Advertisement

அத்தியாயம் 02

ம்ம்.. கிளப்பிட்டோம்.. கிளப்பிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்” என மொபைலில் கணீர் குரலில் பேசியவாறு வேக நடையோடு படிகளில் இறங்கி வந்தான் ஜெயச்சந்திரன்.

உணவுண்ண அமர்ந்தவன் மெல்லிய சிரிப்பொலி கேட்கத் திருப்பி பார்த்தான். அவன் தங்கை ஜெயந்தி மொபைலில் தன் வருங்கால கணவரோடு மெல்லிய வெட்க புன்னகை மின்ன பேசிக்கொண்டு இருந்தாள். அவன் வருகையைக் கண்டதும் அழைப்பைத் துண்டித்தவள் அவன் அருகே வந்து அவனுக்கு உணவு பரிமாறத் தொடங்கினாள்.

என்ன ஜெயந்தி, மச்சான்கிட்ட காலையிலே கடலையா?” என்றான் நிமிர்ந்து பாராமல். 

இல்லண்ணா! அவங்களுக்கு முக்கியமான மீட்டிங் இருக்காம். அதன் நான் எழுப்புறதுக்காக கால் பண்ணேன்..” என மென் குரலில் கூறினாள்.

சென்னையில இருக்குறவர் எழுந்திருக்க இங்கிருந்து சேவல் கூவணுமா?” எனக் கிண்டலுடன் கேட்ட, அவளோ கெஞ்சலுடன் உதட்டின் மேல் ஒரு விரல் வைத்து, “அண்ணா உஸ்..ஸ்..ஸ்..”என அவன் பின்புறம் சைகை காட்டினாள்.

அதே நேரம் அவர்கள் ஆச்சி ருக்மணி உணவுண்ண வந்து அமர்ந்தார். இருவரும் அமைதியாகி விட, அவர்கள் அன்னை வசந்தாவும் அடுப்பறையிலிருந்து வந்து உணவு பரிமாறித் தொடங்கினார். 

வசந்தா, மாப்பிள்ளை வீட்டிலிருந்து எதுவும் தகவல் சொல்லிருக்காங்களா?” என்றார் ஜெயந்தியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு.

மதினி நேத்து பேசுனாங்க. நிச்சியத்தன்னைக்கு நம்ம ஜெயந்தியைப் பார்த்த அவங்க சொந்தக்காரங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்ததாம். நிச்சியத்துக்கு நாம பண்ண ஏற்பாடெல்லாம் சிறப்பா இருந்ததாம். அவங்க சொந்தக்காரங்க எல்லாரும் பாராட்டிட்டு போனாங்களாம்” என்றார்.

நம்ம புள்ள கல்யாணத்துல யாரும் ஒரு குறை சொல்லிறக்கூடாது, எல்லாமே அவங்க சொன்னதுக்கு மேல நிறைவா செய்யணும். நாளைக்கு அவ வாழப்போற இடத்துல கௌரவமா வாழணும். அவ என் வளர்ப்பு, அவ என் பேத்தி, இந்த வீட்டுக்கே மகாராணி. அவ என்ன ஒன்னுமில்லாத வீட்டுல இருந்தா போகப்போறா?” என நேராக மருமகளைப் பார்த்து மறைமுகமாக குத்தலுடன் கூறினார்.

ஆச்சி இதெல்லாம் நீங்க சொல்லணுமா? என் தங்கச்சி கல்யாணத்தை ஊரே அசந்து போற மாதிரி நான் நடத்துவேன்” என்றவாறு ஜெயந்தியிடம் திரும்பியவன், “என் அம்மாவோட அழகு, ஆச்சியோட பண்பு இதான் என் தங்கச்சி! புகுந்த வீட்டுல நம்ம பேர காப்பத்துவா” என்றான்.

வாசலின் இரும்புக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் செல்வ கணேஷ். முன்புற தாழ்வாரத்தில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார் சங்கரலிங்கம், ஜெயச்சந்திரனின் தாத்தா. செல்வகணேஷின் வருகையைப் பார்த்துப் புன்னகைக்க, அவனும் பணிவான தலையசைப்போடு வீட்டிற்குள் சென்றான்.

சந்திரா ரெடியாகிட்டியாடா? கிளம்பலாமா?” எனக் கேட்டவாறு அவன் அருகே சென்றான்.

வா செல்வா! சாப்பிட்டு போகலாம்” என அவனை தன் அருகே அமர்த்தினான். செல்வா முதலில் மறுக்க, ருக்மணி உண்ணுமாறு கூறிய பின் அமைதியாக அமர்ந்தான்.

அவனுக்குமாக ஜெயந்தி பரிமாறினாள். உண்ட பின் இருவரும் கிளம்பினர். காரில் அமர சாவி எடுத்துவரவில்லை என மீண்டும் உள்ளே எடுக்கச் சென்றான் ஜெயச்சந்திரன்.

ஜெயந்தி செல்வாவின் அருகே வர, அவளைப் பார்த்தவன், “என்னம்மா என்ன விஷயம்? என்ன பண்ணனும்?” எனக் கேட்டான்.

அண்ணா! வரும் போது என்னோட நிச்சயதார்த்த ஃபோட்டோ ஆல்பம் ரெடியாகி இருந்தா வாங்கிட்டு வாங்களேன்” என்க,

இதானா! ரெடியாகாட்டாலும் அந்த ஸ்டூடியோக்காரன இரண்டு தட்டு தட்டியாவது வாங்கிட்டு வந்துடுறேன்” என்றான் குரல் உயர, அவளோ சிரிப்புடன் தலையாட்டிவிட்டு உள்ளே செல்ல, சந்திரன் வந்தான்.

அப்பாவால் அங்க வரமுடியாதாம், வேலை இருக்காம். அவர் வர்றாரா இந்த டெண்டருக்கு?” எனப் பற்களைக் கடித்தவாறு கேட்க, செல்வா தலையை ஆம் என ஆட்டினான்.

இந்த டெண்டர் நமக்குத் தான் வேணும் செல்வா. அவர் கிட்ட விட்டுறக்கூடாது. அவர் என்கிட்ட தோத்து நிக்கணும் செல்வா” பற்களைக் கடித்தவாறு உரைத்தவனின் ஒரு கை அவன் மீசை தடவியது.

சந்திரா நீ எதை நினைச்சும் குழம்பிக்காத, கண்டிப்பா டெண்டர் நமக்குத் தான். வாடா போகலாம் நேரமாகுது” அவன் முதுகு தடவி உரைத்தவன், அவனையும் அமர்த்தி காரை ஸ்டார்ட் பண்ணினான்.

இவர்கள் கார் கேட்டை விட்டு வெளியே வர, எதிர் வீட்டிலிருந்து ஒரு கார் வெளியே வந்தது.

ஜெயச்சந்திரனின் பார்வை அதன் மீது அனல் வீச்சாய் பாய, செல்வா அதை விட வேகமாகப் பாய்ந்தான். இவர்களே முதலில் திரும்பியிருக்க, அந்த தெருவிற்குள் இவர்கள் முன்னும் எதிர் வீட்டிலிருந்து வந்த கார் பின்னும் சென்றது.

ஜெயச்சந்திரன் எங்கு சென்றாலும் அவன் பின் நிழல் போல் நிற்பவன் செல்வகணேஷ். பள்ளிக் காலத்தில் தொடங்கிய நட்பு. பள்ளிப் படிப்பின் இறுதியாண்டின் போது செல்வாவின் தந்தை இறந்துவிட, அவர் வாங்கியிருந்த கடன் சுமையால் செல்வா கஷ்டப்படும் போது உதவியது சந்திரன் தான். தான் படித்த கல்லூரியிலே தன்னுடனே அவனையும் படிக்க வைத்தான்.

செல்வாவைக் குறைவாக ஒரு சொல் சொல்ல யாரையும் அனுமதிக்க மாட்டான் சந்திரன்.

சந்திரனின் நட்பே தனது பெரும் உடைமையாக நினைக்கும் செல்வாவிற்குள் அளவிட முடியாத நன்றி உணர்வு உண்டு. தனக்குச் சொந்தமான சிறிதளவு நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு தன் அன்னையுடன் நிறைவாக வாழ்கிறான். சந்திரனைப் போலவே ஜெயந்தி மீதும் அன்பு கொண்டவன்.

அவளைக் கல்லூரி அழைத்துச் செல்லுதல் மீண்டும் அழைத்து வருதல் எனப் பல பொழுதுகளில் சந்திரன் இடத்திலிருந்து அண்ணனாக அவளை கவனித்துக் கொள்வான்.

சந்திரனுக்குச் சிறுவயதில் ஒரு புது சட்டை அவன் தந்தை எடுத்துக் கொடுத்து செல்வாவிற்கு எடுக்கவில்லை எனில் அதைச் சந்திரன் வாங்க மறுப்பான். சந்திரனின் குடும்பத்திலும் ஒரு பிள்ளை போல் செல்வாவை ஏற்றுக் கொண்டனர். 

சந்திரனின் ஒற்றைப் பார்வையில் அவன் மனமறிந்து செய்து முடிப்பான். சந்திரனின் மொத்த நம்பிக்கையும் செல்வா தான். சந்திரனின் மொத்தப் பலமும் செல்வா தான்.

மொத்தத்தில் நட்பிற்கே இலக்கணமான துரியோதனன் – கர்ணனின் மறுபிறவிகளாக நின்றனர் இருவரும்.

இவர்கள் சென்ற பின்னே அந்த தெருவிற்குள் வந்த கயல்விழி எப்போதும் போல் எதிர்படுவோரிடம் இருவார்த்தைகள் எனப் பேசி, அன்புச்செழியன் வீட்டின் முன்பு வந்து நின்றாள். கேட்டை தாண்டி உள்ளே எட்டிப்பார்க்க பேச்சுக்குரல் எதுவும் கேட்கவில்லை.

ஜெயந்தி கண்ணில் படாமல் அவனைப் பற்றி விசாரித்து விட்டுச் செல்லவேண்டும் என்று எண்ணியவள் எவ்வாறு யாரிடம் விசாரிக்க என்ற யோசனையில் நின்று கொண்டிருந்தாள்.

அதே நேரம் அவர்கள் வீட்டின் வேலையாள் வீட்டிற்குள் செல்வதைப் பார்த்து, ” பேச்சி அக்கா! கொஞ்சம் நில்லுங்க…” என அவர்கள் அருகே சென்றாள்.

“பேச்சியக்கா இந்தாங்க பிரசாதம் எடுத்துக்கோங்க” என நீட்ட, அவள் கைகளிலிருந்து பொங்கலை வாங்கியவர், “என்ன கயலு இந்த பக்கம்? ஜெயந்தியைப் பார்க்க வந்தியா?” என்றார்.

ஆமாக்கா, அது இருக்கட்டும் இந்த கீழத்தெரு முக்குவீடு சுப்பையா தாத்தா உடம்புக்கு முடியாம கிடக்குறாராக்கும்?” என ரகசியம் போல் மெல்லக் கேட்க,

ஆமாடி! ஒரு வாரமா உடம்புக்கு ரொம்ப முடியாம தான் இருக்காரு. சாப்பாடு, தண்ணீ கூட இல்லையாம், டவுனிலிருந்து அவங்க புள்ளைகளெல்லாம் வந்துருக்காங்க. அநேகமாக போயிருவாரு” என மொத்த கதையும் கூறினார்.

அது சரி, அவருக்கும் போகவேண்டிய வயசுதானே! அப்பறம்க்கா, பூவ பொண்ணு பார்க்க வர்றதா சொல்லிக்கிறாங்க உண்மையாவா?” என அடுத்த கேள்வியை வைத்தாள்.

ஆமா! நாளைக்கு வராங்களாம். மாப்புள்ள ரொம்ப படிச்ச, வசதியான இடமாம். இப்போ வரைக்கும் யாருக்கும் தெரியாது, அம்புட்டு ரகசியமாக வச்சிருக்காங்க ஆனா எனக்குத் தெரியாம எதுவும் இருக்க முடியாதுல்ல! ஆமாடி பூவு உன் ஃப்ரண்ட் தானே? உன்கிட்ட சொல்லலையா? ஜெயந்திக்கு கல்யாணமாகப் போகுது, பூவுக்கு மாப்பிள்ள வீடு வருது, இவளுக கூடத்தானே நீயும் படிச்சி, வளந்த.. உனக்கு எதுவும் உங்க வீட்டுல பேசிருக்காங்களா?” எனக் கடைசியில் அவளைப் பற்றி அவளிடமே கேட்டார். 

அந்தக் கழுதைக தான் டிகிரியோட படிப்ப நிப்பாட்டிட்டாளுக. நான் டீச்சருக்குப் படிச்சிருக்கேன்ல! அப்பறம் அவளுகள மாதிரி எனக்கு டவுன் மாப்பிள்ள வேண்டாம். நான் என்ன பெத்தவங்கள விட்டு இந்த ஊர விட்டுப் போக மாட்டேன்” வீராப்புடன் வெடுக்கென்று கூற கேட்ட, அவர் வாய் பிளந்து நின்றார். 

அதெல்லாம் விடுக்கா, உங்க வீட்டுல ஏதும் விஷேசமா?” என மெல்லிய குரலில் கேட்டவாறு கேட்டையும் எட்டிப் பார்த்தாள்.

அப்படித்தான்னு நானும் நினைக்குறேன். காலையில அம்மா போனுல சின்னையா கிட்ட பொண்ணு பார்க்குறேன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க! சரியா எதுவும் தெரியல, தலைவலிக்குன்னு வெத்தல வாங்கியாரச் சொன்னாங்க நான்தான் இம்புட்டு நேரமா உன்கிட்ட பேசிக்கிட்டு நின்னுட்டேன். நான் போயிட்டு வாரேன்டி” என உள்ளே சென்றார். 

கயலின் கண்கள் கலங்கியது. இதயமே கனத்தது, அப்படியே அமர்ந்து அழ வேண்டும் போல் இருந்தது. தனக்கு மட்டுமே உரிமையானவனாக அவனை எண்ணி ஏழு வருடங்களாக அவன் வருகைக்காகக் காத்திருக்கிறேனே. இழந்துவிடுவேனோ? என்ற பயம் பரவ, தன் நெஞ்சை அழுத்திப் பிடித்தாள். 

தான் கொண்ட நேசம் உண்மையானது. அவனும் தன்னை விரும்பினானே? ஆனால் இப்போது அவன் மனம் என்னவென்று தெரியாது. எப்படி இருப்பினும் அவனை விடுவதாய் இல்லை. உள்ளுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்க என்ன நடத்தாலும் போராடிப் பார்ப்பது என்ற முடிவெடுத்துக் கொண்டாள்.

‘நான் இருக்கும் போது வேற பொண்ணு பார்த்துருவாங்களா? இதுக்கெல்லாம் காரணம் அந்த சிவகாமி கிழவி தானே? இருக்கட்டும், என்கிட்ட மாட்டும்போது பார்த்துக்கிறேன்’ என எண்ணியவள் தாவணியின் முந்தானையை எடுத்துச் சொருகி கொண்டு வீடு நோக்கிச் சென்றாள்.

இரவு ஏழு மணி பொழுதில் பிளாட்டிற்குள் சோர்வுடன் வந்தான் அன்புச்செழியன். கலைந்த தலை, கசங்கிய சட்டை, அதற்குப் பொருத்தமற்ற வண்ணத்தில் பேண்ட் என தன் தோற்றத்திலும் அக்கறை கொள்வதில்லை. 

தான் வரும் போது புன்னகை முகமாய் கதவு திறந்து, காஃபி கொடுத்து, இரவில் உணவூட்டி, காலையில் உணவு சமைத்துக் கொடுத்து, தலைவலியின் போது மடி சாய்த்து தலை வருடி, தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, தன் இன்ப துன்பங்களில் உடனிருக்க, தன் மனைவியாய் ஒரு பெண் வேண்டும். நிம்மதியான, மகிழ்வான வாழ்க்கை வேண்டும். அதுவும் காலையில் ஆச்சி பேசி பின் அந்த எண்ணமே அவனுள் சுழன்றது. 

ஆனால் இவை அனைத்திற்கும் வேறு பெண்ணல்ல, என்னவள் தான் வேண்டும். அவள் தான் வேண்டும். அவளோடு சுகமான வாழ்வு வேண்டும். ஆனால், இந்த ஜென்மத்தில் அவள் தனக்குக் கிடைக்கப் போவதில்லை. அவள் முகம் பார்க்கவே தகுதியற்றவன். அவளைப் பார்க்க முடியாமல்தானே ஊருக்குச் செல்வதையே தவிர்க்கிறேன். 

ஏதேதோ எண்ணத்தில் மனம் சுழல, விழி மூடியிருந்தவன் மெல்ல ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான். ஆனால், அதைக் கலைப்பது போல் அவன் மொபைல் அழைத்தது அவன் ஊரை நோக்கி.

Advertisement