Advertisement

அத்தியாயம் 26

ஏனோ சரியாக தூக்கமில்லாமல் அதிகாலையிலே விழித்துக் கொண்டான் சந்திரன். எழுந்து கைகளை முறுக்கி சோம்பல் முறித்தவாறு கீழே பார்க்க, எதிர்வீட்டில் கேட்டிற்கு வெளியே தலையில் கட்டிய டவலோடு குனிந்து ஒரு பெண் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.

முகம் பார்க்காமலே அது கயல் தான் என்பதை உணர்ந்து கொண்டான். அன்புவின் வீட்டில் அவன் மனைவி கோலமிடுகிறாள்.

பலமுறை அன்புவுடன் கயல் பைக்கில் டவுனுக்கு செல்வதையும், கோவிலுக்குச் செல்வதையும் பார்த்திருக்கிறான். புதுமண தம்பதிகளாக ஊருக்குள் வலம் வருவதையும், பெரிய வீட்டு மருமகள் எனக் கயலை ஊர் மக்கள் மரியாதையுடன் அழைப்பதையும் கவனித்திருந்தான்.

காலையில் அவசரமாகக் கிளம்பும் அன்புவின் பைக்கை மறித்து நின்று, அவன் கைகளில் காபி கிளாஸை திணிக்கும் கயலையும், மாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் கயலைச் சீண்டியவாறு வீட்டிற்குச் செல்லும் அன்புவையும் பார்த்திருக்கிறான்.

எந்த நிலையில் அன்புவை நிறுத்தித் துடிக்க வைத்துப் பார்க்க நினைத்தானோ, அந்த நிலையில் இன்று அவன் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். தன் மனைவியாகக் கயலை வைத்துக் கொண்டு எதிர் வீட்டிலிருந்து அன்பு பார்க்க வேண்டும் என்று எண்ணியவன், இன்று அன்புவின் மனைவியாகக் கயல் இருக்க எதிர் வீட்டிலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்பு, கயலின் வாழ்க்கை இனிமையாய் சென்றது. காலையில் எழுந்ததும் கோழிப்பண்ணைக்கு விரைந்து செல்வான், சில மணி நேரத்தில் மீண்டும் வந்து அன்பு மனைவியின் கையால் காலை உணவை உண்டு விட்டு ரைஸ்மில், செங்கல் சூளை எனச் சுற்றிய பின் மதிய உணவிற்கு வீட்டிற்கு வருவான்.

மதிய உணவிற்குப் பின் சிறிது ஓய்வு என்பது கயலின் கட்டளை. மாலை வேலையிருந்தால் டவுனுக்குச் செல்வது, இல்லையெனில் வயல், தோப்பு என நிலங்களைக் கவனிப்பான்.

வீட்டில் அன்பு இருக்கும் போது அவன் ஒவ்வொரு அசைவிலும் கயல் இருப்பாள். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் அன்புவிற்கான அனைத்தையும் அவள் தான் செய்தாள். அவன் மறுத்தாலும் கேட்கமாட்டாள்.

அவன் பைக் சத்தம் முன் வாசலில் கேட்டால் மறு நொடிப் பின் சமையல் கட்டிலிருந்து கையில் தண்ணீர் செப்புடன் ஓடி வந்துவிடுவாள். கயலின் கொலுசொலி அந்த வீட்டிற்குள் இனிய கீதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

அன்றும் மாலையில் கிளம்பியவன் எதிரே வந்த கயலிடம், “நயிட் தோப்பு வீட்டுக்கு போயிடுவேன் சாப்பாடு வேண்டாம் ” என்றான் வேக நடையோடு.

அவன் பின்னே வந்தவள் அவன் படிகளில் இறங்கிவிட, வாசல் கதவில் சாய்ந்தவாறு அவனை பார்த்துக் கொண்டு நின்றாள். என்னவோ தோன்ற நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் அவளின் கண்களை உற்று பார்த்தான். அருகே வருமாறு கண்களால் அழைக்க முகம் முழுவதும் மலர, பத்து படிகளையும் நொடியில் தாண்டி அவன் அருகே சென்றாள். 

மீண்டும் பின்னிருக்கையைக் கண்களால் காட்ட, அவனை நெருங்கி அமர்ந்தவள் எப்போதும் போல் அவன் இடையை வளைத்து அணைத்துக் கொண்டாள்.

தோப்பு வீட்டின் கதவை திறந்து உள்ளே அழைத்து வந்தான். கயலின் கண்கள் ஆர்வமுடன் வீட்டைச் சுற்ற, “நான் டவுன் வரைக்கும் போயிட்டு வரேன், கவனமா இரு!” என்று கிளம்ப, தலையாட்டியவள் வாசல் வரை வந்து அனுப்பி வைத்தாள்.

நாலு கட்டு பெரிய வீடு சுற்றிலும் தூண்கள் இருக்க, நடுவில் நிலவொளி விழுவதற்கென திறந்த வெளியா இருந்த மேற்கூரை. நாற்புறமும் சுற்றிலும் அறைகள் இருந்தது. சமையலறை ஒருபுறமும் அதன் எதிர்புறம் பூஜை அறையும் இருக்க, மற்ற இரண்டு புறமும் இரு படுக்கையறைகள் இருந்தது. ஒருபுறம் அமர்வதற்கென நான்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

மற்றொரு புறம் பெரிய மர ஊஞ்சல் ஒன்றிருந்தது. வீட்டின் பின்வாசல் படிகளில் இறங்கினால் சென்று நிற்பது சிறு குளக்கரையில். செயற்கையாக வெட்டப்பட்ட சிறு குளம் நன்கு பராமரிக்கப் பட்டிருந்தது. பார்ப்பதற்குப் பழைய வீடு போன்று தோன்றினாலும், சமையலறை பொருட்களும், படுக்கையறையும் நவீன வசதிகளுடன் இருந்தது.

சமையலறையும், அன்புவின் அறையும் சற்று சுத்தமாக இருக்க, மற்ற அறைகள் இரண்டும் புழுதி மண்டிக் கிடந்தது. அவ்வளவு தான் இதைப் பார்த்தபின் சும்மா இருப்பாளா கயல் புடவையைத் தூக்கிச் சொருகி, நீண்ட பின்னலை கொண்டையிட்டாள். பூஜையறை முழுவதும் சுத்தம் செய்து, சாமிப்படங்களை தூசி துடைத்து வைத்து, பூஜை பொருட்களையும் சுத்தம் செய்து கழுவி வைத்தாள்.

மற்ற இரு அறைகளையும் சுத்தம் செய்து முடித்தவள் பின் சமையலறைக்குள் நுழைந்தாள். பருப்புத் தோசை என்றால் அன்புவிற்கு பிரியம் என எண்ணியவள் அனைத்து பருப்புகளையும் ஒரு கை அள்ளி ஊறவைத்தாள். அனைத்து பாத்திரங்களையும் சுத்தம் செய்து, மாவை அரைத்து பிரிட்ஜில் வைத்து விட்டு, முகம் கழுவி வெளியில் வந்தாள்.

அன்புவின் பெற்றோர் நினைவிடத்தைச் சுத்தம் செய்து, முன் வாசலையும் சுத்தம் செய்து நீர் தெளித்தாள். அப்போது தான் மலர இருந்த மல்லிகைப் பூக்களை பரித்து வந்து திண்ணையில் சாய்வாக அமர்ந்து பூக்களைத் தொடுத்தாள்.

அந்தி மாலை நெருங்கி இருக்க, வெளிச்சம் குறைந்து கருமேகங்கள் சூழ இருள் பரப்பிக் கொண்டிருந்தது. இளம்தென்றல் காற்று மண்வாசத்துடன் கலந்து வீசியது. மனமெல்லாம் அன்பு நிறைந்திருக்க, கன்னத்தைத் தீண்டிய குளிர்காற்றை ரசித்தவாறு மென் குரலில் காதல் பாடல் ஒன்றைப் பாடியவாறு பூக்களை தொடுத்து முடித்தாள்.

பின் அன்புவின் பெற்றோர் நினைவிடத்தில் பூப்போட்டு, விளக்கேற்றி வணங்கினாள். மீதமிருந்த பூவை தலையில் சூடிக்கொண்டாள். மழை வரும் போல் தோன்றியது.
லேசாகக் கழுத்து முதுகு வலிப்பது போல் தோன்ற உள்ளே சென்று ஊஞ்சலில் படுத்தாள் ஆனால் அவளையும் அறியாமல் அசதியில் கண்ணயர்ந்து விட்டாள்.

கனவுகள் கூட நுழைய முடியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் உடல் லேசாகக் குளிரில் நடுங்கியது. குளிரின் தாக்கம் சற்று அதிகமாக மெல்ல மெல்ல தூக்கம் கலைந்து விழித்துவிட்டாள். அப்போது இரவாகி இருக்க, மணியைப் பார்த்தால் இரவு எட்டு முப்பது, அன்பு இன்னும் வரவில்லை. 

லேசாகத் தூரிக் கொண்டிருந்த மழை அப்போது வேகமெடுத்து பலமுடன் பெய்யத் தொடங்கியது. அதை வேடிக்கை பார்த்தவள் லேசாக ஊஞ்சலை ஆட்டிக்கொண்டாள்.

காலில் ஏதோ கல் போன்று தட்டிவிட உள்ளங்காலிலிருந்து ஜில்லென்று பரவுவதைப் போன்றிருந்தது. அவள் என்னவென்று உணரும் முன்னே, சுற்றியெங்கிலும் பெரும் சத்தத்துடன் வீசப்பட்டதை போன்று சிறு சிறு ஐஸ்கட்டிகள் வந்து விழுந்தது.

உள்ளுக்குள் உற்சாகம் பிறக்க, தன்னை சுற்றிலும் மறக்க, சோர்வு பறக்க, சிறுமியாய் மாறியவள் “ஐய்ய்ய்.. ஆலங்கட்டி மழை!” கத்தியவாறு ஊஞ்சளிலிருந்து குதித்தே விட்டாள்.

சிறு சிறு ஐஸ்கட்டிகளின் மேல் குதித்து நின்றவள் உள்ளங்கால்களுக்குள் உருகுவதையும், அது தரும் குளுமையும்,குறுகுறுப்பையும் ரசித்தாள். மழையில் நனைந்தவாறு தேடித்தேடி ஐஸ்கட்டிகளை மிதித்து விளையாடினாள்.

மழை பொழியும் நாட்களில் கற்பகம் கயலை வெளியே விடுவதேயில்லை. அவள் அறையில் வைத்தே பூட்டிவிடுவார்.

இன்று வாய்ப்பு கிடைக்க, நேரம் சென்ற பின்னும் மழை நின்று தூறல் தூவிய போதும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” என அன்புவின் கோபக் குரல் திடீரென ஒலித்தது. வேகமுடன் திரும்பிப் பார்க்க நிலை வாசலின் உயரத்துக்குக் கோபமுடன் நின்று கொண்டிருந்தான் அன்பு. பேசாது அவனைப் பயத்துடன் பார்த்தவளின் உடல் குளிரில் நடுங்கியதை விட தற்போது அதிகம் நடுங்கியது. 

வெட்டுக்காயம் சரியாகி இருக்க, தற்போது தான் சற்று உடல் தேரியிருந்தாள். இப்போது மழையில் நனைகிறாளே எனக் கோபமுடன் வந்தவனின் பார்வை நொடியில் மாறியது.

நனைத்து உடலோடு ஒட்டிய புடவையும் நடுங்கிக் கொண்டிருந்தவளின் தோற்றம் அவனுள் என்னவோ செய்தது. மஞ்சள் முகத்தில் நீர்த் துளிகள் வழிந்தோடி ரோஜா இதழ் போன்ற செவ்விதழில் முத்து முத்துகளாக பதிந்து நின்றது. குண்டு கன்னமும், புடவை நழுவிய வெற்றிடையும் அதன் மென்மையை உணரத் தூண்டியது. உடலெல்லாம் சூடேறுவதைப் போன்றிருந்தது அவனுக்கு. 

அவன் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் பார்வை மாறுவதையும், தன் அங்கங்களில் அனல் வீச்சாய் பாய்வதையும் உணர, அவன் பார்வைக்கு எதிர்பார்வை பார்க்க இயலாது தலை குனிந்து நின்றாள். 

மெல்ல அவளை நெருங்கியவன் அவள் இடையில் மிக மென்மையாய், மெதுவாகத் தடவி அளந்தவாறு தன்னோடு அணைத்தான். அவள் முகம் நிமிர்த்தியவன்

சுட்டும்விழிச் சுடர்தான், — கண்ணம்மா!
சூரிய சந்திரரோ? 

வட்டக் கரியவிழி, — கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?

பட்டுக் கருநீலப் — புடவை
பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் — தெரியும்
நக்ஷத்தி ரங்களடீ!

சோலைமல ரொளியோ — உனது
சுந்தரப் புன்னகைதான்?

நீலக் கடலலையே — உனது
நெஞ்சி லலைகளடீ!

கோலக் குயிலோசை — உனது
குரலி னிமையடீ!

வாலைக் குமரியடீ, — கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய், — கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ?

ஆத்திரங் கொண்டவர்க்கே, — கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?

மூத்தவர் சம்மதியில் — வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;

காத்திருப் பேனோடீ? — இது பார்,
கன்னத்து முத்தமொன்று!

ஒற்றை விரல் தூரிகைகாய், உச்சி வகிடு, நெற்றி, விழி, நாசி, இதழ், கழுத்து என வருடியவாறு, அவள் அழகை வர்ணித்து மென்குரலில் பாடி முடிக்க, கயலின் இதழ்கள் முதல் முதலாய் முத்து முத்தமொன்றை அவன் கன்னத்தில் பதித்திருந்தது. 

அவ்வளவு தான் கோடி பொன் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத ஆனந்தத்தை ஒற்றை முத்தம் தந்திருக்க, பிறவிப்பயன் அடைந்த சந்தோஷ மிகுதியில் அவள் மெல்லிடையின் இருபுறம் கரம் பதித்துத் தூக்கிச் சுற்றினான். அவனின் திடீர் செயலில் பயந்து அவன் தலையை தன் நெஞ்சோடு கட்டிக்கொண்டாள். 

அவனோ மேலும் அவள் வயிற்றில் முகம் புதைத்து உரசி முத்தமிட்டான். அவன் குண்டூசி மீசை முடிகள் நடு வயிற்றில் குத்தியதில் உடலெல்லாம் சிலிர்த்தது.

சட்டென்று இறங்கிவிட்டவன் மழைத் துளிகள் இடைப்புகாத அளவிற்கு இறுக்கி அணைத்தான். ஏற்கெனவே சுற்றிய வேகத்திற்கு தலைச்சுற்றலாக இருக்கத் தாங்காது சரிய இருந்தவளைத் தாங்கி தன்மேல் சாய்த்துக் கொண்டு தரையில் சரிந்தான். மழை நின்றிருக்கக் குளிர்காற்று மேலும் அவர்களை நெருங்கச் செய்தது.

அவள் கழுத்து வளைவில் காயத்தின் தடத்தில் முத்தமிட்டு காதோரம் “கண்ணம்மா” என மயங்கிய குரலில் அழைத்தான். செல்லம்மா காதல் கண்ணம்மாவாக மாறியிருந்தாள். அந்த அழைப்பில், அந்த குரலிலே அவள் கிறங்கினாள். 

முகமுழுவதும் முத்தமிட்டவாறு மழைத் துளிகளையும் உறிஞ்சினான். இறுதியில் உதட்டோடு அழுத்த முத்தமொன்றைப் பதிக்க, கைகளும் அவள் மேனியில் வலம் வந்தது. 

மொத்தமாகத் தன்னிலை மறந்திருந்தவள் குளிரில் நடுங்கிய உடலில் அவன் உஷ்ண உதடு பட இதமாய் உணர்ந்தாள். அவன் இதழொற்றல் உடலெல்லாம் வேண்டும் போல் தோன்றியது. அவன் தோற்றுவித்த உணர்வுகள் புதிதாய், சுகமாய் இருந்தது.

அவள் எண்ணமறியாமலே வேகமுடன் உடல் முழுவதும் இதழ் பதித்து உஷ்ணம் பரப்பியிருந்தான். அவன் இதழ் பட்டு உடலெல்லாம் சிலிர்த்துச் சிவந்தது. அவளிடமிருந்து மறுப்பு இல்லாமல் இருக்க, இருந்தாலும் கவனிக்கும் நிலையிலும் இல்லாது முன்னேறினான்.

அவளோ அவனை அணைத்து கன்னம், கழுத்து, கேசம் கோதி முத்தமிட்டு அவனுக்கு மேலும் வேகம் கூட்டினாள். அவன் வேகத்தில் மிரண்டாலும் விளக்கவில்லை. அவன் இம்சைகளை சுகமாய் தாங்கினாள். அவன் கைகளில் அவள் நாணம் விலக, மெல்ல மெல்ல அவள் பெண்மை மலர்ந்தது.

ஏழுவருட ஏக்கம், பத்து நாட்கள் அவள் அருகிலிருந்தும் விலகி இருந்த தவிப்பு அனைத்தையும் அந்த நொடியே அவளிடம் காட்டிவிட முயன்றான். 

இந்த உடல் வேண்டாம், உயிர் காற்றாகி அவளுள் கலந்து கரைந்திட வேண்டும். உதிரமாய் மாறி அவள் உடலெங்கும் ஓடி அவளை அறிந்திட வேண்டும். அவள் இதயமாகி அவளோடு அவளுக்காக துடித்திருக்க வேண்டும்.

இருவருக்குமிடையில் இடைவெளி என்பதே வேண்டாம். ஏன் இரு உடல் என்பதே வேண்டாம் என்பது போல் அவளை மேலும் நெருங்கி அணைத்து அவளுள் கலந்தான். அவள் சோர்ந்தாலும் முடியாத உறவாக்கினான்.

மெல்லிய நூல் சேலைக்குள் இருவரும் ஒருவராய் காதலில் கட்டுண்டு கிடைக்க அவர்களைத் தொந்தரவு செய்யாது மெல்ல விலகி மேகத்திற்குள் மறைந்து கொண்டான் சந்திரன்.

பின்னிரவில் சற்றே விழித்தவன் ஈரத்தரையில் படுத்திருப்பதை உணர்ந்து அவளையும் அறைக்குள் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்து அணைத்தவாறு படுத்துக் கொண்டான். 

அரை உறக்க நிலையில் மனதில் லேசான சஞ்சலம், அவளின் விருப்பமில்லாமல் தாலி கட்டினேன், விருப்பமில்லாமல் வீட்டிற்குக் கூட்டி வந்தேன். இப்போதும் தன் ஆசை, அவசரத்தில் விருப்பமில்லாது அவளை நெருங்கி விட்டேனோ? என்றெண்ணினான்.

அனைத்தையும் அவளிடம் அனுமதி கேட்கவில்லை தான் அதற்கான அவளுக்கு விருப்பமில்லை என்ற அர்த்தமில்லையே! அனைத்தும் அவளிடம் கொண்ட உரிமையின் வெளிப்பாடு என்பதை அவன் உணரவேயில்லை.

தூக்கத்தில் சற்று தள்ளி உறங்கியவளை இழுத்து மீண்டும் தன் மேல் போட்டு அணைத்துக் கொண்டு உறங்கினான். அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் விடும் நிலையில் இல்லை அவன். அவன் தேவையாக மாறியிருந்தாள் அவள்!

Advertisement