Advertisement

அத்தியாயம் 18 

ஊர் நடுவே அமைந்திருந்த முத்துமாரியம்மன் கோவில், ஒற்றைக்கல் சிறுகோபுரமும், இருவாசல் சுற்றுச்சுவரும் கொண்ட சிறுகோவில். கோவில் முழுவதும் வர்ணம் பூசி,கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வெளியே பந்தல் அமைக்கப்பட்டு, வாழைமரம் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைநிகழ்ச்சிக்கான மேடைகள் ஒருபுறம் அமைந்திருக்க, மைக் செட், ரேடியோக்களில் அம்மன் பாடல்கள் அதிரும் படி ஒலிபரப்பினர். கோவில் மண்டபத்தின் இருபுறமும் திடீர் திருவிழா கடைகளால் நிறைந்திருந்தது.

வருடத்துக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறும் சித்திரைத்திருவிழா அவ்வூரில் மிகவும் விசேஷமானது. வெளியூரில் வேலை பார்ப்பவர்கள், வெளியூரில் படிப்பவர்கள், வெளியூரில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் குழந்தைகள், குடும்பத்தோடு ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தங்களின் பேரப்பிள்ளைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் தாத்தா,பாட்டிகளுக்கு மகிழ்ச்சி பொங்கும் நாட்கள். அனைவரின் வீடும் உறவுகளால் நிறைந்திருக்கும்.

சந்திரன் வீட்டில் அனைவரும் கோவிலுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். ஆண்கள் முன்பே சென்றிருக்க, பெண்கள் அனைவரும் தங்கள் அலங்காரத்தை முடித்துக்கொண்டு, பொங்கல் வைப்பதற்கான பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தனர்.

ஜெயந்தி ரெடியாகிக் கொண்டிருக்க, அவளை பின்னிருந்து அணைத்த விக்னேஷ்,”வீட்டுல எல்லாரும் கோவிலுக்கு போயிருவாங்களா?” என்க, “ம்ம்ம்…” என்றாள்.

“அப்போ நாம போகவேண்டாம், வீட்டுலையே…?”

“வீட்டுலையே…என்ன?”

“வீட்டுலையே சாமி கூப்பிடும்லாம்மே?”

இறுக்கி அணைத்தவன் அவள் காதுக்குள் கிசுகிசுத்தான். முகம் சிவக்க விலகியவள், “கயலை கூட்டியாரச் சொல்லி குமார அனுப்பிட்டு நான் போகாம இருந்த எப்படி?” என்ற கேள்வியோடு அவனையும் இழுத்துக் கொண்டு கிளம்பினாள்.

கயலின் பெற்றோரும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். கற்பகம் அழைத்தும் கிளம்பாமல் வெறித்த பார்வையோடு நெஞ்சில் கைவைத்து அமர்ந்திருந்தாள் கயல். நேற்று நிச்சியம் முடிந்ததிலிருந்தே அப்படியே தான் இருந்தாள் ஆனால் கற்பகம் இருந்த பரபரப்பில் அவளை கவனிக்கவில்லை.

“கயலு கிளம்பிட்டியா? சீக்கிரம் வாடி. ஒத்தாளா நான் மட்டும் எம்புட்டு வேலையத்தான் பார்ப்பேன்”

அழைத்தும் அவள் அறையிலிருந்து பதில் வராமல் போக, பூஜை பொருட்களைப் பையில் அடுக்கிக் கொண்டே,”இவளுக்கு என்னாச்சு, நேத்துல இருந்து ஆளே சரியில்லை. இந்த கல்யாணத்துல இவளுக்கு விருப்பமில்லைனு சொல்லிட்டேன் ஆனா அந்த ஆளு காதுலையே கேட்டுக்க மாட்டிக்கிறாரு. அப்படி என்ன தான் பெத்தபுள்ளைய விடத் தங்கச்சி குடும்பத்து மேல பாசமோ!” எனப் புலம்பிக் கொண்டிருந்தார்.

அதேநேரம், “கயலைக் கண் தேடுதே, கயலு, கயலு” என்று ஆடியவாறு உள்ளே வந்தான் சிறுவன் குமார்.

“என்னலே குமாரு கோயிலுல ஆடாமா இங்கன வந்து ஆடுற?”

“அத்தை ஜெயந்தியக்கா கயலைக் கோயிலுக்கு கூட்டியார சொன்னாங்க”

“அதென்னலே ஜெயந்தி மட்டும் உனக்கு அக்கா, என் மவ கயலாக்கும்? உள்ளாரா தான் இருக்கா போய் சீக்கிரம் கூட்டிட்டுவாலே”

“ஜெயந்தியக்காவுக்கு கல்யாணம்மாச்சி, கயலுக்கும் கல்யாணமாகட்டும் அண்ணின்னு சொல்லுறேன்” என்றவாறு கயலின் அறைக்குள் சென்றான்.

கயலின் முன்பு சென்று மண்டியிட்டவன் ஜெயந்தி அழைப்பதாகக் கூற,”நான் வரலடா, நீங்கப் போங்க” விரக்தியுடன் கூறினாள்.

“சரி,சரி உன்னையும் அக்கானு கூப்பிடுறேன், வா கயலக்கா” என்றவாறு அவள் கையை பிடித்திழுத்தான்.

“தான் வரலைன்னு சொல்லுறேன்ல போ குமாரு!” சற்று கோபத்துடன் கத்தினாள். அதில் சற்று அரண்டவன், “போன வருஷம் வந்ததை விடப் பெரிய ராட்டினம் வந்திருக்கு! கோயில்ல கும்மி,கோலாட்டமெல்லாம் ஆரம்பிச்சிட்டாங்க. உன் ப்ரண்டு ரேவதியக்கா கூட அவங்க புருஷன் புள்ளைகளோட வந்திருக்கு. சாமி பாட்டுப் படிக்க அம்புஜம் பாட்டி உன்ன கூட்டியாரச் சொன்னாங்க” என்றான். பிடிவாதத்தை விடுத்து ஆசை வார்த்தைகளைக் கூறிப்பார்த்தான்.

ஆனால் அவளோ அதற்கும் அசராது அவன் கைகளைத் தட்டிவிட்டாள். “நீ வரலைனா போடி, நான் போய் வானவெடி போடுறதை பாக்கப்போறேன், ஊரே அங்க தான் இருக்கு இவ மட்டும் வரமாட்டாளாம் ரொம்ப தான் பண்ணுறா!” என்றவன் எழுந்து ஓட, அவன் கைகளை எட்டிப் பிடித்தாள்.

“என்னலே ஊரே அங்க இருக்கா? யாரெல்லாம் இருக்காங்க?” ஒருவித எதிர்பார்ப்போடு கேட்டவள் அவனையே பார்த்தாள்.

அவள் கண்ணீர் நிறைந்த விழிகளையும், தவிப்பு நிறைந்த முகத்தையும் பார்த்தவன் என்ன புரிந்து கொண்டானோ,”அன்பு சாரும்,சிவகாமியம்மாவும் வந்திருக்காங்க அக்கா” என ரகசியம் போல் மென்குரலில் சொன்னான்.

அவ்வளவு தான் குளியலறைக்குள் புகுந்தவள் ஐந்தே நிமிடத்தில் குளித்து பச்சை வண்ண படுத்தி வந்தாள். கண்ணாடி முன்பு நின்று தலைவாரி முடிக்க, கற்பகம் நகைப்பெட்டியோடு வந்தார். அதெல்லாம் போடுவதற்கு நேரமில்லை எண்ணியவள்,”அம்மா அந்த கல்லுவச்ச லட்சுமி டாலர் மட்டும் எடுத்துக் குடு, மத்த எதுவும் வேண்டாம்” என்க,”அடியே கல்லுமூக்குத்தி, கொடத்தோடு, ரட்டவட சங்கிலி,ஒரு நெக்லஸ் இத மட்டும் போட்டுக்கோடி” என்றார்.

மறுப்பாகத் தலையாட்டியவள், அந்த டாலரை மட்டும் வாங்கி அணிந்து கொண்டு குமாரையும் அழைத்துக் கொண்டு வேகவேகமாக கிளம்பினாள். அத்தை கொடுத்த ஒரு வாழப்பழத்த முழுசா திங்க விடுறால? என நினைத்த சிறுவன் அவள் வேகத்திற்கு அவளோடு ஓடிவந்தான்.

கோவிலுக்கு முதலில் வர மறுத்த அன்புவை கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தார் சிவகாமி.

எல்லக்காளியம்மன் கோவிலில் ஆரம்பித்த பூப்பல்லக்கு ஊர்வலம் ஊர் சுற்றி இறுதியில் கோவிலுக்கு வரும். பின் சாமி சிலையை இறக்கிவைத்து அபிஷேகம், அலங்காரம் முடித்துப் பொங்கல் படையலிட்டு ஊர்கூடி அம்மனை வழிபடுவர்.

ஊர்வலம் முடித்து சாமி வராமல் இருக்க, சீக்கிரமே வந்துவிட்ட அன்பு கோவிலின் பின் குளக்கரையில் சென்று அமர்ந்தான். சிவகாமி பொங்கல் வைப்பதற்கான ஏற்பட்டிலிருந்தார்.

குளக்கரையில் அமர்ந்தவன் குளத்து நீரில் கோபுரத்தின் வண்ணவிளக்குகள் ஒளிர்ந்து பிரதிபலிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்பது வருடத்திற்கு முன்பு இதே கோவில் திருவிழாவில் கயலைப் பார்த்து நினைவில் வந்தது.

“அம்மா என் ரெட்டச்சரம் கொலுசு போட்டுவிடும்மா!” என கற்பகத்திடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் பதினைந்து வயது நிரம்பிய கயல்.

“வேண்டாண்டி உன் கால் தரையிலையே நிக்காது, இந்த ராத்திரி நேரத்துல நீ எங்கையாவது தொலைச்சிடுவ, நாளைக்கு காலையில போட்டுவிடுறேன்” என்ற கற்பகத்தின் கூற்றை ஏற்காது மேலும் அடம்பிடித்தாள் கயல். அதைக் கண்ட வசந்தா கயலை அழைத்து அவளுக்கு கொலுசிட்டு, தன் கழுத்திலிருந்து தங்கநகையும் போட்டு அழகு பார்த்தார். 

கொலுசு சத்தத்திற்காகவே குதித்து குதித்து நடந்தவள் சிறுவர்களுடன் சேர்ந்து கோவில் குளக்கரைக்கு ஓடினாள். குளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கோபுரத்தின் வண்ண விளக்கொளிகள் பிரதிபலிக்க, அதில் சிறுசிறு கல்லை எறிந்து தோன்றும் வண்ண வட்ட வளையத்தைச் சிறுவர்களோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் வானவெடிகள் வெடிக்கத் தொடங்கி விட சிறுவர்கள் அனைவரும் அதை வெடுக்கைப் பார்க்கச் சென்றுவிட்டனர். கயலுக்கு இதில் ஆர்வமிருக்க மேலும் கற்களைத் தூக்கி எறிந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

அன்பு ப்ளஸ்டூ பொதுத்தேர்வுகள் இருப்பதால் விடுமுறையிலும் கிளாஸ் சென்றதாலும், அதற்கு அடுத்த வருடம் கல்லூரிச் சுற்றுலா சென்றதாலும் இருவருடங்கள் ஊருக்கு வராமல் தற்போது திருவிழாவிற்கு வந்திருந்தான்.

கோவில் குளத்திற்குச் சென்றவன் படிகளில் இறங்க, அதேநேரம் திரும்பிய கயல் சரியாக அவன் மேலே மோதி பின்புறமாக விழ, நொடியில் உணர்ந்தவன் அவளின் இடையை வளைத்து விழாது தங்கிப் பிடித்தான். விழும் வேகத்தில் பற்றுதலின்றி அவன் சட்டை காலரை இறுகப் பற்றிருந்தவள் மெல்ல விழித்திருந்து அவனைப் பார்த்தாள். அவன் கைகளைத் தட்டிவிட்டு விலகி முறைத்தவாறு படிகளில் எறிச்சென்றாள். 

பொன் மஞ்சள் முகத்தில் ஒற்றைக் கல் மூக்குத்தி மின்ன, அன்றுதான் அருகில் கண்டுள்ளான். இருவருடத்திற்கு முன்பு சிறுமியாகப் பார்த்த குழந்தை முகத்திற்கும் இப்போது பார்த்த முகத்திற்குமான வித்தியாசம் உணர்ந்தான். தற்போது கூடுதல் அழகோடு மிளிர்ந்தாள். 

தன் மீது மோதும் போது தான் உணர்ந்தான் அவளும் வளர்ந்து விட்டாள் சிறு பெண்ணல்ல என்பதை. இளம் பச்சையில் தாவணியும், மஞ்சளில் பாட்டுப்பாவாடையும் அணித்தது, ரெட்டை ஜடையில் தேவதையாகச் சென்றாள். பாவாடையை கைகளில் பிடித்தவாறு திரும்பி, திரும்பிப் பார்த்து முறைத்துச் சென்றாள். 

அதற்கு முன்பு வரை மாமன் மகள் என்று அவளோடு வம்பு பேசி சீண்டியது, விளையாடியது மட்டுமே உண்டு. இன்று தான் அந்த அழகு தேவதையை தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும், தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நொடியில் அவள்மேல் காதல்கொண்டான். 

போன தடைவை ஊருக்கு போயிட்டு வந்ததும் நானும் என் மாமாமகளும் லவ் பண்ணுறோம்னு சொன்னியே மனோஜ் இருடா இப்போது நானும் வந்து சொல்லுறேன் என மனதில் தன் ரூமேட் மனோஜை நினைத்தான்.

அங்குமிங்கும் சுற்றியவளை ரசித்தவன், அவள் ரெட்டை ஜடைக்கு பூவைத்தால் நன்றாக இருக்குமென எண்ணி அருகே இருந்த கடையில் இரண்டு முழம் பூவை ஆசையுடன் வாங்கினான். தன்னை தாண்டிச் சென்றவளின் ஜடையை பிடித்திழுத்தவன் அவளிடம் பூவை நீட்டினான்.  

அந்த வருடம் ஜெயசந்திரன் தோட்டத்தில் மல்லிகை,சாமந்தி பதியமிட்டிருன்தனர். ஆகையால் அன்பு நீட்டிய இரண்டு முழம் பூவை பார்த்தவள் உதட்டைச் சுளித்துக் கொண்டு,” க்கும், எனக்கு வேண்டாம், சந்திரமாமாகிட்ட கேட்டா கூடகூடயா கொண்டு வந்து தருவாரு” என்று ஓடிவிட்டாள். 

ஆசையோடு வாங்கிக் கொடுத்ததை நிராகரித்ததால் நொடியில் வாடினான், அதைவிடச் சந்திரனின் மீதும் கோபம் கொண்டான். 

அதான் அன்றே சந்திரன் தான் தன்னவன் என்பதை சொல்லிச் சென்றுவிட்டாளே இன்னும் அவளையே ஏன் நினைத்து மருகுகிறாய் எனத் தன்னையே திட்டிக் கொண்டவன் எழுந்து கோவில் முன்புறம் சென்றான்.

ஊர்வலம் முடிந்து பூப்பல்லக்கு வந்திருந்தது. அன்புவை முன்னிறுத்தி மாலையணிவித்து பரிவட்டம் காட்டினர். பல்லக்கிலிருந்து எடுத்து அம்மன் சிலையை அவன் கைகளில் கொடுக்க, வாங்கியவன் பந்தலிருந்து கோவில் நோக்கி நடந்தான்.

அப்போது தான் உள்ளே வந்த கயல், பட்டுவேட்டி சட்டையில், தலையில் பரிவட்டம் கட்டி, கையில் அம்மன் சிலையோடு ராஜநடையில் கம்பீரமாய் நடந்து வரும் அன்புச்செழியனைப் பார்த்தாள். அவனை கண்டதும் நாற்பத்தியெட்டு மணி நேரமாகத் தன்னை அழுத்திய பாரமெல்லாம் நொடியில் ஓடியது.

கோவிலில் சிலையை வைத்து ஆரத்தி காட்ட, ஊரே கூடிநின்று வணங்கினர். அன்பு கண் திறக்க எதிர்வரிசையில் கயல் நின்றிருந்தாள். விளக்கின் மஞ்சலொளியில் பச்சைப் பட்டுத்திய கயல் செதுக்கிய மரகத சிலையாக மின்னினாள். அவள் கண்களின் ஏனோ அந்த பிரகாசமில்லை. முகமே இறுகி இருக்க, கண்களுக்குள் கவலையைக் கரைத்து வைத்திருப்பதைப் போல் தோன்றியது. 

ஒரேநொடி தான் அவளைப் பார்த்த பார்வையைத் திருப்பிக் கொண்டாலும், தீரா நோயில் விழுந்ததை போன்ற அவளின் இந்த தோற்றத்திற்கான காரணம் தான் என்ன? என்ற கேள்வியே அவனுள் சுழன்றது. 

அதேநேரம் எங்கிருந்தோ வந்த சந்திரன் கயலின் அருகே,சற்று நெருங்கி நின்று வணங்கினான். அன்புவிற்கு எரிந்தது, கயலை இழுத்து தன்னருகே நிறுத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. நீ கொடுக்குற இடம் தான் எனக் குற்றம் சாற்றும் பார்வையோடு கயலை முறைத்தான்.

ஆனால் கயலின் விழிகள் ஒருவித தவிப்போடு அருகே நின்ற சந்திரனைச் சுட்டிக்காட்டுவது போலிருந்து. முகம் சுருக்கி கெஞ்சுவது போல் சந்திரனைக் காட்டி பின் தன்னை பார்க்க, ஏதோ சொல்ல வருகிறாள் என்பதுவரை புரிந்தது.

அதற்குள் ஐயர் குங்குமம் தர, அதை வாங்கி நெற்றியில் இட்டாள். “வா கயலு, ஜெயந்தி உன்ன கூட்டிவரச் சென்னா” எனச் சந்திரன் அழைத்துச் செல்ல, இமைகள் படபடக்கத் தவிப்பு நிறைந்த கண்களோடு அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றாள். 

என்னவென்று புரியவில்லை எனினும் ஏதோ சரியில்லை என்பதுவரை புரிந்தது அன்புவிற்கு. சற்று நேரத்திற்குப் பின் மீண்டும் வெளியே வந்து பார்த்தான். கோலாட்டமும், கும்மியாட்டமும் நடந்து கொண்டிருக்க அதைப் பார்த்தவாறு ஜெயந்தியின் அருகே அமர்ந்திருந்தாள் கயல். 

அன்புவை கண்டுகொண்டவள் அவனைப் பார்த்தவாறு அருகே இருந்த சிறுவன் குமாரிடம் ஏதோ கூறினாள். ஆனால் அதையும் கண்ஜாடையாக அன்புவிடம் சுட்டிக்காட்டினாள். 

நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைய நள்ளிரவாகி விட அதன் பின்னே அனைவரும் வீட்டிற்குக் கிளம்பினார்.

சிறுவன் குமாரை அழைத்த அன்பு, “உங்க கயல் மிஸ் என்னடா சொன்னாங்க, பந்தல்ல உக்காந்து கோலாட்டம் பார்த்துகிட்டு இருந்தீங்களே அப்போ?”என்றான். 

“அதுவா சார், அது..அது..மகாபாரதம் கதை சொன்னாங்க?” என்றான். 

என்ன கதை சொன்னாளா? அப்பறம் ஏன் என்னையே பார்த்துக்கிட்டு இருந்தா? என நினைத்தவன், “சரி என்ன கதைலே சொன்னா? அதை சொல்லு” என்றான். 

“ஏன் சார் உங்களுக்கு மகாபாரதம் கதை தெரியாதா?” எனச் சிரிப்புடனே கேட்டான்.

“ஆமாடா தெரியாது, நீ சொல்லு” எனச் சிறுவனை அருகே அமர்த்தி அரைமணி நேரத்திற்கும் மேலாக அவன் கூறும் கதையைக் கேட்டான். 

இறுதியில், “இளவரசி சுபத்திரை அர்ஜுனனை விரும்புனாங்களாம் அது தெரியாம அவங்க வீட்டுல பங்காளி துரியோதனனுக்கு நிச்சியம் பண்ணி வச்சிடங்களாம். இத்துவரைக்குத் தான் சார் சொன்னா, கடைசியில இளவரசி சுபத்திரை யார சார் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? உங்களுக்கு தெரியுமா சார்?” என்று கேட்டான். 

அன்புவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அதிலும் பங்காளி துரியோதனன்,நிச்சியம் என்பது ஏதோ குறிப்புப் பொருள் என்பதையும் உணர்ந்தான். ஆனால் தெளிவாக எதுவும் அறியாமல் முடிவெடுக்க இயலாது என்றெண்ணினான்.

“சுபத்திரை யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்ககுறதுக்கு பதில் உங்க கயல் மிஸ் தான் சொல்லணும்” என்றவன் வீட்டிற்குக் கிளம்பினான்.

வீட்டிற்குச் சென்ற பின்னும் விடிவதற்கு இருந்த சில மணி நேரமும் அதையே சிந்தித்தான். ஒரு முடிவு எடுப்பதற்குள் காலையில் சென்னையிலிருந்து வந்த கல்லூரி நண்பர்களின் அவசர அழைப்பால் சென்னைக்குக் கிளம்பிச் சென்றான்.

Advertisement