் புரியாமல் செல்வாவை தொடர்பு கொள்ளவும் முடியாமல் துடிதுடித்தாள்.

இறுதியாகச் சந்திரனுக்கே அழைத்தாள், ஆனால் அவன் மொபைல் ஸ்வேதாவிடம் மாட்டிக் கொண்டு மேலும் அவளைத் தவிக்க வைத்தது.

இந்தமுறை கண்மாய் தூர்வாரும் ஏலமும் அன்புவிற்காக ஸ்வேதா எடுக்க, சந்திரன் மீண்டும் கோபத்தில் கத்தி, வேதனையில் புலம்பினான். செல்வா எதுவும் செய்ய இயலாது நிற்க மீண்டும் இராஜமாணிக்கம் அன்புவை கொல்வதற்குச் சாதகமான சூழ்நிலையை அவனிடமே கேட்டார்.

உன் நண்பனின் இத்தனை அவமாவனத்திற்கும் கரணம் அன்பு தான் அவன் இருந்தாலும் சந்திரனுக்கு மேலும் பிரச்சனைகள் வரும், அது மட்டுமின்றி ஊருக்குள் அவன் இருக்கும் வரை முதல் மரியாதை என்பது அவனுக்கு தான் என்றெல்லாம் கூறி அவன் மனதை மற்ற முயன்றார்.

அன்பு இருக்கும் வரை சந்திரனுக்கு பிரச்சனை தான் என்ற தவறான  புரிதல் கொண்டான் செல்வா. சொல்வதைச் செய்தே பழக்கப்பட்டவன் ஆகையால் அதில் அவருக்கு என்ன லாபம் என்று யோசிக்கத் தவறினான்.

ஒரு நாள் இரவு டவுனிலிருந்து அவர்கள் ஊர் நோக்கி அன்பு செல்வதைப் பார்த்தவன் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்றான். பின் இராஜமாணிக்கத்தை அழைத்து செய்தியைச் சொல்லிவிட்டு வேறு பாதை வழியே சென்றுவிட்டான்.

மணல் கொள்ளைக்குப் பயன்படுத்தும் லாரி டிரைவரை அழைத்து அன்புவை லாரியால் மோதச் சொன்னார் இராஜமாணிக்கம். அவனும் அடித்து விட, சரவணன் சரியான நேரம் வந்து காப்பாற்றினான்.  

நிச்சியத்திற்கு பின் பூங்கோதைக்கு தனிமை என்பதே இல்லை. எப்போதும் உறவுகள் சூழ வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது போன்றிருந்தாள். அனைவரின் பார்வையிலும் அவளே இருந்தாள்.

சந்திரனோடு கோவிலிருந்து வீட்டிற்கு வந்த அன்று இந்த திருமணத்தில் தனது விருப்பமின்மையை கூற எண்ணி அவனை வீட்டிற்குள் அழைத்தால், அவனோ அவள் தனியாக இருக்கையில் செல்வது நல்லதல்ல என்றெண்ணி மறுத்து சென்றுவிட்டான். 

அதன் பின் ஒரு நாள் மாலை யாருக்கும் தெரியாமல் செல்வாவை பார்த்தே ஆக வேண்டுமென பெரும் முயற்சியோடு வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.  

எதிரே வந்த பூங்கோதையை பார்த்த செல்வா விலகிச் செல்ல அவன் பின்னே வேகமுடன் சென்று அவனை மறித்து நின்றாள்.

கணேஷ், நான் வீட்டை விட்டு வந்துட்டேன் திரும்பிப் போக மாட்டேன், நீங்களும் வாங்க நாம ஊரு விட்டே போயிடலாம்!” சுற்றிலும் பார்த்தவாறு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவசரப் படுத்தினாள். 

லூசா நீ? கைய விடு யாரவது பார்க்க போறாங்க, கல்யாண பொண்ணு நீ முதல்ல வீட்டுக்கு போ!” என்க, அதிர்வோடு அவன் கையை விட்டவள் விழி விரிய ஆச்சரியமுடன் பார்த்தாள். கல்யாண பொண்ணா அப்போ எனக்கு வேறொருவனோடு கல்யாணம் என்பதில் இவனுக்குச் சம்மதமா உள்ளுக்குள் கோபம் பொங்கியது.

இந்த கல்யாணம் நடக்காது!” என அவள் ஒன்றை வார்த்தையில் பதிலளிக்க,”இல்ல, இந்த கல்யாணம் நடக்கணும், நடந்தே ஆகணும் திரும்பவும் சந்திரன் கல்யாணம் நின்னா அவன் தங்க மாட்டான்!” என்றான். 

தன் உணர்வுகளுக்கு அவனிடம் மதிப்பில்லை என்பது மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.”அப்போ நம்ம காதல்? சொல்லுடா நீயும் என்ன காதலிச்ச தானே?” என ஆத்திரம் மிகக் கேட்டாள். 

அதை மறந்துடு! சந்திரனைக் கல்யாணம் பண்ணிக்கோ, அவன் உன்ன நல்லா பார்த்துப்பான் உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்” என்றான். 

அவன் அணைப்பும், முத்தமும் ஐந்து வருடக் காதலும் மறந்து விடுமா? மேலும் அவள் கோபத்தைத் தான் அதிகப் படுத்தினான். 

மறக்கவா? மறந்திட முடியுமா? ஒருவேளை நான் சந்திரனுக்கே மனைவியானாலும் உன்னால என்ன நினைக்காம இருக்க முடியுமா? சொல்லுடா, சொல்லு!” எனக் கத்தினாள்.  

எல்லாம் திட்டம் போட்டு உங்க அப்பன் பண்ண சதி தான” என அவனும் கோபமுடன் கூற, “அதுக்கு தான் நான் அப்பா,அம்மா சொந்தம் எல்லாத்தையும் விட்டு வரேன்னு சொல்லுறேன்ல, என்ன கூட்டிட்டு போ கணேஷ். நமக்கு இந்த ஊரு வேண்டாம், யாரும் வேண்டாம்!” மீண்டும் பிடிவாதமுடன் அதையே கூறினாள். 

உள்ளுக்குள் அவள் காதல் கண்டு உருகினாலும் வெளியில் கோபம் கொண்டு, “சும்மா ஊர விட்டு போயிடலாம்னு சொல்லாத, பிறந்து வளந்த ஊர விட்டு எங்க போக சொல்லு? என்னையே நம்பி என்ன பெத்த ஒத்த உசுரு கிடக்குது, சின்ன புள்ள மாதிரி அடம்பிடிக்காத கோதை, சொல்லுறத புரிஞ்சிக்கோ! 

நீ சந்திரனுக்கு நிச்சியம் பண்ண பொண்ணு. உன் தகுதிக்குச் சந்திரன் தான் சரியான மாப்பிள்ளை” எனத் தன்மையாக முடித்தான். 

நீ என் காதலியல்ல என அவன் மறைமுகமாகச் சொல்வதாக எண்ணியவளின் கோபம் எல்லைகளைக் கடந்திருந்தது. “இங்க பாரு, என் காதலை நிராகரிக்கிற உரிமை வேணா உனக்கு இருக்கலாம் ஆனா நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லுற உரிமை உனக்கு இல்ல” எனக் கத்தினாள். 

அவனோ கோபங்களைக் குறைத்து மிகவும் தன்மையுடன், “சந்திரன் ரொம்ப நல்லவன், என்ன விட வசதியானவன் ஏற்கனவே முதல் தடவ அவன் கல்யாணம் நின்னுபோச்சு, மறுபடியும் நின்னா அவன் தாங்க மாட்டான் அவன் பாவம்!” என்றான். 

என்ன வார்த்தை பேசுகிறான் வசதியா வசதியை பார்த்தால் உன்னை விரும்பி இருப்பேனா? இவ்வாறு கெஞ்சிக் கொண்டிருப்பேனா? உன் நண்பனெனில் நீ பாசம் காட்டு, பரிதாபம் காட்டு. நான் ஏன்னடா பரிதாபம் கொள்ள வேண்டும் என் காதலே இங்கு அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவள் எண்ணம் இவ்வாறாக இருக்க, மீண்டும் மீண்டும் அதையே வேண்டுகிறானே எனத் தன்னிலை மறக்கும் அளவிற்குக் கோபம் கொண்டாள்.

நெருங்கி அவன் சட்டையைப் பிடித்தவள் ஆவேசமுடன், “நான் உன் காதலியா இருக்கறதால தானே அவன கல்யாணம் பண்ணிக்க சொல்லுற, இதுவே நான் உன் பொண்டாட்டியா இருந்தா அவனுக்கு என்ன…” வார்த்தையை முடிக்க விடவில்லை, செல்வாவின் அறையில் அதிர்ந்தாள். 

உதட்டோரம் இரத்தம் வலிய, விழிகளில் நீரோடு அவனை நிமிர்ந்து நம்பயியலாது பார்த்தாள். எத்தனையோ முறை அவன் இதழ் தடம் பதிந்த கன்னத்தில் இன்று அவன் கைதடம், அவளால் நம்பவே முடியவில்லை. 

இந்த கல்யாணம் நின்னா, என் மூச்சு நினைத்துக்கு சமம்!” என்றவன் நிற்காது சென்று விட்டான்.

தன் மீது அவள் கொண்ட அளவிட முடியாத அன்பு தான் அவள் பலகீனம் என்பதை அறிந்திருந்தான். எங்கு அடித்தல் வலிக்கும் என்றறிந்தும் வலிக்க வலிக்க அடித்து விட்டுச் சென்று விட்டான். அடித்தவனுக்கும் அதே வலி தானே! 

மனம் நிறைய வலியோடும், கண் நிறைய கண்ணீரோடும் அவன் செல்வதையே பார்த்து நின்றாள்.

நெஞ்சத்தில் ஒருவனும் மஞ்சத்தில் ஒருவனுமா? ச்சே, நினைக்கவே உடல் கூசியது. என் உயிர் உடல் தங்கினால் தானே திருமணம் நடக்க, என்றெண்ணியவள் கண்களைத் துடைத்துக் கொண்டு தாவணியை இழுத்துச் சொருகினாள்.

அருகே இருந்த கிணற்றின் மேட்டில் ஏறியவள் கண்களை இறுக மூடிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்தாள்.

மோட்டார் பழுதாகி இருக்க, மெக்கானிக் வந்து சரி செய்து விட்டுச் சென்றிருந்தான். சரியாக உள்ளதா என மோட்டர் அறைக்குச் சரி பார்க்க வந்து கொண்டிருந்த, அன்பு தொலைவில் நின்று ஒரு பெண் கிணற்றில் குதிப்பதை பார்த்ததும் யார் என்று தெரியாது விரைந்தோடு வந்தான். 

அருகே தங்கள் வயலில் இருக்கும் சரவணனை உதவிக்கு வருமாறு அழைத்து விட்டு கிணற்றில் குதித்தான். சரவணனின் உதவியோடு அப்பெண்ணைக் காப்பாற்றிய பின் தான் அது பூங்கோதை என்பதை அறிந்தான்.  

இன்னும் சில நாட்களில் திருமணம் இருக்கும் நிலையில் அவள் தற்கொலைக்கு முயல்வது ஏதோ சந்தேகத்தைத் தர, என்னவென்று விசாரித்தான். 

மனதை அழுத்திய பாரமெல்லாம் துள்ளி வெளி வர நம்பிக்கை கொண்டு அன்புவிடம் தன் காதல் கதையைக் கூறினாள். ஆனால் செல்வா அன்புவை கொல்ல முயன்றது அவளுக்குத் தெரியாது. 

உன் கல்யாணத்தை நிறுத்த முடியுமான்னு என்னால உறுதியா சொல்ல முடியாது ஆனா நிறுத்த முயற்சி பண்ணுறேன், இனி இந்த மாதிரி பண்ணாத தைரியமா இரு. யாரும் பார்க்குறதுக்குள்ள வீட்டுக்கு போயிடு!” என்றுரைத்து பூங்கோதையை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

அன்பு செல்வாவின் கொலை முயற்சியைக் கண்டு பிடித்திருக்க, பூங்கோதையின் காதல் கதையைக் கேட்டிருக்க இரண்டிற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் தோன்றியது. ஆனால் அந்த தொடர்பு இராஜமணிக்கம் தான் என்பதை ஸ்வேதா அன்றிரவு மணல் கொள்ளை பற்றித் தான் அறிந்ததைக் கூறியதில் உணர்ந்து கொண்டான்.  

இராஜமணிக்கம் அடுத்த முயற்சியாக செல்வாவிடம் ஒரு பார்சலை கொடுத்து அன்புவின் டிரைவர் மணியிடம் கொடுக்க வைத்தார்.

கொடுத்த பின்பு தான் செல்வாவிற்கு தெரிந்து அது பாம் என்று, அடுத்த அதிர்ச்சியாக அன்புவோடு கயலும் சென்றிறுக்கும் தகவலும் தெரிந்தது. இராஜமணிக்கத்தின் மீது கோபம் வந்தது.

அந்த நேரம் சந்திரன் வந்து விசாரிக்க, கோபத்துடன் பாம் கொடுத்து அனுப்பியதைச் சொல்லி விட்டான். சந்திரனாவது அவர்களை காக்க வேண்டும் என வேண்டி நின்றான்.

அனைத்தையும் தன்னை காண வந்த சந்திரனிடம் கூறிக்கொண்டிருந்தான் அன்புச்செழியன்.

அன்பு கூறிய அனைத்தையும் கேட்ட சந்திரன் பேரதிர்ச்சியில் நின்றான். செல்வாவின் நட்பே தன் பெரிய பலமாக எண்ணினான். 

அன்பு இருவரின் நட்பு கண்டு பிரமித்தான். சந்திரனுக்காக செல்வாவின் செயலும், தியாகமும் அவர்கள் நட்பின் பிணைப்பைக் காட்டியது. அன்பு என்ற பெயருக்கே கோபம் கொள்ளும் சந்திரன் இன்று நண்பனுக்காக அன்புவின் முன் வந்து நின்று தன் நட்பும் குறைந்தல்ல எனக் காட்டினான். தனக்கு இப்படியொரு நட்பில்லையே என்ற சிறு ஏக்கம் கூட அன்புவின் மனதில் பரவியது.

அன்புவின் மிரட்டலில் கோபம் கொண்டிருந்தாலும், பிரச்சனைகளைச் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும் செல்வாவிற்காக ஒருமுறை அன்புவிடம் பேசிப்பார்க்கலாம் என நினைத்து அன்புவின் தோப்பு வீட்டில் அவனைக் காண தனியாக அன்றிரவே வந்திருந்தான் ஜெயசந்திரன். 

என்னதான் செல்வா தவறு செய்திருந்தாலும் அவனைத் தவறு செய்யவைத்தது இராஜமாணிக்கம் தானே! செல்வா நல்லவனா, கெட்டவனா எனத் தெரியாது ஆனால் நட்பிற்கு விஷ்வாசமானவன் என உண்மையாக உணர்ந்திருந்தான் அன்பு. 

உன் மேல பழி சொன்னா அத தாங்க முடியாம இராஜமணிக்கம் மாமா தான் எல்லாமே பண்ணாருன்னு செல்வா உண்மைய சொல்லுவான்னு நினைச்சேன். என்னத் தேடி செல்வா வருவான்னு நினைச்சேன் ஆனா அவனுக்காக நீ வருவேன்னு எதிர்பார்க்கல!” என அன்பு கூறினான்.

லேசாகச் சிரித்துக் கொண்ட சந்திரன், “நீ இன்னும் எங்க நட்பு பத்தி புரிஞ்சிக்கல” என்றான்.

அன்பு புரியாமல் பார்க்க, “செல்வா சொல்லா மாட்டான், அதான் செல்வா. அவனுக்கு இப்போ என் கல்யாணம் நடக்கணும் அதான் முக்கியம்” எனச் சந்திரன் விளக்கினான். 

பட் எனக்கு இந்த கல்யாணம் நிக்கணும், என்னால நிருத்த முடியாது ஆனா நிறுத்துறதுக்கா ஒரு வாய்ப்பை உருவாக்க முடியும்” என்றான். 

அர்த்தம் புரிந்து கொண்ட சந்திரன் சரி என்பது போல் தலையாட்டி விட்டுக் கிளம்பினான். கிளம்பியவன் திரும்பி அன்புவை ஒரு பார்வை பார்த்து, “செல்வா மேல கம்ப்ளண்ட் கொடுக்க வேண்டாம், அவன விட்டுடு” என்றுரைத்துச் சென்றான். 

விட்டுவிடேன் என வேண்டவில்லை, விட்டுவிடு என அண்ணன் தம்பியிடம் கூறுவது போல் உரிமையோடு கூறியதாகத் தோன்றியது அன்புவிற்கு.

Advertisement