Advertisement

அத்தியாயம் 28 

கயலின் பெற்றோர்களால் மகளின் ஆசையை நிராகரிக்க வாய்ப்பின்றி போனது. கயல் அன்புவை காதலன் என்றில்லாது கணவன் என்று கூறி அனைவரின் முன்னிலையில் தாலியையும் காட்டிய பின் அவர்களாலும் தான் என்ன செய்ய இயலும். 

அன்புவிற்கும் சந்திரனுக்கும் பெரிதாக வித்தியாசம் என்பதில்லை. சந்திரன் சற்று நெருங்கிய சொந்தம் அவ்வளவே, இதில் அன்பு குடும்பத்தாருடன் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அன்புவின் குணமும், பண்பும் அறிந்தவர் யாரும் அவனைத் தவிர்க்க இயலாது. 

ஊரே மெச்சும் படியாக இருவரும் வாழும் விதம் பற்றிப் பேசக் கேட்டறிந்திருந்தனர். அதிலும் கயலுக்குப் பெரிய வீட்டு மருமகள் என்று தரும் கவனிப்பையும், மரியாதையையும் காண்கையில் சந்திரன் வீட்டில் மருமகளாக இருந்திருந்தால் கூட இப்படி இருந்திருக்க மாட்டாள் என்றெண்ணி வியந்தனர். 

கயலிடம் உறைந்த மென்னகையும், புது பொழிவும் மேலும் அன்புவிடம் காணும் உற்சாகமும் இருவரின் இன்பமான இல்வாழ்க்கையைக் காட்ட, அதிலே பெற்றோர்கள் மனம் நிறைந்தனர்.

நாட்கள் செல்ல கயல் பெரிய வீட்டின் மருமகளாக தன் கடமைகளை நிறைவாகச் செய்தாள் என்பதை விடச் சிவகாமி சரியாகப் பயிற்று வித்திருந்தார் என்பதே சரி. காலையில் ஈரத் தலையில் இறுகக் கட்டி டவலோடு சுற்றுபவளை பிடித்தது அருகில் அமர்த்திக் கொண்டு, அவள் முடியை உலர்த்தி சிக்கலேடுத்து பின்னலிட்டு பூச்சூடி அழகு பார்ப்பார். அன்புவிற்கு ஒரு மனைவி வந்து அவளைத் தான் சீராட்டிப் பார்க்க வேண்டும் என்பதே அவர் நெடுநாள் ஆசை. 

தன் பேரனின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணும் பொழுதெல்லாம், என் குடும்பத்துக்கு மகிழ்ச்சியை அள்ளி வந்த மகாலட்சுமி என அடிக்கடி கூறுவார். அடியே ராசாத்தி என்றோ தங்கம் என்றோ தான் அழைப்பார் சிவகாமி. அன்பு செல்லம்மா என்றும் வேலையாள்கள் சின்னம்மா என்றோ அல்லது அம்மா என்றோ அழைக்க அந்த வீட்டிற்குள் அவள் பெயர் கயல் என்பதே மறைந்து போனது. 

வீட்டு நிர்வாகம் முழுவதும் கயல் தான் பார்த்துக் கொண்டாள். வீட்டின் சாவிக் கொத்தை இடுப்பில் சொருகி விட்டார் சிவகாமி. அவள் நடக்கும் போதெல்லாம் சாவிக் கொத்தின் சிணுங்கல் சத்தம் எப்போதும் அன்புவின் கண்களில் பட்டு கவனத்தை ஈர்க்கும்.

கயலிடம் அனுமதி கேட்காமல் வேலையாட்கள் எதுவும் செய்வதில்லை. அவளோ சிவகாமியிடம் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. 

ஊரில் யார் வீட்டிலும் சுபநிகழ்ச்சிக்கு செல்வதென்றால் கயலுக்குக் கழுத்து வலிக்கும் அளவிற்கு நகைகளை மாட்டி, பளபளக்கும் பட்டுக் கட்டி, தன்னோடு அழைத்துச் சென்று அனைவரிடமும் கயலைப் பெருமையாகக் கூறுவார் சிவகாமி. அதே போல் அங்குக் கயலுக்கும், சிவகாமிக்கும் வரவேற்பும் கவனிப்பும் சிறப்பாக இருக்கும். 

வசந்தாவிற்கு எதிர்பார்ப்பு ஏமாற்றமடைந்ததில் சற்றே வருத்தம். கயலுமில்லாது, ஜெயந்தியுமில்லாது வீடே வெறுமையுடன் காட்சியளித்தது. பெண்பிள்ளை இல்லாதது வீட்டிற்கே கலையில்லையே! ருக்மணிக்கு ஜெயந்தி இல்லாது கையில்லாதது போலிருக்க, எல்லாவற்றிக்கும் வசந்தா, வசந்தா, என மருமகளை அழைத்தார்.

அன்று சஷ்டி ஆகையால் காலையிலே குளித்து, சிவகாமியும் கயலும் ஊர் எல்லையில் குன்றின் மேலிருக்கும் முருகர் கோவிலுக்கு சென்றிருந்தனர். அவர்கள் உள்ளே செல்ல சந்திரனின் பெயரில் அர்ச்சனைக்கு கொடுத்துக் கொண்டிருந்தார் ருக்மணி.

இருவரின் வருகையைப் பார்த்தவருக்கு மனம் தாங்கவேயில்லை. அதிலும் இருவரும் ஒற்றுமை, பாசமுடன் உலாவுவதும், கயலின் மகிழ்ச்சி பொங்கிய முகமும் மாறிய தோற்றமும் காண்கையில் பொறுக்கவேயில்லை. 

இருவரின் காதுபடவே அர்ச்சகரிடம், “என்னைக்கு என் பேரனுக்கு நிச்சியமாச்சோ அப்போ இருந்தே அவனுக்கு நேரம் சரியல்ல, வேண்டாத வினையெல்லாம் அவனைத் தான் தேடி வருது. அவன் செய்யாத தப்புக்கெல்லாம் பழியை சுமக்க வேண்டிருக்கு!

பாம்புக்கு பாலூத்தி வளத்தா இப்படி தான் ஆகும். ஊமையாட்டம் இருந்துட்டு தான் உண்மையான முகமென்னனு காட்டிடுச்சுல அப்போவே சொன்னேன் யாரும் கேட்கலையே!” என ஜாடையாகக் கூறுவது போல் நேரடியாகவே சாடினார் ருக்மணி.

எப்போதாவது ருக்மணியும் சிவகாமியும் மற்றவரைப் பற்றி பொது இடங்களில் மற்றவர் புரியும் படி ஜாடையாகக் குறை பேசுவது தான். ஆனால் இன்று கயலைக் கூறியதும் தாங்கயியலாது கோபம் கொண்டார் சிவகாமி.

அவருக்குப் பதிலடி கொடுப்பது என்றெண்ணிக் கொண்டவர், “சாமி என் பேரனுக்கும், பேத்திக்கும் சேர்த்து அர்ச்சனை பண்ணுங்க, என் ராசாத்தி வந்த நேரம் தொழில் பெருகி, செல்வம் பெருகி சந்தோஷம் பெருக்கியிருக்கும்! எந்த கொல்லி கண்ணும் படாம இருக்கணும்என்றார். 

அதற்குள் பொறுமையில்லாத ருக்மணி நேராகவே, “ஏய் இந்தா யாரை சொல்லுற? வளத்த வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டு போன ஓடுகாளியை பார்த்து நாங்க கண்ணு போட போறமாக்கும்!எனக் குரல் உயரக் கேட்டார். 

வார்த்தையைப் பார்த்து பேசுடி, அவ விருப்பத்தை கேட்காமை நீயா நிச்சியம் பண்ணிட்டு அவளை துரோகினு சொல்லுற? அவளுக்குப் பண்ணப் பாவம் தான் உன் பேரன் இன்னும் கல்யாணமாகம இருக்கான், இனிமேலும் ஆகாது

ஏன் என் பேரனுக்கு என்ன? என் பேரனுக்கு ஊரே மெச்சுர மாதிரி கல்யாணம் பண்ணி காட்டுவேண்டி

க்கும், உன் கனவுல நடந்தா தான் உண்டு. இனி எந்த இளிச்ச வாயனாவது ரேஷன் பொருளை திருடுன திருட்டு பயலுக்கு பொண்ணு தருவானா? சீமையில தேடுனாலும் உன் பேரனுக்கு பொண்ணு கிடைக்காது இதுல ஊரே மெச்சுர மாதிரி கல்யாணம் பண்ணப் போராலாம்!

சிவகாமியும், ருக்மணியும் திருமணமாகி வந்த இளம் வயதில் ஒரே வீட்டிற்குள் சண்டையிட்டுக் கொண்டதை போன்று கோவிலில் சண்டையிட்டுக் கொண்டனர். கயல் தான் சிவகாமியைச் சமாதானம் செய்து அழைத்து வந்தாள். 

ருக்மணிக்கு ஆத்திரம் குறையவில்லை விரைவில் சிவகாமி வியக்கும் படி ஜெயசந்திரனுக்கு திருமணம் செய்ய வேண்டும் அதுவும் உடனே செய்ய வேண்டும் என்ற முடிவுடன் வீட்டிற்குச் சென்றார். 

உடனே திருமணம் செய்ய வேண்டும் என்றால் பெண் வேண்டுமே! எங்கே சென்று பெண்ணை பிடிப்பது என்ற எண்ணத்துடனே வீட்டின் வாசல் தாண்டி உள்ளே நுழைந்தார். 

அதே நேரம் ஊர் நிர்வாகம் சம்மந்தமாக விஜயராகவனிடம் பேசிக் கொண்டிருந்தார் இராஜமாணிக்கம். சற்றே சோகமுடன் பேசிக் கொண்டிருந்த இராஜமாணிக்கத்திடம் என்னவென்று விசாரிக்க, “உமக்கென்ன மச்சான் உம்மை புள்ளைக்கு ஜாம்ஜாம்மானு கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிட்ட! என் பொண்ணும் தான் இருக்காளே, டவுன்ல பெரிய பெரிய இடத்துல இருந்து மாப்பிள்ளையைக் கொண்டு வந்தாலும் வேண்டாங்குற!என்றார். 

ஏன் பூவுக்கு என்னவாம்? எதுக்கு வேண்டாங்குறா?”

அவளுக்கு இந்த ஊருல மாப்பிள்ள வேணுமாம், அப்போ தான் எங்கல பார்த்துக்க முடியுமாம். இந்த ஊருல நம்ம தகுதிக்கு எவன் இருக்கான்? ஒத்த புள்ளைய பெத்து வச்சி இருக்கோம், கழுதைக்கு வயசாகுது ஒரு கல்யாணத்தைப் பண்ணி பார்க்கலாம்னு நினைச்ச அடம்பிடிக்கிறாளே!

அட பெத்தவங்களை மனசுல வச்சி எம்புட்டு விவரமா பேசியிருக்கு புள்ள! நீ மாப்பிள்ளை பார்க்குற லட்ஷணம் தெரியாதா, உன் கட்சில பெரிய பெரிய தலைக வீட்டுல தானே பார்த்துருப்ப. பெரிய இடமா இருக்குறத விட நம்மைப் புள்ள நல்ல வச்சிப்பான்னு பார்க்கணும்னுடா. அவ சொல்லுற மாதிரி இங்கையே மாப்பிள்ளை பாரு

நீங்களே சொல்லுங்க மச்சான் இங்க எவன் நல்ல மாப்பிள்ளை இருக்கான்?” என்று கேட்ட நொடி, “ என் பேரன் ஜெயசந்திரன் இருக்கானே!என்றவாறு நின்று கொண்டிருந்தார் ருக்மணி. 

பேப்பர் படித்துக் கொண்டிருந்த சங்கரலிங்கம், மற்ற இருவருமென அனைவரும் என்ன பேசுவதென்றே தெரியாது சில நொடிகள் மௌனமாக நின்றனர். 

இராஜமாணிக்கமே, “என்ன அத்தே இப்படி..என ஆரம்பிக்கும் போதே, “என்னலே, என் பேரனுக்கு என்ன குற ராசாவாட்டம் இருக்கான், இதுக்கும் மேல என்ன வேணுமாம்?” என்றார். 

இல்ல, உங்க தகுதிக்கு நாங்க சமமாவோமா…?” என இழுக்க, “தகுதி பார்க்குறதா இருந்தா போயும் போயும் அந்த வேல்முருக மகளை நிச்சியம் பண்ணுவோம்மா என்ன? நாளைக்கு நாள் நல்லா இருக்கு நாளைக்கே பொண்ணு பார்க்க வறோம்னு உன் வீட்டுக்காரிக்கிட்ட சொல்லு!என முடிவாகவே கூறினார்.

அம்மா சந்திரன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு…என விஜயராகவன் ஆரம்பிக்கும் போதே, “நாமா சொன்னா சரின்னு தான் சொல்லுவான், அவன் அவசர பட்டதால பட்டதெல்லாம் போதும். நான் அவன் கிட்ட பேசிக்கிறேன். ரெண்டுபேரும் போய் ஏற்பாட்டைக் கவனிக்க என்றார். 

இவர்கள் பேசுவது அடுப்பறையில் கேட்க வசந்தா, “எம் புள்ளைய மட்டும் அவசர படுறான்னு சொல்லிட்டு இப்போ இந்த அம்மா எதுக்கு இம்புட்டு அவசர படுத்துன்னு தெரியலையே!என்றெண்ணினார்.

இரவு எதிர்வீட்டு மாடியில் கயல் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு கதை பேசிக்கொண்டிருப்பான் அன்பு. ஆகையால் அவர்கள் கீழே வந்த பின்னே மேலே படுக்கச் செல்வான் சந்திரன்.

சந்திரன் அன்றும் இரவு உணவை முடித்துக் கொண்டு கையில் பால் கிளாஸுடன் டிவி முன்பு சிறிது நேரம் அமர்ந்திருக்க, அவனிடம் சென்று பேசுமாறு வசந்தாவை தள்ளி விட்டார் ருக்மணி. அவரும் சென்று நாளை பெண் பார்க்கச் செல்ல இருப்பதாகவும் அவனும் உடன் வர வேண்டுமென்றும் அழைத்தார். 

பொண்ணு பார்க்கவா? யாரைக் கேட்டு இதெல்லாம் முடிவு பண்ணிங்க? என்பது போல் கத்தி பின் பெரியவர்களின் முடிவு என அறிந்து அமைதியானான். 

நீங்க போய் பார்த்துட்டு முடிவு பண்ணிக்கோங்க, எனக்கு முக்கியமான வேல இருக்கு. நாளைக்கு டவுனுக்கு கலக்ஷன்னுக்கு போகணும், பேங்க்ல மேனஜர பார்க்கணும், பெரிய பார்ட்டி புக்கிங்கு வருது ட்ரவல்ஸ்க்கு போகணும் என அடுக்கினான். 

இதெல்லாம் செல்வா பார்த்துப்பான், நீ எங்க கூட வரனும்ன்னு அத்தை சொல்லிட்டாங்க, அம்மாகாக வாட ராசா!என்று கெஞ்சலுடன் கேட்கச் சரியெனத் தலையாட்டினான். 

எழுந்து செல்ல இருந்தவர் பூங்கோதை தான் பார்க்க இருக்கும் பெண்ணென்று சொல்லக் குடித்துக் கொண்டிருந்த பால் புரையேற இறும்பினான். வசந்தா மெல்ல தலையில் தட்டிவிட, “பூவா? அந்த புள்ளையா?” என்றான்.

ஏதோ வேறு ஊர் பெண் என்று எண்ணிருக்க, பூங்கோதை என்றதில் ஆச்சரியம்! மனதில் அவளைக் காண முயல ஒரு இளம்பெண் உருவம் வந்ததே தவிர முகம் சரியாகத் தெரியவில்லை. அவளைப் பார்த்ததுண்டு ஆனால் வேறு எண்ணத்தில் கவனித்துப் பார்த்ததில்லை. 

சரி அப்போ நீங்க எல்லாம் போயிட்டு வாங்க, நான் அந்த புள்ளைய பார்த்தது தானே! வேலையைப் பார்க்க போறேன்என்றான். வசந்தா மீண்டும் கெஞ்சி அவனைச் சம்மதிக்க வைத்தார். 

எப்படி இருந்தாலும் எவளையோ கட்ட தான் போறேன், அது எவளா இருந்தாளும் என்ன? நம்மை வீட்டுக்கு ஏத்தவளா இருந்தா போதும் என்றெண்ணினான். கயலை கட்ட நினைக்கும் போதும் அவன் எண்ணம் இதுவாகத் தான் இருந்தது.

மறுநாள் மொத்த குடும்பமும் பெண் பார்க்கச் சென்று அமர்ந்திருந்தனர். திடீர் ஏற்பாடாகையால் ஜெயந்தியால் வர இயலவில்லை. தகவல் மட்டும் சொல்லி இருந்தனர். 

ரெங்கநாயகிக்கும், இராஜமாணிக்கத்திற்கும் அளவில்லா சந்தோஷம், மிகுந்த பணிவோடு வரவேற்று உபசரித்தனர். பூங்கோதைக்கும் வைர நகைகளை மாட்டி, இளம் ஆரஞ்சு வண்ண பட்டுடுத்தி கையில் காபியுடன் அழைத்து வந்தார் அவள் அத்தை. 

குனிந்த தலையை நிமிராமல் அனைவரும் காபியைக் கொடுத்து விட்டு அறைக்குள் சென்று கொண்டாள். அவள் வரும் போதும் காபியை எடுக்கும் போதுமென இருமுறை பார்த்தான் சந்திரன். 

அருகில் அமர்ந்து கொண்டிருந்த ருக்மணி அவனிடம், “எப்படிடா இருக்கு என் தேர்வு, நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் கருப்பட்டியாட்டம் இருக்கும், பூவ பார்த்தியா மஞ்சள வெல்லக்கட்டியாட்டம் இருக்கா?” என்க, ஆச்சி கூறிய உவமையை எண்ணி லேசாகச் சிரித்தவன் தலையாட்டினான்.  

என் பேரன் சிரிக்குறதுலையே அவன் சம்மதம் தெரிஞ்சிரிச்சி, எல்லாருக்கும் விருப்பம் தானே! இன்னும் எதுக்கு வெட்டியா பேசிக்கிட்டு அதான் ரெண்டு தாம்பூலம் இருக்கே மாத்திகிட்டு நிச்சியம் பண்ணிப்போம். அடுத்த மாசம் கல்யாணத்தை ஜாம்ஜாம்மானு கொண்டாடிலாம்என்றார் ருக்மணி. 

கருப்பட்டி, வேல்லக்கட்டின்னு சொன்னதும் சிரிச்சா அதையே சம்மந்தம்ன்னு மாத்தி சொல்லுதே! நம்ம ஆச்சி இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல பார்லிமென்ட்ல இருக்க வேண்டிய ஆளுதான்! என எண்ணிக் கொண்டான். 

இரு குடும்பங்கள் மற்றும் பூங்கோதையின் தாய்மாமா குடும்பம் என அனைவரின் முன்னிலையில் அனைவரின் மனம் நிறைய ஐயர் நிச்சிய பத்திரிக்கை வாசிக்க, இருவரின் பெற்றவர்களும் இருபுறமும் நின்று தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். 

இப்போது தான் ருக்மணி ஐயரையும் கையோடு அழைத்து வந்ததன் அர்த்தம் புரிய, ஒரு முடிவோடு தான் இருக்கு போல என்றெண்ணிக் கொண்டார் வசந்தா. நிச்சியம் இனிதே நிறைவடைய அனைவரும் விடைபெற்றுக் கிளம்பினர். 

வாசல் வரை வந்தவன் திரும்பி அவள் நிற்கிறாளா என்று பார்த்து, இல்லை என்றதும் வெளியில் வந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். 

ஜன்னல் வழியாக இரு சிறுமிகள் எட்டிப்பார்த்தவாறு நிற்க, லேசாகச் சிரித்து, அவர்களை நோக்கிக் கையசைத்தான். சிறுமிகளும் உற்சாகமுடன் கையசைத்து,”மாமா டாடாஎன்க, “டாடா! உங்க அத்தைக்கிட்டையும் சொல்லிடுங்கஎன மென்குரலில் கூறிச் சென்றான். 

ரெண்டே மணி நேரத்தில் ஊர் முழுக்க செய்தி பரவியது. வேலையாள் பேச்சியின் மூலம், சிவகாமியும், கயலும் அறிந்து கொண்டனர்.

இரவு உணவிற்குப் பின் அறையில் அமர்ந்திருந்த அன்புவிடம் வந்தவள், “உங்களுக்கு விஷயம் தெரியுமா? பூவுக்கும் சந்திரமாமாவுக்கும் இன்னிக்கு நிச்சியம் பண்ணி இருக்காங்க. இந்த பூவு ஆரம்பத்துல இருந்தே நடந்துக்குற முற சரியேயில்லைனு நினைச்சேன். சந்திரன் மாமா மேல காதல் போல, ஆனா இத என்கிட்டையே மறைச்சிட்டால்ல அவளுக்கு இருக்கு..என்றாள். 

அவளை இழுத்து மடியில் அமர்த்தி அணைத்துக் கொண்டவன் கன்னம், கழுத்து வளைவில் முத்தமிட்டவாறு, “லூசு பொண்டாட்டி! நீயா முடிவு பண்ணாத. அது ஏதோ பெரியவங்க எல்லாரும் பேசின சம்பந்தம் தான்னு நான் கேள்விப் பட்டேன் என்றான். 

அடிவயிற்றில் அழுத்தமாக அழுத்திய அவன் கைகளை மெல்ல விலகியவாறு, “ம்கூம், இல்ல நான் இந்த ஊரைவிட்டு போகமாட்டேன், என்ன பெத்தவங்களை விட்டுப் போக மாட்டேன், இந்த ஊரு மாப்பிள்ளை தான் வேணும்னு சொல்லுவேன் உங்களை மனசுல நினைச்சிக்கிட்டு. ஆனா பூவு அதே டயலாக்க அப்படியே சொல்லுவா. அப்பவே எனக்குச் சந்தேகம் தான் அப்படி என்ன இந்த ஊரு மேல பாசமாம்! நான் உங்களைப் பத்தி ஏதாவது தெரிஞ்சிகானும்மா ஜெயந்தி வீட்டைச் சுத்தி சுத்தி வருவேன், ஆனா அவளும் ஜெயந்தி வீட்டை சுத்தி சுத்தி வருவா தெரியுமா?

அவ்வளவு ஏன் ஜெயந்தி கல்யாணத்துக்கு முதல் நாள் எவ்வளவு சந்தோஷமா இருந்தா! மறுநாள் எனக்கும் சந்திரன் மாமாவுக்கு நிச்சியம் ஆனதும் என்ன மாதிரியே அவளும் கவலையா தான் இருந்தா! இதுலையே தெரியலையா அவ சந்திரன் மாமாவை விரும்பி இருக்கா, அவ என்ன ஆசை பட்டாலும் அவங்க அப்பா நிறைவேற்றிடுவாருஎன்றாள். 

அவள் கைகளை விலக்கிவிடவும் அவளை தூக்கியவாறு எழுந்தவன் மெல்ல மெத்தையிலிட்டு அணைத்திருந்தான். 

எத்தனையோ பாவத்துக்கு நடுவுல ஏதோ ஒரு புண்ணியம் பண்ணி இருப்பான் போல, அதான் அவனை நேசிக்குற பொண்னே பொண்டாடியா கிடைக்கப் போறா! நம்மள நேசிக்குற பொண்ணு பொண்டாட்டியா கிடைச்சா வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு அனுபவிக்கிறவனுக்குத் தான் தெரியும்என்க, “சந்திரன் மாமா பாவம் ஏதும் பண்ணாதே… என்றவள் தொடங்கும் போதே பேசவிடாது உதட்டோடு உதடு பதித்து அவள் நேசத்துக்குள் மூழ்கத் தொடங்கினான். 

Advertisement