Advertisement

அத்தியாயம் 04

மருத்துவ மனைக்குள் சென்றதும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றான். அவனுக்கு முன்பே வந்திருந்த சிவகாமி அழுதவாறு அமர்ந்திருந்தார்.

அவர்கள் அருகே சென்றவன், அங்கிருந்த உறவுகளிடம் தந்தையின் நலம் விசாரிக்க, இருக்கும் சில நிமிடங்கள் அவரின் இறுதி நிமிடங்கள் என உணர்த்தப்பட்டது. மருத்துவர்களும் எந்தவிதப் பொய்யான நம்பிக்கையும் அளிக்கவில்லை.

இறுதியாக அவனைப் பார்க்க அனுமதிக்க, உள்ளே சென்றான். தலை மற்றும் கை, கால்களில் கட்டுகளோடு படுத்திருக்க, அணையப் போகும் விளக்கின் பிரகாசம் போன்ற மென்னொளி அவர் கண்களில் மின்னியது.

அருகே சென்றவனுக்கு அவனையும் அறியாமல் விழிகளில் நீர் நிறைந்தது. அவர் அருகே மண்டியிட்டவன், மௌனமாக அவர் முகத்தையே பார்த்தான். மெதுவாக அவர் வலது கையை பற்றினான்.

அவன் தலை தடவியவர், தன் ஆக்சிஜன் மாஸ்க்கை விலக்க, அவன் பதறினான். இமை சிமிட்டியவர், அ..அன்பு…” என வலிமை இழந்த வலி மிகுந்த குரலில் அழைத்தார்.

அந்த ஒற்றை அழைப்பில் தன்னிலை மொத்தமாக மறந்தவனின் மனது, நான் இன்னும் முழுமையாக வளராத குழந்தை எனக்கு நீங்கள் வேண்டும் அப்பா, நீங்கள் வேண்டும்’ என்றே அலறியது.

அவர் கைகளை அழுத்திப் பிடித்தவன், “என்னப்பா என்ன வேணும்? என்ன செய்யணும்? சொல்லுங்கப்பா?” என்றான். அவருக்காக அந்த நொடி எதையும் செய்து விடும் வேகம் அவனிடம்.

அம்மாவை நல்லாப் பார்த்துக்கோ?” என்றவர் லேசாக மூச்சு வாங்க, பதறியவன், “சரிப்பா..சரி..” எனத் தலையாட்டினான்.

நம்ம ஊரிலேயே இருந்து நம்ம சொந்த பந்தத்தோட வாழ்ந்து, நம்ம தொழில கவனிச்சு, நம்ம குடும்ப கவுரவத்தைக் காப்பாத்துவியா?” வலியிலும் எதிர்பார்ப்போடு கேட்க, ஒருவேளை தன் பதில் அவரை தேற்றாதா என்ற நிகழயியலா நிகழ்வில் எதிர்பார்ப்போடு அவர் கேட்டு முடிப்பதற்குள், ” சரிப்பா, செய்யுறேன்” என்றான் அவர் கைகளை மேலும் இறுகப் பற்றியவாறு.

அந்த ராகவன் முன்னாடியும் அவன் குடும்பம் முன்னாடியும் எப்பவும் நாம இறங்கிப் போக கூடாதுடா, அவங்கள எதுத்து நிக்கணும்” என அந்த நிலையிலும் அவர் குடும்பப் பகையை அவனுக்கு ஊட்ட, “செய்யுறேப்பா, சரிப்பா…” என்றான்.

அதற்குள்ளாகவே அவரின் துடிப்பு அதிகரிக்க, கண்கள் மெல்லியதாக மூடித் திறக்க, அவர் கைகளை இழுத்துப் பிடித்தவன் “அப்பா.. அப்பா.. அப்பா..” எனக் கத்தினான்.

நீ.. கல்.. கல்யாணம்…பண்… ணிக்கோ…” எனக் கூறி முடிக்கும் நொடி ,கடமை முடித்தது என அவர் இமைகள் இமைக்காது வெறித்த பார்வையோடு நிலை கொண்டிருக்க, அவன் பற்றியிருந்த கைகள் தளர்ந்தது.

சரி…ப்பா…” என்றவனுக்கு அவர் நிலை புரிய, அவன் உடலும் மெல்லியதாக நடுங்கியது.

அதற்குள் மருத்துவர்கள், சொந்தங்கள் அனைவரும் கூடி விட, சிவகாமியின் அழுகை ஒலி அந்த மருத்துவ மனை எங்கும் நிறைந்தது.

இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் ஊரில் நடைபெற, கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பின் அந்த ஊருக்கு, அவன் வீட்டிற்கு வந்தான்.

துக்கமென்றால் ஊரே கூடி வருவது வழக்கம். அதிலும் பெரிய குடும்பத்தவர், பெரியவர், நல்ல மனிதர் என்பதால் மொத்தக் கிராமமும் கூடி நின்றது. 

எல்லாம் முடிந்து இருபது நாட்களாகியது. அந்த வயதிலும் தடுமாறி தளர்ந்திருந்த சிவகாமி தன்னைத் தேற்றிக் கொண்டு அன்புவையும் தேற்றினார்.

தந்தைக்கு தான் செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளைச் செய்தவன், அத்தோடு அறைக்குள் முடங்கினான். தனக்கென்று யாருமில்லையே என அவன் மனம் தனிமை உணர்வில் தவித்தது. தனக்கென்று ஒரு துணை வேண்டுமென மனம் ஏங்கியது.

ஆனால், அவனுக்குத் துணை என்று அவள் நினைவே இருந்து. எப்போதும் அவள் நினைவில் வாழ்ந்தவனுக்கு, அவள் நிஜம் தேவையாக இருந்தது. அவள் மடி சாய மனம் ஏங்கியது. ஆனால், அவன் மனத்தின் எதிர்பார்ப்பை அவனே வெறுத்தான். தன் நேசத்தைப் புரிந்து கொள்ளாத அவளை, தன்னை வெறுக்கும் அவளை இன்னும் தன் மனம் விரும்புகின்றதே என்று தன் மீதே கோபம் கொண்டான்.

இந்த ஊருக்குள் இருந்தால் அவளைப் பார்க்க வேண்டிய கட்டாயம் வரும். அவளைப் பார்த்தால் அவளிடம் தன் மனம் கட்டாயம் இளகிவிடும்.

அவளைக் கண்ட பின் என்னவளாய் அவள் வேண்டுமென ஏங்கும் தன் உணர்வுகளை அடக்குவது கடினம். எல்லாம் அவளை பார்த்தால் தானே? பார்க்காமல் கிளம்பிவிட்டால்? ஆனால் தந்தையின் இறுதி ஆசை, தான் இங்கு இருக்க வேண்டும் என்பதே, ஆனால் அவள் இல்லாது அவள் நினைவிலே தன்னால் வாழ இயலும் எனத் துளியும் நம்பிக்கை இல்லாத உறுதியொன்றை மனதிற்குள் நிறுத்திக் கொண்டான்.

ஊரை விட்டுக் கிளம்புவதா? இங்கே இருப்பதா? என்று குழப்பத்தில் விழி மூடியிருந்தவனின் அறைக்குள் சிவகாமியும், இராஜமாணிக்கமும் வந்தனர்.

இராஜமாணிக்கம் ஊர்த் தலைவர். அன்பு குடும்பத்திற்கும் சந்திரன் குடும்பத்திற்கும் இடைப்பட்டவர், பொதுவானவர். மேலும் அன்புவின் தந்தைக்கு நண்பர். இறுதிச்சடங்கின் போதும் பதினாறாம் நாள் விஷேசத்தின் போதும் உடனிருந்து உதவியவர்.

இருவரின் வருகையைப் பார்த்தவன் எழுந்து அமர்ந்து, “வாங்க அங்கிள்” என்க, ” எப்படி இருக்கப்பா?” என்றவாறு அவன் அருகில் அமர்ந்தார்.

இருக்கேன்…” என்றவனின் குரலில் ‘ஏன் தான் இருக்கேனோ?’ என்ற விரக்தி.

என்னப்பா முடிவு பண்ணிருக்கே? ஊருக்குக் கிளம்புறையா?” என்க, அவனிடம் மௌனம் மட்டுமே பதிலா இருந்தது.

அவன் வாடிய தோற்றத்தைப் பார்த்தவர், “பெங்களூர் போணும்னா போயிட்டு வா, உன் வேலை, உன் ஃப்ரன்ட்ஸ், இதெல்லாம் உனக்குக் கொஞ்சம் நிம்மதி தரலாம். இங்க இருக்குறதப் பத்தி கவலப்பட வேண்டாம் நாங்க பார்த்துக்கிறோம். கொஞ்ச நாள் கழிச்சு வாப்பா” என்க, அதற்கும் மௌனமுடன் தலையாட்டினான்.

ஆனா நீ இங்கே இருக்கனுக்கறது தான் சுப்பிரமணி ஆசை. உனக்கு விருப்பமில்லாததால் தான் இத்தனை நாளா உன்ன இங்க கூப்பிடாம இருந்தான். உன் சந்தோஷம் தான் அவனுக்கும் சந்தோஷம். அதனால உன் விருப்பப்படி முடிவு பண்ணு. கொஞ்சம் வேல இருக்கு, டவுன் வரைக்கும் போயிட்டு வரேன் அன்பு” என்றவர் அவன் முதுகைத் தடவி, பின் சிவகாமியிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.

அவர் கிளம்பியபின் அவன் ஆச்சியின் முகத்தைப் பார்த்தான். அவரும் சொல்ல வேண்டியவைகளை இப்போது சொல்லிவிட எண்ணினார்.  

அவன் அருகே அமர்ந்து தலை தடவியவர், ” நான் வாக்கப்பட்டு வந்தப்போ இந்த வீ்டும் குடும்பமும் எப்படி இருந்துச்சி தெரியுமா ராசா? ஊருக்குள்ள ஒரு பிரச்சனைன்னா நம்ம வீட்டு வாசல்ல, நம்ம ஐயா (சிவகாமியின் மாமனார்) கிட்டத் தான் வந்து நிப்பாங்க அம்புட்டு ஆளுகளும். எல்லாருக்கும் ஐயா வாக்குதான் வேத வாக்கு.

எல்லார் வீட்டு விஷேசத்தையும் அவர் தான் முன்ன நின்னு நடத்தி வைப்பாரு. உதவின்னு வந்தவருக்கு வாரி கொடுத்தே பழக்கம். வேலைக்கு வரவங்களுக்கும் சாப்பாடு போட்டுத் தான் வேலை பார்க்க விடுவாரு. எல்லாரும் பயம் கலந்த மரியாதையோடுதான் பார்ப்பாங்க.

தலைமுறை தலைமுறை கௌரவத்தொட வாழ்ந்த குடும்பத்தோட கடைசி வாரிசு நீ தான் ராசா. இந்தக் குடும்பக் கௌரவத்தை நீ காப்பாத்துவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குய்யா. ஒருவேளை நீ ஊருக்குத் தான் போகணும்னு முடிவு பண்ணாலும் சரிதான்.

நீ போ, ஒத்த மனுஷியா நானே எல்லாத்தையும் பார்த்துப்பேன். ஆனால் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டுத்தான் போணும். உன்ன ஒருத்திக்கிட்ட கொடுத்துட்டா அவ பார்த்துப்பான்னு நிம்மதியா நான் என்னைக்கா இருந்தாலும் கண்ண மூடிடுவேன்” என, தன் உணர்வுகள் தன் எதிர்பார்ப்பு மொத்தத்தையும் கூறினார்.

அதற்கும் அவன் மௌனமாகவே இருக்க, ” இன்னும் எத்தன நாளைக்குத் தான் இப்படி முடங்கிக் கிடப்ப? எழுந்திரிப்பா, எழுந்து வெளியே எங்கையாவது போயிட்டு வா ராசா” என்று சொல்ல, அன்புவுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்ற யோசனை மேலும் அதிகரிக்க, தலை வலியும் அதிகரித்தது. அதற்குள் கீழே கணக்குப் பிள்ளை வந்திருப்பதாக வேலையாள் கூறிச் செல்ல இருவரும் கீழே சென்றனர்.

வந்தவர் சிவகாமியுடன் நிர்வாகத்தைப் பற்றி பேச வர, அவர் அன்புவைக் கண்காட்டி விட்டு உள்ளே சென்றார். 

அவரும் அன்புவிடம் பேச முயல, வெளி வாசலில் தாழ்வாரத்தில் அமர்ந்தவன், மாலை வேளை மஞ்சள் வானத்தை வெறித்தான்.  

முதலில் அவனைப் பற்றிய நலவிசாரிப்பு, சிறிது அறிவுரை எனப் பேசியவர் பின்,தம்பி, தோப்புல தேங்காய் பறிக்காம கிடக்கு, செங்கல் சூளைல மண்ணு இல்ல. ஒரு ரெண்டு லோடு எடுத்துப் போடணும், ஸ்கூல் ஹெட் மாஸ்டர் வேற உங்கக்கிட்ட பேசணும்னு சொன்னாரு.

ரைஸ் மில்லேயும், கோழி பண்ணலேயும் லோடு ஏத்தணும் இன்னும் சரக்கு வரலன்னு போன் பண்ணிட்டாங்க. அப்பறம் ஐயா இருந்தவரைக்கும் வாரா வாரம் வேலையாளுகளுக்குச் சம்பளம் கொடுத்திடுவாரு,  இப்போ இரண்டு வாரத்துக்கும் மேல கொடுக்காம இருக்கே.. என்ன பண்ணனும்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா நானே பார்த்துப்பேன்..” என்றவர் அவன் முகம் பார்க்க, சில நொடி அமைதியுடன் இருந்தவன் பின், ” நாளுக்குக் காலையில வாங்க, சொல்லுறேன் அங்கிள்” என்று அவருக்கு விடை கூறி அனுப்பி வைத்தான்.

அதேநேரம் முன்புற இரும்பு கேட் திறந்திருக்க, எதிர் வீட்டு வாசலில் ஜெயந்தி பூ பறிப்பதைப் பார்த்து எழுந்து வாசலுக்கு சென்றான். வாசல் தாண்டி முற்றத்தில் நின்றவன், “ஜெயந்தி” என அழைத்தான்.

அவன் குரலில் திரும்பியவள் அவன் முகம் பார்த்து மெல்லிய புன்னகையோடு அவன் அருகே ஓடி வந்தாள். 

அண்ணா, எப்படி இருக்கே? எதுக்கு இம்புட்டு நாளா ஊருக்கே வராம இருந்தே? நீ வந்ததுல இருந்து உன்னப் பார்க்கணும்னு எம்புட்டு ஆசை தெரியுமா? நீ வெளியவே வரலையே, உங்க அப்பாவுக்கு இப்படியாகும்னு எதிர்பார்க்கலண்ணே” என்றவள், திரும்பி வீட்டின் வாயிலையும் ஒரு பார்வை பார்த்தாள்.

ஜெயந்தி நடக்கிறத யாரால மாத்த முடியும். அதை விடு, நீ எப்படி இருக்கம்மா? உன் ஸ்டடிஸ் முடிஞ்சதா? இப்போ என்ன பண்ணுறடா? எதுவும் விஷேசமா?” என அவளைப் பற்றி விசாரித்தான்.

நல்ல இருக்கேன், பி.எஸ்.சி முடிச்சிட்டேன். வர பங்குனி மாசம் கடைசியில கல்யாணம் அண்ணா, நிச்சயம் இப்போதான் போன மாசம் முன்னாடி முடிஞ்சுச்சு. அதனால தான் உங்க வீட்டுத் துக்கத்துக்குக் கூட எங்க வீட்டுல இருந்து யாரும் வரல. உன்னத்தான் எதிர்பார்த்தேன்..” என்றாள் இறங்கிய குரலில்.

அப்படியாம்மா ரொம்ப சந்தோஷம், கல்யாணம் பண்ணுற வயசு வந்துருச்சி. உன் கூட படிச்ச பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் முடிஞ்சு குழந்தையோடு இருப்பாளுக..” கிண்டலுடன் கூறினான்

க்கும்.. எங்க? பூவும் என் கூட படிச்சிட்டு இப்போ வீட்டுலதான் இருக்கா. கயலு தான் பி.எட் படிச்சா.. இப்போ கடைசி எக்ஸாம் எழுதியிருக்கா. எப்பவும் எங்க வீட்ட தான் சுத்துகிட்டு இருப்பா. அவளுக மட்டும் சந்தோஷமா இருக்காளுக, எனக்குத் தான் முதல்ல கல்யாணம் பண்ணி அனுப்ப போறாங்க” தோழிடமிருந்து தன்னை பிரிப்பது போன்று குறை கூறினாள்.

அது சரி, மச்சான் என்ன பண்ணுறாரு? எந்த ஊரு?” எனப் பேச்சை மாற்ற, அவளும் மெல்லிய வெட்கமுடன் பதிலளித்தாள். உள்ளே ருக்மணி “ஜெயந்தி ஜெயந்தி..” என அழைக்க, அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

இரவு உணவைத் தவிர்த்தவன், அப்படியே படுத்திருந்தான். பரபரப்பாகச் சுற்றியவனுக்கு அறைக்குள்ளே அடைந்து கிடப்பதில் விருப்பமில்லை தான்.

மாலையில் ஜெயந்தியிடம் பேசியதிலிருந்து ‘கயல் இங்குதான் இருக்கிறாள், இப்போது தான் படிப்பை முடித்துள்ளாள். மேலும் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை’ என்ற செய்தியை அறிந்து கொண்டவனுக்கு அவள் மனம் எப்படி இருக்கும் என அறிய இயலவில்லை. தங்கள் வீட்டையே இன்னும் சுற்றி வருகிறாள் என அவள் கூறியதை, என்னவோ ஜெயச்சந்திரனையே சுற்றிவருவது போல் வெறுப்புடன் நினைத்துப் பார்த்தான்.

ஒருபுறம் சுகமாகவும் ஒருபுறம் வலியாகவும் உணர்ந்தான். அவள் நினைவுகள் சுகம் தான் ஆனால் நிஜம் சுகமாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. அன்று தந்தை கூறியது, இன்று ஆச்சி கூறியது என அனைத்தையும் ஒருமுறை நினைத்துப் பார்த்தான். தனக்கு விருப்பமில்லை எனினும் தன் தேவை இங்கு அவசியம். ஆனால் அதற்காகத் தன்னைக் கட்டாயப்படுத்தாது உன் விருப்பப்படி செய் என தன் விருப்பத்திற்கு முக்கியத்துவம் தரும் உறவுகள். தான் இல்லாது ஆச்சி தனிமையில் என்ன செய்வார்? 

மேலும் கணக்குப் பிள்ளை சொல்லிச் சென்ற வேலைகள் அனைத்தும் சமாளிக்க வேண்டிய நிலைமை. ஆனால் இங்கிருந்து கொண்டு கயல்? எண்ணமே டன் கணக்கான எடையை நெஞ்சில் வைத்து அழுத்தியது போன்ற உணர்வைக் கொடுத்தது. உறக்கமின்றி இரவெல்லாம் அந்தச் சிந்தனையிலே உழன்றவன், விடியும் நேரம் ஒரு முடிவெடுத்து, விடியலில் விழி மூடினான்.

Advertisement