Advertisement

அத்தியாயம் 33

கோவிலுக்குள் நுழைந்ததும் கயல் உள்ளே பூஜைக்கும் ஸ்வேதாவை அழைக்க, “நீ போ கயல், நான் வந்ததே சுத்தி பார்க்கத் தான். பூஜைக்கு வரல” என்றாள்.

இல்ல கோவிலுக்கு வந்துட்டு எப்படி சாமி கூம்பிடாம…” என்னும் போதே,”சாமி தானே, இங்க இருக்குற சாமியை கூப்பிடுறேன்எனச் சுற்று மண்டபத்தில் இருக்கும் சன்னிதியைக் குறிப்பிட்டுக் கூறினாள் ஸ்வேதா.

இவர்கள் வருவதற்கு முன்பே அம்மனை வணங்கிவிட்டு வெளியே வந்திருந்த பூங்கோதை வெளியில் விளக்கேற்றி வணங்கிக் கொண்டிருந்தாள். கயல் அவளைக் கவனிக்காமல் உள்ளே சென்றுவிட்டாள்.

ஸ்வேதா பார்வையைச் சுழற்ற, அருகே ஒரு தாவணியணிந்த இளம் பெண் வணங்கி நிற்பதை பார்த்து அவளும் சென்று வணங்கி நின்றாள்.

விழி திறந்த பூங்கோதை எதிரே நின்றவளை பார்க்க, யாரென்று அறியாவிடினும் சிநேகமாகப் புன்னகைத்தாள் ஸ்வேதா.

நெற்றியில் சிறிது குங்குமம் இட்டு கொண்ட பூங்கோதை லேசான புன்னகையுடன் ஸ்வேதாவின் முன் கையை நீட்டினாள். ஸ்வேதாவும் துளி எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு பின்புற குளக்கரையை நோக்கி விலகிச் சென்றாள்.

சந்திரனும்,ருக்மணியும் உள்ளே நுழையும் போது, வேண்டுதல் முடித்து வெளியே வந்த பூங்கோதையை பார்த்தனர். அவளிடம் இருவார்த்தை பேசியவாறு நலம் விசாரிக்க, அவளும் மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தாள்.

இறுதியில் அவள் தனியாக வந்துள்ளதை அறிந்தவர், “சந்திரா இவள போய் அவங்க வீட்டுல விட்டுட்டு வா, அதுக்குள்ள நான் சாமி கூப்பிட்டு வரேன்என்றார்.

வேண்டாம், வீடு பக்கம் தானே நானே போகிறேன் ஆச்சி” என்க, “வா பூவு, நான் கூட்டிட்டு போறேன்எனச் சந்திரன் அழைத்தான்.

அவனை நிமிர்ந்து பார்க்கலாமே தலையாட்டிவள் அவன் பின்னே சென்றாள்.

உள்ளே சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த ருக்மணிக்கு கண்கள் இருள, தலை சுற்றியது. உடல் தளர்ந்து நடுங்குவது போன்றிருந்தது. தண்ணீர் வேண்டும் போல் இருக்க, கால்களில் பலமிழந்து மயங்கித் தடுமாறினார்.

அவர் கீழே விழவிருந்த நேரம், ஸ்வேதா நொடியில் தாங்கிப் பிடித்தாள். அருகே மண்டபத்து தூணில் சாய்ந்தவாறு தளர்வாக அமர்த்தியவள் தண்ணீர் எடுத்துவரச் சென்றாள்.

தண்ணீர் எடுத்து வந்தவள் தன் தோளில் சாய்த்தவாறு சிறிது நீரை அவருக்குப் புகட்டினாள். அதன் பின் சற்று தெம்பு பெற, மெல்ல விழி திறந்தவர், அப்போது தான் ஸ்வேதாவை பார்த்தார்.

அவளின் வெளிர் தேகமும், கனிவான முகமும், உதவும் குணமும் பார்த்தமே ருக்மணிக்கு பிடித்து விட்டது. இப்படி ஒரு பெண்ணை தானே சந்திரனுக்கு மனைவியாகக் கொண்டு வர வேண்டுமென்று நினைத்திருந்தேன் என இப்போது ஆதங்கப்பட்டர்.

ஆன்ட்டி ஆர் யூ ஓகே?” என அவர் தோள் தொட்டு தேன் குரலில் கேட்டாள் ஸ்வேதா. பாட்டி என்றில்லாது அன்ட்டி என்ற ஒற்றை வார்த்தையில் மொத்தமாக வீழ்ந்து விட்டார் ருக்மணி.

லேசாகச் சிரித்துக் கொண்டவர், “லேசா மயக்கம் வர மாதிரி இருந்துச்சு, இப்போ நல்லா இருக்கேன்மா!” என்க, அவளும் தலையாட்டினாள்.

தோற்றத்திலே அவள் இந்த ஊர் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவர், “வெளியூரா? எந்த ஊரு தங்கம் நீ?” எனக் கேட்டார்.

ஆமா ஆன்ட்டி எனக்குச் சென்னை, சம்மர் வெகேஷன்னுக்கு ப்ரண்ட் வீட்டுக்கு வந்து இருக்கேன். உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க நான் கூட்டு போறேன்என்றாள்.

அவரால் தனியாக வீட்டிற்கு செல்லயியலும் எனினும் உதவிய அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நினைத்தவர், “மேலத்தெருவுல இருக்குமா” என அவள் கைகளை பற்றிக்கொண்டு எழுந்தார்.

அவளும் ஆதரவாய் கை பிடித்துக் கொண்டு மெதுவாய் அழைத்து வர, வரும் வழியெங்கும் அவளைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டார்.

பூங்கோதையுடன் அவள் வீட்டுக்கு வந்தவன், அவளை விட்டு விட்டு வாசலிலே திரும்பினான். “மாமா உள்ள வந்து காபி சாப்பிட்டு போங்களேன்!” என மென்குரலில் பூங்கோதை அழைத்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் உள்ளே செல்ல நினைத்து,”அத்தை எங்கே?” என்றான்.

அம்மா, அப்பா ரெண்டு பேருமே வெளியே போயிருக்காங்க, நீங்க வாங்க” எனத் தலை குனித்தவாறே அழைத்தாள்.

வேலையாட்கள் இருப்பார்கள் தான் இருப்பினும் உள்ளே செல்ல மனமின்று,”ஆச்சி கோவில்ல வெயிட் பண்ணுவாங்க பூவு, நான் இன்னொரு நாள் வரேன்என்றவாறு கிளம்பிச் சென்றான். அவன் செல்வதை ஏமாற்றத்தோடு பார்த்தவள் வீட்டிற்குள் சென்றாள்.

ஜெயந்தி கர்ப்பமுற்றிருந்தாள் ஆகவே அவளைப் பார்த்துவிட்டு, சந்திரனின் திருமணத்திற்கு அழைக்க வேண்டுமென விஜயராகவனும், வசந்தாவும் ஊருக்கு சென்றிருந்தனர். சங்கரலிங்கம் அருகே இருக்கும் ஊரில் உறவினரின் வீட்டு விசேஷத்துக்கு சென்றிருந்தார்.

தெருவிற்குள் வரும் போதே, இந்த தெருவுல யார் வீடா இருக்கும் என யோசித்த ஸ்வேதா, சந்திரனின் வீட்டிற்குள் அழைத்துச் செல்லவும் அதிர்ச்சியினால். ஐயோ இது நம்ம மல்லுவேட்டி மாமனோட வீடாச்சே! பார்த்த முதல் நாளே இந்த பாட்டி வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துருச்சு.

அவன் பின்னாடி சுத்துனதுக்கு பதிலா இந்த பாட்டி பின்னாடி சுத்தியிருந்தா இந்த நேரம் இந்த வீட்டுக்கே மருமகளாகியிருக்கலாம் போல! என மனதுக்குள் நினைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

அவளை ஹாலில் அமர வந்து, வேலையாளிடம் காபி கொண்டு வரும் படி கட்டளையிட்டார் ருக்மணி. அவள் அருகே அமர்ந்தவர், “என் மகனும், மருமக வசந்தாவும் என் பேத்தியைப் பார்க்க ஊருக்குப் போய் இருக்காங்கம்மா!” என்க, “சரி ஆச்சி…”என்றாள்.

அவள் அழைக்கும் விதம் மாறியிருந்ததைக் கண்டுகொண்டாலும் எதுவும் சொல்லாது,”என் பேத்திக்கு இது மூணாவது மாசம் அதான் பார்க்க போயிருக்காங்க!” என மகிழ்ச்சியோடு கூறியவர் மேலும், தன் பேரனின் அருமை,பெருமைகள் மற்றும் தன் குடும்ப கதைகளையும் கூறினார்.

ஹாலில் அங்காங்கு மாட்டப்பட்டிருந்த சந்திரன், அவன் குடும்ப புகைப்படம், ஜெயந்தியின் புகைப்படங்களைப் பார்த்து ரசித்தவாறு அனைத்து கதைகளையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.

தன் அறைக்குச் சென்று மாத்திரை போட்டுவருவதாக ருக்மணி எழுந்து செல்ல, வேலையாள் வந்து காபியை நீட்டினார். அதை எடுத்துக் கொண்டவள் செய்தித்தாளை எடுக்கக் குனிந்த போது அதன் அடியில் பளபளக்கும் காகிதத்தில் ஜெயசந்திரனின் முகம் மின்னியது.

உற்சாகம் பொங்க, மெல்லிய புன்னகையுடன் செய்தித்தாளின் அடியிலிருந்து முழுவதும் இழுத்துப் பார்த்தவளின் மறுகையிலிருந்த காபி கோப்பை நழுவி தரையில் விழுந்து சிதறியது. சூடான காபி சிறிது காலில் தெரித்ததை கூட அவளால் உணர முடியவில்லை.

ஜெயசந்திரனுக்கு நேர் எதிராய் பூங்கோதையின் புகைப்படமும், திருமண அழைப்பிதழ் என்று அச்சிட்டு மணநாளும் குறிப்பிடப்பட்டு இருந்தது. கையிலிருந்து காபிக்கோப்பை கீழே விழுந்து நொறுக்கும் முன்னரே அவள் இதயம் துண்டு துண்டாக நொறுங்கியிருந்தது. 

ஜெய்க்கு திருமணமா? என் ஜெய்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணமா? இது உண்மையல்ல, உண்மையல்ல. உண்மை என மனம் ஏற்க மறுத்தது.

அந்த சிறு காகிதமும் இரும்பாய் கணத்தது. பற்றிருந்த கைகள் தீ பட்டது போல் சுட்டுவிடப் பட்டென அழைப்பிதழை கீழே போட்டுவிட்டாள்.

மறுநொடி அச்சோ என் ஜெய்க்கு வலிக்குமே பதறி எடுத்தவள் அவன் மேலிருந்த காபிக்கரைகளை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு நெஞ்சோடு அணைத்தாள்.

நிமிர்த்திப் பார்த்தவளின் பார்வைக்கு எரிக்கும் சக்தி இருந்திருந்தால் பூங்கோதையை உயிருடனே எரித்திருப்பாள்.

அனைத்தையும் தூக்கியெறிந்து கத்திக் கதற வேண்டும் போலிருந்தது. அவள் வீடாக இருந்திருந்தால் செய்திருப்பாள். தன்னோடு சேர்ந்து இந்த உலகமும் இந்த நொடி அழித்துவிடக் கூடாதா எண்ணம் எங்கெங்கோ சென்றது மூளையோ இங்கிருந்து ஓடு என கட்டளையிட்டது.

ஏமாற்றத்தின் வலி, உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் கோபம், தன் காதல் உடைந்த வேதனை, என்றும் கிடைக்காத அன்பிற்கான ஏக்கம், இலக்கில்லா வாழ்வில் வெறுமை, இன்னுமேன் இந்த வாழ்வு என்ற தன்னிரக்கம் எனப் பல உணர்வுகள் அழைப்பிதழைப் பார்த்த நொடி பொங்கியெழுந்து உடலின் உணர்வுகளை மறக்கச் செய்ததால் அவள் கால்கள் நகர மறுத்தன. அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீரும் வழிந்து கொண்டிருந்தது.

என்னம்மா என்னாச்சு?” உள்ளறையிலிருந்து ருக்மணி கேட்க, அவளால் வாய் திறக்கவே இயலவில்லை. வாய் திறந்தால் அடக்கிய உணர்வுகள் அழுகையாகத் தான் வெளிவரும்.

எதுவும் பேசாது வெளியேறினாள். முன்வாசலில் இருந்து எதிர்வீட்டை நோக்கி ஓட, எதிரே சந்திரன் வர அவன் நெஞ்சில் மோதி கீழே விழுந்தாள். எப்போதும் தாங்கும் அவன் கரங்கள் இன்று தாங்க தவறியிருந்தன.

லூசாடி நீ, எதுக்கு இப்படி ஓடி வர? அடி பட்டுரிச்சுன்னா!” என்றவாறு குனிந்து கரம் பற்றி எழுப்ப முயன்றான்.

அதான் மனசுலையே அடிச்சிட்டையே அதை விடவா இது பெரிய வலி, என நினைத்தவள் அவன் தூக்கும் முன் எழுந்தாள். அவன் நெருங்கி வர, அதற்குள் அவன் முகம் பார்க்காமலே ஓடிவிட்டாள்.

நம்ம அன்னக்கிளி எதுக்கு வந்துச்சி? ஏன் வந்துச்சி? எப்போ வந்துச்சி? எதுவும் பேசாமல் போராளே? அழற மாதிரி தெரியுதே! என்னவா இருக்கும் யோசித்தவாறு உள்ளே சென்றான்.

வேலையாள் ஹாலில் துடைத்துக் கொண்டிருக்க, ருக்மணியின் அறைக்குள் சென்றவன், “ஆச்சி அந்த புள்ள எதுக்கு இங்க வந்துட்டு போகுது?” என்றான்.

ஸ்வேதா வந்ததன் காரணத்தைச் சொன்னவர், “ரொம்ப நல்ல பொண்ணா இருக்காடா! அப்படியே வெள்ள வெள்ளெர்ன்னு கற்கண்டாட்டம் இருக்காடா!” என அவள் அழகின் பிரமிப்பில் கூறினார்.

தலையாட்டியவாறு எழுந்து சென்றவன் மனதிற்குள், ஆச்சி என்னடா நம்ம ஊரு புள்ளைகளை கருப்பட்டின்னு சொன்னுச்சி, பூவ வெல்லக்கட்டின்னு சொன்னுச்சி, இப்போ இவளா கற்கண்டுன்னு சொல்லுது! ம்ம், ஆச்சி சொல்லாட்டாலும் அவ ஸ்வீட் தான்! ஸ்வேதா, என எண்ணிச் சென்றான்.

அறைக்குள் வந்து அடைந்து கொண்ட ஸ்வேதாவிற்கு வாழ்வே இருண்டது போன்றிருந்தது. கட்டிலில் விழிந்தவள் கதறி அழுதாள் வேதனையைக் குறைக்கும் வலி அது ஒன்றே! ஆறுதல் சொல்லக் கூட யாருமில்லையே.

அன்னையின் அன்பின்றி, தந்தையின் கவனிப்பின்றி, தோழமைகளையும் ஒரு எல்லைக்குள் தள்ளி வைத்து தனிமையில் வாழ்ந்த போதும் இவ்வளவு தவித்ததில்லை.

வேறொருத்திக்கு உரிமையானவனைத் தான் நான் பார்த்தேனா? அத்தனை கீழ் தனமான குணமா என்னிடம்? வேறொருத்திக்குச் சொந்தமானவனையா ரசித்தேன்? அவன் மேலா நான் ஆசை கொண்டேன்? ச்சே! என்ன பிறவி நான்? எனத் தன்னையே அறுவறுப்போடு வெறுத்தாள்.

எத்தனை எத்தனை கனவுகள் அவனோடு, அவனால் கிடைக்கவிருக்கும் உறவுகள் எத்தனை, அத்தனையும் ஏமாற்றம். என் ஊரிலும், உறவிலும், கல்லூரியிலும் நான் காணாத ஆண் நண்பர்களா? இதில் என்னிடம் காதலைச் சொல்லியது எத்தனை பேர். ஆனால் ஜெய்யிடம் தோன்றியதை போன்ற ஈர்ப்பு முன் எப்போதும் உணர்ந்ததில்லையே, அவன் தீண்டலில் உருகினேனே, அவன் காதலுக்கு ஏங்கினேனே!

ஆனால் அவனோ முதல் பார்வையிலே என்னை எரிந்து விட்டேனே! ஒவ்வொரு முறை நெருங்கும் போதும் விலகியதை அன்புவின் மீது இருக்கும் வெறுப்பு என்று தானே எண்ணினேன் இப்போது தான் தெரிகிறது அது என் மீதான வெறுப்பு என்று. என்னை வெறுப்பவனிடமா அன்பை யாசித்து நின்றிருந்தேன்?

எண்ணம் எங்கும் சுழலிற்குள் மாட்டிக் கொண்டதை போன்று அவனை சுற்றிச்சுற்றி வந்தது. ஓயாது ஓய்வின்றி அழுது ஓய்ந்தாள்.

மனதின் பாரம் சிறிதேனும் கண்ணீரோடு கரைந்து ஓடியிருக்க, மெல்ல உறங்க முயன்றால் முடியவில்லை. சூடான காபி கொட்டியதில் உண்டான தீக்காயம் தற்போது தீயாய் எறிவது போலிருந்தது. ஜெய்யின் மீது மோதி விழுந்ததில் இடதுகை முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்க, அதுவும் இப்போது வலிப்பது போன்றிருந்தது.

மனவேதனையுடன் உடல் வேதனையும் சேர்ந்து கொள்ள, உறக்கமின்றி தவித்தவள் உறங்குவதற்கு இரண்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு உறங்கினாள். 

ஸ்வேதாவை காணாது வீட்டிற்கு வந்த கயல் வேலையாளிடம், பேச்சியக்கா, ஸ்வேதா வீட்டிக்கு வந்துட்டாங்களா?” என்றாள்.

அவள் வந்ததைக் கவனிக்காதவர், இல்லையே கயலு” என்றார். 

எங்க போயிருப்பாங்களோ?” என்ற கயலின் புலம்பல் அவர் காதில் விழுந்து விட,”எங்க போயிருக்கும், நம்ம தம்பி கூடதான் இருக்கும்” என்றார்.

அவர் குரல் தொனியிலிருந்த வேறுபாட்டை கவனித்துக்கு கொண்ட கயல் சற்றே முறைப்புடன், பேச்சியக்கா வேலையை மட்டும் பாருங்க” எனக் கண்டிக்கும் குரலில் அழுத்திக் கூறிவிட்டு உள்ளே சென்றாள். 

அந்த ஒற்றை இரவிலே தன் காதலைக் கண்ணீரில் கரைத்திருந்த ஸ்வேதா அதன் பின் ஜெய்சந்திரனை திரும்பியும் பார்க்கவில்லை. வழியில் பார்த்தாலும் முகம் பார்க்காமல் வலியோடு விலகிச் செல்வாள். அவன் நிழல் கூட உரசிவிடாத அளவிற்குத் தன்மானத்துடன் விலகிச் சென்றாள். 

ஜெயச்சந்திரனுக்கு அவள் விலகுகிறாள் எனப் புரிந்தும் அதற்கான காரணம் புரியவில்லை. ஆனால் அவள் விலகல் இனம் புரியாத வேதனையொன்றைத் தந்தது. நெஞ்சுக்குள் நெருஞ்சி முள் குத்தியது போன்ற சிறுவலி இருந்து கொண்டேயிருந்தது.

Advertisement