Advertisement

அத்தியாயம் 23

சந்திரனின் ஆட்கள் கயலைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை என்றும் அன்பு ஊருக்கே இன்னும் வரவில்லை என்றும் தகவல் தர, கயல் எங்குச் சென்றால் எனச் சந்திரனுக்குக் குழப்பமாக இருந்தது. 

நண்பகல் நெருங்கி இருக்க, தென்னந்தோப்பில் வந்து அமர்ந்திருந்தான் சந்திரன். வேல்முருகனையும் இன்னும் சந்திக்கவில்லை யாரேனும் கேள்வி கேட்டால் கூட தன்னிடம் பதிலில்லையே என்றெண்ணி அமர்ந்திருக்க, செல்வா வேகமாக, பதட்டமுடன் வந்தான்.

வந்தவன் பேச ஆரம்பிப்பதற்குள், “என்னடா அந்த சரவணன் அண்ணனாவது ஊருல இருக்காங்களா?” எனக் கேட்டான் சந்திரன்.

அவனோ அதைவிடப் படபடப்புடன், “டேய் ஊருல பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டி இருக்காங்க! அப்பா உன்ன உடனே கூட்டியாரச் சொன்னாங்க. ஊரே அங்க தான் இருக்கு” என்றான் பைக்கில் இருந்து இறங்காமலே.

சந்திரனும் பைக்கின் பின்புறம் ஏறி அமர்ந்தான் மனத்திற்குள்ளோ பஞ்சாயத்தை கூட்டுனது யாரா இருக்கும், நம்ம விஷயத்துக்காகத் தான் கூட்டமா? ஐயோ இதனால கல்யாணத்துல பிரச்சனை வந்திடுமே! என்றெண்ணினான்.

செல்வாவோ, “விடியல்ல நாலு மணிக்கெல்லாம் ஒரு போன் வந்ததாம் உடனே சரவணன் அண்ணா எங்கன்னு சொல்லாம வேகவேகமா கிளப்பி போய்டங்களாம் மதினி சொன்னாங்க!” என்றான்.

அன்பு வீட்டிற்கு வந்த ஒருவன், சிவகாமியிடம் பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும் அவரையும் உடனே அழைத்து வரச் சொன்னதாகவும் கூறி அழைத்துச் சென்றான்.

ஊர் நடுவே இருந்த முத்துமாரியம்மன் கோவிலுக்கு வலதுபுறம் இருந்த பெரிய ஆலமரத்தடியில் ஊரே கூடி நின்றிருந்தனர். மரத்தடியில் அமைக்க பட்டிருந்த மேடையில் வெள்ளை வேஷ்டி சட்டையில் பெரிய மீசையுடன் மூன்று தலைமுறைகள் பார்த்த பெரியவர்கள் அமர்ந்திருக்க, உடன் ராஜமாணிக்கமும் அமர்ந்திருந்தார்.

சந்திரன் வீட்டாள்கள், உறவினர்கள் என அனைவரும் ஒருபுறம் கூடி நின்றிருந்தனர். மற்றொருபுறம் கயலின் பெற்றோரும் ஊராரும் நின்றிருந்தனர்.

சிவகாமி வர, மறுபுறம் செல்வாவின் பைக்கும் வேகமுடன் வந்து நின்றது. இருவரும் இறங்கி விஜயராகவனின் அருகே சென்று நின்றனர். 

என்னமா ஜெயந்தி நீ தான் பஞ்சாயத்தை கூட்டுன, நீ தான் உங்க அத்தை,மாமா, பெரியவீட்டம்மா எல்லாரையும் வரச் சொன்ன அதான் எல்லாரும் வந்துட்டாங்களே அப்பறம் என்னம்மா, என்ன விசியம்னு சொல்லு தாயி” என மேடையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் கேட்டார். 

இதெல்லாம் ஜெயந்தியின் ஏற்பாடு தான் என்றறிந்த சந்திரனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவள் பேசும் முன் அவளருகே சென்றவன், “ஜெயந்தி இதெல்லாம் எதுக்குமா?”என்க, “அட சும்மா இருண்ணே உனக்கு விஷியம்மே தெரியாது! உனக்கு ஒரு அவமானமா என்னால எப்படி சும்மா இருக்க முடியும்?” என்றாள்.

அவ சொல்லுறதும் சரி தான் நீ செத்தநேரம் அமைதியா இருடா!” ருக்மணியும் சந்திரனை அடக்கினார். வசந்தா கண்ணீருடன் ஜெயந்தியின் அருகே நின்றிருந்தார்.

நாளைக்குக் கல்யாணம் ஆனா கயலைக் காணும், எங்கியோ ஓடி போய்ட்டா இது தெரிஞ்சும் என் அத்தை,மாமா எங்க கிட்ட சொல்லாம மறைச்சி இருக்காங்க! நிச்சியம் முடிச்சதுக்கு அப்பறம் இப்படிப் பண்ணி இருக்கான்னா அவ எங்க குடும்பத்தை அவமானப் படுத்த தான் இப்படி பண்ணி இருக்கா. இதுல அவளை பெத்தவங்களும் அவளுக்குத் துணையா இருந்துருக்காங்க!” என அனைவரின் முன்னிலையிலும் கயலின் பெற்றோரையும், அவளையும் பலி கூறினாள்.

ஜெயந்தி லேசாக ஆரம்பித்ததையே பிடித்துக் கொண்டு ருக்மணியும் அவர்களை வசைபாடி முடிக்க வேல்முருகனும், கற்பகமும் பேச்சற்று நின்றனர்.

ஜெயந்தியும் ஆச்சியும் கூட்டு சேர்ந்துட்டாங்களா இனி என் கல்யாணம் நடந்தாப்புல தான்! என நினைத்த சந்திரன் பெற்றோரின் முகத்தை பார்த்தவாறு தவித்து நின்றான்.

என்னம்மா உன் தாய்மாமனையே இப்படி சொல்லிட்ட? அந்த புள்ள காணாம போனதுல்ல அவர்களுக்கும் வருத்தம் தான். உன் குடும்பத்தை அவமானப்படுத்த அவர்களுக்கு என்ன காரணம் இருக்க போகுது? இது வரைக்கும் உங்களுக்குள்ள பகையில்லையே?” என மேடையிலிருந்த மற்றொரு பெரியவர் கேட்டார். 

இதுவரைக்கும் பகையில்ல தான் ஆனா இப்போ பகையை உருவாக்கிட்டங்களே! எங்க பங்காளி கூடல அவங்களுக்கு பந்தம் இருக்கு. இந்த இருக்காங்களே பெரியவீட்டம்மா அவங்க பேரனும் கயலும் விரும்பியிருக்கிறார்கள், ஸ்கூல்ல வளர்த்திருக்கு அவங்க காதல்.

சின்ன புள்ளைக கிட்ட லவ் லெட்டர் கொடுத்து ஸ்கூலு, வயலு, தோப்புனு கொஞ்சிக்கிட்டு தான் இருந்திருக்காங்க இதுக்கு சாட்சியும் இருக்கு இந்த குமாரு பைய, சரவண அண்ணை விசாரிச்சி தெரிஞ்சிக்கோங்க. இது தெரிச்சும் எங்க மாமா அவள போய் என் அண்ணனுக்கு நிச்சியம் பண்ணி வச்சிருக்காரு!”என ஜெயந்தி ஆவேசமுடன் கூறினாள்.

ஐயோ ஜெயந்தி இப்பவா உன் பாசத்தை காட்டனும்? இதெல்லாம் தெரிஞ்சி தானே நான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணனேன் என் ஆசையெல்லாம் போச்சே என நினைத்து கவலையுடன் நின்றான் சந்திரன்.

இப்போ தானே தெரியுது அவளை பத்தி, திடீர் நிச்சியத்துக்கு நீங்க சம்மதிச்ச போதே நாங்க சுதாரிச்சி இருக்கணும். அவளை போய் என் பேரனுக்குக் கட்டி வைக்கவா? இனிமே இந்த கல்யாணம் நடக்காது” என்றார் ருக்மணி.

இந்தா பாருடி உன் குடும்ப விஷயம் எதா இருந்தாலும் ஊரக்கூட்டி பேசிக்கோ ஆனா ஆதாரமில்லாம என் பேரன் பத்தி ஏதாவது சொன்ன இதுக்கும் மேல நானா சும்மா இருக்க மாட்டே பார்த்துக்கோ!

உன்னையும் தங்கச்சினு நினைச்சி உன் மேல பாசம் வச்சிருந்தான்டி அவன், ஆனா நீ அவ பேத்தி தான் நான், அவ புத்தி தான் எனக்கும்னு காட்டிட்டில்ல, துரோகி” என ஜெயந்தியையும், ருக்மணியையும் கை நீட்டிப் பேசினார் சிவாகமி.

இங்க பாரு, என் பேத்தி சொல்லுறது தான் உண்மை. அதான் உன் பேரனையும் காணுமே! நேத்து இராத்திரி எல்லாரும் கோவில்ல இருக்கும் போது ஊருக்குள்ள இதுக ரெண்டும் தான் இருந்ததுக இப்போ ரெண்டையும் காணும். இதுலையே தெரியலையா உன் பேரன் லட்சணம்? இதுக்கும் மேல வேணும்னா என் பேத்தி சொன்ன ஆளுகள விசாரிங்க!” என்றார் ருக்மணி.

பள்ளியில் வேலை செய்பவர்களையும் சிறுவன் குமாரையும் அனைவரின் முன்னிலையிலும் விசாரித்தனர். அன்புவும் கயலும் காதலர்கள் என ஜெயந்தி அனைவருக்கும் நிரூபித்தாள்.

கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்ள,சிவகாமி பேசயியலாது நிற்க, வேல்முருகன் தலை குனிந்தே நின்றார்.

சிவகாமியம்மா போன் பண்ணி தம்பி எங்க இருந்தாலும் வரச் சொல்லுங்க. இனி சம்மந்தப்பட்ட ரெண்டு பேரும் இல்லாம பஞ்சாயத்து பேச முடியாது” எனப் பெரியவர் ஒருவர் கூறினார்.

கல்யாணம் தான் தடைப்பட்டு விட்டது, அன்புவை அவமானப் படுத்த கிடைத்த வாய்ப்பை ஏன் விட வேண்டுமேன்று எண்ணிய செல்வா, “அதெப்படி வருவான்? அதான் ரெண்டு பேரும் ஓடிப் போயிட்டங்களே! இனி அவனால ஊருக்குள்ள வர முடியுமா?” என ஏளனப் புன்னகையுடன் கேட்கும் போதே அன்புவின் கார் வேகமுடன் வந்து சாலையில் நின்றது. 

அனைவரின் பார்வையும் அங்கே திரும்ப, காரின் முன்பக்கமிருந்து சரவணனும், பின்பக்கமிருந்து அன்பு,கயல் இருவரும் இறங்கினர்.

சிவகாமியின் அருகே மூவரும் வந்து நிற்க, அன்புவை வெறியோடு பார்த்தான் சந்திரன். ஜெயந்தி கயலைப் பார்க்க, புடவையைக் கழுத்தைச் சுற்றிப் போர்த்திக் கொண்டு ஜீவனற்ற முகத்துடன், தளர்ந்து, நிற்க தேம்பின்றி அன்புவின் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தாள்.

இந்தாடி கயலு என் அண்ணனுக்கு நிச்சியம் பண்ணுன அன்னைக்கே ஓட வேண்டியாதனே! நாங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணத்துக்கு அப்பறம் ஏன்டி ஓடுனா எங்களை அவமானப் படுத்தவா?” என ஜெயந்தி கேட்க,

அந்த புள்ள போயிருக்காது அவன் தான் கூட்டு போயிருப்பான். அவன் பட்டணத்துல கத்துக்கிட்ட பழக்கத்தை இங்க வந்து காட்டுறான். நல்ல புள்ளகறதெல்லாம் அவன் போட்ட வேஷம்! இன்னைக்கு தெரிஞ்சசிக்கோங்கய்யா அவன் உன்மை முகத்தை. வெள்ள வேட்டி சட்டை  போட்டுக்கிட்டா நீ பெரிய மனுஷனாகிடுவியா?” என்றான் செல்வா. 

தன்னை பற்றிய உண்மைகளை அன்பு அறியவில்லை என்ற அகந்தையில் இருந்தான்.

அந்நிலையில் அன்புவிற்கு சாதகமாக பேசமுடியவில்லை எனினும் செல்வாவின் கூற்றை ஆதரிக்கும் தைரியமும் யாரிக்குமில்லை ஆகையால் அனைவரும் அமைதியாக இருந்தனர். 

அந்த நொடி மௌனமாய் தாண்ட,மறுநொடி காற்றின் சலசலப்பிற்கு இடையே மிக மெல்லியதாய், “அவரு கூட்டுட்டு போகலை நானா தான் அவரை பார்க்க போனேன்!” என்ற கயலின் குரல் அனைவரின் செவிகளையும் நிறைத்தது. 

தனக்காகத் தன்னவன் அவமானம் தாங்குவதைத் தாங்காது, அவன் எதிர்ப்பையும் மீறிக் கூறினாள். பற்றியிருந்த கைகளில் அழுத்தம் கூடியதில் அன்புவின் உடல் இறுகுவதை உணர அதற்கும் மேல் பேசமுடியாது நின்றாள். 

ஆத்தாடி ஆத்தா! இங்க பாருங்கடி ஒருத்தி கூட நிச்சியம் பண்ணிட்டு வேற ஒருத்தனை இராத்திரி பார்க்க போனேன்னு இத்தனை பேரு முன்னாடி சொல்லுறாளே! உனக்கு வெட்கமா இல்லையாடி? நீ சொல்லுறாத பார்த்தா ஒருநாள் பழக்கம் மாதிரி தெரியலையே? அவன் கூட எத்தன நாளோ பழகி…” வார்த்தைகளை முடிக்க விடவில்லை அன்புவின் கோபக்குரல்.  

நிறுத்துங்க இதுக்கு மேல யாரவது என் பொண்டாட்டியைப் பத்தி ஒருவார்த்தை பேசினீங்க பேசுபவன் தலை இருக்காது ஜாக்கிரதை!” என இடி போன்று ஒலித்த அன்புவின் குரல் காதுகளின் வழி உள்ளிறங்கி அனைவரின் உடலையும் நடுக்கச் செய்தது. 

கண்ணீருடன் நெஞ்சைப் பற்றி அழுது கொண்டிருந்த கயலை தன் தோளோடு அணைத்துக் கொண்டு மறுகையை நீட்டி எச்சரித்தவன் உச்ச கோபத்தில் நின்றிருந்தான். 

நீ காதலிச்ச பொண்ணனையே பொண்டாட்டினு சொன்னனைனா, அவ கூட நிச்சியமே நடந்திருக்கே அப்போ அவ சந்திரனோட…” முடிக்கவிடவில்லை அன்புவின் கை இடியாய் செல்வாவின் கன்னத்தில் இறங்கியது. 

கன்னமே தீ பற்றி எரிந்தது போன்ற வலி பரவ, உதட்டோரம் கசித்த இரத்தத்தோடு நிமிர்ந்த செல்வாவால் அதற்குமேல் பேசமுடியவில்லை. 

யாரை யாரு கூட சேர்த்து சொல்லுற பிச்சிடுவேன், ஏழு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே அவ என் பொண்டாட்டிடா!” என்ற அன்பு திரும்பி கயலை ஒரு பார்வை பார்த்தான்.

சிவகாமி பற்றி இருக்கக் கண்ணீரோடு நின்றிருந்த கயல் அன்புவின் பார்வை உணர்த்து நெஞ்சைப் பற்றியிருந்த தன் கையை விலக்கி உடைக்குள் இருந்து கழுத்தில் தொங்கிய ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்து வெளியில் நீட்டினாள். சற்றே நிறம் மங்கிய பழைய மஞ்சள் கயிறு. 

ஏழு வருஷத்துக்கு முன்னாடியே ரெண்டு பேரும் விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ இல்ல எட்டு வருஷமா ரெண்டுபேரும் விரும்புறோம். எப்போ வேணாலும் அவளுக்கு என்ன பார்க்க வர உரிமை இருக்கு, நான் எங்க வேணாலும் அவளைக் கூட்டு போவேன் அந்த உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு!

அவளுக்கு வேற நிச்சியம் பண்ணி வச்ச கைய வெட்டாம இருக்கேனா அதுக்கு பெரியவுங்க மேல இருக்குற மரியாதை தான் காரணம். அவ என் பொண்டாட்டிலே அவ நிழல் கூட எனக்குத் தான் சொந்தம். என் பொண்டாட்டி என்ன பார்க்க வரக்கூடாதுனா மத்த எவனும் அவன் பொண்டாட்டி கூட இருக்கவே கூடாது. இனி என் பொண்டாட்டி பத்தி எவனாவது பேசுனானாக்கும் அவன் உயிர் உடம்புல இருக்காதுலே!” என உச்ச கோபக் குரலில் கத்தி முடிக்க, அதுவரை உறைந்து நின்ற அனைவரும் அப்போது தான் உயிர் பெற்றனர்.

இதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை என்பது போல் கயலின் கரம் பற்றி அழைத்துச் சென்றான் அன்பு.

அதுவரை கலங்கி நின்ற கற்பகத்திற்கு அப்போது தான் புது ஒளி தெரிய இனி தன் மகளின் எதிர்காலம் இனிமையாய் இருக்குமென்ற நம்பிக்கை பிறந்தது. 

கயலோடு வாசலில் நிற்க ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து வந்தார் சிவகாமி. முற்றிலும் சோர்ந்து கண்கள் இருட்டத் தள்ளாடிய கயலை கைகளில் தூக்கினான் அன்பு. 

தன்னறையில் தன் கட்டிலில் ஒரு புறமாக படுக்க வைத்து முதுகு, இடுப்புப்புறம் தலையணையை வைத்தவன் நெற்றியில் முடிகளை ஒதுக்கி முத்தமிட்டு பின் வெளியே வந்தான்.

கயலுக்கு வெட்டுக்காயம் கழுத்தில் விழாது சற்று தள்ளி தோள்பட்டையிலிருந்து பின்புறமாக விழுந்திருந்தது. அன்புவும் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் உயிருக்கு ஆபத்தில்லாது தப்பினாள். தையலிட்டு,மருந்து வைத்துக் கட்டுக்கள் மட்டும் கட்டியிருந்தனர். 

இருப்பினும் அவள் வலியில் வாடுவதை அறிந்து இரவெல்லாம் விலகாது அவளருகே இருந்தான். 

காலையில் சரவணன் வர அன்புவிற்கு சற்று உதவியாக இருந்தது. சில மணி நேரத்திலே வந்த ஒரு அலைப்பில் ஊரில் பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும் சிவகாமியும் அங்கு நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அன்பு கிளப்பக் கயலும் உடன் வருவதாக அடம்பிடித்தாள், தங்கள் வாழ்விற்கான முடிவெடுக்க வேண்டிய நேரம் என்பதாலும் இனி ஒரு நொடியும் கயல் தன்னை விட்டுத் தனித்துத் தவித்திருக்க விடக்கூடாது என்பதாலும் அவளையும் உடன் அழைத்து வந்தான்.

Advertisement