Advertisement

அத்தியாயம் 24

அன்று கயல் தன் காதலைச் சொல்லிய பிறகு அதீத சந்தோஷத்தில் சுற்றினான் அன்பு. அவன் கல்லூரியிலும் வெளியிலும் சுற்றும் காதலர்களை பார்க்கும் போதெல்லாம் கயலின் ஞாபகம் தான். 

இதில் அவன் ரூம்மெட் மனோஜ் வேறு மொபைலில் இரவெல்லாம் அவன் காதலியோடு ஓயாது பேசிக்கொண்டே இருந்தான். காதல் தரும் சந்தோஷத்தை கயலோடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையும், ஏக்கமும் அவனுள் பரவியிருந்தது.

அவளுக்கு என்ன பிடிக்கும் என்றெல்லாம் தெரியாது ஆனால் எதையாவது வாங்கிக்கொண்டு தான் வருவான்.

இரண்டு நாள் விடுமுறை கிடைத்தாலும் ஊருக்கு ஓடி வந்துவிடுவான். ஊரில் அவனுக்கு வேலை எதுவும் இல்லை அவளை பார்ப்பதற்காகவே வருவான்.

ஒருமுறை சிறுவர்களோடு ஆல மரத்தடியில் நொண்டி விளையாடிக் கொண்டிருந்தாள் கயல். அன்பு கையில் ஒரு கிப்ட் பாஸுடன் வந்து நின்றான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் அழகாய் ஒரு புன்னகையை உதிர்த்து, குதித்து, குதித்து விளையாடியவாறு, “எப்போ வந்தீங்க?” என்றாள். 

தன் சைக்கிளை நிறுத்தி அதில் ஏறி அமர்ந்து கொண்டு அவள் விளையாடும் அழகை ரசித்தவாறு, “இங்க வாயேன் உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன்!” என அழைத்தான்.

அவளோ குதித்து விளையாடிக் கொண்டே, “என்னனு சொல்லு மாமா” என்றாள்.

இங்க பாரு செல்லம்மா” என அழகான பொன்னிறத்தில் வெள்ளை கற்கள் பதித்த டைட்டன் கைக்கடிகாரத்தை எடுத்துக் காட்டினான்.

சரியாக இரண்டு தினங்களுக்கு முன்பு தான் ஜெயசந்திரன் கயலுக்கும், ஜெயந்திக்கும் ஒரே போல் கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்திருந்தான்.

அதை நினைவில் கொண்டு, “எனக்குச் சந்திரன் மாமா வாங்கிக் கொடுத்தது இருக்கு, இது வேண்டாம்” என்றாள் நிமிர்ந்தும் பாராமல்.

அவனுக்கோ நொடியில் முகம் வாடியது. சந்திரன் எவ்வாறு வாங்கித்தரலாம் என்ற கோபமும், தான் ஆசையுடன் வாங்கி வந்ததை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லையே என வேதனையும் தோன்ற அமைதியுடன் சென்றுவிட்டான்.

மாலை பள்ளி முடித்து கயல் தனியாக நடந்து வந்து கொண்டிருக்க, அவளருகே வேகமாக வண்டியை ஓட்டி வந்து நின்றான். அவளும் நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க, “செல்லம்மா புல்லட் நல்லா இருக்கா? புதுசு! அப்பா வாங்கி தந்தாரு” எனச் சந்தோஷமுடன் கூறினான்.

அவளும் ஆர்வமுடன் பார்த்து, தடவி, “ரொம்ப நல்லா இருக்கே! சந்திரமாமாவுக்கு கூடப் போன வாரம் தான் அவங்க அப்பா வாங்கிக் கொடுத்தாங்க” என அவன் கேட்காத தகவலையும் சேர்த்துச் சொன்னாள். 

வந்து வண்டியில ஏறு, டவுன் வரைக்கும் போயிட்டு வருவோம்” என அவள் கை பிடித்து அழைத்தான்.

எதுக்கு?” பட்டெனக் கேட்க, “தியேட்டர் போகலாம் படம் பார்ப்போம், இல்ல கடைக்கு போலாம்” என்றான். 

அவள் தோழிகள் எல்லாம் வகுப்பில் இருக்க கயல் மட்டும் ஸ்பெஷல் கிளாஸ்சிலிருந்து தப்பித்து, சிறுவர்களோடு சிறுவர்களாகப் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறி இருந்தாள்.

அவர்கள் அனைவருக்கும் மாங்காய் பறித்து வைத்திருக்க வேண்டும் இல்லை எனில் ஆசிரியர்களிடமும்,பெற்றோரிடமும் மாட்டிக் கொடுத்து விடுவார்கள் மேலும் இவனோடு டவுனுக்கு சென்றால் இரவு தான் திரும்பி வரயிலும் என்றெல்லாம் நினைத்தவள், “எங்க அப்பாவும் டவுனுக்குப் போயிருக்காரு, நான் தோப்புக்குல புல்லுக்கட்டு எடுத்துட்டு போய் மாட்டுக்கு போடணும், அது பட்டினியா இருக்கும் நேரம்மாச்சு!” என்றாள்.

புது வண்டியை எடுத்துட்டு எவ்வளவு ஆசையா பார்க்க வந்தேன்! மாட பத்தி கவலை படுறவா மனுஷனை கண்டுக்க மாட்டிக்காளே! அவளும் என்ன விரும்புகிறாளே அப்போ எனக்குத் தோன்றும் எண்ணங்கள் அவளுக்கும் தோனனுமே? என நினைத்துக் கொண்டான். 

அடுத்த முறை விடுமுறைக்கு வரும் போதும் ஒரு புது மொபைல் வாங்கி வந்திருந்தான்.

அவர்கள் ஊரில், தென்னை, வாழை, மரங்கள் தான் அதிகம். அன்புவிடம் மட்டுமே கொய்யாப்பழத் தோப்பு இருந்தது. ஊருக்கு வெளியே தெற்கே பெரியாற்றின் கரையில் அமைந்திருந்தது. இளம் பச்சை வண்ணத்தில் குண்டுக் குண்டான கொய்யாக் கனிகள் பார்ப்போரை கவர்த்திழுக்கும்.

விடுமுறை நாள்களில் தோழிகள் அனைவருடனும் மாலை பெரியாற்றிற்குச் சென்றாள் கயல். நீராடி முடித்தவர்கள் அருகே இருந்த கொய்யாத் தோப்பிற்குள் புகுந்தனர். அனைவரும் வெவ்வேறு திசையில் சென்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழங்களைப் பறித்து விட்டு விரைவாகச் சாலைக்கு வர வேண்டும் எனப் பேசிச் சென்றனர்.

சிறிது தூரம் உள்ளே சென்று பழங்களைப் பறித்த கயல் திரும்பிப் பார்க்க சுற்றிலும் மரங்கள் எந்த வழியாக வந்தோமென்று தெரியவில்லை. பயமில்லை தான் ஆனால் சாலைக்குச் செல்ல வழி தெரியாமல் முழித்து நின்றாள். சருகுகள் சலசலக்கும் சத்தத்தில் திரும்பிப்பார்க்க, அன்பு வருவதைக் கண்டாள். 

அவனிடமும் பயமில்லை ஆனால் இப்படி திருடியாகவா அவனிடம் மாட்ட வேண்டும் தன்னையே நொந்து கொண்டு ஒளிந்து கொள்ள ஓடியவளை அன்புவின் கரங்கள் இரு அடிக்கு மேல் நகரவிடவில்லை. அப்போதுதான் குளித்து வந்ததால் இனிய நறுமணத்துடன் புதிதாய் பூத்த பனிமலரை போன்றிருந்த மென்மையான கன்னத்தை வருடி, அவளை இழுத்து அணைத்தான்.

திருடி நான் இருக்கும் போதே தோப்புல பழத்தை திருடுறியா? இது தப்பாச்சே தண்டனை கொடுக்கணுமே! ம்ம்ம்…என்ன தண்டனை கொடுக்கலாம்?” என யோசனை செய்வது போல் பாவனை செய்து கன்னத்தைக் காட்டியவன்,”மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு விடுறேன்!” என்றான்.

முதல் முறையாக உணர்ந்த அணைப்பின் அழுத்தம், தாவணி நழுவிய ஈர இடுப்பில் உரசியதால் அவன் முடி நிறைந்த கைகள் தந்த குறுகுறுப்பில் இதயம் படபடக்க, அவன் கைகளை விலக்கி அவனிடமிருந்து விலகி நின்றாள்.

என்ன எப்படி நீங்க திருடின்னு சொல்லலாம், இந்த மொத்த தோப்பும் ஏன் இந்த தோப்போட சொந்தக்காரரே எனக்கு மட்டும் தான் சொந்தமாக்கும்” என்றாள் உதட்டைச் சுளித்துக் கொண்டு.

அவள் தோளில் கைபோட்டு நடந்தவாறே, “அப்படி பார்த்தாலும் நீ திருடி தான்டி, என் இதயத்தையே திருடிட்ட, ஐ லவ் யூ திருடி”என்று இடது கையை தன் இதயத்தில் மேல் வைத்தான்.

ஒரு கொய்யா பழத்தைக் கடித்துக் கொண்டே, “எனக்கு உங்க இதயம்லாம் வேண்டாம் வெளியே போறதுக்கு வழி காட்டுங்க போதும். என்னைவிட்டு அவளுக மட்டும் போயிருப்பாங்களே!” என்றாள் கவலையுடன். 

அட என் மக்கு பொண்டாட்டி! இன்னைக்காவது எங்கூட புலட்டுல வாடி” என்றவாறு வண்டியின் அருகே அழைத்து வந்திருந்தான்.

வண்டியின் அருகே வந்ததும் ஒரு பார்சலை நீட்டினான். அவன் ஏதோ ரசகுல்லா அல்லது அல்வா வாங்கி வந்திருப்பான் என்றெண்ணி ஆர்வமுடன் பிரித்தால் உள்ளே ஒரு புது மொபைலும், விலையுயர்ந்த சிவப்புப் பட்டும் இருந்தது. 

புடவையைக் கையில் எடுத்தவள், “இது யாருக்கு எனக்கா?” என்க, “இல்ல உன் சந்திரன் மாமாவுக்கு” என்றான் மென் சிரிப்புடன். 

கயல் முறைப்பதைப் பார்த்தவன், “சரி,சரி விடு, அம்மாவுக்கு வச்சி சாமி கும்பிட்ட புடவை அதான் உனக்கு எடுத்துட்டு வந்தேன். அந்த மொபைலும் உனக்குத் தான் பத்திரமா வச்சிக்கோ, நான் காலேஜ் போயிட்டு கால் பண்ணுறேன்” என்றான். 

அவனை யாரும் கவனிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை. இதெல்லாம் கொண்டு சென்றால் தன் பெற்றோரின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? இரவில் தாய் அருகே படுத்திருக்க, மற்ற நேரங்களில் தோழிகளுக்கும், சிறுவர்களும் அருகே இருக்கத் தனிமை என்பதேயில்லை. பின் எவ்வாறு இதைப் பயன்படுத்த? மேலும் இதெல்லாம் தனக்கு தற்போது தேவையில்லை என்றெண்ணினாள்.

பார்சலை அவன் கையில் கொடுத்தவள், “உங்ககிட்டையே இருக்கட்டும் நான் அப்பறம் வாங்கிக்கிடுறேன்” என்று ஓடிவிட்டாள்.

தன் அன்னைக்குப் படைக்கப் பட்ட புடவையை வேண்டாம் என்று மறுத்ததில் கோபமும், மொபைலை வேண்டாம் என மறுத்ததில் தன்னிடம் பேச விருப்பமில்லையோ என்றெண்ணி வருத்தமும் கொண்டான். 

நான்கு மாதங்களுக்குப் பின் அன்பு மீண்டும் வந்திருந்தான். கயலும், ஜெயந்தியும் கோவிலுக்கு மாலை செல்வதாக முடிவு செய்திருந்தனர். 

ஜெயந்தியால் செல்ல முடியாது போக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த சந்திரனிடம் வசந்தா தொடுத்து வைத்திருந்த பூச்சரத்தைக் கொடுத்தவள் கயலிடம் கொடுக்கச் சொன்னாள்.

எல்லைக் காளியம்மன் கோவில் மரத்தடியில் கயல் காத்துக் கொண்டிருந்தாள். கயல் கோவிலுக்குச் சென்றிருப்பதை அறிந்திருந்த அன்புவும் அவளைப் பார்க்கச் சென்றான்.

கோவிலுக்குள் வந்த சந்திரன் மரத்தடியில் நின்ற கயலின் அருகே சென்று ஜெயந்தி கொடுத்ததாகப் பூவை கொடுத்துவிட்டு அவசர வேலை எனக் கூடனே கிளம்பிச் சென்றுவிட்டான். 

மல்லிகை சரத்தை எடுத்து நான்காக மடித்து தலையில் வைக்கும் போது சட்டெனத் தட்டிவிட்டான் அன்பு. கயல் திரும்பிப் பார்க்க, கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்த அன்புவை கண்டு சற்றே நடுங்கினாள்.

சிறுவயதில் ஒருமுறை பெற்றோருடன் கோவிலுக்குச் சென்றிருக்க, கோவில் வாசலில் பூவாங்கினர். கடைக்காரன் தரும் போது அன்னை வாங்காது தந்தை முகத்தைப் பார்க்க, அவர் கைகளால் வாங்கித்தரவும் மகிழ்வோடு வாங்கிக் கொண்டார்.

நன்றாகக் கவனித்திருந்த அன்பு, பின்னர் அன்னையிடம் விளக்கம் கேட்க, ஒரு பெண்ணிற்குப் பூவும், குங்குமமும் கொண்டவன் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அன்னை கூறியது அவன் மனதில் ஆழமாய் பதிந்திருக்க தற்போதைய கயலின் செயல் அவனுக்குப் பல மடங்கு கோபத்தை கொடுத்தது. 

முதல் முறையாக அவன் கோபத்தைப் பார்க்கிறாள். இதுவரை அவள் கண்டதெல்லாம் கொஞ்சும் பார்வையும் புன்முறுவல் பூத்த முகமும் மட்டுமே. 

கீழே கிடந்த பூவையும், கயலின் முகத்தையும் வெறித்துப் பார்த்தவன் கோபமுடன் அவள் தோள்களை இறுகப் பற்றி,”உனக்கு அறிவில்லையாடி, நான் கொடுத்தா மட்டும் வாங்கிக்க மாட்டிக்க கண்ட நாய் கொடுக்குறது எல்லாம் வாங்கிக்கிற. இன்னைக்கு பூ கொடுப்பான், நாளைக்கு புடவை கொடுப்பான், அடுத்த நாள் தாளியே காட்டுவான். நீயும் சிரிச்சிகிட்டே வாங்கிக்கோ. இனிமே நீ அவன்கிட்ட, இல்ல அந்த குடும்பத்துக் கிட்டையே பேசுனா…நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கோ…” எனக் கோபத்தில் கத்தினான். 

அவன் பற்றியிருந்த தோள்கள் இரண்டும் வலியைக் கொடுக்க, சந்திரனைக் குறைவாகப் பேசியது கோபத்தைக் கொடுக்க, அவன் அதட்டல், அதிகாரம் அடங்கக்கூடாது என்ற வேகத்தை கொடுக்க, அவன் கைகளைத் தட்டிவிட்டாள். 

அப்படி தான் வாங்கிப்பேன், சந்திரமாமா தான் என் மாமா அவரை நீங்க எப்படித் தப்பா பேசலாம்? நான் அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன். உங்களால தடுக்கக் கூட முடியாது. உங்களுக்கு என்ன உரிமையிருக்கு? நீங்க யாரு எனக்கு?” என அவளும் வார்த்தைகளின் அர்த்தம் கூட உணராது கத்தினாள். 

அன்புவின் கோபமோ எல்லைகளைக் கடந்து சென்று கொண்டேயிருந்தது. “அன்னைக்கு நீயா தானடி காதலிக்கிறதா வந்து சொன்ன?” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான். 

அதை உண்மைன்னு நம்பிட்டீங்களா? இன்னுமா நியாபகத்துல வச்சிருக்கீங்க? அது சும்மா என் ப்ரண்ட்ஸ் கூட பந்தயம் கட்டுனதால சொன்னேன். அன்னைக்கு அவளுக எல்லாரும் மரத்து பின்னாடி நின்னு பாத்துகிட்டு வேற இருந்தாளுக. அன்னைக்குச் சொன்னது எதுவும் உண்மையில்ல, சந்திரன் மாமா மட்டும் தான் எப்பவும் எனக்கு மாமா” என அலட்சிய சிரிப்புடன் அவன் முகத்திற்கு முன் கூறினாள்.

காதலைச் சொல்லி ஒருவருடத்திற்குப் பின் இப்போது வந்து பொய்யென்றால் அவன் காதல் மனது ஏற்குமா? கண்ட நாள் முதலாய் காதலியாய் எண்ணி, காதலைச் சொன்ன நாள் முதலாய் மனைவியாய் வாழ்ந்தவன்.

காதல் கற்பனையில் கயலோடு ஒரு கண்ணாடி மாளிகையே கட்டி இருக்க, அதைச் சந்திரன் என்ற சிறு கல் கொண்டு நொறுக்குவதா? தனக்கு என்ன உரிமை என்று கேட்டவள் தனக்கு மட்டுமே உரிமையானவளாக இருக்க வேண்டும். அவளை எப்படியேனும் தன் வாழ்வில் இணைத்துக் கொள்ளும் வேகம் வெறியாய் மாறி இருக்கத் தன்னிலையே மறந்தான். 

மரத்தில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றை உருவியவன், அருகே இருந்த நாற்பது அடி உயர அம்மன் சிலை முன்பு அவள் கரம்பற்றி இழுத்து வந்து அவள் கழுத்தில் கட்டினான். 

உன் உரிமை என்னவென்று நிறுப்பித்துவிடு எனக் காதல் கொண்ட உள் மனது உந்த, அவள் முகத்தை நிமிர்த்தி இதழோடு இதழ் பதித்தான். அவள் உயிரையே உரிச்சி விடுவது போன்றிருந்த ஒற்றை முத்தத்தின் வேகம் தங்காது உடல் நடுங்க, கால்கள் தள்ளாடியது. அவள் இதழ்த் தேன் தித்திப்புடன், உதிரத்தின் உவர்ப்பையும் உணர்ந்த பின்பே விடுவித்தவன் அவளை விலக்கிச் சென்றான். அவளோ நிற்கவியலாது தரையில் விழுக, அவன் திரும்பியும் பாராது சென்றான். 

ஸ்ம்ம்..ம்மா..” என்ற முனங்களொலியில் கண் திறந்து பார்க்க, கயல் புரண்டு படுத்து காயத்தில் அழுத்தியதால் வலியில் சுணங்கினாள். 

அவள் உறக்கம் கலையாது அவளைத் தூக்கி தன் மார்பில் கிடத்திக் கொண்டவன் அவள் தலையை மென்மையாக வருடியவாறு, “என்ன மன்னிச்சிருடி செல்லம்மா, உன் விருப்பமில்லாம தான் தாலி கட்டுனேன், பஞ்சாயத்துல ரெண்டுபேரும் விரும்பிக் கட்டிக்கிட்டதா பொய் சொன்னேன். உனக்கு தெரியாதுடி, நீ இல்லாமா என்னால உயிர்வாழவே முடியாதுடி” விழி மூடியவாறு இன்னும் ஏதேதோ புலம்பியவன் இறுதியில் உறங்கினான். 

தன் சொர்க்கம் கைக்குள் கிடைத்த மகிழ்ச்சியில் அவனும், தான் சேரவேண்டிய இடம் சேர்ந்த நிம்மதியில் அவளுமென இருவரும் பலவருடங்களுக்கு பின் நிம்மதியாக நித்திரை கொண்டனர்.

Advertisement