Advertisement

அத்தியாயம் 39 

கயல், ஜெயந்தி, பூங்கோதை என தோழிகள் மூவரும் கல்லூரி முதல் வருடம் சென்று கொண்டிருந்தனர். கயல் தாவரவியலும்,ஜெயந்தி கணினி அறிவியலும், பூங்கோதை ஆங்கில இலக்கியம் என ஒரே கல்லூரியில் மூன்றுபேரும் வெவ்வேறு பாட பகுதியைத் தேர்வு செய்திருந்தனர். 

ஜெயந்தியைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும், அழைத்து வருவதும் செல்வா தான் உரிமையோடு செய்வான். சில சமயங்களில் கயலும் ஜெயந்தியோடு தான் செல்வாள். இருவரும் வரும் முன்னே கல்லூரிக்குள் இருக்கும் பூங்கோதை அவர்கள் வந்ததும் ஓடிச் சென்று வரவேற்பாள். 

காலையில் வகுப்புகள் தொடங்கும் முன் மரத்தடியில் அமர்பவர்கள் நாட்டு நடப்பு, ஊர்க் கதை, கல்லூரியில் நடக்கும் கிசுசிசு வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்து, அனைவரின் வீட்டுச் சிற்றுண்டியையும் ருசித்து பின்பு தான் வகுப்பிற்கே செல்வார்கள். கணவன் அன்புவின் நினைவில் கல்லூரியில் கயல் சில சமயம் அமைதியுடன் அவளுலகில் இருப்பாள் ஆனால் மற்ற இருவரின் அரட்டைகள் எப்போதும் ஓயாது.  

மற்ற இருவரையும் விட பூங்கோதைக்கு அவர்கள் நட்பின் மீது அதிக பிணைப்பு. சில சயங்களில் மாலை செல்வா ஜெயந்திக்காக காத்துக் கொண்டிருக்கும் போது, “அவங்க ரெண்டு பேருமே இப்போ லேப்ல இருப்பாங்க வர லேட்டாகும்” என பூங்கோதை செல்வாவிடம் கூற நிமிர்ந்தும் பார்க்காது தலையை மட்டும் ஆட்டுவான்.

கொலுசோலியோடு தன்னை நோக்கி வரும் பொன் பாதங்களும், அதில் மருதாணி பூசிய சிவந்த அல்லி இதழ் விரல்களும், மஞ்சளில் அரக்கு பாடரும், சிவப்பில் பச்சை பாடரும், ஊதாவில் சிவப்பு பாடரும், பச்சையில் ஆரஞ்சு பாடரும், ரோஸில் ஊதா பாடரும் எனக் கொலுசு கூட தெரியாத அளவிற்குக் கால்களை மூடியிருக்கும் பட்டுப் பாவாடைகளும், தேன் குரலும் மட்டுமே அவனறிந்தது. அவள் தாவணி என்ன வண்ணம் என்று கூட அவன் தலை நிமிர்ந்து ஒருநாளும் பார்த்ததில்லை. 

தான் அழகில்லை எனினும் தன் முகம் என்ன பார்க்கும் அளவிற்கு கூடவா இல்லை! நிமிர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு அத்தனை தலைகணமா அவனுக்கு என செல்வாவின் மீது செல்ல கோபம் கொண்டாள் பூங்கோதை. 

என்றும் போல் அன்றும் அவர்கள் வரத் தாமதமாகும் என்று பூங்கோதை சொல்ல, அவனுக்கோ அந்த குரலில் ஏதோ மாற்றமிருப்பது போல் தோன்றியது. குரலின் வலிமை குறைந்து எரிச்சலும், வேதனையும் கலந்திருந்தது போல் தோன்றியதும் பதறி தலை நிமிர்த்து பார்த்தான்.  

ஊர் திருவிழாவின் போதும், ஜெயந்தி வீட்டிலும் எதேச்சையாக அவள் முகம் பார்த்ததுண்டு. அந்த மதி முகத்தின் சாயல் மட்டுமே அவனறிந்ததுண்டு. இன்று தான் அருகே ஆழமாகப் பார்த்தான். முகம் வாடி, கண்கள் சிவக்க மூக்கை உறிஞ்சியவாறு நின்றிருந்தாள். 

என்னாச்சு உடம்பு சரில்லையோ?,என்ன பண்ணது?, எதுவும் வேணுமா? ஒரு வயது பெண்ணிடம் என்ன கேட்க, எப்படி கேட்க எனத் திணறியவாறு நின்றான். சிறுவயதிலிருந்தே அவன் பேசி பழகிய ஒரே பெண் ஜெயந்தி மட்டும் தான் அவளும் எப்போதும் அண்ணா அது வேண்டும் இது வேண்டும் என உரிமையோடு கேட்டு வாங்கிக் கொள்பவள் ஆகையால் பூங்கோதையிடம் எப்படிக் கேட்க என தெரியாது விழித்து நின்றான்.

அதற்குள் அவள் விலக, “ஏங்க ஒரு நிமிஷம், எதுவும் உதவி வேணுமா?” என்றான். 

இவன் தான் பேசினானா என்பது போல் அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “எதிர்ல இருக்குற மெடிக்கல் ஷாப்ல ஒரு காய்ச்சல் மாத்திரை வாங்கிட்டு வர முடியுமா?” என்றாள்.

அவன் தலையாட்டிவிட்டுச் செல்ல மரத்தடியில் சென்று அமர்ந்தாள். முதல் நாள் வீட்டில் யாருமில்லை என மழையில் ஆடியதன் எதிர் வினை இன்று கல்லூரிக்கு வந்த பின் காய்ச்சலாகத் திரும்பி இருந்தது. முக்கிய வகுப்பு என்பதால் இடையில் செல்ல இயலாது மாலை வரை தாங்கிக் கொண்டாள்.

கையில் மாத்திரை, தண்ணீர் மற்றும் சூடான காபியும் கொண்டு வந்து அவள் முன்பு வைத்தான். எத்தனை ஆள்கள் தனக்குச் சேவகம் செய்ய இருந்தாலும் அத்தனை பேரும் பணத்திற்கு மட்டுமே செய்வார்கள்.யாரென்று அறியாத ஆடவன் தனக்குச் சேவை செய்ய அவள் மனம் அவனிடத்தில் தடுமாறியது. தனக்கு மட்டுமே அவன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று பேராசை பிறந்தது அவள் மனதில்.

இதுவரையும் தன்னை நிமிர்ந்தும் பார்த்திட அவன் கண்ணியம் அவனை நோக்கி ஈர்த்தது. அதன் பின் பூங்கோதை தான் பார்க்கும் போதெல்லாம் யாருமாறியது அவனிடம் பேச முயன்றாள். அப்போதும் தலை நிமிர்ந்து பார்த்தான் இல்லை. செல்வாவின் மனதிலும் காதல் இருந்தது ஆனால் பூங்கோதையின் உயரம் கண்டு விலகிச் சென்றான். அவளோ ஊர்த் தலைவரின் ஒற்றை மகள், அவனுக்கோ அந்த ஊரில் சொல்லிக் கொள்ளும் படியான அடையாளமில்லை. 

ஒரு முறை தேர்வு சமயத்தில் மதிய நேரமே ஜெயந்தியும்,கயலும் வந்துவிட்டனர். அவர்களிடம் என்னவென்று விசாரிக்க தங்களுக்குக் காலையிலே தேர்வுகள் நிறைவுற்றதாகக் கூறியவர்கள் பூங்கோதைக்கு மதிய தேர்வு என்றனர். 

அன்று மாலை சில அரசியல் காரணத்தால் டௌனில் கலவரம் நடந்து கொண்டிருந்தது. கல்லூரியில் இருப்பாளோ?,பேருந்து நிறுத்தத்திற்கு சென்றிருப்பாளோ?, அவளுக்கு என்னவோ, ஏதோ? என மனம் முழுவதும் பயத்தோடு ஓடோடி வந்தான்.

அவன் பயந்தது போலவே பேருந்து நிலையத்தில் கல்லடி பட்டு தலையில் இரத்தம் வலிய அரைமயக்க நிலையில் கிடந்தாள் பூங்கோதை. நெஞ்சம் பதற கண்களில் கண்ணீரோடு அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான். அந்தநிலையிலும் அவன் அக்கறையோடு கலந்துள்ள காதலைச் சரியாக கண்டு கொண்டாள் பூங்கோதை.

அதன் பின்னும் அவன் விலகிச் செல்ல அவன் முன் வந்து நின்றவள், “நீங்க எனக்குச் செய்தது உதவியா இருக்கலாம் ஆனால் உங்க கண்ணீருக்கு என்ன காரணம்?” எனக் கேட்கப் பதிலற்று நின்றான்.

அவளே நேரடியா அவள் காதலைக் கூறி வெளிப்படுத்த அவனால் அதற்கு மேலும் மறுக்க முடியாது போனது. அவன் காதல் மனது அவள் காதலை நிராகரிக்க விடவில்லை.

அதன் பின் அவள் கல்லூரி சென்ற இரண்டு வருடம், பின் ஒருவருடம் கோவில் மண்டபம், தோப்பு, ஜெயந்தி வீடு என யாருக்கும் தெரியாமல் அவர்கள் காதல் காலம் இனிமையாக கடந்தது. 

ஜெயந்திக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சியம் செய்தனர் அதே நேரம் இராஜமாணிக்கமும் பூங்கோதைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி இருந்தார். வெளியூரில் பெரிய பெரிய இடங்களிலும் தன் கட்சியில் பெரியவர்களின் வீடுகளின் வரிசையாக வரனைக் கொண்டு வர அவளும் ஒவ்வொரு காரணமாக சொல்லித் தவிர்த்தாள்.

அதுவரை இராஜமணிகத்திற்கு தொழிலும், மணல் கொள்ளையும், ரேஷன் கொள்ளையில் கமிஷன், ஊர் நிர்வாகத்தில் முறைகேடு என எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. யாருக்குமே இதில் அவர் மேல் சிறு சந்தேகம் கூட வரவில்லை. 

அந்த நேரம் எதிர்பாராத விதமாக சிவசுப்பிரமணியன் விபத்தில் இறக்க, அன்புச்செழியன் ஏழு வருடத்திற்குப் பின் மீண்டும் ஊருக்குள் வந்தான்.

நிதி,நேர்மை, தர்மம் என சிவசுப்பிரமணியனின் மறு உருவாக நிற்பான் அன்பு. அவனும் தவறு செய்யமாட்டான், தவறு செய்பவர்களையும் செய்யவிட மாட்டான், தவறு செய்தவர்களையும் எளிதாக விட மாட்டான்.

சந்திரனும் தர்மத்தின் வழி நடப்பவன் தான் ஆனால் பிறர் எவ்வாறு, எப்படி என்றெல்லாம் கண்டு கொள்ள மாட்டான். ஆதலாலே இத்தனை நாளும் இராஜமாணிக்கத்தின் திருட்டுத் தனம் தடையின்றி நடந்து கொண்டிருந்தது. 

அன்பு திரும்பி வந்தது இராஜமணிகத்திருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. முதலில் மறைமுகமாக இங்கிருக்க உனக்கு விருப்பமில்லை எனில் பெங்களூர் சென்று வா என்பது போல் எல்லாம் அறிவுரை கூறிப் பார்த்தார். ஆனால் அன்பு நிரந்தரமாக இங்கே தங்குவதாகக் கூறி அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தான். 

இவனை என்ன செய்யலாம் என்பது போல் அவர் தவித்து நிற்க, பூங்கோதை வேறு வரும் மாப்பிள்ளை அனைத்தும் வேண்டாம் என்று கூறி மேலும் தலைவலியை அதிகப் படுத்தினாள். அத்தனையிலும் அவருக்கு இருந்த சிறு நிம்மதி சந்திரனும், அன்புவும் பகையாளியாகவே இருப்பது தான். ஆனால் அவர் மட்டுமல்ல சந்திரன் அன்புவே சரியாக உணராதது அவர்களுக்குள் இருப்பது பகையல்ல வெறும் தான் என்ற கௌரவத்தை முதன்மைப் படுத்திக் கொள்ளும் தொழிலில் போட்டி தான் என்பதை. 

அவர் செய்யும் அனைத்தும் தன் ஒற்றை மகள் சீரோடும், சிறப்போடும் என்றென்றும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும் என்பதற்கே.

பல நேரங்களில் செல்வாவை பார்ப்பதற்காகவே ஜெயந்தியின் வீட்டிற்கு வருவாள் பூங்கோதை.யார் பார்வையிலும் படாமல் வீட்டிற்குள்ளே இருவரும் பேசிக் கொள்வதுண்டு. 

ஜெயந்தியின் திருமணத்திற்கு முதல் நாள் இரவு சந்திரன் கோவில் அலங்காரத்தைப் பார்த்து வரச் செல்ல, செல்வா மட்டும் வீட்டிற்கு வந்தான். கீழே பைக்கை நிறுத்தும் போதே மேலே மொட்டை மாடியில் நின்று பூங்கோதை அழைப்பதைக் கண்டு கொண்டான். 

யாருக்கும் அறியாமல் இருவரும் பார்த்துக் கொள்ள, செல்வா எதிரே வந்ததும் கட்டிக்கொண்டு அழுத பூங்கோதை தந்தை தனக்கு மீண்டும் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகக் கூறினாள்.

கடந்த ஆறு மாதங்களாகவே பூங்கோதையின் புலம்பல் இது தான். செல்வாவை அவன் அன்னையோடு வந்து தங்கள் வீட்டில் பேசுமாறு சொல்லிக் கொண்டே இருந்தாள். 

சுற்றும் முற்றும் பார்த்தவன் அவளை விலக்கி கண்ணீரைத் துடைத்தவாறு என்ன என்று கேட்டான். 

இந்த தடவை எனக்கும் அப்பாக்கும் ரொம்பவே வாக்குவாதமாச்சி அவரும் என்ன காரணம்னு கேட்டுகிட்டு இருந்தாரு. இதுக்கும் மேலையும் என்னால மறைக்க முடியாம நாம ரெண்டு பேரும் விரும்புறத எங்க வீட்டுல சொல்லிட்டேன்” என்றாள்.

ஏன் கோதை சொன்ன? நான் தான் சந்திரனுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் பொறுமையா இருன்னு சொன்னேன்ல, அப்பறம் என்ன அவசரம் உனக்கு?” எனக் கோபமுடன் கேட்டான்.

நீங்க என்ன ஆம்பிள்ள எத்தன வருஷம் வேணாலும் கல்யாணத்தைத் தள்ளிப் போடலாம் ஆனா பொண்ணு என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க?. எங்க வீட்டுல தர ப்ரெஸ்ரையும் தாங்கி கிட்டு இவ்வளவு நாள் தள்ளிப் போட்டதே பெரிய விஷயம். ஜெயந்தியும் என் கூடத்தானே படிச்சா நாளைக்கு அவளுக்குக் கல்யாணம் அப்பறம் எங்க வீட்டுல மட்டும் சும்மா இருப்பாங்களா?” என அழுகையுடனே கேட்டாள். 

சரிம்மா அழுதா, இப்போ உங்க அப்பா என்ன தான் சொன்னாரு?” என்க, “உங்கள தனியா வந்து பேச சொன்னாரு, அதை சொல்லத் தான் நான் வந்தேன்” என்றாள். 

உங்க அப்பா மாப்பிள்ளையா எதிர்பாகுற அளவுக்கு என்கிட்ட தகுதியில்லையே? ஒருவேளை என்ன வேண்டாம்னு சொல்லிடுவாரோ?” என்க, இது என்ன ஆரம்பத்திலே அபசகுனமாகப் பேசுகிறானே என்றெண்ணி முறைத்தாள். 

அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன் நாமா வீட்டை விட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு, நீங்க தான் சந்திரன் கல்யாணம் பண்ண பிறகு தான் கல்யாணம் பண்ணுவேன், அதுவும் பெரியவங்களுக்கு தெரியமலாம் பண்ண மாட்டேன்னு டையலாக் விட்டிங்க”என மீண்டும் கண்ணீர் விட, “சரிடா கோதை அழாத, உங்க அப்பாகிட்ட பேசிட்டு அப்பறம் என்ன பண்ணலாம் முடிவு பண்ணலாம்” என்றவன் அவளைச் சமாதான படுத்த முயன்றான். 

யாரோ படிகளில் ஏறி வருவது போல் ஓசை கேட்க, அருகே இருந்த தண்ணீர் தொட்டியின் பின் சென்று செல்வா மறந்து கொண்டான்.

வந்தது கயல் தான். பூங்கோதை கண்களில் கண்ணீரோடு நிற்பதைப் பார்த்த கயல் என்ன என்று விசாரித்தாள். ஜெயந்தி பிரிந்து செல்வதால் வருத்தம் என்று சமாளிக்க, அவளைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றாள் கயல். 

மறுநாளே கயலுக்கும் ஜெய்சந்திரனுக்கும் திடீர் நிச்சியம் நடந்தது. அதன் பின் திருவிழா தொடங்க ரேஷன் பிரச்சனையில் சந்திரன் பெயர் வந்தது.

இவர்கள் யார் காம்பிளைன்ட் கொடுத்தது என்று விசாரித்த நேரம் இராஜமணிக்கமும் விசாரிக்க இறுதியில் அன்பு தான் என இருவரும் அறிந்து கொண்டனர். 

ரேஷன் கொள்ளையின் மூலம் தடைல்லாது கமிஷன் வந்து கொண்டிருந்தது. அன்பு ஊருக்குள் இருந்தால் ஆபத்து தான் என்ற அவர் எண்ணத்தைப் பொய்யாக்காமல் இருந்தன அன்புவின் செயல்கள். 

அவனாக ஊரை விட்டு செல்ல மாட்டான். நாமே உலகத்தை விட்டு அவனை அனுப்பினால் தான் உண்டு. இல்லையெனில் ரேஷன் கொள்ளையைப் போல் மணல் கொள்ளையையும் கண்டுபிடித்து விடுவான் என்ற பயம் அவர் மனம் முழுக்க ஆழமாகப் பரவியிருந்தது.

அவரால் தனியாகக் கைக்கூலிகளை கொண்டு அன்புவை கொல்ல முடியும் தான் ஆனால் அவருக்கு செல்வாவை சுற்றமாகப் பிடிக்கவில்லை. உயர்ந்த குணங்கள் கொண்டவனாக இருப்பினும் அந்தஸ்தில் தங்களை விடத் தாழ்ந்து இருக்கவே அவனை மருமகனாக ஏற்க மறுத்தது அவர் மனம். அவர் விருப்பமின்மையை நேரடியாக மகளின் முன்பும் காட்டவில்லை. 

செல்வாவை ஆட்டுவிக்கும் ஒரே மந்திரச் சொல் ஜெய்சந்திரன் என்பதை நன்கு அறிந்திருந்தார். இதில் சந்திரனும் அன்புவும் பகையாளிகளாக இருபது அவருக்குக் கூடுதல் பலம்.

தோப்புக்குள் இராஜமணிக்கத்தை தனியாக சந்திக்க வந்திருந்தான் செல்வா. அன்புவை கொல்ல வேண்டும் என்றதும் அதிர்ந்து பார்த்தான் செல்வா.

அன்பு மட்டும் இந்த ஊருக்குள்ல இல்லைன்னா சந்திரன் தான் இந்த ஊருக்கே ராஜா. அவனுக்கு கீழ நீ இருந்தாலும் பரவாயில்லை என் பொண்ண உனக்குக் கட்டிக் கொடுக்குறேன். அதுக்கு முதல்ல அன்புவை போடணும். நீ எதுவும் பண்ண வேண்டாம் எல்லாம் என் ஆளுக பாத்துப்பாங்க. அன்பு தனியா இருக்குற நேரம், சாதகமான நேரம் பார்த்து நீ என் ஆளுகளுக்கு தகவல் மட்டும் சொன்னா போதும். என் மகா ஆசைப்பட்டவனையே கட்டி வச்சிறலாம்னு நினைக்கேன். யோசிச்சிக்கோப்பா!” என்றார். 

செல்வா சரியென்றும் சொல்லவில்லை மாட்டேன் என்றும் சொல்லவில்லை எதுவும் பேசாது வந்து விட்டான்.

Advertisement