Advertisement

அத்தியாயம் 36

கயல் இன்னும் அந்த அதிர்விலிருந்து வெளிவரவில்லை. உடல் சோர்ந்து விட, மீண்டும் தலை சுற்றலாகத் தோன்றியது. அன்புவின் தோளில் தலை சாய்த்து விழி மூடியிருந்தவள், “மாமா பாப்பாவுக்கு எதுவும் ஆகாது தானே?” என மென்குரலில் கேட்டாள்.

மீண்டும் மீண்டும் அதே கேள்வி தான் அவளிடமிருந்து, அப்போது தான் அவனும் உணர்ந்தான். மருத்துவமனைக்குக் கிளம்பும் போது சிவகாமியிடமிருந்த மகிழ்ச்சி, கயல் சொல்லத் தயங்கிய தயக்கம், ஜெயசந்திரனிடம் நன்றி கூறும் போதும் தன் உயிரை விடப் பெரிதாய் நினைக்கும் இரு உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி என்றது என அனைத்தும் அவனுக்கு ஒன்றை உணர்த்தியது.

அவள் இடையை அணைத்திருந்தவனின் கைகள் நகர்ந்து உடையின் ஊடாய் அவள் வயிற்றை வருடியது. அதனை உணர்ந்து அவளும் தன் கைகளையும் அவன் கைமேல் வைத்து அழுத்தினாள். தோளில் சாய்ந்திருந்த அவளின் நெற்றி வகிட்டில் லேசாக இதழ் பதித்து மீட்டான். 

அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, தான் தந்தையாகப் போகிறோம் எத்தகைய மகிழ்ச்சி இது! தன் பெயர் சொல்லும் ஒரு பிள்ளை! தன்னவளின் சாயலில் அவள் குறும்புகளைத் தாங்கி நிற்கும் குழந்தை. சின்னஞ்சிறு விரல், இதழ் ஈர முத்தம், வீடெங்கும் மழலை குரல், அதன் வருகைக்காக பத்து மாத காத்திருப்பு. தானும் தன் தந்தையை போன்றதொரு நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என அவன் நெஞ்சில் கற்பனை அலைகள் பொங்கி எழுந்து கொண்டே இருந்தது.

குதுகலித்துக் கொண்டாட வேண்டிய சந்தோஷத்தை, கொண்டாட முடியாத நிலையில் நின்றான். சற்று முன் நடந்த நிகழ்வு இன்னும் அவனுள் கோபத்தீயாய் எரிந்து கொண்டிருந்தது. தன்னை கொல்ல முயலும் போதெல்லாம் அமைதி காத்தவன், தன் மனைவி, தன் வாரிசுக்கு ஆபத்து என்றதும் அடக்க இயலாது கோபம் கொண்டான். அதிலும் செல்வா இதற்கு மேலும் விட்டு வைப்பதில்லை என்ற முடிவிற்கே வந்திருந்தான். 

வீட்டிற்கு வந்தும் கயலைப் படுக்க வைத்துவிட்டு வேலையாட்களிடம் கேட்டு ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கி வந்து புகட்டினான். விலக இருந்தவனின் விரல்களை இறுகப் பிடித்துக் கொண்டவள் அரைத் தூக்க நிலையிலும், “மாமா பாப்பா, பாப்பாவுக்கு எதுவும் ஆகாது தானா?” என உளறினாள். 

அதிலே அவள் மனதில் நிரம்பி இருந்த பயத்தை புரிந்து கொண்டு, அவள் அருகே குனிந்து தலை தடவியவாறு மெல்ல, “பாப்பா நல்லா இருக்காடா, நம்ம பாப்பாவுக்கு எதுவும் ஆகவிட மாட்டேன், என்ன நம்புவ தானே செல்லம்மா?” என்க, “ம்ம்ம்….”என்ற மெல்லிய முனங்கலொலி மட்டுமே அவளிடமிருந்து வந்தது.

ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும் வரை அருகே அமர்ந்திருந்தவன், பின் மெல்ல கைகளை விலகிக் கொண்டு எழுந்து சென்றான். வேகமுடன் வெளியே வந்து வண்டியை எடுத்தவன் சீரும் வேங்கையின் வேகத்தில் பாய்ந்தான். 

யாருமில்லா தென்னந்தோப்பிற்குள் செல்வாவை போட்டு வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தான் ஜெயசந்திரன். 

முகமெல்லாம் வீங்கி, உதட்டோரம் இரத்தம் வலிய நின்ற செல்வா சந்திரனின் அத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு அமைதி காத்தான். அவன் அமைதி சந்திரனை மேலும் கோபப்படுத்தியது. 

நிற்கத் தள்ளாடியவனின் சட்டடையை பற்றி இழுத்த சந்திரன், “ஏன்டா இப்படிப் பண்ண? நான் சொல்லாம நீ எதுவும் செய்யமாட்டியேடா, நான் என்னைக்காவது அன்புவை கொல்லனும்னு சொல்லியிருக்கேனா? சொல்லுடா? 

அன்பு என் எதிரி தான் அதுக்காக அவனை அழிக்கணும்னு நான் என்னைக்கும் நினைச்சதில்லையேடா! இதே ஊருக்குள்ள அவன விட ஒரு படி மேல மதிப்போடையும், மரியாதையோடையும் வாழணுமுன்னு  மட்டும் தானடா நினைச்சேன். 

அன்பு என் பங்காளிடா, ஆயிரம் இருந்தாலும் எங்க ரெண்டுபேர் உடம்புலையும் ஓடுறது ஒரே வம்சத்து இரத்தம்டா! அதை அழிக்கணும்னு எப்படிடா நினைச்ச? சொல்லுடா” எனக் கேட்டவாறு மேலும் அவன் முகத்தில் குத்தினான். 

டேய் சந்திரா, எத்தன நாள் நீ கோபத்துல அன்புவை சும்மா விடக்கூடாது அவனை ஏதாவது பண்ணனும்னு சொல்லி இருக்க?” என எதிர்க் கேள்வி கேட்டவனை எரிப்பது போல் முறைத்தான் சந்திரன்.

செல்வாவின் இருகன்னத்திலும் மாறி மாறி அறைந்தவன், “கயலை கட்டணும்னு மட்டும் தான்டா நான் நினைச்சேன். அதுவும் அன்பு தான் கயலுகிட்ட வம்பு பண்ணுற மாதிரி இருந்துச்சு, அதனால கயலை நான் கல்யாணம் பண்ணி அவனைத் துடிக்க வைக்கணும்னு தான் நினைச்சேன். அதுக்காக அவனை கொல்லணும்னு நினைக்கலையே? 

அது மட்டும் தாண்ட அவனுக்கு நான் பண்ண கெடுதல். ஊர் முன்னாடி அவமானப்படும் போதும், ஏலத்தில தோற்கும் போதும் என் கோபத்தைப் புலம்பலா வெளிப்படுத்திட்டு அடுத்த தடவை அவனை எப்படியும் ஜெய்க்கணும்னு தான் நிச்சிப்பேன். ஆனா என் கூடவே இருந்துக்கிட்டு நீ எப்படிடா அவனை கொல்லணும்னு நினைச்ச? 

துரோகி! உன்னையும் புள்ள மாதிரி தானடா எங்க வீட்டுல நடத்துனாங்க, ஆனா பாலுத்தி வழத்தாலும் நான் பாம்பு தான் உன் புத்தியை காட்டிட்டையேடா! ச்சே, அன்பு எங்க குடும்ப வாரிசு, நீ அன்புவை கொல்ல முயற்சி பண்ணது என்ன கொல்ல நினைத்ததுக்குச் சமம். இனி என் மூஞ்சிலையே முழிக்காத போடா!” எனக் கோபமுடன் கூறினான். 

அடித்து அடித்து அசதியுற்றவன் இறுதியில் கோபமுடன் பற்றியிருந்த அவன் சட்டையை விடுத்துத் தள்ளிவிட்டான். தள்ளிவிட்டவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை. தேங்காய் உரிக்கும் கூர்முனை கம்பி நட்டு வைக்கப்பட்டு இருந்ததைச் சந்திரன் கவனிக்கவில்லை. 

ஆனால் அவன் தள்ளிவிட்ட வேகத்திற்கு செல்வா சரியாகக் கம்பியிலே விழவிருக்க, அந்த நேரம் அன்புவின் கரங்கள் அவனை விழாது தடுத்துத் தாங்கியது. 

செல்வாவிற்கு அப்போது தான் மனம் வலித்து தன் கொல்ல நினைத்த ஒருவன் தன் உயிரையே காப்பாற்றி இருக்கிறான். அன்புவின் பெருந்தன்மை எண்ணி வியந்தான்.

செல்வாவை நிற்க வைத்தவன் அறைவிட்டான். கன்னத்து நரம்புகளுள் மின்சாரம் பாய்ந்தது போல் உடலே அதிர்ந்தது. சந்திரனும் திரும்பிப் பார்க்க, இருவரையும் கொலைவெறியுடன் முறைத்தவாறு நின்றிருந்தான் அன்பு.

ஒரு ஏளனப் புன்னகையோடு, “என்னங்கடா இரண்டு பேரும் நடிக்கிறீங்களா? நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழுவுன்னு பேசி வச்சி இருந்தீங்களோ?

அவரு பாம் வைப்பாராம், இவரு காப்பாத்துவராம் நல்ல நடிக்கிறீங்கடா! ஆனா பாரு, இந்த நடிப்ப உண்மைன்னு என்னால நம்பா முடியலையே? ஒருவேளை உங்க பெர்பாமஸ் பத்தலையோ?” என்றான். 

சந்திரனுக்கு தன் செல்வாவை அடித்ததை தான் இவன் நடிப்பு என்று எள்ளலுடன் கூறுகிறான் என்பது நன்றாகப் புரிந்தது. செல்வாவை கோபமுடன் முறைத்தான். 

இங்க பாரு, நாங்க எதுவும் பண்ணலை. அதுவும் சந்திரனுக்கு எதுவும் தெரியாது. எல்லாம் நான் தான்” எனச் செல்வா அவன் கேட்கும் முன்னே உளறினான். 

நெருங்கிய அடர் புருவங்கள் இரண்டும் தொட்டுக்கொள்ளும் அளவிற்கு தன் சிறு கூர் வேல் விழிகளை இடுக்கி அன்பு ஒரு பார்வை பார்க்க, செல்வாவின் உடல் மொத்தமாக நடுங்கியது.

அவனையும் அறியாமல் அவன் வாய் உண்மையை உலரத் தொடங்கியது, “அது..அது..உண்மையா..நான், நான் மட்டும் தான் உன்ன கொல்ல திருவிழா கடைசி நாள் இராத்திரி ஆள் அனுப்புனேன்!” என அவன் ஆரம்பிக்கும் போதே வேண்டாம் என கை நீட்டினான் அன்பு.

உன்ன விசாரிக்க வரலை, எச்சரிக்கத் தான் வந்தேன். எனக்கு எல்லா உண்மையும் தெரியும் நீ திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்னும் போதே செல்வா மொத்தமாக அதிர்ந்தான். அதிலும் எல்லாம் என்ற வார்த்தையிலிருந்த அழுத்தம் மீண்டும் சந்திரனின் திருமணம் தடைபடுமோ என்ற பயத்தை உண்டு பண்ணியது.

சங்கரலிங்கம் தாத்தா கருப்பசாமிக்கு அருவா அடிக்கச் சொன்னதும், நீ பக்கத்து ஊரு கொல்லன் பட்டறையில வெட்டருவா ரெண்டு சேர்த்து அடிச்சி வாங்கி இருக்க. அந்த தடியணுங்க போட்டுட்டு போன மொபைலையும், அருவாவையும் வச்சே நீ தான்னு எப்பவோ கண்டு பிடிச்சிட்டேன். 

அன்னைக்கு எனக்கு ஆக்சிடன்ட் ஆனா நயிட் டவுன்ல இருந்து தான் கிளம்பும் போது, கொஞ்ச தூரம் என்ன நீ பாலோ பண்ணி வந்த, அப்பறம் நீ காட்டுவழியா இறங்கிப் போன எதிர்ல லாரி வந்து என்ன அடிச்சது! 

அப்பறம் பாம் கொடுத்து அனுப்புனையே மணி அவன் சாகல இன்னும் உயிரோட தான் இருக்கான். உனக்கு எதிரா எல்லா ஆதாரமும் ரெடி பண்ணிட்டேன். என்ன கொல்ல முயற்சி பண்ணும் போதெல்லாம் அமைதியா இருத்துட்டேன் ஆனா எப்போ என் குடும்பத்து மேல குறிவச்சையோ இனி சும்மா விடமாட்டேன். 

நாளைக்கே உங்க மேல கம்ளைன்ட் கொடுக்கிறேன். இரெண்டு பேரையும் ஜெயில்ல தள்ளுறேன்டா. கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் உள்ள போக போறீங்க, யார் நினைச்சாலும் இத தடுக்க முடியாது!” என விரல் நீட்டி எச்சரித்தான். அன்புவின் மிரட்டலில் மற்ற இருவருமே அதிர்ந்து நின்றனர்.

இந்த செல்வா தேவையில்லாத வேலை பண்ணி இவ்வளவு பிரச்சனையை இழுத்துவிட்டுட்டானே என செல்வாவின் மீது கோபம். மூவரின் உயிரை காப்பாற்றிய பின்னும் தன்னையே மிரட்டுகிறானே என அன்புவின் மீதும் கோபம். தன்னிடம் பணமும்,பலமும் இருக்கையில் கேஸ் வந்தாலும் பயமில்லை செல்வாவை காப்பாற்றிவிடலாம் ஆனால் மீண்டும் திருமணநேரத்தில் கூடியிருக்கும் உறவுகளின் முன்பு அவமானப்படுவதா? என்ற எண்ணி நொந்தான் சந்திரன்.  

தான் செய்த தவறுக்கு சந்திரனையும் குற்றம் சொல்லுகிறானே இந்த அன்பு. திருமணத்திற்கு இரு நாட்களே இருக்கும் நிலையில் இதனால் மீண்டும் சந்திரனின் திருமணம் தடைபட நேருமோ என வருத்தமுற்றான் செல்வா.

அன்புவிற்கு இருவரின் மேலும் அடங்க இயலாத கோபம் அதிலும் கயல் கொண்ட பயம் அவனை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. இருவரையும் மிரட்டி விட்டு ஜெயசந்திரனை ஒரு பார்வை பார்த்தவாறு கிளம்பிச் சென்றான். 

இரவு வீட்டிற்கு வரும் போதும் அன்புவின் கோபம் குறையவில்லை. அது தெரியாமல் அவன் அறைக்குள் வந்ததும் கயல்,”சந்திரமாமா ரொம்ப நல்லவருங்க, சரியான நேரத்துக்கு அவர் மட்டும் வரலைனா? நெனச்சிப் பார்க்கக் கூட பயமா இருக்கு” என அவன் புகழ் பாடினாள்.

அவள் இன்னும் அந்நிகழ்வை மறக்காமல் இருக்கிறாளே என்ற கலக்கம், சந்திரனைப் புகழ்ந்ததில் கோபம், ஏற்கனவே இருக்கும் தலைவலி மேலும் அதிகமாகவிட எரிச்சலுடன்,”ஏன் அவன் பண்ணது எல்லாம் உனக்கு மறந்து போச்சா? அவன் தானே உன்ன எங்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சான், நீ என்னடானா அவன் கால்ல போய் விழுகிற?” எனக் கத்தினான்.

உண்மையறியாத கயல், “சந்திரன் மாமா ஒன்னும் அப்படி பண்ணலை, கல்யாணம் பெரியவங்க முடிவு பண்ணது. அவர் பண்ணது ஒன்னும் சாதாரண உதவி இல்ல அவர் உயிரக்கூட பெருசா நினைக்காம நம்ம உயிர காப்பாத்திக் கொடுத்துருக்காரு! அதைவிட நம்ம புள்ள உயிரை காப்பாத்திருக்காரு அதுக்கு நன்றி சொல்லாட்டாலும் பரவாயில்ல இப்படி அவரை தப்பா பேசாதீங்க” என்றாள் அவனுக்கு இணையான கோபத்துடன்.

என்னடி சும்மா சும்மா உசுர காப்பாத்தியிருக்கானு சொல்லுற? ஆபத்து வந்ததே அவனால தான்!” என உச்ச கோபத்தில் கத்த, கயல் சற்று பயந்துவிட்டாள்.

அவள் நடுக்கத்தைப் பார்த்தவன் தலையை கோதிக் கொண்டு,”நீ கொஞ்சம் இங்க இருந்து வெளியே போ” என்றான்.

அவ்வளவு தான் கயலால் தாங்க முடியவில்லை. ஏற்கனவே ஒருமுறை அவன் இவ்வாறு கூறி அதில் அவள் கலங்கியதை அறிந்தும் மீண்டும் அவன் வெளியில் போ என்றதில் கோபம் வந்தது. 

எதுவும் பேசாமல் அறையிலிருந்து வெளியேறியவள், ஹாலில் சிவகாமியைப் பார்க்க அவருமில்லாததால் வீட்டிலிருந்து வெளியேறினாள். 

அவள் செல்வதைத் தடுக்கவுமில்லை அவளை அழைக்கவுமில்லை. 

திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் முற்றிலும் தயாராகி இருந்தது. இருவீடும் உறவுகள் சூழ மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பே ஜெயந்தியும் அவள் கணவன் விக்னேஷும் வந்திருந்தனர். தற்போது அவன் பெற்றோரும் மற்ற உறவுகளும் வந்திருந்தனர். 

திருமண ஏற்பாடுகள் இருவீட்டாரும் இணைந்து வெகு விமர்சையாக, அவர்கள் ஆடம்பரத்தைக் காட்சிப்படுத்தும் படி ஏற்பாடு செய்திருந்தனர். அதையே உறவுகளிடம் பெருமையாகப் பேசியே நேரம் கழிந்தது ருக்மணிக்கு. 

திருமணத்திற்கு ஒருநாள் இருக்கும் நிலையில் மாலை டவுனிலிருந்து வந்து கொண்டிருந்தான் சந்திரன். மழை வர இருப்பது போல் மேகம் கருமை பூசி வானம் இருள் சூழ்ந்து இருந்தது. 

வந்த வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் விரைவில் ஊருக்குக் கிளம்பு வேண்டும் என்ற முடிவிலிருந்தாள் ஸ்வேதா. குன்றின் மேலிருக்கும் முருகர் கோவிலிருந்து ஸ்வேதா கீழே இறங்கிவருவதைப் பார்த்த சந்திரன் வேகமுடன் அவள் முன்பு வந்து நின்றான்.

வீட்டுக்குத் தான் போறேன், வரணும்னா வரலாம்” என அவளைப் பார்த்து உரைத்தான். 

யாரோ யாரையோ அழைப்பது போல் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். அன்னைக்கு போதையில கொஞ்சுனது என்ன? இப்போ முகத்தை திருப்புறதென்ன! ரொம்ப கோபக்காரக்கிளியா இருப்பா போல என நினைத்தவன் வண்டியில் அமர்ந்திருந்தவாறே அவள் ஒருகையைப் பிடித்து இழுத்தான். 

எந்த உரிமையில் என் கை பிடிக்கிறான் என ஸ்வேதாவிற்கு கோபம் வரக் கையை உருவ முயன்றவாறு,”கைய விடுடா” எனக் கத்தினாள்.          

அவனோ அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளாது மாற புன்னகையுடன், “வாடி…” எனக் கையை இழுத்தான். 

அவ்வளவு தான் அவள் பொறுமையின் எல்லைகள் எல்லாம் உடைபட,”எங்கடா கூப்பிடுற, உன் கல்யாணத்த கண்குளிரப் பார்க்கவா?” என அழுத்திக் கேட்டாள்.

சந்திரன் அதிர்வோடு அவள் கையை விட்டு விட, அது அவளுக்குக் கூடுதல் கோபத்தைக் கொடுத்தது. நெருங்கி வந்து அவன் சட்டையை பிடித்தவள்,”ஏய் இங்க பாருடா, என் கண்ண பாரு” என்றாள் உருமலுடன். 

அவன் பார்வை வேறுபுறம் திரும்பத் தன்னிலையே மறுக்கும் அளவிற்குக் கோபம் ஏறியது அவளுக்கு, அவன் கழுத்தை நெரிப்பது போல் ஒருகையால் தன்புறம் அவன் பார்வையைத் திரும்பியவள் அவன் முகம் முன்பு விரல் நீட்டியவாறு,”உனக்குக் கல்யாணம் நிச்சியமாச்சுன்னு எனக்குத் தெரியாது ஆனா உனக்குத் தெரியும் தானே? சொல்லுடா உனக்குத் தெரியும் தானே? நான் என்ன எண்ணத்துல உன் பின்னாடி வரேன்னு உனக்குத் தெரியும் தானே? சொல்லுடா, ஒருவார்த்தை சொல்லியிருந்தா நான் ஏமாந்திருக்க மாட்டேனே?” எனக் கேட்டவளின் குரலில் கோபத்தோடு ஏமாற்றத்தின் வலியும் கலந்தே இருந்தது. அதைவிட அவள் ஒற்றை பார்வை ஆயிரம் மின்னலை அவன் இதயத்தில் இறங்கியது.  

அவன் சட்டையை விடுத்துத் திரும்பி நடந்தவள் இரண்டடி சென்று மீண்டும் திரும்பி வந்தாள். தன் கைப்பையிலிருந்து அவன் அலைபேசியை எடுத்து அவன் மேலே வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நிமிர்வோடு சென்றாள். 

சொல்லுடா, சொல்லுடா என்றால் அவனும் தான் என்ன சொல்லுவான் உன் நெருக்கம் பிடித்ததால் தான் நிச்சியம் முடிந்ததைச் சொல்லவில்லை என்றா? உடைந்து கிடந்த அலைபேசியைப் போல் அவன் இதயமும் உடைந்து விட வேதனையோடு நிமிர்ந்தான்.  

அவள் செல்வதைத் தடுக்கவுமில்லை, அவளை அழைக்கவுமில்லை.

Advertisement