Advertisement

அத்தியாயம் 21 

மாலை செல்வா தன் வீட்டிலிருந்து வெளியை வர, அவன் அன்னை லட்சுமி பக்கத்து வீட்டுப் பேச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அன்புவிற்கும் சிவகாமிக்கும் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி லட்சுமியிடம் கூறுவது செல்வாவின் காதில் விழுந்தது. அதில் அன்பு ஊரிலிருந்து வந்தது விட்டான் என்பதையும் தற்போது தோப்பு வீட்டில் தனியாக உள்ளான் என்பதையும் அறிந்து கொண்டான்.

யாருமில்லா தோப்பிற்குள் வந்தவன் தன் அலைபேசியில் யாரையோ அழைத்து, “டேய் நமக்குச் சாதகமா ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அன்பு மட்டும் தனியா அவன் தோப்பு வீட்டுல இருக்கானாம். இதான் சரியான நேரம் சத்தமில்லாம, தடையமில்லாம அவனை போட்டுருங்கடா” என்றான்.

அந்த வழியாக வந்த கயலின் காலில் முள் குத்திவிட சில நொடி நின்றாள். அதற்குள் அன்பு என்ற பெயர் கேட்கத் தன்னிச்சையாக திரும்பிப் பார்த்தாள். சற்று தொலைவில் ஒருவன் மரத்தின் பின் திரும்பி நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்க, அவளும் அமைதியாக என்னவென்று காதை தீட்டிக் கொண்டு கேட்கத் தொடங்கினாள். கைப்பேசியில் மறுபக்கம் பேசுவது கேட்கவில்லை.

அருவாவை அவன் மாந்தோப்புல மறச்சி வச்சிருக்கேன். இன்னைக்கு ராத்திரி பதினோரு மணிக்குக் கருப்பசாமி வேட்டைக்குப் போகும் ஊருக்குள்ள எவனும் இருக்க மாட்டான், ஊரே எல்லைக் காளியம்மன் கோவில் திடல்ல தான் இருக்கும்.  

விடிஞ்சதும் குறி கேட்டுட்டு தான் எல்லாரும் ஊருக்குள்ள வருவாங்க. இதான் சரியான நேரம், ராத்திரி வந்து அவன் மாந்தோப்புக்குள்ள ஒளிச்சிக்கோங்கடா. அப்புறம் சரியான நேரம் பார்த்து அன்புவை போட்டுருங்க.

அவன் என்ன கத்துனாலும், கதறுனாலும் ஒரு பையனும் உதவிக்கு வர மாட்டான். தடையமே இல்லாம போட்டுட்டு விடியறதுக்குள்ள எல்லாரும் ஊரை விட்டு வெளியே போயிடணும். ஊர்க்காரன் யார் கண்ணுளையும் படக்கூடாது, என்னங்கடா புரிஞ்சதா?”

சரிடா எல்லாரும் ரெடியா இருக்க, நான் கால் பண்ணதும் வாங்கடா” என்றவன் மொபைலை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பிப் பாராமல் சென்றான்.

கயலும் அமைதியாக வீட்டில் வந்து அமர்ந்து கொண்டாள். அன்புவிற்கு ஆபத்து என்பதே எண்ணத்தில் சுழன்று கொண்டிருக்க, நெஞ்சில் கை வைத்து அமர்ந்திருந்தாள். மனதிற்குள் காவல் காளியிடம் அன்புவை காக்க வேண்டினாள்.

உடல் இறுகி வியர்வை பூத்து வழிய, எதிர் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்து வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தவளின் இதயம் வேகமெடுத்து துடித்தது. அந்த வேகத்திற்கு நொடி முள்ளும் வேகமுடன் நகர இரவு பதினோரு மணியை நெருங்கி இருந்தது.

டவுனிலிருந்து வந்த கயலின் பெற்றோர்கள் அவளிடம் நகையைக் காட்டினார். தந்தை மாடுகளைக் கவனிக்க, அன்னை சமையல் செய்து முடிக்க, அதன் பின் அனைவரும் உண்டனர். வேல்முருகன் முன்னே கோவிலுக்குச் சென்றுவிடக் கற்பகமும் கிளம்பி வந்து கயலையும் அழைத்தார். 

கால்களைக் கட்டிக்கொண்டு முகம் புதைத்து அமர்ந்திருந்தவளின் அருகே வந்தவர், “கயலு! ஏம்மா சாப்பிடாம கோவிலுக்கும் கிளம்பாம இப்படி உக்காந்து இருக்க?” என்றார்.

நான் கோயிலுக்கு வரலை, எனக்கு உடம்புக்கு ஒருமாதிரியா இருக்கும்மா” என்றாள் மென்குரலில்.

கயலின் வெளிறிய முகமும் வறண்ட உதடும், நைந்த குரலும் என்னவோ போல் இருக்க நெருங்கி அவள் நெற்றியில் கைவைத்து பார்த்தார். லேசாகக் காய்ச்சல் இருக்க, அடுப்பறைக்கு சென்று ஒரு டம்ளரில் பாலும் ஒரு மாத்திரையும் எடுத்து வந்து அவளுக்குக் கொடுத்தார்.

சரி நான் கோவிலுக்கு போறேன். நீ வந்து உள் பக்கம் தாழ்ப்பா போட்டுக்கிட்டு அப்பறம் தூங்குடி” என்றார்.

தலையாட்டியவாறு பின்னே சென்றவள் கற்பகம் வெளியில் சென்றதும் உட்புறமாகக் கதவைப் பூட்டினாள். 

கல்யாணம் தான் திடீரென முடிவாகி விட்டது, அவள் கல்யாண வாழ்வாவது மகிழ்ச்சியாக இருக்குமா? என்பதைக் குறிகேட்டு அறிந்து கொள்ளும் எண்ணம் நிச்சியகார்தம் முடிந்த அன்றிலிருந்தே கற்பகம் இருந்ததால் மகளையும் கவனிக்காது கோவிலுக்குக் கிளம்பினார்.

மணியைப் பார்த்தால் பதினொன்றைத் தாண்டி இருந்தது. நாளை மறுநாள் திருமணம் என்பது சுத்தமாக நினைவில்லை. அன்புவிற்கு ஆபத்து என்று அறிந்த பின்னும் அமைதியாக இருக்க முடியவில்லை.  

மனம் அன்பு அன்பு என்றே தவித்துக் கொண்டே இருக்க, இப்போதே அவன் முகம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். அவனை தன் அணைப்புக்குள் வைத்துக் காக்க வேண்டும் என்ற ஆவல் உந்தியது. அதற்கு மேலும் பொறுமை காக்க இயலாது கைகளில் வசந்தா அணிந்து விட்ட, கல்யாண வளையல் அனைத்தையும் கழட்டி வைத்தாள். காலில் அணிந்திருந்த இரட்டைச்சரம் கொலுசையும் கழட்டி வைத்தாள்.

தாவணியைத் தூங்கிச் சொருகிக் கொண்டு பின்கட்டு கதவின் வழியாக வெளியே வந்தவள் கதவை வெளியிலிருந்து பூட்டினாள். பின் துணி துவைக்க வைக்கப் பட்டிருக்கும் கல் மேல் ஏறி கிணற்றின் சுவர் மேல் ஏறினாள். அதிலிருந்து வீட்டின் சுற்றுச் சுவருக்குத் தாவியவள் மெல்ல உடலை இழுத்து மேலேறி வெளிப்புறம் குதித்தாள்.

சுற்றும் முற்றும் பார்க்க, யாருமில்லாத வீதி, இருள் சூழ்ந்து நிசப்தமாகக் காட்சியளித்தது. சற்றே பயம் தோன்ற நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு ஆழ மூச்சியிழுத்து விட்டு, ஓட தொடங்கினாள். அன்புவின் தோப்பு வீட்டிற்கு விரைவாகச் சென்று விட நினைத்து, காட்டுவழியாக ஓடினாள். இருள் காட்டுக்குள் சிறிதும் தயக்கமும், அச்சமுமின்றி சென்றாள்.

அவர்களின் திட்டம் என்னவென்றும் முழுதாக தெரியாது, எத்தனை பேர் என்றும் தெரியாது, தன்னால் என்ன செய்ய இயலும் என்றும் தெரியாது ஆனால் தன்னவனின் உயிருக்கு ஆபத்து என்றதும் தன் கையணைப்புக்குள் அடக்கி அவனைக் காக்க ஓடினாள்.

தோப்பு வீட்டிற்குள் வந்து சோர்வுடன் கட்டிலில் விழுந்த அன்பு தன்னையும் மீறிக் கண்மூடினான். ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு லேசாக விழுந்தவனுக்கு ஆச்சியுடன் சண்டையிட்டது நினைவில் வந்தது. செல்லம்மா, செல்லம்மா என அரைத் தூக்கத்தில் புலம்பினான்.

எட்டு வருடங்களுக்கு முன் அன்புவின் மூன்றாம் வருடக் கல்லூரி படிப்பின் போது செமஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தான். ஊருக்குள் வந்து மூன்று நாட்களாகியும் கயல் கண்ணில் படவேயில்லை.

கடந்த முறை திருவிழாவிற்கு வந்து சென்ற போது பார்த்தது, கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கடந்திருந்தது. அன்று அவளை கைகளில் தாங்கிய போதே தன்னவள் இவள் தான், தன் எதிர்காலம் இவள் தான், தனக்கு மனைவியாக வரப்போறவள் இவள் தான் என்று உறுதி கொண்டிருந்தவன் இந்த ஆறுமாத்திற்குள் ஆயிரமாறியம் கனவு கண்டு தன்னுள் சேமித்து வைத்திருந்தான்.

இது எதையும் அவளிடம் வெளிப்படுத்தியதில்லை. அவளோ இன்னும் பள்ளிப்படிப்பையே முடிக்காமலிருந்தாள். அதனாலே சற்று பொறுமையாக இருந்தவன் அந்த ஒருதலை காதல் தந்த சுகத்தில் தன்னை மறந்து பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்தான்.

மாலை நேரம் தங்கள் ரைஸ்மில்லிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான். கீரின் கலரில் டீசர்ட்டும், பிளாக் பேண்டும் அணிந்திருந்தவன், காதில் ஒரு ஹெட்செட்டை மாட்டி, மொபைலில் ஒரு காதல் பாடலை பிளே செய்திருந்தான். அந்த பாடலை ஹம் செய்த படி, தங்களுக்காகத்தான் இந்த பாடலை எழுதினார்களோ என்றெண்ணி நடந்து சென்று கொண்டிருந்தான்.

மாமா.. மாமா.. அன்பு மாமா” எனச் சத்தமுடன் அழைத்தவாறு வரப்பிலிருந்து சாலையோரம் செல்லும் பாதையில் அன்புவை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் கயல். அவனோ கேட்காமல் செல்ல, ஓடிவந்து அவன் முன்பு நின்றவள், இடிப்பில் கைவைத்துக் கொண்டு வேக வேகமாக மூச்சுவாங்கினாள்.

அப்போது தான் அவளைக் கவனித்தவன், பாடலை நிறுத்திவிட்டு பதட்டமுடன், “என்ன செல்லம் எதுக்கு இப்படி ஓடியார்ற? பாம்பு ஏதும் பார்த்தியா?” எனக் கேட்டான். 

பாம்புக்கெல்லாம் நான் பயப்படுற ஆளா? என நினைத்தவள், அவன் முகம் முன்பு வலதுகையை இல்லையென ஆட்டிவிட்டு மேலும் மூச்சு வாங்கினாள்.

தன்னையே இமைக்காது பார்க்கும் கண்கள், வேர்வை பூத்த நெற்றி, ஈர உதடுகளை ஒரு நொடி ரசித்தவன், “என்னடி என்ன விஷயம்? எதுக்கு இப்படி ஓடியாந்த?” என்றான்.

உன்ன கூப்பிட்டேன் உனக்குக் காது கேட்கல, உன்கிட்ட பேச இல்லையில்லை ஒன்னு சொல்லணும்…” என இழுத்தவாறு நிறுத்தியவள் தரை பார்த்து தலை குனித்தாள்.

அவளாக தன்னிடம் வந்து பேசுவதே ஆச்சரியமாகப் பார்த்தவன், ஏதோ சொல்ல வேண்டும் என்று சொல்லவும் ஆர்வமுடன் என்ன என்றான்.

தலை குனிந்து கொண்டு துப்பட்டாவின் நுனியை விரலால் சுற்றிக் கொண்டு வெட்கமுடன்,”நீ.. அது.. அது வந்து, நான்..நா..” உலறியவள், பெருமூச்சுடன் அவன் கண்களைப் பார்த்து, “மாமா எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணா உன்ன தான் பண்ணுவேன். மாமா நான் உன்ன காதலிக்கிறேன்!” என்றாள். தனக்குத் தெரிந்த சொற்களில் தெளிவுடன் கூறினாள்.

கேட்ட அவனுக்கு சிறகுகில்லாமல் பறப்பதைப் போன்ற உணர்வு. எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிய பொருள் எதிர்பாரா நேரம் கிடைக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவென்பதே இல்லை.

நிஜமாவ செல்லம்மா?” என்க, அவள் நிமிர்ந்து முறைத்தாள். சட்டென்று அருகில் வந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டு, “நிஜம் தான் கனவில்ல” என்றவன் மகிழ்ச்சி பொங்கப் புன்னகைத்தான்.

அவன் சந்தோஷத்தை வார்த்தையில் சொல்ல இயலாது, ஒரு கையை அவள் கையில் கோத்திருந்தவன் மறுகையால் வாயில் வைத்து விசில் அடித்தான். அவளைக் கட்டியணைத்து ஆட வேண்டும் போல் இருந்தது. தனக்கு ஆனந்தத்தை அள்ளி தரும் சொர்கத்தை தன் கை பிடிக்குள் பிடித்துக் கொண்ட சந்தோஷ உணர்வில் மிதந்தான்.

அவள் கை கோத்தபடி மெதுவாக நடந்து கொண்டே, “செல்லம்மா நாம அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம், அப்போ தான் நான் காலேஜ் முடிச்சிருவேன். நீயும் பிளஸ்டூ முடிச்சிருவ” என்றான்.

நான் டீச்சருக்கு படிக்கணுமே மாமா?” என்க, “படி கல்யாணத்துக்கு அப்பறம் நானே உன்ன படிக்க வைக்குறேன்டி. நீ நம்ம ஸ்கூலுக்கே டீச்சர் ஆகிடலாம் என்ன?” என்றான்.

அவளும் “ம்ம்ம்..” என்று தலையாட்ட, “நம்ம கல்யாணத்தை ஊரே பிரமிச்சி பார்க்குற மாதிரி பெருசா செய்யனும். என் அப்பா கிட்ட சொல்லுறேன், நாம கல்யாணத்துக்கு அப்பறமும் இங்க தான் இருப்போம் டவுனுக்கெல்லாம் வேண்டாம் என்ன சரியா? அடுத்து கல்யாணத்துக்குச் சிவப்பு பட்டு தான் எடுக்கணும், நான் தான் எடுப்பேன். மத்த புடவையெல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கோ” என்றவன் மேலும் நிறுத்தாது பேசிக்கொண்டே வந்தான்.

தெருவிற்குள் வந்ததும், “மாமா ஸ்கூல் முடிச்சி இன்னும் வீட்டுக்கு போகலை அம்மா திட்டும், நான் போய்ட்டு வரேன்” என விடைபெற்றுக் கொண்டு சென்றாள்.

கல்யாணக் கனவெல்லாம் நொறுங்கி விடத் தாங்காது விழி திறந்தவன், படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து முகத்தை அழுத்தித் துடைத்தான்.

வெளியில் சலசலக்கும் சத்தத்தோடு, கண்ணாடி உடையும் சத்தமும் கேட்க, எழுந்து வெளியில் வந்து பார்த்தான்.

கதவைத் திறந்து நின்றவன் சுற்றிலும் ஆராயும் பார்வை பார்க்க, வீட்டின் பின்புறம் மரக்கிளை முறிந்து விழுவதைப் போன்ற சத்தம் கேட்டது.

அதே நேரம் அங்கிருந்து மின்சாரம் துண்டிக்கப் பட்டு, வீட்டிற்குள்ளும் வெளியிலும் இருந்த அனைத்து மின் விளக்குகளும் அணைத்து விட்டன.

முழுவதும் இருளாய் இருக்க, சிறிதளவு நிலவின் வெளிச்சமும் மட்டுமே நட்சத்திரங்கள் வீசும் சிறு ஒளி போல் இருந்தது. அதில் பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டவன் என்னவென்று சென்று பார்ப்போம், என்றெண்ணி படியிலிருந்து கீழே இறங்கினான்.

முதலில் வருவது, காப்பாற்ற வரும் கயலா? கயவர்களா?

Advertisement