Advertisement

அத்தியாயம் 31

ஸ்வேதா சந்திரனுடன் வந்து இறங்கியதையும், பேசிச் செல்வதையும் தெருவிற்குள் நுழையும் போதே இராஜமாணிக்கம் பார்த்தார் ஆனால் எதையும் வெளிக்காட்டவில்லை. பெரியவர்களிடம் பேசியவர் அழைப்பிதழில் யார் யார் பெயர்கள் அச்சிடவேண்டும் எனக் கேட்டு விட்டு, சந்திரனிடமும் பேசி விட்டுச் சென்றார். 

சந்திரனுக்கு வந்த அழைப்புகளை அவன் ஏற்காததால் அடுத்ததாக அனைவரும் செல்வாவை தான் அழைத்திருந்தனர்.

அவர் செல்லும் வரை அமைதியாக இருந்த செல்வா அவர் சென்ற பின், “எங்கடா உன் போன்? வரிசையா எல்லா பயலும் எனக்குக் கால் பண்ணுறான்” என எரிச்சலுடன் கேட்க ,”அதுஅது உடைஞ்சிருச்சி, குனியும் போது பாக்கட்ல இருந்து கீழ விழுந்துருச்சி, யார் பேசுனாலும் நீயே சமாளி” என்றான்.

சரி கொடு, நான் டவுனுக்கு போகிறேன் சரி பண்ணி வாங்கிட்டு வரேன்” என்க, “இல்ல வேண்டாம் நானே பார்த்துக்கிறேன். புது மொபைல் தான் வாங்கணும்” என்றவன் மனதிற்குள் ஸ்வேதா என்ற இம்சையிடமிருந்து விரைவில் தப்பிக்க வேண்டுமென்று எண்ணினான். 

செல்வாவும் அதற்கும் மேல் எதுவும் கேட்காது,” சரிடா பார்த்துக்கோ, நம்ம கண்மாய் தூர்வார ஏலத்துக்கு வருது, அதைச் சொல்லத் தான் வந்தேன்” என்க, “என்னைக்குடா?” என்றான் சற்றே யோசனையுடன். 

மூணு நாள்லடா, அதைப் பத்தி எதுவும் சொல்லாம போறாரே உன் மாமனார்” என்க, கிண்டலோ என்பது போல் ஒரு பார்வை பார்த்தவன் செல்வாவின் முதுகில் தட்டிவிட்டு சென்றான்.

கயலுக்குப் பள்ளியில் வேலைகள் சரியாக இருந்தது. விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கப் பட்டது. தேவையான வசதிகள் என்னவென்று அறிந்து அதைச் செய்து கொடுத்தல், புதிய ஆசிரியருக்கு அறிவுரை, மாணவர் சேர்க்கையைக் கண்காணித்தல் எனக் கயலுக்கு வேலை அதிகமாகத் தான் இருந்தது. 

முதலில் திணறியவள் இரண்டே வாரத்தில் புரிந்து கொண்டு நிர்வாகத்தைச் சரியாகக் கவனித்தாள். அன்புவே அசந்து விடும் படி தான் இருந்தது அவள் செயல்கள். 

ஸ்வேதாவும் நேரம் போகவென அவளோடு மாலை சிறிது நேரம் பள்ளியில் கழித்தாள். மாணவர்களுக்கு மாலை யோகாவிற்கான சிறப்பு வகுப்புகள் அவளே எடுத்தாள்.

வீடு அருகில் என்பதால் மாலை வேலை இருவரும் பேசியவாறு நடந்து சென்றனர். சிறுவர்களும் உற்சாகமுடன் விளையாடியவாறு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் முன்னே செல்பவனை, “டேய் ஜெய்சங்கரு நில்லுடா” எனக் கத்தியவாறு ஓடினான். 

ஸ்வேதாவிற்கு ஜெய் என்ற பெயரில் நொடியில் முதலில் பார்த்த சந்திரனின் கோபமுகம் நினைவில் வந்தது. மெதுவாகக் கயலிடம், “கயல் எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு, ஆரோக்கிய மில்க் ஆட்ல வர மாதிரி தூய காத்து, பசுமையான சூழல், நல்லா இருக்கு” என்றாள். 

கயல் லேசாகச் சிரித்தவாறு, “அப்போ இந்த ஊருளையே உங்களுக்கு மாப்பிள்ளை பார்க்க மாமா கிட்ட சொல்லுறேன்!” என்றாள். 

ம்ம், சொல்லு சொல்லு, உங்க மாமாவை மாதிரியே பார்க்க சொல்லு!” எனக் கூறியவளுக்கும் கேட்டவளுக்குமென இருவரின் சிந்தனையிலும் சந்திரன் தான் வந்தான். 

மாமாவ மாதிரினா ஜெயச்சந்திரன் மாமா தான் இருக்காங்க, ஆனால் அவங்களுக்கு தான் நிச்சியம் பண்ணிட்டாங்களே என்று நினைத்த கயல் வெளியே சொல்லாமல், அமைதியாகி விட,”ஏன் கயல் உனக்குப் பிறந்த ஊரும் இதுதானே அப்போ உனக்கு சொந்தக்காரங்க இருப்பாங்க தானே?” என்றாள். 

இருக்காங்களே, நம்ம எதிர் வீட்டுல இருக்குறவுங்க எனக்குச் சொந்தம். எங்க அத்தை, அவங்க குடும்பம் தான் அது” என்றாள். 

கவனித்தவரை இரு குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லையே என எண்ணிய ஸ்வேதா, “அப்போ நீ ஏன் அந்த வீட்டுக்குப் போக மாட்டிக்க?”என்றாள். 

அது அவங்களுக்கும் அன்பு மாமாவுக்கும் ஆகாது” என்றவள் இரு குடும்பத்துக்கான உறவுமுறை பற்றியும் பகை பற்றியும் கவலையுடன் கூறினாள். 

கவலைப் படாதே கயல், சீக்கிரம் பிரச்சனை சரி பண்ணிடலாம்” என்றவள் மனதிற்குள் வேறொன்றை எண்ணினாள். கயலோ தன் மன ஆறுதலுக்காகக் கூறுவதாக எண்ணிணாள். 

ஏலத்திற்குச் சந்திரன், செல்வாவுடன் இம்முறை விஜயராகவனும் வந்திருந்தார். இம்முறை அன்பு வருவான் என அவர்கள் எதிர்பார்க்காமல் இருக்க, அன்புவும் ஸ்வேதாவும் வந்திருந்தனர். 

இருவருக்குள்ளும் கடுமையான போட்டியுடன் ஏலம் செல்ல இறுதியில் பெரும் தொகையிலிருந்து மிகவும் குறைந்து வந்து நின்றது, அவனுடன் போட்டியிட்டு பெரும் நஷ்டத்துக்குச் செல்ல வேண்டாமென்று நினைத்து அன்பு விலகப் பார்க்க, ஸ்வேதா விடுவதாய் இல்லை.

சந்திரனும் விடாது தொகையை இறங்கச் செய்ய, இறுதியில் விஜயராகவன் தடுக்க, அன்பு கண்மாயை ஏலத்தில் பெற்றான். 

சந்திரன் கோபமுடன் எழுந்து அன்புவையும், ஸ்வேதாவையும் ஒரு கோபப்பார்வை பார்த்தவாறு செல்ல, அவன் கோபப் பார்வைக்கு எதிராக அலட்சிய பார்வை பார்த்தான் அன்பு. அந்த பார்வை அவன் தந்தையின் பார்வை போல் இருக்க, லேசாகத் தடுமாறினான் சந்திரன். 

கோபத்தை நேராகத் தந்தையிடம் காட்ட இயலாது வருத்தத்தை வெளிக்காட்ட, “விடுடா இதுல நமக்கு லாபமே இல்ல. அவ்வளவு கொறஞ்ச தொகைக்கு எல்லாம் தூர்வார முடியாது, தூர்வார அதைவிடச் செலவு அதிகமாகும். அப்பறம் எதுக்கு கண்மாயை எடுத்துத் தூர்வாரி பொதுச் சேவை செஞ்சிக்கிட்டு, போய் இருக்குற வேலையை பாருங்கடா” என்றார். அவர் வயதுக்கான பக்குவத்துடன் நடந்து கொண்டார்.

ஆனால் ஜெயசந்திரனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனோ மீண்டும் மீண்டும் அன்புவின் முன் தோற்பது போன்றெண்ணி துடித்தான். தன்னையே மறக்கும் அளவிற்கு அன்புவின் மேல் கோபம் வர, வழக்கத்தை விட அதிகமாகவே கோபத்தில் கத்தி, தன்னையே காயப் படுத்தி, இறுதியில் தோற்றதாக வேதனையில் புலம்பினான். 

அதைவிட அடிமனதில் ஸ்வேதாவின் மீதும் அதிக கோபம் அவனுக்காக இவள் பேசுகிறாளே என்று. அன்புவின் மீது கொண்ட கோபத்தை வெளிக்காட்டியதை போன்று ஸ்வேதாவின் மீது கொண்ட கோபத்தை வெளிக்காட்டாமல் மனதிற்குள் அடைத்தான். 

முதல் முயற்சியாகத் தோற்றிருந்த செல்வா மீண்டும் முயற்சிக்க எண்ணினான். சந்திரன் லேசாகக் கவலையுற்றாலும் அவனால் தான் தாங்க இயலாதே! இத்தனை நாள் கட்டுப்படுத்தியிருந்த வன்மம் மீண்டும் அன்புவை நோக்கி படமெடுக்க,என்ன செய்வது என்ற சிந்தனையிலிருந்தான். 

ஏன் ஸ்வேதா அவ்வளோ தொகைக்கும் எடுக்க சொன்ன? லாபம் இல்லாட்டியும் பரவாயில்லன்னு செய்யலாம், ஆனா நமக்கே நஷ்டம் வரமாதிரி இருக்கே இது எதுக்கு? பொதுச் சேவை மாதிரி இருக்கு, நாம தான் செய்யணுமா? பொதுச் சேவைதானே யார் செஞ்ச என்ன?”என்றான். 

அன்பு நீயே எப்படி சொல்லலாமா? கண்மாயை தூர்வாரிட்டு கோடையில பெரியாத்துல இருந்து கண்மாய்க்குத் தண்ணீர் வர மாதிரி ஏற்பாடு பண்ணும். இது பொதுச் சேவை தான்! உன் பேரச் சொல்லி நான் பண்ணிக்கிறேன் ஏதாவது உதவினா மட்டும் நீ பண்ணு” என்றாள். 

ம்ம், பொதுச் சேவையையா! வந்த வேலையை ஆரம்பிச்சிட்டியா? என்னவோ பண்ணு” என்றவன் அவளை வீட்டில் விட்டுக் கிளம்பினான். 

மாலை சந்திரனின் ரைஸ்மில் வழியாக நடந்து வந்து கொண்டிருந்த ஸ்வேதா அவன் பைக்கை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள், ஜெயசந்திரனை பார்க்கவேண்டும் என்று சொல்லியதால் காவலாளியும் அனுமதித்தார். 

ஜெயசந்திரனின் அறைக்குச் சென்றவள் அங்கு அவன் இல்லாமல் இருக்க அறைக்குள் அங்கும் இங்கும் சுற்றினாள். டேபிளில் விரித்துக் கிடந்த பைல்களையும், பேப்பர்ஸையும் பார்த்தாள். இதில் கையெழுத்து அழகாக இருக்கிறதே அவனுடையதாக இருக்குமோ எனச் சற்று ரசனையோடு நோக்க, இங்க என்ன திருட வந்த நீ?” எனக் கேட்டது சந்திரனின் கோபக்குரல். 

திரும்பிப் பார்க்கக் கதவில் சாய்ந்து முறைத்தவாறு நின்று கொண்டிருந்தான். அவன் கேள்வி முள் போல் மனதில் தைக்க நொடியில் முகம் வாடினாள். அவள் மலர்ந்த முகம் நொடியில் வாடுவதும், மென்னகை அரும்பிய இதழ் சுருங்குவதும், ரசனையில் விரிந்த கண்கள் மூடுவதையும் பார்த்தான் இருப்பினும் அவள் மேல் கொண்ட கோபம் மட்டும் குறையவேயில்லை. 

காதல் வந்தால் மட்டும் தன்மானம், தலைக்கனம் எல்லாம் தூர ஓடிவிடுமோ என்னவோ? மீண்டும் புன்னகையோடு அவன் அருகில் வந்தவள், என் மொபைல தான் திருட வந்தேன்!” என்றாள். 

என் போனை கொடுத்துட்டு வாங்கிட்டு போடி” என அடிக்குரலில் கூறியவன் வாசல் நோக்கி கை நீட்டினான். 

ஏன் மாமா இவ்வளவு கோபம்?” என்று கேட்டவள் நெருங்கி வந்து கன்னத்தில் கை வைத்து அவன் முகத்தை நிமிர்த்த முயல, வேகமுடன் தட்டிவிட்டான். 

யாருடி மாமா?” என்க,”நீ தான் கயலுக்கு மாமாவாமே, அப்போ எனக்கும் மாமா தான்!” என்றாள் குறும்புடன். 

கீழ் தாடையைத் தடவியவாறு “அப்போ அவனும் மாமனோ?” என்றவனின் குரல் தொனியே நக்கலாக மாறியிருந்தது. 

அவ்வளவு தான் ஸ்வேதாவிடமிருந்த இலகு தன்மையெல்லாம் ஓடோடி விட்டது, எரிக்கும் பார்வையோடு நிமிர்ந்தவள், இப்போ என்ன கேட்கணும்மோ நேரடியா கேளு ஜெய்” என அழுத்திக் கேட்டாள்.

தன்னிடம் தோற்கக் கூடாது என அன்புவிற்காக இவள் ஏலத்தில் பேசியது, அவனோடு சுற்றுவது என எதையுமே சந்திரனால் தாங்க முடியவில்லை. 

அவளை நெருங்கி வந்தவன் தோள்களுக்குக் கீழ் அவள் கைகளை இருபுறமும் அழுத்திப் பிடித்துக் கொண்டு,”சொல்லு அப்போ அவனும் உனக்கு மாமனா? அதான் அவன் கூட ஊரே பார்க்குற மாதிரி சுத்துறையா? ஏலத்துல அவனுக்காக அத்தனை பேரு முன்னாடியும் நின்னு பேசுற? என்ன அவமானப் படுத்த தானே! இதெல்லாம் அவன் சொல்லிக் கொடுத்து, அவனுக்காக தான நீ பண்ண? ஒரு பொண்ணு கிட்ட நான் தோத்து நிக்கனும்னு அவன் ஆசை பட்டனோ? சொல்லுடி எல்லாம் உன் அன்பு மாமனுக்காக பண்ணியா?” என தன் சிறு கண்களையும் இடுக்கிக் கொண்டு, பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான். 

அவளை இவ்வாறெல்லாம் கேள்வி கேட்கும் உரிமை தனக்கு இல்லை என்ற நினைவேயில்லை சந்திரனுக்கு. 

ஸ்வேதா மீது இருந்த கோபம் மட்டுமில்லாது அன்புவின் மீது இருந்த கோபத்தையும் அள்ளி அனல் பூக்களாய் அவள் மீதே வீசினான். அவன் இறுக்கிப் பிடித்திருந்த கைகள் இரண்டும் எலும்புகள் நொறுக்கும் அளவு வலியை கொடுத்தது. 

அவன் மேல் கோபமே என்றாலும் அன்பு கொண்ட நெஞ்சால் வெளிக்காட்ட இயலாது, வார்த்தையைப் பார்த்துப் பேசு ஜெய், நீ பேசுறதுல வேற அர்த்தம் வருது. அவன் என் ப்ரண்ட், அதற்கான மரியாதையைக் கொடு” என இறுக்கமுடன் கூறினாள். 

மேலும் அழுத்தி அவள் கைகளைப் பற்றியவன், “அவனை சொன்னா உனக்கு ஏன்டி கோபம் வருது? அப்படி என்ன அவன் உனக்கு பெருசா போயிட்டான்? ஒழுங்கா நடந்துக்கோ! ஆமா உங்க அம்மா உனக்கு ஒழுக்கம்ன்னா என்னனு சொல்லித்தரலையா?” என்றான். 

அம்மா என்ற வார்த்தையிலே மனம் கலங்கிவிட, விழிகளில் நிறைந்த நீரோடு அவனை முறைத்தாள். வாய் திறந்தால் அழுகையை வந்துவிடும், அவன் முன் அழவும் விருப்பமில்லை. கீழ் இதழை அழுத்தி கடித்துக் கொண்டு, “என்..னக்கு..அம்..ம்மா..இல்ல…ஜெய்” என நிமிர்ந்து நோக்கியவள் ஒரு பார்வையோடு அவன் பிடியிலிருந்து கைகளை விலக்கினாள்.

எரிமலையாய் பொங்கிய கோபத்தின் மீது பனிமலையாய் அவள் விழிநீர் பார்வை விழ கரைந்தான். ஆறுதலாய் அவளை நெஞ்சோடு இறுக்கி அணைக்க வேண்டும் போல் இருந்தது. “ஸ்வே…” கைகளை நீட்டியவாறு அவளை நெருங்க, அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள் ஓடிவிட்டாள். 

விழி மூடியவாறு வலியுடன் நாற்காலியில் வீழ்ந்தான். அவளைக் காயப்படுத்தியது அவனுக்கு வலித்தது. தன் வார்த்தைகள் தான் அவளை காயப்படுத்திவிட்டதோ எனத் தன்னையே நொந்தான். 

அன்றைய நாள் முழுதும் அவள் நினைவில் மனசஞ்சலத்துடனே இருந்தான். இரவிலும் உறங்க இயலாது அவள் கலங்கிய விழியும் காயம்பட்ட கீழ் உதடும் அவன் நெஞ்சைப் பிசைந்தது.

அவனிடம் அலைபேசியைக் கொடுக்கத் தான் அவள் வந்தால் அவனும் புதிதாக ஒரு அலைபேசியை வாங்கி வைத்து அவளுக்காகக் காத்துக் கொண்டு தான் இருந்தான். பரிமாறிக் கொள்ளப் படாத அவர்கள் காதலைப் போல் அந்த அலைபேசிகளும் இருவருக்குள்ளும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை.

மறுநாள் மாலை ஸ்வேதாவுடன் அன்பு டவுனுக்கு சென்றிருந்தான். கயலுக்கு அன்று விடுமுறை நாள் என்பதால் தன் வேலைகளை முடித்து விட்டு அன்புவுக்கு பிடித்ததை தானே சமைத்து வைத்துக் காத்திருந்தாள். 

எப்போதும் வரும் நேரம் தாண்டியும் வராமல் இருக்க, லேசாகப் பதற்றம் பற்றியது. அவன் எண்ணிற்கு அழைத்தால் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. ஸ்வேதாவிடமும் அலைபேசி இல்லை என்பதையும் அறிந்திருந்தாள். 

அந்த நேரத்திற்கு உறங்கி விடும் சிவகாமிக்கு அன்றேனோ உறக்கம் வரவேயில்லை. அவருக்கும் மனம் நெருடலாய் இருந்தது. நள்ளிரவு நேரம் நெருங்கியிருந்தது. வேறு வழியின்றி சரவணனை அழைத்தவள் அவனிடன் விஷயத்தைச் சொன்னாள். தான் சென்று பார்ப்பதாகக் கூறியவன் வீட்டிற்கு வந்து காரை எடுத்துச் சென்றான். 

சிவகாமிக்கு தனகிருக்கும் ஒற்றை வாரிசு அவன் மட்டுமே என்றும் அவனுக்கு என்னவோ என்றும் முன் வாசலையே இமைக்காது பார்த்தவாறு தூணில் சாய்ந்து கலங்கி நின்றார்.

இருவரும் மனதில் ஆயிரம் தெய்வங்களையும் வேண்டி நின்றனர். ஏழாண்டுகள் ஏங்கி தவமிருந்து தடை தாண்டி கிடைத்த பொக்கிஷம் அன்பு. அவனோடு இருந்த இனிய பொழுதுகள் நினைவில் வந்து நிலைக்க, கண்களில் கண்ணீர் அரும்பியது. 

அந்த நள்ளிரவிலும் நெஞ்சோடு அழுத்தி மாங்கல்யத்தைப் பிடித்துக் கொண்டு வீதியில் அன்புவின் வருகையை எதிர்பார்த்து மொட்டை மாடியில் குளிரில் அமர்ந்திருந்தாள் கயல். 

எதிர்வீட்டு மாடியில் எப்போதும் உறங்கும் சந்திரன் இன்று அங்கில்லை. கயல் இருந்த கவலையில் அதைக் கவனிக்கவும் இல்லை.

Advertisement