Advertisement

அத்தியாயம் 03

நண்பகலாகிய பின்னும் இன்னும் பேப்பரிலிருந்து கவனத்தைத் திருப்பாது அமர்ந்திருந்த சங்கரலிங்கத்தின் அருகே வந்த ருக்மணி, உணவுண்ண அழைத்தார்.

இருக்கட்டும் ராகவன் (சந்திரனின் தந்தை) வரட்டும் சேர்ந்து சாப்பிடுறோம்” என்றார். 

லேசாக முறைத்தவர், “இது என்ன புதுசா? அவன் வரவரைக்கும் எதுக்குக் காத்திருக்கீங்க?”என்க,”இன்னைக்கு ஒரு டெண்டர் விஷயமா சந்திரன் போயிருக்கான். அதான் நமக்குக் கிடைச்சதா இல்ல, எதிர் வீட்டுக்காரன் எடுத்துட்டானான்னு தெரியத்தான்” என்றார்.

உள்ளே சென்ற ருக்மணி, தன் மருகளிடம் மகனை உணவுண்ண அழைக்கச் சொன்னார். அவர் சொல்லிய மறுகணமே தன் கணவருக்கு அழைத்தார் வசந்தா. 

சாப்பிட வாரீங்களா? நேரமாகுது..” என அழைக்க, “நான் ரைஸ் மில்லுல இருக்கேன் சாப்பாட்டைக் கொடுத்துவிடு” என்றார் எரிச்சலுடன். 

இல்லைங்க, மாமா உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்க…” என இழுக்க, “அடியே நான் சாப்பிட வரலேன்னு சொல்லிருடி” என்றார் கடுகடுப்புடன். 

சரிங்க, சாப்பாட்டை முனியன் கிட்ட கொடுத்துவிடுறேன் சந்திரன் போன டெண்டர் என்னாச்சி? முடிவு தெரிஞ்சாதான் மாமா சாப்டுவாங்க” எனப் பொறுமையுடன் கேட்டார். 

அதான் வீட்டுக்கே வரலைன்னு சொல்லுறேன். நமக்கு கிடைக்கல வசந்தா. இத நான் எப்படி அப்பா முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியும்” என்றவரின் குரல் சற்று இறங்கியிருக்க,”நானே மாமாக்கிட்ட சொல்லிடுறேன். நீங்க சந்திரனைக் கவனிங்க, அவன் இப்போ ரொம்பக் கோபமா இருப்பான்” என்றவர் அழைப்பைத் துண்டித்தார். 

சலசலக்கும் காற்றும், வெயில் படா நிழல் மூடிய வானுயர் தென்னை மரங்கள் நிறைந்த தோப்புக்குள் அடிபட்ட சிங்கமெனக் கண்கள் சிவப்பேற, கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான் சந்திரன். 

உள்ளுக்குள் அடக்கப்பட்ட கோபம். மௌனமுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அந்நிலையில் அவனருகே செல்லாது எட்டடி தொலைவில் நின்று கொண்டிருந்தான் செல்வா. அவன் முகத்திலோ தோல்வியின் வலி வெளிப்படையாகத் தெரிந்தது. 

‘ஐயோ அவர் முன்னாடி தோற்று அவமானப் பட்டு நின்னுட்டையேடா’ உள் மனதின் குரல் ஓங்கி ஒலிக்க, கைகளை மடக்கியவன் அருகே இருந்த தென்னை மரத்தில் வெறியுடன் குத்தினான். அந்த வேகத்திற்குக் கைகள் சிராய்த்து இரத்தம் கசியத் தொடங்கியது.

அதைப் பார்த்த நொடி, அவன் வலியைத் தான் உணர்வது போல் “சந்திரா…” என்ற அதட்டலோடு அவன் அருகே வந்த செல்வா, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு மேலும் குத்த விடாது தடுத்தான். 

ஆனால் கோபத்திலிருந்தவன் தன் கைகளை உருவிக்கொண்டு அவனைக் கீழே தள்ளினான்.  

மீண்டும் எழுந்து அவன் அருகே சென்றவன், அவனை அணைத்து முதுகை வருட, “ஐயோ நான் தோத்துட்டேனே செல்வா. அதுவும் அவர்கிட்ட. அப்பா முகத்தைப் பார்த்து எப்படிச் சொல்லுவேன்? தாத்தா கேள்விக்கு என்ன பதில் சொல்லுவேன்?” எனப் புலம்பியவன் குரலில் கோபம் குறைந்து வேதனையை மேலோங்கி இருந்து. 

அருகே இருந்த கயிற்றுக் கட்டிலில் அவனை அமர வைத்தவன், “தாத்தாகிட்டேயும் அப்பாகிட்டேயும் நான் பேசிக்கிறேன் சந்திரா. நீ கொஞ்சம் பொறுமையா இருடா” என்க, ” என் முகம் பார்த்துச் சிரிச்சிட்டே போனாருடா, நீ தோத்துட்ட, உனக்கெல்லாம் எதுக்குடா மீசைன்னு சொல்லாம சொல்லிட்டு போயிட்டாரு, ஒரு சிரிப்புல. எனக்கு அவமானமா இருக்குதடா. இத சும்மா விடக்கூடாது” என்றவனின் குரலில் மீண்டும் கோபம் மேலோங்கியது.

அவன் வேதனையின் ஆழம் தெரிய, வார்த்தையின் வலி புரிய, அர்த்தம் நிறைந்த பார்வையோடு அவனைப் பார்த்தவன் அவன் தோள்பற்றி அழுத்தினான். 

மாலை பக்கத்து வீட்டுச் சிறுமியை, எல்லக்காளியம்மன் கோவிலுக்குச் செல்ல ஜெயந்தியையும், பூங்கோதையும் அழைத்து வர அனுப்பினாள் கயல்விழி. 

நிச்சியமான பெண் ஊர் எல்லையில் இருக்கும் கோவில் வரை செல்ல வேண்டாமென அவள் அன்னை மறுக்க, அங்கே சென்றால் சரியாக மொபைல் சிக்னல் கிடைக்காது என்பதால் ஜெயந்தியும் மறுத்தாள். 

பூங்கோதையை மட்டுமே அழைத்து வர இருவருமாக ஊர் எல்லையில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்குக் கிளம்பினர். 

கனவின் தாக்கம் இன்னும் உள்ளுக்குள் இருக்க, அமைதியாக நடந்தாள் கயல்.

முதலில் அதைக் கவனிக்காத பூங்கோதை, “கயலு, இந்த பட்டுத் தாவணி நல்லாயிருக்கா? போன மாசம் டவுனுக்குப் போனப்போ எடுத்தேன், இன்னைக்குத்தான் புதுசா கட்டுனேன். இந்த பிளவுஸ் ரமணியக்கா தான் தைச்சுக் கொடுத்தாங்க, நல்லாயிருக்காடி?” என ஒற்றையாளாக பூங்கோதை மட்டும் பேசிக்கொண்டு வந்தாள். 

கயலிடம் அதிசயமான அமைதியைக் கண்டவள், “கயலு.. அடியே கயலு.. செவுடி, காது கேட்குதா? இல்லையா?” எனக் கத்தினாள். அதில் நினைவு கலைந்தவள், தன்னைவிட மூன்றடி முன்னே சென்றவளின் அருகே ஓடிச் சென்று “என்னடி பூவு?” என்றாள். 

சரிதான், மறுபடியும் முதல்ல இருந்து சொல்லணுமா?” என்று சலிக்க, “அரக்கு கலர் பிளவுஸ் உன் கலருக்கு நல்ல இருக்குடி” என்றாள்.  

கயலைப் பார்த்து முறைத்தவள், “அடியே உனக்குக் கண்ணும் தெரியலையா நல்ல பாருடி, அரக்கு கலர் தாவணி, மஞ்சள் கலர் பிளவுஸ்டி” என்றாள். 

அப்போது தான் அதைக் கவனித்தவள் ஒரு மெல்லிய சிரிப்புடன், “சரி, சரி, நல்லத்தான் இருக்கு. அது இருக்கட்டும், உன்ன பொண்ணு பார்க்க டவுன்ல இருந்து மாப்பிள்ளை வீடு வருதாம், ஏன்டி எங்கிட்ட கூட சொல்லவேயில்ல?” எனப் பேச்சை அவள் புறம் திருப்பினாள். 

எனக்குப் பிடிக்கவேயில்லை கயலு, இந்த ஊர விட்டு, உன்ன விட்டு எப்படி இருக்க முடியும்? நான் ஒன்னும் ஜெயந்தி மாதிரில்லாம் கிடையாது. நான் இந்த ஊர விட்டு, என்ன பெத்தவங்களை விட்டுட்டுப் போக மாட்டேன்டி” கூறும் போதே குரல் உடைந்து, அழுகைக்குத் தயாரானாள். 

தன்னவனை மனதில் கொண்டு இந்த ஊரை விட்டு செல்ல மாட்டேன் எனக் காலையில் பேச்சியிடம் தான் கூறியது நினைவில் வந்தது. அதே நினைவோடு பூவை சந்தேகமாகப் பார்த்தாள். ‘இவ எதுக்கு நம்மள மாதிரியே டயலாக் விடுறா? அப்படி என்ன புதுசா இந்த ஊர மேல பாசம்? என எண்ணினாள். 

எங்க அப்பாவுக்கு என்னைய டவுன்ல கட்டிக் கொடுக்கணுமுன்னு ரொம்ப ஆசை. ஆனால் எனக்குச் சுத்தமா விருப்பமேயில்லடி. அப்பா மனசு மாறணும், நாளைக்கு மாப்பிள்ளை வீடு வரக் கூடாதுன்னு வேண்டிக்கத்தான் கோவிலுக்கே வரேன்டி” என்றாள் லேசாகக் கலங்கிய விழிகளுடன். 

‘இவ என்னடா நான் கோவிலுக்குப் போற காரணத்தையே இவளும் காரணமா சொல்லுறா? ஏதோ சரியில்லைஎன வியப்புடனே எண்ணியவள், “கழுத.. இதுக்கெல்லாமா கண்ண கசக்குவ? உன் மனசுப்படி எல்லாம் நடக்கும். இதுக்கும் மேல நாளைக்கு மாப்பிள்ளை வந்தானாக்கும் எல்லையிலே அவனை கல்லவுட்டு அடிச்சி ஓட விடுறேன்டி” எனச் சிரிப்புடன் கூற, பூங்கோதையும் மெலிதாய்ச் சிரித்தாள். 

இருவரும் வயல்வெளிகளைத் தாண்டி ஊர் எல்லையைத் தாண்டி கோவில் வாசல் வரை வந்திருக்க, “சரி கயலு நீ எதுக்கு இப்படித் திடீர்னு எல்லைக் காளியம்மன் கோவிலுக்கு என்னைய கூட்டிட்டு வந்துருக்க?” என அவள் புறம் கேள்வியைத் திருப்பினாள்.

காலையில ஒரு கனவுடி…” என்னும் போதே எதிர்பார்ப்போடு, “நல்ல கனவா? கெட்ட கனவா? கல்யாணக் கனவா? ” என பூவு கேள்விகளை அடுக்க, கவலையுற்ற கயல் “நல்லதா, கெட்டதான்னு எனக்கே தெரியல. நல்லது நடக்கட்டும்னு வேண்டிக்கத்தான் வந்தேன்” என்றவாறு படிகளில் ஏறியவர்கள், அம்மன் சன்னிதி சென்று அர்ச்சனைக்கு கொடுத்துவிட்டுக் கரம் குவித்து நின்றனர். 

கனவில் கேட்டது அவன் குரல் தான். ஆனால் அவன் முகம் காணவில்லை. ‘செல்லம்மா.. செல்லம்மா..’ என்ற அழைப்பின் அர்த்தம், தன்னை அழைத்தவாறு தன்னை நோக்கி வருகிறானோ? நிரந்தரமாகத் தன்னை நீங்கிச் செல்கிறானோ? ஆசையின் அழைப்பா? உயிர் பிரியும் நொடியின் கடைசி அழைப்பா? என்னவென்று தெரியவில்லை. அர்த்தம் புரியவில்லை. நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை. நல்லதே நடக்க வேண்டும், கூடவே அவன் விரைவில் ஊருக்கு வர வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள். 

இருவரும் ஒரு தூண் அருகே அமர, கோவில் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சிவகாமி கோவிலுக்குள் வர, கயல்விழியின் விழிகள் மெல்லிய கோபம் பொங்க அவரைப் பார்த்தது. 

அம்மன் சன்னிதி சென்று நின்றவர் ஐயரிடம், “என் பேரனுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணணும் கல்யாண நேரம் இருக்கா? பொண்ணு பார்க்கலாமன்னு பூக்கட்டி போட்டுப் பார்த்துச் சொல்லுங்க சாமி” என்றார்.

‘பொண்ணு தேட போகுதாக்கும் பொண்ணு, க்கும்.. ஏற்கனவே காத்துக்கிட்டு இருக்குற நாங்களெல்லாம் இது கண்ணுக்குத் தெரியாதோ? எனக்கு வில்லி நீதான். இல்லயில்லை எப்படியும் கடைசியா எங்கிட்டேதானே மாட்டுவ? சோ, நான் தான் உனக்கு வில்லி’ என எண்ணி மூடிய உதடுகளுக்குள் பற்களைக் கடித்தாள். 

அதுக்கென்னம்மா தாராளமா இப்போவே பார்த்துடலாம்” எனக் கூறியவாறு இரு பேப்பரில் இரு வண்ணப் பூக்களைக் கட்டி வேண்டிக் கொண்டு சாமியின் முன்பு போட்டார். அமர்ந்திருந்த இரு பெண்களையும் அழைத்து அதில் ஒன்றை எடுக்கச் சொன்னார். கயல் முகத்தைத் திரும்பிக் கொள்ள, பூங்கோதை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள். 

“நல்ல அறிகுறிதான் நீங்கள் பெண் தேட தொடங்கலாம்” என ஐயர் சிவகாமியிடம் கூறிக்கொண்டிருக்கும் போது, கடுகடுப்புடன் பூங்கோதையின் கையைப் பற்றி வெளியே இழுத்து வந்தாள் கயல். 

ஏய், இந்தாடி எதுக்கு இம்புட்டு வேகமா இழுத்துட்டுப் போற?” எனக் கையை உருவிக்கொண்டு அவள் கேட்க, “வெரசா வாடி, இருட்டப் போகுது அதுக்குள்ள ஊருக்குள்ள போகணும். எங்க அம்மா விளக்கு வைக்கிறதுக்குள்ள வீட்டுக்குப் போகணும் இல்ல எங்க அப்பா திட்டும்” என்றவள், நடையின் வேகத்தைக் கூட்டினாள்.

இரவு உணவு உண்ட பின், அன்புவிற்குப் பெண் பார்ப்பதைப் பற்றி தன் மகன் சிவசுப்பிரமணியனிடம் பேச வேண்டுமென அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவகாமி.  

எப்போதும் வரும் நேரம் தாண்டிய பின்னும் அவர் இன்னும் வராமலிருக்க, லேசாகப் பயம் தோன்ற நெஞ்சைப் பிடித்தார். 

எப்போதும் போல் அவள் நினைவில் துயில் கொண்டிருந்த அன்புவிற்கு வந்த அழைப்பில் அவன் தந்தைக்கு விபத்து எனக் கூறப்பட்டது. 

கடந்த ஒரு வருடமாகத் தந்தையைப் பார்க்கவில்லை. அதற்கு முன்பும் அவர் தான் தன்னை வந்து பார்த்துச் சென்றார். அன்னையின் இழப்பிற்குப் பின் தனக்கு இருக்கும் ஒற்றை உறவு. தான் விரும்பியது வேண்டும் எனக் கேட்கும் முன் நிறைவேற்றுபவர். தன் வழிகாட்டி, தன் குரு, தன் தோழன் என அனைத்து பரிமாணத்திலும் தான் வளரும் போது அன்பையும் அக்கறையும் காட்டி வளர்த்தவர். 

முதல் முதலாக அவன் மனதிற்குள் பயம் பரவ, விழிகள் கலங்கிக் கசிந்தது. இதுவரை அவருக்கென, அவர் விருப்பத்திற்குக்கென எதுவும் செய்ததில்லையே என்ற உணர்வும் உள்ளுக்குள் அழுத்தியது.  

தன் தந்தை தனக்கு வேண்டுமென மனதிற்குள் அனைத்து கடவுளையும் வேண்டினான். 

தன் நண்பனை அழைத்துத் தனக்கான பயண ஏற்பாடுகளைச் செய்தவன் ஊரிலிருக்கும் தன் சொந்தங்களுக்கும் அழைத்து ஆச்சியைத் தந்தை இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து வரக் கூறினான். பின் அவனும் கிளம்பி விடியலில் மருத்துவமனையில் வந்து இறங்கினான். 

எதையும் யோசிக்காமல் பதட்டத்தில் கிளம்பியவனை விதி அவன் ஊரை நோக்கி இழுத்தது.

Advertisement