Advertisement

அத்தியாயம் 25 

பஞ்சாயத்திலிருந்து கிளம்பியதும் கல்யாணம் நின்றதில் துக்கம் போல் சில உறவுகள் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பினர். 

மேலும் சிலர், “உடனே பண்ணனும்னு அவசரப்படா இப்படி தான் ஆகும். எதுவும் பொருத்தம் பார்த்து முடிவு பண்ண வேண்டாமா? அதுவும் அந்த புள்ளைக்கு விரும்பமில்லாம, கட்டிட்டாயப்படுத்தியா பண்ணுறது?” என்பது போல் பேசிச் சென்றனர். 

சந்திரன் வீட்டில் யாரும் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. வசந்தா ஒரே அழுகையில் கரைய, அதைக் கண்டு பரிதாபம் கொண்டு ருக்மணியும் அமைதியாக அமர்ந்து விட்டார். 

விஜயராகவன் உறவுகள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி அனுப்பிவைத்துக் கொண்டிருந்தார்.சங்கரலிங்கமும் அமைதியுடன் அமர்ந்துவிட்டார்.

நள்ளிரவு தாண்டிய பின்னும் சந்திரன் இன்னும் வீட்டிற்கு வராமல் இருக்க, அதற்கும் சேர்த்து வசந்தா பயத்தில் அழுது புலம்பினார். செல்வாவை அழைத்து சந்திரனைத் தேடி அழைத்து வருமாறு அனுப்பி வைத்தார் விஜயராகவன். 

ஜெயந்தி அறையில் அவளும் அழுது கொண்டிருந்தாள். “ஐயோ நானே அன்பு அண்ணனையும் என் கயலையும் என்ன என்னவோ பேசிட்டேனே! கடவுளே என்ன இப்படி ஒரு நிலமைல ஏன் நிக்கவச்ச? என்ன துரோகின்னு சொல்லிட்டாங்களே!” என அழுது ஆற்றாமையில் கரைந்தாள். 

அவளை அணைத்து கண்ணீரைத் துடைத்த விக்னேஷ், “அழாதடா நீ உன் ரெண்டு அண்ணங்களுக்கும் நல்லது தான் பண்ணி இருக்க, என்னைக்காவது ஒரு நாள் அவங்களே இதை புரிஞ்சிப்பாங்க” என்றான்.

அந்த ஆச்சி என்ன துரோகின்னு சொல்லிட்டங்களே! சந்திரன் அண்ணனுக்கும் என்னால எவ்வளோ பெரிய அவமானம்” என்க, 

இன்னைக்கு நம்மாளுக, ஊர்காரங்களும் தானே இருந்தாங்க, அதுவே நாளைக்கு கல்யாணத்துலனா இதைவிட அதிகமா தானே ஆள் இருப்பாங்க, நாளைக்கு அன்பு மச்சானால அவமானப் படுறத விட இன்னைக்கு பட்டுகிட்டதே நல்லது தானே! ஏதோ சந்திரன் மச்சானுக்கு நேரம் நல்லா இருந்திருக்கும் போல!” என கிண்டல் போல் கூறினான்.

மூக்கை உறிஞ்சியவாறு அவனை முறைத்து பார்க்க, “சரி உனக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சது?”என்றான். 

காலையில துணி காயப் போட மேல போகும் போது அண்ணனும், செல்வா அண்ணனும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டேன். அன்பு அண்ணனுக்கு எவ்வளோ பெரிய பாவத்தைப் பண்ண நினைச்சி இருக்காங்க! 

எங்க அண்ணனுக்கு வசதி,வீரம்,கௌரவம், மரியாதை, அன்பான குடும்பம், உயிரான நண்பன், இது எல்லாத்துக்கும் மேல தாய்ப்பாசமென்னு எதுலையும் குறையில்லை. ஆனா அன்பு அண்ணாவுக்கு உயிரே கயலு தான் அவளைத் தவற யாருமில்லை.

அதையும் பலிவாங்கன்னு பறிக்க நினைச்சி இருக்காங்ககே! கயலு என்ன பொம்மையா இவங்க இஷ்டத்துக்கு விளையாட? 

அதன் செல்வா அண்ணாவைப் பஞ்சாயத்தை கூட்டவேண்டாம்னு சொன்னதைக் கேட்டேன். அதனாலே நானே பூவு அப்பாக்கிட்ட சொல்லி கூட்டிட்டேன்” 

சரி கயலுக்கு கல்யாணமானதும் உனக்குத் தெரியுமா?”

எனக்கு அவங்க ரெண்டுபேரு மேலையும் சின்ன வயசுல இருந்தே சந்தேகம் தான். ஒரு தடவை விளையாட்டு பந்தயம் கட்டுனோம். கயலு யார்கிட்டையாவது காதலை சொல்லனும்னு நீ போய் சந்திரன் அண்ணா கிட்ட சொல்லிடு, வீட்டுல போய் நான் உண்மையை சொல்லிடுறேன்னு சொன்னேன்.

ஆனால் அவ வேண்டாம்னு சொல்லிட்டு அன்பு அண்ணாவ தேடி அவருகிட்ட தான் காதலிக்குறதா சொன்னாள். எல்லாம் விளையாட்டுக்குத் தான் பண்ணோம்.

அதுக்கு அப்பறம் அன்பு அண்ணா அடிக்கடி அவகிட்ட பேச வருவாங்க. அன்னைக்குச் சொன்னது பொய்ன்னு சொல்லிடு கயலுன்னு எத்தனையோ முறை சொல்லியும் அவ கேட்கலை. அப்பறம் எண்ணாச்சினு தெரியல அன்பு அண்ணா ஊருக்கே வரலை. 

பஞ்சாயத்துல ரெண்டு பேரும் காதலிக்குறாங்கன்னு நிருபிச்சி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு மட்டும் தான் நினைச்சேன். அப்பறம் வேற வழி இல்லாம சிவகாமி பாட்டியும், எங்க மாமாவும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்கன்னு நினைச்சேன். ஆனால் அவங்க உண்மையாவே காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டுதுலாம் எனக்குத் தெரியாது” 

சரி விடுமா, நீ பண்ணது எல்லாம் நல்லதுக்குத் தான். கல்யாணம் முடிஞ்சி பதினச்சு நாள் இங்கவே இருந்துட்டோம், நாளைக்கு நாள் நல்லா இருக்காம் நாமா ஊருக்கு கிளப்பனும்னு அம்மா சொன்னாங்க” என்க, ஜெயந்தியின் முகம் வாடியது. இவளை விட்டா அழுதுக்கிட்டே இருப்பா! விட்டா தானே என்றெண்ணி இழுத்து அணைத்துக் கொண்டான்.

வயல், தோப்பு,ரைஸ்மில்,பண்ணை என்று எங்குத் தேடியும் சந்திரனை காணவில்லை. ஊருக்குள்ளும் செல்வா தேடியும் கிடைக்கவில்லை எனவே பெரியாற்றின் கரை பக்கம் போனான். பகல் பொழுதிலே அங்கு யாரும் செல்வதில்லை. 

ஆற்றின் கரையோரத்தில் ஒரு மணல்மேட்டில் கவிழ்ந்து கிடந்த சந்திரனைக் கண்டுகொண்டான் செல்வா. அவன் அருகே சென்று பார்க்க அவன் போதையில் அரைமயக்க நிலையில் இருப்பது தெரிந்தது. 

அவன் தோப்பு வீட்டில் இருப்பதாகவும் தானும் உடனிருந்து கவனித்துக் கொள்கிறேன் பயப்படத் தேவையில்லை எனவும் காலையில் அழைத்து வருவதாகவும் சந்திரன் வீட்டிற்குத் தகவல் சொல்லிவிட்டு, அவனைத் தோப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

இதுவரை சந்திரனை அப்படி ஒரு நிலையில் யாருமே கண்டதில்லை. எப்போதும் கம்பீரமாகச் சுற்றி வருபவன் இன்று சோர்ந்து கிடந்தான். ஏமாற்றத்தை அறிந்திராதவன் முதல் முறையாக ஏமாற்றத்தின் வலி அறிந்தான்.

இடைவிடாது தெளிவின்றி அன்பு கயலின் பெயர்களையே உளறிக் கொண்டிருந்தான். அவனுக்கு உணவூட்டி படுக்க வைத்த செல்வாவை நகர விடாது பிடித்து அருகே அமர்த்திக் கொண்டு வேதனையுடன் பேசினான். 

அன்பு கயலைக் கடையில் பார்த்தது, கோவிலில் பார்த்தது, பள்ளியில் அவர்களை நெருக்கமாகப் பார்த்தது என அனைத்தையும் போதையில் உளறினான். 

அந்த பயலை சும்மா விடக்கூடாது, ஊர கூட்டி அவமானப் படுத்திட்டான். நான் சும்மா விடமாட்டேன்டா, அவனை சும்மா விட மாட்டேன்” எனக் கோபம் கொண்டு கத்தினான்.

என்னடா சந்திரா ஏழு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லுறானே, அப்போ அந்த புள்ளைக்கு பதினேழு வயசுதானலே இருக்கும். அப்படினா இந்த கல்யாணம் சட்டப்படி சொல்லாதேடா!” என வெகு நேரச் சந்தேகத்தைச் செல்வா கேட்டான்.

அவனை நிமிர்ந்து ஒரு கோணல் பார்வை பார்த்தவன் அவன் முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டு, ” உன்ன கேட்டேன்னா? ஏழுவருஷமா நின்னா, படுத்தா, குனிஞ்சானு தாலிய பத்திரமா மறச்சி வச்சி எவ்வளோ தவிச்சி இருந்துப்பா என் கயலு. ஓடிப் போனவனுக்கா காத்திக்கிட்டு இருந்திருக்காளேடா! 

நான் பார்க்குற போதெல்லாம் அந்த அன்பு தான்டா கயலுக்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருந்தான். அதுக்காக தான் கல்யாணத்துக்கே அவசர அவசரமா ஏற்பாடு பண்ணேன். அவை மட்டும் அன்பு தான் வேண்டுமென்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருந்தா ஏழு வருஷத்துக்கு முன்னாடியே அவன் எங்க ஒளிச்சி இருந்தாலும் தூக்கிட்டு வந்து அவ கிட்டக் கொடுத்திருப்பேன். அவளைத் தவிக்க வச்ச அவனை சும்மா விட மாட்டேன்டா! 

கயலு காவக்காரி காளிடா! எங்க அம்மா ஆண்டாளுடா! என் தாயி மதுர மீனாட்சிடா! அவா சாமிடா! என் கயலு சந்தோஷமா வழனும்டா கயலு..கயலு…” என்றவாறு உறங்கிப்போனான். 

இவன் என்னடா அன்பு மேல கோபமாவும் இருக்கான். அதே அளவுக்கு அந்த புள்ள மேல பைத்தியமாவும் இருக்கான். போதையில தானே புலம்புகிறான், எண்ணிய செல்வா தரையில் ஒரு விரிப்பை விரித்துப் படுத்துக் கொண்டான். 

சந்திரனின் மனதில் கயல் ஒரு நீங்கா நிலையான இடத்தில் இருக்கிறாள் என்பதை அவனே அறியவில்லை.

அதிகாலையில் கயல் எழுந்ததுமே மீண்டும் ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் அன்பு.

சற்றே நிலைமை சரியாக அனைவரும் இயல்புடன் இருக்க, ஜெயந்தியைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பும் ஏற்பாட்டிலிருந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சந்திரனை எழுப்பி வீட்டிற்கு அழைத்து வந்தான் செல்வா. 

சந்திரன் தெருவிற்குள் நுழையத் தெருவே பரபரப்புடன் தென்பட்டது. அவன் எதிர்வீட்டில் பந்தல், தோரணம், வாழைமரம் என்று கட்டப்பட்டிருந்தது. பட்டுப்புடவை அணிந்த பெண்கள், ஊர் மக்கள், சிறுவர்கள், வேலையாட்கள் என அனைவரும் வருவதும் போவதுமாய், மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர். 

எல்லாம் அவன் எண்ணப்படி நடந்திருந்தால் இது எல்லாம் சந்திரன் வீட்டில் இந்த நேரம் நடந்து கொண்டிருக்கும். ஆனால் அவன் வீட்டிலோ நேற்றிருந்த பந்தல், அலங்காரம், உறவுகள் அனைவரும் காணாமல் போய் மகிழ்ச்சியைத் தொலைந்த வெற்றிடமாய் காட்சியளித்தது.

சந்திரனும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, ஜெயந்தியை அவள் கணவனோடு புகுந்த வீடு அனுப்பி வைத்தான். பின் அங்கிருக்க பிடிக்காமல் ரைஸ் மில்லுக்குச் சென்று விட்டான்.

டவுனுக்குச் சென்றிருந்த அன்புவும் கயலும் வீட்டிற்கு வந்தனர். ஒரே நாளில் சிவகாமியின் ஏற்பாட்டைப் பார்த்து வியந்தே போனர். அறைக்குள் வந்த சிவகாமி அன்புவிடம் பட்டு வேஷ்டியும், கயலிடம் சிவப்பு பட்டையும் கொடுத்து அணிந்து வரச் சொன்னார்.

தன்னை மணக்கோலத்தில் காண வேண்டுமென்பது ஆச்சியின் வெகுகால ஆசை என்பதை அறிந்திருந்தான். வயதானவரின் ஆசைக்காக தனக்கு ஆர்வமில்லை எனினும் தயாரானனர்.

சில நிமிடங்களில் இரண்டு மூன்று பெண்களுடன் வந்த சிவகாமி கயலுக்கு அலங்காரம் பண்ணச் சொன்னார். காசுமாலை, கல்லுவச்ச அட்டிகை, ரெண்ட்வடச் சங்கிலி, வைர கல்லுவச்ச தோடு, நாலு கல்லு மூக்குத்தி, மயில் டாலர், சிவப்பு கல்லு பதிச்ச நெக்லஸ்,ரெண்டு கைகள் நிறையத் தங்க வளையல், வெள்ளிக் கொலுசு எனக் கயல் மேல் அடிக்கிட்டு கொண்டே இருக்க, பார்த்துக் கொண்டிருந்த அன்பு தான் மிரண்டு போனான்.

ஆச்சி இதெல்லாம் வேண்டாம், அவளுக்குக் கழுத்து வலிக்கும். இதுவே போதும் இன்னும் வேண்டாம்” எனக் கெஞ்சலுடன் கேட்க, சிரித்துக் கொண்ட சிவகாமி அவன் பேச்சைக் கேட்பதாய் இல்லை.

இப்போ எப்படிடா இருக்கு?” என முழு அலங்காரத்தில் கயலை நிற்க வைத்துக் கேட்டார் சிவகாமி.

அத்தனை லட்சனங்களும் பொருந்தச் செதுக்கிய பவளச் சிலைக்கு பொன்னாபரணங்களால் அலங்கரித்து நிற்க வைத்தது போன்றிருந்த கயலை இமையசைக்காது ரசித்தான். 

சிவகாமி இருவரையும் அழைத்து வந்தார். அறையிலிருந்து வெளியே வர, முன் வாசலில் கயலின் பெற்றோர்கள் வருவதைப் பார்த்து சிவகாமியே முன் சென்று அழைத்து வந்தார். 

நேராக அன்பு, கயலிடம் வர, “வாங்க மாமா, வாங்க அத்தை”என இருவரையும் புன்னகை முகமாக வரவேற்றான். 

கயலு உன்ன பெத்தவடி நானு என்கிட்ட கூட மறச்சிட்டியே! ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேடி தங்கம்!” எனக் கற்பகம் கேட்க, கண்கலங்கியவாறு தலை குனிந்தாள். 

அடியே கிறுக்கி! புள்ளைய கலங்க வச்சிக்கிட்டு இருக்க, வந்த வேலையை பாருடி” என அதட்டினார் வேல்முருகன். 

எங்க மேல கோபமில்லையே மாமா!” அன்பு கேட்க, நிறைந்த புன்னகையோடு மறுப்பாய் தலையாட்டினார்.

சில நகைகளையும், பத்திர தாளையும் அன்புவின் கைகளில் வைத்தவர், “ஏதோ எங்களால முடிச்ச அளவு என் பொண்ணுக்கு செய்யுற சீறு தம்பி” என்றார்.

அவற்றை அவர் கைகளிலே மீண்டும் வைத்து இறுக்கமுடன் பற்றிக்கொண்டு, “இதெல்லாம் நான் உங்களுக்கு தரேன் மாமா, ஏழு வருஷமா என் பொண்டாட்டியை வளத்து, படிக்க வச்சிருக்கீங்க. என் உசுரு பத்திரமா பார்த்து காத்திருக்கீங்க! எனக்கு இதெல்லாம் வேண்டாம், ஆனா நான் கேக்குறதா மறுக்காம தருவீங்களா?” என்றான். 

என்ன கேட்கப் போகிறான் எனக் கயலும் அவன் முகத்தையே பார்க்க, “என்ன மாப்பிள்ளனு கூப்பிட மாட்டீங்களா?” எனக் கேட்டதே கூப்பிடுங்களேன் எனக் கெஞ்சுவது போன்றிருந்தது. சிறு குழந்தைபோல் அன்பிற்குக் கெஞ்சுவது தன் அன்பு தானா? என ஆச்சரியமாகப் பார்த்தாள் கயல்.

சிறுவயதில் கண்மாயில் சந்திரனுக்கு நீச்சல் சொல்லித்தரும் போதும், கோவில் திடலில் சிலம்பம் சொல்லித்தரும் போதும், அவனை மாப்பிள்ளை என்று அழைத்ததைப் பலமுறை பார்த்தவாறு சென்றிருகிக்கிறான் அன்பு. அவரோடு நெருங்கிப் பழக வேண்டும் என்ற ஆசை அவனுள் சிறு வயதிலிருந்தே இருந்தது. 

பின் இருவரும் மனையில் அமர்த்தப்பட, சுற்றமும், உறவும் சுழல கயலின் கழுத்தில் பொன் தாலி பூட்டினான். மீனாட்சி, சுந்தரர் திருக்கல்யாணம் பார்த்ததை போன்று அனைவரும் மனநிறையை வாழ்த்தினர். 

பூஜையறையில் விளக்கேற்றி வணங்கிய பின்னர் பெரியோரிடமும் ஆசி பெற்றனர். உறவுமுறை பெண்கள் இருவரையும் அமர வைத்து, பால், பழம் கொடுத்து, பின் திருஷ்டி கழித்து வாழ்த்தினர்.

மாமேதி கழுகுமலை மாமேதி கழுகுமலை
நாதர் மேல் கல்யாணம் மங்களம், குங்குமம் பெறுக!
சொக்கரலிங்க சாமி துண கொடுத்த மாங்கல்யம், காமச்சி அம்மா கை கொடுத்த மாங்கல்யம், மீனாட்சி அம்மா மீங் கொடுத்த மாங்கல்யம்.

போராலாம் போராலாம் பொன்னிருக்கும் பட்டனாமாம் நாடு கடந்து, நந்தவனம் கடந்து, ஊரு கடந்து ஒரு நாள் வழி கடந்து.

கப்பல்ல அரிசி வரும்சீமையில இருந்து குதிர வரும், சிவகாசி மேள வரும். 

உயர்ந்த குதிர வரும், ஒட்டம்பட்டி யான வரும்.

வெள்ள குதிரயில வெள்ளாள ஏறி வரகருத்த குதிரயிலகம்மாள ஏறி வர, சீனி குதிரயில மாப்பிள்ள சீமானன் ஏறி வர,

பட்டத்து குதிரயில பாண்டி மன்னன் ஏறி வர, சாதி குதிரயில மாப்பிள்ள சமத்துவம் ஏறி வர. 

எட்டத்துல இருந்து பாத்தா மாப்பிள்ள எள ராசா போலிருக்கும்பக்கத்துல இருந்து பாத்தா பாண்டி மன்னன் போலிருக்கும்தூரத்துல இருந்து பாத்தா துற மன்னன் போலிருக்கும்! 

என்ற மங்கல வாழ்த்து பாடலையும் கும்மி கொட்டி பாடி, மஞ்சள் குங்குமமும் பூசி பல்லாண்டு இன்பமாய் வாழ வாழ்த்தி, விருந்துண்டு கிளம்பினர்.

தன் வேலைகளை முடித்த பின் இரவு அறைக்குள் சென்றான் அன்பு. மரகத பட்டில், தலை நிறைய மல்லிகையோடு கட்டிலின் நடுவே அமர்த்தப் பட்டிருந்தாள் கயல். 

காலையில் கண்டதை விட தற்போது கூடுதல் அழகில் மிளிர, பார்வையால் அவளைத் தீண்டியவன் மெல்ல நெருங்கி அவளருகில் அமர்ந்தான். 

நாணமுடன் தலை கவிழ, அவள் இடையில் கரம் தவழ பின்னிருந்து அணைத்தான். மல்லிகையின் வாசமிழுந்து அவள் பட்டு கன்னத்தை மென்மையாய் தடவி, “செல்லம்மா..!”ஆழ்ந்த மென்குரலில் அழைத்தான். 

அவன் புறம் திரும்பி மார்பில் சாய்ந்தாள். அவள் புடவை நழுவ தன்னோடு சாய்ந்தவளை அணைத்து கட்டிலில் சாய்ந்தான். விழிகளை மூடிக்கொண்டு மேலும் அவன் மார்பில் சுகமாய் சாய்ந்தாள். 

ஒருகையால் அவள் முடிகளை முன்புறம் ஒதுக்கி வருடியவன், மறுகையால் அருகே டேபிளில் இருந்த ஆயில்மென்ட்டை எடுத்து அவள் காயத்தில் மென்மையாகப் பூசிவிட்டான்.

அவன் மார்பில் தாடையை ஊன்றியவாறு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். தன் இமைகளைச் சிமிட்டியவன், “தூங்குடி செல்லம்மா” என்று முன் உச்சியில் இதழ் பதித்தான். மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு விழி மூடி உறங்கினாள்.

ஆடை, அலங்காரத்தில் அழகோடு தெரிந்தாலும், சோர்வும்,களைப்பும் அவள் கண்களில் தெரிந்ததைக் கண்டு கொண்டான்.

Advertisement