Advertisement

அத்தியாயம் 27

காலையில் விழித்த பின் தன் இடையை அழுத்திக் கிடந்த அன்புவின் கரத்திலிருந்து அவன் உறக்கம் கலையாமல் மெல்ல விலகி எழுந்தாள். உடலெல்லாம் அழுத்தி, அசதியில் கணமாய் தெரிந்தது. இதமான சூட்டில் வெந்நீரில் குளித்ததில் சற்று அசதி நீங்கியது போலிருந்தது.

பூஜை அறைக்குள் சென்று விளக்கேற்றி வணங்கி குங்குமம் இட்டுக்கொண்டாள். மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது. இரவின் இனிய நினைவுகள் நினைவில் சுற்றி வர, மஞ்சள் முகம் சிவந்து செந்நிறமாகியது.

அவன் மீசை குத்திய கன்னங்கள், கழுத்தில் இன்னும் குறுகுறுப்பு ஓடுவது போன்றிருக்க மெல்ல தன் கைகளால் வருடிக் கொண்டாள். முகமே புது பொலிவில் மின்னி அழகு கூடியது. இதழில் புதைந்த வெட்க புன்னகை மாறவேயில்லை. 

அதே நினைவுகளுடன் இருவருக்கும் காபி கலந்து எடுத்துக் கொண்டாள். அவனிடம் சென்று கொடுக்க வேண்டுமே எவ்வாறு சென்று கொடுப்பது அவன் முகம் பார்க்கவே தயக்கமாக இருக்கிறதே! நேற்று காலை வரை அவன் கைகளில் காபி கிளாஸை திணித்ததுண்டு ஆனால் இன்று அவன் முன் செல்லவே வெட்கமாக இருக்கிறாதே! 

ஐயோ கயல் நீதானா இது இப்படி மாறிட்டியே! தனக்குள் கேட்டுக் கொண்டவள், இல்ல அவன் தான் மாற்றிவிட்டான் என்றெண்ணிச் சிரித்துக் கொண்டாள். தயங்கி தயங்கி அறையின் வாசல் வரை சென்று நின்றாள். 

அவன் உறங்கிக் கொண்டிருந்தாள் மேசையில் வைத்து விட்டு ஓடி வந்து விட வேண்டும், விழித்திருந்தால் என்ன செய்வது? யோசனையுடன் மெல்ல அறைக்குள் எட்டிப்பார்த்தாள். கண்களை நாற்புறமும் சுழல விட்டு அவன் இல்லை என்பதை அறிந்து உள்ளே சென்றாள். மேசையில் காபி கிளாஸ்ஸை வைத்து விட்டு அறைக்குள் தேடியவள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். 

உதிக்கும் கதிரவனின் ஒளிக்கரங்கள் குளத்து நீரில் பட்டு பிரதிபலிக்க, குளத்து நீருக்குள் இருந்து பூத்த கதிரவனைப் போன்று நீராடிக் கொண்டிருந்தான் அன்புச்செழியன். வடிவான உடல், வலுவான புஜங்கள், நீண்ட விரல்கள், அடர் கேசம், அளவான மீசை ஆணழகன் தான் உள்மனம் எண்ண உதட்டில் புன்னகை விரிந்தது. 

நீரில் மூழ்கி எழுந்து கைகளை வீசி நீந்தும் அழகை என்றுமில்லாது இன்று நின்று ரசித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாது இன்று கூடுதல் அழகோடும், கம்பீரத்தோடும் வசீகரித்தானோ? அல்லது இன்று தான் என் கண்கள் அவனை அளவிட்டதோ? தெரியாத குழப்பத்துடனே விலகியவள், அறையைச் சுத்தப் படுத்தி, படுக்கையும் சரி படுத்தினாள்.

மனம் உந்த மீண்டும் ஜன்னலோரம் சென்று எட்டிப்பார்த்தால் ஏமாற்றமே! எங்கே அவன் விழிகளைச் சுழற்ற, அடிவயிற்றில் சில்லென்று ஈர கரம் ஒன்று ஊர்ந்து செல்ல, பின் முதுகில் குளிர் நீர்த் துளிகள் சொட்டி ஆடைக்குள் வழிந்தோடியது. காதின் நுனியில் இதழ் பதித்து வருடியவாறு, “குட் மார்னிங்” என்றான் அன்பு. 

அவன் திடீர் செயலில் உடல் மொத்தமும் அதிர, அவனிடமிருந்து விலக முயன்று முடியாமல் போக, மேலும் பலமுடன் இடையிலிருந்த அவன் கைகளை விலக்கினாள். 

இரவில் கண்ட சுகம் வேண்டுமென்று உடலில் ஒவ்வொரு செல்லும் ஏங்க, ஆசையோடு அணைத்திருந்தான். ஏற்கெனவே அவள் விருப்பம் கேட்கவில்லையோ என்ற சஞ்சலம் இருக்க, அவள் தட்டிவிட்டதில் அதிகம் கோபம் கொண்டவன் நொடியில் கைகளை விலக்கித் தள்ளி, “பிடிக்கலையோ? பிடிக்கலைனா வெளியே போடிவாசல் நோக்கி கை நீட்டியவாறு கத்தினான்.

அவ்வளவு தான் கயலின் இதயம் சிதையில் வீழ்ந்து தகிப்பதைப் போன்று தவித்தது. பிடிக்கவில்லை என்றால் வெளியே போ! எவ்வளவு எளிதாக கூறிவிட்டான் அவ்வாறெனில் இவனுக்குச் சுகம் தர மட்டும் தான் நானா? இங்கு என் தேவை அவ்வளவு தானா? என்னும் போதே இதயம் விம்மி வெடித்து விடும் போல் வலித்தது.

மாங்கல்யத்துடன் நெஞ்சை அழுத்திப் பிடித்தவள் ஆத்திரம் பொங்க, விழிகளில் நீர் நிறைய அடிக்கும் பார்வை பார்த்தாள்.

யோவ் வெளிய போனா சொன்னா? எப்படியா உன்னால இப்படி ஒரு வார்த்தையைச் சொல்ல முடிஞ்சது. என்ன கேட்ட பிடிக்கலையானா? ஏன் என் கழுத்துல தாலி கட்டும் போது மட்டும் கேட்க தோணலையோ? அன்னைக்கு நீ பாட்டுக்கு உதறிட்டு போனையே திரும்பிப் பார்க்க ஏழு வருஷமா உனக்கு?

நீ கட்டிட்டையேனு ஒன்னும் இந்த தாலியைச் சுமந்து கிட்டு உன்ன ஏத்துகிடல அதுக்கு முன்னாலையே உன்ன விரும்பினேன்னு தான். ப்ரண்ட்ஸ் யாருகிட்டையாவது காதலிக்குறதா சொல்லுன்னு பந்தயம் போடும் போது யார் முன்னாலையும் பொய்யா கூட நிக்க முடியாம உன்ன தேடி வந்து, உன்ன தான்னையா விரும்புறேன்னு சொன்னேன். உண்மையா தான் சொன்னேன்.

நின்னா, குனிச்சா, படுத்தானு ஒவ்வொரு நிமிஷமும் என்ன பெத்தவங்களை கூட ஏமாத்தி தாலியை மறைச்சி வச்சி பாதுகாத்தேனே! எங்கே எனக்குக் கல்யாணம் பேச்சு வந்திருமோன்னு கஷ்டத்துல இருக்குற எங்க அப்பாவ மேல கஷ்டப்பட வச்சி காலேஜ் போய் படிச்சேன்டா. 

நீ எப்பா வருவேன்னு தெரியாம, இன்னைக்கு வருவ, நாளுக்கு வருவேன்னு ஊர் எல்லையில இருக்குற காளியம்மன் கோவில்ல வந்து எதிர்பார்ப்போடு ஏழு வருஷமா நின்னே தெரியுமா?

இது தெரியாம உனக்கு பொண்ணு பார்க்கலாமான்னு பூ கட்டிப் போட்டு என்னையே எடுக்க சொல்லுச்சு உங்க ஆச்சி அன்னைக்கு நான் எவ்வளவு துடிச்சேன்! நீ ஊருக்கு வந்துட்டேன்னு தெரிஞ்சதும் எவ்வளவு ஆர்வமாய் பெரிய வீட்டைச் சுத்தி வந்தேன்னு தெரியுமா? முதல் தடவ பார்க்கும் போது அன்னைக்கு இந்த வீட்டில வெயில்ல படுத்திருந்தையே அப்போது எனக்கு இவ்வளவு வலிச்சது, துடிச்சேன்.

அப்பா,அம்மாவுக்கு ஏங்குறையோ நினைச்சேன். உன்ன நெஞ்சோடு அணைச்சி உனக்கு எல்லாம நான் இருப்பேன்னு சொல்ல தோனுச்சு. ஆசையா மாமான்னு கூப்பிட்டா நீ திரும்பிக் கூட பார்க்காம போனையே அன்னைக்கே என் மனசு உடஞ்சிறிச்சி. 

ஏதோ என் மேல சின்ன கோபத்துல இருக்கன்னு நீ ஒவ்வொரு தடவை உதாசினப் படுத்தும் போதும் தன்மானத்தை விட்டு உன் பின்னாலையே சுத்தி வந்தேன்னே! அன்னைக்கு ஸ்கூல்லையும், தோப்புலையும் நீயா தான் என்ன நெருங்குன உரிமை கொண்டவன் தானேன்னு நான் விலக்காம இருந்தா நீ அதை நடிப்புன்னு சொல்லுற, அன்னைக்கே எனக்குச் செத்து விடலாம் போல இருந்துச்சி. 

ஜெயந்தி கல்யாணத்துல என்ன நடத்துச்சின்னு தெரியலை திடீரென என்ன கூட்டு போய் சந்திரமாமா பக்கத்துல உக்கார வச்சி அவங்களா தாம்புலம் மாத்திகிட்டாங்க. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை நீயும் அங்க இல்ல.

அங்க இருந்த இருபது நிமிஷமும் நெருப்புக்குள்ள இருக்குற மாதிரி இருந்துச்சு. ஊரே பார்க்க எனக்கு நிச்சியமா? மாலையைக் கழட்டிப் போட்டு நான் அன்புவோட பொண்டாட்டினு கத்தனும் போல இருந்திச்சி நீ அங்க இருந்திருந்தா அப்படிப் பண்ணியிருப்பேன். நீயும் இல்லாம ஒத்தையில தவிச்சி நின்னேன் என் மொத்த குடும்பமும் எனக்கே விரோதியா தெரிஞ்சாங்க.

உனக்கு ஒரு ஆபத்துனதும் என் உசுர விட உன்ன பெருசா நினைச்சி காப்பாத்தணும்னு நடுராத்திரி ஓடி வந்தேனே! என்ன பெத்தவங்களையும் என்னையும் பஞ்சாயத்துல அவ்வளவு கேவலமா பேசுனாலே உன் தங்கச்சியும், ருக்மணி பாட்டியும் அதை எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு உன் பக்கத்துல தான்னையா நின்னேன்.

அதுவரைக்கும் நீ அமைதியா தானே நின்ன! அன்னைக்குத் தாலியை எடுத்து காட்டலைனா என்னையா பண்ணி இருப்பா? உனக்கு தானே அவமானம்! வெளியே போன்னு சொல்லுறையே அப்பறம் எதுக்கு அன்னைக்கு கைபிடிச்சி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தியாம்                               

உள்ள மறைச்சி வச்சிருந்த தாலி என் நெஞ்சில உரசி உரசி ஒவ்வொரு நொடி உன்ன ஞாபகப்படுத்தி நீ அன்புவோட பொண்டாட்டியென்று சொல்லாம சொல்லி எனக்கு தைரியம் தருமே! உனக்கு எல்லாமாவும் நான் இருக்கன்னும்னு நினச்சேன்னே ஆனா நீ பிடிக்கலைன்னா வெளியே போன்னு சொல்லி இதுக்கு மட்டும் தான் நான் தேவைன்னு சொல்லாம சொல்லிடையே!

வெளியே போன்னு சொல்லுறதுக்கு பதிலை நீ என்ன செத்து போ..ன்..என முடிப்பதற்குள் அவள் வாயை அழுத்தி மூடியவன் இறுக்கி அணைத்திருந்தான். 

ஆத்திரத்தில் தொடங்கியவள் அழுகையில் முடித்தாள், அவன் அணைப்பிலிருந்து விலகப் போராடினாள். என்ன மன்னிச்சிருடி செல்லம்மா!என்றவன் இறுக்கி அணைத்து அவள் நெஞ்சில் புதைத்து அழுதான்.

தன்னால் தன் கயலுக்கு இத்தனை கஷ்டமா, அன்றே தன்னுடன் அவளை அழைத்துச் சென்றிருந்தால் இத்தனை கஷ்டம் அவளுக்கு இல்லையே.

தனக்கு யாருமே இல்லை என்று வெறுமை வாழ்வு வாழ்ந்தவனுக்கு எல்லாவுமாக அவளிருக்க அவள் காதலின் ஆழம் கண்டு பிரமித்தான். அவனையும் அறியாமல் விழியிலிருந்து இருதுளி அவள் நெஞ்சில் விழுந்து அவளை நனைத்திருந்தது. 

உலகையே வென்ற மகிழ்வில் இருந்தவன் அவளைத் தூக்கிச் சுற்றினான். கயலுக்கு அனைத்தையும் சொல்லியதில் மனதின் பாரம் குறைந்தது. லேசாக மனம் இலகினாலும் கோபம் குறையவேயில்லை ஒரு முறைப்புடன் பிடிவாதமுடன் அவனிடமிருந்து விலகி இறங்கினாள்.  

குண்டு குண்டு கண்களை உருட்டி, மூக்கு விடைக்க முறைப்பதைப் பார்க்கையில் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு. முயன்று சிரிப்பை அடக்கிக் கொண்டவன் அவளிடம் என்ன என்னவோ கெஞ்சினான். 

இறுதியில் பசிக்குதுடி என வயிற்றில் கை வைத்து பரிதாபமாகக் கேட்கவே அமைதியாக அடுப்பறைகுள் சென்று தோசை ஊற்றினாள்.

ஆனால் அங்கு வந்து சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு அவள் இடுப்பில் கிள்ள, பின்னலை பிடித்திழுக்க, கன்னத்தை உரசியவாறு காதுகளில் ஆடும் ஜிமிக்கியை சுண்டி விட, முந்தானையைப் பிடித்து அருகே இழுக்க, என அவளிடம் வம்பு பண்ணிக் கொண்டே இருந்தான்.

பிளேட்டில் இரண்டு தோசையை இட்டு அவன் முன் நீட்ட வாங்க மாட்டேன் என்பது போல் கைகளைக் கட்டிக் கொண்டான். சிறிது எடுத்து ஊட்ட முயன்றாள். அதற்கும் அவன் அசராமல் அவள் பேசும் வரை உண்பதில்லை என்பது போல் பிடிவாதமுடன் அமர்ந்திருக்க, கயல் எரிச்சலானாள். 

அதானே என் கையால தான் நீங்க சாப்பிட மாட்டீங்ககே! அன்னைக்கு நான் ஆசையா கொண்டு வந்த மீன் குழம்பையே தட்டி விட்டீங்களே!குரல் கமர கேட்டாள். 

அடியே என் லூசு பொண்டாட்டிஎன்றவாறு இடுப்பில் கரம் கோர்த்து அவளை அருகில் இழுத்தவன் வாய் திறக்க, அமைதியாக ஊட்டிவிட்டாள்.

அவ்வளவு தான் அவள் கோபமெல்லாம் அவன் பிடிவாதம் முன் காணாமல் போனது. இது தான் காதல் செய்யும் மாயமோ!  

ரைஸ் மில்லுக்கு ஒரு தடவை ஆச்சி சாப்பாடு கொடுத்துவிட்டு கொண்டு வந்தையே அப்போ நீ சமைச்ச சாப்பாட்டை மாத்தி கொடுத்து அதுவும் நான் சாப்புடுறேனான்னு ஒளிஞ்சி நின்னு பார்த்துட்டு தானே போனா? அன்னைக்கு உன் சாப்பாட்டை நான் சாப்பிட்டேனா?” 

யோசனையோடு அவள் தலை ஆம் என்பது போல் ஆட, அவளுக்கும் தோசையை ஊட்டிவிட்டவன், “மீன் குழம்பு நீ சமைச்சதா இருந்தாலும் நம்ம கம்மாமீனுன்னு சொன்னையே கம்மாமீனு ஏழுத்துல எடுத்தது சந்திரன் தானடி, அதான் அன்னைக்கு அவ்வளவு கோபம்!என்க, ஆமா சந்திரன் மாமா தான் கம்மாக் கரையிலே உக்காந்து மீனுக்கு சாப்பாடு போட்டு வளத்தாராக்கும் ரொம்ப தான் என எண்ணியவாறு உதட்டைச் சுழித்தாள்.

இன்னொரு தோசை மாமாஎன்றவாறு மீண்டும் ஒரு தோசையை வைக்க அதையும் உண்டு முடித்தவன், “ஆமா இப்போ மட்டும் மாமான்னு சொல்லுற? அப்போ மரியாதை இல்லாம பேசுனா?” ஒற்றை புருவம் தூக்கியவாறு கேட்டான்.

அது… அது… கோபம் வந்தா அப்படி தான்!என்க, “எனக்குக் கோபம் வந்தா என்ன செய்வேன்னு தெரியுமா?” என மென்சிரிப்புடன் கேட்டான்.

ம்ம், தெரியுமே அன்னைக்கு கோபத்துல என் கழுத்துல தாலி கட்டிட்டி…அப்பறம்…அப்பறம்…என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வராமல் போக, காலையில் விட்ட நாணத்தை மீண்டும் சூடிக்கொண்டு தலை குனித்தாள். 

அவன் பார்வையோ மேலும் சுவாரசியமுடன் அவள் இதழில் பதிய, “ம்ம்,சொல்லு அப்புறம்.. அப்புறம்..?”என்றவாறு நெருங்கி இருந்தவன் அவள் முகம் நிமிர்ந்து இதழோடு இதழ் மூடினான். முடிவில்ல முத்த யுத்தம் ஒன்று தொடர, அதில் கிறங்கியவள் விழி மூடி அவன் வெற்று மார்பில் சாய்ந்து தன் தளிர் மென்கரங்களால் அவன் மார்பின் முடிகளை வருடினாள்.

அதுவே ஒருவித சுகம் தர,மீண்டும் அவளைத் தூக்கியவன் தன் அறைக்குள் சென்றான். வித்தகனாக மாறியவன் புது புது காதல் வித்தைகள் பல கற்றுத் தந்தான்.

அந்தி மாலை வீட்டின் பின்னிருந்த மாந்தோப்பிற்குள் இருவரும் கைகோர்த்தவாறு சிறிது தூரம் நடந்தனர். அன்னைக்கு நயிட் எப்படிச் சரியா நேரத்துக்கு வந்த? இங்க ஆளுக ஒளிஞ்சி இருக்கிறது உனக்கு எப்படித் தெரியும்?” என்க, கயல் அன்று நடந்தது அனைத்தையும் கூறினாள்.

அன்பு சிறிது யோசனையுடன் நடக்க, “என்ன மாமா?அன்னைக்கு எதுக்கு நீங்க இத பஞ்சாயத்துல சொல்ல?”என்றவாறு அவன் தோள் சாய்ந்தாள். 

எதிர்ல நின்னவன் எதிரின்னு தெரியுது, துரோகி யாருன்னு கண்டு பிடிக்கணும். அதை நான் பார்த்துகிடுறேன் நீ விடு செல்லம்மாஎன்க, சரி என்பது போல் தலையாட்டியவள் உற்சாகமுடன், “மாமா மாங்கா வேணும்என ஒரு மரத்தை நோக்கி கை நீட்டினாள்.

அவனோ குறும்புடன் அவள் இடுப்பிலிருந்த கைகளை வயிற்றில் தவழ விட்டு, “அதுக்குள்ளையுமா இருக்காதே!என்க, சில நொடிகளுக்குப் பின்னே அர்த்தம் உணர்ந்தவள் மேலும் வெட்கமுடன் முகம் சிவக்க அவன் நெஞ்சில் சாய்ந்தாள். 

எனக்கு மாங்காவே வேண்டாம்” என்று சிணுங்க,”அடியே என்ன இப்படி சொல்லிட்ட? நான் பத்து புள்ளைக்கு பேர் யோசிச்சி வைத்திருக்கேன்!” என்றான் குறும்புடன். அவள் எதுவும் பேசாது மேலும் அவன் அணைப்பிற்குள் புதைந்தாள்.  

அவள் கேட்ட மாங்காவை பறித்துக் கொடுத்தவன், அவள் உண்டு முடிப்பதற்குள் மீண்டும் கைகளில் தூக்கி வீடு நோக்கி நடக்க தொடங்கி இருந்தான். 

அந்த அந்தப்புர சொர்க்கலோகத்தில் இருவரும் ராஜா, ராணியாக வாழ, இருநாள்களும் சொர்க்கத்திலிருந்ததை போன்று இருவருக்கும் இன்பமாய் கழிந்தது.  

மறுநாள் காலையில் கிளம்பியவர்கள் கயலின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு காலை உணவையும் அங்கே உண்டனர். மாலை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறியவன் கயலை விட்டுவிட்டு ரைஸ் மில்லுக்குச் கிளம்பினான். 

Advertisement