Advertisement

அத்தியாயம் 22

இருளில் படிகளிலிருந்து கீழே இறங்கி தரையில் கால் வைக்க, எத்திசைலிருந்தோ எறிந்த மலர்க்கொத்தைப் போல் அவன் மேல் வந்து விழுந்தாள் கயல். 

தன் நெஞ்சோடு புதைந்து கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தவளின் பின்னத் தலையை வருடியவன் பதட்டமுடன், “செல்லம்மா என்னாச்சு?” என்றான். 

மறுநொடி அவனிடமிருந்து விலகியவள் வலதுகையால் அவன் வாயை மூடி, இடது கை விரலை தன் உதட்டின் மீது வைத்து தலையை இடது வலதாக ஆட்டி பேசாதே எனச் சைகை செய்தாள்.

தன் வாயை மூடியிருந்த கைகளின் வழி அவள் உடல் உஷ்ணத்தை உணர்ந்தவன், அவளைப் பார்க்க முகம் முழுவதும் வியர்த்து, லேசாக மூச்சு வாங்க, கண்கள் சிவந்திருந்தாள்.

சற்று முன் கேட்ட ஓசையிலும் இந்நிலையிலும் அவளின் திடீர் வருகையிலும் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தான்.

பிடிவாதமுடன் அவள் கைகளை விலக்கியவன், “நீ எதுக்கு இந்த நேரம் இங்க வந்திருக்க? என்ன பிரச்சனை?” என்றான்.

மீண்டும் வேகமாக அவன் வாயை மூடியவள், “உஷ்..ஸ்ஸ்.. கத்தி பேசாதீங்க. முதல்ல என் கூட வாங்க இங்க இருக்குறதே ஆபத்து போகலாம், வாங்க மாமா!” எனக் கீழ் குரலில் கூறியவள் அவன் கைகளை இறுகப் பிடித்து இழுத்தாள். 

அவள் இழுத்த வேகத்திற்கு எதிர்த்திசையில் வேகமுடன் தன் கைகளை இழுத்து மீட்டுக் கொள்ள, கயல் அருகே இருந்த மணல் மேட்டில் விழுந்தாள். 

ஏதோ சரியில்லை ஆபத்து இதில் இவளும் வந்து மாட்டிக்கொண்டாளே? என நினைத்தவாறு அருகே சென்று அவளைத் தூக்கிவிட முயன்றான். ஆனால் அவளோ அவன் சட்டையின் காலரைப் பிடித்து தன்னோடு இழுத்தாள்.

அதே நொடி அவன் தலைக்குச் சற்று மேல ஒரு வீச்சருவால் பறந்து சென்று அருகே இருந்த கற்குவியலில் ஓசையுடன் விழுந்தது. சரியாக அந்த நேரம் கயல் அன்புவை இழுக்கவில்லையெனில் அவன் கழுத்தில் பதிந்திருக்கும். 

அன்புவும் கயலும் எழுந்து நிற்க, அவர்களைச் சுற்றி நான்கு தடியன்கள் வளைத்து நின்றிருந்தனர். நான்கு பேரும் அசாதாரண உயரமும், வலுவான தோள்களுடனும், திடமான உடற்கட்டுகளுடனும் கருக்குன்றுகளை போல் நான்கு திசைகளிலும் வளைத்து நின்றிருந்தனர். அதில் இருவர் கையில் வெட்டருவாலும், ஒருவன் கையில் கத்தியும் இருந்தது. நான்காமவன் வீசிய வீச்சருவால் தான் கற்குவியலில் விழுந்திருந்தது போலும்.

தன்னருகே இருந்த கயலின் கைப்பிடித்து இழுத்து அருகே இருந்த பெற்றோரின் நினைவு மண்டபத்திற்குள் விட்டவன் வேஷ்டியை மடித்துக் கண்டிக்கொண்டு, “என்ன நடந்தாலும் வெளியே வரக்கூடாதுடி செல்லம்” என்றவாறு சுற்றிருப்போரை ஒரு பார்வை பார்த்தான். 

அவனுக்கு வலதும் இடதும் இருந்தவர்கள் இருவரும் தங்களுக்கு இடையான கண்ணசைவோடு, ஓரே நேரத்தில் அவன் மேல் அருவாளை வீசினர். அதை உணர்ந்த அன்பு லேசாகத் தலை குனிந்து கொண்டு இருகைகளையும் பெருக்கல் விகிதத்தில் மடக்கிக் கொண்டு ஒருநேரத்தில் இருவர் அடி வயிற்றிலும் அழுத்தமுடன் குத்தினான்.

அதுவே இடியென இறங்க ஒருவன் அருவாளைக் கீழே விட, மற்றவன் மொத்தமாகக் கீழே விழுந்தான். அதேநேரம் அன்பு தன்னை குத்த வந்த மூன்றாமவனின் கையை எலும்பு முறியும் அளவிற்கு முறுக்கிப் பிடித்துக் கொண்டு நான்காமவனை எட்டி உதைத்தான். 

இரண்டாமவன் பின்புறமாக வந்து அன்புவின் கழுத்தை நெறிக்க, ஒற்றை கையால் அவன் முடியைப் பிடித்து முன்புறம் இழுத்தவன் ஓங்கி உதைத்தான். இனி எழவே முடியாது என்பது போல் மரத்தில் மோதி கீழே விழுந்தான் அவன்.  

மூன்றாமவனின் கைகளை லேசாக தளர்த்திக் கொண்டு கன்னத்தில் இடியென ஒரு அறை விட அவனும் மணல்மேட்டில் சுருண்டு விழுந்தான்.

கயலோ நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு அனைத்து தெய்வத்தையும் வேண்டி, இமைக்க மறந்து அவர்களின் சட்டையை பார்த்து கொண்டிருந்தாள். அன்பு கல்லூரி நாட்களில் கற்றுக் கொண்ட தற்காப்புக் கலைகள் தற்போது அவனுக்கு உதவியது.

நான்காமவன் எழுந்து அன்புவை நோக்கி வர, முதலாமவன் அருவாளை அன்புவை நோக்கி வீசினான். நான்காமவனை அன்பு உதைக்க, அன்புவின் நெற்றியில் புருவத்திற்கு மேலாக லேசாக வெட்டு விழுந்தது. நான்காமவன் முதலில் தான் வீசியிருந்த அருவாளின் அருகே கற்குவியலில் விழுந்தான். 

அன்பு கோபம் பொங்க முதலாமவனின் கழுத்தை நெரித்து கால்களைத் தட்டி கீழே தள்ளினான். மண்டியிட்டு ஒன்றை முட்டியால் அவன் கழுத்தில் அழுதிக் கொண்டு தன்னை வெட்டிய கையை முறுக்கியவாறு, “யாருடா உங்களை அனுப்புனது சொல்லுடா?” எனக் கர்ஜித்தான்.

அந்நிலையில் பேசயியலாது குரல்வளை நெரிய, விழி பிதுங்க அன்புவை பார்த்தான். 

நான்காமவன் அருகே இருந்த அருவாளை எடுத்துக் கொண்டு ஓடி வர, கீழே கிடைந்தவனின் கையிலிருந்த அருவாளை பிடிக்கி, எழுந்து இருவரும் வெட்டினான். கை, கால்கள், தோள்பட்டையில் வெட்டு பட்டு இரத்தம் வழிய, அதற்கு மேலும் அன்புவை எதிர்க்க இயலாது திணறினர். 

மூன்றாமவன் எழுத்து இடையில் வந்து அன்புவின் கண்களில் மண்ணை வீச, மற்ற இருவரும் வேகம் கொண்டு அவன் மேல் அருவாளை வீசினர்.  

பதைபதைப்புடன் அவர்கள் சண்டையிடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள் கயல். அன்பு கண்ணில் மண் விழுவதும், கண்ணைக் கசக்கும் போது அவர்கள் அருவாளை ஓங்குவதையும் பார்த்து சிறிதும் யோசிக்காது, குறுக்கே சென்று அன்புவை அணைத்தவாறு அவன் மேல் விழுந்தாள். 

சரியாகக் கயலின் வலது கழுத்தில் அழுத்தமாக ஒரு வெட்டு விழ, இடது கையிலும் ஒரு வெட்டு விழுந்தது. யாரும் எதிர்பார்க்காமல் நொடியில் நிகழ்ந்து விட இரத்தம் வழியக் கயல் சரிந்தாள்.

கயலைத் தாங்கி பிடித்தவன், அவர்களை கொலைவெறியுடன் உதைக்க, உயிர் பிழைத்தால் போதுமென அனைவரும் ஓடினர்.

கயலை மடியில் தங்கியவன், குனிந்து அவளைப் பார்க்கத் தெளிவின்றி தெரிந்தது அவள் உருவம். அப்போதும் தான் தன் கண்ணில் வழியும் கண்ணீரை உணர்ந்து, துடைத்தான். அன்னை இறந்த போது கூட அழுததாய் நினைவில்லை. 

கயலின் முகம் முழுவதும் நொடிப் பொழுதில் வலியில் சிவந்து அவளின் உயிர் வலியைப் பிரதிபலித்தது. கழுத்தில் வெட்டுப் பட்ட இடத்திலிருந்து நிற்காமல் உதிரம் வழிந்தது. அவன் மேல் சாய்ந்திருந்ததால் அவன் சட்டையை நனைத்து ஈரம் இதயத்தை தொட்டது.

கண்கள் சொருகி மூடி விட, கன்னம் தீண்டிய அவன் ஸ்பரிசத்தில் ஏதோ அவனிடம் சொல்லத் துடித்தாள். தொண்டைக் குழி ஏறி இறங்க, அவன் கைகளை மேலும் அழுத்திப் பிடித்தாள் வலி தாங்காமல். 

அவள் உடல் துடிப்பதைப் பார்த்தவன் தாமதிக்காது, அவள் தாவணியை அவிழ்ந்து வெட்டு பட்ட இடத்தில் மார்புக்குக் குறுக்காக இறுகக் கட்டினான். தன் சட்டையைக் கழட்டி அவள் மேல் போர்த்தி அவளை கைகளில் தூக்கிக் கொண்டு ஓடினான்.

காரின் பின் சீட்டில் அவளைக் கிடத்தியவன் முன் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணினான். மனதில் தெய்வமாய் நினைக்கும் பெற்றோரை வணங்கினான். அவள் கேட்கிறாளா என்று கூட உணராது ஏதேதோ புலம்பியவாறு சென்றான்.

கயலுக்கு விழுந்த வெட்டு அவன் இதயத்தில் விழுந்ததை போல் அவளை விட அதிக வலியில் துடித்தான். தனக்குக் காயம் பட்டிருந்தாலும் இவ்வளவு வலியை உணர்ந்திருக்க மாட்டான். 

அநீதியை அழித்துக் காத்து நிற்கும் காவல் காளியின் நாற்பது அடி உயரச் சிலையின் முன்பு நள்ளிரவு தாண்டிய பின்னும் அனைவரும் காத்திருந்தனர். 

சுற்றியிருக்கும் ஊர் மக்கள், கூடி வந்து நின்றிருக்க, ஊர் சுற்றி வேட்டைக்குச் சென்று வந்து ஆக்ரோஷமுடன் ஆடி நின்றது கருப்பசாமி.

பின் ஒவ்வொருவராய் சென்று குறி கேட்டு ஆசி பெற்று வந்தனர். வேண்டுதல் உள்ளவர்கள் அதை நிறைவு செய்தனர். ருக்மணியும், சங்கரலிங்கமும் பேத்திக்கு நல்லபடியா திருமணம் நடைபெற்றதில் கருப்பசாமிக்கு அரிவாள் சாற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.  

அதிலே விடிந்து விட, பின் அம்மனுக்கான பூஜைகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. அதன் பின் அனைவரும் வீடு வந்தனர். 

சந்திரன் வீட்டில் அனைவரும் கோவிலிலிருந்து வந்து சோர்வுடன் அமர்ந்திருந்தனர். அதில் செல்வாவை அழைத்த வசந்தா, “எங்க அண்ணா வீட்டுல போய் பால் வாங்கிட்டு வாடா, எல்லாருக்கும் காஃபி போடணும். பெருசுக காத்துக்கிட்டு இருக்குதுக, சீக்கிரம் வாங்கி வா செல்வா” என அனுப்பி வைத்தார். 

கயலுக்கு மிகவும் ஆபத்தான நிகழ்வுகள் நடக்கும், உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் கூட நடக்கலாம் அம்மனின் அருளோடு நம்பிக்கை கொண்டு கடந்து வரவும் எனக் குறி கூறி இருக்க, அதை நினைத்தவாறே வீடு வந்தனர் கற்பகமும் வேல்முருகனும். 

சந்திரனின் அவசரத்தால் நிச்சியம் செய்தது தவறோ? அதனால் கயலுக்கு ஆபத்து வருமோ? என்ற பதைபதைப்பில் இருந்தார் கற்பகம்.

நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்காமல் இருக்க, “கயலு.. கயலு..” எனக் கத்தி அழைத்தார். இருவருக்கும் உள்ளுக்குள் லேசான பயம் பரவியது.

“இராத்திரியே உடம்பு சூடா இருந்தது அசந்து தூங்குறா போல, நீங்க பின் பக்கம் போய் கதவைத் தட்டுங்க முழிச்சிடுவா” எனக் கற்பகம் கூற, வேல்முருகன் பின் பக்கம் சென்று பார்த்தார்.

ஆனால் வெளி பக்கமாகக் கதவு பூட்டி இருக்க, திறந்து உள்ளே சென்றவர் முன் கதவையும் திறந்து விட்டார். கற்பகம் உள்ளே வர, இருவரும் வீடு முழுவதும் கயலைத் தேடியும் காணவில்லை.

அவள் கழட்டி வைத்து விட்டுச் சென்ற நகைகள் மட்டுமே இருக்க, “என்னங்க கயலைக் காணுமே?  நாளைக்கு விடிஞ்சா கல்யாணம்!” எனக் கண்ணீருடன் கூறினார் கற்பகம். 

“என்னடி காணும்னு சொல்லுற? அதான் நகையெல்லாம் கழட்டி வச்சிட்டு, கதவ மூடிட்டு தானே ஓடிப் போய் இருக்கா? என்னவோ கடத்திட்டு போயிட்ட மாதிரி காணும் சொல்லுற! ஒழுங்கா புள்ளைய வளக்க தெரியலை?  இப்படி வளர்த்திருக்கையையே?” என்றவாறு கற்பகத்தை அறைந்தார். 

தன் மகளைப் பெற்ற தந்தையே இவ்வாறு அவச்சொல் சொல்லுவதைத் தங்க முடியாது கற்பகமும், “நான் தான் முதல்ல இருந்தே இந்த கல்யாணத்துல அவளுக்கு விப்பமில்லைன்னு சொன்னேனே? நீங்க கேட்டீங்களா?” என்றார்.

“இன்னைக்கு பொழுதுக்குள்ள அவ வீட்டுக்கு வரணும். சாயங்காலம் நலங்கு நடக்கணும். அதுவரைக்கும் இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ, பக்கத்து வீட்டுக்குக் கூட தெரியக் கூடாது. நான் வெளியே தேடிப்பார்க்குறேன்” என வேல்முருகன் கூறினார்.

பால் வாங்க வந்த செல்வா வாசலில் நின்றவாறு அனைத்தையும் கேட்டுவிட்டு, அமைதியுடன் திரும்பிச் சென்று சந்திரனை எழுப்பினான். 

“கயலைக் காணுமாம்! இப்போ தான் உங்க மாமா வீட்டுல ரெண்டுபெரும் பேசிக்கிட்டு இருந்தாங்க” என்க, கேட்ட சந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

நாளைய திருமணம் மணப்பெண்ணே இல்லாமல் எவ்வாறு நடக்கும்? வெளியில் தெரிந்தால் ஊரார் உறவினர் என்ன பேசுவார்கள்? தங்களுக்கு தானே அவமானம்? என எண்ணினான் சந்திரன்.

“அன்பு தான்டா ஏதோ பண்ணி இருக்கான்” எனச் சந்திரன் கூற, தன் அனுப்பிய ஆட்களிடமிருந்து எந்த தகவலும் வராத குழப்பத்திலிருந்தான் செல்வா. 

“டேய் பஞ்சாயத்தைக் கூட்டிடுவோமா? ஊரே அன்புவை கேவலமா பேசுவாங்க, நல்ல வாய்ப்புடா!” 

“ச்சே! வேண்டா செல்வா, அப்புறம் என் கல்யாணம் நின்னுடும். அவனுக்கு ஒருநாள் அவமானம் பத்தாது தினத்தினம் காலையில கயலு என் பொண்டாடியா என் வீட்டு வாசல்ல கோலம் போடுறது, என்னோட பைக்குல போறது, என்னோட கோவிலுக்கு போறதுன்னு அவன் பார்த்துப் பார்த்து சாகணும்டா.  

அதான் அவனுக்குப் பெரிய அடி. அதுக்கு தான் இந்தக் கல்யாணத்துக்கே ஏற்பாடு பண்ணுனேன்டா” எனப் பற்களைக் கடித்துக் கொண்டு கூறினான். 

“அப்போ நீ அந்த புள்ளைய விரும்பவேயில்லையா?” என ஆச்சரியமுடன் கேட்க, இல்லை என்பது போல் தலையாட்டிக்கொண்டு,”அதான் அன்னைக்கே சொன்னேனே அன்புக்கு கயலுன்னா உயிர், என்னால கயலை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு!” என்றான். அடப்பாவி! நீ காதலிக்குறதா நினைச்சிக்கிட்டுல அன்புவை போட சொன்னேன்? என எண்ணிய செல்வா, “இப்போ என்ன தான்டா பண்ணா?” என்றான்.

“கயலைக் காணுக்கிற விஷயம் யாருக்கு தெரியாம பார்த்துக்கோ! அப்புறம் நம்ம ஆளுகள அனுப்பி கயலு எங்கிருந்தாலும் தூக்கிட்டு வரச்சொல்லு. நாளைக்குக் கல்யாணம் நடந்தே ஆகணும்” என்றவன் ஏதோ யோசனையில் நின்றான்.

‘டேய் ஏற்கனவே நான் அனுப்புன ஆளுங்களுக்கே என்னாச்சுன்னு தெரியலையே? இதுல திரும்பவும் ஆளுகள அனுப்பச் சொல்லுறானே? காணாம போனா தேடலாம் ஓடிப் போனவளை நான் எங்க போய்டா தேடுவேன்?’ என உள்ளுக்குள் நொந்து கொண்டே சென்றான் செல்வா. 

Advertisement