Advertisement

அத்தியாயம் 32

வர தாமதமாகும் என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே சொல்லிவிடுவான். அவசர வேலை என்றால் தகவலாவது சொல்லி விடுவான். ஸ்வேதாவும் எதுவும் சொல்லவில்லை, என்றும் இப்படி நடந்து கொண்டதுமில்லை.

விடிவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. சிவகாமி பூஜை அறைக்குள் வேண்டுதலில் அமர்ந்து விட்டார். கயல் வெளிவாசல் திண்ணையில் இரும்புக்கேட்டை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். 

சரவணனிடமிருந்தும் எந்த தகவலும் இன்னும் வரவில்லை. ஒரு கையில் மொபைலும் மறுகையை நெஞ்சிலும் வைத்தவாறு விடியல் குளிர் பனிக்காற்றையும் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். விடிந்ததும் தந்தையை அழைத்து கொண்டு டவுனுக்கு சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்ற முடிவிலிருந்தாள்.

அவள் சிந்தனையைக் கலைத்தவாறு அலைபேசி அழைக்கச் சரவணனிடமிருந்து வந்த அழைப்பு என நொடியில் எடுத்தாள். அவனோ விடிந்ததும் அன்புவை அழைத்து வருவதாகக் கூற, அன்புவிற்கு என்ன என்று விசாரித்தால் நலமுடன் இருப்பதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தான்.  

அந்த ஒற்றை வார்த்தையே அவளுக்கு நிம்மதியைத் தர, நிம்மதி மூச்சுவிட்டவள் எழுந்து சிவகாமியிடம் தகவலை சொல்ல சென்றாள்.

இரவெல்லாம் ஸ்வேதாவை பற்றிய சிந்தனையில் உழன்று, விடியலில் அவளோடு இனிய கனவிற்குள் சென்று சற்றே உறங்கியிருந்தான் சந்திரன். எப்போதும் அன்னையின் கத்தல், ஆச்சியின் கொஞ்சல் அல்லது செல்வாவின் அழைப்பில் விழித்திருக்கும் சந்திரன் அன்றைய நாள் எதிர்வீட்டில் கேட்ட சிவகாமியின் அழுகுரலில் விழி திறந்தான்.

காலை ஏழு மணியளவில் கார் வரும் ஓசை கேட்டு வாசலுக்கு ஓடிவந்தாள் கயல். ஒரு கையில் கட்டுடனும், நெற்றியில் இரத்தம் உறைந்த காயம், கன்னங்களில் சிராய்ப்பு, வலதுகாலை சற்று இழுத்தவாறு சரவணனைப் பிடித்துக் கொண்டு வந்தான் அன்பு.

கயல் ஓடி வந்து அன்புவை தாங்கி அழைத்து வந்து அமர வைத்தாள். அதற்குள்ளாகவே பூஜையறையிலிருந்து ஓடி வந்த சிவகாமி, “அன்பு என் ராசாஆஆஆ…” எனக் கத்தியவாறு வந்தார். அவன் நெற்றியில் திருநீறு பூசியவர், “என் கண்ணு என்னையாச்சியா?”என்றவர் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டார்.

பெருங்குரலெடுத்து அழத் தொடங்கி விட, அவர் குரல் பெரிய வீட்டைத் தாண்டி அந்த தெருவெங்கும் ஒலித்தது. அதே நேரம் வேலையாட்கள், அந்த தெருவிலிருந்த சில உறவுகள் மேலும் கயலின் பெற்றோரும் என அனைவரும் வந்து அன்புவை சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.

அதில் மொத்த தூக்கமும் கலைந்து அறையிலிருந்து எழுந்து முன்வாசல் முற்றத்துக்கு வந்த சந்திரன், எதிரி வீட்டில் கூட்டமும், அழுகுரலுமாக இருக்க என்னவோ என்று குழம்பினான்.

வசந்தா வந்து காபியைத் தர, “என்னவாம் அந்த கிழவி காலையிலே ஒப்பாரி பாடுது? என்னாச்சிம்மா?” என்றவாறு காபியை வாங்கிக் கொண்டான்.

அந்த புள்ள அன்புவுக்கு ஆக்சிடன்ட் போல! கொஞ்சம் அடி பட்டு வந்திருக்கானாம்” என்க, “போதையில வண்டியை எதுலையாவது விட்டு இருப்பான்” என நக்கலாகக் கூறியவன் காபியைப் பருகினான். அன்புவை பற்றிய குறைவான சிந்தனையால் தன் தோழன் செல்வாவை பற்றி சிந்திக்கவுமில்லை.

அனைவருக்கும் பதில் சொல்ல முடியாது திணறினான் அன்பு. முதலில் ஆச்சியின் அழுகையை நிறுத்தியவனை நோக்கி, “எப்படி மாப்பிள்ளை இப்படியாச்சு?” என வேல்முருகனும், “ஆஸ்பித்திரியில என்ன சொன்னாக? சின்ன அடி மட்டும் தானே உள் காயம் ஏதும் இல்லையே மாப்பிள்ளை?” எனக் கற்பகமும் விசாரித்தார்.

ஒத்தையடி பாதை திருப்பத்துல வண்டி லேசா தடுமாறி, பள்ளதுல உருண்டு விழுந்துட்டேன் அவ்வளவு தான் மாமா” என்க, சமையலறையில் நோக்கி நடந்து கொண்டிருந்த கயல், அசாத்தியமான பாதையிலும் தடுமாறாமல் பைக்கோட்டுபவன் திருப்பத்தில் தடுமாறினானம் என்ன அழகாய் பொய்யுரைக்கிறான் என்றெண்ணினாள். திருவிழாவின் கடைசி நாள் அவன் மேல் கொலை முயற்சி நடந்தது அவள் அறிந்தது தானே! 

அன்புவின் குரலில் வலிமை குறைந்திருந்தது. வலி படர்ந்து வாடிய அவன் முகத்தை நினைக்கையிலே கயலின் கண்கள் கலங்கிவிட்டது. அடிபடும் போது எவ்வளவு வலிகளைத் தாங்கி இருப்பான் நினைக்கும் போது நெஞ்சம் பதறியது. சமையலறைக்குள் மௌனமாய் சில துளி கண்ணீர் வடித்துக் கொண்டவள் பாலை சூடுபடுத்தி எடுத்துக் கொண்டு வந்தாள். 

அவனிடம் கொடுத்து, பருகியதும் அவனை அறைக்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் செல்ல சரவணனை பிடித்துக் கொண்டு கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கினார் சிவகாமி. 

அன்புவின் அருகே வந்து நின்றவள் வலது கையிலிருந்த கட்டை மிக மெல்லியதாய் வருடியவாறு, “ரொம்ப காயமா? ரொம்ப வலிக்குதா மாமா?” எனக் கேட்டவளின் குரலில் வலிக்குக் குறைவில்லை. கண்கள் கலங்கி நின்றாள்.

மறுகையால் அவள் இடையை அருகே இழுத்து இடது தோளோடு அணைத்து ஒற்றைக் கையால் தூக்கினான். அவளோ காயத்தில் இடித்து விடுவோமோ என பயந்து இறங்கி விலகி நின்றாள்.

மறுநொடி அவள் பின்னக்கழுத்தில் கைவைத்து அவள் முகத்தை அருகே இழுத்தவன், இதழோடு இதழ் பூட்டி கீழுதட்டைச் சுவைத்து, அவள் உதட்டின் வழி உயிரையே உறிஞ்சினான்.

அவள் சுவாசத்திற்குத் திணறித் திண்டாடிய பின் மெல்ல இதழ் பிரித்து தன் இடது தோளில் சாய்த்துக் கொண்டு, “இப்போ தெரியுதாடி நான் நல்லா தான் இருக்கேன்னு!” என்றவாறு புன்னகைத்து அவள் இடையில் கிள்ளினான்.

அடிவயிறே நெறியும் படியான அவன் அணைப்பின் அழுத்தம் அவள் மட்டுமே அறிந்ததல்லவா, “வர வர ரொம்ப பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க மாமா” என்றவள் மெல்ல அவன் கைகளைத் தூக்கி சட்டையை விலக்கிப் படுக்க வைத்தாள்.

அவளின் பதட்டத்தையும், கவலையும் அவனும் உணர்ந்திருந்தான். கயலின் சிவந்த கண்கள் உணர்ந்தியிருந்தது.

ரொம்ப அடிய இருந்தா ஹாஸ்பிட்டல்ல இருந்து அனுப்பி இருக்க மாட்டாங்களே செல்லம்மா!” என்க, யாருக்குத் தெரியும் நீங்க எழுந்து கூட ஓடி வந்திருக்கலாம் என எண்ணியவள் வலது கையடியில் ஒரு தலையணையை வைத்து விட்டு விலகினாள்.

வாசல் வரை சென்றவளிடம், “செல்லம்மா, ஸ்வேதா எங்க?” என்றான். 

அப்போது தான் அவளுக்கும் நினைவு வர, “உங்க கூடத் தானே டவுனுக்கு வந்தாங்க?” என்றாள். 

எங்கூட வந்தா தான், ஆனா அங்க இருந்து சீக்கிரம் கிளம்பிட்டா. நம்ம ஊரு கடைசி பஸ்க்கு வந்து இருப்பான்னு நினைச்சேன்” என்றான்.

கயல் பதட்டமடைவதை பார்த்தவன், “ஒன்னுமில்லம்மா இங்க தான் எங்கையாவது இருப்பா, சொல்லாமா போறததே அவளுக்கு வேலையா போச்சு. சரவணன் அண்ணானை என்னனு பார்க்க சொல்லு, அவள் வந்தா என்ன எழுப்பிவிடு” என்று சரிந்து படுத்துக் கொண்டு விழி மூடினான். கயலும் சரவணனிடம் சொல்லியனுப்பினாள். 

நேற்று மாலை ஸ்வேதாவுடன் டவுனுக்கு சென்றவன் அவளை இறங்கி விட, “இந்த கேமராவை கொஞ்சம் சர்வீஸ் பண்ணி வாங்கணும் அவ்வளவு தான். நீ வர லேட்டாகுமா?” என்றாள். 

ம்ம், ஆடிட்டரை பார்க்க போகணும், தேங்கா லோடு அனுப்புனதுக்கு பாக்கி கலெக்ஷன் பண்ண போகணும், உரக்கடைக்கு போகணும். லேட்டாகுமே, நான் சரவணன் அண்ணனை வரச் சொல்லுறேன் ஸ்வேதா” என்க, மறுத்தவள் அவருக்கு அலைச்சல் வேண்டாம் நான் பேருந்தில் சென்று விடுவதாக கூறினாள். 

அவனும் சரி என்று சென்று ஆடிட்டரை பார்த்து விட்டு வர, வழியில் உறவினர் ஒருவரைப் பார்த்தான். அவரோடு பேசியவாறு ஹோட்டலில் இரவு உணவையும் முடிந்து விட்டு, மற்ற வேலைகளையும் முடித்தான். அதிலே இரவு மணி பத்து முப்பதுக்கும் மேல் ஆகியிருப்பித்தது. 

வேகமுடன் ஊருக்குத் திரும்பியவன், அடர் காட்டு வழிப் பாதையில் இருளில் அவன் மட்டுமே வந்து கொண்டிருந்தான். ஊர் எல்லைக்கு முன் சற்று தூரம் ஒற்றையடி பாதையின் திருப்பத்திற்கு அருகே வரும் போது அதே வழியாக ஒரு லாரியும் எதிரே வந்தது.

அந்த திருப்பத்தில் திடீரென கண்கூசும் படியான ஒளியுடன் வாகனம் வரும் என எதிர்பாராதவன் தடுமாறினாலும் சுதாரித்து வழிவிட்டு இடது புறமாகச் சென்றான். குறுகலான மலைப் பாதையில் வலது புறமாக வந்த லாரி இடது புறம் திடீரென திரும்பி அன்புவின் பைக்கில் வேகமுடன் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

பைக்கோடு பள்ளத்தில் விழுத்தவன் தடுப்பில்லாமல் உருண்டு ஒரு மரத்தில் மோதி சரிந்தான். இதில் கூர்மையான மரக்கிளை ஒன்று வலது கை முட்டியிலிருந்து உள்ளங்கை வரை ஆழமாகக் கீறி விட நிற்காமல் இரத்தம் வந்தது.

எழ முயன்றவனால் முடியாமல் போக அப்போது தான் காலில் அடிபட்டுள்ளது என்பதை உணர்ந்தான். காயம் அதிகமா எனத் தெரியவில்லை ஆனால் கை, கால்கள் என உடலெங்கும் அதிக வலியை உணர்ந்தான். மெல்ல அரை மயக்க நிலைக்குச் சென்றான்.

அடிபட்ட கொஞ்ச நேரத்தில் சரவணன் அன்புவை தேடி வந்துவிட்டான். செல்லும் வழியெங்கும் அவனைத் தேடியவாறு சென்றவன் ஒரு இடத்தில் இருளுக்குள் மெல்லிய மஞ்சள் ஒளிகண்டு சென்று பார்த்தான். அன்புவின் பைக் கண்டு சுற்றிலும் அவனைத் தேடியவன் பள்ளத்துப் புதரில் அடிபட்டுக் கிடந்த அன்புவை கண்டு கொண்டான்.

அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றவன் சிகிச்சைக்கு அனுமதித்தான். கயலுக்குத் தகவல் சொல்லியவன், சிகிச்சை பின் வீட்டிற்கு அழைத்து வந்தான். 

வலியாலும், மருந்தாலும் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான் அன்பு. சில மணி நேரத்திலே ஸ்வேதா வந்து விட்டாள். கயல் விசாரிக்க, “தோப்பு வீட்டில இருந்தேன் கயல். அன்புவுக்கு அடிப்பட்டுராச்சாமே! சரவணன் அண்ணா சொன்னாங்க, இப்போ இப்படி இருக்கான்?” எனக் கேட்டவாறு அவன் அறைக்குள்ச் சென்று பார்த்தாள்.

அவன் உறங்குவதைப் பார்த்தவள் கயலிடம் விசாரித்து விட்டு சென்றாள். ஸ்வேதாவை குளித்து வருமாறு அனுப்பிய கயல் அவளுக்கு உணவு எடுத்து வைக்க சென்றாள். 

கயல் அன்புவை கண்ணாய் கவனித்துக் கொள்ள விரைவில் தேறினான். அவனுக்கு உணவுட்டுவது, உடைமாற்ற உதவுவது என அனைத்தையும் அவள் தான் செய்தாள். அவன் ஒவ்வொரு அசைவிலும் உடன் இருந்து பார்த்துக் கொண்டாள். மருந்தூட்டுவது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என உடனிருந்து கவனித்தாள். பள்ளிக்குக் கூட செல்லவில்லை முக்கியமான விஷயம் எனில் தலைமையாசிரியரை வீட்டிற்கு வரச் சொன்னாள்.

கண்மாயின் ஆழம், அகலம் அளந்து தூர்வாருவதற்கான ஏற்பாட்டைத் தொடங்கிருந்தாள் ஸ்வேதா. அன்புவின் தொழில்களையும் சரவணனுடன் இணைந்து கவனித்துக் கொண்டாள்.

வெளி இடங்களில் சந்திரனைப் பார்க்கும் போதெல்லாம், ஓரக்கண்ணில் பார்த்தவாறு விலகிச் சென்றாள். தோப்பு, வயலில் பார்த்தாலும் அவளே வழியச் சென்று வம்பு பேசினாள். அவன் தந்த காயங்களை எல்லாம் மறந்திருந்தவள், ஜெய் ஜெய் என்றவாறு அவனையே சுற்றியவள் ஏனோ அவன் அலைபேசியை மட்டும் அவனிடம் தரவேயில்லை. 

எலும்பு முறிவு இல்லாததால், கயலின் கனிவான கவனிப்பில் முற்றிலுமாக பத்தே நாட்களில் குணமாகியிருந்தான் அன்பு. மீண்டும் அவன் தொழிலைக் கவனிக்கத் தொடங்கி இருந்தான். கயலும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள். 

ஜெயச்சந்திரன், பூங்கோதையின் திருமண ஏற்பாடுகளும் இருவீட்டிலும் வெகு விரைவாகவும், விமர்சையாகவும் நடந்து கொண்டிருந்தது.

பூங்கோதையின் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்தனர். ஊர் நடுவே இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி வணங்கி வருமாறு சொல்லி இருந்தார் ரெங்கநாயகி. பூங்கோதையும் கோவிலுக்கு கிளம்பிச் சென்றாள். 

கடந்த வாரம் வெள்ளி அன்று மூட்டு வலி என்று கோவிலுக்குச் செல்லாததால், இன்று செல்வோம் என ருக்மணியும் கோவிலுக்குக் கிளம்பினார். அவர் வெளியே வரச் சந்திரன் அப்போது தான் உள்ளே வந்தான். ஆச்சி முடியாமல் தனியா செல்வதாக எண்ணி வழியச் சென்று அவரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினான். 

 கயலுக்கு அன்று கோவிலில் பூஜை இருந்ததால் பள்ளியிலிருந்து விரைவாக வந்து கோவிலுக்குக் கிளம்பினாள். அன்பு குணமடைந்ததற்காக அல்ல, அடுத்ததாக ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் வேண்டுதல். அவள் கிளம்பும் நேரம் கவனித்துக் கொண்ட ஸ்வேதா தானும் உடன் வருவதாக சொல்லிக் கொண்டு கயலுடன் கிளம்பினாள்.

Advertisement