Advertisement

அத்தியாயம் 30

மழைச் சாரலில் மரக்கிளையின் மறைவில் இரு காதல் கிளிகள் அலகால் ஒன்றோடு ஒன்று கொத்தி முத்தமிட்டுக் கொண்டு தன்னை மறந்த மயக்கத்திலிருந்தன.

அடுத்த காட்சியாக, இருள் சூழ்ந்த அறைக்குள் மெல்லிய தீரைச் சீலைகளை ஊடுருவி வெளிச்சம் சிறிது பரவ, உச்ச கோபத்தில் கண்களை மூடி நின்றிருந்தாள் ஸ்வேதா கோபம் தான் எனினும் கண்களிலிருந்து கண்ணீரும் வழிந்தோடியது. 

ஒருவலுவான கரம் இடைவளைத்து இறுக அணைத்தது, பின்னங் கழுத்தில் மீசை உரச, “பிடிக்கவில்லையா? நான் ஆசையா வந்தேன்” என்றதொரு குரல் தொலைவில் கேட்பது போலிருந்தது. கன்னத்தில் ஒரு முத்தம்! 

இதழால் கன்னத்தின் கண்ணீரை வருட, மெல்ல விழி திறந்தாள் வாடிய ஜெயசந்திரனின் முகம், நொடியில் திடுக்கிட்டு எழுந்தால் கனவு!

கல்லைக் கூட பனியாய் உருகச் செய்யும் ஸ்பரிசம், உயிரையே தட்டி எழுப்பும் ஓசை! இது என்ன மாயம், இது தான் காதலோ? 

முகத்தை அழுத்தித் துடைத்தாள், இது என்ன புதிதாய் இதுவரை எனக்கு இப்படி எல்லாம் கனவு வந்ததேயில்லையே! கனவில் வரும் அளவிற்காக அவன் முகம் என்னுள் பதித்துள்ளது? என்ற சிந்தனையோடு அருகே டேபுளில் இருந்த அவன் மொபைலை எடுத்தாள். 

டிஸ்பிளேயில் ஜெயசந்திரன் அழகாக மின்னிச் சிரித்தான். இவனுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா? என்பது போல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். செப்பு வண்ணம், முத்துப் பற்கள், காந்த கண்கள் அவள் இரும்பு இதயத்தையும் ஈர்த்தது. அவளையும் அறியாமல் கண்களின் வழி இதயத்தில் ஆழமாகப் பதிந்தது அப்பிம்பம். 

நீ வந்த வேலையை மட்டும் பாரு, உன் வாழ்க்கையில் அவன் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவன் பெயர் கூட தெரியாது என மூளை முன்னெச்சரிக்கை செய்தது. ஆனால் ஆசை கொண்ட கண்கள் படத்திலிருந்து நகர மறுத்தது. மெல்லிய புன்னகை மின்னியது அவள் உதட்டில்! 

ஐம்பதிற்கும் மேற்பட்ட மிஸ்டு கால்ஸ், அதில் பூங்கோதையிடம் இருந்தும் ஆறு கால் வந்திருந்தது. பதிவு செய்யாதலால் எண்கள் மட்டுமே தெரிந்தது. 

அவன் முன் தடுமாறவே கூடாது. காலையில் அவனிடம் அலைபேசியைக் கொடுத்து விட வேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு, உச்ச தலை வரை இழுத்து மூடி உறங்கினாள். 

நடக்க இயலாத நிகழ்வு ஒன்று கனவாய் வர, நிஜத்தை விடக் கனவே தித்தித்தது. கனவிற்குள் நிஜம் போல் உலவும் சில நிமிட மாய இன்பம் வேண்டி கனவைத் தேடிச் சென்றாள். 

காலையில் ஆதவன் உதித்திருந்த நேரம், பேச்சுக் குரலும், சிரிப்பொலியும் செவி தீண்டி கண் விழித்தான் சந்திரன். எப்போதும் போல் கைகளை முறுக்கிச் சோம்பல் முறித்தவாறு மேற்கு நோக்கித் திரும்பியவன் உணர்வற்று சிலையானான். 

எதிர் வீட்டு மாடியில், சிவகாமிக்கு யோகா சொல்லித் தருகிறேன் என அவர் கை, கால்களை இப்படியும் அப்படியுமாக ஸ்வேதா மடக்கச் சொல்ல அதற்கு எதிராகச் செய்து கொண்டிருந்தார் சிவகாமி. துணி காய வைத்துக் கொண்டிருந்த கயலும், ஸ்வேதாவும் அவர் செய்கை கண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். 

வெள்ளையுடையில் பால்வண்ண தேகத்தில் பூத்த வியர்வை முத்துக்கள் சூரிய ஒளியில் வைரக் கற்களாக மின்னின. எந்த வித அலங்காரமும் இன்றி தேவதையாகித் தெரிந்தாள். 

அட கொஞ்சுக்கிளி, இங்க என்ன பண்ணுறா? அப்போது தான் ஞாபகம் வந்தது அன்று பேருந்து நிலையத்தில் தன்னை அன்பு என அழைத்து அவள் தான் என்று!

நம்ம சொந்தத்தில் இப்படி ஒரு பெண் இல்லையே, அவன் பிரண்டா தான் இருக்கும். அவன் ப்ரண்டுன்னா பெங்களூர் இல்ல சென்னையா தான் இருக்கும். முகத்தை பார்த்தா வட நாட்டுச் சாயலும் தெரியுதே! அவனாகவே அவளைப் பற்றிய எண்ண அலசலில் இருக்க, அவள் மேலிருந்த கோபம் கூட மறந்தே போனது. 

கயலோடு தோப்பு, வயல் எனக் கையில் ஒரு கேமிராவுடன் சுற்றினாள். ஊரார் அனைவரும் அவள் கலரும், அழகும் கண்டு பிரமித்தனர். அதைவிட எளிமையாகப் பழகும் விதம் கண்டு வியந்தனர். பாட்டிகளோடு பலகதைகள் பேசினாள், கன்னத்தோடு கன்னம் உரசப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். 

கயலும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தினாள். சிறுவர்களையும் அறிமுகப்படுத்த ஒரே நாளில் அவர்களுக்குச் சமமான சிறுமியாக மாறிப்போனாள். ஸ்வீட்டி என்ற அழைப்போடு அவர்கள் விளையாட்டிலும் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அவளோடு நெருங்கி இருந்தனர். மாலை அன்புவோடு ரைஸ்மில்,செங்க சூளை, டவுன் என அவனோடு சுற்றி அவன் தொழில்களைப் பற்றியும் அறிந்து கொண்டாள்.

காலையில் பண்ணையிலிருந்து அழைத்த அன்பு கயலைத் தயாராகி இருக்கச் சொன்னான். பின் வீட்டிற்கு வந்தவன் காலை உணவினையும் முடித்து விட்டு கயலையும், ஸ்வேதாவையும் அழைத்துக் கொண்டு வந்தான்.

வரும் வழியெங்கும் எங்கு செல்கிறோம் என்பதைப் பல வழியில் கேட்ட கயலுக்குப் பதிலேதும் சொல்லாமல் அழைத்து வந்தது அவர்கள் பள்ளிக்கு. 

கயல் புரியாமல் நிற்க, இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். முக்கியமான ஊர் பெரியவர்களும், இராஜமாணிக்கமும், தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்கள், முக்கிய நிர்வாக அலுவலர்கள், பள்ளியின் வேலையாட்கள் என அனைவரும் இருந்தனர்.

கிழக்கு நோக்கி புதிதாகக் கட்டியிருந்த மூன்று மாடிக் கட்டிடம் மட்டும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தது சரவணன் தான் எனவே கயல் அதைப் பற்றி அறியாமலிருந்தாள். தலைமை ஆசிரியர் முன் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். 

கயலை முன்னிருத்தியவன் அவள் கைகளால் திறக்கவும் வைத்தான். பின்னர் பெரியவர்கள் அனைவரும் வரவேற்று மேடையில் அமர்த்தப்பட்டனர். குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கினர். சரவணன் மூச்சு விடக் கூட நேரமின்றி விருந்தினரின் தேவையறிந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஸ்வேதா ஆர்வமுடன் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தாள். 

அனைவரையும் வரவேற்றுப் பேசிய அன்புச்செழியன் பின் பள்ளியின் புதிய நிர்வாகி எனக் கயலை அறிமுகப்படுத்தினான். கயலோ திடுக்கிட்டு அதிர்வுடன் அவனைப் பார்க்க, மென்னகையுடன் இமைகளைச் சிமிட்டினான். கயலால் அனைவரின் முன்னிலையில் எதுவும் மறுப்பாகச் சொல்ல இயலாது போனது. 

கயல் பள்ளியின் ஆரம்பம், வளர்ச்சி, நிர்வாகத்தின் சிறப்பு, தங்களின் சேவை நோக்கம், எதிர்கால திட்டம் பற்றி தன் அறிந்த குறிப்புகளைக் கொண்டு சிறப்புரையாற்றினாள். அனைவரும் பாராட்டும் படி சிறப்பாகத் தான் இருந்தது அவள் உரை. இறுதியில் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்து அனைவரும் கிளம்பினர். 

அன்பு தன் அறைக்குக் கயலை அழைத்துச் செல்ல, அவனை முறைத்தவாறே முன்னே சென்றாள். உள்ளே சென்றவள் முகத்தைத் திரும்பிக் கொண்டு நிற்க, அருகே வந்தவன் வாசலைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவளை அணைத்தான். 

கைகளை விலக்கிவிட்டு நகர்ந்து சென்றாள். அவளை இழுத்து அவன் இருக்கையில் அமர்த்தினான்.

அவள் எழ முயல இருபுறமும் கையூன்றி எழவிடாது தடுத்தான். “ஏன் எங்கிட்ட முன்னவே சொல்லல்ல? நான் எப்படி மாமா உங்க இடத்துல…” எனத் தயங்கினாள். 

செல்லம்மா நீ நானுன்னு பிரிச்சி பேசுறத நிறுத்து” என அருகே வந்தவன் அவள் உள்ளங்கை பிடித்துக் கொண்டு, “செல்லம்மா உன்னால முடியும்டா உன்ன தவிர யாரால பசங்களை புரிஞ்சி நடந்துக்க முடியும்? ஏதும் தெரியலைனாலும், உதவி வேணும்னாலும் என் கிட்ட கேளு, நானும் இங்க தானே இருக்க போறேன். இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எல்லா பொண்ணுகள மாதிரி நீயும் வீட்டுக்குள்ளேயே இருக்க போற, உன் திறமைக்கா இடம் இது தான்!” என்றான்.

இல்லமாமா நீங்க…உங்க அளவுக்கு நிர்வாகத்தை என்னால…எப்படி மாமா?” என இன்னும் தயங்கினாள். 

பண்ணை, ரைஸ்மில்லு,தோப்பு, செங்கச்சூளை, எல்லாம் நான் தானே பார்த்துக்கிறேன். எனக்கு எவ்வளவு வேலை இருக்கு. இப்போ சுகர் பாக்டரி பெர்மிஷன் வாங்கணும்னு பிஸியா இருக்கேன்னும் தெரியும் தானே, என்னால முடியலை செல்லம், எனக்காக இது கூட நீ செய்ய மாட்டியா?” என ஏக்கத்தோடு கேட்க, அவன் கேட்டு அவள் மறுப்பாள என்ன, சரியெனத் தலையாட்டினாள். 

சரி என்கிட்ட ஏன் முன்பே சொல்ல?”என்க, “ஸ்வேதா ஸ்வீட் சப்ரைஸ்ஸா இருக்கட்டும்னு சொன்னா, அதான்!” என்றவன் நெருங்கி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

முதல்முறை கயல் காதலைச் சொல்லும் போது உன்னை நம் பள்ளிக்கே நிர்வாகிக்குகிறேன் என்று எண்ணியதை இன்று நிறைவேற்றி அழகு பார்த்தான். 

தோப்பிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சந்திரன், பச்சை நிறத்தில் டாப்பும், ஊதா நிறத்தில் ஜீன்சும் அணிந்து ஸ்வேதா தனியா செல்வதைப் பார்த்தான். நம்மை பச்சைக்கிளி என்று முணுமுணுத்தவாறு வேகமுடன் சென்று அவளுக்குக் குறுக்கே வண்டியை நிறுத்தி நின்றான். நிமிர்ந்தவள் ஒரு முறைப்போடு பார்த்தாள். 

ஏய் எங்கடி என் போன்?” என்றான் சற்றே மிரட்டலுடன். அவன் உரிமையான அழைப்பில் மனம் தடம் மாறி தடுமாற, குறும்பு குணம் வெளியில் வந்தது. 

அவன் வண்டியில் பின்னே அமர்ந்தவள் அவன் தோளில் தட்டியவாறு,”முருகர் கோவில்ல விட்டுட்டு மொபைலை வாங்கிக்கோ ஜெய்!” என்றாள். 

ஏய் நான் என்ன உனக்கு டிரைவரா? முதல்ல இறங்குடி கீழ” என்றான் மிரட்டலுடன், ஆனால் இதற்கெல்லாம் அசருபவளா அவள், தோளிலிருந்து தன் கரத்தை இறக்கி அவன் இடை சுற்றி வளைத்து அணைத்தாள். அவனோ திடுக்கிட்டுக் கூச்சத்தில் நெளித்தான். யாரேனும் பார்த்துவிடுவார்களோ என நினைத்து சுற்றிலும் பார்த்தான். 

ஏய் யாரவது பார்த்திட போறாங்க, இறங்குடி!” என்க, மேலும் அவனை நெருங்கி அமர்ந்து கொண்டு,”யாராவது பார்க்கிறதுக்குள்ள சீக்கிரம் கிளம்பு” என அவன் தோளில் தட்டினாள். இது என்னடா சோதனை என நொந்தவன் யாரும் பார்க்கும் முன் செல்வோம் என எண்ணிக் குறுக்கு வழியாக முருகர் கோவிலுக்குச் சென்றான். 

பைக்கிலிருந்து இறங்கியவள் அவனையும் கோவிலுக்குள் அழைக்க, “அதெல்லாம் வர முடியாது நான் எதுக்கு வரணும்?” என்க, “நீயும் நானும் திருட்டு கல்யாணம் பண்ணுறதுக்கு தான்!” என ஒற்றை கண்ணை சிமிட்டினாள். 

அவள் பதிலில் சில நொடி உணர்வின்றி சிலையானான், மனமோ இதை என் நிச்சியத்திற்கு முன்பே அழைத்திருந்தால் வந்திருப்பேனடி எனப் புழுங்கியது. “என் போன கொடு நான் போனும்” சற்று அழுத்திக் கேட்டான். 

முருகர் கிட்டத் தான் கொடுத்து வச்சிருக்கேன் அதாவது கோவில் உண்டியல்ல போட்டுட்டேன் வேணுன்னா வந்து வாங்கிக்கோ” என்றவள், அவன் பைக் சாவியையும் எடுத்துவிட்டு முன்னே சென்றாள். 

அன்னைக்குக் கோபமா கத்துனா, இன்னைக்கு பேசுறதும், நடத்துக்குறதும் சரியில்லையே எண்ணியவன் அவள் பின்னே மலையில் ஏறினான். 

அவளோ கோவிலுக்குள் இருந்து கொண்டு தூணிலிருக்கும் சிற்பங்களையும், மலையின் மீதிருந்து சுற்றுப் புறத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

சிறு குன்றின் மீதிருக்கும் சிறு கோவில், ஊரின் எல்லைக்குள் சிறிது தொலைவிலிருந்தது. அதன் உச்சியில் இருந்து பார்த்தால் சுற்றியெங்கிலும் பசுமை படர் வயல்வெளிகளும், தோப்புகளும் அழகு காட்சியாய் தெரியும். 

ஓய், சாமி கும்மிடத் தானே வந்த? அப்போ அந்த வேலையை பாரு!”

சுத்தி பார்க்கத் தான் வந்தேன்! ஓய் இல்ல, என் பேரு ஸ்வேதா உனக்கு விருப்பம்ன்னா செல்ல பேரு வச்சி கூட கூப்பிடு!” 

அவள் பேச்சைக் கண்டு கொள்ளாது, அவளையும் அழைத்து வந்து முருகர் சன்னிதியில் வணங்கி நின்றான். நெற்றியில் இருவரும் சிறிது விபூதியை இட்டுக்கொண்டு வெளியே வந்து நின்றனர். 

சாவியைக் கொடு நான் போகணும்” என்க, ” நீ போயிட்டா என்ன யாரு வீட்டுல ட்ராப் பண்ணுவா? சாவியைத் தர மாட்டேன், நீ கீழ வா” என்றவள் சாவியை விரல்களால் சுழற்றினாள். 

அவனோ பிடிக்கி விட எண்ணி முன்னோக்கி நகர, அவளோ விலகி விட எண்ணிப் பின்னோக்கி நகர்ந்தாள்.

மலையில் சீரற்ற கரடு முரடான பாதையாகையில் பின்னோக்கி நகர்ந்தவள் ஒரு பாறையில் மோதி விழவிருந்த நேரம் மீண்டும் சந்திரனின் கைகள் அவளின் இடை தாங்கி இருந்தது. அவளை நேராக நிற்க வைத்தவன் கோபம் பொங்கப் பார்த்தான். 

அவளோ மிகுந்த சந்தோஷத்தில் உற்சாகமுடன் துள்ளிக் குதித்தவாறு, படிகளில் இறங்கி பைக்கில் சென்று அமர்ந்திருந்தாள். 

அவனே உணராது உள்ளுக்குள் ஒரு இதம் பரவினாலும் வெளியிலோ எரிச்சலும், கோபமும் பூசிக் கொண்டு, சரியான இம்சை புலம்பியவாறு இறங்கி வந்தான். 

மீண்டும் அலைபேசி வேண்டுமென்றால் தன்னை வீட்டில் விடுமாறு வாதிட்டு அவனோடு வீட்டிற்கு வந்தாள். 

தங்கள் வீட்டின் முன் வாசல் முன்பு நிறுத்தியவன், “போய் என் போன எடுத்துட்டு வாடி” என்றான்.

இருப்பு கேட் திறந்திருக்க, வாசலில் நின்றவாறு வெளியிலிருந்த இருவரையும் பார்த்த செல்வா, “சந்திரா உன் போன் என்னடாச்சு? எல்லாரும் எனக்குக் கால் பண்ணுறாங்க, இங்க வாடா” எனக் கத்தி அழைத்தான்.

இருடா என்பது போல் அவனுக்கு கைக்காட்டியவன் அவளிடம் மீண்டும் அலைபேசியைக் கேட்டான். செல்வாவையும் எட்டி ஒரு பார்வை பார்த்தவள், “எனக்கு புது மொபைல் வாங்கிக் கொடுத்துட்டு உன் மொபைலை வாங்கிட்டு போ” என்றாள்.

அவனோ கோபம் கொண்டு, “அதெல்லாம் முடியாது, நீ தானே உன் போன உடைச்ச” என்றான். 

நீ சரிப்பட்டு வர மாட்ட, இப்போ வரைக்கும் போனை ஆஃப் பண்ணித்தான் வச்சிருக்கேன், இனி ஆன் பண்ணிட்டு வர கால்ஸ் எல்லாம் அட்டென் பண்ணி உன் வெய்ப் பேசுரேன்னு சொல்லிடுவேன்!” என மிரட்ட அவன் என்ன சொல்வது என்று தெரியாது கோபமாக பார்த்தான். 

பின்னோக்கி நகர்ந்தவாறு நாக்கை துருத்திக் கொண்டு அழகு காட்டியவள், “சீக்கிரம் புது மொபைலையோட வா ஜெய்!” என எதிர் வீட்டிற்குள் சென்றாள்.

சந்திரன் வீட்டிற்குள் செல்ல, பின்னே இராஜமாணிக்கத்தின் காரும் வந்து நின்றது. இவன் வாசலில் நிற்கும் போதே அவர் தெருவிற்குள் வந்திருந்தார்.

இருவரையும் இவர் பார்த்திருப்பாரோ என்ற எண்ணம் தோன்றினாலும், அதை வெளிக்காட்டாது புன்னகை முகத்தோடு வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் சந்திரன்.

Advertisement