Advertisement

அத்தியாயம் 19

அதிகாலையிலே துயிலேந்த ஆதவன் கண் கூசும் படியான பிரகாச ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். அவன் வேகத்திற்கு அசைந்து கொடுத்து பறவைகளும், காகமும் கரைந்தவாறு புதிய விடியலில் புத்துணர்வோடு தங்களின் பணிகளைத் தொடங்கியிருந்தன. 

ஆதவன் வெளிச்சத்தோடு சிறு உஷ்ணத்தையும் கலந்து பரப்பிக் கொண்டிருக்க, அதிலும் அசராது உறங்கிக் கொண்டிருந்தான் சந்திரன். 

நள்ளிரவிற்குப் பின் உறங்கினாலும் அதிகாலையில் எழுந்துவிட்ட பெண்கள் சமையல் வேலையிலிருந்தனர். ஆண்கள் அப்போது தான் ஒவ்வொருவராக எழுந்து வந்து கதை பேசியவாறு, பேப்பர், காபியுடன் முன்புற முற்றத்து நாற்காலியில் அமர்ந்திருந்தனர். 

என்னதான் சமைப்பதற்கு வேலையாட்கள் இருப்பினும் தங்கியிருக்கும் உறவினர்களுக்குப் பரிமாறுவதும், தேவையறிந்து கவனிப்பதுமே பெரிய வேலையாக இருந்தது வசந்தாவிற்கு. அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு வீட்டிற்குள் செல்ல, அப்போது தான் பரபரப்போடு உள்ளே வந்தான் செல்வா. 

“என்னலே செல்வா இப்படி விடியலே பரபரப்பா வர?” என்றார் சங்கரலிங்கம். 

சுற்றியிருக்கும் உறவுகளைப் பார்த்தவன், “ஒன்னுமில்ல தாத்தா, சந்திரனை பார்க்க வந்தேன். கொஞ்சம் டவுன் வரைக்கும் போனும்” என்றான். 

“என்னலே இன்னும் ஆறு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு அவன வெளியே கூட்டு சுத்துற, ஏதா இருந்தாலும் நீயே பார்த்துக்கோலே!” 

“அதை நீங்க சொல்லணுமா தாத்தா? நான் பார்த்துக்கிறேன். இது முக்கியமான விஷியமில்ல, அவனுக்குக் கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுக்கத்தான்” 

“சரி, சரி பார்த்து பத்திரமா வண்டியோட்டு! அவனைப் போய் முதல்ல எழுப்பிவிடுடா” 

சரியெனத் தலையாட்டியவாறு பரபரப்புடன் படிகளில் தாவியேறினான். நின்று பேசும் நிலையிலில்லாது வந்தவன் எதிரே வந்த வசந்தா நீட்டிய காபியையும் மறுத்தவாறு ஓடினான். 

உச்சந்தலை வரை மூடிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சந்திரனைத் தட்டியெழுப்பினான். 

“சந்திரா கொஞ்சம் எழுந்திரிடா, முக்கியமான விஷியம்” என குரலை இறக்கிக் கொண்டு அழைத்தான். 

“என்னடா செல்வா?” கேட்டவன் படுக்கையிலிருந்து எழுந்திரிக்காமல் விழியை திறக்காமல் புரண்டு படுத்தான். 

“நேத்து நயிட் நம்ம ரேஷன் கடைக்கு ரைடு வந்திருக்கங்கடா!” ரகசியம் போல் மென்குரலில் கூறினான். 

“சரி அதுக்கு என்ன இப்போ?” உறக்கம் கலைந்த எரிச்சலில் ஆர்வமின்றி கேட்டான் சந்திரன். 

“அதுல நம்ம லாரி மாட்டிக்கிச்சி, கேஸ் பையில் பண்ணிட்டாங்கடா” என்றவன் முடிப்பதற்குள் பதறி அடித்து எழுந்தான் சந்திரன். 

சந்திரன் எழ, மண்டியிட்டு அமர்ந்திருந்த செல்வாவும் எழுந்து அவனருகில் நின்றான். “என்னடா சொல்லுற? நம்ம லாரி எப்படி மாட்டனது?” இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்டான். 

“தங்கராசு அண்ணனே கேட்டாங்கன்னு விசாரிக்காம அனுப்பிவிட்டோம்ல அதான்டா இப்போ பிரச்சனையா போச்சு. ரேஷன் கடையில ஆஃபீஸ்ரா இருக்குறது அவனோட அக்கா புருஷன் சீனிவாசன். அவனுக்காகத் தான் லாரி எடுத்திருக்கான் நாம தான் விசாரிக்காம தங்கராசு மேல இருக்குற நம்பிக்கையில அனுப்பிவச்சிட்டோம். ஆனா அந்த திருட்டுக் கழுத இப்படி ஒரு வேல செஞ்சிட்டான்“ 

“ஏன் செல்வா இப்படியா விசாரிக்காமல அனுப்பி வைப்ப? எங்கிட்டையாவது அப்பாகிட்டையாவது ஒரு வார்த்த கேட்டு இருக்கலாமே?” மென் குரலில் அழுத்தமுடன் கேட்டான். 

“டேய் அன்னைக்கு வீட்டுல வச்சி உன்கிட்ட கேட்டேன்ல, நீதாடா நம்ம தங்கராசு அண்ணன் தானே அனுப்பி வைனு சொன்ன. அப்பறம் தங்கராசு எப்பவும் தேங்கா லோடு ஏத்த நம்ம லாரியத்தான புக் பண்ணுவாறு அதான் இப்பவும் தேங்கா லோடுக்கு தான்னு நினைச்சேன்” என்றான். 

“ஆமா நானும் அப்படி நினைச்சி தான் அனுப்பச் சொன்னேன். ஆனா அந்த துரோகி அவன் மாமக் கூட சேர்ந்து ரேஷன் பொருட்களைக் கடத்தி இருக்கான். இதுக்கு அவனுக்கு இருக்கு பாருடா, அவன சும்மாவிட மாட்டேன்டா” கோபத்தில் குரல் இறுகக் கத்தினான். 

அவன் தோள் தட்டியவாறு, “இப்போ வேண்டாம், அவனை கொஞ்சம் ஆரப்போட்டுச் செய்யலாம். இப்போ பிரச்னையில இருந்து வெளியே வர என்ன பண்ண? இன்னும் யாரு கிட்டையும் சொல்லல்ல அப்பாவுக்கு போன் போட்டுச் சொல்லட்டுமா?” அவனை நெருங்கி நின்று மென்குரலில் கேட்டான் செல்வா. 

சந்திரன் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள், “என்ன தம்பி ரெண்டுபேரும் ரகசியம் பேசிக்கிட்டு இருக்குற மாதிரி தெரியுது” என்றார் ஒரு பெண்மணி. 

ஈரத்துணிகளை காயாப் போட்டுக்கொண்டிருந்த பெண்ணை திருப்பிப் பார்த்தவன், “ரகசியமெல்லாம் இல்ல அத்தே, கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க எல்லாரையும் கூட்டுப் போகச் சொன்னேன். அதுவும் உங்களுக்கு ரெண்டு பட்டுச் சேலை எடுத்துத் தரச் சொன்னேன்!” என்றான் சமாளிக்கும் பாவனையில். 

“சரிடா வந்து காஃபி குடி வா” என்றவர் இறங்கிச் செல்ல, லேசாக மூச்சுவிட்டான் சந்திரன். 

“என்னடா என் கல்யாண நேரத்துல இப்படி ஒரு பிரச்சனை, எல்லா சொந்தக்காரங்களும் வீட்டுல தான் இருக்காங்க. எனக்கு பிரச்சனையை விட இவங்க தான் பெரிய பிரச்சனையா தெரியுதுடா, அதுவும் இப்போ போனங்களே அந்த அத்தைக்கு மட்டும் தெரிச்சா போதும் அதுவே திரைக்கதை, வசனம் எழுதி எல்லா சொந்தக்காரங்க கிட்டையும் படம் ஓட்டிடும். எப்படியாவது வீட்டுல இருக்குற யார் காதுக்கும் போகாம பார்த்துக்கோடா” 

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை, எல்லாம் நம்மாளு தானே! இப்போ என்ன பண்ணனும்னு சொல்லுடா” 

“சரி எப்போ ரைடு வந்தாங்க, யாரெல்லாம் வந்தாங்க?” 

“வி.எ.வோ, ஆர்.ஐ, தாசில்தார்,ரெண்டு கான்ஸ்டபிள் ஏற்கனவே வந்து மறைஞ்சி இருந்திருப்பாங்க போல. இருட்டுல அது தெரியாம இந்த பரதேசி தங்கராசும், சீனிவாசனும், டிரைவரும் குடோனில இருந்து சரக்க வண்டியில ஏத்தி இருக்காங்க. 

நேத்து எல்லாரும் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் இதுலாம் நடந்திருக்கு. எல்லாரும் கோவில்ல இருப்பானுங்க, அப்புறம் வீட்டுக்கு போயிடுவாங்க, யாரும் ரேஷன் கட பக்கம் வர மாட்டாங்கன்னு தைரியமா ஏத்தி இருக்காங்க. ஆனா சரியான நேரத்துல கையும் களவுமா பிடிச்சிட்டாங்க, வண்டியும் அப்போவே லாக் பண்ணி எடுத்துட்டு போய்டாங்க. 

காலையில ஸ்டேஷன்ல இருந்து நமக்கு வேண்டிய ஏட்டு தான் போன் பண்ணி சொன்னாரு. கொஞ்ச நேரத்துல ஸ்டேஷன்ல இருந்து கால் வரும் இல்லைனா ஆள் அனுப்பி விடுவாங்க” 

“சரி செல்வா பார்த்துக்கலாம், ஆனா எனக்கு ஒரு சந்தேகம்டா ஆஃபீசர் எல்லாம் சரியான நேரத்துக்கு எப்படி வந்திருப்பாங்க? சோ அவங்களுக்கு ஏற்கனவே தெரிச்சிற்கும் தானே?” 

“ஆமாடா எனக்கும் அப்படி தான் தோணுது. சரி இப்போ என்ன பண்ணனும்?” 

“நீ முதல்ல ஏட்டுக்கிட்ட பேசு, பணம் நுழையாத கவர்மெண்ட் ஆஃபீஸ்சே இல்லடா. எவ்வளோ செலவானாலும் பரவாயில்ல. யார் சரிப்பட்டு வருவாங்கன்னு பார்த்துட்டுவா. அப்பறம் வண்டி தாலுகா ஆஃபீஸ்ல நிக்கும் சோ அங்கையும் யார் நமக்குச் சாதகமா வருவாங்கன்னு பார்த்துட்டு லாயர் ஆஃபீஸ்க்கு வந்துடு. அப்பறம் நான் நம்ம ட்ராவல்ஸ் ஆஃபீஸ் போய் தங்கராசு புக் பண்ண ரிஜிஸ்டரை எடுத்துட்டு லாயர் ஆஃபீஸ் வந்துறேன்” 

“சரி சந்திரா, நீ கொஞ்சம் டென்சன் ஆகாம இரு” 

“என் டென்சனுக்கு காரணம் இது இல்லடா, இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது. கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வந்துரைக்கூடாதுன்னு தான். யாருக்கும் தெரியாம பார்த்துக்கனும் குறிப்பா கயல் வீட்டுக்கு, அவங்க சொந்தக்காரர்களுக்கு தெரியக்கூடாதுடா” 

சரி எனத் தலையாட்டிய செல்வா கிளம்புகையில் மீண்டும் அழைத்த சந்திரன், “நம்ம ஊருக்குள்ள இருக்குற எட்டப்பன் யாருன்னு பாருடா, ஆஃபீஸ்ர்க்கு எப்படி தகவல் போச்சு? யாரு கம்ப்ளெண்ட கொடுத்தானு விரிச்சிட்டு வாடா” என்றான். உள்ளுக்குள் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன். 

அன்பு அவனே அறியாமல் தானாக வீசிய தூண்டிலில் மீனாக விழுந்தான் சந்திரன். வீட்டில் ஆண்கள் அனைவரும் காலை உணவிற்கு அமர்ந்திருக்க, படிகளில் பரபரப்போடு இறங்கிச் சென்ற சந்திரனை வசந்தா சாப்பிட அழைத்தார். 

“அம்மா நான் முக்கியமான வேலையா வெளிய பேறேன், சாப்பாடு வேண்டாம்” 

“டேய் என்னடா இன்னைக்கு கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்கணும், நேத்திக்கு கேட்ட அப்போ கூட வரேன்னு சொன்ன, இப்போ வெளிய கிளம்புற?” 

“அம்மா இப்போ இதுவா முக்கியம்? வேற யாரையாவது கூட்டுப் போங்க, எனக்கு ரொம்ப முக்கியமான வேல இருக்கும்மா” 

“யாரக் கூட்டிட்டு போக முடியும், உங்க அப்பாதான் அவர் ஃப்ரண்ட் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க போயிருக்காங்கலே? அப்பறம் செல்வாவையும் நீதான் எங்கையோ வேலையா அனுப்புறதா சொல்லிட்டு போறான், இப்ப என்னடா பண்ண? யாரக் கூட்டிட்டு போக? கல்யாணத்துக்கு நேரமில்லை, இன்னைக்கு எடுத்தே ஆகணும்டா” 

“அதான் ஜெயந்தி மாப்பிள்ள விக்னேஷ் இருக்காருல அவர கூட்டிட்டு போங்க, அப்புறம் எடுக்குற புடவையெல்லாம் கயலுக்கு பிடிச்ச மாதிரி எடுத்து கொடுங்க வெல எவ்வளோ இருந்தாலும் பரவாயில்லை” 

“அதுக்கு இல்லடா, உனக்கும் பட்டுவேஷ்டி, சட்டை எடுக்கணும்…” என கூறும் போதே இடைப்புகுந்த ருக்மணி, “அடியே அவன்தான் போகணும்னு சொல்லுறானே அவன போகவிடுடி, அதான் மாப்பிள்ள இருக்காரே!” என அதட்டினார். அதற்குள் சந்திரன் கிளம்பியிருந்தான். 

அவன் என்ன பண்ணாலும் கேள்விக் கேட்காம செல்லம் கொடுக்கிறது, அப்பறம் எப்படி புள்ளைய வளத்து வச்சிருக்கானு நம்மலையே குற சொல்லுறது என்று நினைத்தவாறு சென்றார் வசந்தா. 

உணவுண்டு கொண்டிருந்த விக்னேஷ், “இவங்க பண்ணுறதால்லாம் பார்த்தா நம்மள இந்த வீட்டோட மாப்பிள்ளையா மாத்திருவாங்க போல இருக்கே? கவனிப்பெல்லாம் நல்லருக்கேன்னு ஹனிமூனை கேன்சல் பண்ணிட்டு மாமியார் வீட்டுல உக்காந்தது தப்பாபோச்சே! சீக்கிரம் பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்ப வேண்டியதான்” என எண்ணினான். 

ஜெயந்தி வந்து பரிமாறியவாறு ஒரு கொஞ்சும் பார்வை பார்க்க, “பார்த்தே மயக்குறாளே, இவளுக்காக என்ன வேணா செய்யலாம்!” என நொடியில் மனம் மாறினான். 

இருவீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாட்டில் வெகு பரபரப்புடன் இருந்தனர். அவசர திருமணம் என்பதால் அதிக வேலைகள் இருந்தது. மீண்டும் அவசர அவசரமாகத் திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வந்திருந்தது. அதிலும் தங்கள் பேர் இல்லை, தங்களின் உறவுமுறை மாற்றி அச்சிடப்பட்டு உள்ளது என்று வம்புக்கு நின்ற உறவுகளைச் சமாளிப்பதே பெரும் பாடாய் இருந்தது விஜயராகவனுக்கு. 

ஜெயந்தியின் திருமணத்திற்கு வரத் தவறிய உறவுகளுக்கு மீண்டும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயந்தியின் திருமணத்தை விடச் சந்திரனின் திருமணத்தை மேலும் சிறப்புடன் செய்யவேண்டும் என்ற ருக்மணியின் ஆசையால் மூச்சிவிடக் கூட நேரமின்றி அழைத்தார் விஜயராகவன்.  

சமையல் ஆட்களிடம் பேசுவது, போட்டோகிராஃபரிடம் பேசுவது, ஆசாரியிடம் திருமாங்கல்யம் செய்யக் கொடுப்பது எனக் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்திருந்தார் விஜயராகவன். 

அதேபோல் கயல் வீட்டிலும் திருமண ஏற்பாட்டிலிருந்தனர். அதிலும் வேல்முருகனுக்கு இருந்த உற்சாகத்தில் உடலில் பலம் கூடியது போல் அனைத்து வேலைகளையும் அசராது செய்தார். அவரின் இரு கண்ணான கயலுக்கும், சந்திரனுக்கும் கல்யாணம் என்பதில் அளவில்லா ஆனந்தத்திலிருந்தார்.  

தீடிரென கல்யாணம் என்பதால் கயலுக்கு,நகைகள், சீர்வரிசை பொருட்கள் வாங்க வேண்டும். அதற்கான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதற்கான அலைச்சலிலே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

என்னதான் தங்கை வீடாக இருந்தாலும், அவர்கள் எதுவும் கேட்காமலிருந்தாலும் அப்படியே அனுப்ப முடியாதே! நாளை கயல் வாழும் இடத்தில் மரியாதையுடன் வாழ வேண்டும், மேலும் ருக்மணி ஏதேனும் குறைவாக ஒருசொல் சொல்லிவிட்டால் தாங்க இயலாது. ஆகையால் கடன் பட்டென்னும் தன் ஒற்றை மகளின் திருமணத்தை எந்தவித குறையுமின்றி நிறைவுடன் செய்யும் முயற்சியிலிருந்தார்.

சந்திரன் அறிந்திருந்தால் தடுத்திருப்பான் ஆனால் அவனே பிரச்சனைக்குள் இருந்தால் இவர்களைக் கவனிக்கவே இல்லை. தந்தையின் செயல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கயலின் ஒருமனம் நடக்க இயலாத கல்யாணத்திற்கு ஏன் இந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் என்றே நினைத்து. வேறு மனமோ, தன்னிடம் ஒருவார்த்தை கூட கேட்காமல் செய்தார்கள் அல்லவா பின்பு அவமானப்பட்டு நிற்கட்டும் என்று நினைத்தது.

அன்றொருநாளில் சில நொடி அன்புவின் முகம் பார்த்து வந்தபின்பு தன்னை தேற்றிக்கொண்டாள் கயல். தான் அன்று குமாரிடம் சொல்லி அனுப்பிய குறிப்பைச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பான். புரியவில்லை எனினும் யாரேனும் சொல்லிருப்பார்கள் ஊரே தங்களின் நிச்சியத்தைப் பற்றித் தான் பேச்சாய் இருக்க, காற்றில் பரவும் செய்தியாய் அவனையும் சென்று சேர்ந்திருக்கும் என்று நம்பினாள். எதிர் வீட்டில் தானே இருக்கிறான் சந்திரனின் வீட்டில் நடக்கும் ஏற்பாட்டை பார்த்தாவது அறிந்திருப்பான் என்று நம்பினாள்.

கண்டிப்பாக அன்பு இந்த திருமணத்தை நிறுத்துவான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தாள். தன்னை விட பலமடங்கு காதலை தன் மேல் கொண்டுள்ளான் என்பது நன்கு உணர்ந்தது தானே ஆகையால் தன்னை விட மாட்டேன் திருமணத்தை நிறுத்திவிடுவான் என்றே நம்பினாள்.

ஜெயந்தியின் வீட்டிற்கும் செல்ல இயலாது என்பதால் அன்புவை பற்றிய எந்த தகவலும் அறியமுடியவில்லை. பின் குமாரை அனுப்பி விட, அவன் அறிந்து வந்து சொன்ன தகவலோ அன்பு ஊரிலேயில்லை என்பது தான். திருவிழாவின் இரண்டாம் நாள் விடியலிலே சென்னைக்குச் சென்று விட்டதாக சொல்லிச் சென்றான்.

ஒருவேளை தனக்குத் திருமணம் என்பதை அன்பு அறியாமல் இருந்தால் என்ன செய்வது? அவன் வருவான் திருமணத்தை நிறுத்தி விடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது இருப்பினும் நூற்றில் ஒருபங்காய் அவன் வரவில்லை எனில் தானே திருமணத்தை நிறுத்திவிடுவது இதில் சந்திரன், அன்பு ஏன் தனக்கே அவமானம் வந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்தவள் நெஞ்சை அழுத்திப் பிசைந்தாள்.

காதலில் எல்லாம் அழகு தான் என்னும் போது, காதலில் சுயநலமாய் இருப்பதில் தவறில்லை.

அதுவரை தன் முடிவை வெளியில் காட்டது சகஜமாக இருக்கவேண்டும், ஒருவேளை தன் தந்தை அறிந்தால் பாசத்தைக் காட்டி பிளாக்மெயில் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்பதால் தன் முடிவை ரகசியமாக தன்னோடி வைத்துக் கொண்டு, புடவை எடுக்கும் போதும், நகை எடுக்கும் போதும் மற்ற உறவுகளின் முன்பு தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தாது அமைதியாக இருந்தாள்.

அன்பு தான் தடையாக இருப்பான் எப்படியாவது அவன் தடைகளை முறித்து திருமணத்தை நடத்தி விட எண்ணினான் சந்திரன். கடைசி நிமிடத்தில் எப்படியாவது திருமணத்தை நிறுத்தி விட எண்ணினாள் கயல்.

Advertisement