Advertisement

அத்தியாயம் 20

டிஸ்டிக் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே யாரையெல்லாம் தங்களின் செல்வாக்கால் வளைக்க முடியுமோ அவர்களையெல்லாம் வளைத்து தங்களுக்குச் சாதகமாக வைத்திருந்தனர் மேலும் அன்பு இல்லாதது அவர்கள் பக்கம் வலு சேர்த்தது.  

டிரவல்ஸ் ரிஜெஸ்டரில் இருந்து தங்கராசுவின் புக்கிங் பதிவுகளை வழக்கறிஞர் கூறியபடி கவனமாக நீக்கினர். நீக்கவில்லை எனில் தங்கராசுவும் சந்திரனும் திருட்டில் பங்குதாரர்கள் என்பது போல் ஆகிவிடும்.

தங்களின் கவனமின்மையால் நடந்த தவறை மறைக்க தங்களின் ஓட்டுநரை பலியாக்கினர். பரம்பரை பரம்பரையாக அவர்கள் வீட்டில் வேலை செய்வதால் அவரும் விசுவாசத்தில் குற்றத்தைச் சுமந்தார்.

ஓட்டுநர் தான் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கராசுவின் சொல்படி லாரி எடுத்துச் சென்றான் எனவும் அன்றைய தேதியில் அந்த நம்பர் லாரிக்கு எந்த புக்கிங்கிகும் தங்கள் பதிவேட்டில் இல்லை என்று அடித்துக் கூறினார் அவர்களின் வழக்கறிஞர் மேலும் இதில் தங்களின் கட்சிக்காரர் ஜெயச்சந்திரனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

சீனிவாசனும், தங்கராசுவும் தப்பிக்க இயலாது மாட்டிக்கொண்டனர். அதில் சீனிவாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அரசாங்க சொத்தை கொள்ளையடித்ததிற்கு அவர்கள் மேல் தனி வழக்கு தொடுக்கப்பட்டது. சந்திரனுக்கு பெரும் தொகையை அவதாரமாக விதிக்கப்பட்டது. அபதராதம் கட்டிய பின்னே லாரியை வெளியில் எடுத்து வந்தனர்.

அதற்குள் அந்த செய்தியானது மாலை நியூஸ்பேப்பரிலும், லோக்கல் தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பட்டு அந்த வட்டாரம் முழுதும் பரவியது. இதில் அவனுக்கு வேண்டியவர்கள் அனுதாபம் என்ற பேரில் கால் பண்ணி விசாரிக்க, வேண்டாதவர்கள் இதுதான் சமயம் என அவன் செய்யாத தவறை, செய்ததாக வதந்தி கலந்து பரப்பிவிட்டனர்.

சங்கரலிங்கம், “இது என்னடா சிறுபிள்ளைத் தனமாகச் செய்துள்ளீர்கள், நீங்களே எல்லாத்தையும் முடிவு செஞ்சுருவீங்களா? பெரியவர்களிடம் எதுவும் கேட்பதில்லையா? சந்திரா உன்னோடைய முடிவு எப்போதும் சரியாகத் தான் இருக்கும் என்று உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் இன்று அனைத்தையும் நீ இழந்து விட்டாய். உங்களால் ஊரார், உறவினர் முன்னிலையில் எவ்வளவு அவமானம்! உங்களால் என் பரம்பரையின் மதிப்பே குறைந்து விட்டது” என வசைபாடினார்.

ஊரிலிருந்து வந்த விஜயராகவன் விஷயம் அறிந்து செல்வாவையும் சந்திரனையும், “பொறுப்பில்லாதவர்களே, உங்களின் அசால்டுத்தனத்தால் தான் தவறு நடந்துள்ளது. உங்கள் அலட்சியத்தால் இத்தனை வருடம் என் டிரவல்ஸ்க்கு இருந்த நன்மதிப்பை இழந்து விட்டேனே, எல்லாம் உங்கள் தவறு தான், உங்களை நம்பி நிர்வாகத்தை ஒப்படைத்து என் தவறு!” எனச் சரமாரியாக திட்டித்தீர்ந்தார். இருவரும் பதில் சொல்ல இயலாது தலை குனிந்து நின்றனர்.

இதில் வீட்டில் தங்கியிருந்த உறவினர்களுள் பெரியவர் ஒருவர் என்னடா பேரான்டி, உனக்கு எதுக்கு இந்த களவாணித்தனம் நமக்கு இல்லாத வசதியா இன்னும் பத்து தலைமுறைக்கும் மேல உக்காந்து சாப்படலாமே அப்பறம் எதுக்குலே இந்த வேண்டாத வேல?” என்றார்.

சந்திரனின் மாமா ஒருவர் ஏன்டா வேலைக்கு வைக்குறவன பத்தி விசாரிச்சி சேத்துக்க வேண்டாமா? இப்படியா நம்ம தலைக்கு மேல கத்தி வர அளவுக்கு கவனிக்காம இருப்ப? யாரையும் முழுசா நம்பாதலே எப்பவும் வேலைக்காரங்க மேல ஒரு கண்ணு வச்சிக்கிட்டே இருக்கணும்டா, இனிமேலாவது தெரிஞ்சி நடந்துக்கோடா மாப்பிள்ள!என அவனுக்கு நிர்வாகத்திறமை இல்லாதது போல் பேசிச் சென்றார்.

டேய் சந்திரா, இப்படி கல்யாண நேரத்துல்ல இந்த வேல உனக்குத் தேவையா? கொஞ்ச நாளைக்கு அமைதியா இருக்க வேண்டியதானே, திருட்டுத் தனம் பண்ணாலும் மாட்டிக்காம பண்ணும்டா யாரும் நம்மல ஒரு கேள்வி கேட்கக்கூடாது அப்படி பண்ணனும்!என்னவோ அவனைத் திருடத்தெரியாத திருடன் போல் ஒருவர் சொல்லிச் சென்றார்.

அவனின் அத்தையும், “என்ன மருமகனே! அன்னைக்குக் காலையிலே ரெண்டுபேரும் ரகசியமா இதைத்தான் பேசிக்கிட்டு இருந்திங்களோ? அத்தை கிட்ட சொல்லுறதுக்கு என்னலே? சொல்லி இருந்தா உங்க மாமாவையும் கூட அனுப்பி வைச்சிருந்தருப்பேன்ல. சரிடா கயலு வீட்டுல இத பத்தி எதுவும் சொல்லலையா?”என மறைத்ததற்கு மறைமுகமாகக் குத்தலுடன் பேசினார்.

சந்திரனுக்கு யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. தன்னை திருடன் என்னும் அளவிற்குப் பேசி விட்டார்களே என மனம் ஆதங்கத்தில் புழுங்கியது. வீட்டிலிருக்கப் பிடிக்காமல் ரைஸ் மில்லுக்குச் சென்றான்.

கயலின் அன்னை தந்தைக்குள்ளும் இதனால் வாக்குவாதம் வந்தது, “என் பொண்ணுக்கு என்ன குற? கூனா?குருடா? மொடமா? இப்படித் தங்க சிலையாட்டம் இருக்க பொண்ணுக்கு போய் ஒரு திருட்டு பையனுக்கு கட்டிவைக்கணும்னு நினைக்குறீங்களே? நீங்களும் பணத்தாசை பிடிச்சவர்தான் பெத்த பிள்ளை மேல இருக்குற பாசத்தைக் கூட பணத்தாசை மறச்சிறிச்சோ?”என அவள் அன்னை கேட்க,

நொடியும் தாமதிக்காமல் அவரை அறைந்தவர், “அடியே பார்த்துப் பேசு இல்ல பல்ல தட்டிப்புடுவேன். இங்க பாருடி என் மருமகன் திருடனில்ல ஊர் என்ன சொன்னாலும் நம்பிடுவியா? யார் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும் என் மகளுக்குச் சரியான மாப்பிள்ளை என் சந்திரன் தான். இதுக்கு மேல ஏதாவது வாயத் துறந்த…என மிரட்டினார்.

இருவரின் வாக்குவாதத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் கயல் ஆனால் இருவருக்குமிடையில் போகவில்லை ஏதும் பேசவுமில்லை. பின் விஜயராகவனும் வசந்தாவும் வந்து தங்கள் மகன் மேல் தவறில்லை என பிரச்சனையை பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினார்.

ஊருக்குள் ஆண்கள் பொழுதுபோக்கிற்காக பொதுச்சந்திரத்தில் அமர்ந்து பேசுவார்கள். இன்று அவர்களுக்குள்ளும் சந்திரனைப் பற்றிய பேச்சு தான்.

பார்த்தீங்களா பெரிய வீட்டுக்காரன் பண்ண வேலையை? எத்தன வருஷமா இப்படி ஊற ஏமாத்தி கிட்டு சுத்துறானோ?”

ஏலே, சந்திரன் தம்பி மேல எந்த தப்பும் இல்லடா அந்த டிரைவர் தான்டா எல்லாத்துக்கும் காரணமாம்

எவன்டா இவ விவரத் தெரியாம பேசிக்கிட்டு இருக்கான், டிரைவருக்கு ஏதுலே அம்புட்டு தைரியம்? தங்கராசும் சந்திரனும் கூட்டுக் கலவானிகடா! 

என்பது போல் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒருவிதமாகப் பேசிக்கொண்டனர். ஊரில் உள்ள பெண்களும் திருவிழாவிலும், கடைகளிலும், தெருவில் குடிநீர் பிடிக்கையிலும் இதைப் பற்றித் தான் பேசினர். இவன்லாம் என்ன மனுஷன் போயும் போய் ஐஞ்சி ரூபா ரேஷன் பொருளையா திருடனும்? இவனால நம்ம புள்ள குட்டிக தான் பட்டினியா கெடக்குதுங்க, இவன்லாம் நல்லா இருப்பானா?” எனச் சாபமே வழங்கினர்.

ரைஸ் மில் குடோனில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் சந்திரன். அடக்க முடியாத கோபத்திலிருந்தவன் அதை யாரிடம் காட்டமுடியாது திணறினான். அதே நேரம் செல்வா வருவதைப் பார்த்தவன் நொடியும் பொறுமையின்றி,”யாருன்னு விசாரிச்சையா? கம்ப்ளைண்ட் கொடுத்தது யாருடா?” எனப் பற்களைக் கடித்தவாறு கேட்டான்.

ம்ம், நீ கொஞ்சம் கோபப்படாதடா, உன் பங்காளி அன்புதான் கம்ப்ளைண்ட் கொடுத்துருக்கான். அதுவும் டி.எஸ்.ஓ கிட்டையே நேரா போய் கொடுத்துருக்கான்!” என்றான்.

அவன் பங்காளி இல்லடா பகையாளி! வாழ்க்கையில எனக்கு இருக்குற எதிரியே அவன் தான், அவனால தான் எனக்கு இவ்வளோ பெரிய அவமானம். என்னால என் குடும்பத்து ஆளுங்க, சொந்தக்காரங்க, ஊர்காரங்கன்னு யார் முகத்துலையும் முழிக்க முடியல. அசிங்கமாக இருக்குடா எல்லாரும் என்ன களவானிபையக்குற மாதிரியே பார்க்குறாங்க.

சின்ன வயசுல இருந்து என் வழியில குறுக்க வராதே அவனுக்கு வேலையா போச்சி, அன்னைக்குத் திருவிழா கூட்டம் அப்பவே என்ன அவமான படுத்திட்டான் நான் சும்மா விட்டுட்டேன் ஆனா இன்னைக்கு இந்த ஊரே சிரிக்குற மாதிரி பண்ணிட்டான். 

இதுக்கும் மேல நான் எதுவும் பண்ணாம சும்மா இருந்தா இந்த மீசை வச்சத்துக்கே அர்த்தமில்லா போயிடும்டா. அவனை சும்மா…விடமாட்டேன்டா…!” என உச்ச கோபத்தில் முகம் சிவக்க, கண்களில் கனல் தெறிக்கக் கத்தினான். கைகள் கத்தியால் அடுக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகளில் கொலைவெறியுடன் குத்த, நெல்மணிகள் அருவியாய் நிற்காது கொட்டியது. 

கோபத்தில் ருத்ரமூர்த்தியாய் இருந்தவன் தன்னை மறந்த பித்தநிலையில் சேர், மேசையைத் தட்டி விட்டு, அதிலிருந்த அனைத்து பொருட்களையும் தூக்கிவீசினான். செல்வாவால் அவனை நெருங்க இயலவில்லை.

டேய் அன்பு உன்ன சும்மா விட மாட்டேன்டா… அன்பு…அன்…” எனக் கத்தியவாறு அருகே இருந்த வெயிட் மெஷினில் ஓங்கித் தட்டினான். இதில் அவன் வலதுகை முட்டியில் பலமாக அடிபட, மெஷினிலில் இருந்த எடைக்கல் அருகே நின்றிருந்த செல்வாவின் காலில் விழுந்தது. இருவரும் ஒரே நேரத்தில் “ஸ்ஆஆ..” எனக் கத்தியவாறு கை, கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தனர். 

விடுடா சந்திரா, அந்த பரதேசி ஊருல இல்லடா உன் கல்யாணம் முடியட்டும் பார்த்துக்கலாம்” என்றான் செல்வா சந்திரனின் கை காயத்தை ஆராய்ந்தவாறு.

அவன் இருந்தா கல்யாணமே நடக்காதுடா! கல்யாணத்தை நிறுத்த தான் வேணும்னே கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கான். எப்படியும் கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணுவான்டா, அவன் ஊருல இல்லைனு நினைச்சி அசால்ட்டா இருக்கக் கூடாது. ஏதாவது பிளான் பண்ணிட்டு தான் போய் இருப்பான், இல்ல பிளான் பண்ணத் தான் போய் இருப்பான்!”

ஆனால் அன்பு குற்றவாளி இவன் தான் என்று தெரிந்து கம்ப்ளைண்ட் கொடுக்கவில்லை, குற்றவாளி யார் எனத் தெரிந்து கொள்ளத் தான் கொடுத்திருந்தான். இவர்களுக்கு நிச்சியம் முடிந்த விஷயத்தையும் அவன் இன்னும் அறிந்தானோ என்னவோ? அன்று கயலை ரசித்தவாறு, நம்மை தங்கராசு அண்ணன் தானே அனுப்பி வைடா என்ற தன் வாக்கு தான் அனைத்து பிரச்சனைக்கும் பிள்ளையார் சுழி என்பதை உணராமல் இருந்தான் சந்திரன். 

அவனுக்குத் திருமணம் என்பதால் தான் அனைவரின் பார்வையும் அவன் மீது இருந்தது ஆகையால் தான் அவன் செய்த சிறு தவறும் பெரிதாய் பேசப்பட்டது. அவனின் நிலைக்கு அவன் செயல் தான் காரணம் என்பதை உணராது அன்புவின் மேல் வன்மத்தை வளர்ந்தான்.  

என்னடா சொல்லுறே? உன் கல்யாணத்தை நிறுத்தவா?”

ஆமாடா கயல் மேல அவனுக்குக் காதல்! அந்த அன்பு பையன் இதுவரைக்கும் எந்த புள்ளையாவது தல நிமிர்ந்து பார்த்துருக்கானா? ஆனா கயலை எப்படி பாப்பான் தெரியுமா? கயலு தான்டா அவனுக்கு உசுரு! அவன் காதல் காவியக் காதல் சின்ன வயசுல இருந்தே கயல் மேல காதல். அவனை சும்மா விடக் கூடாது எப்படியும் என் கல்யாணம் நடக்கணும்டா”

எதை நினைச்சியும் கவலப்படாமா உன் கல்யாண வேலையை பாரு, கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும். அம்மா உன்ன சாப்பிட கூட்டிட்டு வரச் சொன்னாங்க வாடா” என அவன் தோளில் கரம் போட்டு அழைத்துச் சென்றான் செல்வா.

தன் நண்பனின் விருப்பம் அறிந்து கேட்கும் முன் செய்து முடிப்பவன் இன்று அவன் நிலை கண்டு மனதில் ஒரு உறுதி எடுத்துக் கொண்டான்.

அவனின் உறுதியை உடைக்க அன்று மாலையே ஊரில் இருந்து வந்தான் அன்புச்செழியன். 

அன்று தான் திருவிழாவின் கடைசி நாள், நாளை மறுநாள் திருமணம்.  

மாலை கயலின் பெற்றோர்கள் டவுனுக்கு நகை வாங்கச் சென்றிருந்தனர். கவனமாக வீட்டிலிரு எங்கும் செல்லாதே என்ற அறிவுரை கூறிச் சென்றிருந்தார் கற்பகம். அந்திமாலை கன்றுக்குட்டி கத்தியது, பசுமாடு வீட்டில் இல்லாது தோப்பில் கட்டப்பட்டு இருந்தது, செல்லும் அவசரத்தில் மாட்டை வீட்டில் கட்ட மறந்து சென்றிருந்தார் வேல்முருகன். 

சிறிது நேரம் பொறுமையா இருந்து கன்றுக்குட்டி தவிடு கலந்து தண்ணீர் வைத்து தலை தடவியவாறு அதன் அருகிலிருந்தாள் கயல். ஆனால் அது பசியில் கத்திக்கத்திச் சோர்ந்து படுத்து விட, மனம் தாங்காமல் தோப்பிற்குச் சென்று மாடை அவிழ்ந்து வரச் சென்றாள்.

அன்பு வீட்டிற்குள் வந்ததுமே சிவகாமி அன்பிற்குப் பக்கத்து ஊரில் பெண் பார்த்து அனைத்தும் பேசி முடித்து விட்டதாகவும் நாளை தன்னோடு வந்து ஒருமுறைப் பெண்ணை பார்த்துச் செல்லுமாறு அழைத்தார். அன்பு முடியாது என்று மறுக்க, அவரும் நீ பார்க்காவிடினும் பரவாயில்லை அந்த பெண்ணை தான் நீ மணக்க வேண்டும் என பிடிவாதமுடன் கூறினார். 

அன்பு முடியவே முடியாது என உறுதியாக மறுத்தான். எப்போதும் நடப்பது தான் எனினும் இந்த முறை இருவரும் விடாப்பிடியாகப் பிடிவாதமுடன் இருக்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஆகியது. இதில் கோபம் கொண்ட அன்பு உடனே எப்போதும் போல் அவன் தோப்பு வீட்டிற்குச் சென்றுவிட்டான். 

வந்து உடை கூட மாற்றவில்லை, பத்தே நிமிடத்தில் சண்டையிட்டுச் சென்றுவிட அவன் வந்ததற்கும் சென்றதுக்குமாக அடையாளமே இல்லை, யாரும் அறியவில்லை. வீட்டில் வேலை செய்யும் பேச்சி அவர் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேச்சுக்கு இடையே தன்னையறியாது அன்புவை பற்றி உளறினார். 

மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருக்க, கதிரவன் மறைந்திருந்தான், திங்கள் இன்னும் எழவில்லை. அந்த நேரம் மாட்டை அவிழ்க்கத் தோப்புக்குச் சென்ற கயல் சாலை வழியாகச் செல்லாது குறுக்கு வழியென அருகே இருக்கும் பிறர் தோப்புக்குள் புகுந்து சென்றாள். எலுமிச்சை தோப்பில் சருகோடு விழுந்திருந்த முள் காலில் குத்திவிட அதை எடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினாள். ஆனால் ஒரு பேச்சுக்குரல் கேட்க அதிலும் அன்புவின் பெயர் கேட்க நின்று கவனிக்கத் தொடங்கினாள். 

அந்த உருவம் திரும்பி நின்று மொபலில் பேசியதால் இருளில் அது யார் என்றே தெரியவில்லை. ஆனால் குரல் அவளுக்குப் பழக்கமான குரல் தான். விஷயம் என்னவென்று கேட்டவள் குரல் யாரது என்பதை ஆராயவில்லை.

Advertisement